Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | June 18, 2014 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பானவர்களே!

புதன்கிழமை தோறும் எனக்கென்று ஒதுக்கி தொடர் எழுத அதிரைநிருபர் தளம் அனுமதித்திருந்தது. கடந்த வாரத்தோடு “அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்” தொடர் நிறைவுற்றிருந்தாலும், என் பதிவுகளை வாசித்து பயனடைந்து வரும் சகோதரர்களின் ஊக்கமும், உற்சாகமும் என்னை மேலும் ஒரு தொடர் எழுத தூண்டுகிறது. இனிவரும் வாரங்களில் என்னால் இயன்றவரை “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற தலைப்பில் நம் சமுதாய நலநோக்கோடு முயற்சி செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். அல்லாஹ் வழி காட்டிய வரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்” என்று நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்கள் அனைவருக்கும் நான் நினைவூட்டியவனாக இந்த வார பதிவுக்கு செல்லுகிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் நம் யாருக்கு மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தை பின் பற்றுபவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால் முன் மாதிரி, முன் மாதிரி என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த பதிவை துவங்குகிறேன்.

“இறை இல்லங்களை கவணிக்கிறோமா?”

இஸ்லாமிய வரலாற்றை நாம் எடுத்துப் பார்த்தால், நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த காலம் தொடங்கி அவர்கள் மரணிக்கும் காலம் வரை இந்த தூய இஸ்லாத்திற்காக, தங்களின் உடல், பொருள், உயிர் என்று தங்களில் ஒட்டு மொத்த வாழ் நாட்களை அர்ப்பணித்த உத்தம நபியின் உன்னத தோழர்கள் ஏராளம். இவர்களில் முன்னனியில் குறிப்பிடத்தக்கவர்களில் உம்முல் முஃமினீன் அன்னை ஹதீஜா(ரலி), சித்தீக் என்று நபி(ஸல்) அவர்கள் அன்போடு அழைக்கப்பட்ட மூத்த ஸஹாபி அபூபக்கர் சித்தீக் (ரலி), இவர்களை தொடர்ந்து உமர்(ரலி), உஸ்மான்(ரலி) அலி(ரலி) ஆயிசா(ரலி), ஃபாத்திமா(ரலி), ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி), உம்மு சுலைம்(ரலி), சுமைய்யா(ரலி), யாசிர்(ரலி), பிலால்(ரலி), காலித் பின் வாலீத்(ரலி) என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அல்லாஹ்வின் படைப்பினங்களில், கண்ணியமான படைப்பினம் மனித இனம், இந்த மனித இனத்தில் மிகவும் கண்ணியமானாவர்கள், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஓரிறைக் கொள்கையில் உள்ள முஸ்லீம்கள். நம்மை இவ்வுலகில் படைத்து முஸ்லீமாக படைத்து, வாழ இருப்பிடம் கொடுத்து, உணவு தண்ணீர் கொடுத்து, நிம்மதியான உறக்கம் தந்து, சந்ததிகள் கொடுத்து, ஹலாலான பொருளாதாரத்தை நாம் கேட்கமலே அள்ளித்தந்து, சந்தோசமாக வாழும் அனைத்து சூழல்கள் உருவாக்கித் தந்து இவ்வுலகிலும் நம்மை கண்ணியப்படுத்தி, இவ்வுலக வாழ்வில் அவனுடைய கட்டளைகளின் படி வாழ்ந்தால், நாளை மறுமையில் நம்மை கண்ணியப்படுத்த இருக்கிறான் அந்த ரப்புல் ஆலமீன். இப்படி எல்லாம் நம்மை இவ்வுலகிலும் மறுவுலகிலும் கண்ணியப்படுத்தும் அந்த அல்லாஹ்வின் இல்லங்களை நாம் கண்ணியப் படுத்துகிறோமா? என்பதை கொஞ்சம் நிதானமாக நாம் சிந்திக்க வேண்டும்.

இன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் பள்ளிவாசல்கள், அழகாகவும், உயரமாகவும், அதிகப் பொருட்செலவிலும் கட்டப்பட்டுள்ளது, மேலும் கட்டப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ். இதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் அப்படி கட்டப்படும் இறையில்லங்களின் பராமறிப்புகள்  சரிவர செய்யப்படுகிறதா என்பதில் தான் குறைகள் எழுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களிடம் லட்சங்கள் திரட்டி அழகிய பள்ளிவாசல்கள் கட்டிவிடப்படுகிறது. இதனை பராமரிக்க கமிட்டி அமைக்கப்படுகிறது ஆனால் அந்த பள்ளிவாசல் பராமரிப்புக்காக வருடா வருடம் ரமழான் மாதங்களில் பள்ளிவாசல்களின் நிர்வாகம் பொதுமக்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நாம் யாரும் மறுக்க முடியாது. ஒரு சில பள்ளிவாசல்களின் நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் வெளியில் கேட்க வெட்கப்பட்டு தங்களுடைய பெருளாதாரங்களை வருடக்கணக்கில் அல்லாஹ்வுக்காக செலவழித்து வருகிறார்கள். ஒவ்வொரு இறையில்லங்களில் சுற்றியுள்ள நாம் நம்முடைய முஹல்லாவில் உள்ள அல்லாஹ்வின் இல்லத்திற்காக என்ன வகையான அர்ப்பணிப்பை, உதவியை செய்திருக்கிறோம் என்பதை என்றைக்காவது சிந்திருக்கிறோமா?

இன்றைய சூழலில் இஸ்லாமிய ஊர்களில் குறிப்பாக அதிரை போன்ற ஊர்களில் பள்ளிவாசல்கள் எதிர்க்கொள்ளும் சவால்களில் முக்கிய பங்கு பொருளாதாரமும், சுத்தம் சுகாதாரமும்.
  • இமாம் மற்றும் முஃஅத்தின் இருவரும் நம்மைப் போன்ற மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. இவர்களுக்கு இன்று கொடுக்கப்படும் சம்பளம் உண்மையில் போதுமானதுதானா என்பதை என்றைக்காவது நம்முடைய முஹல்லா பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு விசாரித்து நம்முடைய பங்களிப்பை செய்திருப்போமா?
  • பள்ளிவாசல்களுக்கு என்று பராமரிப்பு செலவுகள் என்று உள்ளது, குறிப்பாக கழிப்பறைகள் சுத்தம் செய்வது, மின் விளக்கு, மின் விசிரி, பழுதடைவது, தண்ணீர் எடுக்கும் மோட்டார் பழுதடைவது இவைகளை சரி செய்வதற்கான செலவுகள் என்று இப்படி ஏராளமான செலவுகள் இருக்கிறது, இவைகளை என்றைக்காவது நம்முடைய பள்ளி நிர்வாகத்திடம்  கேட்டு விசாரித்து நம்முடைய பங்களிப்பை செய்திருப்போமா?
  • பெரும் பொருட்செலவில் கட்டப்படும் பள்ளிகளாட்டும், சிறிய பெருட்செலவில் கட்டும் பள்ளிகளாட்டும், குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையேனும் புதிய பெயிண்டுகள் அடித்து அழகுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று அதிரைப் போன்ற பள்ளிகள் சில பல வருடங்களாக பெயிண்டு அடிக்காமல், வெளி தோற்றத்தில் பாசி படிந்து கருப்பு நிறங்கள் சூழ்ந்துள்ளதை பார்த்து “நம்மை படைத்த அல்லாஹ்வின் வீடு இப்படி உள்ளதே” என்று என்றைக்காவது கண்ணீர் வடித்திருக்கிறோமா?
  • பள்ளிவாசல் பராமரிப்பில் உள்ள அடக்கஸ்தலங்களுக்கு ஒரு ஜனாஸா அடக்கம் செய்ய செல்லும் நாம், அங்கு காடுபோல் வளர்ந்திருக்கும் புல் செடிகளை கண்டு பள்ளி நிர்வாகத்தை பல முறை குறை கூறியுள்ளோமே, என்றைக்காவது இது ஏன் சுத்தம் செய்யப்படவில்லை, நம்முடைய முஹல்லாவுக்கு செந்தமான பள்ளியின் அந்த அடக்கஸ்தலம் சுத்தம் செய்ய நம்மால் முடிந்த ஏதாவது ஓர் உதவி செய்ய முன் வந்திருக்கிறோமா?
  • ரமழான் மாதத்தில், நோன்பாளிகளுக்காக தாயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சிக்கான செலவுகள், ஒரு சில வசதியானவர்கள் குடியிருக்கும் பள்ளிகளுக்கு 30 நாட்களுக்கு ஸ்பான்சர் கிடைத்து விடுகிறது. மேலும் மீடியாக்களை கையில் வைத்துள்ள இயக்கங்கள் நடத்தும் பள்ளிகள் தங்களின் ஊடக பரப்புரை மூலம் 30 நாட்களுக்கும் தங்களுக்கு தேவையான பெருளாதாரத்தை திரட்டி விடுகிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்ட பள்ளிகள் அதிரைப் போன்ற ஊர்களில் உள்ளது. அதை சார்ந்த முஹல்லாவாசிகளாக நாம் இருப்போம், என்றைக்காவது நம்முடைய முஹல்லா சார்ந்த பள்ளிவாசல்களுக்கு ரமழானில் நோன்பு கஞ்சிக்காக ஆகும் செலவில் பள்ளி நிர்வாகத்தை தானாக தொடர்பு கொண்டு நாமும் பங்கெடுத்திருக்கிறோமா?
இவ்வாறு கேள்விகள் அடுக்கிக் கொண்டே செல்லலாம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நாம் கட்டும் வீட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட,  அல்லாஹ்வின் இறையில்லத்தை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முதலில் நீங்கள் சார்ந்திருக்கும் முஹல்லா பள்ளிவாசல் நிர்வாகத்தை உடனே தொடர்பு கொண்டு, பள்ளிவாசலுக்கு தேவையானவைகள் என்னவென்பதை பற்றி விசாரியுங்கள், உங்களால் முடிந்த உதவியை செய்ய முன் வாருங்கள். நம்மை படைத்த ரப்பின் வீட்டை பாராமரித்து பாதுகாப்போம்.

பல மையில் தூரத்தில் உள்ள பாபர் மசூதி, மத வெறியர்களால் தகர்க்கப்பட்ட போது வெகுண்டெழுந்தோம், இன்றும் அதற்காக போராடுகிறோம். ஆனால் நம் கண் எதிரே நம்மை சுற்றி இருக்கும் இறையில்லங்கள் பராமரிப்பு இன்றி தவிக்கிறதே, இதற்காக நாம் நம்மால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும். இதற்காக நாம் நம்முடையை பங்களிப்பை, அர்ப்பணிப்பை செய்ய வேண்டும், இது போன்ற அர்ப்பணிப்புகள் செய்ய நம்மை சார்ந்த பிறரையும் தூண்ட வேண்டும்.

புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் நாம் காட்டும் ஆர்வம், நம் முஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசல்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், அவர் ஒரு சதவீதம் 100 ரூபாய் தம்முடைய முஹல்லாபள்ளி வாசலுக்காக கொடுப்பதில் நிச்சயம் சிரமம் இருக்காது. மாதம் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள், பள்ளிவாசலுக்காக மாதம் 1000 ரூபாய் நிச்சயம் கொடுக்க முடியும். அல்லாஹ்வுக்காக ஏன் இதை செய்யக்கூடாது என்று கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். அந்த தொகையை நீங்கள் சார்ந்திருக்கும் இறையில்லங்களுக்கு அல்லாஹ்வின் பொருத்த்த்தை நாடி மட்டுமே கொடுத்தப் பாருங்கள். அதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ் நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு சதவீதமாவது நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற கேள்வியை நம் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக்கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பனிப்போம். இன்ஷா அல்லாஹ்..

இலங்கையில் பள்ளிவாசலை பாதுகாக்க, போராடி பொதுபல சேனா என்ற அயோக்கிய அமைப்பின் தாக்குதலால் உயிர் நீத்த இரண்டு இலங்கை முஸ்லீம் சகோதரர்களுக்காக நாம் இந்த தருணத்தில் துஆ செய்வோமாக. இந்த செய்தி தொடர்பான சுட்டிக்கு சென்று பாருங்கள் https://www.facebook.com/photo.php?v=645776845491900&set=vb.140589952677261&type=2&theater

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

கையில்எடுத்திருக்கும்சாட்டைநல்லசாட்டை!ஆனால்திருந்துவார்களா என்பதுசந்தேகமே!நல்லமாட்டுக்குஒருசூடுபோதும்!சண்டிமாட்டுக்கு?

Ebrahim Ansari said...

தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும்.

தொடக்கமே பிரமாதம். படிப்பவர்களின் மனங்களில் ஊசியாகத் தைக்கும் கேள்விகள்.

படித்து உணர்பவர்கள் இவற்றிற்கு பரிகாரம் காண முயற்சிப்பார்களாக!

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
இப்னு அப்துல் ரஜாக் said...

பல மையில் தூரத்தில் உள்ள பாபர் மசூதி, மத வெறியர்களால் தகர்க்கப்பட்ட போது வெகுண்டெழுந்தோம், இன்றும் அதற்காக போராடுகிறோம். ஆனால் நம் கண் எதிரே நம்மை சுற்றி இருக்கும் இறையில்லங்கள் பராமரிப்பு இன்றி தவிக்கிறதே, இதற்காக நாம் நம்மால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும். இதற்காக நாம் நம்முடையை பங்களிப்பை, அர்ப்பணிப்பை செய்ய வேண்டும், இது போன்ற அர்ப்பணிப்புகள் செய்ய நம்மை சார்ந்த பிறரையும் தூண்ட வேண்டும்.

தொடக்கமே பிரமாதம். படிப்பவர்களின் மனங்களில் ஊசியாகத் தைக்கும் கேள்விகள்.

Dear Thaj ! First of all, I ask a question my self.what was / is my part for the house of Allah.And my answer is nothing and I am ashamed of it. But insha Allah , in future, I / we should focus on this direction .
May Allah forgive us.
Dear bro Thaj , really I appreciate you to make awarness,jasakkallah Khair

Aboobakkar, Can. said...

பதிவிற்கு சம்பந்தமில்லாத ஆனால் உலக முஸ்லிம்களுக்கு சம்பந்தமான ஒரு சிறிய கருத்து ................
ஈராக்கில் Civil war எனப்படும் உள்நாட்டு போர் உச்சத்தை அடைந்துள்ளது .ஆட்சியில் இருக்கும் சியா பிரிவு அரசினால் சன்னி முஸ்லிம்கள் ஒடுக்கபடுவதாக சன்னி கிளர்ச்சி ஆளர்கள் அல் காய்தாவின் உதவியுடன் ஈராக்கின் பல நகரங்களை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன .

இதற்கிடையில் அமெரிக்க ஈராக்கில் உள்ள தனது உடமைகளை பாதுகாக்க இரண்டு போர்கப்பல் மற்றும் 500 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக கூறுகின்றது .....ஈராக்கில் எண்ணெய் வளம் தேடவந்த எருமைமாடு அமெரிக்கா இந்த உள்நாட்டு போரில் ஜெயிப்பது சியாவா? அல்லது சன்னியா என்று? பொறுத்திருந்து உற்று நோக்கி பார்த்துவிட்டு அவர்களின் ஆதரவை அவர்களுக்கு கொடுக்கும் .

sabeer.abushahruk said...

நம் வருமானத்திலிருந்து கொஞ்சமாவது இறை இல்லங்களின் பராமரிப்புக்காகவோ இமாம் மோதினார் போன்றோரின் சம்பளத்திற்காகவோ நாம் அவசியம் பங்களிக்க வேண்டும்.

தம்பி தச்ஜுதீனின் இந்தத் தொடரை வரவேகிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம் வருமானத்திலிருந்து கொஞ்சமாவது இறை இல்லங்களின் பராமரிப்புக்காகவோ இமாம் மோதினார் போன்றோரின் சம்பளத்திற்காகவோ நாம் அவசியம் பங்களிக்க வேண்டும்.

தம்பி தாஜுதீனின் தொடருக்கு வரவேற்பும், எழுதியபடி நம்மவர்கள் சிந்திக்க துஆவும்.


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பள்ளிவாசல்களுக்குள் நுழையும் போது எனக்குள் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்விகளில் இவைபோன்றும் நிறைய உண்டு...

வாழ்நாளில் என்றில்லாமல் வருடத்தில் ஒருதடவை என்றோ அல்லது நமது பங்களிப்பாக ஏதேனும் என்று வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் அவசியம் செய்யனும்...

adiraimansoor said...

தாஜுதீன்
உண்மையிலே சிந்தக்க தூண்டும் பதிவு

ஒவ்வொரு கிருஸ்துவர்கள் தனது முஹல்லாவில் உள்ள சர்ச்சுக்கு தன்னுடைய சம்பலத்தில் 10% கொடுப்பது நம் யார்க்கும் தெரியாது

அதனால் சர்ச்சுகள் எதையும் சுகாதார கேட்டுடன் பார்க்க முடியாது

ஜக்காத்தே சரியாக கொடுப்பதில்லை இவர்களுக்கு சதக்காவை பற்றி எங்கே நினைக்க நேரம்
எல்லோரையும் சின்டிக்க வைக்கும் பதிவு
வாழ்த்துக்கள்

Adirai anbudhasan said...

அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த தலைப்புக்கு நேரடியாக சம்மந்தம் இல்லாத விஷயம். பெரும்பாலான இறையில்லங்கள் சொந்த நிலத்திலே கட்டப்பட்டவை தான். எந்த வித மான அரசு உதவிகளையும் பெறுகின்றவை அல்ல. புனித ரமலான் வருகிறது, நோன்பு கஞ்சிக்கென்று அரசு கொடுக்கின்ற இலவச அரிசியை, பெறாமல் இருத்தல் மிகவும் நல்லது. சம்மந்தப்பட்ட பெருமக்கள் கவனம் செலுத்துவார்களா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு