கரன்ஸிக் களேபரங்கள்


கையில் இருந்த
காசை
வெறும்
காகிதம் என்றது
முட்டாள்களின்
முக்கிய அறிவிப்பு

செல்லாத நோட்டுகளைக்
கொடுத்துவிட்டு
இல்லாத நோட்டுகளை
வாங்கிக் கொள்ள
வங்கிச் செல்ல
அங்கோ
வாக்காளப் பெருமக்கள்
போர்க்காலக் கைதிகள்போல்
வரிசையில் நீள்கின்றனர்

பணம் மாற்ற வழி செய்யாமல்
பணம் அற்றப் பரிவர்த்தனைக்கு
பாரதத்தை மாற்றும்
மந்திரப் பிரதமர்
கள்ளநோட்டுக் கனவில்
வில்லனாகிப் போனார்

மேல்ச்சட்டை இல்லாத
மேனி இளைத்தோர்
காசட்டை இல்லாததால்
கஞ்சிக்கு வழியின்றி
காய்ஞ்சித் தவிக்கின்றனர்

பால் வாங்கப் பணமில்லை
பள்ளிப்
பரீட்சைக்குக் கட்டப் பணமில்லை

சில்லறையில்லாத் திண்டாட்டத்தில்
இந்தியா
கல்லறைக்குள் ளானதுபோல்
மூச்சு முட்டுகிறது

கருப்புப் பணம்
காத்து வைத்திருப்போரை
காத்துக் கருப்பும் அண்டாது

வேர்த்துழைத்துச்
சேர்த்தப் பணம்
வெற்றுப் பணம் என்றானதுவே

மோடி
அழைத்துச் செல்லும்
வளர்ச்சிப் பாதை
பாரதத்தைப்
பாதாளத்தை நோக்கி
நகர்த்துகிறது

 சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்