Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அனைவருக்கும் பொதுவான அதிகாரம் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2015 | ,

:::::: தொடர் - 27 ::::::
உலகளாவிய ஓர் இயக்கத்திற்குத் தேவையான தன்மைகளுள் இரண்டாவது, அதிகாரம் பெற்ற மேல்மட்ட நிர்வாக அமைப்பாகும்.  அந்த நிர்வாகத்திலிருந்தே அதன் கொள்கைகள் வகுக்கப்பட்டுப் பரப்பப்பட வேண்டும்.  அவற்றை மக்கள் நடைமுறையில் நடத்திக் காட்டவேண்டும்.  இந்த நடைமுறை, மூன்று தனிப் பிரிவுகளைக் கொண்டதாகும்.

சட்டத் துறை:  அனுமதிக்கப்பட்ட, மற்றும் தடை செய்யப்பட்ட விதிகளையும் உள்ளடக்கிய சட்டத் தொகுப்பு, அதைத் தொடர்ந்த வெகுமதிகளையும் தண்டனைகளையும் பற்றி விரிவான வழிகாட்டுதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.  இந்தச் சட்ட வழிகாட்டி, வாழ்க்கையின் அனைத்துத் தன்மைகளையும் உள்ளடக்கி, அச்சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்ட நேரத்தில் இல்லாத புதிது புதிதாக உருவாகும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவற்றில் அனுசரித்துப் போகக்கூடிய தன்மை இருக்க வேண்டும். 

நீதித் துறை:  சட்டத்தை நடைமுறைப் படுத்தி, சட்ட மீறுதல்களையும், கேள்விகளையும், அவற்றின் விளக்கங்களையும் உள்ளடக்கியதே இப்பிரிவாகும்.  இத்துறையானது, பல்வேறு சட்ட நுனுக்கங்களையும், அவை நவீன உலகில் மனித வாழ்வில் உண்டாக்கும் தாக்கங்களையும் பற்றித் தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.  அப்போதுதான், ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உண்டாகும்.  காலம் மாறுபடும்போது அவ்வக்காலத்தின் மனிதர்களும் மாறுபடு கின்றார்கள்; அவர்களின் பழக்க வழக்கங்களும் மாறுபடுகின்றன அல்லவா?  

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பு:  சட்டத்தை மதிப்பவர் யார், அதை முறிப்பவர் யார் என்பதை விளக்கி, சட்டத்தை மதிப்பவர்களுக்கு ஆதரவாகவும், அதனை மீறுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் பிறிவுதான் இம்மூன்றாவது அமைப்பாகும்.  பொதுவான ஒற்றுமை, பேரறிவு, ராஜதந்திரம், உறுதிப்பாடு போன்ற தன்மைகளைப் பெற்று, சட்டமின்மைக்கும் ஆனவத்திற்கும் இடையில் உள்ள குறுகிய வழியில் பயணம் செய்யும் விதத்தில் அமையப்பெற்றதே இந்த முன்னேற்றப் பாதையாகும்.

மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த காலகட்டத்தில், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின்முன் இருந்த மிகப்பெரிய பிரச்சினை, இனத்தாலும் மார்க்கத்தாலும் பல பிரிவுகளாக மதீனாவில் இருந்த மக்களுக்கும் ‘ஹிஜ்ரத்’ செய்து வந்தவர்களுக்குமான ஓர் இஸ்லாமிய நல்லாட்சியை மதீனாவில் நிறுவவேண்டும் என்ற நோக்கமேயாகும். முஸ்லிம்கள் ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த அரபுக் கோத்திரங்கள், ‘அவ்ஸ்’ – ‘கஸ்ரஜ்’ என்ற இரு பிரிவுகளாவர்.  இவர்களுள், அதுவரை இஸ்லாத்தைத் தழுவாதிருந்த அரபு இணைவைப்பாளர்களும் அடங்குவர்.  அத்துடன், மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்திருந்த ‘முஹாஜிர்’களும் புதிய சூழலில் பொறுப்புகளை வகிக்க ஆயத்தமாய் இருந்தனர்.  மதீனத்து யூதர்களும், ‘பனூநளீர்’, ‘பனூகைனுகா’, ‘பனூகுரைழா’ என்று மூன்று பிரிவினர்களாக இருந்தனர்.  

இத்தகைய கலப்புச் சமுதாயமாக இருந்த மதீனத்து மக்களுக்குச் சட்டபூர்வமாக அரசியல் அமைப்பு ஒன்று தேவைப்பட்டது.  உலக வரலாற்றில் முதன்முதலாக, பல்லினச் சமுதாயம் ஒன்றுக்கு நடுநிலையான நடப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.  

மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த ‘முஹாஜிர்’களுக்கும், மதீனத்து முஸ்லிம்களுக்கும், அதுவரை இஸ்லாத்தைத் தழுவாதிருந்த அரபு மக்களுக்கும், மதீனாவில் உரிமை கொண்டாட வந்து, பின்னர் அவ்வூரின் பிரஜைகளாகவே ஆகிவிட்டிருந்த யூதர்களுக்கும் இடையில் ஒரு சிறப்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நபியவர்கள் உருவாக்கினார்கள். பின்னர், யூதர்கள் இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் வாழ்ந்துவந்தனர். இதன் காரணமாக, சில ஆண்டுகளின்பின்  முஸ்லிம்களால் மதீனாவை விட்டுத் துரத்தப்பட்டார்கள்.

அந்த ஒப்பந்தம்தான் உலக வரலாற்றிலேயே முதலானதும், முழுமையானதுமான ஆட்சியின் சட்ட ஆவணமாகும். இந்தச் சட்ட ஆவணத்திற்கு யாரெல்லாம் தொடர்புடைய வர்களோ, அவர்கள் அனைவருக்கும் உரிய கடமைகளும் உரிமைகளும் இருந்தன.  அவர்கள் எந்த மார்க்கத்தையும், எந்த நம்பிக்கையையும் சார்ந்திருந்தாலும் சரியே. இஸ்லாம் மட்டுமே இது போன்ற சட்ட நிபந்தனைகளை வகுத்துக் கொடுக்க முடியும். ஏனெனில், உலக வரலாற்று அடிப்படையில், மக்களுக்கு வழிகாட்ட வந்த தூதர்கள் அனைவரும் போதித்த மார்க்கம் என்பது இஸ்லாம்தான். இஸ்லாத்தினால் மட்டுமே இத்தகைய வழிகாட்டுதல்களைக் காட்டிக் கொடுக்க முடியும்.

நபி வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான இப்னு இஸ்ஹாக் அவர்கள் மூலம் நமக்கு வந்துள்ள அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அடுத்த தலைப்பில் பார்ப்போம்.  

அதிரை அஹ்மது

1 Responses So Far:

sabeer.abushahruk said...

சட்டத்துறையையும் நீதித்துறையையும் கட்டப்பஞ்சாயத்திலும் நிதிக்கரையாலும் நாசமாக்கிப்போட்டிருக்கும் சமுதாயத்தைப் பற்றி அறிந்த எங்களுக்கு இந்த அத்தியாயம் ஓர் ஆச்சர்யம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு