Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பதினாறாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை. 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2014 | , , , , , ,

கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக் காட்சிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடகங்களிலும் பிஜேபி அணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி இருந்தாலும் அது பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் பரவலாக எதிர் பார்க்கப்பட்ட அல்லது அரசியல் வல்லுனர்களால் சொல்லப்பட்டது என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அமையாது ; இழுபறியாக இருக்கும்; மாநிலக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்; பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் ; மூன்றாவது அணி அமையும்; என்றெல்லாம் பல்வேறுவகையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன; வெளியாயின.


ஆனால் அனைவரின் கணிப்பையும் தோல்வி அடையச் செய்து பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 330 க்கு மேலும் பிஜேபி மட்டும் தனித்து அறுதிப் பெரும்பான்மை எண்ணாகிய 272 இடங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பத்தாண்டு காலமாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு பதவி விலகி பிஜேபி அரசு அமைய இருக்கிறது. முதலாவதாக வெற்றி பெற்ற கட்சிகளுக்கு நமது நல வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் சிறந்த ஆட்சிக்கான எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தத் தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததைப் பற்றி நாம் ஒரு கருத்து சொல்லப் போனால் 2014 தேர்தல் முடிவுகள்! இருபது ஆண்டுகால காங்கிரசின் கையாலாகாத்தனம்! சங் பரிவாரங்களின் நூறாண்டுகால சாதுரியம் ! என்றே சொல்வோம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படி ஒரு பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட வேண்டு மென்றும் தனது சித்தாந்தங்களை செயல் படுத்திட வேண்டுமென்றும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் செய்த பகீரத பிரயத்தனம் இன்று ஊடகங்களின் ஒட்டு மொத்த உதவியால் - காங்கிரஸ் கட்சியின் மோசமான தேர்தல் நிலைப் பாடுகளால் இன்று பிஜேபியால் வென்று எடுக்கபப்ட்டு இருக்கிறது. 

வெளிப்படையாகப் பார்க்கும் போது பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்திய மதவெறிக் கொள்கைகள் வென்றது போலத் தோன்றினாலும், பத்தாண்டுகள் ஆண்டுவிட்ட ஒரு கட்சியை மாற்றிப் பார்க்க மக்களின் மனம் இயல்பாகவே விரும்பி இருப்பதும் ஒரு காரணம் என்பதை தள்ளிவிட முடியாது. ஒரு வகையில் பிஜேபியின் வெற்றிக்கு காங்கிரசின் மோசமான ஆட்சியையும் முழுமையான காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஏற்கவே செய்வார்கள். காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைச்சலையே அரசியல் ரீதியில் பிஜேபி அறுவடை செய்து இருக்கிறது. “ In fact, the election results are the expression of anger of people against Congress and their disastrous policies “ என்றார் இடதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா. 

தேர்தல் பரப்புரை காலங்களில் இன்று பிஜேபியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மீது பல புகார்கள் கூறப்பட்டன. பல எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஐயோ! இவரா! வேண்டாம் என்று பலரும் மக்களை நோக்கி வேண்டுகோள்கள் விடுத்தனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி இன்று நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது. ஆனால் இப்படி நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலேயே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் ஆண்ட குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள், படுகொலைகள், சொத்துச் சூறையாடல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் மறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஒருவேளை இப்போது நரேந்திர மோடி இப்போது ஏற்க இருக்கும் புதிய பிரதமர் பொறுப்பின் மூலம் அந்தக் கலங்கங்களைக் களையும் விதத்தில் செயலாற்றினால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட ஒரு வாய்ப்புள்ளது. தரப்பட்டுள்ள பொறுப்பான பதவிக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புவோம். 

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் இன்னொரு விஷயம் என்னவென்றால் 1984 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஆட்சியமைத்த கட்சிகள் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல மாநில உதிரிக் கட்சிகளின் ஆதரவிலும் அமைச்சரவையின் உள்ளிருந்தும் வெளியிலில் இருந்தும் ஆதரவு பெற்றே தந்து ஆட்சியை நடத்தி வந்தது. இதன் மூலம் ஆளும் கட்சி , தான் நினைப்பதை செயல்படுத்த இயலாத நிலைகள் பலமுறை ஏற்பட்டன. அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மிரட்டல்களுக்கும் ஆளாகி, அமைச்சரவையில் அவர்கள் கேட்கும் துறைகளையும் கொடுத்தே தீர வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டன. அது மட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்த கட்சிகள் ஊழல் முதலிய தவறுகளைச் செய்யும் பொது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமலும் கூட்டணி தர்மங்கள் அரசின் கைகளைக் கட்டிப் போட்டன. 

ஆனால், இந்த முறை பிஜேபிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவைக் கொடுத்து இருக்கிறார்கள். தங்களது கூட்டணியில் இருக்கும் எவரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுதான் ஆளவேண்டுமென்ற அவசியமில்லாமல் சுதந்திரமான அரசை அமைக்க மக்கள் பிஜேபிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான நிலை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எந்த நல்ல காரியத்தையும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டை போட்டன என்று பிஜேபியும் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. 

இந்த முறையும் ஆட்சியமைக்கப் பற்றாக்குறையான பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பிஜெபிக்குக் கிடைக்குமென்றும் , அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பலவித பேரங்களை பேசி சொந்த நலனுக்காகவும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வகை ஏற்படுத்திக் கொள்ள தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் இருந்தும் அரசியல் வாதிகள் நினைத்து இருந்தனர். ஆனால் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் பிஜேபி மெஜாரிட்டி பெற்று இருக்கிறது. இவ்விதம் ஒரு பெரும்பான்மையை பிஜேபி பெறாவிட்டால் செல்வி ஜெயலலிதா போன்றோரின் பேரங்களுக்குப் பணிய வேண்டி இருக்கும்; டாக்டர் அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டி இருக்கும். இப்போது இந்த நிர்ப்பந்தங்கள்- நெருக்கடிகள் - மிரட்டல்கள் எதுவும் தேவை இல்லை என்பது பிஜேபிக்கு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சாகும் இல்லாவிட்டால் வாஜ்பாய் காலம் போல அவதிப் பட்டு இருக்க நேரிட்டு இருக்கும். இப்படிப்பட்ட நிலைமைகளிலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் கணிப்புகளைச் செய்த பல்வேறு வகையினர் கர்நாடகாவில் பிஜேபிக்கு பெரும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்று வாதிட்டனர். காரணம் அண்மையில்தான் அங்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இப்போதும் காங்கிரசே அதிகம் வெல்லும் என்று ஆரூடம் கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆரூடம் பொய்யானது. அங்கு பிஜேபி பதினேழு இடங்களில் வென்றது பிஜேபிக்கு இன்ப அதிர்ச்சியாகும். 

அதே போல் பிஜேபி உடைய பெரும்பான்மை பலத்தை உ. பி மற்றும் பீகாரில் அது பெறப்போகும் இடங்களின் எண்ணிக்கைகளின் அளவு உருவாக்கும் என்ற கணிப்பின்படி இவ்விரு மாநிலங்களிலும் மிகப்பெரும் வெற்றியை பிஜேபி வென்றெடுத்துள்ளது. பீகாரைப் பொறுத்தவரை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாக் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே இடங்களைத்தவிர பாக்கியை பாரதீய ஜனதா அள்ளிச் சென்றது. இந்த இரு மாநிலங்களில் மட்டுமே பிஜேபிக்கு கிட்டத்தட்ட நூறு இடங்கள் கிடைத்துள்ளன. 

அதே போல் உ பி போன்ற பெரிய மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியும் தனது இடங்களை பிஜேபியிடம் இழந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. உ பி யில் எண்பது இடங்களில் காங்கிரஸ் பெற்றது இரண்டே இடங்கள் மட்டுமே . அவையும் சோனியாவும் ராகுல் காந்தியும் பெற்ற இடங்கள் மட்டுமே. 

தலை நகர் டில்லியில் அண்மையில் ஒரு பெரும் எழுச்சி நடத்தியதாக அறியப்பட்டு நாற்பத்தி ஐந்து நாட்கள் மாநிலத்தை ஆட்சியையும் செய்த ஆம் ஆத்மிக் கட்சி , நாடெங்கும் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. டில்லியில் சட்டமன்றத்தில் வென்ற ஆம் ஆத்மிக் கட்சியால் ஒரு பாராளுமன்ற இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவில் இவர்கள் முன்னணி வகிப்பது நான்கே இடங்கள்தான்.

நாடெங்கும் இப்படி பிஜேபி அலையோ அல்லது மோடி அலையோ வீசி இருந்தாலும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிஜேபி குறிப்பிட்ட வெற்றியை ஈட்ட இயலவில்லை. அங்கெல்லாம் அலைகளின் ஒலி கேட்கவில்லை. அந்த அலை எங்கே போனது என்றும் தெரியவில்லை. 

அதேபோல் இடதுசாரிகளும் தங்களின் வழக்கமான தளம் உள்ள மாநிலங்களில் போதுமான அளவு வெற்றி பெற இயலவில்லை. இதற்குக் காரணம் , இடது சாரிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையுமே எதிர்த்தார்கள். இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்கும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருக்கிறதா என்றால் இல்லை. இதை உணராமல் இரண்டு மலைகளுடன் மோதி தங்களின் வாக்குகளைப் பிரித்து, பிஜேபி வெற்றி பெற உதவினார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எந்த சித்தாந்தங்களையும் விவாதித்து முன்னிலைபடுத்தி வாகளைக்கவில்லை. இதுவும் ஊடகங்கள் ஏற்படுத்திய ஆட்டைக் கழுதையாக்கிய விந்தை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பு சட்டமன்றத் தேர்தலில் செய்த அதே தவறை திமுக மீண்டும் செய்து ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாத நிலைக்குத் தன்னைத்தானே தள்ளிக் கொண்டது. கடைசி நேரத்தில் காங்கிரசை கழற்றி விட்டதற்கான விலையை திமுக கொடுத்து இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு மனப்பூர்வமாக திமுகவினர் வேலை செய்யவில்லை ; வாக்களிக்கவில்லை என்கிற செய்திகளையும் கேட்கிறபோது அவர்களுக்கு இந்த தண்டனை தேவையானதே என்றே கருத வேண்டி இருக்கிறது. 

அதே நேரம் திமுகவின் இந்த தோல்வி, அதன் சூரியனின் அஸ்தமனமல்ல. இது போல பல வெற்றி தோல்விகளை சந்தித்தக் கட்சி; பெரும் தொண்டர் பலம் உள்ள கட்சி; மீண்டும் எழுந்து நின்று உதிக்கும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள கட்சி. சரியாக நடந்து கொண்டால் வரும் சட்டமன்றத்தில் பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கட்சிதான் திமுக. 

நன்கு ஆய்ந்து பார்த்தோமானால் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே உதவி இருக்கிறது. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பலவாறு சிதறி அதிமுகவை வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற வழிவகுத்து இருக்கிறது. அத்துடன் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவும் அதைப் பயன்படுத்தி, பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்ததையும் வெட்கமின்றி தலைமை தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டார். நாமும் கண்ணால் பார்த்தோம். இந்த வெற்றியின் பின்னால் பணபலம் இருந்ததை மனசாட்சியுள்ளோரால் மறுக்க இயலாது. 

அத்துடன் பிஜேபி தலைமையில் தேமுதிக போன்ற அதிமுக எதிர்ப்புக் கட்சிகள் தமிழருவி மணியன் போன்ற அரசியல் முகவர்கள் மூலம் பேரம் பேசப்பட்டு தனி அணியாக உருவாக்கப்பட்டு, அதில் அடிப்படையில் வெட்டுப் பழி குத்துப்பழியாக அதுவரை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பாமகவும் இணைக்கப்பட்டது. இவர்களுடன் வைகோவுடைய மதிமுகவும் இணைந்து நின்றது. இந்த அணி அமைக்கப்பட்டதன் நோக்கமே அதிமுக மற்றும் பிஜேபியின் இரகசிய உடன்பாட்டின் ஒரு அங்கம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படி ஒரு அணியை அணையாக அமைத்து அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் திமுகவுக்கு விழாமல் தடுப்பதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதை நம்பவும் இடமிருக்கிறது.

இருந்தாலும், தமிழக அரசியலில் சில தேவையற்ற தொங்கு சதைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கின்றன. அடிப்படை எதுவுமில்லாமல் அரசியல் கட்சி தொடங்கி, குறிக்கோளே இல்லாமல் கட்சி நடத்தி, கூத்து அடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் கட்சி, வேரடி மண்ணோடு வீழ்த்தப் பட்டு இருப்பது தமிழக அரசியலில் ஒரு மகிழத் தக்க விஷயம். அதே போல் ஒரு திராவிடக்கட்சியாக பரிணமித்து ஒரு இந்துத்வா கட்சியுடன் கூட்டணிவைத்த மதிமுகவும் அடையாளம் தெரியாமல் வீழ்த்தப்பட்டு இருப்பதும் ஒரு நல்ல விஷயமாகவே தோன்றுகிறது. இப்படிப் பட்டியலில் உள்ள தேவையற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் இல்லாமல் ஆக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் இருக்கும் சிலரையும் வரும் தேர்தல்களில் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.

எப்படியானாலும் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்றவர்களின் வெர்றியை அங்கீகரிக்கும் மரபுக்கு ஏற்ப நாமும் அவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற ஆவலில் ஒரு மாற்றத்தை வேண்டி இவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் மத நம்பிக்கைகளை மட்டும் வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கும் முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் புதிய அரசு ஈடுபடவேண்டும். அதற்கு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற இருவரும் ஒத்துழைத்து இந்த மாநிலத்துக்கான மின்சாரம், நீர்-ஆதாரம், மீனவர்கள் பிரச்னைகள், இலங்கை தமிழர், கச்சதீவு உட்பட்ட பிரச்னைகளில் ஒன்றுபட்டு மக்கள் நலமுடன் வாழ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். 

வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்டுத்தான் பா.ஜ.க.பிரதம வேட்பாளரை முன்னிறுத்தினார்கள். இந்த வளர்ச்சியின் நாயகனின் முன் அவரது புதிய அரசுக்கு பல சவால்கள் காத்து இருக்கின்றன. புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் யாவை என்று தனிப்பதிவாக எழுதுவோம். இப்போது இந்திய தேர்தல் நடைமுறை அங்கீகரித்த வெற்றியை நாமும் ஏற்போம். அன்பும் அமைதியும் நிலவும் இந்த நாட்டில் தொடர்ந்து அமைதியும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் நிலவச் செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

21 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

இது உண்மையில் முஸ்லிம்களுக்கு மிக மிக சோதனையான கால கட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.எனவே,நாம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்து,நாம் நம் ஈமானை காப்பாற்றிக் கொள்ள,நமக்கிடையே பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிம்களிடம் நல்ல உறவைப் பேணி,ஒற்றுமை பேண வேண்டும்.இந்து மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களோடும் நல்ல உறவை பேணி,நம் மார்க்கத்தை இனிய முறையில் சொல்ல வேண்டும்.ஊர் தோறும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நடத்தப் பட்டு,இதுதான் இஸ்லாம் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லி,இஸ்லாம் மூலமாக யாருக்கும் எவ்வித அழிவோ,துர்பாக்கியமோ கிடையாது,அமைதியும் வெற்றியும்தான் கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நய வஞ்சக ஊடகங்களின் ஒட்டுமொத்த ஒப்பாரியே பிரதானமாக வெற்றிக்கு காரணம் எனலாம்.

இறைவன் விதிப்படியே அமைந்த ஆட்சி எவருக்கும் துரோகம் இழைக்காத ஆட்சியாய் அமையட்டுமாக!

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

///ஆனால், இந்த முறை பிஜேபிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவைக் கொடுத்து இருக்கிறார்கள். ///

கொடுத்தார்களா அல்லது வேறு வழியில் பெற்றார்களா என்பது எனக்கு இன்னும் சந்தேகமே

அம்பானி போன்ற பல முதலைகள் பிஜேபியுடன் இருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய முடியும்

ஓப்பனாக சொல்லப்போனால் தேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்க முடியும்

அப்புரம் என்ன தேர்தல் கத்திரிக்காவெல்லாம் அதெல்லாம் ஒரு கண்துடைப்பாகவே இருக்கும்

ஏமாற்றுகின்றவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை எத்தனை லட்சக்கனக்கான கேமராக்கள் வைத்தாலும் அவர்கள் நினைத்தால் இருப்பவர்கள் அணைவருக்கும் கண்ணில் மண்ணை தூவ முடியும்
எல்லாமே எலக்ட்ரானிக் பொருட்கள்தானே நாம் சொல்வதை கேட்கும் பொருட்கள்தானே

எலக்ட்ரானிக் ஒட்டுப்போடும் மிஷினில் தேர்தல் கமிஷனில் உள்ளவர்கள் நினைத்தால் முன் கூட்டியே முறைகேடுகள் செய்ய முடியும் வாய்ப்புகள் இருக்கும்போது எத்தனை கேமராக்கள் வைத்தும் என்ன பிரையோஜனம் அது பற்றி முழுதாக நம்ப முடியவில்லை

காரணம் யாருக்கும் இதுவரையும் இப்படி அருதி பெருமான்மை கிடைத்ததில்லை என்பதை சிந்திக்க கடைமை பட்டுள்ளோம்

சுத்தமாக திமுக வாஷ் அவுட் என்பதில் எனக்கு சந்தேகமே வருகின்றது
ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்தின் ஓட்டுக்களும், கிருஸ்துவ சமுதாயத்தின் ஓட்டுக்களும், பாரம்பரிய திமுக ஓட்டுக்களும் என்ன ஆச்சு
என் கணக்குப்படி பார்க்கப்போனால் திமுக கனிசமான இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்

இதில் என்னமோ சூழ்ச்சிகள் நடதப்பட்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன்
போன தடவையே இந்த சந்தேகம் எனக்கு வந்தது
அது இந்த தடவை வலுப்பெறுகின்றது

adiraimansoor said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//ஆனால் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியமில்லாமல்போனது.....//இதுவே P.J.P. கு கிடைத்த பெரும் பலம்.அப்படி இல்லாமல் Multi-Parti அரசு அமைக்கும் நிலை உருவானால்,தி.மு.கதலைவர்முனா.கானா.வும் தன்பேரன் பேத்திகளுக்கும் வளமான மந்திரி பதவிகேட்டும் ,மேலும் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை யெல்லாம் லேத்துபட்டறையில்
போடமுதல்வரை வற்புறுத்த .அடிக்கடிடெல்லிக்கு போகும் நிலைஉண்டாகும்.இந்த தள்ளாதவயதில்அவருக்கு தள்ளுவண்டியில் போய் விமானம்ஏறி-இறங்குவதும் முடியாத காரியம் .எனவே சௌகரியத்தை முன்னிட்டு டெல்லியியே இன்னொரு வீடு செட்அப் செய்யும்நிலை உண்டாகும் ஆனால்அதிலிருந்தும் பல இன்னல்கள் தொல்லைகள் தொடரலாம். இந்தக்காலத்தில் ஒரு வீட்டுக்காரானுக்கே ஒன்பதாயிரம் தொல்லைகள் வரும் போது மூனு வீட்டுக்கு எத்தனை தொல்லை என்பதைசொல்லியா தெரிய வேண்டும்.
எனவே Local திராவிட கட்சிகளோடுதி.மு.க கூட்டு சேர்ந்து வெற்றி பெறாமல்போனது முனா.கானா.முன்பிறவியில் செய்த பாக்கியமே!

Ebrahim Ansari said...

காங்கிரசின் கையாலாகாததனம். சாதனைகளை மக்களிடையே வெளிப்படுத்த சக்தியற்ற - திட்டமற்ற- பிரசார யுக்திகள். ஊமை பிரதமர்- ஆட்டிப் படைக்கும் அதிகார வர்க்கம்- நவீன கணினி யுகத்தை பயன்படுத்தாத தன்மைகள் ஆகியவை காங்கிரசின் தோல்விக்குக் காரணம்.

ராகுல் காந்தி யை ஒப்பிடும்போது நரேந்திர மோடி சிறந்த மேடைப் பேச்சாளர். கவரும் விதத்தில் பேசி மக்களை மயக்கினார் என்பது மறுக்க இயலாது. அத்துடன் பிஜேபியின் திட்டமிட்ட செயல்பாடு - திரைமறைவு தந்திரங்கள்- பேரங்கள்.

ஊடகத்துறைக்கு பத்தாயிரம் கோடி செலவு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களை இதற்காக வாடகைக்கு எடுத்தார்கள் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் மோடியின் ஆடைகளைக் கூட வடிவமைத்தார்கள் என்று சொல்கிறார்கள்.

இதெல்லாம் காங்கிரசாலும் செய்திருக்க இயலாதா? இயலும் ஆனால் இயலாமை- முயலாமை.

முயலாமை காரணமாக ஆமை முயலை முந்திவிட்டது.

இனி முஸ்லிம் இயக்கங்களின் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. முதலாவதாக ஒற்றுமை வேண்டும். இந்த ஒரு அம்சம் இல்லாவிட்டால் இந்தியாவில் சமுதாயத்தின் எதி ர்காலம் கேள்விக்குறி. அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.

இஸ்லாம் காட்டும் நெறிமுறைகளின்படி முஸ்லிம்கள் வாழத்தொடங்கி தொழுகை பேணுதல் ஆகியவற்றை கடைப் பிடித்து துஆ செய்தால்தான் அல்லாஹ்வும் மனமிரங்குவான். கிரிக்கெட் போட்டிகள் நடத்திக் கொண்டு தொழோகை நேரங்களில் தொழாமல் இருந்தால் அல்லாஹ்வும் தனது கோபத்தை வெளிப்படுத்தவே செய்வான்.

அல்லாஹ்வின் கோபம் நம் மீது நரேந்திர மோடி எனும் கருவியால் கூட ஏவப்படலாம். சமுதாயமே ஜாக்கிரதை! உன்னைத் திருத்திக் கொள்!

Ebrahim Ansari said...

பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்றுள்ள மொத்த ஒட்டுக் களின் சதவீதம்.

அ.தி.மு.க: 44.3%
தி.மு.க :23.6%
பிஜேபி :5.5%
தே மு தி க : 5.1%
பா.ம.க :4.4%
காங்கிரஸ் : 4.3%
ம.தி.மு.க : 3.5%
வி.சி :1.5%
புதிய தமிழகம் : 0.6%
ம. ம. க : 0.6%
சி. பி. எம் : 0.5%
சி. பி. ஐ :0.5%
முஸ்லிம் லீக் : 0.5%
ஆம் ஆத்மி :0.5%
பி. எஸ். பி : 0.4%


======

அ.தி.மு.க: 44.3% பெற்ற இடங்கள் 37
தி.மு.க :23.6% பெற்ற இடங்கள் 0

21 சதவீத அதிக ஒட்டு திமுகவை இடுப் பொடித்துவிட்டது.

அதிரை தேனருவி said...

'திராவிட திராவிடருக்கே' என்றமுழக்கதுடன்தொடங்கப்பட்ட தி.மு.க.பல பரினாம வளர்ச்சியடைந்து ரத்தம்சிந்தியுழைத்த தியாகிகளை உதைத்து வெளியே தள்ளி சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் சோபனம் பாடிசாமரம் வீசியது.அதன் அறிகுறிதான்இந்ததோல்வி. ''அரசு அன்று கொல்லும்; நீதி நின்று கொல்லும்'' என்ற மூதுரை பொய்த்து போவதில்லை! தி.மு.க.1967லில் மாபெரும் வெற்றி பெற்றபோதுவெற்றி மமதையில்கருணாநிதி எதைஎதையோ பேசினார்.அதைபற்றி ஒரு நிருபர் கண்ணதாசனிடம் கேட்டபோது' கண்ணதாசன்சொன்னாய் '' வென்றவன் சொன்னதெல்லாம் வேதமல்லால்வேறுஎன்ன?''என்றார்.வென்றவன் குதிக்க வேண்டாம்! தோற்றவன் துவள வேண்டாம்! செல்வமும் வறுமையும் விபச்சாரிபோல! ஒருவரிடமே அது என்றும் நிலைத்து இருப்பதில்லை!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...



மொத்த இடங்கள் – 543

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- 2

அ.தி.மு.க. – 37

பாரதிய ஜனதா – 282

காங்கிரஸ் – 44

திரிணாமுல் காங்கிரஸ் – 34

பிஜு ஜனதாதளம் – 20

சிவசேனா – 18

தெலுங்கு தேசம் – 16

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி – 11

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் – 9

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 9

சமாஜ்வாடி கட்சி – 5

லோக் ஜனசக்தி – 6

தேசியவாத காங்கிரஸ் – 6

ராஷ்ட்ரிய ஜனதாதளம் – 4

ஆம் ஆத்மி – 4

சிரோமணி அகாலிதளம் – 4

ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி – 3

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி- 3

மதச்சார்பற்ற ஜனதா தளம் -2

ஐக்கிய ஜனதா தளம் -2

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 2

அப்னா தள் – 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 1

பாட்டாளி மக்கள் கட்சி -1

என். ஆர். காங்கிரஸ்- 1

கேரளா காங்கிரஸ் (எம்)- 1

நாகா மக்கள் முன்னணி-1

சிக்கிம் ஜனநாயக முன்னணி- 1

தேசிய மக்கள் கட்சி -1

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி -1

மஜ்லிஸ்ட் கட்சி -1

ஸ்வபிமானி பக்ஷா – 1

சுயேட்சைகள் – 3

Ebrahim Ansari said...

பத்து மாநிலங்களில் ஒரே ஒரு இடத்தைக் கூட காங்கிரஸ் பெறவில்லை.

அதைவிடப் பரிதாபம்

ஒரு முஸ்லிம் எம்பி கூட தேர்ந்தெடுக்கப்படாத மாநிலங்கள்
உபி , ம பி ,ராஜஸ்தான், சத்தீஸ்கர் , மகராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், உத்தர்கண்ட், ஒரிஸ்ஸா, சீமாந்திரா, டெல்லி

இவற்றுள் உ பி தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்திய மாநிலம். எண்பது உறுப்பினர்களுள் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை என்கிற நிலை மிகவும் பரிதாபமானது. இந்த சமுதாயம் தன்னை சுய பரிசோதனை செய்துகொண்டு திருந்திவாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. இனியாவது புத்தி வந்தால் சரி.

sheikdawoodmohamedfarook said...

யா அல்லாஹ்!இந்தியாவின் புதிய பிரதமர் திரு.மோடி அவர்கள் நாட்டுக்கும் நாட்டுமக்கள் அனைவர்க்கும் ஜாதி மதம் மற்றும் இதர பேதங்கள் ஏதும் பாராமல் அவர் எல்லோர்க்கும் நல்லதையே செய்யும் நல்லெண்ணத்தை அவர் நெஞ்சில் விதைப்பாயாக!ஆமீன்.
இதையே நாங்கள் உன்னிடம் கையேந்தி இறைஞ்சுகிறோம்.எங்கள் இறைஞ்சலை ஏற்று அருள்வாயாக

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர்!

உங்களுக்காக முகநூலில் முகமது முகைதீன் அவர்களின்பதிவிலிருந்து

==========================================================
இந்தியாவில் நடக்கும் மின்னணு வாக்கு பதிவு ஓர் ஏமாற்றுவேலை அதற்கு ஆதாரம் http://indiaevm.org

அமெரிக்கா தீர்மானிக்கிறவங்கதான் இங்க பிரதமர் ஆவாங்கன்னு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொன்னது உண்மையா போச்சு .அதனாலதான் என்னவோ டுபாகூர் evm மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின் மூலம் மோடியை வெற்றிபெற வைத்துவிட்டார்கள் .

அமெரிக்க என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் அவர்களின் தேர்தலின்போது மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்தவில்லை ஆனால் அவர்களின் அடிவருடிகளாக இருக்கும் இந்தியாவில் மின்னணு வாக்குபதிவை நடத்த வைகிறார்கள் . அதற்கு ஆதாரம் .http://indiaevm.org
=================================

தேடிப்பாருங்கள் ஏதாவது கிடைத்தால் பகிருங்கள்.

Ebrahim Ansari said...

கேட்டுப் பாருங்கள்.
சென்னை மக்கா மசூதி இமாம் மவுலானா மன்சூர் காசிமி அவர்களின் தேர்தல் முடிவுகள் பற்றிய உரை.

https://www.facebook.com/photo.php?v=673105672726786

sabeer.abushahruk said...

வலுவான நிலையில் மோடி.... இஸ்லாமியர்களுக்குப் பிரச்னைகள் கண்டிப்பாகக் காத்திருக்கிறது!

adiraimansoor said...

இஸ்லாமியர்கள் கூறு கூறாக பிரிந்து என்னத்தை சாத்திதார்கள்
இனியாவது எல்லா விருப்பு வெறுப்புகளை களைந்துவிட்டு எல்லா கட்சியையும் களைத்துவிட்டு ஒரே பேனரில் வாருங்கள் நமக்கு வர் இருக்கும் ஆபத்தையாவது ஒற்றுமையுடன் எதிர் கொள்வோம் இனியும் நமக்குள் ஒற்றுமை வராவிடில் நாம் நம் உரிமைகளையும் உடமைகளையும் நிறைய இலக்க நேரிடும் அல்லாஹ் நம்மிடையே ஒற்றுமையை கொடுத்து
நம் பலத்தை அதிகரிக்க வைத்து எதிகளின் திட்டத்தை முறியடித்து நமக்கு வெற்றியை தருவானாக ஆமீன்

Aboobakkar, Can. said...

10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட குறைகளை BJP தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டது.ஆனால் அவைகள் நிறைவேறும் பட்சத்தில் இந்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆட்சி கொண்டுவரும் பட்சத்தில் இந்தியா உலகநாடுகளிடையே கடும் எதிர்ப்பையும் பொருளாதார நெருக்கடியையும் சந்திக்க நேரிடும் .
முதலில் நாடு தழுவிய முஸ்லிம் அமைப்புகளின் தலைமைகள் மாற்றப்படவேண்டும் அவற்றின் பாகுபாடு கொள்கைகளும் மாறவேண்டும் .
இனிமேல் தமிழ் நாடுபற்றி பார்ப்போம் ..........

இந்தியாவில் முஸ்லிம் MP கள் அதிகம் வரவேண்டும் என்று கூறும் அமைப்புகள் மயிலாடு துறையில் ஹைதர் அலி யை ஆதரிக்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டதும் கடைசி நேரத்தில் அ தி மு க வின் ஆதரவை TNTJ விளக்கி கொண்டதும் 'த மு மு க' செல்வி ஜெயாவுடம் கூட்டு வைத்து இரண்டு MLA களை பெற்றுவிட்டு ராஜ்ய சபைக்கு கனிமொழிக்கு வாக்களித்தது. காங்கரஸ் இல்லாத தி மு க வின் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டு வைத்தது தேர்தல் நேரத்தில் மதுரை அழகிரியின் கட்சி பூசல் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் . இவர்களின் படுதோல்விக்கு காரணம் .தேர்தல் முடிந்த உடனே கலைஞர் தேர்தல் கமிசனை சாடும்போதே தெரியும் தி மு க வின் தோல்விகள் உறுதி என்று .

அதிரை தேனருவி said...
This comment has been removed by the author.
Yasir said...

ஓட்டிங் மெசினோட தில்லு முல்லோ ஓட்டளித்தவர்கள் தீர்போ....எதுவாக இருந்தாலும் .......உங்களுக்குள் ஓற்றுமை இல்லாவிட்டால் என் சொல் கேளாவிட்டால் உங்கள் எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவேன் என்ன இறைவனின் வாக்குதான் உண்மையாகி இருக்கின்றது....படைத்தவனுக்கு மட்டும் பயந்தால் போதும்....படைப்பினங்களுக்கு பயப்படுவது இஸ்லாமியனுக்கு அழகல்ல...அல்லாஹ் கரீம்....நல்லதையே நினைப்போம்

adiraimansoor said...

காக்கா மிக தெளிவான சான்றுகள் இதிலிருந்தே தெரிகின்றது பித்தலாட்ட பேர்வழிகளின் இன்வேசன் எப்படி என்று எதிர்கட்சிகள் வாய்மூடி நிற்கும் அவலம் ஏனோ

Unknown said...

அல்லாஹ்வின் நாட்டம் நிறைவேறியிருக்கிறது. என்ற சிந்தனையோடு நாம் இருப்போம்..பலரின் துஆ வீண்போகாது என்பது நிச்சயம். முஸ்லிம்களுக்கு இதுதான் நிம்மதியான ஆட்சி என்று அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தால் யார் என்ன செய்யமுடியும்?.

பலர் முஸ்லிம்ளை பயமுறுத்தும் வகையிலேயே சமூகத் தளங்களில் ஸ்டேட்டஸ் இடுகிறார்கள் இது ஏன்? அல்லலஹ்வின் பாதுகாவல் நமக்கு நிச்சயம் உண்டு. என்பதை மறந்த கருத்துக்களை மறப்போம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு