Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 4 14

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2011 | , , ,



உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும் குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபையிலும் கராமாவிலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர்தம்பி கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூடத்தின் பொறுப்பாளராகப் பணி ஏற்றார்.

சத்வாவில் பணிபுரிந்த நான் பணிமுடித்து டாக்சியில் வந்து கராமாவில் இறங்கிவிடுவேன். உமர்தம்பி பணி முடித்த பிறகு இருவரும் மீண்டும் டாக்சியில் புறப்பட்டு பர்துபை வருவோம் அங்கிருந்து அப்ரா (படகு) மூலமாக தேரா வருவோம். இது கொஞ்ச நாட்கள் நீடித்தது.

உமர் பணி புரிந்த தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து “இதை உடனே செப்பனிட வேண்டும்” என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியில் LOT(line output transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அது அவர்களிடம் இல்லாதததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.

உமரின் பணியகம் மதியம் 1-லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காகச் சாத்தப் பட்டிருக்கும். உமர் மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். சில பணியாளர்கள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.


உமர் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினார். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியொன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் 'அவசரமாக வேண்டும்' என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. உமருக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட்ட நபர் தலை கலைந்தவராக வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டிய செப்பனிட்ட ஊழியர், அது செப்பனிடப் பட்டுவிட்டதாகவும் நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் தாம் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.


அதற்கு அந்த ஊழியர் அது 'மதிய உணவு இடைவேளை' என்றும் மேலும் பொறுப்பாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொலைக் காட்சிப் பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த நபர் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.

தொலைக் காட்சிப் பெட்டியை செப்பனிட்ட அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே 'பர்துபை' காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த நபரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவ மனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் உமர் அலுவலகம் திரும்பியிருக்கிறார். (பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்)

சுமார் ஐந்து மணியிருக்கும். ஒரு போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட உமருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் அந்த வாடிக்கையாளர் போலீஸ்காரர் என்று உமருக்கு தெரிய வந்தது. 'போலீஸ்காரர் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. அவர்களுடைய பொல்லாப்பு சங்லிப் பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியர் இந்தச் வம்பை வாங்கிக் கட்டிக்கொண்டாரோ? பேசாமல் தொலைக் காட்சிப் பெட்டியை அவரிடம் தந்திருக்கலாமே' என்று உமர் எண்ணினார்.

அவர் உமரை நெருங்கி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். உமரும் பதிலளித்தார். உமரிடம் அந்த தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றார். பணப் பையைத் திறந்து பணத்தைத் தந்துவிட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று." என்று சொல்லிவிட்டு அந்தப் பணியாளரிடம் மன்னிப்பும் கேடுக் கொண்டார். உமர், "சார் உங்கள் டி. வி.?" என்று வினவியபோது "கல்லி வல்லி (விட்டுத் தொலை)" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் உமர் அறிய வந்த செய்திகள் உமரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அந்த ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற உமர் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பர்த்துப் பழகிய உமருக்கு ஒரு புது அனுபவமாகவே இருந்தது.

முதலாளி விசுவாசத்தோடும், துணிச்சலோடும் நடந்துகொண்ட அந்த இந்தியரையும், மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டு பெருந்தன்மையோடு நடந்து கொண்ட அந்தப் போலீஸ்காரரையும் நாம் மனமாரப் பாராட்டத்தான் வேண்டும். மனிதம் மாய்ந்துவிடவில்லை!.

தொடரும்....
- உமர்தம்பி அண்ணன்


பகுதி 3                                                                                                                   பகுதி - 5

14 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆச்சரியமான சுவையான (நடந்த) கதைச் சித்திரம்.
ஆம் அங்கெல்லாம் காவல் துறையில் மனித நெறி போற்றப்படுகிறது.
ஆனால் நம் நாட்டில் பெரும்பாலும் மத வெறியும் காணப்படுகிறதே!

ZAKIR HUSSAIN said...

ஒரு நிகழ்வை விளக்கும் முறை அருமை. அதற்க்கான படங்களை தேர்வு செய்து வெளியிடுவது[ is that Abu Ibrahim?] இன்னும் அருமை.

ZAKIR HUSSAIN said...

"அதிரை மனம்" முகப்பு நன்றாக இருக்கிறது. லோடிங் கொஞ்சம் தாமதமாகிறது. [ இதற்க்கு வேறு காரணங்களும் இருக்கலாம்]

ஒவ்வொரு வலைப்பூவின் பேர்களும் எழுத்தும் அதற்கென்று ஒரு ஸ்பெசாலிட்டி எழுத்திலும் லோகோவிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

அதிகம் பதிவு இல்லாத வலைப்பூக்கள் வைத்து நடத்துபவர்களுக்கு ' இப்படி மராமத்து செய்யாத தோப்பு மாதிரி" வைக்க வேண்டாம் என நினைவூட்டலாம். சிலர் அவர்கள் ஆரம்பித்ததையே மறந்திருக்க கூடும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா:

//அதற்க்கான படங்களை தேர்வு செய்து வெளியிடுவது[ is that Abu Ibrahim?] இன்னும் அருமை.//

சித்திரமும் சரித்திரமும் ஒருமித்தே வருடுவதால் அங்கிருந்தே பதியப்பட்டது, நானும் உங்களோடு அதனை ரசிக்கவும் செய்கிறேன் மிக அருமையே !

சொல்லியாத் தரனும் காந்தியை ஒரே கோட்டில் வரைந்ததும் இங்கே சித்திரம் வரையும் தூரிகைதானே !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்காவின் கருத்து சிந்தனையுடன் சிரிப்பையும் வரவைக்கிறது.

// அதிகம் பதிவு இல்லாத வலைப்பூக்கள் வைத்து நடத்துபவர்களுக்கு ' இப்படி மராமத்து செய்யாத தோப்பு மாதிரி" வைக்க வேண்டாம் என நினைவூட்டலாம். சிலர் அவர்கள் ஆரம்பித்ததையே மறந்திருக்க கூடும்.//

இப்புடியும் சொல்லலாம் "ஊர்லெ நாளு பேரு காரு வாங்குராகளேண்டு நாம ஒன்னு வாங்கிப்புட்டு அதெ சரிவர‌ ஓட்டாமெ/சர்வீஸ் பண்ணாமெ அப்படியே கார் செட்லெ மெலெ கவரு போட்டு மூடி நிக்க வச்சிட்டு கடைசியிலெ பாஸ்போர்ட் எடுத்து (விசாவுடன் தான்) வெளிநாட்டுக்கு போயிட்ட மாதிரி தானே?"

நறுமணமும் இல்லை, யாரும் பறிக்கவும் போவதில்லை, அந்தளவுக்கு அதில் எவ்வித வசீகரமும் இல்லை என்ற நிலையைக்கொண்ட பூக்கள் (வலைப்பூக்கள்) வேண்டும் தானா நமக்கு?

"தோப்பெ சரியா மராமத்தும் செய்யிறது இல்லெ, நல்ல வெலெக்கி யார்ட்டையும் விக்கிறதும் இல்லெண்டா எப்புடி"?


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

N.A.Shahul Hameed said...

இதே செய்தியை வேறு எங்கோ படித்த ஞாபகம். நம் கல்லூரியில் ஒரு யாஷிகா635 காமிரா இருந்தது. அது 16எமெம் மற்றும் 35 எமெம் பிலிம் போட்டு படம் எடுக்கலாம். அது அடிக்கடி பழுது ஆகிவிடும். அது உமறுத்தம்பியால் மட்டுமே சரி செய்யமுடியும். நானும் அவருக்கு தொந்தரவு தரக்கூடாது என்று பல முறை திருச்சி மற்றும் சென்னையில் எல்லாம் முயன்று பார்த்தேன் அவர்கள் முடியாது என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் உமறுதம்பி உடனே சரி செய்து கொடுப்பார். அதற்கு எந்த வித கூலியும் வாங்க மாட்டார். அந்த் காமிராவை இன்னும் என் தம்பி எம்.எம்.எச்.சலீம் வசம் கொடுத்துப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.

Meerashah Rafia said...

அல்லாஹு.. அரபி காரருக்கு கோபம் வந்துடுச்சா!?!? உம்மடியோ...நினைச்சாலே பயம்ம்ம்மா இருக்கு..
அப்பா.. உங்க நாட்டு அரபிங்களும் அப்படித்தானா? எங்க நாட்டு அரபிங்களும் அப்படித்தான்.. (உங்க நாடு-அமீரகம், எங்க நாடு-சவூதி).. ஆரம்ப பேச்சுல பெனால்டி கார்னர் முறையில் பேசிபுட்டு முடிக்கும்போது ஃபத்தல்(welcome) என்று சேம் சைட் கோல் போடுவாங்க..இது என்ன டிரிக்கோ தெரியலை. அப்பத்தான் அவர்களிடம், கொஞ்சம் சாந்தி,சமாதானம்,மனிதாபிமானம் என்ற இன்பில்ட் இசுலாம் அவர்களை அறியாமலே இன்றும் ஒட்டிகிட்டு வேலை செய்றது தெரியும்.

சொந்த நாட்டுலத்தான்-அதிகம் ஆண்டது முகலாய், ஆட்சி செய்தது பிரிட்டிஷ், ஆளும் கட்சி அமெரிக்க கொள்கை, ஆட்டிப்படைப்பது ஆர்ய வம்சம். மொத்தத்தில் நம் கொள்கைத்தான் என்ன என்று ரகசியமா இருக்கு..

அப்துல்மாலிக் said...

இது மாதிரி நிறைய சுவராஸியமான விடயங்கள் தெரிந்துக்கொள்ளலாம் 1975 லே வெளிநாடு (குறிப்பாக கல்ஃப்) வந்தவங்க மூலம்...

Yasir said...

தொடரட்டும் சாதனை நாயகனின் சாதனை சரித்திரம்....அருமையான..படிக்கபடிக்க தெவிட்டாத எழுத்து நடை...

sabeer.abushahruk said...

தொடரட்டும் சாதனை நாயகனின் சாதனை சரித்திரம்....அருமையான..படிக்கபடிக்க தெவிட்டாத எழுத்து நடை...

மீராஷா,

'இன்பில்ட் இஸ்லாம்' ரசித்தேன்

அபூ சுஹைமா said...

அமீரகக் காவல்துறையின் மீது எனக்கும் மதிப்பு உண்டு. காவல் நிலையத்தின் வரவேற்பரையில் "Human First" என்று எழுதியிருப்பர். குவைத் அப்படி அல்ல. பொதுவாகவே அரபியரில் அமீரகத்தினரே சிறந்தவர் என்பது என் கணிப்பு.

அதிரை என்.ஷஃபாத் said...

ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ முந்தைய பகுதியின் சுட்டியைக் கொடுத்தால், இந்த தொடரை இடைப்பட்ட பகுதியிலிருந்து படிக்கத் தொடங்கியவர்களுக்கு முந்தைய பகுதிகளையும் படிக்கும் ஆர்வம் வரும் இன்ஷா அல்லாஹ்!!

அதிரை என்.ஷஃபாத் said...

மன்னிக்கவும். முந்தைய பகுதிகளில் அதற்கான சுட்டிகள் கொடுக்க்பட்டிருக்கின்றன. இந்த ஒரு பகுதியில் மட்டும் தான் missing !! ..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் இணைய அறிஞர் அவர்கள் வாழ்வின் நடந்த நிறைய சூவரஸ்யமான நிகழ்வுகள் படிக்கும் போது ஒரு பரவசம்.

தொடருங்கள்.. இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு