Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 3] 23

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் நமதூரில் மட்டும் நிலம் மற்றும் கட்டிடங்களின் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏறிக்கொன்டே தான் இருக்கிறது. இப்படி பிற பகுதிகளில் இல்லாத அளவிற்கு ரியல் எஸ்டேட் தொழில் இங்கு மட்டும் அமோகமாய் நடைபெற்றுக் கொன்டிருப்பதற்கான காரணம் தான் என்ன? என்று பார்ப்போமேயானால் முக்கியக் காரணமாக நமதூரில் பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுக்கும் பழக்கம் இருப்பதைச் சொல்லலாம். வேறு சில காரணங்களும் உண்டு இன்ஷா அல்லாஹ் அதையும் தொடர்ந்து பார்ப்போம்.

இவ்வாறு பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுக்கும் பழக்கம் நாம் அறிந்த வரை அதிரைப்பட்டினத்தில் மட்டுமல்லாது காயல்பட்டினம், கீழக்கரை மற்றும் கேரளாவில் சில ஊர்களிலும் உண்டு. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில பகுதிகளில் மாத்திரமே இப்பழக்கம் இருப்பதால் பிற ஊர் மக்கள் இதைக் கடுமையாகச் சாடுவதும் உண்டு. ஒரு சபையில் நான் இருக்கும் போது நமதூர் சகோதரர் ஒருவரை அங்கிருந்த ஒருவர் ஏக வசனத்தில் விமர்சனம் செய்து கொன்டிருந்தார். அங்கே வரதட்சனைக் கொடுமை சம்பந்தமாக அன்றைய தினம் அவர் பேச வேண்டியிருந்தது. அந்த சகோதரர் விமர்சிக்கப்பட்டது அவர் செய்த குற்றத்திற்காக அல்ல அதிரைப்பட்டினத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கத்திற்காக.

பிற ஊர்களைக்காட்டிலும் வரதட்சனைக் கொடுமைகள் அதிரைப்பட்டினத்தில் குறைவே. அதிரைப்பட்டினத்தில் மாப்பிள்ளைக்கு பைக், மைனர் சைன் என்று எதுவும் இல்லை. பெண்ணுக்கு இத்தனை பொவுன் நகை போட வேண்டும் என்ற கெடுபிடியும் இல்லை. இருந்தாலும் மூஸா நபியின் கைத்தடி பாம்பாய் மாறி அனைத்து மந்திரவாதிகளின் பாம்பையும் விழுங்கினாற் போல் நமதூரில் சீதனமாகக் கொடுக்கின்ற வீடு பிற ஊர்களின் அனைத்து சம்பிரதாயஙகளையும் அதற்கான செலவிணக்களையும் சேர்த்தே விழுங்கிவிடும்!? பிற ஊர் சம்பிரதாயங்களான மாப்பிள்ளைக்கு மோதிரம், சைன், பைக், மற்றும் பணம், பெண்ணுக்கு நகை, பாத்திரம் பன்டம் என எல்லா செலவுகளும் சேர்ந்து அதிகப்பட்சமாக 5, 6 இலட்சத்தை எட்டும். ஆனால் நமதூரில் வீடு மட்டுமே ஏறத்தாழ 15, 20 இலட்சத்தை எட்டிவிடும். இதனால் நமதூரில் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் படும் கஷ்டம் சொல்லி மாலாது.

ஒரு சகோதரியோடு பிறந்துவிட்டால் அல்லது ஓரிரு பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் அவர்களுக்கான காரியங்கள் முடியும் வரை தன்னைத்தானே உருக்கிக் கொள்ளும் மெழுவர்த்தியாய் தன்னுடை ஆசா பாசம் அத்துனையும் துறந்து தங்களுடைய இளமையை வெளிநாடுகளில் தொலைத்த இன்னும் தொலைத்துக் கொன்டிருக்கிற ஆண்களும் அவர்களின் பிரிவால் தாய் நாட்டில் தவித்துக் கொன்டிருக்கிற பெண்களும் ஏராளம். தண்ணீருக்குள் மீன் அழுதால் அதன் கண்ணீரை யார் அறிவார் என்பதைப்போல் இவர்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொன்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல என்றே நினைக்கின்றேன்.

நமதூரில் வீடுகட்ட ஆகும் செலவை விட வீட்டு மனை வாங்குவதற்கு ஆகும் செலவே அதிகம். இதற்கு பெண்களுக்கு வீடு கொடுக்குப்பது மாத்திரம் காரனமல்ல. வேறு சில காரனங்களும் உண்டு. நமதூரில் பெரும்பாலும் யாரும் வெளியூர் சம்பந்தங்களை விரும்புவதில்லை. 95 சதவிகிதத்திற்கும் அதிகமான திருமனங்கள் ஊருக்குள்ளேயே அதுவும் உறவுகளுக்குள்ளேயே நடைபெற்றுவிடுகிறது. பிற ஊர்களில் ஏற்கெனவே உறவுகளுள்ள வெகு சிலரே வெளியூர்களில் திருமன உறவுகளை வைத்துக் கொள்கின்றனர். இதனால் ஊருக்குள்ளேயே அதிகரிக்கும் குடும்பங்கள், அவர்களுக்கான வீடுகள் என வீடு மற்றும் மனைகளுக்கான தேவை அதிகம். பற்றாக்குறைக்கு பணம் இருக்கின்றது என்பதற்காக நிலங்களிலே முதலீடு செய்து நம் மக்கள் 4, 5 மனைகளை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு நிலங்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்துவிடுகிறது.

