அன்பானவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த அத்தியாயத்தை எழுதத் தொடங்குமுன் உங்களுடன் ஒரு வார்த்தை! ஏற்கனவே வெளியான இந்தத் தலைப்பிட்ட தொடர் இன்ஷா அல்லாஹ் விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது. அதற்குமுன் நூலில் சேர்க்கப்பட வேண்டிய சில விடுபட்ட உட்தலைப்புகளின் அத்தியாயங்களையும் எழுதி சேர்த்துவிட வேண்டுமென்று சில அறிஞர்களும் பேராசிரியர்களும் தந்த ஆலோசனையின் அடிப்படையில் சில விடுபட்ட தலைப்புக்கள் இந்தத் தொடரில் இன்னும் சில வாரங்கள் தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
==================================================================
இன்றைய உலகப் பொருளாதாரம் கடன் முறைகளை அடிப்படையாகச் சார்ந்தே இருக்கிறது. நாட்டுக்கு நாடு கடன் – தனி மனிதருக்கு மனிதர் கடன் – அசையும் அசையாச்சொத்துக்களின் மீது பிணைக் கடன்- சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து தேவைகளுக்குப் “புரட்டும்” தற்காலிகக் கடன்- என்றெல்லாம் கடன் என்பது அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாகவே மாறிவிட்டது. கல்யாணத்திலிருந்து பிரசவம் வரை – சாவு முதல் சமயச் சடங்குகள் வரையும் - கார் வாங்குவது முதல் கையேந்தி பவனில் சாப்பிடுவது வரை கடன் வாங்காமல் காரியம் நடத்த முடியாது என்கிற மனப்பான்மை மக்களிடம் வளர்ந்து விட்டது.
கடன் ஏன் ஏற்படுகிறது ?
தனது வருமானத்துக்குள் வாழ்க்கைச் செலவுகள் அடங்காத போது அல்லது தனது வருமானத்துக்குள் தனது வாழ்க்கைச் செலவுகளை அடக்கிக் கொள்ள இயலாத போது வரவுக்கும் செலவுக்கு இடையே ஏற்படும் இடைவெளியை இட்டு நிரப்ப கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அளவறிந்து வாழாத சிலரின் வாழ்க்கை கடன் வாங்கியே நகர்த்தப் படுகிறது. அளவோடு செலவு செய்து சிக்கனத்துடன் வாழ்வோரின் வாழ்க்கை கடன் வாங்க தேவை இல்லாதததுடன் வருமானத்தில் மிச்சம் பிடித்து அது சேமிப்பாகவும் உருவெடுக்கிறது. ஒருவருக்கு கடன் ஏற்படுவதற்கும் எற்படாததற்கும் அவரவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் , ஆடம்பரம் அல்லது எளிமை போன்ற குணநலன்களே காரணங்களாக அமைந்து விடுகின்றன.
இன்றைய நவீன உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் ஆகிய ஷைத்தானின் பொருளாதாரப் பிரதிநிதிகளால் ஆட்டிப்படைக்கப்பட்டு கடன் வாங்குவதை ஊக்கப்படுத்தும் பொருளாதார அமைப்பில் கடன் இல்லாமல் வாழ்வது கஷ்டம் என்று ஆகிவிட்டது. கதவைத்தட்டி கடன் வேண்டுமா என்று கேட்கும் இன்றைய நிலையில் கடன் வாங்குவதும் ஒன்றும் சஞ்சீவி மலையை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு வருவது போல் அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லை. காலண்டரில் தேதிகளின் தாள்களைக் கிழிப்பது போல் நவீன உலகில் இலகுவாகப் போய்விட்ட சமாச்சாரமே கடன் வாங்குதும் என்று ஆகிவிட்டது. அரை மணி நேரத்தில் கடன் என்று அழைக்கும் விளம்பரங்கள் அங்கங்கே தொங்குகின்றன. கடன் தருவதற்காகவே “கடன் திருவிழா” என்று பொருள் படும் “லோன் மேளா” என்றும் வருடாவருடம் வண்ணமயமாக நடத்தபபடுகின்றன. இதற்குக் காரணம் பொது மக்களின் மீது கடன் தரும் அமைப்புகளுக்கு ஏற்படும் இரக்கமல்ல . கறக்க கறக்க சுரக்கும் வட்டி என்கிற அமுத சுரபிதான் காரணம். வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத்தில் அது ஒரு அச்சுறுத்தலாக இருந்தாலும் வானத்தில் போகிற வட்டிச் சனியனை வாவென்று வரவேற்று ஏணி வைத்து தங்களின் இல்லங்களுக்குள் இறக்குவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். கடன் தரும் நிறுவனங்களை சிலர் ஏதோ காமதேனுக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் “ இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே! இதுதான் உலகம்! வீண் அனுதாபம் கண்டு நீ ஒருநாளும் நம்பிடாதே! “ என்று பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாஷையில்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.
உலகநாடுகள் ஒன்றை ஒன்று அடிமைப்படுத்தவும் தான் இட்ட கட்டளைக்கு அடிபணியும் அடிமை நாடாக ஆக்கிக் கொள்ளவும் கடனே அவர்களது கையில் உள்ள கருவியாக இருக்கிறது. கடன் மூலமான வட்டி என்பது ஒருவகையில் கத்தியின்றி இரத்தமின்றி கைப்பற்றப்படும் காலனித்துவமாகும். இத்தகைய கடன் அமைப்பில் மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. பணக்கார நாடுகளிடம் கை நீட்டிக் கடன் வாங்கிய ஏழை நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே கடன்காரர்களாகவே பிறக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நோட்டுக்களை கடனாக வாங்கிய காரணத்தால் நீட்டுகிற இடத்தில் கையெழுத்து இடுகிற நாடுகள் தங்களது பொருளாதார வளங்கள் சுரண்டப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதே நவீன காலனியாதிக்கமாகிவிட்டது.
தனிமனித வாழ்வும் கிட்டத்தட்ட வட்டியின் அடிப்படையிலான கடன்களால் வளங்கள் சுரண்டப்பட்டே நிற்கின்றன. வட்டிக்கு மேல் வட்டி கட்டி வளங்களை கொட்டிக் கொடுத்து, வாழ்விழந்த பல குடும்பங்கள் நம் கண் முன்னே சாட்சியாக நிற்கின்றன. வட்டியைப் பற்றி இஸ்லாம் கூறும் எச்சரிக்கை மிகுந்த பொருளாதாரக் கருத்துக்களை இதற்கு முன்னரே வேறு ஒரு அத்தியாயத்தில் நாம் கண்டு இருக்கிறோம்.
கடன் பற்றி இஸ்லாமியப் பொருளாதார சிந்தனை ஓட்டங்கள் எவ்வாறு அமைந்து இருக்கின்றன என்பதை நாம் காணலாம்.
கடன் வாங்கிக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதை இஸ்லாமியப் பொருளாதாரம் தடை ஒன்றும் செய்துவிடவில்லை. வட்டியை அடிப்படை யாகக் கொண்ட கடன் நடவடிக்கைகளையே இஸ்லாம் தடை செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக்கொருவர் தருவதையும் பெறுவதையும் தடை செய்யவில்லை. கடன் கொடுக்கல் வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும் அதற்காக சாட்சிகளை நியமித்துக் கொள்ளும்படியும் இஸ்லாமியப் பொருளாதாரம் வரையறுத்து இருக்கிறது. இறைவனின் திருமறையின் 2:282 (அல்பகரா)வின் வசனங்கள் இதுபற்றி மிக நீண்ட விளக்கம் தருகிறது. இதே அத்தியாயத்தின் 2:283 ஆம் வசனம் கடனுக்காக அடமானமாக ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டும் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாமென்றும் அனுமதியளிக்கிறது. அதே போல் அடமானப் பொருளை அச்சுப் பிசகாமல் அப்படியே திருப்பிக் கொடுத்து விட வேண்டுமென்றும் வரையறுக்கிறது.
பெருமானார் (ஸல்) அவர்களின் வண்ணமிகு வரலாற்றை- வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிக்கும் போது அவர்கள் ஒரு யூதரிடம் தமது கேடயத்தை அடமானம் வைத்து கோதுமையை கடனாகப் பெற்றதாக அறிகிறோம்.
கடன் வழங்குவது ஒருவகையில் மனிதாபிமான நேசத்தின் அடிப்படையில் மனிதருக்கு மனிதர் உதவியும் ஒத்துழைப்புக்குமே அல்லாமல் அப்படிக் கடன் கொடுப்பது பிழைப்புக்கான ஒரு வழியல்ல என்பதே இஸ்லாத்தின் கடன் பற்றிய பொருளாதார நிலைப்பாடு . கடன் கொடுத்து உதவுவது ஒரு சமூக நலப் பணி என்பதே இஸ்லாத்தின் மனித நேயத்தின் அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு. ஒருவர் கண் முன்னால் கஷ்டப்படும்போது கையில் தனது தேவைக்கு அதிகமான பொருளை வைத்திருக்கும் மற்றொருவர் சகோதர மனப்பான்மையோடும் நட்போடும் தேவைப்படுபவருக்கு பிரதிபலன் கருதாமல் கொடுத்து உதவ வேண்டுமென்பதே கடன் பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரத்தின் புரட்சிகரமான சிறப்பம்சம். ஒருவருக்கொருவர் நண்மையான காரியங்களில் உதவிக் கொள்வது சமுதாயத்தில் அன்பை அதிகப் படுத்தும். இத்தகைய பண்புகளை வெளிப்படுத்தும் பல நபி மொழிகளை இங்கு சுட்டிக் காட்டலாம்.
யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்:திர்மிதி
மற்றொரு ஹதீஸில்
ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். “எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகிறாரோ அவரின் மறுமை நாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான் . மேலும் எவர் கஷ்டத்தில் அவருக்கு (உதவி செய்து) வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருடைய (கஷ்டங்களை) இலகுவாக்கிக் கொடுப்பான்." (முஸ்லிம்)
மேலும்,
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு மசூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரு தடவைகள் கடன் வழங்கினால் அவற்றுள் ஒரு தடவை அவர் சதகா என்கிற தர்மம் செய்தவரைப் போன்றவராவார்" (இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)
திருமறை குர்-ஆன் இதுபற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது .
“அல்லாஹ்வுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்கு பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான். (அத்தகாபுன் 64: 17)
அதே நேரம் தவிர்க்க முடியாத சந்தப்பங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்காக தனது கைகளில் ஒன்றுமில்லா விட்டால் தான் கடன் வாங்க வேண்டுமென்பதும் இஸ்லாத்தின் பொருளாதார நிலைப்பாடு. பட்டினி இருக்கும் நிலையில் கடன் வாங்கி பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டுமென்று எண்ணுதல் கூடாது; மாறாக கஞ்சி காய்ச்சிக் குடித்து பசியை நீக்கிக் கொள்ளலாம் என்பதே இஸ்லாம் அனுமதித்து இருக்கும் கடன் வாங்குவது பற்றிய கோட்பாடு.
அதே நேரம் கடன் கிடைக்கிறதே என்பதற்காக யானையைக் கடனாகக் கொடுத்தாலும் சிலர் வாங்கத் தயாராக இருப்பார்கள். கடன் கிடைக்கிறதே என்று வாங்கக் கூடாது தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டுமென்பது ஒரு பொதுவான நியதி. ஒருவருக்கு அதிகமானவர்கள் கடன் தரத் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவருக்கு சமூகத்தில் நற்பெயர் இருக்கிறது என்று பொருள். அந்த நல்ல பெயரை தொடர்ந்து கட்டிக் காப்பாற்ற வேண்டும். பலருக்குக் கொடுக்கப்பட்ட கடன் , கிணற்றில் போட்டது என்றும் அதை காந்திக் கணக்கில் எழுதவேண்டுமென்றும் சிலர் சமூகத்தில் பெயர் சம்பாதித்து வைத்திருப்பார்கள். கடனை வாங்கும் போதே அதை திருப்பித்தரும் நிய்யத்துடனும் (Intention) திட்டத்துடனும் (Re-Payment Plan) வாங்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்று இஸ்லாம் வற்புறுத்துகிறது.
அபு ராபி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்
“ஒருமுறை ரசூல் ( ஸல்) அவர்கள் ஒருவரிடம் ஒரு இளம் ஒட்டகத்தை கடனாகப் பெற்றார்கள். அவர்களுக்கு சதகாவாக சில ஒட்டகங்கள் கிடைத்த போது, என்னை அழைத்து , தான் கடன் வாங்கிய அந்த மனிதருக்கு ஓர் இளம் ஒட்டகத்தை திருப்பிக் கொடுத்து கடனை அடைக்குமாறு வேண்டினார்கள். அதற்கு நான் ஆறு வயதுள்ள ஒரு தரமான ஒட்டகம் இருக்கிறது என்று கூறினேன். அதையே அந்த மனிதருக்குக்குக் கொடுத்துவிடுங்கள்; உண்மையில் உங்களில் சிறந்தவர் தான் பெற்ற கடனை சிறந்த முறையில் திருப்பி செலுத்தியவரே ஆவார்” என்றார்கள். (அஹ்மத்). இதுவே இஸ்லாமியப் பொருளாதார முறைகளின் உயரிய வழிமுறையாகும்.
கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பித் தராத பழக்கம் உடையவர்களுடைய சமூக அந்தஸ்து பாதிக்கப்படும். அத்தகையோரைக் கண்டாலே பலர் விலகி ஓடுவார்கள். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வாங்கிய கடனை சொன்னபடி திருப்பித் தர இயலாத சந்தப்பங்கள் சிலருக்கு ஏற்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் கடன் கொடுத்தவர்களை அணுகி, தங்களுடைய நிலைமைகளைச் சொல்லி இன்னும் தவணை வாங்கிக் கொள்ளலாம். “ஒருவரை நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால் அவர் அண்டை வீட்டுக்காரராக இருந்திருக்க வேண்டும்; அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும்; அல்லது அவருடன் கடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்” என்று ஒரு அறிஞர் கூறி இருந்தார். இந்த மூன்று நிலைகளை அவர் குறிப்பிட்டு இருப்பதற்குக் காரணம், இந்த மூன்று சூழ்நிலைகளிலும் ஒருவருடைய உண்மையான இயல்புகளை இலகுவாகப் புரிந்து கொள்ள இயலும் என்பதால்தான்.
வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் . நூல்: திர்மிதி
வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு. என்று பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி
எப்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் கடன் வாங்கியாவது அந்த செலவை செய்யத்தான் வேண்டுமா அல்லது நமது கைகளில் பணம் வரும் வரை அந்தத் தேவையைத் தள்ளிப் போடலாமா என்று தனது மூலவளங்களின் அடிப்படையில் நன்றாக சிந்திக்க வேண்டும். கடன் வாங்குவதை எப்போதும் கடைசி ஆயுதமாகவே கையாள வேண்டும். சிக்கனமாக செலவு செய்பவர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை என்பது வாழ்க்கையின் அனுபவ பாடம். தேவையற்ற செலவுகளை ஊதாரித்தனமாக செய்பவர்கள் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இன்றைய சமூகத்தில் ஆடம்பரமான வீடுகளைக் கட்டுபவர்கள், திருமணச் செலவுகளை திணறடிக்கும் வகையில் செய்பவர்கள், தேவையற்ற நுகர்வோர் பொருள்களை வாங்குபவர்கள், ஊரார் முன் தன்னைப் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ளும் பெருமைக்காக ஆடம்பர ஆடை அணிகலன்களை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாங்குபவர்கள்தான் கடன் சுமையில் மாட்டிக் கொள்கிறார்கள். இஸ்லாம் அனுமதிக்காத பல சடங்குகளை செய்பவர்களும் கடன்களில் மாட்டிக் கொள்கிறார்கள். கடன் வாங்கியாவது கந்தூரிக்குச் செல்லும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது பெரிய மனுஷியானதற்கு சடங்கு சுத்தும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது ஊரைக் கூட்டி ஒன்பது முறை கல்யாண விருந்து வைக்கும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களைக் கொண்டாடும் குடும்பங்கள் கடனாலேயே அழிந்து போன கதைகள் நாம் வாழும் சமுதாயத்தில் நமது கண்களால் காணும் கதைகளாகும்.
கடனில் மூழ்கியவர்களை சமுதாயம் மட்டுமல்ல வீட்டில் பெற்ற பிள்ளைகள் கூட மதிப்பது இல்லை. என்னை பெற்றவர், ஊரெங்கும் கடனைத்தவிர எனக்கு என்ன தேடிவைத்துவிட்டுப் போனார் என்று கடன்காரர்கள் மறைந்த பிறகும் இழி சொல்லை வாங்குவார்கள். கடனில்லாமல் வாழ்ந்து பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் சொத்து சுகம் தேடிவைத்து விட்டு மரணிப்பவர்களுக்கு மரணித்த பின்னும் கிடைக்கும் மரியாதை, கடன்களைத் தேடிவைத்துவிட்டு மரணிப்பவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றும்போது கூட கடனில்லாமல் இருந்தால்தான் ஹஜ்ஜுகூட கடமையாகிறது என்று அல்லாஹ் விதித்து இருக்கிறான்.
எவர் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவரின் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவர் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறாரோ அல்லாஹ்வும் அவரை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி
“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் “ என்று கம்ப ராமாயணம், கடன் பட்டோரின் நிலைய இலக்கிய ரீதியாகக் காட்டுகிறது. ஆனால் கீழ்க் கண்ட இரு சம்பவங்களை நாம் நபி ( ஸல் ) அவர்களின் வாழ்விலிருந்தும் வாக்கிலிருந்து அறியும் போது அல்லாஹ் நம்மை , நமது கடன்களில் இருந்து காப்பானாக! என்றே இறைஞ்சுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்கு தொழுகை நடத்துவதற்கு முன் அவன் நயவஞ்சகனா? அல்லது தனக்குத் தெரியாமல் இஸ்லாத்திற்கு மாறு செய்பவனா என்று கேட்காமல் , அவர் மீது கடன் இருக்கிறதா? என்றுதான் தனது ஏனைய தோழர்களைப் பார்த்து முதலில் கேட்பார்கள். கடன் எதுவும் அவர் மீது இல்லை என்றால் மட்டும்தான் தொழுகை நடத்துவார்கள். இல்லையெனில் நீங்களே தொழுதுகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார்கள் என்று படிக்கும்போது தான் உயிருடன் இருந்தபோது வாங்கிய கடனை அடைக்காமல் வைத்துவிட்டு மரணிப்பவர்களில் ஒருவராக நம்மை ஆக்கிவிட வேண்டாமென்று இறைவனை நோக்கி , நமது நெஞ்சங்கள் கடன் இல்லாமல் நாம் கண்ணை மூட வைக்க வேண்டுமென்று இறைஞ்சுகிறது.
இதன் பிறகு காலத்தின் வளர்ச்சியில், இஸ்லாம் வலுப் பெற்ற பிறகு இஸ்லாத்தின் பொது உபகார நிதியின் அளவு உயரத் தொடங்கிய பின்-நாட்டுக்கென்று சொத்துக்கள் வந்த பின், இறந்தவர்களுடைய கடனை அடைப்பது அரசின் தலையாய பொறுப்பு என்று ஆக்கப்பட்டுவிட்டதால் அவரது கடனுக்குப் பொறுப்பு ஏற்பட்டுவிடுகிறது என்கிற திருப்தியில், இறந்தது யாராக இருந்தாலும் தொழுகை நடத்துவார்கள் என்றும் அறிகிறோம்.
இவ்விரண்டு செய்திகளும் மரணிப்பவர்கள் கடனில்லாமல் அல்லது அவரது கடனை திருப்பி செலுத்த பொறுப்பேற்றுக் கொள்பவரின் பொறுப்பில் மரணிக்க வேண்டுமென்ற இஸ்லாத்தின் பொருளாதார கொள்கையை வலியுறுத்துகின்றன. நவீன சட்டங்களில் பல கோடி ரூபாய்களை திட்டமிட்டு கடன் வாங்கி விட்டு அனைத்தும் நஷ்டமாகி விட்டது என்று ஜோடனைகள் ஜோடித்து ஐ..பி. என்கிற இன்சால்வென்சி கொடுக்கிற காட்சிகளைக் காண்கிறோம் . இந்தப் பருப்பு, இஸ்லாத்தில் இறைவனின் சன்னிதானத்தின் முன் வேகாது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஆகவே இஸ்லாமியப் பொருளாதார சிந்தனைகளின் படி முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. கடன் வாங்கிய பிறகு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது கடன் வாங்கியவருக்கு ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தானே கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.இதனைத்ட்ட்ட்தான் ,
ஆயிஷா(ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள். "இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தார்கள்.
'தாங்கள் கடனை விட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் வாங்கும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி
பெருமானார் ( ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த இந்த கீழ்க்கண்ட சம்பவத்தை ஹஜரத் முகமது இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஷாஷ் சுட்டிக்காட்டிக் கூறுகிறார்கள் . “ ஒரு நாள் நாங்கள் ஜனாசாக்கள் வந்தால் அவைகளை வைக்கும் இடத்தில் கூடி இருந்தோம். எங்களுக்கு மத்தியில் பெருமானார் ( ஸல் ) அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். திடீரென்று அவர்கள் வானத்தைப் பார்த்துவிட்டு பின் பார்வையைத் தாழ்த்தினார்கள். அதன் பின் தனது கைகளை நெற்றிப் பொட்டுக்களின் மீது வைத்து சுபஹானல்லாஹ்! சுபஹானல்லாஹ் ! என்று கூறியபடியே , “ எவ்வளவு கடுமையான எச்சரிக்கை வந்திருக்கிறது “ என்று கூறினார்கள். அன்று பகலும் அந்த இரவிலும் மறுநாள் காலையும் கூட நாங்க எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. மெளனமாகவே இருந்தோம். பிறகு நான் பெருமானார் ( ஸல் ) அவர்களிடம் என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கியுள்ளது என்று ஆவலுடன் கேட்டேன். அதற்குப் பெருமானார் ( ஸல்) அவர்கள், “ கடனைப் பற்றித்தான் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. இந்த முகமதின் உயிர் யார் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக யாரேனும் ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்து ஷஹீதாகினாலும் அவர் மீது கடன் இருந்து அது நிறைவேறும் வரை அவர் சுவர்க்கத்தில் நுழைய முடியாது“ என்று கூறினார்கள். (அஹ்மது).
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் நாம் வாழ்வில் எவ்வளவுதான் நன்மைகள் செய்து இருந்தாலும் நாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் தீர்க்கப்படாமல் இருந்தால் இறைவனின் முன்னாள் நாம் குற்றவாளியே என்பதும் சுவர்க்கத்தில் நுழையும் அருகதையை நாம் இழந்து விடுவோம் என்பதும் தான்.
கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக! கடனில்லாத நிலையில் மரணத்தைத் தரும்படி இறைவனிடம் இறைஞ்சுவோமாக!
இன்ஷா அல்லாஹ் அடுத்து நம்மில் பலரின் பர்சுக்குள்ளேயே இடம் பிடித்து இருக்கும் நவீன கால ஷைத்தான் ஆகிய கடன் அட்டைகளைப் பற்றிப் பேசலாம்.
இபுராஹீம் அன்சாரி
19 Responses So Far:
கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக! கடனில்லாத நிலையில் மரணத்தைத் தரும்படி இறைவனிடம் இறைஞ்சுவோமாக!
////இந்த அத்தியாயத்தை எழுதத் தொடங்குமுன் உங்களுடன் ஒரு வார்த்தை! ஏற்கனவே வெளியான இந்தத் தலைப்பிட்ட தொடர் இன்ஷா அல்லாஹ் விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது. ////
மாஷா அல்லாஹ்
காக்கா
நான் மிகவும் இதை எதிர் பார்த்திருந்தேன்
எனக்குள்ள பிரதியை நான் இப்பொழுதே பதிவு செய்கின்றேன்
///கறக்க கறக்க சுரக்கும் வட்டி என்கிற அமுத சுரபிதான் காரணம்.///
சொறன்ட சொறன்ட தாம் அழிவின் விழிம்பு வரை போவது தெரியாமல் இருப்பதும் இன்னொரு காரணம்
ஏழை எளியவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த வட்டிக்கடனை வேறோடு அறுத்து எறிய வேண்டும்
வட்டிக்கடன் என்பது ஏழைகள் அவர்களாக தேர்ந்தெடுத்து குடிக்கும் பாலிடால்
இந்த பாலிடால் வியாபாரிகளை ஒழித்துக்கட்டுவதில் நாம் ஒவ்வொருவரும் சபதம்
எடுக்க வேண்டும்
முடிந்தவரை இந்த பதிவை இலவசமாக வெளியிட்டால் ஏழை எளியவகளுக்கு கிடைக்கும்படி செய்யலாம்
அதற்க்காக செலவாகும் செலவில் என்னுடைய பங்களிப்பையும் நான் தர தயார்
///கடன் கொடுத்து உதவுவது ஒரு சமூக நலப் பணி என்பதே இஸ்லாத்தின் மணித் நேயத்தின் அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு. ஒருவர் கண் முன்னால் கஷ்டப்படும்போது கையில் தனது தேவைக்கு அதிகமான பொருளை வைத்திருக்கும் மற்றொருவர் சகோதர மனப்பான்மையோடும் நட்போடும் தேவைப்படுபவருக்கு பிரதிபலன் கருதாமல் கொடுத்து உதவ வேண்டுமென்பதே கடன் பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரத்தின் புரட்சிகரமான சிறப்பம்சம். ஒருவருக்கொருவர் நண்மையான காரியங்களில் உதவிக் கொள்வது சமுதாயத்தில் அன்பை அதிகப் படுத்தும் ////
மேகண்ட வாசகம் பணம் படைத்தோர் அணைவருக்கும் போய் சேரவேண்டிய வாசகம்
இதை கல்வெட்டாகவும் வைக்கலாம்
கடன் பற்றிய விழிப்புணர்வும் ஹதீஸ்களும் இஸ்லாமியரிடையை மிககுறைவே.இல்லாதபோது இருப்பவனிடம் தேவைக்காகவும்கடன் வாங்குகிறார்கள்.மேலும் அவனிடம்தான் பணம்இருக்கிறதே என்றும் கடன் வாங்குகிறார்கள்.கடன்வாங்கியவர்களுக்கு பணம்வந்தபோது கொடுத்தவர் கடனை திருப்பிகேட்டால்''அரிசிவாங்கபணம் இல்லாமல் பட்டினியா கிடக்குறீர்கள்? எங்கள் காசைவாங்கித்தான் உங்கள்வீட்டுஅடுப்பில்உலைஏறவேண்டுமா?''என்றும் கேட்க்கிறார்களே!
//இரகத்தை நினைத்தவன்பொன்னை இழந்தான்.எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்// நன்றாய்த்தான்சொன்னான்பட்டுக்கோட்டையான்.
இவன்பட்டுக்கோட்டையானா?இல்லைபாட்டுக்குகோட்டையானா?
கப்பலுக்கு சொந்தக்காரன் கடன் கொடுக்க ஆரம்பித்தால்
கட்டுமரம்கூட மிஞ்சாது!
ஒவ்வொரு மனிதனும்கடனாளியாகவேபிறக்கிறான்/ தன்னை சுமந்த தாயின் பத்துமாத வாடகை கடன் /அவள் முந்தானையால் மார்மூடிமுலையூட்டிய பால்கடன்.
.இரவெல்லாம்தூங்காமல்விழித்திருந்துதொட்டிலாட்டிய கரங்களுக்கு 'கரசேவை' கடன். காய்ச்சலோகண்வலியோவந்தபோது''யார்கண்பட்டதோ?''என்றுமிளகாயில் சுண்ணாம்பு தடவிஅடுப்பில்போட்டகடன். உன்தொப்புளில்முத்தமிட்டபோது சூடாக அவள்முகத்தில் நீ 'சொர்ர்'ரென்று கறந்துவிட்டமூத்திரத்தை செவ்விளநீரென்று நுனிநாக்கில்ருசிபார்த்த
அந்தக்கடனை எல்லாம் நீ எந்தக்கடன் செய்துமுடிக்கப்போறாய் ?
ஆஹா...
மறுசோறு!
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடன் அன்பை முறிக்கும்; கடன் வசூலென்று வந்துவிட்டால் என்பையும் முறிக்கும்! கடன் இல்லாத வாழ்க்கையே நிம்மதியானது.
குர்ஆன் ஹதீஸ் குறிப்புகளோடு கடன் தொடர்பாக மார்க்கத்தின் நிலைபாடுதான் எத்துனை தெளிவானது!!!
உண்மைதான் காக்கா, கடன் பற்றிச் சொல்லாமல் இந்தப் புத்தகம் முழுமையாயாதுதான். சொல்லி முடிப்போம் இன்ஷா அல்லாஹ்!
/இதுமலேசியாவில்நடந்தது//ஒருநாள்பகல்மணி12இருக்கும்.என்நண்பர்ஒருவர்டெலிபோன்போட்டு’ரேடியோமலேசிய இஸ்லாமிய’பகுதியின் தலைவர் காலமாகிவிட்டார்.வருகிறீர்களாபோய்பார்த்து விட்டுவ்ருவோம்’’ என்றார்.நான்முன்புபினாங்கில்இருந்தபோதுஅவரையும்அவரின்குடும்பத்தாரையும்எனக்குதெரியும்..அவர் கோலாலம்பூர் மாற்றலாகி வந்தபோதுதொடர்பு விட்டது.
‘’சரிவருகிறேன்’’ என்றேன்.வெகுதொலைவில்இருந்தகாலமானவர் வீட்டுக்குசென்றுஅங்கிருந்தநாற்காலிகளில்இருவரும்அமர்ந்தோம். சிறிதுநேரத்தில் ஜிப்பாவும்கட்டம்போட்டகலர்கைளியோடும் ஒருமலாய்காரர்வந்தார்.வந்தவர்அங்கிருந்தஎல்லோருக்கும் கைகொடுத்துஸலாம்சொல்லியபின்எனக்குஸலாம்கொடுக்கஎன்னருகேவந்தார்.நானும்ஸலாம்கொடுக்கஎழுந்துகையைநீட்டினேன்.அவர்கையைபிடித்து sela dudok duhulu tuan!என்றார்.[ இதன்பொருள் Please sit-downSir!.]அவர்என்னைப்பற்றிவிசாரித்தார்.. புத்தகவியாபாரத்தைபற்றிவிசாரித்தார்.புத்தகவியாபாரத்தின் பிரச்சனைபற்றி சொல்லியபோது லேசாகபுன்முறுவல்பூத்தார். அந்தபுன்முறுவளுக்குஎனக்குஅர்த்தம்புரியவில்லை.இவரைஎங்கேயோபார்த்த நினைவு என்நெஞ்சுக்குள் நடைபோட்டது. இதற்குள் ‘’மையத்து குளிப்பட்டி பர்வைக்குஇருக்கிறது.பார்ப்பவர்கள் பார்க்கலாம்’’என்றுமரணித்தவர் மகன்வந்து சொன்னார்.எல்லோரும் வரிசையாக போய்பார்துவந்தார்கள்.என்னோடுபேசிகொண்டிருந்த கைலிகாரர்என்னைமுன்போகவிட்டுஅவர்பின்வந்தார். எல்லோரும்பார்த்துமுடிந்தசிறிதுநேரத்தில் மையத்துபெட்டிவெளியை கொண்டுவந்துவைத்தார்கள்.என்கூடபேசிகொண்டிருந்த கைலிக்காரர்எழுந்து போய்மையத்துபேட்டியின்கால்மாட்டுபக்கம்நின்றுஎல்லோருக்கும் ஸலாம்சொன்னார்.பின்பு’’காலமானமானவர்பெயரைசொல்லிஅவர் யாரிடத்திலும் கடன்பட்டிருந்தால்அதை என்கம்பனிஅலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.அவர் எழுத்துமூலமாககொடுத்திருந்தாலும் வாய்ச்சொல்லில் நம்பிக்கையாக கொடுத்திருந்தாலும் எங்கள்கம்பெனியில்அதைபெற்றுகொள்ளலாம்’’என்றதோடுகொம்பனியின்பெயர்அட்ரஸ் டெலிபோன் நம்பர்தொடர்பு கொள்ள வேண்டியவர்பெயர்எல்லாம்சொன்னார்.[காலமானவரின்மகன் அவர்நிறுவனத்தில்பணியாற்றுகிறார்] அப்பொழுதுதான்எனக்குதெரிந்தது அவர்மலேசியாவின்பெரியபணக்காரகளில் ஒருவரான முஸ்தபாகமா.ல் என்று.M.K.Land and Property development [Private]Limited.]இவருக்குM.P.H என்றபெயரில்நாடெங்கும் தொடர்புத்தககடைகளும் உண்டு. அவர்என்னிடம்சகஜமாகபேசினார்.பந்தாகிந்தாஒனன்னுமிலே..ஆனால் நம்நாட்டிலோபஞ்சாயத்துகவ்ன்சிலர்தேர்தலுக்கு நின்னு டெபொசிட்தொகையை பறிகொடுத்தவன் கூடதினுசாத்தான் நடக்குறான்.
நான்புத்தகவியாபாரதைபற்றிநான்பேசும்போது''புத்தகவியாபாரம்செய்வதைவிடகழுதைமேய்க்கலாம்'' என்றேன. M.P.H.புத்தகக்கடைஅவருடையதுதான் யென்று எனக்கு தெரியாது என்பதைபுரிந்து கொண்டே நான்பேசும்போது அவர்புன்முருவல்பூத்தார்என்பதை பின்பு தெரிந்து கொண்டேன்!
தம்பிமன்ஸூர்சொன்னது// கடன் கொடுத்து வாங்குவது சமூகநலபணி// இந்தக்காலத்தில் 'பணி' யை பார்த்தல் மணி போய்விடும்.
நீங்கள் சொன்ன அப்போதைய M.K Land முதலாளி இன்றைக்கு மலேசியாவின் மிகப்பெரிய பணக்காரகளின் பட்டியலில் இருக்கிறார்.
அவரின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் எளிமை கண்டு இறைவன் அளித்த கருணையாக இருக்கவேண்டும்.
To Brother Ebrahim Ansari,
வட்டியின் கொடுமை மிகவும் கொடூரமானது என்று அனுபவிப்பவர்களுக்கே தெரியும். இருப்பினும் நவீன பொருளாதாரம் இதைச்சாராமல் இல்லை.
இஸ்லாமியப்பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில் மலேசியா முன்னோடி. இருப்பினும் கிரடிட் கார்டு , வீட்டுக்கடன்களில் வசூலிக்கப்படும் 'தாமதக்கட்டணம்' சாதாரண வங்கிகளை விட அதிகமாகவே இருக்கிறது.
எந்த நாட்டிலும் இஸ்லாமியப்பொருளாதாரம் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் மிகப்பெரிய அளவு முஸ்லீம்கள் இருக்கின்றனர். இஸ்லாமியப்பொருளாதாரம் நிறுவப்பட்டால் அதன் சார்ந்த டிகிரிகளுக்கு நிறைய தேவை இருக்கும். நிறைய Islamic Bank / Takaful [ Islamic Insurance கம்பெனிகள் வர வாய்ப்பு இருக்கிறது.
யாரைக்கேட்டாலும் இஞ்ஜினீயரிங் / கம்ப்யூட்டர் என்று படிக்கும் காலம் சிறிது மாற்றம் காணலாம்.
தம்பி ஜாகிர்!
//தாமதக்கட்டணம்' சாதாரண வங்கிகளை விட அதிகமாகவே இருக்கிறது.//
முழுக்க முழுக்க உண்மை. காரணம் வங்கித் தொழில் பல இலாப நோக்குள்ள கார்பரேட் கம்பெனிகளின் கரங்களில் சிக்கிக் கொண்டு விட்டன. இஸ்லாமிய பொருளாதார முறைகளைப் பயன்படுத்தி மக்களிடம் அதிகம் கறப்பது எனபதை இவைகள் நடைமுறைப் படுத்துகின்றன. இஸ்லாமிய வங்கிகளில் உயர் பதவிகளில் இருப்போர்கள் அனந்தராமன் , சேஷாசலம் ஆகியோர்தான் ( துபாயில் ).
வழக்கமான வர்த்தக வங்கிகளின் ஸ்டேட்மென்ட் Financial Charges என்று போட்டு வட்டியை வசூலிப்பதைவிட இஸ்லாமிய பெயர் தாங்கி வங்கிகள் Late Fee என்று போட்டு வாங்குவது அதிகம். இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியக் கோட்பாடுகள் அமுல் படுத்தபப்ட்டால்தான் இந்த நிலைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் துரதிஷடவசமாக இஸ்லாமிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் யூத / அமெரிக்க/ ஐரோப்பிய வங்கி முறைகளையே பெருமளவில் கையாள்கின்றன அல்லது அவைகளுக்கு அடிமைகளாகிக் கிடக்கின்றன என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.
வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)
Post a Comment