மாயை

அன்றைக்கு கொஞ்சம் வித்யாசமாக பயணிக்க நினைத்து நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 100 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஸ்லிம் ரிவர் எனும் ஊருக்கு காரில் போய் பின்பு ரயிலில் திரும்பினேன்.பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 70 வயது இருக்கும் என்னிடம் அவராகவே பேச்சுக்கொடுத்தார்.

மனதுக்குள் அவர் ஏதோ சுமப்பது போல் என் உணர்வு சொன்னது.. தமிழ்நாட்டில் இருந்து வருவதாக சொன்னார்...ஏதோ  நீடாமங்களம், மன்னார்குடி   ஊர் பக்கம் மாதிரி சொன்னார்.

இந்தியாவுக்கு சொந்தமான அடர்த்தியான காட்டன் சட்டை...கையில் கொஞ்சம் பெரிய சைஸ் லெதர் பெல்ட் வாட்ச். இங்க் பேனா, கையில் ஏதொ நேத்திக்கட கயிறு, ஒழுங்கு படுத்தாத மீசை..குரலில் ஒரு விதமான ஸ்ரத்தையின்மை..அனுபவத்தை எழுத ஆரம்பித்த வெள்ளைமுடிகளின் ஆதிக்கம்.

முதன் முறையாக மலேசியா வந்ததாக சொன்னார்.

நீங்கள் தேடி வந்தது.... உங்களிடம் சின்ன வயதில் பழகிய பெண்ணா?.... இப்போது வயது எப்படியும் 60 தை தாண்டியிருக்க வேண்டுமே??. இப்படி கேட்ட உடனே...

எப்படி இவ்வளவு துள்ளியமா சொல்ரே தம்பி? என்றார்

“இந்த வயதில் இவ்வளவு தூர பயணம்...காதல் / நட்பு இரண்டுக்குத்தான் மிகப்பெரிய சாத்யம்” என்றேன்

சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டேன். சம்பாத்யம் சரியாக இல்லாமல் , தங்கை , தாய் , சகோதரன் எல்லோரையும் கவனிக்க ஓய்வில்லாமல் உழைத்தேன் அற்ப காசுக்கு...என்கிட்டே அன்பா இருந்தது இந்த புள்ளெதான் [இன்னும் புள்ளெ இமேஜில் இருந்து அந்த அம்மா டெலிட் ஆகலே]. எல்லோரும் என்னெ வையும்போது 'நீ ஒரு நாள் நல்லா வருவே"னு தைரியம் சொன்னது இந்த புள்ளெ தான்

ரயிலின் வேகத்துக்கு அவரின் பேச்சு கொஞ்சம் திணறியது. கொஞ்சம் அவதானித்தே அவர் பேசினார்.
 

'அப்புறம் நீங்க விரும்பறதெ சொல்லலியா?''

சொல்லலாம்னு நினைக்கும்போதெல்லாம் ஏதாவது தடைவரும்...ஆனா அது ஒருமுறைகூட அப்படி என்னிடம் பேசியதில்லெ...மனசுலெ இருந்திருக்கலாம்.

ஒரு நாள் சொல்ல நினைத்து , பண வசதி , வறுமை எல்லாத்தடையும் மீறி சொல்ல போனால் ...அந்த புள்ளெக்கு கல்யாணப்புடவை எடுக்க கும்பகோணம் பஸ்ஸில் அந்த புள்ளெயோட வீட்லெ உள்ளவங்க புறப்பட்டு போனவுடனே என்னுடைய மனசை மாத்திக்கிட்டேன்...பிறகு அந்த புள்ளெ இங்கெ கல்யாணம் கட்டி இங்கெ வந்து இப்போதைக்கு பெரிய குடும்பம்...வசதி அப்படி ஒன்னும் சொல்லிக்கிறாப்லெ இல்லெ.. எனக்கு பிறகு கல்யாணம் , குடும்பம் , பிள்ளைங்க , பேரப்புள்ளைங்க, கார் , வீடு , சொத்து , எல்லாம் குறையில்லெ....

'இருந்தாலும் உங்க குடும்பத்திலெ...இப்போதைக்கு உங்கள் சொல்லுக்கு அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லெ..."


எப்படி தம்பி இப்படி கரெக்ட்டா சொல்றே?..

'இது ஒன்னும் அதிசயமில்லெ....இது பரிணாம வளர்ச்சி மாதிரியான விசயம், செடி வளந்து பிறகு வயதாகி காய்ந்து போற மாதிரி..'

இப்போ அவங்க வீட்டுக்கு போனீங்களா?...

'போனேன்...அவங்க வீட்டுக்காரர் , அந்த புள்ளே , அதனோட பேரப்புள்ளைங்க எல்லாம் என்னெ நல்லா கவனிச்சாங்க..." இப்போ நாங்க ரென்டு பேரும் வாழ்க்கையின் கடைசிய்லெ நிக்கிறோம், எனக்கு உள்ள சீக்கு புணியெ சொல்லிக்காண்பிச்சேன்'…

அந்த புள்ளே நான் அவங்க வீட்டெ விட்டு புறப்படும்போது என்ன சொன்னிச்சு தெரியுமா?..." 

நீங்க நல்லா இருப்பீங்க..உங்களுக்கு ஒரு குறையும் வராது"...

"உன் கிட்டே பேசினப்புறம் மனசு ரொம்ப லேசாயிடுச்சு தம்பி " என்றார்.  உன்னெ பார்த்தப்போ எனக்கு என்னவோ என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லனும்னு தோனுச்சி'''


சிலரின் எண்ண ஒட்டம் எவ்வளவு தூரம் அன்பைத்தேடி இவ்வளவு தூரம் பயணம் செய்ய வைத்துள்ளது என்பதை நினக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. 

மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு நாம் அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் நம்மிடம் அன்பாகத்தான் இருக்கிறாற்கள்/ இருப்பார்கள் என்று நம்புவது.

உறவு என்பதே மாயை...இந்த மாயையை நிஜமாக்கி பின்னப்பட்டதுதான் வாழ்க்கை. இந்த மாயையில்தான் மனிதன் இத்தனை வக்கிரங்களையும், அன்பையும், தர்மத்தையும், கஞ்சத்தனத்தையும் ..

மன்னிக்கும் தன்மையையும் வன்முறையையும் நிஜம் என்று நம்பி வாழ்கிறான். உறவுகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடிமானம் இருக்காது, வெல்வதற்கு எதுவும் இருக்காது... பின்னாளில் உறவுகளின் நடத்தையை வைத்து அந்த மாயையில் ப்ரயோஜனம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.

எல்லோருக்கும் காலம் தான் பதில் சொல்லும்.

ZAKIR HUSSAIN

13 கருத்துகள்

sabeer.abushahruk சொன்னது…ஜாகிர்,

வயோதிகம் சுமக்க நேரும் வலியை அதன் வேதனை குறையாமல் யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறாய்.

முதியவர் தம் பதிவுசெய்யப்பட்ட, முத்திரையிடப்பட்ட சொந்தங்களிடம் பெற்ற வலிக்கு ஆறுதலாகத் தேடிச் சென்றது ஒரு சாமியாரையோ சாதுவையோ அல்ல; மற்றுமொரு உறவைத்தான்.

வயோதிகத்தில் உறவுகளால் கைவிடப்படுவது என்பது ஒரு வாழ்வியல் பிழை; உணர்வுகளை ஊட்டி வளர்த்த சொந்தங்கள் முதியவர்களைக் கைவிடுவதை நான்ப்கண்டதில்லை.

தூக்கிச் சுமப்பதும் பீ மூத்திரம் கழுவி காப்பதும் சொந்தங்களே என்று தீர்மாணமாகச் சொல்ல என்னிடம் ஆதாரங்கள் நிறைய உண்டு.

எனவே,

//மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு நாம் அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் நம்மிடம் அன்பாகத்தான் இருக்கிறாற்கள்/ இருப்பார்கள் என்று நம்புவது.//

என்பது இலகுவாக ஏற்கத்தக்கக் கருத்தல்ல.

நீ தவறு என்று சொல்லும் இந்த நம்பிக்கைதான் வாழ்வின் அடிநாதம் என்பது என் கருத்து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அனுபவத்தை எழுத ஆரம்பித்த வெள்ளைமுடிகளின் ஆதிக்கம்.//

WELCOME BACK ! (இன்ஷா அல்லாஹ்...)

ZAKIR HUSSAIN சொன்னது…

//மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு நாம் அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் நம்மிடம் அன்பாகத்தான் இருக்கிறாற்கள்/ இருப்பார்கள் என்று நம்புவது.//

என்பது இலகுவாக ஏற்கத்தக்கக் கருத்தல்ல.

To Sabeer,

நீ வாழ்க்கையில் பார்த்த டைமன்ஷன் வேறு, நான் பார்த்த / பார்த்துக்கொண்டிருக்கும் டைமன்ஷன் வேறு. நான் சொல்வது எல்லாருக்கும் பொறுந்தும் என்று சொல்ல வில்லை.

நீ சொன்னபடி இளையவர்கள் முதியவர்களின் முக்கியத்துவம் உணர்ந்து நடந்து கொண்டால் அது சந்தோசமே..

நான் மனிதர்களிடம், அவர்களின் சொந்த வாழ்க்கையை அதிகம் கேட்டு தெரிந்து கொள்ளும் தொழிலில் இருக்கிறேன்.

எனது அனுபவத்தில்......

# ஒரு அன்பே உருவான தாயின் பிணம் எரியும்போது , ' தம்பி ..பிணத்தில் இருந்த நகையை யார் வச்சிருக்காங்க....? ' என்று அவரது மூத்த மகன் கேட்டதை பார்த்திருக்கேன்.

# 'நான் கல்யாணம் கட்டி வீட்டுக்கு வந்ததும் உங்கள் வயதான தாய் தகப்பனை என் பெற்றோர் மாதிரி பாத்துக்குவேன் என்ற சொன்ன மருமகள் .....1 மாதமாக 5 நிமிடம் டெலிபோனில் விசாரிக்க கூட நேரமில்லாமல் " பிசி" யாக இருந்ததை பார்த்திருக்கேன்...

# "இப்படியே கஷ்டங்களை அனுபவிப்பதற்கு பதிலாக செத்து தொலைஞ்சாலும் அள்ளிப்போட்டு பெதச்சிட்டு போய்சேரலாம் " என்று சொன்ன மனைவியை [ ஒரு காலத்தில் சிறந்த தம்பதியர் ' ] ஐ பார்த்திருக்கேன்.

# கள்ள உறவின் ஆசையில் பெத்த 3 பிள்ளைகளையும் அதன் தலைகளில் பாய் தலைகாணியை தூக்கி வைத்து "இந்த கெடைகளுக்கு பொங்கி கொட்ட தலையெழுத்தா?" என்று சொல்லி அனுப்பி விட்ட தாய்..தனது கடைசி காலத்தில் தான் பெற்ற அதே மகளிடம் வந்து நின்று ..பின்பு மரித்துப்போனதை பார்த்திருக்கேன்.

# தனது மகன் 21 வயதில் விபத்தில் சிக்கி இறந்த போது அந்த தகப்பனுக்காக நான் மார்ச்சுவரியில் ஆதரவாக நின்ற போது ' அவன்...ஆர்கன் தானம் செய்யனும்னு சொன்னான்..அதுக்கு என்ன செய்யனும்? [ தர்மத்தின் உச்சம் ] என்று கேட்டதை பார்த்திருக்கேன்.,

எனவே சில விசயங்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் நெகட்டிவ்....சில விசயம் பாசிட்டிவ்.

இன்றைக்கு அன்பாக இருப்பவர்கள் நாளைக்கு எந்த சூழ்நிலையிலும் அன்பாகவே இருப்பார்கள் எனபதற்கு கியாரண்டி இல்லை. அதை எதிர்பார்த்தால் ஏமாற தயாராக வேண்டும்...அதையும் மீறி அவர்கள் அன்பாகவே இருந்தால் அதிர்ஸ்டம்தான்.

ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் "பொறுத்துக்கொள்ளும்" உணர்வுக்கு.. உச்சம் [ Thresh hold ] என்று ஒன்று இருக்கிறது...அதை மீறும் போதுதான மனித உறவுகளின் கோரப்பற்கள் தெரிய ஆரம்பிக்கும்.

ஏனெனில் பாயில் வீழ்பவர்களுக்கு வாய் இருக்கிறது...அசுத்தம் கழுவுவதற்கு மட்டும் அவர்கள் வேலை வைப்பதில்லை. 5 நிமிடத்திற்கு ஒருமுறை கேட்ட கேள்வியை திருப்பி திருப்பி கேட்பது, தன்னால் உடல் அளவில் முடியாதை நம்மிடம் செய்ய சொல்வது.....இதற்கெல்லாம் இன்றைய 'வேலை பார்த்து சம்பாதிக்கும்" உலகம் தயாராக இல்லை.

அதனால்தான் நான் கடைசி வரியில் எழுதினேன்....

" எல்லோருக்கும் காலம் தான் பதில் சொல்லும். "

sabeer.abushahruk சொன்னது…

இல்லடா,

நான் குற்றம் பிடிப்பது அந்த "நம்புவதைத் தவறு" என்று சொல்கிறாயே அதைத்தான்.

உன்னைப்போல் என்னாலும் 'முதியோரைப் போற்றிப்பேணும் நடப்புகளைப்" பட்டியலிட முடியும். அதன் முதல் உதாரணமாக நான் உன்னைத்தான் காட்டுவேன்.

இதில் அரபுகள் மிகச்சிறந்தவர்கள். ஏறத்தாழ எல்லா அரபுகளும் முதியோரைப் போற்றி, மதித்து பாதுகாப்பதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வதை நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன்.

அதல்ல மேட்டர்.

அந்த நம்பிக்கை. நாம் அன்பாக வளர்க்கிறோம். அன்பையே போதிக்கிறோம். நாமும் அவ்வாறே அன்பாக கவனித்துக் கொள்ளப்படுவோம் என்னும் அந்த நம்பிக்கை இல்லையெனில் வாழ்க்கை சவலைப் பிள்ளையாகிவிடும்.

வேறு எதை நம்பித்தான் வாழ்வது? வளர்வது? படிப்பது? உழைப்பது? பொருளீட்டுவது? சொல்.

அந்த நம்பிக்கை தவறு என்பதை என்னால் ஏற்கவே முடியாது. நம்பி ஏமாறுவது நம்பாமல் சுயநலமாக சோம்பிக்கிடப்பதைவிட மேல்தான்.

சொந்தங்கள்தரும் சுமைகூட சுகமானதுதாண்டா? ஏன் நீ அந்த சுகத்தைத் தற்போது அனுபவிக்கவில்லையா?

sheikdawoodmohamedfarook சொன்னது…

//மனிதன் செய்யும் மிகபெரியதவறுநம்மிடம் அன்பு செலுத்துபவர்கள் ..........// மருமகன்ஜாகிர் சொல்வது முற்றிலும் சரியே! மருமகன்சபீர் நேரில் சந்தித்தால் என்னிடம் உள்ள சரக்கை கடைபறப்பி காட்டுகிறேன்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

சொந்த சகோதரனின் வார்த்தையேநம்பி லட்சகணக்கில் கைமுதல் விட்டவன் நேற்றுதான் காலமானான்.ஏமாற்றியவன் மினிக்கி திரிகிறான்.

sabeer.abushahruk சொன்னது…

நாட்டாமே தீர்ப்ப மாத்துங்க.

அல்லது தீர்ப்புக்கான முகாந்திரத்தைச் சொல்லுங்கள்.

நான் சொல்வது emotionalஆகவும் ஜாகிர் சொல்வது logicஆகவும் தோன்றுவதற்குக் காரணம் உங்கள் இருவருக்கும் காணக் கிடைத்த மனிதர்கள்.

எதிர்மறை உதாரணங்களை வைத்துக் கடை பரப்பி யாருக்கு என்ன லாபம், மாமா. இந்த சொந்தமும் பந்தமும் இல்லையெனில் மனிதன் ஒற்றைப்பட்டுப் போவானே, சரியா?

நம்புவோம்.

நம்பிக்கை ஒன்றே வாழ்க்கையை நகர்த்திச் செல்லும்.

நம்புவது தவறு என்பதை மட்டுமே ஏற்க மறுக்கிறேன். நீப்க்கள் சுட்டிக்காட்டும் ஏமாற்றங்களை நான் மறுக்கவில்லை.

முதுமையில் என்னை கவனிப்பான் என்று நம்புபவனே அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்; நம்பாதவனுக்கு உயிர்வாழ்வதே சுமையாகிப்போகும்.

sabeer.abushahruk சொன்னது…

//இந்த வயதில் இவ்வளவு தூர பயணம்...காதல் / நட்பு இரண்டுக்குத்தான் மிகப்பெரிய சாத்யம்” என்றேன்
//

இதுதான் வாஸ்தவம்! இதிலிருந்து கிளைத்தவையே நீ நம்ப வேண்டாம் என்று சொல்பவை.

ZAKIR HUSSAIN சொன்னது…

//நம்புவது தவறு என்பதை மட்டுமே ஏற்க மறுக்கிறேன். நீப்க்கள் சுட்டிக்காட்டும் ஏமாற்றங்களை நான் மறுக்கவில்லை.//


நான் சரியாகவே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

நான் நம்பி வாழுங்கள் என்பதை தவறு என்று சொல்லவில்லை.....அ

ஆனால்.....

நம்பியவர்கள் நாம் நினைத்தபடி நடக்காத போது உடைந்து போகவேண்டாம் என்றுதான் சொல்கிறேன். எதிர்பார்ப்பின் பரப்பளவை சுருக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

நவீன உலகத்தின் தேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக முதியோர்களை கரி அயன்பாக்ஸ் மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டது.

இந்த ரயில் பயணித்தில் நான் பார்த்த பெரியவர் அவரது குடும்பத்தினர் கொஞ்சம் அவரது குறைகளை காது கொடுத்து கேட்டிருந்தால் இவ்வளவு தூரம் பயணம் செய்து தான் தொலைத்த அந்த அன்பான பெண்மனியை முகம் தேடி வந்திருக்க மாட்டார்.

மறுபடியும் சொல்கிறேன் ...நம்புவது இயல்பு ....நம்பியவர்கள் அப்படி நடக்காத போது உடைந்து போக வேண்டாம்...

Ebrahim Ansari சொன்னது…

தம்பி ஜாகிர்!

இந்த குழந்தை பாடும் தாலாட்டுக்கும் இரவு நேர பூபாளத்துக்கும் மேற்கில் தோன்றும் உதயத்துக்கும் நதி இல்லாத ஓடத்துக்கும் முதலில் பாராட்டுக்கள். அருமை.

எனது அனுபவத்தில் என்ற உட்குறிப்பில் நீ குறிபிட்டுள்ள அல்லது அதற்கும் மேல் உள்ள சம்பவங்களை நானும் எனது வாழ்வில் கண்டு இருக்கிறேன்.

அதே நேரம் தனக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும் தனது அக்காள் பெற்ற அத்தனை குழந்தைகளையும் தாயும் தகப்பனுமாய் இருந்து வளர்த்து இன்று அவர்கள் வளர்த்த தாயையும் தகப்பனையும் மகாராணியாகவும் மகாராஜாவாகவும் வைத்துப் போற்றுவதையும்

கணவனால் கைவிடப்பட்ட தமக்கையின் குழந்தைகளை ஆளாக்கி இன்று அவர்களது கரங்களால் தாங்கு தாங்கு என்று தாங்கப்படும் ஒரு மாமனையும் ,

கணவனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த தாயற்ற பிள்ளைகளை அரவணைத்து இன்று பெற்ற பிள்ளைகளைவிடப் பேணப்படும் ஒரு தாயையும்

தந்தையால் சிறிய வயதில் தலாக் விடப்பட்டாலும் வளர்ந்த பின் தாயைத் தேடிப்போய் இன்று தங்களுடன் வைத்து நடத்தும் பிள்ளைகளையும்

காணாமல் போன சகோதரனைக் கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் செலவழித்து அவனைக் கண்டுபிடித்து வெளிநாட்டிளிருண்டு மனநிலை சரியில்லாத நிலையில் அவனை கவனிக்க தனியாக ஆள்வைத்து கவனிக்கும் ஒரு சகோதரனையும் கூட நான் கண்டு வருகிறேன்.

வாழ்வில் நாம் பயணிக்கும் எல்லா சாலைகளும் நேராக இருப்பது இல்லை. சில வளைவு நெளிவுகள் உள்ளன. எல்லாவற்றிலும் எல்லாம் இருக்கிறது. ஆனால் அதை எதிர்பார்த்து ரிஸ்க் எடுக்க இயலாமல் இருக்கிறது.

மொத்தத்தில் கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

Unknown சொன்னது…

ஜாகிர்,

உங்கள் கட்டுரையையும் கருத்துப் பரிமாற்றங்களையும் கண்டு, KL ஸ்டேஷனில் நிற்கும் ரயில்வண்டி, புன்னகைக்கின்றதா? அல்லது, 'நமுட்டுச் சிரிப்பு' காட்டுகின்றதா? பாருங்கள்.

"வாழ்க்கை என்பது, அப்படியும் இப்படியும்தம்பா" என்று சொல்கின்றதோ?

Unknown சொன்னது…

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

தொலைத்த வாழ்க்கயை
தெருவில் தேடும்
கூன் கிழவர்:

Unknown சொன்னது…

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

தொலைத்த வாழ்க்கயை
தெருவில் தேடும்
கூன் கிழவர்: