Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அம்மாவைப் பிடித்த பேய் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2016 | , ,

அப்படி
அடிக்கடி ஆட்டிவைத்தது
அம்மாவைப் பிடித்திருந்த
பேய்

அதிவேகமாகத்
தலையைச் சுழற்றி
பிரிந்துகிடக்கும் நீள்கேசத்தை
சாட்டையென
இடமும் வலமுமாய்ச்
சொடுக்கும்

அத்தனைக் கொடூரமான
அலறல்களும்
ஆக்ரோஷமானக் கூச்சலும்
அம்மாவின் குரலாய்
இருந்ததில்லை

நான்கு ஆட்கள்
பிடித் தழுத்தியும்
முண்டியடிக்கும்
அம்மாவிடம்
அப்படியொரு சக்தியை
கண்டதில்லை நான்

'மொத்தி மீன் மண்டை'யும்
'காளிமார்க் கல'ரும்
கொடுத்தாலோ
வாங்கித்தருவதாய் வாக்களித்தாலோ
மலையேறிப் போகும்
அம்மாவைப் பிடித்திருந்த
முச்சந்தி வீட்டு
'மோமுதாமா' பாட்டி

ஆத்திரத்தில்
'கல'ருக்குப் பதிலாக
'படிக்கன் தண்ணி'யைக்
குடிக்கத் தந்த
தாய்மான் சொன்னது
'குடித்தது அம்மா அல்ல' என்று

என்
அக்காளையும் தம்பியையும்
குழந்தைகளாகவே கொன்றது
அம்மாவின் பேய்தான்
என்ற மிரட்சி
என்னை அண்டவிடாமலேயே
வைத்திருந்தது

அதன் பிறகு
கிழிந்த நாராய்
பாயில் கிடக்கும்
அம்மா
என்னை
அருகில் அழைத்து
மெல்ல அனைத்துக் கொள்ளும்
தலையணையைக்
கண்ணீர் நனைத்துச் செல்லும்

பிற்காலத்தில்...

பிழைப்பு வேண்டி
பல வருடங்கள் முன்பு
பரதேசம் பயணப்பட்ட
அப்பாவை
அழைத்து வந்து
கடவு அட்டையக் கைப்பற்றி
காடு கழனி கவனிக்கச் சொல்லி
வீட்டோடு வைத்த பிறகு...

அப்பாவின் மீதான
கோபதாபங்களின்போது
ஓர்
அதட்டலான
முறைப்புக்காக மட்டுமே
அம்மா
பேயைப் பயன்படுத்திக் கொண்டது !

சபீர் அஹ்மது அபுஷாரூக்

2 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

பாஸ்.....இது கணையாழி தரம் பாஸ். இது மாதிரி கவிதை படிக்கும்போது தமிழின் புதிய வார்ப்புகளில் ஒன்றிப்போன காலம் ஞாபகம் வந்தது.

கணையாழியை வாங்கி வந்து புதுக்கல்லூரி விடுதியில் படித்து கொண்டிருந்தபோது ஊரிலிருந்து வந்த கெஸ்ட் கேட்டது
' ஒரு போட்டோகூட இல்லாத இந்த புத்தகத்துக்கு இவ்வளவு காசா? "

வண்ணத்திரையில் வரும் நடுப்பக்கத்து நடிகையின் படத்துக்கு "ஜொல்" விட்டவனிடம் என்னதான் எதிர்பார்க்க முடியும்.

நவீனங்கள் வந்த பிறகு ஒரு கால ஓட்டத்தையே கவிதையின் வீச்சு கொண்டு கையகப்படுத்தி விடலாம் என்று சொல்லியிருக்கிறீங்க பாஸ்.

ஆனா புரியாமெ பேய்க்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் போட்டால் உண்மை ஒடிடும்...

sabeer.abushahruk said...

அம்புலிமாமா வயதில் கணையாழி, கல்கி, மு.வ. என்று இறங்கினால் நம் ஆர்வம் அறிவு ஜீவியாக அடையாளம் காணப்படாமல் இப்படித்தான் சுட்டப்படும்.

நாம் பார்த்ததைவிட அதிகம் படித்தோம். ஆனால், பலர் படிப்பதில் ஆர்வமின்றி பார்ப்பர்.

பேய் இருப்பதைப் போல் வழிநெடுக சொல்லிவந்து இல்லை என்று முடித்திருப்பதைக் கவனித்திருப்பாய்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு