தொடர் : இருபத்தி இரண்டு
இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் ( வட்டி தவிர்த்த வாழ்வு)
கடந்த அத்தியாயத்தில் வட்டியின் கொடுமைகளை வரிசைப் படுத்திக் காட்டினோம். இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு எந்த வகையிலும் இடமில்லை என்பதை இறைமொழிகளாலும் நபியின் வழிகளாலும் இனி வரையறுத்துக் காட்டுவோம். இவ்வளவு தூரம் இறைவன் எச்சரிக்கை செய்த ஒரு பெரும்பாவம் உலகமெங்கும் பொதுப் பொருளாதாரத்தை ஆக்ரமித்து இருப்பது அழிவின் விளிம்புக்கு உலகம் சென்று கொண்டிருப்பதன் அடையாளமே.
மிகவும் வேதனையான ஒரு செய்தியை வேறு வழி இல்லாமல் குறிப்பிட வேண்டி இருக்கிறது. சில புகழ் பெற்ற இஸ்லாமியர்களால் நடத்தப் படும் வணிக நிறுவனங்கள் கூட மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தருவதாக வாக்களித்து நமது சமுதாய மக்களிடம் பணம் வசூல் செய்து அதை அவர்கள் உடைய வியாபாரங்களில் போட்டுப் புரட்டி இலாபம் சம்பாதிக்கிறார்கள். பணம் கொடுத்தவர்களோ மாதம் தவறாமல் அவர்களிடமிருந்து வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துகிறார்கள். இவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், ‘நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தான் சாப்பிடுகின்றோம்’ என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்கிவிட்டு, பாங்கு சொல்லவும் தொப்பியை துடைத்துப் போட்டுக்கொண்டு தொழவும் போய்விடுகிறார்கள். இந்தக் காட்சியை நான் வெட்கத்தைவிட்டுப் பகிர்கிறேன். வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் அவ்வாறு கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். இப்படி வட்டியாக தருவதற்கு பதிலாக இவ்விதம் பணம் தருபவர்களை பங்குதார்களாக சேர்த்து இலாபப் பங்காக கொடுக்க வழிவகுக்கும் வழியை இருதாராரும் சிந்திக்கலாம். வட்டி, செல்வத்தின் மீது சேற்றை வாரிப் பூசுகிறது – தர்மமும் ஜகாத்தும் செல்வத்தை தூய்மைப் படுத்துகின்றன.
வட்டி, வியாபாரத்தைப் போன்றதே என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக திருமறையிலே இவ்வாறு எச்சரிக்கின்றான்.
“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல்குர்ஆன் 2:275)
அல்லாஹ் தன் திருமறையிலே இன்னும் கூறுகிறான்.
“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (அல்குர்ஆன் 2:276)
இறைவனுடைய பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்தும் என்ன பயன்? வட்டியின் மூலம் பார்ப்பதற்கு செல்வங்களும் சொத்துக்களும் அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக்குறைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பரக்கத்தையுடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும் நிறையப் பலன்களும் மன நிம்மதியும் கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கலில் தொடர்புடைய அத்தனை பேர்களையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள். குற்றம் புரிபவரும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தோரும் எச்சரிக்கப் படுகிறார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடுவோரும் பிராமிசரி நோட்டுக்களில் சாட்சிக் கையெழுத்துப் போடுவோரும் யோசிக்க வேண்டிய விஷயம்.
“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்பதை அறிவிப்பவர் ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது,
“வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி
அல்லாஹ் அச்சுறுத்துகிறான் ,
“ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்” (அல்குர்ஆன் 3:130)
“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்குர்ஆன் 30:39)
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்” (அல்குர்ஆன் 2:278)
“இறைவனின் வட்டியைப் பற்றிய தெளிவான “யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்” (அல்குர்ஆன் 2:275)
என்ற இறைவனின் வசனத்தை பற்றி நாம் அனைவரும் கண்ணை மூடி சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
நமது பக்கத்து வீட்டுக்காரன் , அடுத்த தெருக்காரன், ஒரே ஊரில் வாழும் பிற இனத்தார் மற்றும் சமயத்தார் ஆகியோர் நம்முடன் கருத்து மாறுபாடுபட்டு ஏதேனும் சண்டை வம்பு பிணக்கு ஏற்பட்டாலே நம்மால் தாங்க முடியவில்லை. நமது உடன் பிறப்புகளுடன் கூட நமக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை. ஆனால் வட்டி வாங்குவோர் மீது இறைவன் அறிவிக்கும் போர்ப் பிரகடனத்தை நம்மால் தாங்க முடியுமா என்பதை எண்ணிப் பார்த்தால் இதயம் நடுங்குகிறது. இதோ அந்த போர்ப்பிரகடனம் திருமறையின் வார்த்தைகளில் ,
“இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)
இன்னும் நபி மொழியில்,
இறைவன் நான்கு பேர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்
1. மது குடிப்பதை பழக்கமாகக் கொண்டவர்கள்.
2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.
3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.
4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)
வட்டி பற்றிய இழிமொழி நபி மொழியின் கடுமையான வார்த்தைகளால் சொல்லப்பட்டதை இதைவிட நாம் எடுத்துக் காட்ட முடியாது. அது, வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)
நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் உமது பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
இக்காலத்தில் நம் கண்முன்னே நடப்பதையும் இனி நடக்க இருப்பதையும் இப்படி ஒரு ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது.
“மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
இத்தகையோரின் மூச்சுக் காற்றுகள் அரபு நாடுகளிலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் இன்னும் நாம் பொருளீட்டும் இடங்களிலும் நிச்சயமாக நம் மீது பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது.
நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தின் அண்மைக்கால வரலாறு தனி நபர்கள் மற்றும் அரசாங்கங்களின் நிலையை வட்டியின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் மூலம் எப்படிப் புரட்டிப் போட்டு மீளமுடியாமல் தத்தளிக்கின்றன என்பதை உணரலாம். எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திவால், நஷ்டம், சந்தையில் தேக்கநிலை, கடனை நிறைவேற்ற முடியாமை, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவிகிதம் அதிகரிப்பு, பல நிறுவனங்கள், கம்பெனிகள் இழுத்து மூடப்படுதல் ஆகியவை இவற்றுள் அடங்கும். வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியால் வாழ்விழந்தவர்களின் அலங்கோல நிலையைக் காண விரும்புபவர்கள் துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கு எதிரே நிறுத்திய வண்ணம் விடப்பட்டுக் கிடக்கும் கார்களின் அலங்கோலத்தைப் பாருங்கள். வட்டி கட்ட முடியாமல் போட்டது போட்டாற்போல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஊரைக் காலி பண்ணிக் கொண்டு ஓடிய பலரின் வாழ்வை அந்தக் காட்சி பறைசாற்றும் வட்டி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்களை அல்லாஹ் எத்தகைய போர் அறிவிப்பைக் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளானோ அந்த எச்சரிக்கையும் மீறி நடந்த மனித சமுதாயத்தின் மீது அல்லாஹ் இறக்கிய ரத கஜ துரக பதாதிகள் எனப்படும் தேர், யானை, குதிரை , காலாட்படை ஆகியவற்றின் வடிவங்களாகக் கூட இன்று உலகில் காணப்படும் பொருளாதார முடக்கம் இருக்கலாம்.
இதனால்தான் உலகப் பொருளாதாரம் இன்று எழமுடியாமல் வீழ்ந்து கிடக்கிறது. வட்டியின் அடிப்படையில் கடன் சார்ந்த பொருளாதாரத்தில் என்றும் பொருளாதார உயர்வு இருக்காது. வளர்ச்சிபோல் காட்சியளித்து, நாளடைவில் நசிந்து விடும். உளபோல் இல்லாகித் தோன்றக் கெடும் என்று திருவள்ளுவர் அளவறிந்து வாழாதான் வாழ்க்கையைக் குறிப்பிடுகிறார் அப்படி வட்டியுடன் உலாப் போகும் வக்கற்ற பொருளாதார அமைப்பும் உள போல் இல்லாகித் தோன்றக்கெடுமேன்று அறுதியிட்டு உரைக்கலாம். உலகம் முழுதுக்கும் இஸ்லாமியப் பொருளாதாரமே மாற்று மருந்து என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. வட்டியின் விஷம் பாய்ந்த உலகப் பொருளாதாரம் தன் விஷத்தை இறக்கிக் கொள்ள இஸ்லாம் காட்டும் பொருளாதாரமே ஏற்ற முறை என்பதை அறிவிக்கத்தொடங்கி இருக்கிறார்கள். அதன் தொடக்கமே வட்டியில்லா வங்கி முறை.
இஸ்லாம் கூறும் வட்டியில்லா வங்கி முறைகளை இனித் தொடர்ந்து காணலாம் இன்ஷா அல்லாஹ்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இபுராஹீம் அன்சாரி
33 Responses So Far:
//நமது பக்கத்து வீட்டுக்காரன் ,அடுத்த தெருக்காரன், ஒரே ஊரில் வாழும் பிற இனத்தார் மற்றும் சமயத்தார் ஆகியோர் நம்முடன் கருத்து மாறுபாடுபட்டு ஏதேனும் சண்டை வம்பு பிணக்கு ஏற்பட்டாலே நம்மால் தாங்க முடியவில்லை. நமது உடன் பிறப்புகளுடன் கூட நமக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை. ஆனால் வட்டி வாங்குவோர் மீது இறைவன் அறிவிக்கும் போர்ப் பிரகடனத்தை நம்மால் தாங்க முடியுமா?//
வட்டி கூடாதென்பதற்கு அழகு விளக்கங்கள்.
வட்டி சம்பந்தப்பட்டவர்களின் மூச்சு காற்று கூட நம்மை அண்டாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!
தம்பி ஜகபர் சாதிக் அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் முதல் பின்னூட்டத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஜசக் அல்லாஹ்.
ஆமாம் அந்த டீ என்னாச்சு? தம்பி சபீர் அவர்களின் பொலப்பம் தாங்க முடியலியே அதைப் போட்டுக் கொடுத்துவிடக் கூடாதா?
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்சாரி காக்கா
வட்டியை பற்றி மிக துள்ளியமான உங்கள் கருத்தூட்டம் கண்டு மிகவும் பிரமித்துவிட்டேன் அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் உங்களைகொண்டு
வேளை வாங்குகின்றான் என்றே என்னுகின்றேன்.
அல்லாஹ் நம் மக்கள் அனைவரையும் இந்த வட்டி என்ற கொடிய பாவத்தை புரிந்து ஒதிக்கி தள்ளி அதை மற்றவர்களுக்கும் புரியவைக்க அல்லாஹ் உதவி செய்வானாகவும் அமீன்
எப்படியாவது நமதூரில் வட்டியில்லா பேங் நிறுவ வேண்டுமென்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை எத்தனையொ கோடீஸ்வரர்கள் நமதூரில் உண்டு அவர்களிடம் வட்டியின் கொடுமைகளை ஞாபகப்படுத்தி அவர்களை ஒன்றினைத்து ஒரு வட்டியைல்லா பேங் நிறுவ உங்களைப்போன்றோர் முயற்ச்சித்தால் கண்டிப்பாக செயல்வடிவம் பெறும்.
தற்போது இளம் கோடீஸ்வரர்கள் அதிகம் அவர்கள் இலகுவாக புரிந்துகொள்வார்கள்
அதிரை நிருபர் போன்ற வளைத்தளங்களில் வித் இடுங்கள்
நிச்சயம் அறுவடைகிடைக்கும்
அதிரைமன்சூர்
ஜித்தா
//அந்த டீ என்னாச்சு? தம்பி சபீர் அவர்களின் பொலப்பம் தாங்க முடியலியே அதைப் போட்டுக் கொடுத்துவிடக் கூடாதா?//
மேன்மையுள்ள இ.அ. காக்கா
வ-அலைக்குமுஸ்ஸலாம்,
டீ மேட்டரில் சில தடங்கல்,
அது பற்றி ஆசிரியருக்கு தெரிவித்தேன்.
இன்சா அல்லாஹ் சீக்கிரம் தயாரிக்கனும்.
அலைக்குமுஸ் ஸலாம்.
தம்பி மன்சூர் அவர்களே!
நமது ஊரில் பைத்துல்மால் மூலமும் அழகிய கடன் என்கிற கர்ழன் ஹஜானா என்கிற முறையிலும் சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லாக் கடன் கொடுத்து உதவிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பணி மேலும் விரிவடைய வேண்டும். நமது அருகாமையில் இருக்கும் ஊர்களில் இன்னும் இந்த சிந்தனை அரும்புகூட விட வில்லை.
இந்திய அரசும் இப்போதுதான் வட்டி இல்லாவங்கியின் அடிப்படையை ஏற்க ஆரம்பித்து இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் உங்கள் எண்ணங்கள் அல்லாஹ் உதவியால் ஈடேற து ஆச செய்வோம்.
//இதனால்தான் உலகப் பொருளாதாரம் இன்று எழமுடியாமல் வீழ்ந்து கிடக்கிறது. வட்டியின் அடிப்படையில் கடன் சார்ந்த பொருளாதாரத்தில் என்றும் பொருளாதார உயர்வு இருக்காது// சரியான தகவல்.
வட்டி ஏழையை வறுமயிலும் பணக்காரன் வியாபாரத்தில் நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது
வட்டியை மட்டும் இலாபமாகக்கருதி வியாபாரம் செய்பபன் , வட்டி வாங்க முடியாத சூழ்நிலை வரும்போது நஷ்டப்பட்டு வியாபாரத்தை மூடும் அளவுக்கு வந்து விடுகிறான்.
இ அ காக்கா எழ்திக்கொண்டு வரும் இத்தொடரின் அனைத்து பதிவுகளும் இஸ்லாமியப்பொருளாதாரத்திற்கு மிகப்பொருத்தமான விளக்கங்களாக இருக்கின்றது மாஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
காக்கா,
அற்புதமாக முன்னேறிச் செல்கிறது தொடர். நல்லா சுல்லென்று உறைக்கும்படி உரைக்கிறீர்கள். வட்டி தடுக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மனித இனத்தின் இயல்பான பேராசையின் காரணமாக வட்டியைத் தின்னத் தயாராகும் மனிதன் அதனை நேரடி ரூபத்தில் சுவைக்காமல் ஆயிரத்தெட்டு மாற்று வழிகளில் உண்ணுகிறான்.
அவ்வாறு செய்வதன் மூலம் அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். தனக்குத் தானே தீங்கு செய்கிறான்.
தாங்கள் எடுத்தாண்டு வரும் இறை வசனங்களும் நபிமொழிகளும் எந்தவித கேள்விகளுக்கும் இடம்தராமல் தெளிவாகவும் திடமாகவும் தங்களின் கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன. நம் மார்க்கத்தின் போதனைகளை வாசிக்க வாசிக்க மெய் சிலிர்க்கின்றது.
அதிலும் குறிப்பாக தங்களின் பார்வையில் வாசிக்க, சர்க்கரைப் பொங்கலில் தேன்பாகு.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
அன்சாரி காக்கா அவர்களே
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும்
அது மூலியமாக நமதூர் மக்களின் அபார தேவகளுக்கு தீனி போடவில்லை என்பதால்தான்
இன்னும் கொடுமையான வட்டியின் பக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றமுடியவில்லை
எத்தனை பைதுல்மால்கள் வந்தாலும் நிலமை இதுதான். கார்ணம் மக்களின் தேவைக்கேற்ப அவ்ர்களால் ஈடுசெய்ய அவர்களிடம் போதிய பொருளாதாரம் இல்லாததே காரணம்.
மற்ற பேங்கில் வெளிநாட்டில் சம்பாதிப்பவர்களின் சம்பாத்தியமும் , செல்வந்தர்களின் பணமும் சும்மா புதைபட்டு அதன் மூலியமாக அவர்களை அறியாமலே அவர்களுக்கு வட்டியும் வந்துசேரும்போது அவர்கள் பாவத்தாளியாக மாறுகின்றனர் அதே இஸ்லாமிக் பேங்க் என்று வரும்போது தனது சம்பாத்தியத்தையும் செல்வந்தர்களின் பணத்தையும் போட்டுவைத்தார்களேயானால் அவர்கள் வட்டியிலிருந்து பாதுகாக்ககப் படுகின்றனர் இதை பாணம் தேவைப்படுவோருக்கு நகையின் பெரில் கொடுத்டு வங்கிகொள்ளலாம் சிறு சேமிப்பின் மூலமாகவும் நிதி திரட்டலாம் ஆக ஓரளவு வட்டியை வேரோடு பிடிங்கிவிடலாம்
இதை இளைய சமுதாயதினரிடம் இப்பொழுதே விதைப்பது மட்டுமல்லாது இதை செயள் வடிவம்பெறச்செய்ய நம் அனைவர் மீதும் கடமை இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபர் மூலியமாக வித் இடுவோம்
அதிரைமன்சூர்
ஜித்தா
காக்கா,
ஒரு கொசுறுக் கேள்வி.
இந்தப் பங்குச் சந்தையிலிருந்து வரும் வருமானம் லாபமா வட்டியா? தவிர, மியூட்ச்சுவல் ஃபன்ட் என்னும் முதலீட்டு முறையிலிருந்து லாபம் நட்டம் எது வந்தாலும் ஏற்கனும் என்னும் ஷரத்து இருப்பதால் அது வட்டி அல்ல என்கிறார்களே.
இன்கே, ஒன்னு வாங்கினா ஒன்னு ஃபிரீன்றாங்க. 100 திர்ஹமுக்கு வாங்கினா கிஃப்ட் வவுச்சர்.
என்ன ஒன்னு, ஒரு வயித்துவலிக்கு மருத்துவம் பார்த்தா ஒரு திருகுவலியை இலவசமாகக் குணப்படுத்துவோம் என்று மருத்துவர்கள் சொல்லலே...அதாவது இன்னும் சொல்லலே. இனிமேல் சொல்லலாம்.
இதெல்லாம் எந்த வகை காக்கா?
எம் ஹெச் ஜே வுக்கு ஏதோ ஷைத்தான் குணமாதிரி ஒன்னும் எழுத விடமாட்டேங்குதாம்.
வெள்ளக்கார ஷைத்தானா இல்லாதவரை சரிதான். டீக்காகக் காத்திருப்போம்.
சபீர் கக்கா
//வெள்ளக்கார ஷைத்தானா இல்லாதவரை சரிதான். டீக்காகக் காத்திருப்போம்.// அப்படியெல்லாம் சொல்லாதீங்க, காரணம் ஜாபர் சாதிக் கலர்ல ரொம்ப வெள்ளையா இருப்பாப்ள. அப்புறம் டீ என்னா தண்ணீ கூட கிடைக்காது
//வட்டியாக தருவதற்கு பதிலாக பணம் தருபவர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுப்பதை இருதரப்பும் சிந்திக்கலாம்////
நல்ல ஐடியாதான்.. வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் பங்காக சேர்த்தால் அவர்களும் 'முதலாளி அந்தஸ்துக்கு வந்து விடுவார்களே?' என்ற பயம் பிறப்பிலேயே முதலாளியாக பிறந்தவர்களுக்கு இருக்காதா? எங்கேயோ கிடந்த ஒரு வட்டிக்கு கொடுக்குற ஆசாமியே முதலாளி வட்டத்துக்குள் [வட்டிக்கு வாங்குற] முதலாளிகள் விடமாட்டார்கள். இவர்கள் பழம் திண்டு கொட்டை போட்ட ஆசாமிகள். தற்போது இருக்கும் ஆரம்ப பங்காளிகளையே 'எப்புடிடா விரட்டுறது'ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் மண்டையை போட்டு ஒடச்சுகிட்டு இருக்கும் போது இந்த ஐடியா எதுவும் செல்லுபடி ஆகாது.
இது என் சொந்த கருத்தோ யூகமோ அல்ல. வியாபாரம் கட்டுபடி ஆகாத போது என்னை பங்காளியாக. சேர்த்து விட்டு வியாபாரம் பெருகியதும் குள்-மால் செய்து என்னை விரட்டிய ஒரு[ஹாஜியார்] நினைவுகள் பசுமரத்து ஆணிபோல் பதிந்த அனுபவம் சொன்னேன்
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
வட்டி உருவெடுக்கும் சூழலை நன்கு சொல்லியிருப்பது அருமை. பொருளியலோடு இணைக்க வேண்டிய பாடம். எழிதிய உங்களுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை கிடைக்கட்டும்.
முதலில் நம் சமுதாய மக்கள் வட்டிக்கும் வியாபாரத்திர்க்குமுள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேணும். இந்த அறியாமையின் கோளாறு ஒரு பக்கமும், அது கூடாது என்று தெரிந்தும் வேறு வழியின்றி பணக்கஷ்டத்தின் காரணமாக தற்காலிக நிம்மதி என்னும் மாயையில் சிக்குவதும் இதற்குக்காரணம்,
வட்டி என்றால் என்ன ?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரே இனத்தைச்சேர்ந்த பொருளை இரு வெவ்வேறு அளவுகோலில் மாற்றிக்கொண்டால் அது வட்டியைச்சேரும். உதாரணத்திற்கு. ஒருவர் தரம் குறைந்த பேரீச்சம் பழத்தைக்கொடுத்து . கொடுத்ததைவிட குறைந்த அளவில் தரம் கூடுதலான பழத்தை வாங்கினாலும் அது வட்டியை சேரும் என்றார்கள். தரம் குறைந்த தை விற்றுவிட்டு அந்தக்காசில் தரம் உள்ள பழத்தை வாங்கும்பொழுது அது வட்டியில் வராது என்றார்கள்.
பொதுவாக வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் , ஒருவனுடைய முதல் , அது லாபத்திற்கும் நஷ்டத்திற்கும் உட்பட்ட condition-ல் வணிகத்தில் ஈடுபடுத்தப்படும்பொழுது அது வியாபாரம் என்னும் சுன்னத்தை பேணியதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதற்க்கு மாறாக, அசல் அப்படியே இருக்க, மாதா மாதம் , கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயம் செய்யும்பொழுது, நம்முடைய முதலுக்கு எந்த ஒரு நஷ்டமும் வராமல்
ஒரு குறிப்பிட்ட தொகை வரும்பொழுது, நம் முதலுக்கு லாபம் மட்டுமே குறிக்கோளாக நஷ்டத்திற்கு உடன்பாடு இல்லாமல் , எந்த வித சிரத்தையும் இல்லாமல் வருவாய் வந்தால் அது அல்லாஹ்வோடும்,அல்லாவுடைய சட்டத்தோடும் போர் புரிவதாகும்.
வட்டி என்றால் என்ன ?
ஒரே இனத்தைச்சேர்ந்த பொருளை உடனே மாற்றிக்கொண்டால் அது வட்டியில் வராது. அனால் ஒருபொருளை இன்று கொடுத்து விட்டு, நாளை வாங்கிக்கொள்கிறேன் என்று அதற்காக ஒரு குறிப்பிட்ட லாபம் வைத்து வாங்கியதைவிட கூடுதலாகபெற முயற்சி செய்வது வட்டியாகும்.
மொத்தத்தில் சுருக்கமாக சொல்வதென்றால் , வியாபாரம் என்ற பெயரில் ஒருவனின் வயிற்ரரிச்சலை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. உதாரணத்திற்கு, தென்னை மரத்திலுள்ள இன்று காயத்துள்ள தேங்காய்க்கு இன்று விலை பேசினால் அது வியாபாரம். ஆனால், இந்த தென்னை மரம் இரண்டு மாதத்திற்கு பிறகு இவ்வளவு காய்க்கும், என்று சொல்லி இன்று பணம் வாங்குவது தடை செய்யப்பட்டதாகும்.
அன்றுள்ள பொருளுக்கு அன்றே பணம் என்பது இஸ்லாத்தின் நியதி.
நாளை கொடுப்பதாக இருந்தாலும் அதே பணம். இரண்டு அல்லது மூன்று நாள் தவணைக்காக , ஒரு குறிப்பிட்ட கொடுத்ததைவிட அளவில் அதிகம் கேட்டுப்பெறுவது வட்டியாகும்.
அல்லா வட்டி என்னும் இக்கொடிய நோயிலிருந்து நம் அனைவரயும் காப்பாற்றுவானாக !
ஆமீன்.
சுவனத்தில் நுழையாத அந்த நான்கு கூட்டங்களில் அல்லாஹ் வட்டி வாங்கிதின்போரையும்,,அதற்காக கணக்கு எழுதுவோரையும், சாட்சி சொல்வோரையும், வழி காட்டுவோர் அனைவரையும் , குற்றத்தில் சமமானவர்களே என்று சொல்லும்பொழுது , உண்மையிலே இதயம் நடுங்குகின்றது, அன்சாரி காக்கா
வட்டிகடைக்கு இதுதான் வழி என்று சொன்னால் கூட எனும்போது,
அதன் அருகில்கூட நெருங்க எப்படி மனம் வரும் ?
அல்லாஹ் காப்பாற்றுவானாக !
ஆமீன்.
காதரு,
அருமையான விளக்கம்ங்கிறேன்.
நியூ காலேஜ் பேரையும் நீ படித்த B.A. corp.sec யையும் காப்பாத்திடேடா.
நண்பேன்டா நீயி.
அன்பு சகோதரர்களே! அப்துல் காதர் அவர்கள் இந்தப் பதிவுக்கு உறுதுணை செய்யும் வகையில் அருமையான விளக்கம் தந்திருக்கிறார்கள். ஜசக்கல்லாஹ் ஹைரன்.
இந்த வட்டி முறையில் ஒரு மாஜிக் வேலை இருக்கிறது. நான் பதிவில் குறிப்பிடவில்லை. அதை இப்போது எழுதுகிறேன்.
அதாவது கணக்கில் வராத பணம் வைத்திருக்கும் சில நிறுவனங்கள் - அதிரையின் நிறுவனங்கள் விதிவிலக்கு அல்ல- தாங்கள் கொள்முதல் செய்யும் பொருள்களுக்குப் பணம் தருவதற்காக அதாவது கொள்முதல் பற்று எழுதுவதற்காக கணக்கில் இருப்பு இல்லாதபோது சில மார்வாடிகளிடம் அல்லது வட்டித்தொழில் செய்பவர்களிடம் பணம் கடன் வாங்கியதாக கற்பனையாக வரவில் வைப்பார்கள். இதில் பணப் பரிமாற்றமே நிகழாது. கணக்கு புத்தகத்தில் மட்டுமே வரவு ஆகும். ஆனால் இதற்காக நிறுவனங்கள் புக் பேலன்ஸ் தந்தவனுக்கு வட்டி தரும். இப்படி பணமோ பொருளோ கூட கை மாறாமல் கூட வட்டி கோலோச்சுகிறது.
தம்பி சபீர் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு விளக்கம் தர முயல்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
அன்பு சகோதரர் மன்சூர் அவர்களுக்கு, முதலில் உங்களின் நல்ல எண்ணங்களுக்கும் தூண்டுதல்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபர் மூலம் இந்த கருத்து விதை முளைத்து துளிர்விட்டு பலரின் இதயக் கதவுகளைத் தட்டும்போது இஸ்லாமிய வங்கி முறையில் துபாய் இஸ்லாமிக் பேங்க் போல அதிரை இஸ்லாமிக் பேங்க் துவக்கப் படுமாக!
காலம் பலவற்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்து இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இதுவும் நடக்கும். முனைவோம். முயல்வோம். முடிப்போம்.
நீங்கள் குறிப்பிட்டு இருப்பதைப் போல் பணத்தை என்ன செய்யலாம் என்று தெரியாத இளம் கோடீஸ்வரர்களின் கரங்கள் ஒன்று இணைந்தால் போதும்.
என் பின்னூட்டத்திற்கு ஊக்கம் தரும் வகையில் பின்னூட்டம் அளித்த , இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கும் , என் ஆருயிர் நண்பன் சபீருக்கும் என் இனிய
நன்றி
abu asif.
பணம் கையில் உள்ளவர்களுக்கு மார்க்கம் புரிவதில்லை.
மார்க்கம் புரிந்தவர்கள் கையில் போதிய பணம் இல்லை.
அல்லாஹ்வின் இந்த ஏற்றத்தாழ்வும், ஒருவகை , சோதனையே. ஏனனில் , இந்த இரு தரப்பும் , இல்லைஎன்போர் ( மார்க்க அறிஞகர்கள்) இருக்கையிலே இருப்பவர்கள் ( மார்க்க ஞான மில்லாத வர்கள் ) இல்லையென்று சொல்லாத நிலை ஏற்ப்பட்டு , இருப்பவர்கள் மனதில் அல்லாஹ், ஒரு இஸ்லாமிய விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தி அவர்களுக்கும் இஸ்லாத்தை இப்ராஹிம் அன்சாரி காக்கா போன்றவர்கள் மூலம் புரியும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி, நேர் வழி காட்டும் ஏற்ப்பாடக கூட இருக்கலாம் அல்லவா ?
அல்லாஹ்வின் எல்லா ஏற்றத்தாழ்வும் ஒருவகை ஏற்பாடே. காரணமின்றி காரியங்கள் ஆற்றுபவனல்லஅல்லாஹ்.
அனைத்தும் அறிந்தவன்,
தெரிந்தவன்,
புரிந்தவன்.
அபு ஆசிப்.
வட்டியில்லா வங்கி / வட்டியில்லா இன்சூரன்ஸ் கம்பெனி என்று 1984 ல் மலேசியாவில் தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக செயல் படுகிறது.
நீங்கள் சொன்ன கணக்கில் வராத பணத்தை வட்டிக்கு வாங்கியதாக [சில கம்பெனிகளில் ] உள்ளே கொண்டு வந்து வட்டியை செலவு கணக்காக எழுதுவதை நானும் பார்த்திருக்கிறேன்.
"இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபர் மூலம் இந்த கருத்து விதை முளைத்து துளிர்விட்டு பலரின் இதயக் கதவுகளைத் தட்டும்போது இஸ்லாமிய வங்கி முறையில் துபாய் இஸ்லாமிக் பேங்க் போல அதிரை இஸ்லாமிக் பேங்க் துவக்கப் படுமாக!"
மேற்கண்ட அன்சாரி காக்கா அவர்களின் இந்த இஸ்லாமிய பொருளாதாரத்தை நாம் சும்மா வெருமனே படித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல் நம் சகோதரர்கள் இதில் கவணம் செலுத்தும்படி கேட்டுகொள்கின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,
வட்டிக்கு எதிரான போர்படை வலுபெற நல்ல நினைவூட்டல் காக்கா..
மேலும் உலக பொருளாதாரம் வளராமல் வீழ்ந்து வருவதற்கு வட்டி சார்ந்த தொழில் முறையே காரணம் என்று வலுவான கருத்தை பதிந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரன்.
தொடருங்கள் உங்கள் பணியை காக்கா..
//உலகம் முழுதுக்கும் இஸ்லாமியப் பொருளாதாரமே மாற்று மருந்து என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது//
அமீரகத்துலே இயங்கும் RAK வங்கிக்கூட இப்போது “அமல்” என்ற இஸ்லாமிய வங்கிக்கு திரும்பிவிட்டது என்று நினைக்கும்போது இஸ்லாமிய பொருளாதாரமே உயர்ந்தது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குது.
இந்த தொடருக்கான ஆன்லைன் ஆஃப்லைன் வரவேற்புகளை பார்க்கும்போது... எடுத்த முயற்சிக்கு அல்லாஹ் எல்லாவகையிலும் உறுதுணையாக இருக்கிறான் என்று சாட்சியம் கூறுகிறது அல்ஹம்துலில்லாஹ் !
தனி மின்னஞ்சல்கள், மற்றும் நிறைய நண்பர்கள் வாயிலாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹும் ஹைர் !
Assalamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,
The interest free life is prosperous life.
The Quranic verses and Hadees of Prophet Muhammad Sallallah Alaihivasallam, are clearly giving dire warning against interest and declare "Interest Is Absolutely Prohibited - Haram".
All of your explanations are crystal clear too much enough for the readers.
Your writings become Islah - Reforming for our community.
May Allah accept your efforts and reward you.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
wwww.dubaibuyer.blogspot.com.
மாஷா அல்லாஹ்...மெருகேறிக்கொண்டே வரும் தொடர்..நிச்சயமாக வட்டிப்பற்றியும் / இஸ்லாமிய வழியில் பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் ஆய்வு நடத்தவரும் மாணவர்களுக்கு உங்களின் புத்தகவடிவில் வர இருக்கும் இவ்வாக்காம் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா
ஏற்புரைக்கு முன்பாக தம்பி சபீர் அவர்களின் கேள்விக்கு பதில்
//ஒரு கொசுறுக் கேள்வி.
இந்தப் பங்குச் சந்தையிலிருந்து வரும் வருமானம் லாபமா வட்டியா? தவிர, மியூட்ச்சுவல் ஃபன்ட் என்னும் முதலீட்டு முறையிலிருந்து லாபம் நட்டம் எது வந்தாலும் ஏற்கனும் என்னும் ஷரத்து இருப்பதால் அது வட்டி அல்ல என்கிறார்களே.
இன்கே, ஒன்னு வாங்கினா ஒன்னு ஃபிரீன்றாங்க. 100 திர்ஹமுக்கு வாங்கினா கிஃப்ட் வவுச்சர்.//
பங்குச்சந்தை , மியூச்சுவல் பண்ட் பற்றி மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள் மாறுபடுகின்றன. நான் ஒன்று எழுதி , அதற்கு ஆதாரம் தா என்று கேட்டால் யாராவது மார்க்க அறிஞர் என்று போற்றப் படுபவர்களின் கருத்தையே தரும் நிலையில் இருக்கிறேன். ஆகவே அதை நான் விரும்பவில்லை. காரணம் விரலை ஆட்டுவது பற்றியே நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருக்கிறோம்.
இருந்தாலும் இதுபற்றி ஒரு தனி அத்தியாயம் எழுதி எல்லா சாதக பாதகங்களையும் ஆராயலாம். இஸ்லாமிய வங்கி முறைகளுக்குப் பிறகு இதை எழுதினால்தான் பொதுவான் விவாதமற்ற அல்லது விவாதம் குறைந்த கருத்துக்களை பதிந்து வலு சேர்க்க இயலும். அடுத்த அடுத்த வகுப்புகளில் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது இந்தமாத செல்பசில் இல்லை.
நீங்கள் கேட்டிருப்பவை பற்றி இன்ஷா அல்லாஹ் நாம் விவாதிக்கலாம். இவை எழுதப்படாவிட்டால் இந்த தொடர் நிறைவுராது.
ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீ என்பது வணிகத்தின் அளவை மேம்படுத்த எடுக்கப் படும் ஒரு வழிமுறையே. அவர்களுக்கு கட்டுபடியானால் மட்டுமே தருவார்கள். வாடிக்கையாளர்களை கவர வைத்திருக்கும் விற்பனை உக்தியே. இது வட்டியில் வராது என்றே கூற வேண்டியுள்ளது. ( பலரிடம் விவாதித்து இந்த பதில்)
மேலும் இலவசமாகத் தரப்படும் பொருளின் மூச்சு நிற்கும் தேதி வெகு அண்மையில் இருக்கும். விரைவில் வீணாகக் கொட்ட வேண்டி இருப்பதையே பெரும்பாலும் இலவசமாகத் இணைத்துத் தருவார்கள். ஆகவே இது வட்டியில் வராது.
அன்புடன் படித்து மிகுந்த உற்சாகமூட்டும் வகையில் ஆதரவு தரும் அனைத்து சகோதரர்களுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரன்.
Dear younger Brother Ameen,
Alaikkumussalam. Jasakkallah Hairan for your comments.
jazaakkallaah khair, kaakkaa.
Allaah aaththik aafiyaa!
வட்டியின் தீமை பற்றி இன்னும் அதிகமதிகம் எழுதி இந்த வட்டியின் தீமையில் இருந்து அனைவரும் விடுபடஉங்களை போன்றோரின் கட்டுரைகள் உதவியாக இருக்கும்
படித்த வார்த்தைகளில் பிடித்தவார்த்தை
"மேலும் இலவசமாகத் தரப்படும் பொருளின் மூச்சு நிற்கும் தேதி வெகு அண்மையில் இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள வலைப்பதிவாளர் அவர்களுக்கு, எனது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தொடர் கீழ்கண்ட பல வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கிறது.http://www.islamkalvi.com/?page_id=103796
http://readislam.net/pdf/salahuddin.pdf
http://ilayangudikural.blogspot.sg/
http://islamhistory-vanjoor.blogspot.sg/
http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog-post_2.html
இவைகளில் சென்று முதலில் "அறிமுகம் மற்றும் நுழையும் முன்" பகுதிகளைப் படித்தால் என்னைப்பற்றி விவரம் தெரியவரும். இன்ஷா அல்லாஹ் இவைகளை தங்கள் ப்ளாக்கில் வெளியிட்டு நம் சமுதாயத்திற்கு இவைகளை எத்தி வைக்கும் பணிக்கு எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுகிறேன். தொடர்பு கொள்ளவும். வஸ்ஸலாம்.
கூ.செ.செய்யது முஹமது
Post a Comment