சொல்ல வந்த விசயத்தை தலைப்பே தெள்ளத்தெளிவாக சொல்லி இருந்தாலும் சில நடப்புகளை இங்கு பகிர்வது ஏற்றம் என எண்ணுகிறேன். இதன் மூலப்பொருளை ஏற்கனவே சகோ. ஜாஹிர் ஹுசைன் தனக்கே உரிய நடையில் அழகாக, படிப்பவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும் விதம் தன் கட்டுரையை திறம்பட வடித்திருந்தார்.
ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அது தாய், தந்தையரின் பராமறிப்பில் வளர்ந்து காலப்போக்கில் அதுக்கும் திருமணங்கள் நடந்து பிள்ளைகள் பெற்று முதலில் சொன்ன ஆண்களும், பெண்களும் பேரன்,பேத்திகள் பெற்று வீட்டின் பெரியவர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்.
வீட்டுப்பெரியவர்கள் இந்த அந்தஸ்த்தை அடையவதற்குள் பல இன்னல்களையும், துன்பங்களையும், துயரங்களையும், போராட்டங்களையும், நோய்நொடிகளையும், சண்டைசச்சரவுகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் மற்றும் பல பிணக்குகளையும் சந்திக்காமல் வந்து விடுவதில்லை.
அவர்கள் உடல் நலத்துடன் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு ஏதேனும் துன்பமும், நோய்நொடிகள் வந்து விட்டால் துடித்துப்போகிறார்கள். 'என் ஈரக்குலையே; என் தாமரங்காவே, என் கண்ணே, என் தாயே, என் உசுரே' என்றெல்லாம் அவர்கள் பாசத்தின் உச்சிக்கே சென்று தன் தூக்கத்தையும் தொலைத்து விடுவார்கள். அவர்கள் சுகம் அடையும் வரை இவர்களும் சோகமாகவே இருப்பார்கள்.
ஆனால் அவர்கள் யாருக்காக பரிவும், பாசமும், இரக்கமும் கொண்டார்களோ அவர்கள் நாளை வளர்ந்து அவர்களுக்காக பாச மழை பொழியச்செய்த வீட்டுப்பெரியவர்களை சிறிதும் மதிப்பது இல்லை மாறாக மரியாதையில் மிதி படுவதை நாம் ஆங்காங்கே காண முடிகிறது. பெரியவர்கள் வயது முதிர்ச்சியால் உடலில் சுருக்கத்துடனும் உள்ளத்தில் இறுக்கத்துடனும் அவர்கள் இறுதி நாட்களை எண்ணி அதை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக காலம் கடத்துவதை காணும் சமயம் நாம் மன வேதனைப்படுவதை தவிர வேறு என்ன செய்ய இயலும்?
"காய்ந்த தென்னந்தோகையைப் பார்த்து பச்சைத்தோகை ஏளனமாக சிரித்ததாம் தானும் ஒரு நாள் காய்ந்த தோகையாக ஆக இருப்பதை மறந்து" என்ற பழமொழி தான் இங்கு ஞாபகத்துக்கு வருகிறது.
காலப்போக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும், அனுசரிப்பும் இன்றி, சண்டை சச்சரவுகள் முற்றி வீட்டுப்பெரியவர்களை அவர்கள் வாழ்ந்து அனுபவித்த வீட்டை விட்டே வெளியேற்ற நினைப்பது மற்றும் அவர்கள் உயிருடன் இருப்பதையே பெரும் சுமையாகவும், வேதனையாகவும், தொந்தரவாகவும் நினைப்பது மடத்தனத்தின் உச்ச கட்டம். மனித நேயத்தின் பெரும் வீழ்ச்சி.
பாதிக்கப்பட்ட அப்பெரியவர்களின் உள்ளக்குமுறலும், வேதனையின் வெளிப்பாடான கண்ணீரும் தண்ணீருக்குள் அழும் மீன்களின் கண்ணீர் போல் இவ்வுலகுக்கு தெரியாமல் போகலாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம்/நடிக்கலாம். ஆனால் படைத்த இறைவனுக்கு தெரியாமல் போய் விடுமா என்ன?
பெரியவர்கள் வயோதிகத்தாலும், சுய நினைவு/உணர்வு இன்றி படுக்கையில் கிடத்தப்பட்ட பிறகு அவர்கள் படும் பாடு, அவர்களை சரிவர கவனிப்பாரின்றி ஏதோ குப்பைத்தொட்டி போல் தன் வீட்டிலேயே பாவிக்கப்படும் நிலை வேதனையின் உச்ச கட்டம். இந்த நிலை நாளை யார்,யாருக்கு வரும் அல்லது வராது என்று யாரேனும் அறுதியிட்டு உறுதிபடுத்திக்கூற முடியுமா? அதற்கே ஏதேனும் சக்தி உண்டா? இல்லை பள்ளிக்கூடம் சென்று தான் படித்து விட முடியுமா?
அவர்களை கவனிக்க சம்பளத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் பணத்திற்கு தான் மாரடிப்பார்களே அன்றி பாச மழை பொழிந்து விடுவார்களா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.
சில இடங்களில் இது போல் படுக்கையில் கிடத்தப்பட்டவர்களின் மரணத்தை அன்றாடம் எதிர்பார்த்திருக்கும் இளைய வயதினர் ஏதோ காரணத்தால் தீடீர் மரணம் ஏற்பட்டு படுக்கையில் கிடப்பவருக்கு முன்பே இவ்வுலகை விட்டு சென்று விடுவதை காண முடிகிறது.
படுக்கையில் இருந்தாலும் மனிதன் பல்லக்கில் சென்றாலும் மரணத்திற்கு என்ன விதிவிலக்கு?
பெரியவர்கள் தனக்கு ஏற்படும் இழிநிலைக்கும், கேவலத்திற்கும், பரிவற்ற சூழ்நிலைக்கும், வேதனைகளுக்கும், இரக்கமற்ற செயலுக்கும் தட்டிக்கேட்கவோ அல்லது தண்டிக்கவோ அவர்களுக்கு சக்தியும், மனதிடமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் கண்ணீருக்கு இறைவனிடத்தில் அணுகுண்டை மிஞ்சிய சக்தி நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.
சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பயன்படுத்தப்பட்டு மீதி நேரங்களில் அவர்கள் மேல் இளைய வயதினர் ஆளுமை செலுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிவதை எங்கோ சென்று பார்க்கத்தேவையில்லை. பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது இந்த அவல நிலையை.
நாகரீக உலகில் இன்று 'பழையன கழிதலாய்' நினைக்கப்படும் வீட்டுப்பெரியவர்கள் வீட்டின் பொக்கிசங்களாக பெரும்பாலும் கருதப்படுவதில்லை மாறாக சமையலில் நல்ல நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பில்லை போல் மட்டுமே கருதப்படுகிறார்கள் (திருமண பத்திரிக்கைகளில் குடும்பப்பெரியவர் பெயர் போடவும், வீட்டில் எவருக்கேனும் மரணம் ஏற்பட்டால் மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் சலாம் சொல்வதற்கு மட்டும்) அதன் மருத்துவ குணம் அறியாதவர்களாய் அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
வாழ்வின் இறுதி நாட்களில் தன் பிள்ளைகள் அல்லது பேரன்,பேத்திகள் தன்னை நன்கு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பிறகு கிடைக்கும் ஏமாற்றமும் அவர்கள் உள்ளத்தில் வெற்றிடமாய் நிறைந்திருப்பதை காண அதனுள் இறங்கிப்பார்ப்பவர் எவரோ? இஸ்லாமும் அதன் முக்கிய அங்கமான மனித நேயமும் இங்கு மாயமாய் மறைந்து போய் விடுவது ஏனோ?
வீட்டுப்பெரியவர்களைப்போற்றுவோம்; வாழ்வில் உன்னத நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
8 Responses So Far:
MSM(n) மற்றுமொரு அத்தியாயம் படைத்திருக்கிறார் !
சிந்திக்க மட்டுமல்ல... சிரத்தை எடுக்க வேண்டிய ஒன்று !
அவர்களை கவனிக்க சம்பளத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் பணத்திற்கு தான் மாரடிப்பார்களே அன்றி பாச மழை பொழிந்து விடுவார்களா என்ன? நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும்? சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சாட்டை அடி!.
சிந்திப்போம், செயல் படுத்துவோம்.
நம்மவர்களில் இந்தக்கொடுமைகள் மிகக்குறைவு என்றாலும் அறவே இது இல்லாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நல்ல வேண்டுகோள்.
வீட்டுப்பெரியவர்களைப்போற்றுவோம்; வாழ்வில் உன்னத நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....
பெரியவர்களை கவனித்து கொள்ளும் விதம் msn சொல்வது கறிவேப்பில்லை தூக்கி எறிவது போல் இருக்கிறது.அதற்கு மார்க்கத்தை சரியான விதத்தில் குழந்தைகளிடம் எடுத்து வைக்கமால் இருந்ததுதான் காரணாமாகும்.கல்வி அவசியம் என்ற காரணத்தில் மார்க்க கல்வி விட்டு வருமானம் தர கூடிய கல்விஅயை நோக்கி தமது குழந்தைகளை அனுப்புவது இன்னும் இதில் விட போகிறொதோ
//படுக்கையில் இருந்தாலும்
மனிதன்
பல்லக்கில் சென்றாலும்
மரணத்திற்கு என்ன விதிவிலக்கு?//
தங்க பஷ்பம் உண்டாலும்
தந்த கவஷம் என்றாலும்
உயிர்
பிரிவதை எது தடுக்கும்?
மருத்துவர்கள் முயன்றாலும்
மாந்திரீகர் முனுமுனுப்பும்
உயிர்
மாள்வதை எங்ஙனம் மீலவைக்கும்?
ஜாகிருஸேன் சொல்லியாச்சு
நெய்னா பாயும் சொல்லியாச்சு
பெரியவங்களைப் பாதுகாக்க
வைராக்கியம் கொள்வோம் வாங்க!
நம்மை சீராட்டி பாரட்டி வளர்த்த பெரியவர்களை பேச்சு,ஏச்சு,வேண்டியதை அவர்களுக்கு செய்யாமை போன்றவகையில் வேதனைப்படுத்தாமல் அவர்களை அன்புடன் நடத்த உறுதி எடுப்போம்..நமக்கு வரக்கூடிய வேதனையை வரவிடாமல் தடுப்போம்....ஜாஹிர் காக்கா போட்ட அஸ்திவாரத்தில் வலிமையான வீட்டை கட்டி இருக்கிறீர்கள் சகோ.நெய்னா...சமுக அக்கறையுள்ள இது போன்ற ஆக்கங்கள் என்றுமே தேவை
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் நெய்னா முகம்மது..
ஜாஹிர் காக்கா எழுதிய ஆக்கத்தின் தாக்கத்தில் மிக அருமையான பதிவை எழுதியுள்ளீர்கள்.
ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு இருந்த மரியாதை இன்று இல்லை என்பது உண்மையே. இன்றைய அவசர யுகத்தில் பாதிக்கப்படுவது வீட்டில் உள்ள பெரியவர்களே. இஸ்லாமிய உணர்வு உண்மையில் எல்லோர் உள்ளத்திலும் வலுபெற்றால்தான் பெரியவர்களின் மனம் நோகாமால் அவர்களுக்கு நல்லதொரு நிம்மதியான சூழல் உருவாகும்.
//படுக்கையில் இருந்தாலும் மனிதன் பல்லக்கில் சென்றாலும் மரணத்திற்கு என்ன விதிவிலக்கு?//
இதில் கோடி அர்த்தங்கள்..
அல்லாஹ் போதுமானவன்.
வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்த்துக்கள் சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது.
.. உங்களைப்போல் நல் உள்ளங்கள் எழுதுவதும் , அதற்க்கு இன்னும் பல நல் உள்ளங்கள் பதில் தருவதிலிருந்தே தெரிகிறது...மனிதம் இன்னும் சாகவில்லை ..
Post a Comment