Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2016 | ,

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று ஆர் எஸ் எஸ் பிதாமகன்களால் முன்மொழியப்பட்டு மக்களின் முன் நிறுத்தப்பட்ட நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடி, அன்று அடையாளப் படுத்தப்பட்டது எவ்வாறு தெரியுமா? அவருக்கு வழங்கப்பட்ட அடைமொழி என்ன தெரியுமா? “வளர்ச்சியின் நாயகன்” என்றுதான் அறிமுகம் செய்தார்கள்; அடைமொழி தந்தார்கள். 

சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் வளராமல் சவலைப் பிள்ளையாய் தவழக்கூட சக்தி இழந்து தரையில் கிடக்கும் இந்தியாவுக்கு காம்ப்ளான் கொடுத்து தூக்கி நிறுத்தி பல்வேறு துறைகளிலும் வளரவைக்கும் ஒரு வராது வந்த மாமணி என்று வர்ணிக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி. 

அதற்கேற்றபடி அவரை முன்னிலைப் படுத்தி ஊளையிட்ட ஊடகங்கள். கார்பரேட் கம்பெனிகளின் காசுகளைப் பயன்படுத்தி கணக்கின்றி அள்ளிவிடப்பட்ட விளக்கமான விளம்பரப் பதாகைகள், மக்களின் மனங்களில் ஒரு அவதார புருஷராகவே கட்டமைக்கப்பட்ட கோயபல்ஸ் பிரசாரங்கள் ஆகிய யாவும் எதிர்பாராத வெற்றியை அவருக்குக் கொடுத்து அவரே எதிர்பாராத வெற்றியை அவருக்குக் கொடுத்து ஆட்சியையும் அமைக்க வைத்தது.

இப்போது தனது ஆட்சியின் காலத்தில் இரண்டரை ஆண்டுகள் என்கிற பாதி தூரத்தைக் கடந்துவிட்ட மோடியையும் அவரது ஆட்சியையும் நிற்கவைத்து அளவெடுத்து அளந்து பார்ப்போமானால்நா ம் காண்பது சொல்லாதை செய்ததும் செய்யாததை சொல்வதும், வார்த்தை அலங்காரங்களும் , வகையற்ற திட்டங்களும், திட்டமிடாத செயல்பாடுகளும், பொறுப்பற்ற தன்மைகளும் என்பன போன்ற எதிர்மறையான செயல்பாடுகள் அவரது முதுகில் தோல்வியின் மூட்டைகளை தூக்கி அடுக்கிவைத்துக் கொண்டே போகின்றன. 

இந்த ஆட்சியையும் பிரதமரையும் 

ஆப்பசைத்த குரங்கு என்று நாம் கொச்சைப் படுத்த விரும்பவில்லை; அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலம் என்று விமர்சிக்க விரும்பவில்லை ; செய்வதறியா சிறுபிள்ளை என்று சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவ்வாறெல்லாம் சொன்னால் என்ன தவறு என்றே கேட்கவைக்கிறது மோடியின் செயல்பாடுகள். 

இப்போது முதலில் இருந்து வருவோம். இவர் ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் அறீக்கை என்று ஒன்றைக் கொடுத்தார். அதிலே மணலைக் கயிறாகத் திரிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொன்னார். 

குறிப்பாக சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். அந்த சிலவற்றிலும் சிறிதளவாவது இந்த இரண்டரை வருட ஆட்சியில் நிறைவேறி இருக்கிறதா என்ற சிந்தனையை மக்கள் முன் வைப்போம். 

முதலாவதாக மக்கள் நலத்திட்டங்கள் என்று அவர்கள் ஆசைகாட்டிய மற்ற எல்லாவற்றையும் இப்போதைக்கு விட்டுவிடுவோம் அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் சொன்ன முதல் இரண்டு வெத்துவேட்டு விஷயங்களை மட்டுமாவது எடுத்துக் கொள்வோம். 

The Party reiterates its stand to explore all possibilities within framework of Constitution to facilitate construction of Ram Temple in Ayodhya. 

Reiterating its stand on Article 370 and discussing with all stakeholders for abrogation of the Article.

அதாவது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீரில் ஆர்டிகிள் 370 ஆவது பிரிவை நீக்குவது பற்றி விவாதிப்பது. ஆகிய இவ்விரண்டு விஷயங்கள் பற்றிக் கூட இந்த அரசு அச்சத்தின் காரணமாக ஒன்றும் செய்யவில்லை. இது ஒன்றும் நமக்கு வருத்தம் தரும் விஷயங்கள் அல்ல.. ஆனாலும்நா ம் சொல்ல வருவது என்னவென்றால் இந்த இரண்டு விஷயங்களும் பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது மக்களின் மனங்களை மதரீதியில் பிரிக்கவே தவிர மோடியல்ல மோடியின் தாத்தாவே வந்தாலும் அவைகள் நிறைவேறாது; நிறைவேற்ற முடியாது .

நிறைவேற்ற இயலாதவை ஏன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன என்றால் அரசியல் பித்தலாட்டத்தின் அரிச்சுவடி என்று ஒன்று எழுதப்படவேண்டும் Communal Polarization என்கிற ஒன்றை ஏற்படுத்தி மக்களைப் பிரிக்கவேண்டுமல்லவா அதனால்தான். 

தொலையட்டும். அடுத்ததைப் பார்ப்போம் !...

அடுத்தது என்று ஒரு மேலோட்டமாக ஒரு துறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. ஒரு பெரிய பட்டியலே போட வேண்டி இருக்கிறது. கீழ்க்காணும் பட்டியல் “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் “ என்ற முறையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

இந்தப் பட்டியலில் காணப்படுபவை யாவும் கவர்ச்சிகரமான மோடியின் வாக்குறுதிகள். ஆனால் அவற்றுள் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் மருந்துக்குக் கூட தொட்டுக்கூட பார்க்கப்படவில்லை என்பதுதான் வெட்கக்கேட்டிலும் வெட்கக்கேடான உண்மை.

பட்டியலைப் பாருங்கள் . பிஜேபியின் தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் நேரத்தில் மேடைகளிலும் முழங்கப்பட்டதைத்தவிர கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏதாவது செயல்வடிவம் பெற்று இருக்கிறதா என்ற கோணத்தில் இவற்றை எண்ணிப்பாருங்கள்.

இதுவே அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட புளுகு மூட்டையின்ப ட்டியல் : 

விலைவாசிகள் ஒரே ஸ்திரத்தன்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ள அதற்காக தனி நிதி ஒதுக்கீடு ( Price Stabilization Fund ). 

நாடு முழுதுக்கும் பொதுவான ஒற்றை விவசாய விளைபொருள்களின் சந்தையை அமைப்பது ( National Agriculture Market. ).

குறிப்பிட்ட பயிர்களையும் காய்கறிகளையும் உற்பத்தி மற்றும் நுகரும் பகுதிகளுக்கு தேவையான ஆதரவுகளை விரிவுபடுத்துவது. 

பாரம்பரியம் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களை விவசாயக்கூலிகளாக மட்டும் பயன்படுத்தாமல் சுற்றுலா போன்ற புதிய துறைகள் மற்றும் விவசாய துணைத்தொழில்களிலும் ஈடுபடுத்துவது 

குடியிருப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ( upgradation of infrastructure and housing)

இளைஞர்களின் சுய வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் அதற்காக பயிற்சியளித்து நாடெங்கும் தேவையான இடங்களில் அவர்களை நியமித்தல் 

பொதுவான விழிப்புணர்வின் மூலம் இலஞ்ச லாவண்யங்களை ஒழித்தல், இணைய தள மேம்பாடு மூலம் அரசு நிர்வாகத்தை நடத்தல் , வரிவிதிக்கும் முறைகளை எளிமைப்படுத்தி உயர்ந்தபட்ச பலனடைதல் (Eliminating corruption through public awareness, e-governance, rationalization and simplification of tax regime.)

மத்திய மாநில அரசுகள் தங்களின் கரங்களை இணைத்துப் பிணைத்துக்கொண்டு, ஒட்டு மொத்த தேச நலனுக்கு பாடுபடுதல் 

பிரதமரும் மாநில முதல்வர்களும் வேறுபாடு இல்லாமல் சம அந்தஸ்தில் கலந்து ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் டீம் இந்தியா என்ற அமைப்பை நிறுவுதல்

மாநிலங்களுக்கு கட்டுப்பாடற்ற நிதி சுய நிதி அமைப்புகளை ஏற்படுத்துவதுடன் மாநிலங்களுக்கிடையேயான கருத்துமாறுபாடுகளை தீர்ப்பதற்காக பிராந்திய குழுக்களை அமைத்தல் ( fiscal autonomy of states)

மாநில அரசுகளை உள்நாட்டு வர்த்தக காரியங்களுடன் அயல் நாட்டு வர்த்தகங்கள் மட்டும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இணைத்துக் கொள்வது 

சிறிய மாநிலங்களை அமைப்பது 

நாட்டின் நதிகள் அனைத்தையும் தூய்மைப் படுத்த மக்களின் பங்களிப்புடன் திட்டங்களை மேற்கொள்வது (massive Clean Rivers Programme)

அண்டை நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதுடன் அதே நேரம் தேவைப் பட்டால் நாட்டின் இறையாண்மையைக் காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 

தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளுக்காக ஒரு திட்டமிடப்பட்டமுறைகளை மேற்கொள்வதுடன் ஏற்கனவே காங்கிரஸ் அரசால் தீவிரவாதிகள் என்று பிடிக்கப்பட்டவர்கள் மீது விருப்பு வெறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது. (anti-terror mechanism) 

புலனாய்வுத்துறை அமைப்புகள் அரசியல் அமைப்புகளின் தலையீடுகளில் இருந்து அப்பாற்படுத்துவது (intelligence agencies from political intervention and interference)

பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடுகளை வலிமைப்படுத்தி வரவேற்பது (FDI in selected defence industries.)

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா? மேலே கண்டவை பொதுவாக அறிவிக்கப்பட்டவை. ஆனால் சில அறிவிப்புக்கள் மக்களைக் கவரும் விதத்தில் அரிதாரம் பூசி அறிவிக்கப்பட்டன. அவ்வாறு ஜோடனை செய்து முகங்களில் வண்ணக்கலவை அடித்து அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் சில இதோ !

விவசாயிகள் தங்களின் விளைபொருள்களின் உற்பத்திக்காக செய்யும் செலவுகளை கணக்கிட்டு அதிலிருந்து ஐம்பது சதவீதம் அவர்கள் இலாபம் அடையும் வகையில் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார்.

வீழ்ந்து கொண்டிருக்கும் டாலருக்கு எதிரான இந்தியாவின் பணமதிப்பை தூக்கி நிறுத்தி இந்தியாவின் பணமதிப்பைக் கூட்டுவேன் என்றார். 

இலங்கைப் பிரச்னையில் தமிழ் மீனவர்களின் நலன் காக்கப்படும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மீனவர்களை இலங்கைப் படை கைது செய்யாமல் காக்கப்படும் என்றார். 

வீழ்ந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெயின் விலையை அனுசரித்து மிக மலிவான விலையில் எரிபொருள் விலைகள் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவித்தார். 

ஆனால் நடந்தவைகள் என்ன ? 

“ நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறன் இன்றி வஞ்சனை சொல்வாரடி அவர் வாய்ச்சொல்லில் வீரரடி” 

என்ற பாரதியாரின் பாடல் வரிகளின் இலக்கணத்துக்கு இலக்கியமாகவே மோடி அரசின் செயல்பாடுகள் ஆட்சிக்கு வரும் முன் அளித்த வாக்குறுதிகளுக்கு முழுக்க முழுக்க மாறாகவே அமைந்தன. 

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா! மார்பு துடிக்குதடி என்று மோடியைப் பார்த்து நாம் பாடினாலும் தப்பில்லை. 

முதலாவதாக திட்டக் கமிஷன் ஊற்றி மூடப்பட்டது அதற்கு பதிலாக ஏதோ ஒரு வாயில் நுழையாத நிதி ஆயுக் என்ற இழவுப் பெயர் சூட்டப்பட்டது. 

இரயில்வே பட்ஜெட்டை அறிவிப்பதற்கு முன்பே ரயில்வே கட்டணங்களை 10% உயர்த்தி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர வழிவகை செய்தது மோடி இழைத்த மன்னிக்க இயலாத குற்றம். பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூன்று ரூபாயாக மதிப்பில்லாமல் இருந்தன அவற்றை பத்து ரூபாயாக உயர்த்தி மதிப்பைக் கூட்டினார் என்றுதான் சொல்ல முடியும். 

‘பிரிமியம் ரயில் திட்டம்’ என்ற ஒன்றை அறிவித்து அதன் விளைவாய் பிரிமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க, நெருங்க அதில் பயணிக்க டிக்கட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப (கூட்ட நெரிசலுக்கேற்ப) ரயில்வே கட்டணத்தை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகும் திட்டம் பொதுமக்களின் அடிமடியில் கைவைக்கும் மோடி வேலை. பிளாக் மார்கெட்டில் டிக்கெட் விற்பவர்களுக்கும் இந்த அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்றே மோடி அறிவிக்காமல் அறிவித்துள்ளார். 

தொழிலாளர் நலனுக்காக வாய் கிழிய வாக்குறுதி அளித்த மோடி அரசு, தொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்கள் தொழிற்சாலை சட்டங்கள் கடைப்பிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்றும் அறிவித்து அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக தொழிலாளருக்கு எதிரான முதலாளிகளின் கொட்டத்தை அடக்க வழி இல்லாமல் அடைத்தது மோடி அரசு. 

பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கும் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர் நல சட்டங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்க மோடி அரசு எடுத்துள்ள முடிவும், அதன் பின்னால் இருக்கும் மேக் இன் இந்தியா திட்டமும் விளம்பரத்துக்கும் மேடையில் முழங்கவும் உதவியதே தவிர நாட்டின் தொழிலாளர்களின் நலத்தை உயர்த்த முனையவில்லை. 

“ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே! “என்று கிராமங்களில் சொல்வார்கள். தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 7- லட்சம் கோடி ரூபாயை எடுத்து ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கப் போவதாக அறிவித்து இருக்கும் மோடி அரசைப் பற்றி நினைக்கும்போது இதுவே நினைவுக்கு வருகிறது. தொழிலாளர்கள் தங்களது உழைப்பின் ஒரு பகுதியாக சேர்க்கும் வைப்பு நிதியை வள்ளல் போல் வாரி கொடுப்பதன் மூலம் பெருமளவிலான ஊழல் பணத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாரிச் சுருட்டப் போகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது ஒரு தோல்வியில் முடியும் திட்டம் என்பதில் சந்தேகமே கிடையாது. 

உணவு மான்யத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய சாந்தகுமார் கமிஷன் என்ற ஒரு கமிஷனை அமைத்து ஏறக்குறைய நாற்பது சதவீதம் உணவு மானியம் குறைக்கபட்டிருப்பதும், ஏழைகளின் எரிபொருளான மண்ணெண்ணையைக் கூட இந்த மோடி புயல் விட்டு வைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். 

அளவற்ற இணையதள சேவை ரூ 98/= ஆக இருந்தது. அதை ரூ. 246/= ஆக உயர்த்திக் காட்டினார்.

அலைபேசி அழைப்புகளுக்கு , நிமிடத்துக்கு 30 பைசா, பிச்சைக் காசாக இருந்ததை, உயர்த்தி நிமிடத்துக்கு ரூ .1/= ஆக ஆக்கிகாட்டினார் இந்த ஏழைப் பங்காளன். 

வளர்ச்சியின் நாயகன் நரேந்திர மோடியின் ஆட்சியில்தான், வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் இரு நூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவி திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

“தேசிய மருத்துவ விலை நிர்ணய அமைப்பின்” விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை மோடி அரசு பறித்துவிட்டதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை மிக கடுமையாக 14 மடங்காக உயர்ந்துள்ளது.

புற்று நோய்க்கான ‘கியாவக்’ என்ற மருந்தின் விலை 8,500 ரூபாயிலிருந்து 1,08,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இச்செயல் உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும். உயர் அழுத்த ரத்தக்கொதிப்புக்கான ‘பிளேவிக்ஸ்’ மாத்திரை 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்ந் துள்ளது. வெறிநாய்க்கடிக்கான மருந்தின் விலை 2,670 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெறிநாய்கள் ஆட்சியில் இந்த விலை உயர்வு இயல்புதான். 

மருந்து தயாரிக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதியாக தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த 108 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு மோடி அரசால் நீக்கப்பட்டது.

நாட்டில்தான் விவசாயம் செய்து பிழைக்க இயலவில்லை. கடலுக்குச் சென்று மீன் பிடித்தாவது வாழலாம் என்ற மீனவர்களின் நினைப்பிலும் மண்ணை அள்ளிப் போட்ட அரசு மோடி அரசு, மீனவர்களின் வயிற்றில் அடிக்க மீனாகுமாரி என்ற ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிஷன் நீலப் புரட்சி என்று ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி 12 மைல்களுக்கு அப்பால் சென்று ஆழ்கடல் மீன் பிடிக்க இயலாது. ஆழகடலில் வேறு யார் மீன் பிடிப்பார்கள் என்று கேட்டால் மோடியின் பெரியப்பா மகன்களான பெரிய முதலாளி முதலைகளும் சித்தப்பா மகன்களான பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

கச்சா எண்ணெய் விலை பாரல் 119 டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 67 ஆக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை 30 டாலராக இறங்கிய போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 60/= க்குத் தந்துகொண்டு இருக்கிறார். 

மோடியே உனது பருப்பு வேகாது என்றார்கள். பார்த்தார். அன்று கிலோ ரூ. 70/= க்கு விற்ற பருப்பு இப்போ என்ன விலை தெரியுமா? ரூ. 150/= இப்போ என் பருப்பு வேகுதா? என்று நம்மைப் பார்த்து கேட்கிறார். 

சேவை வரி 12.36% ஆக இரத்த சோகை பிடித்து இருந்ததாம் அதை 14.5% ஆக்கி அதன் ஹீமொகுலோபினைக் கூட்டினார்.

இயல்புக்கும் இயற்கை விதிகளுக்கும் அரசியல் சட்ட நடை முறைகளுக்கும் மாறாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற மூன்று முறை அதை பயன்படுத்திய அரசுதான் இந்த மோடி அரசு. கடைசியில் அந்த திட்டத்தை வாபஸ் பெற்று மூக்குடைபட்டது இந்த மோடி அரசு. 

உற்பத்தி வரி மோடியின் ஆட்சியில் 12.36% தெரியுமா? ஆனால் அப்போ வெறும் 10% தான். 

அட! சொல்ல மறந்துட்டேனே! ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அப்போ ரூ 58.50/= தான் இப்போ மோடியின் இரண்டரை ஆண்டு ஆட்சியில் எகிறி எகிறி ரூ. 68.50/= ஆக ஆகிவிட்டது. இந்தியாவின் பணமதிப்பு பாரெங்கும் பட்டொளிவீசிப் பறக்கிறது. 

ரூ. 100 கோடி அளவுக்கு எரிவாயு மானியத்தை வேண்டாமென்று விட்டுக் கொடுக்க வைத்தார் இதில் வெட்கக்கேடு இதை விளம்பரப்படுத்துவதுதான். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பரம் செய்த வகையில் ரூ. 250 கோடி செலவானது என்று கணக்குகள் இந்தக் கண்மூடித்தனமான ஆட்சியைக் காட்டிக் கொடுக்கின்றன.

தூய்மை பாரத விளம்பரங்களுக்காக ரூ. 250 கோடிகளை செலவழிக்கச் செய்த காரணத்தால் தெருக்கூட்டிய கூலியாட்களுக்கு ரூ 35 கோடிவரை கொடுக்க அரசிடம் பணம் இல்லாமல் போனது கேவலத்திலும் கேவலம்.

தாய்ச்சபையாம் ஆர் எஸ் எஸ்ஸை மறக்க முடியாமல் , அவர்களுடைய ஆலோசனைக்குழு நடத்துகிற கிசான் தொலைக்காட்சிக்கு ரூ. 100 கோடி மட்டுமே கொடுத்துதவி கொல்லைப்புற வழியாக தீயசக்திகளுக்கு உதவ இயன்றது. 

விவசாயிகளுக்கான மானியங்களை கண்டுகொள்ளாமல் ஆட்டையைப் போட்டது மோடி அரசு. 

30% என்று இருந்த பெரு நிறுவனங்கள் மீதான வரி 25% என்று குறைக்கப்பட்டது மோடி ஆட்சியில்.

யோகாதினத்துக்காக ரூ. 500 கோடியும் ஹரியானாவில் மாநிலப்பள்ளிகளில் யோகாவை பயிற்றுவிப்பதற்காக வருடக்கட்டணமாக மாட்சிமை தாங்கிய பதஞ்சலி. பாபா ராம்தேவ் அவர்களுக்கு ரூ. 700 கோடியை மனமாரக் கொடுத்து நாட்டின் கடைத்தேங்காயை எடுத்து வழிப்போக்கர்களுக்கு வைத்துக் கொள் என்று கொடுத்தது மோடி அரசு. 

அவசியமில்லாத பேச ஆள் இல்லாத சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்காக, அவசியமான ஆரம்பக் கல்வி பயிற்றுவிப்பதற்கு நாட்டில் போதிய பணமில்லாத காரணத்தால் வருடாந்திர பட்ஜெட்டில் 20% த்தை குறைத்து குற்றமிழைத்தது மோடி அரசு. 

கொட்டிக் குவிக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ரூ. 64,000 கோடிவரை வரிச்சலுகை அளித்த மோடிக்கு ரூ 15,000 கோடிவரை விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்ய இயலவில்லை. 

மாணவர்களின் கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு ஏழை மாணவர்களை மானம் கெட்டவர்களாகவும் கடன்காரர்களாகவும் சித்தரித்து கோடிகளை கொண்டுபோன லலித் மோடிக்கும் விஜய் மல்லையாவுக்கும் பட்டுக் கம்பளம் விரித்து பறந்து போக பாதை காட்டியது மோடி அரசு.

2002 ஆம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக ஆனபோது அதானி குழுமத்தின் வணிக மதிப்புகள் இன்றைய தேதியில் இருபது மடங்கு ஆக ஆகியிருக்கிறது. சர்வம் மோடி மயம். யாமிருக்க பயமேன் என்ற மோடியின் ஜி பூம் பா தான் காரணம். இதன் பலிகடாக்கள் ஏழை மக்களே.

ஆஸ்திரேலியாவில் G 20 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மோடிஜி அங்கே குவின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கி தருவதற்கும், அங்கே வெட்டி எடுக்கப் படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்காக ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதிகளை அந்த மாநில அரசை கொண்டே ஏற்பாடு செய்து தருவதையும் அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளாகவும் நிகழ்ச்சியாகவும் மேற்கொண்டார்.

அச்சுரங்கத்தை வாங்குவதற்காக “பாரத ஸ்டேட் வங்கி” அதானிக்கு 6200 கோடி ரூபாயை கடனாக கொடுப்பதாக அறிவித்தது. இத்தனை பெரிய தொகையை அதுவும் வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்காக வேறு எந்த முதலாளிக்கும் எந்த இந்திய வங்கியும் கொடுத்ததில்லை. ஆக அந்த வகையில் பாரதநாட்டின் பிரதமர் ஒரு தனிப்பட்ட அதானி நிறுவனத்துக்கு நிதி பெற்றுத்தருகிற ஒரு தரகராகவும் அவர்களின் பொருளை உலகெங்கும் சந்தைப் படுத்தும் விற்பனைப் பிரதிநிதியாகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

சீர்மிகு திறமையான இந்தியா திட்டத்துக்கு ரூ. 200 கோடியை விளம்பரத்துக்காக மட்டும் ஒதுக்கிவிட்டு, இளைஞர்களின் தலையில் கைவைப்பதற்காக, பாரத மாதாக்கு ஜே! போடாத வலுவான காரணத்துக்காக இளைஞர்களின் கல்வி உதவித்தொகையான ரூ. 500 கோடியை ஒரே வெட்டில் வெட்டியது மோடி அரசு. . 

ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை கண்ணியமிகு அதானி அவர்களுக்கு ஒதுக்கி ஒப்பந்தப் புள்ளி போட்டதில் 22,000 கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட மோடி அரசு காரணமானது. 

மேலும் ரூ 9,000 கோடியுடன் மல்லையாஜி நாட்டைவிட்டுப் போனது பெரிய விஷயமே அல்ல. காரணம் கணக்கிட்டால் இது ஒவ்வொரு இந்தியருக்கும் வெறும் ரூ. 75 மட்டுமே மல்லையாஜியின் செயல் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று வயிற்றெரிச்சல் உண்டாக்கும் வகையில் வாய்திறந்து பேசியது மோடி அரசு.

பதவிக்கு வந்த 2014 முதல் ஆகஸ்டு 2016 வரை மோடிஜியாகிய இந்த ஏழைத்தாயின் மைந்தன் ஆகிய மோடி வெறும் ரூ. 11000000000 மட்டுமே செலவழித்து இருக்கிறார். இந்தியாவில் இருந்ததைவிட ஏர் இந்தியாவில் பறந்த நாட்களே பதவிக்காலத்தில் அதிகம். 

கும்பி வேகுது! குடல் கருகுது! உனக்கு குளுகுளு ஊட்டி ஒரு கேடா? என்று அன்றொரு ஆட்சியாளரைப் பார்த்து அண்ணா கேட்டார். மயிலாடும் பாறையிலே நான் ஆடிருக்கேன்! மதுரை மேனாட்டு வாசலிலே மெடலு வாங்கிருக்கேன்! . நா போகாத ஊருமில்லே! நான் பார்க்காத ஆளுமில்லே! என்று பாடிக் கொண்டு குத்தாட்டம் போடத் தகுதி படைத்தவர்தான் மோடி. 

‘எனது அரசு ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரு அடி முன்னேறுவார்கள்’ என்று தேர்தலுக்கு முன் முழங்கினார். இன்று இரண்டரை ஆண்டுகளில் மோடி அரசு எத்தனையோ அடிகளை முன்னெடுத்து வைத்துள்ளது. மோடி அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாலும் பெருமுதலாளிகள் அடிகளாக அல்ல பல அடி பாய்ச்சலாக முன்னேறுகிறார்கள் என்பதுதான் உண்மைக்கும் மேலான உண்மை. 

உழைக்கும் மக்களுக்கு எதிராக சுரண்டல் பொருளாதரத்தை நோக்கி , உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மோடி மற்றும் ஜேட்லியின் பொருளாதார கொள்கைக்கு எதிராக ஓரணியில் உழைக்கும் மக்கள் திரள்வதை தடுக்கவும் அவ்வப்போது கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல் நலனுக்காக கொண்டுவரப்படும் ஒவ்வொரு சட்டத்தின் போதும், அச்சட்டத்திற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை திசை திருப்பவும் “இந்துத்துவா பாசிசம்” மோடி அரசால் அவரது ஆசியுடன் அவரது அடிவருடிகளால் கட்டமைக்கப்படுகிறது.

சுரண்டலுக்கு அடிப்படையாக உள்ள உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டு விடாமல் தடுக்கத்தான் “பகவத் கீதையை தேசிய நூலாக்குவது”, “மாட்டுக்கறி உண்ணத்தடை”, “அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரத்தை கிருமி நாசினியாக தெளிக்கச் சொல்வது”, “ சம்ஸ்கிருத வாரம்” “ பள்ளிகளில் கட்டாய யோகா” ஆகியவை மோடி அரசால் முன்னிலைப் படுத்தப் படுகின்றன. இவையாவும் அரசு நடத்தத்தெரியாமல் சிதைந்து கொண்டிருக்கும் மோடியின் அவல முகத்தை மறைக்கப் போடப்படும் திரைகளே அன்றி வேறில்லை. 

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுத் துறையினர், சிறு, குறு தொழிற் சாலைகளை வைத்திருக்கும் தொழில் முனைவோர், வணிகர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், மீனவர்கள், மதச்சிறு பான்மையினர் என அனைவரின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பலிகொடுத்து கொண்டே இருப்பவர்தான் இந்தியா நாட்டின் பிரதமர் மோடி என்பதும் அவர் காலடி எடுத்து வைக்கும் அனைத்துத் துறைகளிலும் தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நடுநிலையில் நின்று நாம் எழுதும் தீர்ப்பு. 

நரேந்திர மோடிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இப்போது சந்தி சிரித்துக் கொண்டு இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாததாக ஆக்கிய விவகாரத்தை இந்த ஆய்வில் நாம் கையில் எடுக்கவில்லை. காரணம் அது ஒரு நீண்ட ஆய்வு இன்னொரு வாய்ப்பில் அதையும் நாம் எடுத்துப் பேசுவோம்; இன்று ராகுல் காந்தி, செல்லாத நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தொடர்பு கொண்ட ஒரு பெரிய ஊழல் இருக்கிறது என்று சொன்ன விபரங்கள் உட்பட நாம் இறைவன் நாடினால் அலசுவோம். 

இபுரஹிம் அன்சாரி M.Com.,
மதச்சாயம் பூசி மறைக்கப்ப்ட்ட வரலாறு - நூல் ஆசிரியர்

2 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

மோடி அரசின் தில்லு முள்ளுகளை தெளிவாக சொல்லும் ஆக்கம்.இதை அச்சிட்டு நாடு காடெங்கும் பறப்ப வேண்டும்.

Unknown said...

எழுத்தறிிஞரின் பழுத்த சிந்தனையின் பயனுள்ள ஆக்கம். இன்னும் தொடருமாமே! பொறுத்திருந்து பார்ப்போம்; படிப்போம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு