Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மதீனா ஒப்பந்தம் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2015 | ,

::::: தொடர் - 28 :::::

எல்லையில்லா அருளும் அன்பும் கொண்ட அல்லாஹ்வின் பெயர் கூறி, இந்த ஒப்பந்தத்தைத் தொடங்குகின்றோம்.  இந்த ஒற்றுமைக்கான ஆவணம், உம்மி நபியாகிய முஹம்மதால் உருவாக்கப்பெற்றது.  இந்த ஒப்பந்தமானது, மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்துள்ளவர்களுக்கும், மதீனாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத அரபுகளுக்கும், இந்தப் புனிதப் பதியில் வந்து பல்லாண்டுகளாக வாழ்ந்துவரும் யூதர்களுக்கும் இடையேயான நல்லாட்சி ஒப்பந்தமாகும்.  இங்கு வாழும் மக்கள் பல்வேறுபட்ட இனத்தவர்களாயினும், இது அவர்கள் அனைவருக்குமான அமைதிக்குரிய ஒப்பந்தமாகும்.
  • மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனாவுக்கு வந்த ‘முஹாஜிர்’ சகோதரர்கள், இங்குள்ள ‘அன்ஸார்’களுடன், ஒரே இனம் என்ற உணர்விலும், இஸ்லாமிய சகோதரத்துவ அடிப்படையிலும் சேர்ந்து வாழவேண்டும்.
  • மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனாவுக்கு வந்த குரைஷி ‘முஹாஜிர்’கள் தாம் முன்னதாக மக்காவில் கடைப்பிடித்துவந்த கொலைக்குப் பகரமான பிணைத்தொகை கொடுக்கும் வழக்கத்தை இங்கும் தொடர வேண்டும்.
  • பிணைத்தொகை கொடுக்க முடியாத பொருளாதார வலிமையற்ற உறவினருடன் இணக்கமாகவும் இரக்கமாகவும் வாழவேண்டும்.
  • மதீனாவில் உள்ள ‘பனூ அவ்ஃப்’ முதலான ‘அன்ஸார்’கள் தற்போதுவரை நடைமுறையில் உள்ள வழக்கங்களை பலவீனமான மற்ற இனத்தவர்களோடு பரிவுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் தொடர வேண்டும்.
  • மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள், பலவீனமான தமது இனத்தவர்களுக்காகப் பணயத் தொகை அல்லது கொலைக்குரிய தண்டனைப் பணம் போன்றவற்றைக் கொடுத்துதவி, மக்கத்தவர்களின் பிடியிலிருந்து விடுபடச் செய்யவேண்டும்.
  • அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான வாழ்க்கையைப் பெற்ற எவருடனும் முஸ்லிம்கள் கூட்டு சேர்ந்து, அவ்வினத்தவருக்கு எதிராகச் செயல்படக் கூடாது.
  • உண்மையான இறைநம்பிக்கை கொண்டவர்கள், நீதி நேர்மைக்கு எதிராகத் தம் இனத்தவருடன் கூட்டு சேரக் கூடாது. அத்தகையவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டிருந்தாலும் சரியே.
  • முஸ்லிம்கள் தமது இனத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவருக்கு ஆதரவாக, எந்த முஸ்லிமையும் கொலை செய்வதில் கூட்டு சேரக் கூடாது.
  • முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே.  நீதி செலுத்துபவன் அல்லாஹ் ஒருவன்தான் என்ற அடிப்படையில், தண்டனையோ மன்னிப்போ எதுவாயினும், அவனிடத்திலிருந்தே வரவேண்டும் என்று நம்பவேண்டும்.
  • யூத இனத்தவர் நம்மைப் பின்பற்றுவாராயின், அவர் நம்முடைய உதவிகள் மற்றும் சமத்துவம் ஆகியவற்றைப் பெறுவார்.  அவர் பாரபட்சமாக நடத்தப்பட மாட்டார்; அல்லது அவருக்கு எதிராக, அவருடைய எதிரிகளுக்கு உதவியும் செய்யப்பட மாட்டாது.
  • அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் நடக்கும்போது, எந்த இறைநம்பிக்கையா ளருக்கும் சார்பாக, அவருடைய இனத்தவரைத் தனிமைப் படுத்திவிட்டு, எதிரிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்யப்பட மாட்டாது.  எங்கும் சமநீதிதான் நிகழ்வுறும்.
  • போருக்குச் செல்லும்போது ஏறிச் செல்ல வாகனப் பற்றாக்குறை ஏற்பட்டால், இறைநம்பிக்கையாளர்கள் தமக்குள் வாகனத்தை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
  • இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போது, குருதி சிந்த நேர்ந்தால், அதற்குக் காரணமானவரைப் பழி வாங்கலாம்.
  • இறைப் பற்று மிகுந்த இறைநம்பிக்கையாளர் எவரும் உதவி வழங்கப்பட்டு, நேர்வழியில் நடாத்தப்படுவார். 
  • மக்கத்துக் குறைஷியருக்கும் அவருடைய சொத்துக்கும் பாதுகாவலர் என்ற தகுதியில் வரும் இணைவைப்பாளர் எவரும் உதவி செய்யப்பட மாட்டார். அல்லது, இறைநம்பிக்கையாளர் எவருடனும் கூட்டு சேர்ந்து பரிந்துரை கூறவும் அனுமதிக்கப்பட மாட்டார்.  
  • உண்மையில் வரம்பு மீறி, எவருடைய இறப்பிற்காவது காரணமானவர், அவருக்குத் தண்டனை கொடுக்க உரிமைப்பட்டவர் ஆறுதல் அடையும்வரை,  தண்டனைக்கு ஆளாவார்.       
  • இறைநம்பிக்கையாளர் ஒருவரின் இறப்பிற்குக் காரணமான எவரும், தண்டனைக்கு உரியவர் ஆவார். அதற்காகப் பழிவாங்குவது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும்.
  • அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்த இறைநம்பிக்கையாளரும், இந்த ஒற்றுமை ஆவணத்திற்கு எதிராக, தீங்கிழைத்த எவருக்கும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது.  அவ்வாறு செய்பவர், இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாவார்.  அதற்குப் பகரமாக எவ்வித நஷ்ட ஈடும், எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 
  • எவருக்காவது இந்த ஒற்றுமை ஆவணத்தின் ஏதேனும் பகுதியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது அவர் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் தீர்ப்பையும் நாடுவார்.
  • முஸ்லிம்களும் யூதர்களும் இறைமறுப்பாளர் மற்றும் இணைவைப்பாளர்களோடு போரில் ஈடுபட்டிருக்கும்போதெல்லாம், அப்போருக்கான செலவை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வது போன்றே, யூதர்களும் பணப் பங்களிப்புச் செய்யவேண்டும்.
  • ‘பனி அவ்ஃப்’ யூதப் பிரிவைச் சார்ந்தவர்கள் முஸ்லிம்களுடன் ஒரே இனமாகக் கருதப்படுவர். யூதர்களுக்கு, அவர்களின் மதத்தைப் பின்பற்றுவதும், முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்கத்தைச் சார்ந்திருப்பதும் சாலும்.
  • யூதர்களின் ‘பனூ அவ்ஃபு’க்கு வழங்கப்பட்ட உரிமைகள், மற்ற யூத இனத்தவர்களான ‘பனூ நஜ்ஜார்’, ‘பனில் ஹாரிதா’, ‘பனூ ஸாஇதா’, ‘பனூ ஜுஉஷும்’, ‘பனூ தஅலபா’, ‘ஜுஃப்னா’, ‘பனூ ஷுத்தைபா’ ஆகியோருக்கும் பொருந்தும்.
  • யூத இனத்தவருக்குள்ளேயே பகை ஏற்பட்டு, அவர்களுக்குள் சண்டை நடக்கும் சூழல் உருவானால், முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒப்புதலின்றிப் போர் நடைபெறாது.
  • இனப்போர் மூளும் நிலை வந்தால், அவர்களின் பெண்களையும் சிறார்களையும் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டவேண்டும்.  இனப்பகையால் யூதர்களோ முஸ்லிம்களோ போருக்குச் செல்லும்போது, அதன் செலவினங்களை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • போரைத் தவிர்ப்பதற்காக, தீமையைக் களைந்து நன்மையைப் புகுத்தி, அவர்கள் முதலில் தமக்குள் சமாதானப் போதனை செய்ய வேண்டும். 
  • ஓர் இனம் தவறிழைத்தால், அதன் தனி மனிதன் குற்றம் சாட்டப்படக் கூடாது.  பாதிக்கப் பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய வேண்டும்.
  • யாரெல்லாம் இந்த உடன்படிக்கையில் பங்களிப்புச் செய்து இணக்கம் காட்டுவாரோ, அவர்கள் அனைவரும் மதீனாவின் மையப் பகுதியைப் புனிதமாகக் கருதவேண்டும்.
  • அடுத்தடுத்த அண்டை வீட்டார் ஒற்றுமையுடன் இணைந்து வாழவேண்டும்.  பாவம் செய்தும் தொந்தரவு செய்தும், ஒருவருக்கொருவர் பகைவர்களாகிப் போய்விடக் கூடாது.  
  • தன்னுடையது அல்லாத சொத்தில் அதன் உரிமையாளரின் அனுமதியின்றி நுழையக் கூடாது.
  • இவ்வொப்பந்தத்தின்படி, முஸ்லிமாகாத மக்கத்துக் குறைஷிகளும், அவர்களின் உடன்படிக்கையாளர்களும் எவ்விதப் பாதுகாப்பையும் பெற முடியாது.
  • இந்த ஆவணத்தை மதித்து ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்ட ஒவ்வொருவரும், எதிரிகளிடமிருந்து மதீனாவைப் பாதுகாப்பது தம் கடமைகளுள் தலையாயது என்று கருதவேண்டும். 
  • எவருடனாவது பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள முஸ்லிம்களால் மற்றவர்கள் அழைக்கப்பட்டால், அவர்கள் அதற்குத் தமது முழுமையான ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
  • முஸ்லிம்கள் அல்லாத மற்றவர்கள் இதுபோன்ற அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முஸ்லிம்களை அழைத்தால், போர் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், அதற்கு முஸ்லிம்கள் இணங்குவதும் அல்லது இணங்காதிருப்பதும் முஸ்லிம்களின் முடிவைப் பொருத்ததாகும்.
  • எவருடனாவது போர் செய்து வெற்றியைப் பெற்றால், எதிரிகளிடமிருந்து கவர்ந்த போர்க்கருவிகளும் மற்ற உடைமைகளும் அவரவருக்கே சொந்தமாகும்.  இவ்வொப்பந்தமானது, பாவம் மற்றும் அநீதியைப் புரியும் எவருக்கும் பாதுகாப்பைத் தராது. போரில் பங்களிப்புச் செய்பவர்களும், செய்யாமல் தம் வீடுகளில் இருப்பவர்களும் பாதுகாப்பைப் பெறுவார்கள். ஆனால், அநீதியும் பாவமும் செய்பவருக்குப் பாதுகாப்புக் கொடுக்க இயலாது. நல்லவர்களுக்கும், தமது மார்க்கத்தில் பற்றுடையவர்களுக்கும் இவ்வொப்பந்தத்தில் பங்குண்டு.  இது, அல்லாஹ்வின் கருணையும் ஆகும். 

அதிரை அஹ்மது

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு