Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - அனைத்து ஊடகங்களில் விவாதமாகிருப்பது.... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | February 03, 2015 | , , , , , ,

தொடர் - 17லிருந்து...
வேறு வழியின்றி, இந்த அத்தியாயத்தை முக்கியத்துவம் கருதி, ஒரு பெரிய பீடிகையுடன் தொடங்க வேண்டி இருக்கிறது. 

உலகில் மனிதன் தோன்றிய போது அவன் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாழ ஆரம்பித்தான். பின்னர் இந்தக் கூட்டத்துக்கு ஒரு தலைவன் தேவைப்பட்டான். அந்தத் தலைவன் பின்னர் அதிகாரங்களை குவித்துக் கொண்டு தன்னை மன்னராக மாற்றிக் கொண்டான். இதன் பரிணாம வளர்ச்சியாக அரசுகள் தோன்றின. அவ்வரசுகள் அன்போடும் நடத்தப் பட்டன சர்வாதிகார முறையிலும் கொடுங்கோல் முறையிலும்  நடத்தப் பட்டன. நாகரிகம் வளர்ந்து வளர்ந்து மெல்ல மெல்ல ஜனநாயக முறைகள் உருவாயின. மக்களை ஆள்வோரை மக்களே தேர்ந்தெடுத்து தங்களை ஆள வைத்தனர். 

உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் முதன்மையான நாடாகக் கருதப் படுவது இந்திய ஜனநாயகம் ஆகும். வெள்ளையர்கள் வெளியேறிய பின் மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளத் தலைப்பட்டனர். இதற்காக தேர்தல் முறை வந்தது.  இந்த தேர்தல் நடை முறை பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று – அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப் பட்ட சின்னங்கள் பொறித்த பெட்டிகளில் மக்கள் வாக்களிப்பதில் தொடங்கி தற்போதுள்ள மின்னணு முறை வரை வந்துவிட்டது. 

பிரிக்கப் படாத மொழிவாரி மாநிலங்கள் ஒன்றாக இருந்த பொது, அரசுக்கு வரிகட்டிய இரசீது வைத்து இருந்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்ததாம். பின்னர்,  பதவிக்கு வர ஆசைப் படும் வேட்பாளரிடம்  அரிசி,  பருப்பு,  பணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு வாக்குச் சீட்டுகளில் அவர்களின் சின்னத்தில்  முத்திரையிட்டு மொத்தமாக அவர்களிடமே கொடுத்த பின்னர் வேட்பாளர்கள் தங்களின் பெட்டியில் தாங்களே போட்டுக் கொண்ட காலமும் இருந்ததாம்.   எல்லாக்காலத்திலும்  வாக்குரிமையை விற்றவர்கள் இருந்தே இருக்கின்றனர். இன்றோ நாம் சொல்லவே வேண்டாம். 

சிறுகச் சிறுக பெருகிக் கொண்டே வந்த அரசியல் கட்சிகள் இன்று பழத்தட்டில் மொய்க்கும் ஈக்களின் கூட்டம் போல பெருகிவிட்டன. நினைத்தவர்கள் ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம். தேவை ஒரு லெட்டர் பேடு மட்டுமே. நெல்லிக் காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் கூட அவற்றை எண்ணி விடலாம் ஆனால் இந்தியாவில் இன்று இருக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் எண்ணி விட முடியாது.  ஒவ்வொரு சாதிகளும் அந்த சாதிகளின் உட்பிரிவுகளும் கூட தங்களுக்கென்று அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தேர்தல்களிலும் நின்று பதினேழு வாக்குகள் வாங்குகின்றன. 

நீண்ட நாட்களாக பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல்  தான் ஒருவன் மட்டுமே இருந்து நடத்திக் கொண்டிருந்த சுப்ரமணியம் சுவாமி, கட்சியைக் கலைத்து விட்டு பாரதீய ஜனதாக் கட்சியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். பாரி வேந்தர் என்று ஒருவர் ஓர் கட்சியை வைத்துள்ளார். கொங்கு வேளாளர் என்று ஒரு கட்சி; சங்கு பொறுக்குபவர்களுக்கு என்று ஒரு கட்சி; பனைமரம் ஏறுவோருக்கும் ஒரு கட்சி; பங்கு வர்த்தகம் செய்வோருக்கும் ஒரு கட்சி.  சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மட்டுமே இருபதுக்கும் மேலான கட்சிகளை வைத்து இருக்கிறார்கள். இவர்களில்  ஒரே கட்சியில் இருக்கும் இருவர் வெளியூருக்கு ஒன்று சேர்ந்து பஸ் பயணம் பண்ண நேர்ந்தால் தனக்கு ஜன்னல் ஓரம் அமரும் சீட் தரவில்லை என்று அடுத்தவர் மீது கோபித்துக் கொண்டு மற்றவர் இன்னொரு  கட்சியை ஆரம்பித்து விடுகிறார்.  

அது மட்டுமல்லாமல் ஜனநாயகம் என்கிற பெயரில் சட்டமன்ற பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தகுதி இல்லாதவர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று விடுகிறார்கள். திரைப்பட நடிகைகளான வைஜெயந்தி மாலா, ஜெயப்பிரதா, விஜயசாந்தி ஆகியோரும் எஸ் எஸ் சந்திரன், ஐசரி வேலன்  போன்ற காமெடியன்களும் இரா செழியன் , ஜார்ஜ் பெர்னாண்டஸ், குருதாஸ் குப்தா, சோமநாத் சட்டர்ஜி போன்ற அரசியல் மேதைகளுடன் ஒரே நிலையில் பாராளுமன்றத்தில் , சமமாக அதே அந்தஸ்துடன் அமர வைத்தது ஜனநாயகம். எஸ். வி.  சேகர் என்கிற காமெடி நடிகர் தற்போது ஏழாவது முறையாக கட்சி மாறியதை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. யார் சொல்ல முடியும்? இடையைக் காட்டி இடைத் தேர்தலில் கவர்ச்சி நடிகைகள் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சொல்வேந்தர் சுகிசிவம்  நின்றிருந்தாலும் அவருக்கு ஜாமீன் தொகை கிடைக்காது. “கவர்”ச்சீ என்றா சொல்லப் போகிறார்கள்? அந்த நடிகையும் சட்டமன்றத்தில் அமர்வார். அவருக்கு முன்வரிசையில்  இருக்கை ஒதுக்கப்படலாம். இதுதான் ஜனநாயகம். 

ஊரிலேயே பெரிய அடியாள் , தாதா , பத்து கொலைகள் செய்தவர், முகத்திலே நாலு அரிவாள் வெட்டுத் தழும்பு உடையவர்  பல கிரிமினல்  வழக்குகளை தனக்குப் பின்னால் வைத்திருப்பவர் ஆகியோரால்  ,  தங்களின் பெயருக்குப் பின்னால்  பல்கலைக் கழகங்களில் பெற்ற  பட்டங்களை போட்டு வைத்திருப்பவர்கள் மண்ணைக்  கவ்வுகின்றனர்.  மக்கள் தொண்டர் காமராசர் ஒரு மாணவரால் தோற்கடிக்கப் பட்டார். பேரறிஞர் அண்ணா ஒரு பேருந்து முதலாளியால் தோற்கடிக்கப் பட்டார்.    பணநாயகத்தின் முன் ஜனநாயகம் படுத்து விடுகிறது. 

அது போகட்டும். தேர்ந்தெடுக்கப் பட்டு சட்ட மன்ற பாராளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுகிற எம்பிக்களும் எம் எல் ஏக்களும் தங்களுடைய கடமையை ஒழுங்காக செய்கிறார்களா? குறைந்த பட்சம் கூச்சல் போடாமல் இருக்கிறார்களா? அவை நடவடிக்கைகளின்போது  முஷ்டியை மடக்காமல் இருக்கிறார்களா? உதட்டைத் துருத்தாமல் இருக்கிறார்களா? பெண்களே தங்களின் தொடையைத்தட்டி சவால் விடுகிறார்கள். இந்தியப் பண்பாடு என்று நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும் முன்பு நமது பாராளுமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதியைப் பார்த்தால் இந்தியப் பண்பாடு தற்கொலை செய்து கொள்ளும். அடிக்கடி முடக்கிப் போடப்படும் இடம் பாராளுமன்றம் , அடிக்கடி எதிர்க் கட்சிகளை குண்டு கட்டாக கட்டி வெளியேற்றும்  இடம் சட்ட மன்றம் என்பதும்  அரசியலில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட  பலர் இந்த அவைகளுக்கு வரவே அஞ்சுகிறார்கள். தனிநபர் தாக்குதலுக்கு அஞ்சி ,  தாழ்வாரம் வரை வந்து  கைஎழுத்துப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் தள்ளு வண்டியைத் தள்ளச் சொல்லி ஓடும் தானைத் தலைவர்கள் ஏராளம். கடந்த காலத்தில் புரட்சித்தலைவர் என்றும் புரட்சித் தலைவி என்றும்  புகழப் பட்டவர்களே  இப்படித் தான் செய்தார்கள். இன்றைய எதிர்க் கட்சித்தலைவர் அவைக்கு வந்து அநேக நாட்கள் ஆகிவிட்டன. 

இந்த அவைகள் கூட்டப் படுவதற்கு எவ்வளவு செலவுகள், எவ்வளவு சம்பளங்கள், செலவுகள் அலவன்சுகள்? எல்லாம் நாட்டு மக்களின் தலையில்.

பல நேரங்களில் தேர்தலின் போது, சாதி மத இனக் கலவரங்கள் தூண்டிவிடப் பட்டு பல அப்பாவிகளின் உயிர்கள் பலிகொள்ளப் படுகின்றன. இவற்றிற்குக் காரணமான அரசியல்வாதிகள் தங்களின் குடும்பத்துடன் மகிழ்வாக பத்திரமாக பாதுகாப்பாக வாழ்வார்களாம். ஆனால் தெருக்  கோடிகளிலே , சாக்கடை வாசத்திலே, அதில் மொய்க்கும் ஈக்களின் கூட்டத்திலே, உழைக்கும் வர்க்கம் உழன்று  வாழ்வார்களாம்; உயிரையும் விடுவார்களாம். தேர்தலுக்காக நடைபெறும் கலவரங்களில் தங்களின் கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள் ஒருபுறம்; அதற்குக் காரணமானவர்களோ  பஞ்சணை மெத்தையில் மறுபுறம். சமுதாயத்தில் கூட  ஒரே ஊரில் பிரிவினைகள், கசப்புணர்வுகள் தோன்றி விருட்சமாக வளர்கின்றன. இப்படிப் பல அவலங்களுக்கு வித்திடுகின்ற இன்றைய ஜனநாயக தேர்தல் அமைப்பில் ஒரு மாற்றம் வரவேண்டுமென்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜனநாயகம் என்கிற கட கட லொட  லொட என்றும் கப் கப்  குப்   குப் என்றும் புகைவிடும் வண்டியை மாற்றிவிட்டு புதிய ஒரு குளிர்சாதன வசதியுடன்  மெட்ரோ ரயில் ஓட வேண்டுமென்று ஒரு முறையை முன்னெடுக்கிறார்கள். அதுவே விகிதாச்சார முறை.

இந்த முறையின் முதலாவதும் அடிப்படையுமான வாதம் என்ன வென்றால் ஒரு தொகுதி மற்றும் ஊரின்  நலனை கவனிக்க பல்வேறு பெயர்களில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். நகராட்சியின் வார்டு உறுப்பினர் தொடங்கி, ஒன்றியத்தலைவர் , நகராட்சித் தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்துத் தலைவர், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சித் தலைவர் எம் . எல். ஏ, எம். பி ஆகிய பலர் இப்போதுள்ள அமைப்பு முறையில் இருக்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் அரசின் பணம்  கோடிக்கணக்கில் செலவாகிறது. ஒரு குறிப்பிட்ட தொகுதி அல்லது ஊரின் நலனை கவனிக்க இவ்வளவு ஆட்களும் பதவிகளும் தேவை இல்லை என்பது அடிப்படை. மேலும்  ஒரு பதவிக்காக போட்டி இடுவோரின் எண்ணிக்கையும் அவர்கள் செய்யும் செலவையும் கணக்கிட்டால் தலை சுற்றும். இதற்காக செலவிடும் பணம்தான் ஊழலின் ஊற்றுக் கண்ணைத் திறக்கிறது. 

எம் எல் ஏ  மற்றும் எம் பி ஆகியோரை இந்த உள்ளூர் நலப் பணிகளின் பொறுப்பில் இருந்து விடுபட வைக்கலாம். அந்தப் பணியை உள்ளூராட்சி மன்றங்கள் கவனிக்கச் செய்யலாம். காரணம் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியப் பணியே  சட்டங்களை உருவாக்குவது, நிறைவேற்றுவது, திருத்துவது, மாற்றுவது ஆகியவைதான். இந்தப் பணி நாடு முழுதுக்குமாக தேவைப்படுவதால் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் உறுப்பினராக இருந்துகொண்டு இதைச் செய்ய வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்லப் போனால் இந்த சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று இந்த விகிதாச்சார முறையில்  எந்த தொகுதியும் சொந்தம்  இல்லை. அவர்கள் ஒரு ஒட்டுமொத்த பாராளுமன்ற அல்லது சட்ட மன்ற உறுப்பினர்கள் அவ்வளவே.

இந்த முறையின் இதர அம்சங்கள்:-
  • வாக்களித்த எல்லோருடைய ஓட்டுக்கும் மதிப்பு உண்டாகும் .
  • குறைவாக வாக்குப் பெற்றவர் ஆட்சி செய்யும் முறை ஒழியும் .
  • வாக்களர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் முறை ஒழியும்.
  • அரசியல் பிழைத்தோர்கள் அகற்றப் படுவார்கள் .
  • கட்சி மாறும் தன்மை அகற்றப் படும் ; ஒழிக்கப் படும் .
  • சபையில் முறை தவறும் உறுப்பினர் மற்றும் அவரது கட்சித்தலைமை கண்டிக்கப் படும் ; தண்டிக்கப் படும் .
  • தகுதியற்றவர்கள் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வது தடுக்கப் படும் 
  • தவறு செய்யும் உறுப்பினர்கள் திரும்பப் பெறப படுவார்கள் .
  • வருடக் கணக்கில் நடக்கும் தேர்தல் வழக்குகளுக்குத் தேவை இருக்காது.
மேற்கண்ட பட்டியலில் உள்ளவை எல்லாம் அரசியல் வாதிகளின் தேர்தல் கால வாக்குறுதிகள் போலத் தோன்றுகிறதா? இன்னும் தெளிவு பெற நாம் விவாதிக்கலாமே!

உதாரணமாக, ஒரு தொகுதியில்  A, B, C, D ஆகிய நால்வர் போட்டி இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அனைவருக்கும் பதிவான  மொத்த வாக்குகள் 70000 என்றும் வைத்துக் கொள்வோம். இப்படி பதிவான 70,000 வாக்குகளில் 

A  18000
B 16000
C 19000
D 17000

என்கிற அளவில் வாக்களிக்கப் பட்டால் இவர்களில் அதிகம் வாக்குகள் வாங்கிய C தேர்ந்தெடுக்கப் பட்டவராக அறிவிக்கப் படுகிறார்.  தேர்ந்தெடுக்கப் பட்ட C  அவர்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 51000  ஆகும். மைனாரிட்டியாக வாக்கு வாங்கியவர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அத்துடன் மற்ற மூன்று வேட்பாளர்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குகள் பயனற்றவையாக ஆகிவிடுகின்றன. 

நாடு முழுதும் மொத்த தொகுதிகள் 200 என்று வைத்துக் கொண்டால் இந்த 200 தொகுதிகளிலும் இதே நிலைமை இருந்தால் மக்கள் வேண்டாமென்று ஒதுக்கிய கட்சி நாடாளும் . இந்த முறையை மாற்றி , நான்கு கட்சிகளும் நாடு முழுதும் பெரும் வாக்குகளின் எண்ணிககையின் அடிப்படையில் கட்சிக்கு இத்தனை உறுப்பினர்கள் என்று விகிதாசார அடிப்படையில்  பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் மைனாரிட்டியாக வாக்கு வாங்கிய கட்சி நாட்டை ஆள முடியாது. 

இதை எப்படி நடைமுறைப் படுத்துவது?

தேர்தல்  ஆணையம் குறிப்பிட்ட ஒரு  தேதியில் நாடு முழுமைக்குமான தேர்தலை அறிவித்துவிட வேண்டும். தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் நடைபெறாது. கட்சிகளின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். மக்களிடம் தரப்படும் வாக்குச்சீட்டில் அல்லது மின்னணு இயந்திரத்தில் கட்சிகளின் பெயரும் சின்னமுமே இருக்கும். மக்கள் தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு வாக்கு அளிக்கலாம். மொத்த வாக்குகளில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு என்று கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றபடி அந்தந்தக் கட்சிகளுக்கு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற  சீட்டுகள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப் படும். ஒரு கட்சிக்கு மொத்தம் பதிவான வாக்குகளில் பத்து சதவீதம் கிடைத்து இருந்தால் மொத்த பாராளுமன்ற இருக்கைகள் இருநூறு என்று வைத்துக் கொண்டால் அதில் பத்து சதவீதமான இருபது இடங்களை அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கும். 

இதே முறையில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அவைபெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப் படும். அதிக விகிதாச்சார வாக்குக்கள் வாங்கும் கட்சி ஆட்சி அமைக்கும். தேர்தலில் போட்டி இட்டு விகிதாச்சார அடிப்படையில் தாங்கள் கட்சிக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சிகளின் உறுப்பினர்களாகப் பணியாற்ற வேண்டியவர்களின் பெயர்களை அறிவிக்கும். இப்படி பெயர்கள் அறிவிக்கப்பட குறைந்த பட்ச கல்வித்தகுதி நன்னடத்தைத் தகுதி ஆகியவற்றையும் கட்சிகள் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற கட்டுப் பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதிக்கலாம். பதவிக் காலத்தில், ஒழுக்கம் மீறும் உறுப்பினரை கட்சிகள் திரும்பப் பெற்றுக் கொண்டு பதிலாக வேறு உறுப்பினரை நியமிக்கலாம். ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கே பத்தாம் வகுப்பு தேர்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள ஜனநாயகத்தில் காதர் பாட்சா என்பவர் கதர் பட்சா என்று கையெழுத்துப் போடத் தெரிந்து இருந்தாலும் பரவா இல்லை. அவர் அமைச்சராகவும் வர இயலும். 

இந்த முறையைப் பின்பற்றும்போது இட ஒதுக்கீடு முறையில் ரிசர்வ் தொகுதி என்று அழைக்கப்படுகிற தலித்களுக்கோ பெண்களுக்கோ என்று தனித் தொகுதிகளை ஒதுக்கத்தேவை இல்லை. தேர்தலில் பங்கேற்று விகிதாச்சார அடிப்படையில் இடங்களைப் பெறும் தனிப்பட்ட கட்சிகள் தாங்களே தலித்துகளுக்கும் பெண்களுக்கும் இடங்களை ஒதுக்கிக் கொடுத்துக் கொள்ள வேண்டும். 

உலகநாடுகள் பல இந்த முறையைப் பின்பற்றுகின்றன. பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இத்தகைய விகிதாச்சார முறைதான் பின்பற்றப்படுகிறது. 

இந்த விகிதாச்சார முறைக்கு இன்னும் ஆதரவாக எடுத்துவைக்கப் படும் கருத்துக்கள். 

1. தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்காக மக்களால் போடப்படும் ஓட்டுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் இடங்களுக்கும் தொடர்பு இல்லை என்கிற தன்மை நீக்கப் படும். உதாரணமாக  1996 தேர்தலில் அ.தி. மு.க வுக்குக் கிடைத்த மொத்த ஓட்டுகளின் சதவீதம்  21.50  ஆகும். ஆனால் இடங்களோ வெறும் நான்குதான்.  இதே கட்சிக்கு 2001 –ல் கிடைத்த வாக்குகளின் சதவீதம்  29.92 ஆனால் இந்த முறை  132 இடங்கள். வெறும் எட்டு சதவீத வாக்குகள் எவ்வளவு வித்தியாசமான எண்ணிக்கை உடைய இடங்களை கொடுத்துள்ளது என்பதை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அதைவிட ஒரு புள்ளிவிபரம் நம்மை ஆச்சரியப் படுத்தும்.  1967 தேர்தல் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்த தேர்தலில்  41.38 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி  50 இடங்கள் மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தது.  அதைவிடக் குறைவான 40.77 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம்  138 இடங்களைப் பெற்று  ஆட்சியைப்             பிடித்தது. 

2. இப்போதுள்ள தேர்தல் முறையில் ஒருவருக்கு 49 வாக்குகள் கிடக்கிறது என்று வைத்துக் கொண்டால் அவரை எதிர்த்து நின்றவர்  51 வாக்குகள் பெற்றால் பின்னவர் வெற்றி பெறுவார். அப்படியானால் 49 வாக்குகளை அளித்தவர்களுக்கு பிரதிநிதித்துவமே கிடையாது. அவர்களில் பலர் அதிருப்தி அடைந்து எதிர்காலத்தில் வரும் தேர்தலில் விரக்தியுடன் வாக்களிக்காமல் போகலாம். இதனால் ஜனநாயகத்தின் ஆணிவேர் ஆட்டப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும்  இந்தியாவில் சராசரியாக 55 சதவீதம் வாக்குகளே பதிவாகின்றன. நாம் சொல்லும் விகிதாச்சார முறையில் தங்களின் வாக்குரிமைய செலுத்திய ஒவ்வொருவரின் வாக்குக்கும் மதிப்பும் பயனும் இருப்பதால் இன்னும் அதிக வாக்காளர்கள் வாக்களிக்க வரக்கூடும் . இதனால் ஜனநாயகம் வலுவடையும்.

3. தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கப் பிடிக்காவிட்டால் 49 ‘O பிரிவின் கீழ் அதைப் பதிவு செய்ய இன்றைய தேதல் சட்டத்தில் இடம் ஏற்படுத்தப் பட்டு இருக்கிறது. இதற்காக ‘பிரிண்ட் அவுட்’ கூட பெற்றுக் கொள்ளும் வசதியை இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விகிதாச்சார முறையுடன் ஓட்டளிக்க விரும்பாத விரும்பாதவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தால் மக்கல் மீதான ஜனநாயகம்  மற்றும் அரசியல் கட்சிகளின் உண்மை தாக்கம் வெட்ட வெளிச்சமாகும். உண்மையான பிரதிபலிப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  

4. விகிதாச்சார முறையில் ஒவ்வொரு கட்சியின் உண்மைச் செல்வாக்கும் தெரிந்து போய்விடுமென்பதால் கூட்டணிகள் அமைப்பதும், பதவி பேரங்களும் நியாயமான முறையில் நடத்த முடியும்.

5. இந்த முறையில் பெறும் வாக்கின் அளவுக்கு பிரதிநிதிகள் அமைவதால் மாநிலங்கள் அவைகளைக் கூட தேவை இல்லை என்று விட்டுவிடலாம். இதனால் பெருமளவில் செலவுகள் குறைய வாய்ப்புண்டு. குறைந்த பட்சம் கூச்சல் குழப்பங்களின் இரண்டாம் எபிசோட் குறையும்.

6. இந்த முறையில் மக்கள் உடைய ஆதரவோ செல்வாக்கோ இல்லாமல் தனி நபர்களால் நடத்தப் படும் அரசியல் கட்சிகள் என்கிற அடையாளங்கள் ஒழிக்கப் பட வழியை ஏற்படுத்தலாம் தேர்தலில் போட்டி இட வேண்டுமானால் பத்து இருபது கோடி ரூபாய் ஜாமீன் தொகையாக கட்ட வேண்டுமென்றும் , தேர்தல் நடந்து முடிந்த த பிறகு இரண்டு மூன்று சதவீதம் வாக்குகள் கூட பெற முடியாத கட்சிகளின் ஜாமீன் தொகை பறிமுதல் செய்யப் படுமென்றும் ஒழுங்குபடுத்தினால்  சரத்குமார் கட்சி போன்ற பெட்டிக்கடை கட்சிகள்  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அரசியலில் இருந்து காணாமல் போய்விடும்.     

இவைகள் நமது சிந்தனைக்கே. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்! சிந்திப்போம்! தொடரும்....

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc.,
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

11 Responses So Far:

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

நேற்று இரவு சன், புதிய தலைமுறை, கலைஞர் ஆகிய அத்தனை முக்கிய தமிழ் தொலைக் காட்சிகளிலும் இந்தப் பொருளே விவாதமாக யிருந்தது.

வடநாட்டு ஊடகங்களிலும் இந்தப் பொருள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் கருணாநிதி இதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்று நேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதிரை நிருபர் சார்பாக அதன் வாசகர்களுக்கு இந்தக் கருத்தை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விதைத்த பெருமையை காலரைத் தூக்கிவிட்டு இந்தப் பதிவை மீள் பதிவு செய்த நெறியாளருக்கு நன்றி.


இதைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.

விவாதிக்க வேண்டும்.

முப்பத்தி ஒன்று சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி இன்று ஆட்சிகட்டிலில். மற்ற கட்சிகள் எதிர்க் கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் இருக்கின்றன.

முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்த மக்களுக்கு அமைச்சரவையிலோ பாராளுமன்றத்திலோ போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமல் மனுநீதி ஆட்சி செலுத்துகிறது.

இவைகள் பற்றிய இந்த விவாதம் இன்றைய காலத்தின் கட்டாயம்.

பலரும் மனங்களில் உள்ளதை கருத்துரையாக இட்டால் மகிழ்வோம்.

Reply

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கடந்த இரண்டு நாட்களாக... இந்திய பெரும்பாலான ஊடகங்கள் சமையல் செய்து கொண்டிருக்கும் விஷயம் இதுதான்.

ஐயே... வடை போச்சேன்னு புலம்பியவர்களும், அட..டா சுட்ட வடை பா(ர்)ட்டி க்கு தெரிந்துடுமோன்னு புலம்புகிறவர்களும் எடுத்திருக்கும் சப்ஜெக்ட் இது.

அன்று நாம் எடுத்துக் கொண்டு விவாதித்த பேசுபொருள் இன்று காலத்தின் கட்டாயமாக இனிமா கொடுத்து வலி எடுக்க வைக்கிறார்கள்...

காவி கையில்
கருவூலச் சாவி..

sheikdawoodmohamedfarook said...

//ஒரேகட்சியேசேர்ந்தஒருவர் தனக்குஜன்னல்ஓரசீட்டுதரவில்லைஎன்று....//இன்னொருகட்சிக்காரர் தலைவர்தன்மகளுக்குபடித்தமாப்பிளையே தரவில்லை என்று தனிக்கட்சிதொடங்கினார்.

sabeer.abushahruk said...

இந்தப் பதிவில் முன்மொழிந்திருப்பதுதான் ஞாயமான ஜனநாயகம் என்று படுகிறது. உண்மையிலேயே அலை அடித்தது என்றால் விகிதாச்சாரமும் உச்சமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அப்ப அடிச்சது மோடி அலை அல்ல; சுதந்திரத்திலிருந்து 'சு'னாவை நீக்கிய 'தந்திர' அலை!

இங்கே இவ்ளோவ் தெளிவா சொல்லியிருக்கோமே அங்கே பிறகு என்னத்த விவாதிக்கிறாங்களாம், காக்காஸ்?

sheikdawoodmohamedfarook said...

இப்பொழுதுபேசப்படும்விகிதாச்சாரதேர்தல் முறைஇரண்டாயிரம்ஆண்டுகளுக்குமுன்கிரேக்கசிந்தனையாளர் அரிஸ்டாட்டிலோஅல்லதுபிளாட்டோவோஎழுதிய Republicஎன்றநூலில்கூறப்பட்டது.இந்தமுறைஅமுளுக்குவந்தாலும் 57%ஓட்டுவாங்கும்கட்சி தலைவர் தன் குடும்பஉறுப்பினருக்கே அதிகசீட்டுகளைவாரிக்கொடுப்பார்..மனிதன்மனதில்சுயநலம்என்றநோய் இடம்பிடித்தால்அதை எந்தமருந்தும்குணப்படுத்தாது.

sheikdawoodmohamedfarook said...

//அந்தகவர்ச்சிநடிகையும்சட்டமன்றத்துக்குவருவார் அவருக்குமுன்வரிசையில்இடம்ஒதுக்கபடலாம்// முன்வரிசைஇடத்தைவிடசபாநாகயகரின்மேடையிலேயே ஒருஇடம்கொடுத்தால்வந்திருக்கும்அவையோரின் கண்களுக்குவிருந்தாகும்.கண்பார்வைகுறையுடைய முதியோர்களுக்குஆளுக்கொருபைனாகுலர்கொடுப்பதுசாலச்சிறந்தது.

sheikdawoodmohamedfarook said...

The Republicஎன்றநூலைஎழுதியவர்பிளாட்டோ

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

Politics is last resort of the soundrels.

Politics has no morals and principles.

Politics is done for power playing only.

Politics is purely an investment, return on investment based profitable business without any social responsibilities.

Politics is smelly everywhere in the world.

Noble and greater people avoid smelling politics. But monitoring the trends.

May God Almighty save us from these bad smell and provide us responsible leaders to govern the lands.

B. Ahamed Ameen from Dubai

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

And unfortunately the same kind of political games are played by deriving the same rules by the experienced politicians' characteristics by our muslim community related parties.
Untolerable and unbelievable in muslim communities!!!!.

What I mean is..
If you choose to play football, rules of football are applicable.
If you choose to play cricket, cricket rules...
If you choose to play political games, the same dirty political rules.

B. Ahamed Ameen from Dubai

Unknown said...

Assalamu Alaikkum

Another thing is that some of big business men are having control of politicians and governments by doing unethical dealings and bribes to politicians to make flexible laws or bypass the existing laws to make their business only. Once the political leaders are obeying these unethical greedy business men (all over the world) then where is the protection and service for common people of a land? where is the democracy - for the people, by the people etc...???

B.Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு