Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முத்தலாக்கின் மூடுபொருள்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2016 | , , ,


மோகத்திற்கு முப்பதும்
ஆசைக்கு அறுபதுமென
தொண்ணூற்றி ஓராம் நாள்
திகட்டிற்று வாழ்க்கை

சமைந்த நாள்முதல்
சமைக்கவே இல்லை போலும்
உண்ணக் கொடுத்ததிலெல்லாம்
உப்பு, புளி கூடியது

துவைத்து உலர்த்திய
துணிமணியி லெல்லாம்
ஈர வாடை இருந்தது
எதிர்ச் சொற்கள் சொல்லியே
எரிச்சல் கூட்டியது

ஆயிரெத்தெட்டுக் காரணங்கள்
அவளுக்கெதிராய்
ஒன்றுகூட நினைவில்லை
ஒருமித்து வாழ்வதற்கு

முதல் தலாக்குக்குப் பிறகு
முதுகில் முளைத்தது சிறகு

முறுக்கித் திரிந்தது இளமை
சொல்பேச்சுக் கேட்காதவளின்
சோலியை முடித்த
செருக்கோடு

***
இரண்டாம் தலாக்குக்குப் பிறகும்
இளகி வரக்காணோம்.

பிடிவாதம் என்றொரு நோய்
மண வாழ்வின்
அடிநாதம் கசக்கவைக்கும் எட்டிக்காய்
குடிகெடுக்கும் கோட்டானின் வாய்

உடல்வாதம்கூட
ஒரு பக்கமே இழுக்கும்
உறுப்புகளை வளைக்கும்
பிடிவாதம் எந்த
மனத்தினையும் சுருக்கும்
மனிதனையே முடக்கும்

முயலுக்கு மூன்று கால்கள்
மூச்சுமுட்ட முழங்கும்
நாலாவது காலை
கண்டாலும் மறுக்கும்

காண்பதையும் கேட்பதையும்
கொள்கை யென்று ஏற்கும்
தீர விசாரிக்காது
தீர்வுகளை எட்டும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுகளைப் போடும்
ஒட்டடை படிந்ததுபோல்
உள்ளத்தைப் பாழாக்கும்

மாற்றமில்லாக் கோட்பாடுகளில்
ஏற்ற இறக்கம் தேடும்
வரிகளுக்கிடையேதான்
வாசிக்க நாடும்

****
மூன்றாம் தலாக்குக்கு
முதல் நா ளிரவில்
விட்டம் நோக்கிய
வெற்றுப் பார்வையில்
விழிகளில் நீர்

கண்டதும் களித்ததும்
காத்திருந்து புசித்ததும்
தலைவலித் தைலத்தோடு
உயிர் தோய்த்துத் தேய்த்ததும்

கைப்பிடித்த நாள்முதல்
கதி நீயே என்றதும்
கண்ணுக்கெட்டாத் தூரத்தை
கைகோர்த்துக் கடந்ததும்

வாழ்ந்த வாழ்க்கையின்
வசந்தம் நினைத்துக்
கனிந்தது உள்ளம்

மனைவியின் அன்பு
நினைவினைத் தீண்ட
மாசற்ற சேவைகள்
மனதினில் தோன்ற

சில்லரைச் சச்சரவுகளை
நல்லதைக் கொண்டு வெல்ல
மறுநாள் காலை
மனைவிக்காக விடிந்தது

இறைவனின் கருணையால்
இருவரும் இணைய
முத்தலாக்கின் மூடுபொருள்
முழுதும் புரிந்தது!

துலாக்கோலில் நிறுத்தறிய
பலாக்காயல்ல வாழ்க்கை
நிலாக்கால நினைவுகளை
தலாக்கென்று வெட்ட வேண்டாம்!

 சபீர் அஹ்மது அபுஷாரூக்

2 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//சமைந்த நாள்முதல் சமைக்கவே இல்லைபோலும்.....//சமைந்த நாளென்ன? கட்டியவன் வந்தபோதும் சமைக்காத மனைவி,மருமகன் வந்தபோது நளபாகம் செய்து கொடுத்தாள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.