நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மகளெனப்படுவள்... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மார்ச் 09, 2016 | , ,


மகளெனப்படுபவள்..
தாயோடு சேர்ந்து
தந்தையை வெறுப்பேற்றுபவள்

அவனது ஆடைகளின் நிறத்தேர்வை
ஆங்கில உச்சரிப்பைக்
கேலிசெய்து மகிழ்பவள்

மகனோடு எடுக்கும் செல்ஃபியைக்
கெடுக்க திட்டமிடுபவள்

கடைசி வரை...
முகம் பார்க்கும் கண்ணாடியை
ஊறுகாய் ஜாடியை
ஹார்லிக்ஸ் பாட்டியலை
உடைத்தது அவன்தானென
குடும்ப உறுப்பினர்களை
நம்பவைப்பவள்

அமேசானிலிருந்து
உள்ளூர் சூப்பர் மார்கெட் வரை
லிஸ்ட் கொடுத்து
திகீர் கிளப்பியும்
திருப்தியடையாமல்
அவித்த பணங்கிழங்கை
விடியற்காலையில் கேட்டு
தந்தைப் பாசத்துக்கு
டெஸ்ட் வைப்பவள்

ஒரு சோப்ளாங்கித் தகப்பனை
நாக்குதள்ளவைத்து
எப்போது ஹாஸ்டலுக்குப்
போவாலென
சிந்திக்க வைப்பவள்

விடுமுறை முடிந்து
இருள் பிரியா ஒரு காலையில்
பேருந்திலேற்றி கையசைத்துத்
திரும்பியவனை
வீட்டுக்குள் நுழைந்ததும்
கவிந்திருக்கும் வெறுமையை
விரட்ட முடியாது
கட்டிலில் குப்புறப் படுத்து
குலுங்கிக் குலுங்கி
கண்ணீர் விடவைப்பவளே

அவளே...
அந்தச் செல்ல ராட்சசியே
மகளெனப்படுபவள் !

நன்றி : ஆனந்த விகடன்
பரிந்துரை : சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

5 Responses So Far:

Ebrahim Ansari சொன்னது…

ஆரம்ப வரிகளில் லயித்துப் போனேன். இடைப்பட்ட வரிகளில் என்னை இழந்தேன். நிறைவு வரிகளில் உடைந்து போனேன்.

நிழல் போல் தோன்றிய நிஜம். பகிர்தலுக்கு நன்றி தம்பி .

Adirai Ahmad சொன்னது…

நல்ல மகளுக்கு எடுத்துக்காட்டு, ஒரு ஷஹ்னாஸ் போதாதா? சென்னையிலிருந்து காரில் ஒன்றாகப் பயணித்த அந்தச் சில மணி நேரங்களில் நான் நினைத்தது: 'சபீர் பாக்கியசாலி'! Even in an adverse atmosphere, she maintains her Islamic identity!

இது ஒரு கவிதையா? இது உங்களுடையதன்று. இருப்பினும், எவனோ ஒரு sadist எழுதியைத் தெரிவு செய்து பதிவிடச் செய்தது, என்னவோபோல் இருக்கிறது!

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய அஹ்மது காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அந்தப் பயணத்தின் நிறைவில் என் மகள் சொன்னது,"இது வரை சென்ற அதிரை/சென்னை, சென்னை/அதிரை பயணங்களில் ஒரு நிமிடம்கூட தூங்காதது இந்தப் பயணம்தான். நீங்களும் ஜமீல் மாமாவும் அஹ்மது மாமாவும் எத்தனை intellectualஆக உரையாடுகிறீர்கள்!" என்பதாகும்.

எனக்கும் அந்தப் பயணமும் தங்களோடு ஹோட்டலில் ஒரே அறையில் தங்கி உரையாடியதும் மறவாது.

anyway,

இலக்கணப் பேரரசரே,

இந்தக் கவிதையில் இழையோடும் வஞ்சப்புகழ்ச்சியணியைக் கவனிக்கத் தவறியதால்தான் sadism என்று விமரிசிக்கத் தோன்றுகிறதோ!

இது பிடிக்கிறதா என்று பாருங்கள்:

"நல்லார்க்கேன் வாப்பா"

பிறப்பதற்கு முன்பிருந்தே
என்னைப்
பிறிந்திருந்ததில்லை நீ

உன்
அம்மா வயிற்றைத் தடவி
உன்னை உணர்ந்து
உற்சாகமான காலங்கள் அவை

அணல்பறக்கும்
அரபு தேசத்தில்
உற்றார் உறவினர் என
ஒருத்தர்க்கூட உடனில்லாத
ஒற்றைத் தம்பதியான எமக்கு
உன் பிறப்பு
ஓர் அருட்கொடை

கைகளில் தவழ்ந்த
கற்கண்டு உன்னை
கண்களால் பருகி
களிப்புற்றிருந்தேன்

நீ
புரண்டு படுத்தது
முரண்டு பிடித்தது
தரையில் தவழ்ந்தது
தடையில் விழுந்தது
என
உன் ஒவ்வொரு
வளர்ச்சி மாற்றத்தையும்
உண்ணிப்பாகக் கவனிப்பேன்
உள்ளம் பூரிப்பேன்

எழுந்து நடக்க முயன்று நீ
விழுந்து கிடக்க
என்
ஆட்காட்டி விரல் பிடித்து
அழகு நடை பயில
அக்கணம்
அண்ணாந்து பார்க்கும்
உன் அழகு முக
வாய் பூக்கும் பூக்கள்
பூவனத்தையும் மிஞ்சும்
நீ பார்க்கும் பார்வை
நெஞ்சை நிறைக்கும்

என் கைகளிலும்
தோளிலும் தலையிலும்
நெஞ்சிலும் வயிற்றின் மேலும்
சில சமயயம்
ஊஞ்சலென கால்களிலும்
நீ
என்னைத் தொட்டுக்கொண்டே
வளர்ந்து வந்தாய்

கண்ணுக்கு மட்டுமல்ல
கைக்கும் எட்டும் தூரத்திலேயே
என் மகள் நீ
இருந்து வந்தாய்

இளமையை வளர்த்தும்
முதுமையைத் தேய்த்தும்
காலம் ஓடியது

உனக்கென ஒரு
கனவை விதைத்து
அதை மெய்ப்படுத்த
கடினமாய் உழைத்து
கண்துஞ்சாது
மெய்வருத்தம் பாராது
படித்து
இன்றோ
மருத்துவ மாணவியாக பல
மைல்களுக்கு அப்பால்
ஒற்றையாய் நீ

படிப்பை நீ கவனிக்க
உன்னைக் கவனிக்க
உடனில்லையே நான் என்ற
உள்ளத்து வலிக்கு
உன்னிடமிருந்து
உன் தந்தை எதிர்ப்பார்க்கும்
ஒரே மருந்து:

"நான் நல்லாருக்கேன் வாப்பா"

-சபீர் (ஷஹ்னாஸ் வாப்பா)

Shameed சொன்னது…

//"நான் நல்லாருக்கேன் வாப்பா"// நல்லா இருக்கு

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+