தன்னுடைய வீட்டைத் தானே கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஆண்களுக்கு இருந்திருந்தால் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே அதிகம் விரும்பியிருப்பார்கள். ஒரு வீட்டிலேயே இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்ந்து கொன்டிருக்கும். எனவே வீட்டு மனைகளின் தேவையும் பாதியாகக் குறைந்திருக்கும். இது தான் பிற ஊர்களில் இருக்கின்ற நிலை. இதனால் தான் பிற ஊர்களில் வீட்டு மனைகளுக்கான விலை ஏற்றம் என்பது சொற்பமாகவே இருக்கிறது. ஆனால் நமதூரில் தனக்கான வீட்டைத் தன்னுடைய மனைவியின் தகப்பனோ, அவளின் சகோதரர்களோ, அல்லது அவளின் உறவினர்களோ தானே கட்டப்போகிறார்கள்! முட்டையிடும் கோழிக்குத்தானே ( _ ) எரியும்! அதனால் மாப்பிள்ளைகளுக்கு என்ன கஷ்டம்? எனவே தான் தன்னுடைய மனைவி வீட்டார் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்று மின்சார வரி கட்டக் கூட தகுதியில்லாதோரும் தனக்கு தனி வீடு கட்டிக் கேட்கின்றனர்.

மேலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் தன் மனைவி வீட்டார் மீது அதிகாரம் செலுத்துவதும் அவர்களுடைய வீட்டில் தான் நாம் இருக்கின்றோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்வதும் ஜீரனிக்க முடியாதவை. இதனால் சொந்த வீடிருந்தும் அனாதையாய் தன் இளமையைத் தன் பிள்ளைகளுக்காக இழந்த எத்தனையோ பெற்றோர்கள் முதுமையில் தங்களுடைய பிள்ளைகளின் அரவனைப்பின்றி அகதிகளாக தர்காக்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்!? இன்னும் சில இடங்களில் அவர்களுடைய பெண்மக்களே இதற்குக் காரனமாக இருந்திருகிறார்கள் என்பது வேதனையின் உச்சம்!

நம்முடைய மனைவி வீட்டுக்கு மாப்பிள்ளைகளாகவே சென்றிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அங்கே பெண் வீட்டார்களோடு கூடி வாழ்வதில் நமக்கு அசௌகரியங்கள் இருந்தால் நாம் தான் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டுமே தவிர அவர்களை வெளியேற்ற நினைப்பது எவ்வகையில் நீதமாகும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப்படிருக்கிறோம். நமக்கு தனி வீடு வேண்டும் என்று நினைப்பதில் குற்றமில்லை. ஆனால் நம்முடைய தேவைகளை நாம் தான் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமே தவிர பெண் வீட்டாரல்ல.

மேலும் பெண் எடுப்பவர்களும் பெண்ணுக்குத் தனி வீடு இருக்கின்றதா என்று பார்த்து நிச்சயம் செய்கின்றனர். ஏனென்றால் வீடு கட்ட வேண்டிய பொறுப்பு அவர்களுடய பிள்ளைக்கு வந்துவிடுமாம்! என்ன ஒரு நல்ல(?) எண்ணம். இதனால் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வீடு வைத்திருந்தால் தான் தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமனம் முடித்துக் கொடுக்க முடியும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர். இந்த நிலை தீவிரமடைந்தால் அது பெரும் சாபக்கேடாகவே அமையும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அதில் பிறந்துவிட்டோம் என்பதற்காக அல்ல உண்மையிலேயே நேசிக்கின்றோம், இஸ்லாத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்பது உண்மையானால் ஒரு விசயத்தை நம்முடைய மனதில் ஆழமாய்ப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்துல்லாஹ், அப்துல் ரஹ்மான், அப்துல் காதிர் என்றும் பாதிமா,ஆய்ஷா, மர்யம் என்றும் பெயர் வைத்துக் கொள்வதினால் நாம் முஸ்லிம்களாக ஆகிவிட முடியாது. என்னதான் நாம் வணக்கத்திற்கு உறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது ஸல்... அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் சாட்சி கூறுபவர்களாக இருந்தாலும் தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விறும்பாத வரை உண்மையான ஈமான் கொன்டவர்களாக முடியாது. அல்லாஹ்-வின் தூதரின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 13 (ஹதீஸ்: புகாரி)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இஸ்லாம் கூட்டு வாழ்க்கையையும், கூட்டுத் தொழுகையையும் நம் மீது கடைமையாக்கி இருப்பதும் முஸ்லிம்கள் ஒரு கட்டிடத்தைப் போன்றவர்கள் என்றும் உடல் உறுப்புக்களைப் போன்றவர்கள் என்றும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதும் நாம் ஒருவருக் கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே யன்றி வேறில்லை.

திருமனம் என்ற பெயரில் பெண் வீட்டாரை கசக்கிப் பிழிந்து அவர்களை சக்கைகளாக்க நினைப்பது கொள்ளையடிப்பதை விட கொடிய செயலாகும். இஸ்லாம் அனுமதித்த பிரகாரம் நம்முடைய மனைவியருக்கு அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காவிட்டால் அவர்களின் சார்பாக அதனை பெறுவதற்கு போராட மட்டுமே நமுக்கு உரிமை இருக்கிறதே தவிர மனைவி வீட்டாரின் ஒட்டு மொத்த உரிமைகளையும் அபகரிக்க நினைப்பதை சமூகம் எவ்வாறு சரி கண்டது என்பது வியப்பிற்குரியாதே!

யாரெல்லாம் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆலிம்கள் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும். தங்களுடைய செயல்களை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கக்கூடாது. திருமனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் புறக்கனிக்கப்பட்டால் தங்களுடைய செயல்களை அவர்கள் திருத்திக் கொள்வார்கள், மற்றவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையும் இன்ஷா அல்லாஹ்!

மேலும் சமூக அங்கத்தினர்களும் தங்களுடைய செயல்களை பிறரைப் பாதிக்காத வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பிறரை பாதிக்கக் கூடிய செயல்கள் நம்மிடமிருந்தால் அது நம்முடைய ஈமானைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்-வின் தூதரின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 10 (ஹதீஸ்: புகாரி)

'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

******************************************************************************

பெண்களுக்கு வீடு கொடுப்பதை நாம் குற்றமென்று கொள்ள வாய்பில்லை. ஆனால் வீட்டை மாப்பிள்ளை வீட்டார் கேட்டுப் பெறுவதையோ அல்லது தன்னுடைய மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதையோ, ஒரு போதும் ஏற்க முடியாது. அவ்வாறு செய்வதும் வரதட்சனையின் ஒரு அங்கமே. நிச்சயமாக வரதட்சனை இஸ்லாத்தின் பார்வையில் பெருங் குற்றமே. தனியாக இருக்க வேண்டுமென்பதற்காக பெண் வீட்டாரை வீட்டை விட்டு வெளியேற்ற நினைப்பது மிகப் பெரும் இழி செயலேயன்றி வேறு இல்லை.

பிறருக்கு துன்பம் தரும் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களை ஒருமுறை சீர்தூக்கிப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் எவ்வளவுதான் நல்ல அமல்களைச் செய்திருந்தாலும் நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை மறுமையில் அது பறிகாரமாக்கப்பட்டு இறுதியாக நரகத்தைச் சுவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! என்பதையும் உணர்ந்து மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் நரகத்தின் அனைத்து தீங்குகளை விட்டும் பாதுகாப்பானாக

மேலும் இப்பழக்கத்தை பிற ஊர் சகோதரர்கள் விமர்சிப்பதற்கும், உங்கள் ஊரில் பெண்களுக்குத்தான் வீடாமே? நீங்களெல்லாம் பொண்டாட்டி வீட்டுக்கு போவீர்களாமே? என்றெல்லாம் கேள்விகளைத் தொடுப்பதற்கும் இத்தனை பிரச்சனைகளும் குழப்பங்களும் நமதூரின் இப்பழக்கதின் (பெண்களுக்கு வீடு) பின்னே இருக்கிறது என்பதற்காகவா? என்றால் பெரும்பாலும் இதற்காக இல்லை என்பதே உண்மை! பின் எதற்காக விமர்சிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதன் மற்றொரு அம்சமாகிய "மாப்பிளை பெண் வீட்டுக்கு போவது" இதுதான் பிற ஊர் மக்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது!

இன்ஷா அல்லாஹ் இதன் சாதக பாதகங்களை அடுத்து அலசுவோம்.


நீங்களும் வாங்க தவறுகளைச் சுட்டிக் காட்ட!


நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!


ம அஸ்ஸலாம்

- அபு ஈசா

23 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ரியல் எஸ்டேட் மற்றும் நம்மூர் தவறான நடைமுறை பற்றிய தெளிவான இந்த ஆராய்ச்சிக்கு நிச்சயம் phd பட்டம் உண்டு.

அதிரடி தீர்வு என்ற முறையில் வெளியூர் சம்பந்தம் என்றெல்லாம் போய் அதிரையின் நல் கலாச்சாரங்களை எல்லாம் இழக்கவேன்டியதில்லை.

இன்றைய சூழலில் நாளைய மணமகன்களால் மட்டுமே இந்த தீமைகளிலிருந்து தீர்வு எற்படுத்த முடியும்.

"என் உழைப்பால் பொருளீட்டி என் வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன், எவருடைய துன்பத்திலும் என் வாழ்க்கையை துணை போக விடமாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன்" என்று தினமும் சொல்லும்படியாகச் செய்து பிஞ்சு உள்ளத்திலேயே நல் கருத்தை விதைக்க நம் கல்விநிறுவனங்களும் பாடுபட வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபு ஈஸா,

மிக அருமையான அலசல். மிக்க நன்றி. இறைவனுக்கே எல்லா புகழும்.

விழீப்புணர்வுகளின் மூலம், வரதட்சனை என்ற கைக்கூலி அனேக வீடுகளில் தற்போது வாங்குவதில்லை என்ற போதிலும், சீர் என்ற பெயரில் பெண்ணுக்கு வீடு என்ற சம்பிராதாயம் 99% அதிரையின் இன்னும் உள்ளது என்பது இன்னும் வேதனையே.

இது போன்ற விழிப்புணர்வுகள் தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த கொடுமையையும் நம்மிடையே தூக்கி எறிய முடியும்.

மனமகன்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே. இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் போதுமானவன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ அபு ஈஷா:

தங்களுடைய விரிவான அலசலைப்பார்த்து தெளிவில்லா மக்கள் உணரட்டும்.

//'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார். //

பாவம் இந்த சமுதாயம் ஹதிஸை தவறுதலாக விளங்கி விட்டார்கள் போலும் தன் ஆண்மக்களுக்கு பெண்வீட்டாரிடம் கேட்டு வாங்குவது போல் தன் பெண் மக்களுக்காவும் மாப்பிளை வீட்டாருக்கு வலுக்கட்டாயமாகவும் சீர் வரிசைகள் செய்கிறார்கள்.

லெ.மு.செ. முஹம்மது அபூபக்கர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அபு ஈசா(வின்) சிந்தனையும் ஆய்வும் தொடரட்டும் நிச்சயம் தட்டும் இளகிய / இறுகிய மனங்கள் இரண்டையும் இன்ஷா அல்லாஹ் !

அவரவர்கள் தமக்கும் சந்ததிகளுக்கும் நல்லதைத்தானே செய்கிறோம் என்று அதன் பின்னால் வரும் அடுத்தடுத சந்ததிகளுக்கு ஏற்படும் நலனில் பாதிப்புகள் உண்டாவதை உணர்வதில்லை !

Yasir said...

அபு ஈஸாவின் கண்ணை திறக்கவைக்கும் பதிவு...இக்கால இளைஞர்களின் மனக்கண்ணையும் திறக்க வேண்டும்

நம்மூர் மணமகன் ??னின் (அவ)லட்சணம்...ஒரு சிலரின் செயல்களே இவை

அ.பெண்டாட்டி போட்டுக்கொண்டு வரும் நகைகளில் மீது கண் வைப்பது
வெளிநாட்டுக்கு போகிறேன்,வியாபாரம் ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்லி கொள்ளையடிப்பது-பாங்கில் வைத்தாலும் அதனை திருப்ப திராணியில்லாமல் விட்டுவிடுவது அபு ஈஸா சொல்வதுபோல் நீ சாம்பாரித்து இருந்தால்தானே அதனை சேர்க்கப்பட்டவலி உனக்கு தெரியும் ,உனக்கும் ,திருடனுக்கும் என்ன வித்தியாசம்...அவனாவது தன்னை சேர்ந்தவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்க்காக திருடுகிறான் ஆனால் நீ நல்லவங்களை கெட்ழிக்க அல்லவா செய்கிறாய்..நீ சம்பாரித்தவைகளா இருந்தால் எது வேண்டுமென்றாலும் செய்

ஆ.பொண்டாட்டிக்கு கொடுக்கபட்ட வீட்டில் சம்பாதிக்கமல் இருந்து கொண்டு தான் மைசூர் மஹாராஜா போல் பேசுவது..வெட்கமாக இல்லை உனக்கு..

இ.பெண் வீட்டார் நிலம் கொடுத்ததுமட்டுமின்றி அவர்கள்தான் வீடும் கட்டி கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்துவது...நீ என்ன நொண்டியா, மூடமா இதையெல்லாம் உனக்கு செய்ய....இந்த பலம் உன்னிடம் இல்லையென்றால் என் கல்யாணம் செய்தாய்...கோயில்களில் அன்னதானமும் அது கிடைக்கவில்லையென்றால் பிச்சையும் எடுத்து சாப்பிட வேண்டியது தானே

ஈ.பெண்ணின் முதல் பிரசவசிலவை “உம்மா” வீடுதான் பார்க்கவேண்டும் என்பது....இதனை பார்க்ககூட தகுதியில்லாத உனக்கு ஆண்மை ஒரு கேடா...பாலினமாற்று ஆபேரஷசன் செய்து கொண்டு பாம்பே பக்கம் போக வேண்டியது தானே

அப்துல்மாலிக் said...

நோட்டீஸ் அடிச்சி வினியோகிக்க வேண்டிய பதிவு இது, பெண்ணிற்கு வீடு, வீட்டோடு மாப்பிள்ளை இவையனைத்தையும் தகுந்த அலசி விளக்கமளித்தது நன்று. என்றாவது மனைவி வீட்டுக்கு (மாமியார்) போகும்போது காலிங்க் பெல் அடிக்காமல் தன் சொந்த வீடு போல் உள்ளே போக முடியுமா? இதுலேர்ந்து தெரியவேண்டாம அது தன் வீடு இல்லை என்று. இந்த பழக்கம் நிச்சயம் மாறவேண்டும் அது இனி மணமுடிக்கப்போகும் இளைஞர் கையில் உள்ளது, 2-5 பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோரை நினைத்துப்பாருங்கள், ஒரு வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்டுவதற்கு 25-35 லட்சம் வரும் அதுமட்டுமில்லாமல் இடமும் கிடைப்பதில்லை, அப்போல் எல்லோரையும் மணமுடித்துக்கொடுக்க....? அல்லாஹ் காப்பாத்தனும்....

அப்துல்மாலிக் said...

திருந்த வழிவகை தேடும் அடுத்த சந்ததிகளையும் பெற்றோர்/சமுதாயம் திருந்தவிடுவதில்லை காரணம்

- நானும் என் பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கிறேன் அதை உன்மூலம் திரும்ப வாங்க வேண்டும், பழிவாங்கும் படலம்

- இது வாங்குவது தவறு என்று எதிர்க்கும் பிள்ளைகளிடம் தன் தங்கையை காரணம் காட்டுவது, வீடு/நகை இல்லாமல் எப்படி தங்கையை கரையேற்றுவது.

- எதுவும் வேண்டாம் என்று நபிவழியில் மணமுடிக்க இருக்கும் ஆண் மேல் சமுதாயத்தின் சந்தேகப்பார்வை, அவனை போற்றுவதை விட தூற்றமே அதிகம் இருக்கும்

இளைஞர் சமுதாயம் இன்று இக்கட்டான சூழ்நிலையில் (எவனோ செய்த பாவம் நம்மூர் ஏழைகளின் (குமர்களின்) வாழ்க்கை இன்றும் இருட்டில்)

Yasir said...

///உரிமை இருக்கிறதே தவிர மனைவி வீட்டாரின் ஒட்டு மொத்த உரிமைகளையும் அபகரிக்க நினைப்பதை சமூகம் எவ்வாறு சரி கண்டது என்பது வியப்பிற்குரியாதே!/// நகைப்புக்குறியதே....எப்பொழுது மாறும் இவ்வவலம்....இதற்க்கு சில மனைவிமார்கள் சப்போர்ட் செய்வதும்,புருவத்தை உயர்த்த வைக்கிறது..அல்லாஹ் போதுமானவன்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

- நடக்கும் நிகழ்வுகளை தெளிவாக விளக்கிய அருமையான பதிவு.

- மாற வேண்டும் அனைத்தும் மாற வேண்டும்.

- நாம் மாற வேண்டும் நமது குடும்பத்தில் இருந்தே மாற்றங்களை ஆரம்பிக்க வேண்டும்.

- பெண் வீட்டாரிடம் எல்லாம் வாங்கியது தெரிந்தும். அவர்கள் வீட்டு விருந்தில் கலந்து கொண்டால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது.

- இளைஞர்கள் மாறவேண்டும் எப்பொழுது மாறுவார்கள். எந்த உடல் உழைப்பும் இல்லாமல் மாமனார் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் வாழ்வதற்கு பெயர் என்ன என்று சொல்வது?

- மாற்றங்கள் வருமா?

நல்லதொரு பதிவை பதிந்த சகோ. அபுஈஸாவுக்கு வாழ்த்துக்கள்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மிகத்தெளிவாக படைக்கபட்ட ஆக்கம் இதன் படி நடக்க அல்லாஹ் துணைனிற்பானக ஆமின். அதிரை நிருபர் இது போல தேவையான ஆய்வு கட்டுரையை வெளியிடுவது அதன் தரத்தை மேம்படுத்துகிறது. இதன் வாசகனாக தொடர நம்மை தகுதியாக்கிகொள்ளனும் என்பதுதான் என்னை போன்ற சாமானியர்களின் ஆவல். அதிரை நிருபர் இதைபோல் ஆய்வு கட்டுரையை அடிக்கடி பதியனும் இதன் வாசகன் என்பதே பெருமையாகவும் சந்தோசமாகவும்ள்ளது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்மூரில் ஒரு பெண் குடும்ப ஏழ்மை காரணமாக வீடு,வாசல் வசதியின்மை காரணமாக பாழாப்போன ஊர் வழக்கத்தை நிறைவேற்ற இயலாத காரணமாக‌ திருமணம் முடிக்க இயலாமல் அவள் தவறான வழியை தேர்ந்தெடுத்து அவள் ஒரு முழு நேர விபச்சாரியாக மாற்றப்பட்டால் நாளை மறுமை நாளில் அவளை அல்லாஹ் எவ்வாறு கையாளுவான் என்பது நமக்கறியாது. ஆனால் இது போல் பெண் வீட்டினரிடம் வெட்கமின்றி பிச்சை கேட்கும் வர்க்கம் பிடிக்கப்படுவது நிச்சயம். " நாங்க எங்க புள்ளையளுவொளெ எல்லாம் ரொம்ப தர்பியத்தா வளர்த்தோம்" என்று ஈசியாக எஸ்க்கேப் ஆகிவிட முடியாது.

வெட்கப்பட்டு தலைகுனிந்து நிற்க வேண்டிய விசயம் இதை வழுக்கட்டாயமாக பெண் வீட்டினரிடமிருந்து கேட்டு வாங்குவது நரகத்தின் நெருப்பிற்கு இங்கேயே டிக்கெட் முன்பதிவு செய்வது போல் உள்ளது.

இந்த‌ள‌வுக்கு இதில் நாம் வெறுப்பும், க‌டுங்கோப‌மும், ம‌ன‌வேத‌னையும் ப‌ட‌ கார‌ணம் அதிரையில் பிறந்த‌ நாம் ஒவ்வொருவ‌ரும் இந்த‌ முஸீப‌த்திற்கு ஏதாவ‌து ஒரு வ‌கையில்
ஆட்பட்டிருக்கிறோம் என்பதனால் தான்.

இதில் ஒரு சில‌ர் விதிவில‌க்காக‌ இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் வாழ்வில் நிச்ச‌ய‌ம் ச‌ந்தோச‌க்காற்றை சுவாசித்துக்கொண்டிருப்பார்க‌ள். நாமும் அக்காற்றை சுவாசிக்க‌ வேண்டாமா?

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அதிரைநிருபர் said...

Naina Mohamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிந்திக்க தூண்டும் அருமையான ஆக்கத்தை நம் அனைவரின் பார்வைக்காக தந்த அபுஈசா அவர்களுக்கும் அதை படிக்கும் நம் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக...ஆமீன்...

சகோதர, சகோதரிகளே....

பெண் வீட்டாரின் சூழ்நிலைகளை குறிப்பாக பொருளாதார சூழ்நிலைகளையும் சிறிதும் பொருட்படுத்தாது அவர்கள் வீட்டில் எத்தனை பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் எத்தனை ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்? அவர்களின் குடும்ப தேவைகளுக்கான வருமானம் என்ன? என்று எதையும் சிந்திக்காது என் மகனுக்கு என்ன தருவீர்கள்? பணங்காசுகளெல்லாம் தேவையில்லை அந்த முழு வீட்டையும் எழுதி வைத்து விடுங்கள் என்று இப்படி பிச்சை எடுத்து நிற்பது ஐங்கால‌த்தொழுகையை த‌வ‌றாது நிறைவேற்றும் பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர். மார்க்க‌ம் முழுமையாக‌ போதிக்க‌ப்ப‌ட்டுள்ள இந்த‌ சூழ்நிலையிலும் இவ‌ர்க‌ள் இப்ப‌டி திருந்தாம‌ல் இருந்து வ‌ரும் இவ‌ர்க‌ளுக்கு அல்லாஹ் இம்மையும், ம‌றுமையிலும் ச‌க‌ல‌ நாச‌த்தையும், ந‌ஷ்ட‌த்தையும் த‌ருவானாக‌....ஆமீன்....

இவ‌ர்க‌ள் செய்யும் அட்டூழிய‌ம் தாங்க‌ முடிய‌வில்லை....

நேற்று வ‌ரை ஆர்.எஸ்.எஸ் இந்து வெறிய‌னாக‌ இருந்து இன்று இஸ்லாத்தை ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ த‌ழுவிய‌ ஒருவ‌னைக்கூட‌ நாம் துணிந்து ந‌ம் வீட்டு ம‌ரும‌கனாக‌ எடுத்தால் அவ‌ன் ந‌ம்வீட்டு பிள்ளைக‌ளை ச‌ந்தோச‌மாக‌ வாழ‌ வைத்து விடுவான். இப்படி ப‌ர‌ம்ப‌ரையாக‌ மார்க்க‌ வேச‌ம் போட்டு வ‌ருப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ம‌ர‌ண‌த்திற்கு முன் திருந்த‌ வேண்டும் இல்லை நாச‌மா போக‌ வேண்டும்....ஆமீன்....

இது நீண்ட நாட்களாக உள்ள‌க்கிட‌ங்கில் உருமிக்கொண்டிருக்கும் லாவாக்குழ‌ம்பு அது இன்று ச‌கோ. அபுஈசாவின் க‌ட்டுரை மூல‌ம் த‌ன் எரிமலை வாயிலாக‌ க‌க்கி இருக்கிற‌து....

தொட‌ருங்க‌ள் உங்க‌ள் எழுத்துப்புர‌ட்சியை அல்லாஹ் உங்க‌ளை பாதுகாப்பான்....ஆமீன்...

இவ‌ர்க‌ளை த‌ட்டிக்கேட்டால் "ஆலிம்சா மாருவொளே க‌லியாண‌த்திற்கு பிற‌கு பொண்டாட்டி ஊட்டுக்கு தானே போறானுவோ" என்கிறார்க‌ள். இப்ப‌டி கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ள் எவ‌ராக‌ இருந்தாலும் அவ‌ர்க‌ள் இருந்தால் என்ன‌? செத்தால் என்ன‌?

பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இது போன்ற‌ போலி இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ர‌ணித்தால் 'இன்னாலில்லாஹி வ‌யின்னா இலைஹி ராஜியூன்' சொல்ல‌ மாட்டார்க‌ள் மாறாக‌ ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ 'அல்ஹ‌ம்துலில்லாஹ்' என்று தான் சொல்வார்க‌ள்.

பாவ‌ப்ப‌ட்ட‌ பெண் வீட்டின‌ரை சூழ்நிலையறியாது க‌ட்டாய‌ப்ப‌டுத்தும் ஒவ்வொருவரும் ஆணும் ஆண‌ல்ல, பெண்ணும் பெண்ணல்ல‌. அவ‌ர்க‌ளெல்லாம் 'குவாண்ட‌னாமோ' சிறையில் சாகும் வ‌ரை அடைக்க‌ப்ப‌ட‌ வேண்டியகள்.

எப்பொ தான் திருந்த‌ப்போவுதோ ந‌ம்ம‌ ஊர்???????????????????

யா!அல்லாஹ் திருத்தாம‌ல் எம்மை இத்த‌ர‌ணியை விட்டு அப்புற‌ப்ப‌டுத்தி விடாதே நாய‌னே........ஆமீன்...


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்துல்மாலிக் சொன்னது…
நோட்டீஸ் அடிச்சி வினியோகிக்க வேண்டிய பதிவு இது//


எல்லோரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பதிவை நிச்சயம் நோட்டீஸாக அடித்து வெளியிட வேண்டும் என்ற கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எனது கட்டுரையை வாசித்த, கருத்துமிட்ட, வாசிக்க வாய்ப்புக் கிட்டாத அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சொன்னபடி, கேட்டபடி சத்தியத்தைப் பின்பற்றி வாழ அல்லாஹ்விடம் வேண்டியவனாக...

ம அஸ்ஸலாம்

அபு ஈசா

அப்துல்மாலிக் said...

சகோ அபு ஈசா, என்னா மாசலாம் போட்டுட்டீங்க, ஆரம்பிச்சிட்டீங்க.. அடுத்த ஸ்டெப்க்கு கொண்டுபோகனும், அதற்கான வழிமுறைகளை ஆராந்து செயல்படுத்த முயற்சிப்போம், இன்ஷா அல்லாஹ் ஒருத்தராவது திருந்தினால் வெற்றிதான், அந்த வெற்றிக்காக பாடுபடுவோம், அல்லாஹ் நன்மையாக்கி தருவான்

அபூ சுஹைமா said...

அன்புச் சகோ. அபூ ஈசா,

நல்ல தொடர். இதுபோன்ற ஒரு தொடரை எழுத வேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன். மாஷா அல்லாஹ். மாற்றம் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.

பெண் வீட்டாரிடமிருந்து வீடு வாங்குவதில்லை என்பதை நாம் அறிவிக்க வேண்டும். நம்முடைய மகளுக்கு (இதே சிந்தனையுள்ள) ஆண் மகனைத்தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆண் பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே இதனை அறிவுறுத்தி வரவேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்! நான் தொடங்கிவிட்டேன். (இது பெருமைக்காகச் சொல்லப்பட்டதல்ல. என் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான்.)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பெண் வீட்டாரிடமிருந்து வீடு வாங்குவதில்லை என்பதை நாம் அறிவிக்க வேண்டும். நம்முடைய மகளுக்கு (இதே சிந்தனையுள்ள) ஆண் மகனைத்தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆண் பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே இதனை அறிவுறுத்தி வரவேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்! நான் தொடங்கிவிட்டேன். (இது பெருமைக்காகச் சொல்லப்பட்டதல்ல. என் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான்.)//

தம்பி அபு-சுஹைமா: உங்களோடு நானும் இணைந்து கொள்கிறேன் (அல்ஹம்துலில்லாஹ்) ! [நம் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான்]

Yasir said...

பெண் வீட்டாரிடமிருந்து வீடு வாங்குவதில்லை என்பதை நாம் அறிவிக்க வேண்டும். நம்முடைய மகளுக்கு (இதே சிந்தனையுள்ள) ஆண் மகனைத்தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆண் பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே இதனை அறிவுறுத்தி வரவேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்! நான் தொடங்கிவிட்டேன்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் கருனையால் உங்களுடைய ஊக்கமும், கருத்தும், துஆவுமே எம் போன்ற சாமானியரும் சாதிக்க உறுதுணையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

சகோதரர் யாசிரும், நெய்னாவும் சமூக அவலங்களை எண்ணி உள்ளம் குமுறி வெடித்திருக்கிறார்கள். அநீதியை வெறுப்பது ஈமானின் அங்கமாகும்.

எங்கெல்லாம் தீமை நடக்கிறதோ அதை ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இறை மார்க்கமான இஸ்லாம் கற்றுத்தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் ஒரு அநீதியைக் கண்டால் முதலில் கையால் தடுக்க வேண்டும், அதற்கு நமக்கு சக்தி இல்லையெனில் நாவால் (தீமை என் சுட்டிக்காட்டி) தடுக்க வேண்டும், அதற்கும் நமக்கு சக்தி இல்லையெனில் மனதால் அதை வெறுத்து (அதில் சம்மந்தப் படாமலும், அதை இருந்து வேடிக்கை பார்த்துக் கொன்டிருக்காமலும் அங்கிருந்து) ஒதுங்கிவிட வேண்டும். அவ்வாறு வெறுத்து ஒதுங்குவதை இமானின் தாழ்ந்த (கடைசி) நிலையாக இஸ்லாம் சித்தரிக்கிறது.

எனவே, என்ன அநீதியாயினும் அது எங்கு நடப்பதாயினும் அவ்விசயத்தில் ஒரு இறை நம்பிக்கையாளர் கையாள வேண்டியது மேற்சொல்லப்பட்ட மூன்று முறைகளை மட்டுமே. நான்காவது ஒரு நிலை என்பது கிடையாது.

இந்நேரத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவது மிகவும் பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வரதட்சனைக்கு எதிரான குரல் வலுத்த நேரம், நானும் என் நன்பர்கள் சிலரும் இனி வரத்தட்சனைத் திருமனங்களுக்குச் செல்வதில்லை என தீர்மானித்தோம். சிலர் அன்று கேளியாகக் கேட்டதுண்டு நீங்கள் செல்லவில்லை என்றால் வரதட்சனை வாங்குவது நின்றுவிடுமா? என்று. ஆனால் நாலடைவில் எங்களைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் வரதட்சனைத் திருமங்களைப் புறக்கனிக்க ஆரம்பித்தனர். அல்லாஹ்வின் அருளால் இன்று அநேக திருமனங்கள் நமதூரில் வரதட்சனை இல்லாமல் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்ததே. இதற்கு இஸ்லாமிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒருகாரனம் என்றாலும் வரதட்சனைத் திருமங்கள் புறக்கனிக்கப்பட்டதும் ஒரு முக்கியக் காரனம் என்றால் அது மிகையாகாது.

எனவே சமூக அநீதி எங்கு நடந்தேறினும் குறைந்தபட்சம் அதை புறக்கனிப்பவர்களாக நாம் ஆக வேண்டும்.

அல்லாஹ் நன்மையின் வழியில் நம் பாதங்களை உறுதிப்படுத்துவானாக!

ம அஸ்ஸலாம்

அபு ஈசா

Abu Easa said...

சமூக அநீதிக்கு எதிராக நம் சகோதரர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நிபந்தனையற்ற என் ஆதரவை இதன் மூலம் நான் தெறிவித்து கொள்கிறேன். அதற்கான உதவியை வல்ல அல்லாவிடத்தில் ஆதரவு வைத்தவனாக...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆக்ரோசமாக எழுதும் நம் கருத்துக்களால் சிலர் நம்மைப்பார்த்து இப்படி கேட்கலாம் "என்னா சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போல தெரியுது? என்று. ஆம் நாம் கூறுவோம் "இதை எழுதிய சொம்புவும், பார்த்து படிக்கும் ஒவ்வொரு சொம்புவும் ஏதோ ஒரு வகையில் அதிரையில் பிறந்த பாவத்திற்காக நிச்சயம் அடி வாங்கி இருக்கும்". எந்த நாசமாப்போனவன் (அ) போனவள் இந்த சாபக்கேடான பெண்ணுக்கு வீடு கொடுக்கும் பழக்கத்தை நம்மூரில் விதைத்து விட்டு சென்றானோ? அதன் தாக்கம் இன்றும் நம்மிடையே போதிய பணங்காசுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண் வீட்டினரிடம் வெட்கமின்றி பிச்சை எடுக்க வைத்துள்ளது நரக நெருப்பிற்கு உலகிலேயே முன்பதிவு செய்ய வைத்துள்ளது என்பது ஒரு வேதனையான உண்மை. இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என எண்ணுகிறேன்.



நாம் சம்பாதிக்கும் செல்வங்களெல்லாம் வீட்டுக்கு மருமகனாக வரும் எவ‌னுக்கோ தாரை வார்த்து கொடுக்க‌ வேண்டியுள்ள‌து. வேறு ஊரை சேர்ந்த‌ ஒரு ந‌ண்ப‌ன் இப்ப‌டி எம்மிட‌ம் அசிங்க‌மாக‌ கேட்கிறான் "அதிராம்பட்டின‌த்தில் ஆண்க‌ளுக்கு சொத்தையும் கொடுத்து, சூத்......யும் கொடுத்து கெடுத்து வைத்துள்ளார்க‌ள்" என்று. என்ன‌ ப‌தில் சொல்ல‌? இந்த‌ கேடுகெட்ட‌ ப‌ழ‌க்க‌த்தை விதைத்து விட்டு சென்ற‌வ‌ன் ம‌ட்டும‌ல்ல‌ அதை இன்றும் அடிபிற‌ழாது க‌டைப்பிடித்து வ‌ரும் பெய‌ர் தாங்கிய‌ ஒவ்வொரு முஸ்லிமும் ப‌தில் சொல்லியாக‌ வேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்.

ஆக்ரோசமாக எழுதும் நம் கருத்துக்களால் சிலர் நம்மைப்பார்த்து இப்படி கேட்கலாம் "என்னா சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போல தெரியுது? என்று. ஆம் என்று நாமும் கூறுவோம் "இதை எழுதிய சொம்புவும், பார்த்து படிக்கும் ஒவ்வொரு சொம்புவும் ஏதோ ஒரு வகையில் அதிரையில் பிறந்த பாவத்திற்காக, சாபக்கேட்டிற்காக‌ நிச்சயம் பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ அடி வாங்கி இருக்கும்". எந்த நாசமாப்போனவன் (அ) போனவள் இந்த சாபக்கேடான பெண்ணுக்கு வீடு கொடுக்கும் பழக்கத்தை நம்மூரில் விதைத்து விட்டு சென்றானோ? சென்றாளோ? அதன் தாக்கம் இன்றும் நம்மிடையே போதிய பணங்காசுகள் நம்மிடையே இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண் வீட்டினரிடம் வெட்கமின்றி பிச்சை எடுக்க வைத்துள்ளது மற்றும் நரக நெருப்பிற்கு உலகிலேயே முன்பதிவு செய்ய வைத்துள்ளது என்பது ஒரு வேதனையான, வெறுக்கப்படும் உண்மை. இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என எண்ணுகிறேன்.


நாம் சம்பாதிக்கும் செல்வங்களெல்லாம் வீட்டுக்கு மருமகனாக வரும் எவ‌னுக்கோ தாரை வார்த்து கொடுக்க‌ வேண்டியுள்ள‌து. வேறு ஊரை சேர்ந்த‌ ஒரு ந‌ண்ப‌ன் இப்ப‌டி எம்மிட‌ம் அசிங்க‌மாக‌ கேட்கிறான் "அதிராம்பட்டின‌த்தில் ஆண்க‌ளுக்கு சொத்தையும் கொடுத்து, சூத்......யும் கொடுத்து கெடுத்து வைத்துள்ளார்க‌ள்" என்று. என்ன‌ ப‌தில் சொல்ல‌? இந்த‌ கேடுகெட்ட‌ ப‌ழ‌க்க‌த்தை விதைத்து விட்டு சென்ற‌வன்/சென்றவள் ம‌ட்டும‌ல்ல‌ அதை இன்றும் அடிபிற‌ழாது க‌டைப்பிடித்து வ‌ரும் பெய‌ர் தாங்கிய‌ ஒவ்வொரு முஸ்லிமும் ப‌தில் சொல்லியாக‌ வேண்டும்.

அல்லாஹ், அல்லாஹ் என்று அவ‌ன் சொல்லாத‌தை எல்லாம் செய்து முடிக்கும் போலி இஸ்லாமியப் பெய‌ர்தாங்கிய‌ க‌ய‌வ‌ர்க‌ள் கூட்ட‌த்திலிருந்து யா!அல்லாஹ் நிர‌ந்த‌ர‌ பாதுகாப்பு எங்க‌ளுக்கு த‌ந்த‌ருள்வாயாக‌....ஆமீன்....


இப்ப‌டி பெண் வீட்டின‌ரிட‌ம் வ‌ழுக்க‌ட்டாய‌மாக‌ பிடுங்கிய‌ உட‌மைக‌ளும், உரிமைக‌ளும் இன்று பெற்றிருப்ப‌வ‌ர்க‌ள் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளை ச‌ந்தித்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் ம‌ர‌ண‌த்திற்கு முன் திருந்த‌ வேண்டும் இல்லை மேலும் நாச‌மாகி செத்தொழிய‌ வேண்டும் யா! அல்லாஹ்.....ஆமீன்

பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் இது போன்ற பத்து'ஆவிற்கும் இறைவ‌னுக்கும் எவ்வித‌ த‌டையும், திரையும் இருக்காது என‌ உறுதியாக‌ ந‌ம்புகிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்ம‌து.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்
என்ன அருமையான சிந்திக்க வேண்டிய கட்டுரை நம் ஊரில் நடக்கும் கொடுமையான ப்ழக்கம் இது.தன் இளமை காலங்களை வெளிநாட்டில் க்ழித்து முதுமையில் தான் சீதனமாய் கட்டிக்கொடுத்த வீட்டிலிருந்து துறத்தபடுகின்றனர் என்ற வாசகம் ஒரு சிலரின் வாழ்க்கையில் நடக்கும் கசப்பான உணமை,வ்ருங்காள மாப்பிள்ளைகளே அல்லாஹ்விற்க்கு பயந்து மனசாட்சியுடன் நடங்கள்
அன்புடன்
அப்துல் வாஹித் அண்ணாவியார்
நியு யார்க்கிலிருந்து

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு