பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?
கால்களில் இறக்கை கட்டி-
கடலென்றும் காடென்றும்-
குளமென்றும் குட்டையென்றும்-குதித்துத் திறிந்த...
வளர்ந்த தெரு என் தெருவா?
பள்ளிக் கூடப் படிப்பும்-
வகுப் பறைகளின் வசீகரமும்-
வாத்தியார்களின் வாஞ்சையும்-
என...
பயின்ற தெரு என் தெருவா?
அரும்பிய மீசையும்-
தழும்பிய ஆசையும்-
தவம் கிடந்த பார்வைகளும்-
கத்துக்குட்டி கவிதைகளும்-
என...
களித்திருந்த தெரு என் தெருவா?
பார்த்ததெல்லாம் அழகாகவும்-.
படித்ததெல்லாம் தெளிவாகவும்-
நொடி நேர பார்வைக்கும்-
கோடி அர்த்தம் கண்ட-
கல்லூரிக் காலங்கள்...
கழிந்த தெரு என் தெருவா?
சார்ந்தவர்களுக்கும் சேர்ந்தவளுக்கும்
என...
பிறந்த மண் துறந்து
பொருள் தேடி...
அலையும் தெரு என் தெருவா?
வைத்த காலம் முதல்
அழைத்த பெயரை-
மாமாவிலும் மச்சானிலும்
'என்னங்க'விலும் 'இந்தாங்க'விலும் வாப்பாவிலும் அப்பாவிலும்
தொலைத்து விட்டு-
மையத்து என்ற
பெயர் மட்டும் தாங்கிமாய்ந்து...
அடங்கும் தெரு என் தெருவா?
பொறு சகோதரா...
மஹ்சரில் சந்திப்போம்
ஒரே தெருவில்!
- சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
மீள் பதிவு
2 Responses So Far:
கடந்து வந்த பாதை எவ்வளவு கரடு முரடு என்பதை உணர்த்துகிறது அடுக்கு அடுக்கான வரிகள்.
Post a Comment