Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் [ரமளான் ஸ்பெஷல் - 1] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2015 | , , ,

ரமளான் ஸ்பெஷல்...
இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவை எல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள் போல் சில திட்டங்கள் சில வருடங்கள் மட்டுமே தோன்றி மறைந்துவிட்டன. அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்டுவிட்டன.  காலம் தோறும்  நின்று நிலைக்கும்படி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படவில்லை.  ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம். 

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப் பட்டு, உலகில் மனித இனம் வாழ்வதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத். படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத். இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதார  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை. ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

அவரவர் திறமைக்கேற்ப  பொருளீட்டும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வை எடுத்தெறிந்து  பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையை இக்கடமை பெற்று இருக்கிறது. பொருளாதாரத்தின் ஆணிவேரான  உற்பத்திப்  பெருக்கத்துக்கு ஜகாத்  காரணமாகிறது. அடுத்து,  செல்வம் ஒரே  இடத்தில் குவியாமல் செல்வத்தின் பகிர்வு பகிர்வு என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் மற்ற இசங்களுக்கு மத்தியில் ஆன்மீக முறையில் அடக்கமாக கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் பணியைச் செய்கிறது. மேலும் ஜகாத் பொருளாதாரத்தின் ஆதாரமான வேலை வாய்ப்புப் பெருக்கத்தையும் வாய்ப்புகளையும் அதிகமாக்குகிறது. உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது.

நவீன பொருளியல் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY (குறைந்துசெல் பயன்பாட்டுவிதி) என்கிற கோட்பாட்டை விழுந்து விழுந்து படிப்பார்கள். இது வேறொன்றுமல்ல . ஒரு மனிதனின் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு பொருள் , அந்தப் பொருளின் அளவு அவனிடம் சேரச்சேர தொடக்கத்தில் அந்தப் பொருள் அவனிடம் சேரத்தொடங்கிய போது அந்தப் பொருள் அவனுக்குப் பயன்பட்டதாக அவன் உணர்ந்த அளவுக்குப் பயன்பாட்டை தொடர்ந்து சேரும் அதே பொருளால் அந்த மனிதனால்  உணர முடியாது என்பதே இந்த விதி. உதாரணமாக சொல்லப் போனால்  வேலைக்குச்சென்று வாங்கும் முதல் சம்பளத்தின் மீது இருந்த ஆர்வம், பயன்பாடு, தேவை, வேட்கை ஆகியவை முப்பது வருடங்கள் டேரா போட்டு சம்பாதித்து வாங்கும் கடைசி சம்பளத்தின் மீது மனிதனுக்கு இருக்காது.  இடைப்பட்ட காலத்தில் அவன் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தின் மீதும் ஆசை குறைந்துவிடும்.  பணம் சேரச்சேர மனதளவில் அதன் மதிப்பு இறங்கிக் கொண்டே வரும். முதல் சம்பளத்தின் தேடல் மற்றும் தேவைகளின் அளவு இருபதாவது  முப்பதாவது சம்பளத்தில் இருக்காமல் இறங்க ஆரம்பித்துவிடும்.

அடுத்து சொல்ல வருவதுதான் மிக முக்கியம்.

இப்படி உபரியாக மனிதனால் ஈட்டப்படும் அந்தப் பணம் அடுத்தவர்களின் தேவைக்கு அளிக்கப் பட்டால் அது அவர்களின் அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படும். அதாவது ஒருமனிதன் தனக்குப் போதும் என்கிற நிலையில் கருதும் பணம் மற்றவனுக்கு வாழ்வின் ஆதாரமாக ஆகும்.  இதுவே ஜகாத் என்கிற தாரக மந்திரத்தின் சூட்சமக் கயிறு. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜகாத் விதியாக்கப் பட்ட போது இன்றைக்கு நவீனப் பொருளாதாரத்தின் விதி இவ்வாறு இறைவனால் அன்றே உபதேசிக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிற போது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்கு சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

மனிதப்  பிறவியின் மாறுபட்ட மோகம், பொறாமை, கர்வம், அகம்பாவம் போன்ற கெட்ட இயல்புகளை  மாற்றும் மாபெரும் சக்தி ஜகாத்துக்கு இருக்கிறது.

‘ஆசைகளின் மூட்டை’ என வர்ணிக்கப் படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடர்ந்து நியமப்படி ஜகாத்  வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது.  ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.


சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஜகாத்   செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும். பொது நல உணர்வு மேலோங்கும்.

பணம்படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை                       விளை விக்கின்றது.

உலக சரித்திரத்தில் பொருளாதார சித்தாந்தங்களில் இன்றுவரை பேசப்படும் ஒரு வார்த்தை வர்க்க பேதம் என்பதாகும். செல்வம் ஒரே இடத்தில் குவிவதால் ஒரு புறம்  பணக்கார வர்க்கமும் , அவர்களின் செல்வத்தின் குவியலுக்குக் காரணியாகத்  திகழ்கிற - காலத்துக்கும்  பஞ்ச்சையாக, பராரியாக யாரிடமும் எதுவும் கேட்கமுடியாத ஊமையாக  பாட்டாளி வர்க்கமும் அமைந்துவிட்டதால் - செல்வத்தைப் பகிர்வதற்கு ஆன்மீக ரீதியாக அன்பு முறையில் முறைகள் சொல்லப் படாததால் - வழிகள் வகுக்கப் படாததால் செங்குழம்பு இரத்தம் சிந்தப்  பட்ட  வரலாறுகளைப் படித்து இருக்கிறோம். அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் –இறையச்சத்தில்-  ஏழைகளுக்கு,  அவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்திவைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

இறைமறையிலும் நபி மொழியிலும் வலியுறுத்திக் கூறப்  படுகிற ஜகாத்துடன் நவீனப் பொருளாதாரத்தை ஒப்பிட்டுக் காட்டினால் ஜகாத்தின் சிறப்பு இன்னும் புலப்படும்.

இன்றைக்கும் வளரும் நாடான நமது இந்தியாவில் நக்சலைட்டுகள் என்றொரு இயக்கம் உருவாகி வெறியாட்டம் போடுவதன் பின்னணியில் வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஏழைகளின்பால்               இறக்கமற்றவர்களின் செல்வக் குவிப்பு - தனக்கே எல்லாம் வேண்டும் என்கிற சுயநலப் போக்கு  காடுகளில் மலைகளில் பல ஏழை இளைஞர்களை நெஞ்சில் பொறாமையுடனும்  கையில் துப்பாக்கிகளுடன் வன்முறை வெறியாட்டங்களுக்கு வித்திட்டு வைத்திருக்கிறது. பணக்காரர்கள் இரக்கமற்ற பாவிகளாக இருப்பதால் இல்லாதவர்களின் நெஞ்சில் அவர்களின் மேல் ஏற்படும் பொறாமைத் தீ  அமைதியான  வாழ்வுக்கு அங்கங்கே சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஜகாத்தின் சட்டங்கள் அமுலில் இருக்கும் நாடுகளில் - ஜகாத் வழங்கப் படும் சமுதாயத்தில் பணக்காரர்களின் மேல ஏழைகளுக்கு பொறாமைக்கு பதிலாக மரியாதை ஏற்படுகிறது என்பதே கண்கூடான காட்சி. ஜகாத் அரசாளும் பிரதேசங்களில் ஆண்டான் அடிமை வர்க்க பேதங்கள் அடிபட்டுப் போகின்றன. ஏழைகளையும் பணக்காரர்களாக்கும் இறைவனின் வித்தை இது . பணக்காரர்களை நன்மை செய்யத்தூண்டும் நற்பணி மன்றம் இது.

நவீனப் பொருளாதாரத்தில் வரிவிதிப்புக் கொள்கைகளை சில முறைகள் வரையறுக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது 

Keep it simple. The tax system should be as simple as possible, and should minimize gratuitous complexity. The cost of tax compliance is a real cost to society, and complex taxes create perverse incentives to shelter and disguise legitimately earned income.  என்பதாகும் . அதாவது, எந்த ஒரு வரியும் வசூலிப்பதற்கு இலகுவாகவும்  எளிதாகவும்  இருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். 

இன்றைய அரசுகள் வசூலிக்கும் வரிகள் இந்தத்தன்மையைப்பெற்று  இருக்கின்றனவா என்றால் இல்லை என்ற சொல்ல நேரிடும். வரியை வசூலிக்க அந்த குறிப்பிட்ட வரியால் வரும் வருமானத்தைவிட அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. விற்பனை வரிச்சட்டம்- வருமானவரிச்சட்டம்- நிலவரிச்சட்டம்- உள்ளூராட்சிவரிச்சட்டம் –  என்பன போன்ற சட்டங்கள், அவற்றிற்கான தனித்தனி அலுவலகங்கள்- அவற்றிற்கான ஊழியர்கள் என்றெலாம் அளவிடமுடியாத அமைப்புகள் மற்றும் செலவுகளை மேற்கொண்டே அரசுகளால் வரிகளை வசூலிக்க முடிகிறது. இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட இவற்றில்  பல கள்ளக் கணக்குகள்,  தில்லுமுல்லுகள், செப்பிடுவித்தைகள்,  ஏமாற்றுகள்,  நிலுவைகள் என்று   பலதகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன.

இந்தியாவில் வசூலிக்க முடியாத நிலுவையில் உள்ள  வருமான வரிமட்டும் ஒழுங்காக வசூலிக்கப் பட்டால் அதைவைத்து எதிர்காலத்தில் வரியே போடாமல் ஆள முடியுமென்று ஒரு ஆய்வு கூறுகிறது. பலருடைய வரி பாக்கிகளுக்காக அவர்களுடைய இருப்பிடம் உட்பட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. இருக்கும்போது  நவாப்சாவாக இருந்தவன் இல்லாவிட்டால் பக்கீர்சாவாக ஆகிவிடுகிறான். வரியை  ஏய்ப்பதற்கு தகுந்தபடி கணக்கை சரிக்கட்டுவதற்கே தனித்திறமை பெற்ற ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். அரசை ஏமாற்றி பதுக்கப் பட்ட பணம் கள்ளப் பணமாக உருவெடுத்து மற்றொரு பொருளாதார சீர்கேட்டின் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வளவுக்கும் காரணம் , வரி வசூலிக்கும் முறையும் சரியில்லாமல் இருப்பது மட்டுமல்ல வரிகளின் விகிதமும் உச்சாணியில் ஏறி , ஏமாற்றுவதை  தூண்டிவிடும்வகையில் அதிகமாக இருப்பதுதான்.  

இதற்கு மாறாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஜகாத் பிரதான  வரியாக விதிக்கப்படுவதாக நாம் கற்பனை பண்ணிப் பார்ப்போம்.  இறையச்சத்தின் அடிப்படையில் அமையும் அந்த சமுதாயத்தில் ஏமாற்று வேலைகளுக்கு வேலை இல்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இல்லை. இருக்கும் சொத்தை ஏலம் விட அவசியம் இல்லை. தந்து தேவைகள் போக திரளும் செல்வத்தில் மட்டுமே செலுத்துபவர் தரும் சதவீதம் மிகவும் குறைவு என்பதால் செலுத்துபவர்களுக்கும் கஷ்டம் இல்லை; அரசுக்கு வருமானம் திட்டமிட்டபடி வந்து சேரும். ஜகாத் செலுத்துவதும் இறைவணக்கத்தின் ஒரு பகுதி என்று ஆகிவிடுவதால்  இன்முகத்துடன் எல்லோரும் அவரவர் வைத்திருக்கும் செல்வங்களுக்கு ஏற்றபடி தந்துவிடுவார்கள். இறையச்சத்தின் அடிப்படையில் கூடுதலான சதகா என்கிற தர்ம சிந்தனையும் சேர்ந்துகொண்டால் ஜகாத்தும் சதக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வறுமை என்னும்  பிசாசின் அடையாளத்தை அடித்து நொறுக்கிவிடும்.  இப்படி ஒரு இனிய சமுதாயம் அமையுமா? 

நவீனப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள் மாய்ந்து மாய்ந்து தீய்ந்து போவது இரண்டு விஷயங்கள் பற்றித்தான். ஒன்று உள்நாட்டில் வறுமை, மற்றது வெளிநாட்டுக் கடன் அதன் வட்டிமற்றும் அதன் குட்டிகள்.

அரசின் வரி  வருமானம் ஜகாத் மூலம் சரியாக , ஒழுங்காக வருமானால் அரசு வெளிநாடுகளிடம் கடனுக்காக கை ஏந்தவேண்டியது இல்லை. அதற்காக பெரும்தொகையை வருடாவருடம் உலகவங்கிகளுக்கு வட்டியாகக் கட்டிவிட்டு தனது நாட்டு மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு பணமில்லாமல் ஈரச்சாக்கைப் போட்டுப் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டியது இல்லை.

வளர்ந்து வரும் நாடான இந்தியா தனது வருமானத்தில் 26% த்தை வெளிநாடுகளில் வாங்கிய கடன்களுக்காக அழுது வருகிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நாட்டில் வாழும் மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முழுமையாக தரப்படவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே பல கோடிமக்கள். இந்நிலையில் இவ்வளவு பெரும்தொகை வட்டியாகப் போகிறது . இந்த சுமையில் இருந்து மீள வல்லுனர்கள் கூறும் கருத்து வரிகளையும் வரிகளின் நிலுவைகளையும்  வசூல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் வரி செலுத்தும் நிலுவைப் பட்டியலில் உள்ளவர்களோ மலை முழுங்கி மகாதேவன்களாக இருக்கின்றனர்.   அரசியலில் வாலாட்டும் தன்மை கொண்டவர்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டு அவ்வப்போது தப்பித்துக் கொள்கின்றனர்.  இந்த நிலையில் ,

இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது மொத்த வெளிநாட்டு கடனான 390.04 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 172.35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த தொகை இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில்  44 சதவீதம் ஆகும். 

உலகம் முழுதும் இத்தகைய நிலைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பொருளாதார சறுக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? யாரால் காப்பாற்ற முடியும்? இஸ்லாம் காப்பாற்றும். இஸ்லாமியப் பொருளாதாரம் காப்பாற்றும். காப்பாற்றச் சொல்லி இறைவனை நோக்கி கை ஏந்துவார்களா?

ஜகாத் பற்றிய இறைவனின் வாக்குகள், எச்சரிக்கைகள், நபிமொழிகள், வரலாற்று சம்பவங்கள் ஆகியவற்றை அடுத்து காணலாம்.

வாழு ! வாழவிடு ! ‘’ என்பது கூட ஒரு கவர்ச்சியான கோஷம்தான். ஆங்கிலத்தில் இதை Live ! Let to Live” என்றும் முழங்குவார்கள். ஆனால் இந்தகோஷத்தை ஆராய்ந்து பார்த்தால் ‘நீ வாழ்ந்துகொள் மற்றவரையும் தொல்லை பண்ணாமல்   வாழவிடு’ என்ற பொருளையே தருகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் நீ வாழ்ந்துகொள் என்பது சுயனலத்தின்பால் பட்டது. அவரவர் தாங்கள் வாழவே முதலில் வழிவகுத்துக் கொள்வார்கள். அதேபோல் மற்றவரை வாழவிடு என்பதும் பிறரை துன்புறுத்தாதே தொல்லை செய்யாதே என்கிற அறவழியை மட்டும் போதித்து ஒதுங்கிவிடுகிறது;  உணர்த்துகிறது. ஆனால் இஸ்லாம் கூறும் ஜகாத் , “வாழு! வாழவிடு! வாழ வை! “ என்று மிகப் பரந்து விரிந்த கருத்தைப் பறை சாற்றுகிறது.  நீ மட்டும் வாழ்ந்தால் போதாது- மற்றவர்களை வாழவிட்டு ஒதுங்கி இருத்தலும் பற்றாது- இல்லாதோர் வாழ நீ உதவி செய்து அவர்களும் வாழ வழி செய்ய வேண்டுமென்ற சமுதாய பொருளாதார ஏற்றத்துக்கு கால்கோள் கல்லிடுகிறது.  

ஒரு கையில் இறைவேதமும் மறு கையில் நபி போதமும் தாங்கி நிற்கும் ஒரு இஸ்லாமியனுக்கு , ஏழைக்கு உதவும் ஈகைத்தன்மையையும் தடம் புரண்டு போனோரைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவத்தையும் வறியோர்க்கும் வக்கற்றோர்க்கும் வகையற்றோ ருக்கும் வாழ்வளிக்கும் வழிகாட்டுதல்களையும் வழங்கி இருப்பது இஸ்லாம். அந்த வகையில்  இறைவனின் ஜகாத் பற்றிய அறிவுறுத்தல்களையும் பெருமானார் ( ஸல்) அவர்களின்  மணிமொழிகளையும் தொகுத்துத் தரும் முன்பு ஜகாத் பற்றிய இன்னும் தீர்க்கமான திடமான தெளிவான சிந்தனைகளை உள்ளத்தில் இருத்த வேண்டி ஜகாத் மற்றும் சதகா ஆகிய இரண்டு அறச்செயல்களுக்கும் இடையே இருக்கும் சில வேறுபாடுகளை இங்கு முதலில் பட்டியலிடுவது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.  

ஜகாத்
சதகா
ஜகாத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறைவணக்கமாகும்.
சதகா என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும்.
ஜகாத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார பொருட்கள், ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக ஷரீஅத் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி கொடுக்கப்படுவதாகும்.
சதகா என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் என்றில்லாமல் ஒருவர் எந்தப் பொருளையும் இறைவழியில் செலவழிப்பதாகும். இதற்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்பது வரையறை இல்லை.
ஜகாத் என்பது ஒருவரின் செல்வம் ஒரு குறிப்பிட்ட அளவை (நிஸாப்) அடைந்து ஒரு ஹிஜ்ரி ஆண்டு பூர்த்தியாகிவிட்டால் அவர் மீது கடமையாகும்.
சதகா என்பதற்கு ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் கிடையாது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். 
ஜகாத் என்பது இறைவன் வரையறுத்துள்ள (அத்.9:60) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுப்பதாகும். இந்தப் பிரிவினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஜக்காத்தைக் கொடுப்பதற்கு அனுமதியில்லை.
சதகா என்பது இறைவன் ஜக்காத்துக்காக வரையறுத்துள்ள பிரிவுகள் மட்டுமின்றி பிறருக்கும் கொடுக்கலாம்.
ஜக்காத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கு மற்றும் அவரது மரண சாசனத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரே கடமையான ஜக்காத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்ற வேண்டும். 
சதகா என்பதில் அவ்வாறான கடமை எதுவும் இல்லை.
ஜக்காத் கொடுக்காவிட்டால் மறுமையில் தண்டணைகள் உண்டு.
சதகா கொடுத்தால் நன்மைகளைப் பெற்றுத் தருமேயல்லாது கொடுக்காவிட்டால் குற்றமாகாது.

இவையே ஜகத்துக்கும் சதக்காவுக்கும் உள்ள பொதுவான வேறுபாடுகள். ஆனாலும் 

எல்லா நற்செயலும் தர்மமே என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி). அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

திருமறையின் ஒன்பதாவது அத்தியாயமாகிய அத்தவ்பா வின் அறுபதாவது வசனத்தில்  ஜகாத்தை பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள் யார் யார் என்று இறைவன் பட்டியலிட்டுக் காட்டுகிறான்.
  • வறுமையின் கொடுமையில் சிக்கிக் கொண்ட ஏழை முஸ்லிம்கள்.
  • தங்களது வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்வதற்கான வழிவகையில்லாத வசதியற்ற முஸ்லிம்கள்.
  • புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்கள்.
  • எதிரிகளிடம் கைதிகளாகச் சிக்கிக்கொண்ட இஸ்லாமியப் போர்க்கைதிகள். (விடுவிக்கப்பட)
  • அவசரத் தேவைகளின்போது பட்ட கடன்களிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் முஸ்லிம்கள்.
  • இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஜகாத்தை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பணியாளர்கள் அவர்களுடைய  ஊதியம்.
  • இறைப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள், இஸ்லாமிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாத்தைக் கற்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாமியப் பிரச்சாரப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.
  • பயணத்தின்போது அந்நிய நாட்டில் அகப்பட்டுக்கொண்டு உதவிகோரும் முஸ்லிம் பயணிகள்.
ஜகாத்துக்கு இறைவன் வழங்கி இருக்கிற தன்மை செல்வத்தை தூய்மைப் படுத்தும் தன்மையாகும். ஜகாத் என்கிற அரபு வார்த்தை,   தூய்மை, வளர்த்தல் என்ற பொருள்களைத் தரும்.

“அவர்களின் செல்வங்களிலிருந்து, தானத்தை வசூல் செய்து (ஜகாத்தை நீர் எடுத்துப் பெற்று ) அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக! அவர்களை முன்னேரச்செய்வீராக! மேலும் அவர்களுக்காக நல்லருள் வேண்டி பிராத்திப்பீராக! “என்று இறைவன் , பெருமானருக்குக் கட்டளை இடுகிறான். (அத். 9:103)

ஜகாத் கொடுப்பதை தங்களின் வாழ்வின் வழக்கத்தில் கொண்டுவருபவர்களின் வாழ்வு பலவகைகளில் தூய்மைப் படுத்தப் படுகிறது;  பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. முதலாவதாக இறைவன் பெரிதும் வெறுக்கக் கூடிய கருமித்தனத்தில் இருந்து அவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். இறைவனின் எச்சரிக்கை இப்படி இருக்கிறது .

“மேலும் உறவினர்கள், அனாதைகள், வறியவர்கள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் . மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப் போக்கர், அடிமைகள் ஆகியோருடன் நயமுடன் நடந்து கொள்ளுங்கள் . திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள் ! வீண் பெருமையிலும் கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அவர்கள்தான்  கருமித்தனம்  செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கருமித்தனம்  செய்யும் படி தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் தயார் செய்து  வைத்துள்ளோம் ‘ (4:37).

நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்களும்  பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்’ (புகாரி).

இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கருமித்தனத்தை  நீக்கும் மருந்தாக ஜகாத் அமைந்துள்ளது.

அடுத்து ஜகாத் செல்வத்தை வளர்க்கும் அருளாதாரம் அடங்கிய பொருளாதாரத் தன்மை கொண்டதென்று இறைவன் குறிப்பிடுகிறான்.  இதனை


“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அத். 2:276)

என்ற வசனம் உணர்த்துகின்றது.

இறைவன் மனிதர்களுக்குத் திறந்து கொடுத்திருக்கிற நனமைகளுக்கான சேமிப்புக் கணக்கில் ஜகாத் ஒரு மறுமைக்கான மங்காத சேமிப்பு என்பதை 

“இன்னும், தொழுகையை முறையாகக் கடைபிடித்தும் ஜகாத்தைக் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில், உங்களின் மறுமை நலனுக்காக நற்செயல் எதையும் நீங்கள் சம்பாதித்து முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கி யவனாகவே இருக்கிறான்’ (அத். 2:110).  என்று திருமறை சுட்டிக் காட்டுகிறது.

மேலும் பெருமானார் ( ஸல்) அவர்களிடம்  ஒரு முறை  ஒரு முழு ஆடு சமைத்த  நிலையில் தரப்பட்டது. அதை ஆயிஷா ( ரலி) அவர்களிடம் கொடுத்த பெருமானார் ( ஸல்) அவர்கள் இதனை வரியோர்க்கு வழங்குங்கள் என்று சொல்லி வெளியே சென்று விட்டார்கள். சற்று நேரம் கழித்து வந்த பெருமானார் ( ஸல்) அவர்கள் ஆயிஷா ( ரலி) அவர்களை நோக்கி தான் கொடுத்துச்சென்ற ஆட்டுக் கறியில் மிச்சம் இருக்கிறதா என்று கேட்டபோது ஒரு தொடைக் கறி மிச்சம் இருப்பதாக பதில் உரைத்தார்கள். அப்போது பெருமானார் ( ஸல் ) அவர்கள், “ நான் உங்களிடம் தந்து சென்றதில் எவ்வளவை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்தீர்களோ அதுதான் நம்முடையது. நம் வீட்டில் மிச்சம் இருப்பது மற்றவர்களுக்கு உரியது “ என்று கூறினார்களாம். அதாவது வெளியே தர்மமாக கொடுக்கப் பட்டது நம்முடைய நன்மைக் கணக்கில் சேரும் என்பது இதன் பொருள். ஆகவே பிறருக்குக் கொடுப்பது    நம்முடைய கணக்கில் இறைவனின் பேரேட்டில் வரவு வைக்கப் படும்.

மேலும் ஜகாத் கொடுப்பவர்கள் தங்களுடைய மறுமை வாழ்வு என்ன ஆகுமோ என்கிற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்பதை இறைவன் இவ்வாறு உறுதியளிக்கிறான்.

“எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு, நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலை நாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு . அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப் படவும் மாட்டார்கள்.”   (அத் . 2:277).

அடுத்து தர்மம் தலை காக்கும் என்கிற அடிப்படையில் இறைவன் வழங்கும் தண்டனையிலிருந்து பாதுகாப்புத் தரும் கவசமாக ஜகாத் திகழும் என்பதை

“நான் நாடுகிறவர்களுக்கு தண்டனை அளிப்பேன் . ஆயினும் என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்து இருக்கிறது . எனவே எவர்கள்  இறைவனுக்கு அஞ்சுகிறார்களோ மேலும் ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும் என்னுடைய வசனங்களையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன் என்று (அல்லாஹ்) மூஸா நபி ( ஸல்) அவர்களுக்கு பதிலுரைத்தான். (7:156).

என்ற வசனம் இதனை உணர்த்து கின்றது. மேலும் நபி  மொழியோ

“செல்வந்தர்கள் தமது செல்வங்களுக்குரிய  ஜகாத்தை வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள்”  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : இப்னு மாஜா

இறைவனின் கட்டளைப்படி ஜகாத் தொடர்ந்து கொடுத்து வருபவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் கிடைத்துக் கொண்டிருக்குமென்பதையும், அல்லாஹ்வின் அருளைப் பெற்றவரால் தான் சுவனம் செல்ல முடியும். அல்லாஹ்வின் அருளைப் பெற ஜகாத் ஒரு சிறந்த வழியாகும் என்பதையும் .

இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர்  உற்ற துணைவர்களாக  இருக்கின்றனர். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள். தீமையிலிருந்து தடுக்கிறார்கள்.  தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்.  ஜகாத்தை முறையாகக் கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படுகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டு இருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  நிலையான சுவனங்களில் தூயமையான இல்லங்களை அல்லாஹ்    வாக்களித்துள்ளான்  (அத். 9:71).

உலகில் யாரிடத்தில் கிடைக்கும் உதவிகளிலும் உயர்ந்த உதவி படைத்த அல்லாஹ் வாக் களிக்கின்ற  உதவியாகும். இதனை ஜகாத்தை பேணுவோர்க்கு அல்லாஹ் வாக்களிக்கின்றான். கீழ்க்காணும் இறைவேதத்தின் மொழிகள் , தொழுகையும் ஜகாத்தும் இருந்தால் அல்லாஹ்வின் அண்மை  கிட்டும் என்பதை உணர்த்துகின்றன.

“நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்”  (அத். 5:12)

அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக  அல்லாஹ்வும் உதவி செய்வான்’ (அத். 22:40).

அடுத்து சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும் ஒருவருக்கொருவர் அன்பையும் அரவணைப்பையும்  வளர்ப்பதில் ஜகாத் முன்னிற்கும் சக்தியாகும் . இதை இந்த இறைமறையின்  வரிகள் பறைசாற்றுகின்றன.

“ஆயினும், அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து           வருவார்களா னால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்” (அத். 9:11).

இவ்வசனம், ஜகாத்தை வழங்க மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்  என்ற கருத்தைத் தருகின்றது.

“அவர்கள்தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள். மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!” (அத். 41:7).

என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றது.

இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து மறுமையை நம்பி, இறைத்தூதர்களை விசுவாசித்து, தொழுகையை கடைப் பிடித்து, ஜகாத்தை நிறைவேற்றி வருபவர்களே இவ்வுலக வாழ்வில் வெற்றியாளர்கள் அவர்களுக்கே மறுமைவாழ்வும் இறைவனிடத்தில் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது என்பதற்கு இறைவன் தரும் உத்திரவாத வரிகள்

“இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றியாளர்கள்” (அத். 2:5).

ஆகவே ஜகாத் பற்றிய மேற்கண்ட தொகுக்கப் பட்ட இறை மொழிகளின் பிரகாரம் ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது; செல்வத்தை வளர்க்கிறது;  கருமித்தனத்தில் இருந்து காப்பாற்றுகிறது ;  சகோதரத்துவத்தை வளர்க்கிறது ;  மறுமை வாழ்வின் நல்ல இடத்தை உறுதி செய்கிறது; நிராகரிப்பிலிருந்து விடுவிக்கிறது ;  இறைவனின் அருள் மழையையும் பெரும் கருணையையும் நம் மீது      பொழியச்செய்கிறது என  உணரலாம்.

ஜகாத்தை இறைப் பொருத்தத்திற்கேற்ப எப்படிப் பங்கீடு செய்வது? என்று ஒரு கேள்வி வந்திருக்கிறது. இதற்குள் பல கருத்துக்கள் விவாதிக்க வேண்டியுள்ளன. எனவே
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

2 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//நான்உங்களுக்குதந்துசென்றதில்எவ்வளவை மற்றவர்களுக்குகொடுத்தீர்களோஅதுதான்நம்முடையது// மெய்சிலிர்க்கவைத்தவாசகம்.தர்மத்தின்கோட்டைவாசலின்கதவுகளை உடைத்தவசனம்இது .

sheikdawoodmohamedfarook said...

//ஜக்காத்கொடுப்பதற்க்கு தகுதியானவர்கள் யார்யார்என்று அல்லாஹ் பட்டியலிட்டுக்காட்டுகிறான்//பயணத்தின்போதுஅந்நியநாட்டில்அகப்பட்டுக்கொண்டுஉதவிகோரும்முஸ்லிம்பயணிகள்// கள்ளபாஸ்போர்ட்டில்அந்நியநாட்டுக்குசென்றுஇமிகிரேசெனில்மாட்டிக் கொள்ளும்முஸ்லிகளுக்குமாஜக்காத்கொடுக்கவேண்டும்?

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு