Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நன்றி ஆசான்களே! 53

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2013 | , , , ,

எழுத்தறிவித்தவன் இறைவன்
எடுத்தறிவித்தோர் நீவிர்
சொல்லையும் எழுத்தையும் கோத்து
சிந்தனை விதைத்தீர் யாத்து

அன்னை கற்பித்த ஒலிகளுக்கு
அர்த்தம் கற்பித்த ஆசான்களே
தந்தை போதித்த வார்த்தகளை
தரமாய் விளக்கிய வாத்திமாரே

முன்னேற்றம் வானுயரம்
முதற்படியாய் வாய்த்தோரே
முத்தமிழும் அறிவியலும்
கணக்கோடு கற்பித்தீர்

பயணப்பட்டு செல்லுகையில்
பயிற்றுவித்தப் பாடங்களே
வழித்துணையாய் வாய்த்திடவே
வாரித்தந்த வள்ளல்களே

அறியாமை பிணி நீக்கி
அழியாத கல்வி தந்தீர்
கல்லாமை இழி வகற்றி
காலமெல்லாம் வாழச் செய்தீர்

கணிதம் சொல்லித் தந்ததொரு
மனிதருள் மாணிக்கம்
வாழ்க்கையின் புதிர்களுக்கும்
சூத்திரம் சொன்னவர் நீங்கள்

இயற்பியல் பாடத்தில்
ஈர்ப்பு இயல்பானது
பெளதீக வாத்தியாரின்
புல்லரிக்கும் போதனையால்

கணக்கியலை கசடற
கற்பொழுக கற்பித்தீர்
கணினிமுன் அமர்ந்தாலும்
கற்றதனைத்தும் கைகொடுக்கிறது

வணிகவியலும் வாழ்வியலுக்கு
வரமென்று வார்த்தெடுத்தீர்
வருமானம் பெருக்கியெடுக்க
வசந்தங்களை வரவைத்தீர்

கான்வெண்ட் ஆங்கிலமோ
நுணிநாக்கில் தடுமாற
கல்வெட்டென பதிந்தது
கற்றுத்தந்த தோரணை

‘இன்’முக ஆசான்களின்
இலகுவான வகுப்பெடுப்பால்
‘தமிழ்’தாஸானோம்
பன்முகம் கொண்டோம்

அரசியலிலும் சமூகவியலிலும்
அத்தனை கல்வியிலும்
அடிப்படைகள் கற்றுத்தந்தீர்
அகிலத்தை வென்றிடவே

எழுத்தறிவித்தீர் ; எழுந்து நின்றோம்
நீதிபோதித்தீர் ;நேர்கொண்டு பார்த்தோம்
நடத்தியப் பாடத்தால் ; நிமிர்ந்து நடந்தோம்
மாக்களாகிப்போகாமல் ; மக்களாக்கி மகிழ்ந்தீர்கள்

தங்களை வருத்தி
எங்களை உயர்த்திய
அத்துணை ஆசான்களும்
அன்பான நன்றியும் அக்கறையோடு துஆவும்
நீங்கள் நிடூழி வாழ்க!!!

Sabeer Ahmed abuShahruk

53 Responses So Far:

Unknown said...

கற்றதனைத்தும் கைகொடுக்க கால்வாய் நீர் ஓட்டம்போல் கவி பிறந்தது சபீரின் விரல் சொடுக்கி.

நாம் வாழ்வில் முன்னேற்றம் கண்டோமோ இல்லையோ , ஆசரியர்கள் நம்மை பட்டை தீட்ட எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளுக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களே.

// எழுத்தறிவித்தீர் ; எழுந்து நின்றோம்
நீதிபோதித்தீர் ;நேர்கொண்டு பார்த்தோம்
நடத்தியப் பாடத்தால் ; நிமிர்ந்து நடந்தோம்
மாக்களாகிப்போகாமல் ; மக்களாக்கி மகிழ்ந்தீர்கள்//

சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க நமக்கு நம் ஆசிரியர்கள் வழி நடத்திய பாதைகள் மறக்கமுடியாதவை என்பதை சுட்டும் அழகிய வரிகள் .எனக்கு பிடித்த வரிகள்.

(ஆசிரியர் தின விழா சிறக்க வாழ்த்துகின்றேன் )

அபு ஆசிப் அப்துல் காதர்

அதிரை.மெய்சா said...

ஆசிரியர் தினத்திற்காக கல்வி கற்றுத்தந்த ஆசானை நினைவுகூறி நீ படைத்த சிறப்புக் கவிதை அருமை.. வாழ்த்துக்கள் நண்பா.!

Unknown said...

ஆசிரியர் தின விழாவை நேரலையில் ஒளிபரப்ப அதிரை நிருபர் வலைத்தளம் எடுத்துக்கொண்ட முயற்ச்சிகள் பாராட்டத்தக்கவை.

இதுபோன்ற பயனளிக்கக்கூடிய நல் விஷயங்களை அவ்வப்பொழுது நேரலையில் தரும் முயற்ச்சியினால் வலை தளத்தின் தரம் மெருகேறும் என்பதில் சந்தேகமில்லை.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

ஆச்சர்யமாயிருக்குது.

அரைக்காணி நிலத்திற்கே அடிச்சிக்கிட்டு விழும் பங்காளிகள் வாழும் காலத்தில், இந்த ஆசிரியர்களுக்கான வாழ்த்தில் தன் பங்குக்கும் எழுதியுள்ள அபு இபுறாகீம் தமது பெயரையும் கீழே பொறித்து (ஃபிரை இல்லேப்பா) வைக்காதது ஏன் என்று விளங்கவில்லை.

(எது அபு இபுறாகீம் எழுதியது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு "ப்ளாஸ்ட்டிக் பையில் வைக்காமல்" ஏதும் பரிசு தரும் திட்டம் இருக்குமோ)

zubair said...

எனக்கு கல்வி கற்று தந்த ஆசான் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Yasir said...

//எழுத்தறிவித்தவன் இறைவன்
எடுத்தறிவித்தது நீவிர்/// ஆஹா...கம்பீரமாக துவங்கும் எங்கள் கவிக்காக்காவின் கவிவரிகள்...ஆசிரியர்களை மதித்து நடந்தவர்களுக்கு மன எழுச்சி/மகிழ்ச்சி தரும் கவி(த்)தை ஒவ்வொரு வரிகளிலும்.....எங்களை செம்மை படுத்திய ஆசிரியர்களுக்கு துவாக்களும் வாழ்த்துக்களும்

Yasir said...

//அபு இபுறாகீம் எழுதியது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு// கடைசி நான்கு வரிகளாக இருக்குமோ....கவிக்காக்கா ....வஞ்சகம் இல்லாமல் வாழ்த்துவதில்...பஞ்சம் செய்யாதவர்கள் அபுஇபுராஹிம் காக்கா

sabeer.abushahruk said...

இல்ல யாசிர்,

ஒரு சின்ன clue தர்ரேன்.

"காக்கா, எங்க படிப்பைப் பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே?" - அபு இபு

"உங்க படிப்பைப்பற்றி நீங்களே எழுதி சேர்த்துக்கோங்க" - நான்

அதிரை என்.ஷஃபாத் said...

/*
‘இன்’முக ஆசான்களின்
இலகுவான வகுப்பெடுப்பால்
‘தமிழ்’தாஸானோம்
பன்முகம் கொண்டோம்
*/

ஆஹா.. ஆஹா... 'மாத்தி' யோசிச்ச விதம் அழகு!!

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...


மனிதருள் மாணிக்கம்
வாழ்க்கையின் புதிர்களுக்கும்
சூத்திரம் சொன்னவர் நீங்கள்//

மதிப்பிற்குரிய ஜனாப் ஹாஜா முஹைதீன் சார் அவர்களை குறிக்கும் வரிகள்

//இயற்பியல் பாடத்தில்
ஈர்ப்பு இயல்பானது
பெளதீக வாத்தியாரின்
புல்லரிக்கும் போதனையால்//

மதிப்பிற்குரிய ஜனாப் அலியார் சார் அவர்களை குறிக்கும் வரிகள்

//‘இன்’முக ஆசான்களின்
இலகுவான வகுப்பெடுப்பால்
‘தமிழ்’தாஸானோம்
பன்முகம் கொண்டோம்//

மதிப்பிற்குரிய திரு சண்முகம் சார் அவர்களை குறிக்கும் வரிகள்


என் கணிப்பு சரியா ?

இப்படி வாத்தியார்களை வார்த்தைக்குள் அடக்கும் வித்தையை கற்றுத்தந்தது யார் என்று சொல்லவில்லையோ !!!!

sabeer.abushahruk said...

ஷஃபாத்,

கவிதை என்ற பெயரில் கற்கண்டு தந்துவிட்டுப் போன உங்களின் சொற்கண்டு ரொம்ப நாளாச்சு.

இப்ப, மாற்றியும் மறைத்தும் யோசித்ததைக் கண்டு பிடித்துவிட்டதுபோல கருத்து சொல்லியிருப்பது நிஜமாகவேவா போட்டு வாங்குறீகளா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்வி தந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!

இன்றைய ஆசிரியர் விழா சிறப்புற வாழ்த்துக்கள்!

அதோடு இக்கவியாக்கத்தின் ஆசிரியரும் எனது கவி ஆசிரியருமாகிய உங்க(ள்க)ளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

ஹமீது,

கணிப்புக்கு 80/100 மார்க்ஸ்தான். இயற்பியலை என்னுள் விதைத்து வளர்த்தது என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் எல் ஏ என்று அழைக்கப்படும் லியாகத் அலி ஸார் அவர்கள். அதை ஸ்திரப்படுத்தியது சென்னை புதுக்கல்லூரியின் பேரா. செல்லப்பா மற்றும் அப்துல்லா அவர்கள். கலந்துரையாடி கவனம் ஈர்த்தது மதிப்பிற்குரிய என் ஏ எஸ் சார் அவர்கள், அடிக்கடி நினைவு படுத்துவது ஹமீது என்னும் நீங்கள்.

அலியார் சார் போதித்த ஆங்கிலம்தான் என் பிழைப்புக்கான அஸ்திவாரம்.

தமிழ் கணிப்பு ஒன்று சரி; மற்றது ---தாஸ்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
ஹமீது,

//கணிப்புக்கு 80/100 மார்க்ஸ்தான். இயற்பியலை என்னுள் விதைத்து வளர்த்தது என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் எல் ஏ என்று அழைக்கப்படும் லியாகத் அலி ஸார் அவர்கள். அதை ஸ்திரப்படுத்தியது சென்னை புதுக்கல்லூரியின் பேரா. செல்லப்பா மற்றும் அப்துல்லா அவர்கள். கலந்துரையாடி கவனம் ஈர்த்தது மதிப்பிற்குரிய என் ஏ எஸ் சார் அவர்கள், அடிக்கடி நினைவு படுத்துவது ஹமீது என்னும் நீங்கள்.

அலியார் சார் போதித்த ஆங்கிலம்தான் என் பிழைப்புக்கான அஸ்திவாரம்.

தமிழ் கணிப்பு ஒன்று சரி; மற்றது ---தாஸ்//ஓகே( நான் ) பாஸ்

Shameed said...

ஆசிரியர் தினமும் அதுவுமா நான் முதன் முதலில் 80 / 100 மார்க்க வாங்கி உள்ளேன் அதுவும் கவிதை வாத்தியார் கையால்

Shameed said...

இது மாதிரி கேள்வி பெருசாவும் பதில் சின்னதாகவும் இருந்தால் முதல் முறை 80 மார்க்
படிப்பு இப்படித்தான்னு தெரிந்து இருந்தால் இன்று விமானம் ஓட்டி கொண்டிருப்பேன்

sabeer.abushahruk said...

//இக்கவியாக்கத்தின் ஆசிரியரும் எனது கவி ஆசிரியருமாகிய உங்க(ள்க)ளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்!//

எம் ஹெச் ஜே,

கற்றுத் தருபவரே ஆசிரியர். உங்களிடம் ஊறிக் கிடந்தவற்றை மொண்டெடுத்து தானும் பருகி தரணிக்கும் பகிர்ந்த நான் ரசிகன் மட்டுமே.

தங்களின் அன்பிற்கு நன்றி.

sabeer.abushahruk said...

ஆசிரியர் தினத்தில் என் வகுப்புத் தோழன்கள் காதர் மற்றும் அதிரை மெய்சாவும் "உள்ளேன் ஐயா" என்று வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

கவிதை கட்டுரை என்று கலக்கிக் கொண்டிருக்கும் அதிரை மெய்சாவும் பள்ளிக்காலங்களில் அதிரையின் ஈ எம் ஹனீஃபாவாகத் திகழ்ந்து தற்போது சிறப்பான எழுத்தாற்றலை வெளிப்படுத்திவரும் காதரும் வந்து பள்ளிக்காலங்களை நின்வூட்டிச் சென்று விட்டாரகள்.

ஏம்ப்பா, அடுத்த பீரியட் வரையுமாவது இருக்கக் கூடாதா?

Abdul Razik said...

ஆசிரியர் தினம் நல்ல முறையில் நடை பெற்று மாணவர்களுக்கு நல்ல அறிவுறைகளை வழங்க என் வாழ்த்துக்கள், கவிஞரின் மேலே உள்ள கவிதையை நிகழ்ச்சியில் யாராவது வாசித்தால் நன்றாக இருக்கும்.

மேலும் என்னுடைய சிறிய வேண்டுகோள்...
அதிரை நிருபரை அலங்கரிக்கும், கவிஞர்கள், பொருளியல் வல்லுநர்கள், கணினி வல்லுநர்கள், தொடர் கட்டுரைகள் எழுதி வரும் கட்டுரை ஆசிரியர்கள் பின்னூட்டம் மூலம் அழகிய கருத்துக்களை எழுதும் ஆர்வளர்கள் அனைவரும் படித்தவர்களே, அனைவரும் ஒருங்கிணைந்து நம் எதிகால மேதைகளாகிய நம் சிறுவர்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊக்குவிக்கும் வன்னம் தரமான கல்வி , ஆங்கில அறிவு கணினியின் அவசியம் மற்றும் பொது அறிவின் அவசியம் போன்றவைகளை அதிரை நிருபரில் வலம் வரும் அந்தந்த துறையைச் சேர்ந்தவர்கள் முயற்ச்சி செய்து சிறிய நூல் இலவசமாக வெளியிட்டால் நல்லது என கருதுகிறேன்.

Abdul RAzik
Dubai

M.B.A.அஹமது said...

நான் கொஞ்சம் லேட் ஏற்கனவே ஹமீது காக்கா 80 மார்க் எடுதுள்ளர்கள் நான் 100 எடுத்திருப்பேன் இயற்பியல் பௌதிகம் என்றாலே M L A தான் அலியார் சார் வரலாறு . கண்ணியம் அது ஹாஜா மொஹிதீன் சார் .பன்முகம்- சண்முகம், தாஸ்- ராமதாஸ் விடை பதியப்பட்டதால் சொல்லவில்லை கண்ணை மூடிகொண்டுகூட சொல்லிவிடுவேன் .இத்தருணத்தில் வாவன்னா சார் அவர்களையும் தமிழ் துறை தலைவர் அப்துல் காதர் சார் அவர்களையும் நினைவில் கொள்வோம் அவர்களுக்கு என் அன்பான சலாம் .லேட்டஸ்ட் என் அருமை நண்பர். காதர் முகைதீன் பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்களுக்கும் என் சலாத்தை சொல்வதில் இந்த ஆசிரியர் தினத்தில் பெருமை கொள்கிறேன்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahrukh,

Thanks a lot for beautiful poem for submitting gratitude and appreciating our teachers. Actually teachers are one of the great influencing personalities in our childhood to till we finish our studies.

Respecting masters fetch growth to students. Its one of the keys for becoming master ourselves.

Whoever had become overconfident in their language skills (particularly Tamil and English) and cut their language classes in schools and colleges, may realize after study life about the mistake they made.

A country which respects teachers and give highest priority to their teaching profession becomes prosperous and competitive country in the world. Eg. Singapore is one of the Asia's strongest economy and Finland is another country which highly values teaching profession.

Brother Mr. Abdul Razik's suggestion is highly appreciated and can be considered.

O Allah, Enrich Our Knowledge.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

sabeer.abushahruk said...

முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று மொத்தமாக யாவரும் சங்கம் வைத்தே தமிழ் வளர்த்தனர். எங்கள் ஆசான்களோ எந்தவொரு சங்கமும் வைக்காமல் தத்தம் அங்கம் வதைத்தே எங்களைத் தங்கமென வார்த்தனர்.

இன்று தங்களுக்கெனவே சிறப்பான நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்குள் சங்கம் பிரித்து கல்வி புகட்ட முனைந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நண்பா ராஜிக்,

// தரமான கல்வி , ஆங்கில அறிவு கணினியின் அவசியம் மற்றும் பொது அறிவின் அவசியம் போன்றவைகளை//

இடையில் அருகி வரும் "தமிழ் வளர்ச்சி" என்றும் சேர்க்க வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் ஆசிரியர் அவர்களே!

//உங்களிடம் ஊறிக் கிடந்தவற்றை மொண்டெடுத்து தானும் பருகி தரணிக்கும் பகிர்ந்த நான் ரசிகன் மட்டுமே.//

நான் கவி ஆசானாகவே மதிக்கிறேன்.
குறிப்பாக இந்நாளில்!

KALAM SHAICK ABDUL KADER said...

அகரம் கற்பித்துச்
சிகரம் ஏற்றிவிட்டு
உயரம் காட்டியவர்களை
உயரம் சென்றாலும் மறவேனே!//கான்வெண்ட் ஆங்கிலமோ
நுணிநாக்கில் தடுமாற
கல்வெட்டென பதிந்தது
கற்றுத்தந்த தோரணை\\


கல்வெட்டாய்ப் பதிந்து விட்ட கவிவேந்தரின் கவி வரிகள்!

கா.மு.பள்ளி என்னும் தாய்மடியில் அறிவமுதம் ஊட்டப்பட்டதன் பலனை இன்றும் அனுபவிக்கும் எமது நன்றிக் கடன்!

கணிதமேதை- இலக்கியச் செம்மல் ஜனாப் ஹாஜா முஹைதீன் சார்
ஆங்கில ஆசான் ஜனாப் அலியார் சார்
தமிழமுதம் ஊட்டி என்னைப் புலவராக்க எண்ணிப் பயிற்சியளித்தத் தமிழாசான்கள் புலவர் ஷண்முகனார் மற்றும் உயர் திரு. இரமதாஸ்
மறக்கவியலாத மாண்புமிக்க ஆசான்கள்.

(புலவர் ஷண்முகனாரின் முயற்சியும் பயிற்சியும் என்னை அவரைப் போன்ற புலவர் பட்டப் படிப்புக்குத் தூண்டினார்கள்; வேண்டினார்கள்;நூலகத்திலுள்ள அனைத்து “யாப்பிலக்கண நூல்களையும்” என்னிடம் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்; ஆயினும், குடும்பத்தார் “வணிகவியல்”தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் திரு. ஷண்முகனார் அவர்களின் அவாவினை நிறைவு செய்ய இயலவில்லை; ஆயினும் அவர்கள் ஊட்டிய தமிழமுதம் இன்றும் என்னுள் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் விரைவில் அவர்களின் அவாவினை நிறைவு செய்வேன் என்று இந்த நன்னாளில் அவர்கட்கு உறுதியளிக்கிறேன்)

அண்மையில் என் வகுப்புத் தோழர் வீட்டுத் திருமண விழாவிற்கு வந்த தமிழாசான் திரு.இரமதாஸ் அவர்களைச் சந்தித்ததில் பேரானந்தம் அடைந்தேன்; அவர்களிடம் என் கவிதைத் தொகுப்பினைப் பற்றி சொன்னதும், அவர்களும் ஆன்ந்தத்தில் கண்ணீர் வடித்து, “ஒரு தந்தையைப் போன்று மகிழ்கின்றேன்; நான் கற்பித்த மாணவனைக் கண்டு, என் கற்பித்தலுக்குக் கிடைத்த பேறாக எண்ணுகின்றேன்” என்றார்கள்.

ஓவிய ஆசான் வாவன்னா சார் அவர்கள் , ஓவியம் மட்டும் கற்று தரவில்லை; இடையில் ஆங்கில இலக்கணமும் கற்பித்தார்கள்.

இப்படியாக , மலரும் நினைவுகளாய் மாண்புமிக்க ஆசான்களை, இந்த நாளில் அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டவனாக என் கருத்துக்களைப் பதிகின்றேன்.

தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும்
அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம்
இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல்
சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி
வியாபார நோக்கங்கள் விட்டொழித் தெல்லார்க்கும்
நியாயமான கல்விதனை நிலைநிறுத்தும் நிர்வாகம்
அயராது ழைக்கின்ற ஆசிரியர் தலைமையினால்
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நானும் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் (அப்போ ஆண்கள் என்று இல்லை) படித்தவன் சார் !

லேட்டாக வந்துட்டேன்... ஏன்னா படிக்கிற காலத்துலேய இதுமாதிரியான விழாக்களுக்கு ஆர்கனைசராகவே இருந்துட்டேன்... அதான் இங்கேயும் லேட்டு !

மேல்நிலைப் படிப்பில் வணிகவியல் பிரிவில் ! படித்த என் பங்கிற்கு பதிவில் இணைத்துக் கொண்டேன்.

ஸ்கூல் விட்ட உடணே இங்கே தான் வர்ரேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத் தம்பி அழகு ஷஃபாத், அஸ்ஸலாமு அலைக்கும்!


\\ஆஹா.. ஆஹா... 'மாத்தி' யோசிச்ச விதம் அழகு!!//

“68 ரூபாய், 01 டாலர்” என்று நீங்களும் மாத்தி யோசித்தவர்தானே இளைய கவிநிலாவே! முகநூலில் உங்களின் முகத்தில் புதைந்து கொண்டுதானே இருக்கிறேன்!

ஏங்குகிறேன் யானும் உங்களின் கவிதை வரிகளைக் ப(கு)டிக்க!

என்றைக்கு கா.மு.கல்லூரி ஆண்டு விழா மலரில் உங்கள் கவிதைகளை வாசித்தேனோ, அன்று முதல் உங்களை நேசித்தேன்; உங்களின் கவிதைகளைப் போல் எனக்குள்ளும் உணர்வுகள் ஊற யாசிதேன்!

என்றைக்கு அதிரை அனைத்து முஹல்லா அறிமுக உரையில்- துபையில் பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் உங்களின் கவிப்புலமை பற்றி சிலாகித்துச் சொன்னார்களோ, அன்றைக்கே உங்களின் கவிதைகளைப் படிக்கவே துடித்தவன்.

தமியேனும், பணிச்சுமைகள் முதல் பலவேறு சுமைகட்கிடையிலும், ஏதோ கவிதைகளைப் படைக்கின்றேன்;பதிகின்றேன். ஆயினும், மூத்தவர்களான பேரறிஞர்கள் அஹ்மத் காக்கா மற்றும் ஜமீல் காக்கா இருவரும் “ஷஃபாத் கவிதை எங்கே காணோம்?” என்று ஏக்கத்துடன் கேட்கும் அளவுக்கு ஈர்த்து விட்ட உங்களின் உணர்வு மையால் வரையப்பட்ட உள்ளார்ந்த கவிதைகளைக் காணவே ஏங்குகிறேன்.

இன்னும் என்ன தயக்கம்?
மின்னுமா உங்களின் முழக்கம்?

Aboobakkar, Can. said...

ரெயின் ரெயின் கோ அவே கம் கம் அனதர் டே என்று இவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துத்தான் ஊரில் மழையே வராம போச்சு .......

KALAM SHAICK ABDUL KADER said...

எதிர்கால இளையோரை உருவாக்குகின்ற தூய்மையான, உன்னதமான, பணிசெய் ஆசிரியப் பெருந்தகைகட்கு உளங்கனிந்த ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

கிரவுன் கலந்துகொள்ளாதது, ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் ஏதோ விடுபட்டதுபோல் பெருங்குறையாகவே தெரிகிறது.

எங்கே அவர்?

கவியன்பனின் ஆசிரியர் தின ஞாபகங்கள் சுவாரஸ்யமாகவும் மனம் கவர்வதாகவும் இருக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவிகள் கவனிக்க:
//எழுத்தறிவித்தவன் இறைவன்; எடுத்தறிவித்தது நீவிர்//

எனும் முதலிரு வரிகளில் திணைப்பிழை உள்ளது.

எடுத்தறிவித்தது = எடுத்து + அறிவித்த + அது.

"எடுத்தறிவித்தோர்" (அ) "எடுத்தறிவித்தவர்" என்பது திருத்தமாயிருக்கும்.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா,

தாங்கள் நலமாக இருக்க என் துஆ

அ.நி.: காக்கா சுட்டிக் காட்டும் அழகியத் திருத்தத்தை மேற்கொள்ளவும்.

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

Ebrahim Ansari said...

இந்த உணர்வு பூர்வமான கவிதையை நேற்றைய விழாவில் , பள்ளியின் தமிழ்த்துறை ஆசிரியரும் வரவேற்புரை கவிதை வாசித்த ஜனாப். உமர் பாரூக் அவர்களிடம் கொடுத்து வாசிக்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால் நிகழ்ச்சி நீண்டு மக்ரிபுக்கு நேரமாகிவிட்டதால் வாசிக்க இயலவில்லை ஒரு சிறு குறை. இருந்தாலும் இப்படி ஒரு கவிதை வந்திருப்பதை கூட்டத்தில் அறிவித்துவிட்டோம். இதனை படிகள் எடுத்து அனைத்து ஆசிர்யர்களுக்கும் வழங்கவும், காலை இறைவணக்க கூட்டத்தில் படித்துக் காட்டவும் தலைமை ஆசிரியரும் தமிழ்த்துறையும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். முதலில் சில தனிப்பட்ட வேலையின் ஆழத்தில் வீழ்ந்துவிட்டதால் பலதைவிட்டு இங்கே தொடுகிறேன். இதற்கிடையில் அற்புதமான பல ஆக்கம் கருத்திடமுடியாமல் போய் விட்டது. அதிலும் மச்சான் மன்சூர் அவர்களின் கன்னிப்பார்வை ( நான் இங்கே குத்து(கரிங்)கல்லாட்டம் உக்காந்து இருக்கேன் கிரவுன்மச்சான் கண்டுகொள்ளவே இல்லையே?)பார்த்து பரவசம்!எழுத்து ஈர்கிறது அவர்வசம்!தனித்தமிழ் எழுத்தோ'கனிரசம்"(போதுமா மச்சான்!).

crown said...

எழுத்தறிவித்தவன் இறைவன்
எடுத்தறிவித்தோர் நீவிர்
சொல்லையும் எழுத்தையும் கோத்து
சிந்தனை விதைத்தீர் யாத்து
------------------------------------------
இங்கேயும் எடுத்து அறிவித்தது ஒரு ஆ(பெரியவர்)சிரியர்(அதிஅழகு)!அதை எடுத்து மாற்றி அமைத்தது ஓர் அழகு! இங்கே கவிதைக்கோலம் அலங்கோலமாக்கப்படாமல் இலக்கணத்துடன் மேலும் அழகாய் மாற்றிவைக்கபட்டுள்ளது!

crown said...

பயணப்பட்டு செல்லுகையில்
பயிற்றுவித்தப் பாடங்களே
வழித்துணையாய் வாய்த்திடவே
வாரித்தந்த வள்ளல்களே
---------------------------------------------
படித்தபடி நட! வாழ்வை நல்லபடி கடக்க!படிக்க வேண்டும் என தூண்டும் அறிவுச்சுடரே!வாத்தியார்! அவர் வத்திவைக்கும் அறிவுச்சுடர்,வரும் தலைமுறைக்கும் பத்திவைக்கும் படி இருப்பதால் போகும் பாதையெங்கும் இருள் நீக்கும் விளக்காய் வாத்தியார் இருக்கிறார்கள்.

crown said...

அறியாமை பிணி நீக்கி
அழியாத கல்வி தந்தீர்
கல்லாமை இழி வகற்றி
காலமெல்லாம் வாழச் செய்தீர்
----------------------------------------
பலர் நம்மை ஏதும் இழிச் சொ(ற்)ல்"கல் கொண்டு ஆமையை அடிப்பதுபோல் நம்மை கல்லாமைக்காரன் என தாக்காமல் நம் மேல் பழிச்சொல் இல்லாமை ஆக்கிய பெருமைக்குரியவர்கள் நம் ஆசிரியர்கள்.

crown said...

கான்வெண்ட் ஆங்கிலமோ
நுணிநாக்கில் தடுமாற
கல்வெட்டென பதிந்தது
கற்றுத்தந்த தோரணை
------------------------------------
ஆங்கிலம் வேதனைத்தரும் ரோதனை ஆகாமல் கற்றுத்தந்த தோரணை எழுச்சி!

sabeer.abushahruk said...

சிறப்புச் சொற்பொழிவில்லாத மேடைப்பேச்சா? கிரவுனரை இல்லாத கவிதைப் பதிவா? கிரவுனால் வாழ்த்தப்படாத ஆசிரியர் தின நாயகர்களா?

என்றெல்லாம் குறை வந்துவிடாமல் இருக்க இதோ சொல்லெடுத்து வளைத்து அன்பெய்துகொண்டிருக்கிறார் கிரவுன். (அம்பல்ல, எழுத்துப்பிழையற்ற அன்புதான் எய்துகொண்டிருக்கிறார்)

இப்பத்தான் அப்பாடா என்றிருக்கிறது.

crown said...

இன்’முக ஆசான்களின்
இலகுவான வகுப்பெடுப்பால்
‘தமிழ்’தாஸானோம்
பன்முகம் கொண்டோம்
---------------------------------------------
இன் முகம் காட்டியவர் இருந்தாலும்
பலர்முன் தலைக்குனியாமல்
தலை நிமிர்ந்து நேரிடைப் பார்வைப்பார்த்து
பேசவும்,சிலர் மெச்ச எழுதவும் சொன்னவர்
என்(ங்)கள் ஆசான் ராமதாசே!இவர் மரம் வெட்டாத மரத்தமிழர், மொழிப்பிணி நீக்கிய மருத்துவர்! என்றும் கூட்டணி மாறாத ஓர் அணியாம் தமிழ் அணியில் இருப்பவர்!கருப்பு காந்தம் அதில் ஈர்க்கும் சாந்தம்! அவர் பாந்தம்!

crown said...

தங்களை வருத்தி
எங்களை உயர்த்திய
அத்துணை ஆசான்களும்
அன்பான நன்றியும் அக்கறையோடு துஆவும்
நீங்கள் நிடூழி வாழ்க!!!
------------------------------------
ஆமீன், ஆமீன்.

crown said...

கவிச்சக்கரவர்த்தியே!ஆ(பசு)சிரியர் பால் கொண்ட அன்பினால் சுரந்ததோ இந்த கவிதைப்பால்? இந்த பாலை எப்படி கறப்பது என்பது அ.இ. காக்காவுக்குத்தெரியும்.இப்படி கறந்த பாலை நாங்கள் எல்லாம் அருந்த செய்த உங்களை ,கல்வியின் பால் ஈர்த்ததின் பால் ,இப்படி நாங்கள் எல்லாரும் முப்பால் குடிக்கிறோம். மூப்பால் ஒருகாலம் மூழ்கடிக்கப்படும் போதும் என்றும் இளமையாக வைக்கும் உங்கள் கவிதைப்பால்! நன்குத்தெரிந்து சொல்கிறேன் என்றும் திரிந்துவிடாத பால் இந்த கவிதைப்பால்.வாழ்த்துக்கள்.

Anonymous said...

எழுத்தை எடுத்து அறிவித்த ஆசிரியர்களுக்கு எழுத்தாலேயே குருதட்சணை!

எண்ணிப் பார்க்கும் இதயதிற்குள். கருப்பட்டி கசிகிறது!. இனிப்பு அப்படி!
காவியமே படைத்தாலும் கடுகளவே! கண்ணொளி காட்டியவர்கள் மட்டுமல்ல நம்மை மேலே ஏற்றி விட்டு கீழே நின்ற ஏணிகள்! அவர்கள் நக கண்களுக்கு நம் முக கண்கள் ஈடாகா! ஆண்டுக்கு ஒரு முறைதான் நினைவுகளா? 'வீனாடிக்கு ஒரு முறை' என்றாலும் குறைவே! மருமகன் சபீரின் கவிதை வரிகாணும் வாழும் ஆசிரியர்கள் வாழ்த்துவார்கள். காணாமல் போனவர்களோ. பூ மழை பொழிவார்கள்!

S,முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

crown said...


எழுத்தறிவித்தீர் ; எழுந்து நின்றோம்
நீதிபோதித்தீர் ;நேர்கொண்டு பார்த்தோம்
நடத்தியப் பாடத்தால் ; நிமிர்ந்து நடந்தோம்
மாக்களாகிப்போகாமல் ; மக்களாக்கி மகிழ்ந்தீர்கள்
--------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். இதுவா? அபு.இபுகாக்கா எழுதிய வரிகள்??????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

கிரவ்னு : மேல்நிலை வகுப்பில் என்ன குரூப் நீ ?

crown said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

கிரவ்னு : மேல்நிலை வகுப்பில் என்ன குரூப் நீ ?
-------------------------------------------------------
கணக்குத்தான் எனக்குத்தான் பிடித்தது!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு :

கணக்கு உனக்கு
பிடிக்கும் எனக்கும் தெரியும்...

கணக்கில் தலையில் கணக்கும் அதுவா ?
கணக்கில் புத்தகம் கணக்குமே அதுவா ?

KALAM SHAICK ABDUL KADER said...

”கணக்கு எனக்குப் பிணக்கு” என்றான் பாரதி
“கணக்கு எனக்கும் பிடிக்கும்” என்கின்றார் வார்த்தைச் சாரதி!

crown said...

வணிகவியலும் வாழ்வியலுக்கு
வரமென்று வார்த்தெடுத்தீர்
வருமானம் பெருக்கியெடுக்க
வசந்தங்களை வரவைத்தீர்
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அபு.இபுகாக்கா இதுதானே?வ"சந்தங்களை" வாரி வழங்கிய வரி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு: பாதியை மட்டும் சொன்னா கவிக் காக்கா 50/100 மார்க்குதான் போடுவார்கள்.... அதுக்கு மேலே இருக்கும் ஒரு பத்தியையையும் சேர்த்துடு ஆன்சர்ப் பேப்பரில்... :)

அப்துல்மாலிக் said...

1 முதல் காலேஜ் வரை படித்துக்கொடுத்த அனைத்து அனைத்து வாத்தியார்களும் இன்னிக்கு மட்டுமல்லாமல் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் நினைக்கக்கூடியவர்களே...

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு