:::: தொடர்-30 ::::
கடந்த காலப் பொது வரலாற்றில் நாம் காணும் சில மதங்களும் இயக்கங்களும் வெற்றியைத் தழுவாமல், தோல்வியடையக் காரணமென்ன என்பதைச் சிறிது காண்போம்.
கத்தோலிக்க தேவாலயம்: ஒரு காலத்தில், ஐரோப்பாவையும், ‘புத்துலகு’ என்று புகழப்பட்ட அமெரிக்காவையும் ஆட்கொண்டிருந்தது, கத்தோலிக்கத் திருச்சபை. இதன் தலைமைப் பீடத்தில் இருந்த போப்பாண்டவர்தான் சலுகைகள் வழங்கினார்; அவர்தான் ஆட்சித் தலைவர்களையும் அரசர்களையும் நியமனம் செய்தார்; தம் மார்க்க வரம்புகளை மீறியவர்களுக்குத் தண்டனை கொடுத்தார்; கிறிஸ்தவத்தைப் பரப்புதல் என்ற பெயரில் தென்னமெரிக்காவின் நாகரிகச் சின்னங்களை அழித்தொழித்தார்; ஆஃப்ரிக்காவிலிருந்து கறுப்பினத்தவர்களைக் கடத்தும் அடிமை வர்த்தகத்தை ஆதரித்தார்; முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப் போர்களுக்கு ஒப்புதல் கொடுத்தார்; மக்கள் தமது வாழ்க்கையை எப்படி வகுக்கவேண்டும் என்ற கொள்கைகளை வகுத்தளித்தார்; பொது மக்கள் தமது வருமானத்தின் பத்து சதவீதத்தைத் திருச்சபைக்கும் போப்புக்கும் கொடுக்கச் செய்தார். இதன் மூலம் போப்புகள் பணக்காரர்களானார்கள்.
பிறகு ஒரு காலம் வந்தது. பல சிந்தனை மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உருவாகி, எதிர்வாதங்களும் புதிய சிந்தனைகளும் சமுதாயத்தில் தலைகீழ் விளைவுகளும் ஏற்பட்டன. ஜெர்மனியில் மார்ட்டின் லூதரும் கார்ல் மார்க்ஸும் தோன்றி, எதிரும் புதிருமான கொள்கைகளைப் பரப்பினார்கள். இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்டு, புரோட்டஸ்டாண்டு என்ற எதிர்ப்புக் கிரிஸ்தவ அமைப்பு, ‘ஆங்லிக்கன் சர்ச்’ எனும் புதிய அமைப்பாக உருவெடுத்தது. இடையே அறிவியலும் தர்க்க வாதமும் ஏற்பட்டு, கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்பை பலவீனப் படுத்தின. இல்லை, ஒழியச் செய்தன!
கிறிஸ்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவானது, ஒரு காலத்தில் பணத்தில் கொழித்துக் கொண்டிருந்தது. புரட்சி இயக்கங்களும் புதிய சிந்தனைகளும் தோன்றிய பின்னர், எது தலைமை? யார் தலைவர்? என்று அறிய முடியாமல், பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் ஒரு தலைமையற்ற கிறிஸ்தவம், கொள்கை இல்லாத மதமாக மாறியது! வணக்கத்தை விடுத்து வருமானத்தையே குறிக்கோளாகக் கொண்டதால், பொது மக்கள் தேவாலயங்கள் மேல் நம்பிக்கை இழந்தார்கள். விளைவு? பிறப்பால் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டு, அந்த மதத்தின் வழிபாடுகளில் பற்றுதல் இன்றி இருக்கின்றனர். மற்றும் பலரோ, மத மாற்றத்தில் – குறிப்பாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்வதில் முனைப்புக் காட்டிவருகின்றனர்.
மக்கள் வரியாகவும் நன்கொடையாகவும் கொடுத்துவந்த பண வரவு குறைந்து, வருமானம் இல்லாத நிலையில், மேலை நாடுகளில் பல தேவாலயங்கள் மூடப்பட்டும், பிற மதங்களின் வழிபாட்டுக்காக வாடகைக்கு விடப்பட்டும் அல்லது விற்கப்பட்டும் இருப்பது, நாம் அன்றாடம் வாசிக்கும் செய்தியாக இருக்கின்றது. இன்று கத்தோலிக்கப் போதனைகள் வாட்டிகனின் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் வானலாவக் கட்டிய மாதாகோவில்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று இஸ்லாத்தை நோக்கித் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகள், போர்க்குரல்கள் எல்லாம், கிறிஸ்தவர்களின் வழிபாடுகளில் தேக்க நிலை ஏற்பட்டு, சர்ச்சுகளுக்கு வணங்க வருவோர் குறைந்துபோய்விட்டனரே என்ற தாழ்வு மனப்பான்மையின் விளைவேயாகும்.
இதையடுத்து, முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு, இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கும் கொள்கைகளைக் கொண்ட ஷியாப் பிரிவுகளுள் ஒன்றான ‘ஆகாகான் இஸ்மாயிலி தாவூதி போரா’க்களிடமிருந்து வருகின்ற எதிர்ப்பு! இவர்களும் ‘சையிதுனா ஆகாகான்’ என்ற தனித் தலைமைக்குக் கட்டுப்பட்டு, இஸ்லாம் அனுமதிக்காத வழிபாடுகளிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு, இஸ்லாத்திற்கே வேட்டு வைக்கின்றனர்!
இந்தப் பிரிவினர், உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும், தமது வருமானத்தின் 12.5% பகுதியைத் தலைவர் ஆகா கானுக்குக்கொடுத்துவிட வேண்டும் என்ற விதி. எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லாத இந்தப் பணம் தனி ஒரு தலைவருக்குப் போய்ச் சேருகின்றது என்றால், அந்தத் தலைவர் எப்படிப்பட்டவராயிருப்பார்? இது போன்ற வருமானத்தால்தான், ஆகா கான் உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்! இவ்வாறு வரும் கணக்கற்ற வருமானத்திலிருந்து சிறு பகுதிகளை அறப்பணிகள் சிலவற்றில் ஈடுபடுத்துகின்றனர். அவ்வப்போது இந்தத் தலைவர், தன் மீது எந்த அரசாங்கமும் கை வைத்துவிடக் கூடாது என்பதற்காக, பண முடக்கம் செய்து, பத்திரிகைகளில் படம் போட்டு இடம் பிடித்துக்கொள்கின்றார்.
இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் மதத்தின் பேரால் மனிதர்களைச் சுரண்டுபவர்கள். மனிதத் தலைவர்கள் மட்டுமே; புனிதத் தலைவர்கள் அல்லர். இவர்களின் மறைவுக்குப் பின்னர், இவர்கள் வகுத்த சட்டங்கள் பஞ்சாய்ப் பறந்து போய்விடும். இறைப் பொருத்தம் இல்லாததே அவற்றின் வீழ்ச்சிக்குக் காரணம்.
இனி இஸ்லாத்தின் முன்மாதிரியில் உலகளாவிய இயக்கம் பற்றிய ஒப்பீட்டைப் பார்ப்போம். உலகச் சமுதாயத்தின் முன்னால் இஸ்லாம் நீதி, சமூகப் பொறுப்பு, எல்லா விதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும் போராட்டம் ஆகியவை அடங்கிய திட்டத்தைத் திறந்த புத்தகமாக விரித்து வைத்துள்ளது பற்றிப் பார்ப்போம்.
நீதி, சமூகப் பொறுப்பு, எல்லா அடக்குமுறைகளில் இருந்தும் விடுதலை பெறுதல் ஆகியவை அடங்கிய தத்துவக் கோட்பாட்டை இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கியது. மதக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்ட கட்டளைகள் அனைத்தும் மக்களால் செயலுருப் பெற்ற பின்னர், அவை சமுதாயத்தின் சட்ட நெறிகளாயின. வணங்கத் தகுந்தவன் அல்லாஹ் என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் வாயால் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. இந்த உறுதி மொழியை வாயால் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அதற்குப்பின் விரிவான செயல்பாடுகள் நிறைய உள்ளன. அவற்றைச் செய்தால் மட்டுமே, இந்த உறுதி மொழியின் உண்மை நிலைபெறும். இறை வேதத்திலும் இறுதித் தூதரின் போதனைகளிலும் இந்தக் கலிமாவை முழுமைப் படுத்தும் நற்செயல்கள் பற்றி விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கியுள்ளன.
அவற்றுள் முதலாவது, தொழுகையாகும். இந்தத் தொழுகை எனும் வணக்கத்தைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் ‘ஜக்காத்’ என்னும் கடமையையும் சேர்த்தே அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. மார்க்கச் சட்டத்தின் அடிப்படையில், யாரெல்லாம் இந்தக் கட்டாயக் கொடையைக் கொடுக்கத் தகுதி பெற்றவர்கள் என்பது பற்றிய பட்டியல் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. ஜக்காத் எனும் இந்தப் பொருள் கொடையைத் திரட்டி, மத்தியக் கருவூலத்தில் சேர்த்து வைக்கவேண்டும். மார்க்கத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதெல்லாம், அதிகமாக இந்த ஜக்காத் பற்றியே இருந்துள்ளது.
ஓரிறைக் கொள்கை என்ற தவ்ஹீதை ( இறை ஒருமைப்பாட்டை ) நிலைநாட்டுதல் என்ற செயல் மட்டும் இருந்து, அதன் அடுத்தடுத்த கடமைகளுக்காக வேகத்துடன் நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டு இருந்தால், அவர்களின் பணி இலேசாக இருந்திருக்கும்.
வரலாற்றில் பதிவான நிகழ்வு ஒன்று, இங்கு நினைவுகூரத் தக்கது. நபியவர்களின் இஸ்லாமிய அழைப்பின் தொடக்க காலத்தில், மக்கத்துக் குறைஷித் தலைவர்கள் அனைவரும் நபியைச் சந்தித்து, நபியவர்கள் ஒரே இறைவனாக நம்பி வணங்கும் அல்லாஹ்வை அவர்கள் ஒரு நாளைக்கு வணங்கத் தயார் என்றும், அடுத்த நாள் அவர்களின் கற்சிலைக் கடவுள்களை நபியவர்கள் வணங்கவேண்டும் என்றும் ‘நேர்மையான’ பரிந்துரை ஒன்றை வைத்தனர்.
அதற்குத் தமது கருத்தை நபியவர்கள் குறைஷிகளிடம் கூறுவதற்கு முன், இறைவசனம் இவ்வாறு இறங்கிற்று:
“(நபியே,) கூறுக! ‘இறைமறுப்பாளர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். (அது போன்றே) நான் வணங்குபவனை நீங்களும் வணங்கமாட்டீர்கள். (மேலும்) நான் வணங்குபவனை நீங்கள் வணங்கமாட்டீர்கள். நீங்கள் வணங்குபவற்றை நானும் வணங்கமாட்டேன். (எனவே,) உங்கள் மார்க்கம் உங்களுக்கு. எனது மார்க்கம் எனக்கு.” (109:1-6)
இன்றைய உலகில், அந்த மக்கத்துக் காஃபிர்களின் பரிந்துரை ‘நியாயமானதாக’ எடுத்துக் கொள்ளப்படலாம். இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், உங்களைத் ‘தீவிரவாதி’ என்றும், ‘அடிப்படைவாதி’ என்றும் பழி சுமத்துவார்கள். எனினும், அந்த நியாயமற்ற பரிந்துரையை நபியவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அண்ணலார் (ஸல்) அப்படி ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓரிறைக் கொள்கையுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பதாகிவிடும்; பல கடவுள் கொள்கைக்கு இணக்கம் தெரிவிப்பதாக ஆகிவிடும். இது போன்ற சோதனைகள்தாம், தலைவர் எதிர்கொள்ளும் சவால்களாகும். ‘தர்க்க ரீதியானது’ என்று கருதப்பட்ட இது போன்ற பரிந்துரைகளுக்கு இணங்காமல், கொள்கைப் பிடிப்புடன் இருந்தால், அதுவே அந்தத் தலைவருக்குப் பெரும் சோதனையாக மாறிவிடும். இருப்பினும், அவர் இறையருளைக் கேட்டுப் பெற்று, அந்தச் சோதனையில் வெற்றி பெற்றுவிடுவார்.
அதிரை அஹ்மது
0 Responses So Far:
Post a Comment