Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 34 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2014 | , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

அண்மைக் காலமாக நம்மிடையே அதிக அளவில் பேசப்படும் பொருள்களில் பங்குச் சந்தை என்பதும் ஒன்றாகிவிட்டது. நம்மில் ஒரு சிலர் இந்த பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடவும் ஆரம்பித்து விட்டார்கள்; ஈடுபட்டால் என்ன என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்; ஈடுபடும் முன்பு இதைப் பற்றி தெரிந்து கொள்ளாலாம் என்று முயலத்தொடங்கி இருக்கிறார்கள். எளிமையான முறையில் பங்கு சந்தைகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகமும் இது பற்றி இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் எந்த திசை நோக்கி வழிகாட்டுகின்றன என்பது பற்றியும் விவாதிக்கலாம். இதைப் பற்றி விரிவாகவே பேசவேண்டி இருப்பதால் ஒரு சில அத்தியாயங்கள் தேவைப்படும். 

ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை என்பது போல் பங்குச் சந்தையும் வணிக நிறுவனங்களின் பங்குகளை வாங்க அல்லது விற்க உதவும் சந்தைதான். ஆனால் மற்ற சந்தைகளுக்கு ஒரு வேலி அடைத்த அல்லது காம்பவுண்டு சுவர் எடுத்த குறிப்பிட்ட இடம் இருக்கும். ஆனால் பங்கு சந்தைக்கு குறிப்பிட்ட இடமெல்லாம் கிடையாது. இது உலகளாவியது; ஊடகங்களைச் சார்ந்து நிற்பது; வலைதள இணையங்களோடு இணைந்திருப்பது.

குறிப்பாக இன்றைய தகவல் தொழில்துறை நுட்ப வளர்ச்சியில் கண் இமைக்கும் நேரத்தில் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். பம்பாய் பங்கு சந்தை , சென்னை பங்கு சந்தை என்றெல்லாம் இடங்கள் காட்டப்படுகின்றனவே என்று நம்மில் சிலர் கேட்கலாம். அந்த கட்டிடங்கள் மற்றும் இடங்கள் எல்லாம் பங்குகளின் பரிவர்த்தனைகளை பதிவு செய்து கொள்ளும் அலுவலகங்கள்தானே தவிர அந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்றுதான் வாங்க விற்க வேண்டுமென்று கட்டாயமான அவசியம் இல்லை. அந்த இடங்களில் கூடும் கூட்டம் முக்கியமாக பங்குகளின் நிலவரங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அறிந்து கொள்ளக் கூடுகின்ற கூட்டமே தவிர பங்குகள் வாங்க வேண்டுமானால் கூடுவாஞ்சேரியிலிருந்தும் வாங்கலாம் விற்க வேண்டுமென்றால் கோதண்டாபுரத்திலிருந்தும் விற்கலாம். 

இன்னும் பங்கு சந்தை பற்றியும் முதலீடுகளைப் பற்றியும் நம் அறிந்து கொள்ளும் முன் சில கருத்துக்களை முன்னெடுத்து வைப்பது அவசியமாகிறது. முக்கியமாக சேமிப்பு (SAVINGS) என்பதற்கும் முதலீடு (INVESTMENT) என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் ஒன்றல்ல; சேமிப்பாக இருப்பதெல்லாம் முதலீடாகாது. அதே நேரம் , சேமிப்பு இல்லாவிட்டால் முதலீடு செய்ய இயலாது. ஒரு காலத்தில் நமது பெண்கள் அடுக்குப் பானைகளில் அரிசிக்குள் அல்லது மிளகாய்க்குள் l “சிறுவாடு” சேர்த்து வைப்பார்கள். “சல்லி முட்டியில்” சில்லறைக் காசுகளைப் போட்டு வைப்பவர்களும் உண்டு. நமது செலவு போக மிகுதியை பிற்காலத் தேவைக்கு வேண்டுமென்று தனது கைகளில் மறைத்து வைத்திருப்பது சேமிப்பு. அப்படி சேமித்ததை வீணாக கையில் வைத்துக் கொள்ள வேண்டாமே என்று ஏதாவது செல்வத்தை வளர்க்கும் துறைகளில் அதை போடுவது முதலீடு. இப்படி செய்யும் முதலீடு தங்கத்தின் மீதாக இருக்கலாம்; நிலத்தின் மீதாக இருக்கலாம்; வீட்டின் மீதாக இருக்கலாம்; பரஸ்பர நிதிகளின் மீதாக இருக்கலாம்; பங்குச் சந்தையில் விற்கப்படும் பங்குகளின் மீதாகவும் இருக்கலாம். சேமிப்பு, எப்போது ஒரு வருமானத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட ஆரம்பிக்கிறேதோ அப்போதுதான் அது முதலீடாகிறது.

பொதுவாக “மண்ணில் போட்டதும் பொன்னில் போட்டதும் வீணாகி விடாது” என்கிற கருத்து மக்களிடையே நிலவுகிறது. நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களின் (Immovable Properties) மீது நாம் செய்யும் முதலீடு, காலக்கெடுவில் பலமடங்கு வளரக் கூடியது. பல நேரங்களில் இப்போதுள்ள வளரும் பொருளாதாரத்தில் நமது பொருளாதார நிலமைகளை எட்டாத உயரத்துக்குத் தூக்கிவிட்டு விடக் கூடியது. வானம் பார்த்த பூமிகளை வைத்துக் கொண்டு வறுமையில் வாடிய பலர் வீட்டில் இன்று இரண்டு மூன்று இன்னோவா கார்கள் நிற்கின்றன. மானாவாரி தென்னந்தோப்புகள் இன்று சராமாரியாக வீடுமனைகளாக்கப்பட்டு பல புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள். என்றோ தனது பாட்டன் காலத்தில் வாங்கிப் போடப்பட்ட நிலங்கள் இன்று பலருக்கு பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. 

 இஸ்லாமிய பொருளாதார கண்ணோட்டத்தின்படி பிறருடைய நிலம் அல்லது வீட்டை தவறான முறையில் அபகரிக்காமல் இருந்தால்- அனாதைகளின் சொத்துக்களுக்கு அநீதி செய்து சுருட்டாமல் இருந்தால் – பொய் பித்தலாட்டம் புரட்டுக்களைக் கூறி சொத்துக்களை விற்காமல் இருந்தால் சுவையான குடிநீர் உள்ள இடம் என்று கூறி சுண்ணாம்புக் கல் விளையும் நிலங்களை தலையில் கட்டாமல் இருந்தால்- அவைகள் ஹலால் ஆனவையே. இத்தகைய அசையாச் சொத்துக்களின் மீது நாம் முதலீடு செய்யும் போது நமது கண் முன்னே நமது கைகளாலேயே இவற்றை செய்து கொள்கிறோம்; நமக்குத் தெரிந்தே இதற்கான பரிவர்த்தனைகள் யாவும் நடைபெறுகின்றன என்ற அளவிலும் இத்தகைய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டவையே. 

 ஆனாலும் இவைகளை வாங்குவதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படும்; நமக்குத் தேவையான நேரத்தில் இலகுவாக விற்க இயலாத தன்மைகள் கொண்டவை; சிறிய வருமானம் உள்ளவர்களால் இவற்றில் முதலீடு செய்வது இயலாததாக இருக்கும் என்கிற காரணங்கள் இத்தகைய முதலீடுகளின் மீது முனைவோர்களின் சட்டையைப் பிடித்து பின்னோக்கி இழுத்து, அசையாச் சொத்துக்களின் மீதான முதலீடுகளைப் பற்றி சாதாரண மக்களை தலையைச் சொரிந்து யோசிக்க வைக்கிறது.

அடுத்து, அசையும் சொத்துக்கள் என்று (Movable Properties) என்று அழைக்கப்படுகிற தங்கம், வெள்ளி, நகைகள், வங்கி நிரந்தர வைப்புக்கள், கடன் பத்திரங்கள், பங்குகள் ஆகியவை அசையும் சொத்துக்களாகும். இவற்றுள் வங்கி வைப்புக்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மீது வட்டியின் வாசம் வீசுவதால் அவற்றை இஸ்லாமியப் பொருளாதாரம் ஒதுக்கி வைக்கிறது. 

தங்கத்தின் மீதான முதலீடு ஒரு நல்ல முதலீடாகக் கருதப் படுகிறது. ஆனாலும் “ஆளைப் பார்த்தியா! அப்படியே சரம் சரமாத் தொங்குது” என்று புரளி பேசும் பலருடைய கண்களுக்கு முன்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்து கழுத்தறுப்பதுடன் இருட்டில் உள் நுழையும் கள்வர்களுக்கு முன்னாலும் தங்கத்தை பாதுகாத்து வைப்பது கடினமாக இருக்கிறது. தங்கத்தின் இன்றைய கடுமையான விலை மதிப்பால் திருடுபவர்கள் தங்கத்தையே குறிவைத்துத் திருடுகிறார்கள். காரணம் Less Luggage ! More Comfort ! கொள்கைதான். பூட்டியிருக்கும் வீடுகளில் வைத்துவிட்டுப் போகும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. பயணங்களில் மயக்க பிஸ்கட் கொடுத்து அகப்பட்டதை அபகரிப்பதும் விபத்துக்களில் காப்பாற்ற வருபவர்கள் போல் கழுத்தில் காதில் கிடப்பதை அறுத்துக் கொண்டு ஓடும் மனித மிருகங்களும் அதிகரித்து விட்டார்கள். ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு, ஆசையும் அநாகரிகமும் அரசாளும் சமூகத்தில் ஒரு முழுப் பாதுகாப்பான முதலீடாகாது.

அடுத்தபடியாக, தங்கத்தை பெண்கள் மட்டுமே அணிய முடியும். ஏதாவது தேவைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் – அதைப் பெண்களிடம் கேட்டால் உடனே கழற்றிக் கொடுப்பதற்கு எல்லோரும் கால் சிலம்பைக் கழற்றிக் கொடுத்த கண்ணகிகளல்ல. நகையை நாம் கேட்டால் நவீன கண்ணகிகள் முதலில் “ நஹி “ என்றுதான் சொல்வார்கள். அப்படி நகைகளை அணிந்து கொண்டிருக்கும் பெண்கள் அவற்றைக் கழற்றும்போது விடும் கண்ணீரின் அளவு சிரபுஞ்சி மழையையும் மிஞ்சிவிடும். “கேட்கும் போதெல்லாம் அதை கழற்றித் தந்தேனே! இதைக் கழற்றித் தந்தேனே !" என்று கூறும் பெண்கள் தங்கத்தை வாங்கும்போது மனமகிழ்வும் விற்கும்போது மனச் சோர்வும் அடைகிறார்கள். இதனால் குடும்ப வாழ்வில் தொய்வு விழ சாத்தியக்கூறுகள் உள்ளன. 

பல நல்ல மகிழ்வான குடும்பங்கள் தங்கத்தை விற்க நேரிடும்போது இழக்கக் கூடாததை இழந்து விட்டதாக உணர்கிறார்கள். "எங்க வாப்புச்சா தந்தது – எங்க வாப்பா பினாங்கிலேயிருந்து கொண்டு வந்தது" என்றெல்லாம் தங்க நகைகளின் மீது பெண்களுக்கு செண்டிமெண்டல் அட்டாச்மென்ட் உள்ளதைப் பார்க்கிறோம். அத்துடன் கல்யாணம் முடிக்க வேண்டிய குமர்களை வைத்துக் கொண்டு நகைகள் மீது கை வைப்பதா என்றும் – இப்போது விற்றால் பிறகு தேவைக்கு வாங்க முடியுமா என்றும் பெண்கள் கேள்விக் கணை தொடுப்பார்கள் என்பது சமுதாயம் தழுவிய பொருளாதாரத்தின் உண்மையின் வடிவம்.

ஆகவே தங்க முதலீடு என்பது கூடியவரை ஒரு வழிப்பாதைதான். ஒரு நகையை தட்டாரப்பிள்ளையிடம் கொடுத்து அழித்துவிட்டு, "ஆமா உறுத்துது- புடவையைக் கொழுவிக் கொழுவி இழுக்குது" என்று கூறி மாற்றி வேறு நகைகள் செய்ய வேண்டுமானால் அவைகளை மனக் கஷ்டம் இல்லாமல் பிரிய நமது பெண்கள் உட்படுவார்களேயன்றி நமது பொருளாதார நடவடிக்கைகளுக்காக தங்கத்தை விற்க பெரும்பானமையான பெண்கள் மனதார உடன்படவே மாட்டார்கள். 

ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு என்பது கை நழுவிப் போன சேமிப்பு. ஆகையால் தங்கத்தின் மீதான முதலீட்டை பெரும்பாலும் செலவுக் கணக்கில்தான் எழுதிவைக்க வேண்டும். வேண்டுமானால் ஆறுதலுக்காக, சேமிப்பு ரூபத்தில் ஏற்படும் செலவு என்று சொல்லிக் கொள்ளலாம். இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் தங்கத்தின் மீதான முதலீடு ஒரு தூங்கும் முதலீடு. தங்கத்தின் மீதான முதலீடு, நம்முடனே தங்கும் முதலீடு. நம்மைவிட்டுப் பிரியா முதலீடு. இந்த முதலீட்டால் வருமானம் வர வாய்ப்பில்லை. ஆனாலும் உடனடித் தேவைகள் ஏற்படும் காலத்தில் கை கொடுத்துக் காப்பாற்றும் கைகண்ட மருந்துதான் தங்கத்தின் மீதான தனித்தன்மையான தன்னிகரற்ற முதலீட்டு முறை என்பது மறுக்க இயலாது.

முயூசுவல் பண்ட் என்று அழைக்கப்படும் பரஸ்பர நிதிகளையும் முதலீட்டில் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். அண்மைக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த முதலீட்டு முறை மக்களை மடையர்களாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. பெரும் விளம்பர உக்திகளாலும் வீடு தேடி வரும் விற்பனைப்பிரதிநிதிகளாலும் தூக்கிப் பிடிக்கப்படும் இந்த முதலீட்டுமுறை அடிப்படையிலேயே ஒரு மாயையை தோற்றுவிக்கிறது. இதன் முறையென்ன வென்றால் வர்த்தக வங்கிகளும் , முதலீட்டு நிறுவனங்களும் பல கார்பரேட் கம்பெனிகளும் முயூசுவல் பண்ட் என்கிற முறையில் பொது மக்களின் சேமிப்புகளைப் பெற்றுத் திரட்டி அவ்விதம் திரட்டப்பட்ட முதலீட்டுப் பணத்தைக் கொண்டு பங்கு சந்தையில் தங்களது இஷ்டத்துக்கு பங்குகளை வாங்கி விற்று, கடன் பத்திரங்களை வாங்கி வைத்து , நிறுவனங்களுக்கு வட்டிக்குக் கொடுத்து அதனால் இலாபம் திரட்டி அதை முதலீட்டாளர்களுக்கு ஈவு வைத்துக் கொடுக்கும் முறையே ஆகும். இந்த முறையில் ஏற்றம் பெற்றவர்களைவிட ஏமாந்தவர்களே அதிகமென்று இந்த முறையில் முதலீடு செய்து அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள். இந்த முறையின் அடிப்படை என்னவென்று நமது மொழியில் சொல்லப்போனால் 'ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதுவதுதான்' என்று கூறலாம். எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று அலைபவர்கள் பலி கொடுக்கப்படும் இடம்தான் இந்த மியூசுவல் பண்ட் முறையாகும். வாசமுள்ள வடை வைத்திருக்கிறார்கள் என்று இதில் வாயை வைத்து மாட்டிக் கொண்ட எலிகள் ஏராளம். வட்டியின் இழை இந்த முறையில் ஊடுருவி இருப்பதால் முஸ்லிம்கள் கவனமாகக் கையாளவேண்டிய முதலீடு இந்த முறையாகும். 

அடுத்து எஞ்சி இருப்பது பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள்தான். பங்குகளை ஒரு ஊகம் நிறைந்த துணிகரமான முதலீடுகள் (Risky investments) என துணிந்து சொல்லலாம்; வகைப்படுத்தலாம். இவ்வகை முதலீடுகளில், இலாபம் வர வாய்ப்பு உள்ள அதே அளவு நஷ்டம் ஏற்பட்டு, போட்ட முதல் ( capital) ஸ்வாஹா ஆகவும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம், நடுத்தர மக்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. ஆனால் ஊதிப் பெருக்கும் ஊடகங்களால் நிலைமைகள் மாறி வருகின்றன. மக்கள் இன்று விரைவாக பணத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். எனவே, பங்குச்சந்தை முதலியவற்றில் துணிந்து ஆழம் தெரியாமலேயே காலை விடுகின்றனர் . எனவே, பங்குச் சந்தை பற்றிய அறிவு இன்று அவசியமாகிறது. பங்கு சந்தை பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையும் அவசியமாகிறது. 

இவற்றை விவாதிக்கும் முன் பங்கு என்றால் என்ன? பங்கு சந்தை என்றால் என்ன? அவை எப்படி இயங்குகின்றன? ஆகிய கேள்விகளுக்கு விடை ? 

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

12 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமை!

எனக்குப் பங்கு சந்தை பற்றி தெளிவான சிந்தை கிடையாது என்பது ஒன்றும் விந்தை அல்ல.

தனக்குப் பங்கு சந்தை பற்றி ஏ ட்டு இஸட் தெரியும் என்று பீலா விடும் பலருக்கு அதன் சூட்சுமங்கள் தெரியாது!

தாங்கள் தொட்டால் எந்த பேசுபொருளும் முழுமையாக விளங்கிவிடும் என்பது என் அனுபவம்.

அவ்வகையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் காட்டுங்கள் காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sabeer.abushahruk said...

//அப்படி நகைகளை அணிந்து கொண்டிருக்கும் பெண்கள் அவற்றைக் கழற்றும்போது விடும் கண்ணீரின் அளவு சிரபுஞ்சி மழையையும் மிஞ்சிவிடும். //

பதைக்கான், காசுமால, அல்க்கத்து, கடுவு மணி, தோடு, ரெட்டவடச் சங்கிலி என்று எங்கும்மா போட்டிருந்த அந்தக் கால நகைகளெல்லாம் வாப்பாவின் மறைவுக்குப் பிறகு எம் பொண்டாட்டியோ புள்ளைவொலோ சீண்டாததால் 'அழிச்சிட்டு செய்ய' உம்மாவும் ஒத்துக்காததால் அப்டியே இருந்தது.

இந்திய முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியாய்ப் போன ஒரு தொழில் கல்விக்கான சீட்டை என் மகளுக்காக வாங்க தேவைப் பட்ட பெரும் தொகைக்காக உம்மா நகைகளை விற்க முற்பட்டபோது உம்மா மறுக்கவில்லை.

நகை முதலீடோ இல்லையோ, நமக்கு நாமே செய்துகொள்ளும் பொருளாதார நெருக்கடிநேர உதவி என்பதே என் கருத்து.

sheikdawoodmohamedfarook said...

//அடுக்குபானைக்குள்ளும்மிளகாய்பானைகுள்ளும்சிறுவாடு// கணவனுக்குதெரியாமால்ஏலச்சீட்டிலும்இன்வெஸ்ட்செய்தார்கள். இது'அவையாசமையத்துக்கு 'கைகொடுத்தது! ஒருடவுட்டு''சிறுவாடு''என்றசொல்லின்மூலச்சொல்etimologyஎது?

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களின் கருத்து

//நகை முதலீடோ இல்லையோ, நமக்கு நாமே செய்துகொள்ளும் பொருளாதார நெருக்கடிநேர உதவி என்பதே என் கருத்து.//

ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். பலருக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்து இருக்கும். இதைத்தான் நானும் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

//ஆனாலும் உடனடித் தேவைகள் ஏற்படும் காலத்தில் கை கொடுத்துக் காப்பாற்றும் கைகண்ட மருந்துதான் தங்கத்தின் மீதான தனித்தன்மையான தன்னிகரற்ற முதலீட்டு முறை என்பது மறுக்க இயலாது.//

Shameed said...

படித்தவுடன் புரிந்து கொள்ள கூடிய தெளிவான விளக்கங்களுடன் கட்டுரை அமைந்துள்ளது

sheikdawoodmohamedfarook said...

//தேவைபட்டபோதுஉம்மாவின்நகையைவிற்கமுற்பட்டபோதுஉம்மாஅதை மறுக்க வில்லை //மருமகன்சபீர்அபுசாருக்சொன்னது .தாய்குலத்தில் இப்படியும்ஒருதாயா? அதுவும்மகன்பிள்ளைபடிக்க நகை கொடுத்த தாயா?

Ebrahim Ansari said...

//வட்டியின் இழை இந்த முறையில் ஊடுருவி இருப்பதால் முஸ்லிம்கள் கவனமாகக் கையாளவேண்டிய முதலீடு இந்த முறையாகும். //

ம்யூசுவல் பண்ட் தொடர்பாக ,

முஸ்லிம்கள் அறவே ஒதுக்க வேண்டிய விஷயத்தை கவனமாக கையாள வேண்டியது என்று எழுதி இருக்கிறீர்களே என்று கேட்டு சற்று முன் அதிரையிலிருந்து அலை பேசி வந்தது.

முஸ்லிம்களில் சிலரும் இப்படி உள்ளூர் அளவில் பணம் இருக்கும் சிலரிடம் நிதிகளைத் திரட்டி இலாபமான தொழில்களில் முதலீடு செய்து அவற்றில் லிருந்து வரும் லாபத்திலிருந்து மாதாமாதம் தருவதாக சொல்லி வசூலித்து செய்து வருகிறார்கள்.

இது வட்டியின் அடிப்படையில் அல்ல இலாபத்தின் அடிப்படையில்தான் என்று நம்ப வைத்து செய்கிறார்கள்.

இப்படி செய்த சிலர் கொடுத்த முதலையே முழுங்கி ஏப்பம் விட்டு விட்டார்கள் .கேட்டால் முதlலீடு செய்த தொழில் அரசாங்கத்தின் தலையீட்டால் நசிந்துவிட்டது என்று கூறிவிட்டார்கள். பணம் கொடுத்த பலர் தவிக்கிறார்கள்.

முக்கியமான ஒருவரின் குடும்பத்திலேயே இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அதை விவரிக்க விரும்பவில்லை.

ஆகவேதான் கவனமாக கையாளும்படி எழுதியுள்ளேன்.

அந்த சம்பவத்தை அலைபேசியில் பேசிய தோழரிடம் விவரித்துக் கூறியவுடன் அவர் மூக்கின் மேல் விரல் வைத்தாரென்று அவர் பேசிய தோரணையில் உணர்ந்து கொண்டேன். அல்லாஹ் பாதுகாப்பானாக!

sheikdawoodmohamedfarook said...

//எல்லோரும்காற்சிலம்பைகழட்டிகொடுத்தகண்ணகிகள்அல்ல//மைத்துனர்இனா.ஆனா.சொன்னது. கண்ணகியும்ஒருகால்சிலம்பைதானேகொடுத்தாள். கோவலன்கேட்டதும் 'இந்தா'என்றுகண்ணகிகொடுத்த அந்தஒருசிலம்பும்'தங்கமா?அல்லதுகவரிங்கா?'தெரியலெயே!

sheikdawoodmohamedfarook said...

//அடுக்குபானைக்குள்சிறுவாடு// சிலவீடுகளில் சோறு ஆக்ககால்படியோ அரைபடியோ அரிசியைசட்டியில் அளந்துபோட்டபின் அதிலிருந்து ஒருகைப்பிடி அல்லது இருகைப்பிடி அரிசியோ எடுத்து ஒருபானையில் போட்டுவைப்பார்கள். ..ஒருமாதம்கழிந்தபின்பானையிலுள்ளஅரிசியைஅளந்துபார்த்தல்இரண்டு நாள்சோத்துக்கானஅரிசிஅங்கேஇருக்கும். Drops makes Ocean!

ZAKIR HUSSAIN said...

அறவே ஒதுக்க வேண்டிய விசயம் என்று ஒருவர் சொன்னதாக எழுதியிருந்தீர்கள்.

அவரிடம் சொல்லி ஒரு பக்கத்து மிகாமல் ஒரு கட்டுரை எழுதி வாங்கி பிரசுரிக்க முடியுமா?...

ZAKIR HUSSAIN said...

Mutual Fund அறவே ஒதுக்க வேண்டிய விசயம் என்று ஒருவர் சொன்னதாக எழுதியிருந்தீர்கள்.

அவரிடம் சொல்லி ஒரு பக்கத்து மிகாமல் ஒரு கட்டுரை எழுதி வாங்கி பிரசுரிக்க முடியுமா?...

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

அலை பேசி எண்ணை எப்படியோ வாங்கிப் பேசிய ஒருவர் யார் என்று தெரியாது. முகமது மொய்தீன் என்றார். அவரிடம் எப்படி ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை எழுதி வாங்கி பிரசுரிக்க முடியும் என்று தெரியவில்லை. அவர் மீண்டும் அழைத்தால் கேட்கிறேன். அவர் அழைத்த எண்ணுக்கு நான் அழைத்தால் பதில் இல்லை.

மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா சகோதரர்கள் என்று தெரியவில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு