Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2016 | , , , ,

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்.

தமிழக முதல்வர் மாண்புமிகு ஒ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு

தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனின் சில வேண்டுகோள்கள்.இவை எண்ணற்ற பலரின் இதயத்துடிப்பாகவும் இருக்கலாம்.  

முதலாவதாக, தங்களை ஆளாக்கிய அம்மையார் அவர்களை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் அமைச்சரவை அன்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

இரண்டாவதாக, எவ்வளவுதான் வேதனைகள் உங்களின் உள்ளத்தில் இருந்தாலும் அதே உள்ளத்தின் ஒரு ஓரத்திலாவது ஒரு மாநில முதல்வராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருப்பது பற்றி மகிழ்ச்சியும் குடிகொண்டிருப்பது மனித இயல்பு . இதற்கு நீங்களும் விதிவிலக்காகி இருக்க மாட்டீர்கள். 

ஆகவே, தமிழக  முதல்வராக  மூன்றாம் முறையாக பதவி ஏற்கும் உங்களைப் பாராட்டுகிறோம்; வாழ்த்துகிறோம்.

ஆனாலும் , அதே நேரம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறோம். இதற்கு முன் நீங்கள் முதல்வராக பதவி ஏற்ற சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இன்று நீங்கள் அந்தப் பதவியை ஏற்று இருப்பதிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

அரசியல் சட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற மட்டும் நீங்கள் இம்முறை முதல்வராகவில்லை. இந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு மக்களின் தேவைகளையும் உளப்பூர்வமாக தீர்த்துவைக்கும் பொறுப்பில் இந்த மக்களின் எதிர்காலம் உங்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணரவேண்டும்

கடந்த இரு முறைகள் நீங்கள் ஒரு கருவியாக மட்டுமே  இருந்தீர்கள். இந்த முறை நீங்கள் கருவியாக அல்ல ஒரு கருவாக ஆகி இருக்கிறீர்கள். 

கடந்த முறைகளில் நீங்கள் சாலையோரம் கட்டிவைக்கப்பட்ட சுமைதாங்கியாக மட்டும் வாய்மூடி இருந்தீர்கள். ஆனால் இப்போது மாநிலத்தின் சுமைகளே  உங்கள் தலையின் மீதுதான் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த  வேறுபாடுகளை நீங்கள் உணராதவர் அல்ல என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. 

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

நீங்கள் இன்று ஏற்றுக் கொண்டு இருக்கும் பொறுப்பு கிளிராட்டினத்தை வைத்து விளையாடும் குழந்தைத்தனமானது அல்ல. நெருப்பு வளையத்துக்குள் நீந்திக் கடக்கும் ஒரு அபாய விளையாட்டாகும். 

உங்களுக்கு முன் இன்று நீங்கள் அமர்ந்து இருக்கும் நாற்காலியில் அமர்ந்து இருந்தவர்கள் மனிதப் படைப்பில் சாதாரணமானவர்கள் அல்ல. 

மூதறிஞர் என்று புகழப்பட்ட இராஜாஜி அவர்கள் அமர்ந்து இருந்த- 

செயல்வீரர் ஓமந்தூரார் அமர்ந்து இருந்த- 

கர்மவீரர் காமராஜர் அமர்ந்து இருந்த- 

சட்டம் பயின்ற  பக்தவத்சலம் அமர்ந்து இருந்த- 

பேரறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்து இருந்த- 

கலைஞர் கருணாநிதி அவர்கள் அமர்ந்து  இருந்த – 

புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்கள் அமர்ந்து இருந்த – 

புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆகியோர்  அமர்ந்து இருந்த நாற்காலியாகும். 

மேலே குறிப்பிட்டு இருக்கிற முன்னாள் முதல்வர்கள் அனைவரும் பெற்றிருந்த தகுதிகளை நீங்களும் பெற்றிருந்த காரணத்தால்தான் நீங்களும் இந்தப் பதவியில் இன்று அமர்ந்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் சொன்னாலும் நீங்களே அதை மனதார ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். 

ஆனாலும், இன்று உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இந்த வாய்ப்பைக் கொண்டு நீங்களும் அந்த ஆளுமையும் ஆட்சித் திறனும் மக்கள் நேசமும் நெஞ்சுரமும் மிக்க முன்னாள் முதல்வர்களில் ஒருவராக உங்களையும் உருவாக்கிக் கொள்ள  முடியும். தமிழ் உலகம் உள்ளவரை எவ்வாறு காமராசர் பெயரும், இராஜாஜி  பெயரும் , அண்ணா பெயரும், கலைஞர் பெயரும், எம்ஜியார் பெயரும் , ஜெயலலிதா பெயரும் அழியாதோ – நிலைத்து நிற்குமோ அதே வரிசையில் உங்கள் பெயரையும் நிலைத்து நிற்கும்படிச் செய்துகொள்ளும் செயல்பாடு உங்களிடமிருந்துதான் இனி வெளிப்பட வேண்டும். 

மிகப் பழைய உதாரணங்களை விட்டுவிடலாம். 

கலைஞர் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானபோது திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதுபவர் எப்படி ஒரு மாநிலத்தின்  முதல்வராக செயலாற்ற முடியும் என்று கேட்டவர்கள் ஏராளமாக  இருந்தனர். இத்தனை ஆண்டுகள் ஆட்சி , வெற்றி, தோல்விகளுக்குப் பின்னர் கலைஞர் அவர்களை அரசியல் சாணக்கியர் என்று நாடே தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது. 

அதே போல் , மக்கள் சக்தியை மட்டுமே நம்பி எம்ஜியார் அவர்கள் ஆட்சிக்கு வந்த  போது இவருக்கு என்ன தெரியும் நடிகர்தானே ஒரு திரைப்படத்தை வெற்றியாகவும் இலாபகரமானதாகவும் வேண்டுமானால் இயக்க அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு நாட்டை ஆள இயலாது என்று கருத்துத் தெரிவித்த அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால், அவரும் சிறந்த ஆட்சியையும் நிர்வாகத்தையும் வாழ்நாள் சாதனைகளையும் செய்தார் என்று காலம் கணக்குப் போட்டுக் காட்டுகிறது. 

ஜெயலலிதா போன்ற  எட்டு மொழிகளை சரளமாகப் பேசத் தெரிந்த பெண்மணி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது கூட ஏளனமாகவும் இழிவாகவும் கேலியாகவும் பேசினார்கள். என்ன தெரியும் இவருக்கு என்று எள்ளி நகையாடினார்கள். ஆனால் என்ன நடந்தது நாட்டிலே என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

இப்போது நீங்கள் முதல்வராக ஆகி இருக்கிறீர்கள். உங்களை எடுப்பார் கைப்பிள்ளை, சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை, ரப்பர் ஸ்டாம்பு என்றெல்லாம் இன்று வர்ணிப்பவர்கள் உண்டு என்பதை நீங்களும் அறிந்தே இருப்பீர்கள்.

உங்களைப் பற்றி,  நீங்கள் முழு அதிகாரம் பெற்ற முதல்வராக பதவி ஏற்றுள்ள  இந்த நிலையில் உங்களின் திறமைகளையும் குறைத்து மதிப்பிடுபவர்கள் இருக்கவே செய்வார்கள். ஒருவகையில் அது இயல்பானதும் பழக்கப்பட்டதும்தான்.  ஆனால் உங்களுடைய திறமைகளை நிருபிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. 

யாருடைய கைப்பாவையாகவும் மாறாமல் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளான சமநீதி சமூகம், இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, காவிரி, முல்லைப் பெரியார், மாநில சுயாட்சி போன்ற  திராவிட  இயக்கங்களின் உயிர் மூச்சான கொள்கைகளை தொடர்ந்து கட்டிக் காக்கும் விதத்தில் எவ்வித மிரட்டலுக்கும் வேறு யாருடைய சொந்த இலாபத்துக்கும் நீங்கள் ஆளாகாமல்,  அஞ்சாமல் நேர்மையாக நீதியாக ஆட்சி செய்தால் மக்கள் சக்தி உங்கள் பக்கம் தொடர்ந்து நிற்கும்.
உங்களின் தலைவி முன்னெடுத்துவைத்த மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உங்களின் தொடர் முடிவுகள் உங்களையும் ஒரு சிறந்த  முதல்வராக இந்த தமிழ்நாட்டும் உலகமும் ஏற்றுக்கொள்ளும். 

இளமைக்காலம் தொட்டு நீங்கள் அரசியலில் ஏற்று நடத்திய பல்வேறு பொறுப்புக்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டவைகளும் நிதியமைச்சராகவும் அவை முன்னவராகவும் பணியாற்றி நீங்கள் பெற்றிருக்கும் அனுபவங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். 

உங்களுடைய தன்னம்பிக்கையும் திறமைகளை வெளிக்கொணர்ந்து செயல்படும் பாங்கும் வெளிப்படத் தொடங்கும் போது உங்களைப் பற்றி இந்த ஆரம்ப காலத்தில்  வெளிவந்து கொண்டிருக்கும் விமர்சனங்கள் அடையாளம் இன்றி அடிபட்டுப் போகும். 

மீண்டும் வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு அருள்வானாக! 

இபுராஹிம் அன்சாரி

7 Responses So Far:

sabeer.abushahruk said...

அவசியமான கடிதம்,காக்கா

sheikdawoodmohamedfarook said...

இந்த கடிதத்தை நகல் எடுத்து O.P.அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

Ebrahim Ansari said...

கடிதம் திரு. ஒ பி எஸ் அவர்களிடம் தரப்பட்டுவிட்டது. நண்பர் மனோகரனுக்கு நன்றி. ஆனால் படித்தாரா என்று தெரியவில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கடிதம் திரு. ஒ பி எஸ் அவர்களிடம் தரப்பட்டுவிட்டது//

அருமையாக எழுதப்பட்ட கடிதம்... அவரும் வாசிக்கனும்... இதேபோல் மக்களை நேசிக்கனும் !

crown said...

ஓ.மாஸ்டர் பீஸ் இந்த கடிதம்.

அப்துல்மாலிக் said...

அருமை காக்கா, தேவையான நேரத்துலே எழுதப்பட்டது

Unknown said...

அருமை சரியான தருனத்தில் இக்கடிதம் எலுதப்பட்டதுக்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு