Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முயலாமையைத் தோல்வியடைச் செய்வோம்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2012 | , , , , ,

விரிக்காதவரைச்
சிறகுகள் கூடப் பாரம்தான்
விரித்து விட்டால்
வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்

முறுக்காதவரை
மீசை கூட வேசம் தான்
முறுக்கி விட்டால்
வீரம் தானாய் பேசும்தான்

பெருக்காதவரை
வீடுகூட நரகம் தான்
பெருக்கிவிட்டால்
“பர்கத்” பொங்கும் சுவர்க்கம்தான்

படிக்காதவரைப்
பாடம்கூடச் சுமைதான்
படித்து விட்டால்
பாடம் சொல்லும் வாழ்க்கைப் பாடம்தான்

முடிக்காதவரைச்
செயல்கள்கூட முடக்கம்தான்
முடித்து விட்டால்
முயலாமைக்குத் தோல்வியே என்றாகும்!

உழாதவரை
நிலம் கூடப் புஞ்சைத்தான்
உழுது விட்டால்
புஞ்சையும்கூட நஞ்சைதான்

எழாதவரை
உடல்கூடப் பிணம்தான்
எழுந்து விட்டால்
பணம்தேடும் யாக்கைதான்

பிறக்காதவரைக்
குழந்தைகூடக் கருதான்
பிறந்து விட்டால்
கருகூட முழுமையான உருதான்

கறக்காதவரைப்
பால்கூட மடியில்தான்
கறந்துவிட்டால்
பாலும் பல்கிப்பெருகும் சத்தாகத் தான்

முயலாதவரைக்
கால்களும் முடமேதான்
முயன்று விட்டால்
உன்வாழ்வும் முன்னேற்றப் “படிக்கட்டில்” தான்!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

8 Responses So Far:

sabeer.abushahruk said...

கவிதை, விரல்பிடித்து அழைத்துச் செல்கிறது விடியலைத் தேடி.

முயலாமை ஓர் இயலாமை என்பதை படம் வரைந்து பாகங்களைக் குறித்ததுபோல் தெளிவாகச் சொல்கிறார் கவிஞர்.

//எழாதவரை
உடல்கூடப் பிணம்தான்
எழுந்து விட்டால்
பணம்தேடும் யாக்கைதான்//

கலக்கல், மிஸ்டர் கவியன்பன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா...

//விரிக்காதவரைச்
சிறகுகள் கூடப் பாரம்தான்
விரித்து விட்டால்
வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்//

இது மட்டும் என்னவாம்... கவிதையின் தலையில் இருக்கும் அழகான கீடம் இது !

அதிரை சித்திக் said...

சோம்பல் முறித்து
சுறுசுறுப்பாக்கும் கவி
நல்லதை சுவை கூட்டி சொல்லும்
வித்தை கவியன்பன் காக்காவால்
மட்டுமே முடியும் ..
இசை கூட்டி சிறார்களுக்கு
பாடலாக கொடுக்கலாம்

Shameed said...

//உழாதவரை
நிலம் கூடப் புஞ்சைத்தான்
உழுது விட்டால்
புஞ்சையும்கூட நஞ்சைதான்//ஊரில் புஞ்சையை உழுதுவிட்டு வந்தேன் இப்போது அது நஞ்சையாக மாறி வருகின்றது

அதிரை என்.ஷஃபாத் said...

நன்செய் புன்செய் நிலங்கள் கொண்டு
பண்செய்தியிருக்கிறார்கள் கலாம் காக்கா!!
-கலக்கல்!!

அன்புடன்,
என்.ஷஃபாத்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இங்கே இத்தளம் வந்து போனால்
நல்லா கவிக்கலாம்
அங்கே ஈழம் போய் வந்தால்
நல்லா கதைக்கலாம்.

ஜெயிக்காத வரை
வேட்பாளர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை
ஜெயித்து விட்டால்
அப்பிள்ளை கூட உங்களுக்கு தொல்லை.

தேர்தல் வரை
அவர்கள் பட்டதோ பஞ்சம்
தேர்வுக்கு பின்
அவர்கள் பெறுவதோ லஞ்சம்!

Ebrahim Ansari said...

அன்புள்ள சகோதரர் கவியன்பன் அபுல் கலாம் அவர்களே!

படித்த்துவிட்டு பிரம்மித்துப் போனேன். அருமையான தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை. அண்மைக்காலங்களில் உங்களின் கவிதைகளில் புது மெருகு கூடி இருக்கிறது என்று நான் குறிப்பிட்டதற்கு மற்றொரு சான்று.

அதிரை நிருபர் தளம் பெற்றிருக்கும் பேறுகளில் இப்படி இதயத்தின் கதவைத்தட்டும் கவிஞர்களின் பங்கு மகத்தானது. இந்த இன்பத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இறைவனைத்தான் புகழவேண்டும்.

கை கொடுங்கள் கவியன்பன்.

கடைசிவரிகளில் படிக்கட்டுகளை புகுத்தி இருப்பது தம்பி ஜாகீரின் தாக்கம் பரவலாக நம் அனைவரையும் பாதித்து இருப்பதன் உதாரணம்.

தம்பி M.H.J. நல்ல குரும்புக்காறராக இருப்பீர்கள் போல் தெரிகிறதே.

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏற்பீரே என் ஏற்புரையை:

கவிவேந்தர் சபீர் :
உங்களின் கணிப்பு மிகச்சரியே; ஒவ்வொரு நாளும் காலையில் சோம்பல் எனும் சாம்பலைத் தட்டி விட்டு வீறுகொண்டு எழும் என்றன் ஆற்றல் எனும் தீயினாற்றான் என் தொழிலின் ஆக்க சக்தி உண்டாகி காலைத் தூக்கம் களைந்துக் காசோலையாக அதுவே தாய்கம் எட்டுகின்றது.

என் கவிதைகள் விரைவாகவும் நிறைவாகவும் பதியப்பட வேண்டும் என்பதில் நீங்களும் நெறியாளர் அவர்களும் கொண்டுள்ள ஆர்வத்தின் பிரதிபலிப்பாக ஈண்டு என் கவிதை உங்களின் பல்கலைக்கழகப் பாடத்தில் இடம்பெற்றுள்ளது
ஜஸாக்கல்லாஹ் கைரன்.

அன்பு நெறியாளர், அபூ இப்ராகிம்:

துவக்க வரிகள் என் உள்ளத்தில் நீண்டநாட்களாக ஊறிய வரிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்

தமிழூற்று அதிரை சித்திக்:

இப்பொழுது தான் வித்தைகளைக் கற்றுக் கொண்டிருக்கும் :கற்றுக்குட்டி:இன்ஷா அல்லாஹ் போகப் போகத் தெரியும்; இந்தக் கவிப்பூவின் வாசம் புரியும்!


அன்புத்தம்பி இளங்கவிஞர் ஷஃபா அத்:


பாலும் பிழிதேனும் பாகும் பருப்புமாய்
நாலும் கலந்ததாய் நற்சுவைப் - போல
இளமைக் கவிஞர் இயம்பிய சொற்கள்
வளமை வியந்துநிதம் வாழ்த்து

ஜஸாக்கல்லாஹ் கைரன்

இலண்டன் இளவல் ஜெஹபர் சாதிக்:

அடியொற்றி அடியெடுத்து வைக்கின்றீர்; வாழ்க; வளர்க!
:சந்திப்பு: பகுதியில் உங்கள் அழகு முகம் கண்டு வியந்தேன்; ஆம், உங்களின் எழுத்தை வைத்து நீங்கள் என் வயதை ஒத்தவர் என்று எண்ணினேன்; அஃது என் தவறென்று உணர்ந்தேன்; இவ்வளவு இளம்வயதில் எப்படி உங்களால் அனுபவமாய் எழுத முடிகின்றது?

ஜஸாக்கல்லாஹ் கைரன்

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா:
உண்மைதான்; என் எழுத்தையும் பாக்களையும் மெருகூட்டியவர்கள் என் ஆசான்கள்; குறிப்பாக அதிரை அஹ்மத் காக்கா அவர்கட்கு அடியேன் நன்றி கடன் பட்டுள்ளேன்; மேலும், தங்களைப் போன்ற மூத்த சகோதரர்களும் என் கவிதையைப் படித்து ஆர்வமூட்டும் பொழுது என்னுள் நிதானம் எழுகின்றது; கவிதைகளை என் கரங்கள் எழுதுகின்றன.

தங்களின் துஆவை என்றும் நாடுகின்றேன், காக்கா

ஜஸாக்கல்லாஹ் கைரன்உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு