Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 24லிருந்து.... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2015 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முந்தைய பதிவுகளில் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்த அந்த சத்தியத்தோழர்கள் சிலரின் வாழ்விலிருந்து ஓரிரு சம்பவங்களைப் பார்த்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் முதல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களுக்கு எடுத்துக்காட்டாய் உள்ள சம்பவங்களைப் பார்ப்போம், படிப்பினைகளை பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.

இவ்வுலகில் நன்மை தீமை, வெற்றி தோல்வி, இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது நம்முடைய ஈமானில் உள்ள ஒரு நம்பிக்கை. ஆனால் நாம் இன்று நம்முடைய வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் நாம் தான் காரணம் என்று அல்லாஹ்வின் நாட்டத்தை, அல்லாஹ் நமக்கு நிர்ணயித்த அந்த விதியை இரண்டாம் பட்சமாகவே பார்க்கிறோம். அல்லாஹ் எனக்கு அளித்த நிஃமத் என்பதை மறந்துவிடுகிறோம். இது போல் நமக்கு ஒரு தீங்கு ஏற்பட்டுவிட்டால், அதன் மூலம் பிறரைக் காரணம் காட்ட முயற்சிக்கிறோமே தவிர இது அல்லாஹ் நமக்கு நிர்ணயித்த விதி, இதன் மூலம் அல்லாஹ் நம்முடைய ஈமானைச் சோதிக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம். ஆனால் நம்முடைய வாழ்வுக்கு முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை காணும் போது நம்முடைய வாழ்வு அவர்கள் காட்டித்தந்த வழியில் உள்ளதா என்பதை சிந்திக்கத் தூண்டும்.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமழான் பிறை 12இல் இடம்பெற்ற மக்கா வெற்றி இஸ்லாம் அரபு தீபகற்பத்தில் மிக பலம் வாய்ந்த சக்தி என்பதை புலப்படுத்தியது. ஹூதைபியா உடன்படிக்கைகளுள் ஒன்றை மக்கத்து காஃபிர்கள் முறித்ததைத் தொடர்ந்து   நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட படை வீரர்களோடு மக்காவை நோக்கிச் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் உயர்ந்த பண்புகளால் கவரப்பட்ட மக்கத்து குறைஷி வம்சத்தின் தலைவர்களுள் ஒருவரான அபூ ஸூப்யான் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்கத்து மக்களுக்கு "யார் அபூஸூப்யானின் வீட்டில் நுழைகின்றனரோ அவர்களும், மதீனா பள்ளிவாசலில் யார் நுழைகின்றனரோ  அவர்களும் பாதுகாப்பு பெற்று விட்டார்கள்" என பிரகடனம் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எந்த யுத்தமுமின்றி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக மக்காவுக்குள் பாதுகாப்பாக நுழைந்தார்கள். பிறகு கஃபாவை தவாப் செய்துவிட்டு அதனுள் காணப்பட்ட 360 சிலைகளையும் அகற்றினார்கள்.

பிறகு மக்கத்து காபிர்கள் தங்களுக்கு முஹம்மத் என்ன செய்துவிடுவாறோ என அஞ்சி நின்றபோது அவர்களை அழைத்து பொது மன்னிப்பு வழங்கி விட்டு 'நீங்கள் சென்று விடுங்கள். நீங்கள் சுதந்திரம் பெற்று விட்டீர்கள்' எனக்கூறி சுதந்திர பிரகடணம் செய்தார்கள்.

அநீதிக்கும் சித்திரவதைக்கும் உட்பட்டு தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்ட நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு பூரண மன்னிப்பை வழங்கி வெற்றியை ஆரவாரமின்றி கொண்டாடியமை எவ்வளவு படிப்பினை மிக்க செயலாகும். இது இஸ்லாம் சாந்தி சமாதான மார்க்கம் என்பதை உறுதிசெய்கிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், இன்று நாம் பிறந்த ஊரைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டால், நம் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நாம் சம்பாதித்த சொத்துக்கள், கட்டிய வீடு, சொந்த பந்தங்கள், நண்பர்கள், ஓடி ஆடி விளையாடிய தெருவீதிகள், ஐவேளை தொழுகை தொழுதுவரும் பள்ளி வாசல்கள், நாம் படித்த பள்ளிக்கூடங்கள், நல்ல நண்பர்களாக இருந்த பிற மத நண்பர்கள், இவைகள் அனைத்தனையும் விட்டு நிர்கதியான நிலையில் வேறு ஊருக்கு அடித்து துரத்தப்பட்டால் நம்மிடம் நிச்சயம் சந்தோசம் இருக்காது, நிம்மதி இருக்காது. 

என்னதான் காலம் கழிந்தாலும் நான் வாழ்ந்த அதே ஊருக்கு வந்தடைய வேண்டும் என்ற ஏக்கம் இருந்துக் கொண்டே இருக்கும், பெருளாதார பலத்துடன் ஆள் பலத்துடன் நாம் துரத்தி அடிக்கப்பட்ட அந்த சமூகத்துக்கு நம் ஊருக்கு வந்தால், மனிதனாக பிறந்த நாம் நிச்சயம் நம்மை துரத்தி அடித்தவர்களை பழிவாங்கியே ஆகவேண்டும் என்ற கோப எண்ணத்தில் மலை உச்சி பெருமை கொண்டவர்களாகத் தான் நாம் வருவோம். ஆனால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை  புகழ்ந்தவர்களாக, ஒரு துளி பெருமையும் மனதில் இல்லாமல், தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துள்ளார்கள் என்றால், அவர்களின் வழியில் வாழ்கிறோம் என்று சொல்லும் நாம், பழிவாங்கும் எண்ணத்தில் இன்று நம்மை சுற்றியுள்ளவர்களை நிரந்தர எதிரிகளாக பாவித்து வருகிறோமே? இது தான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்ற நற்குணங்களா?

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே (அல்ஹம்துலில்லாஹ்) என்ற இந்த வார்த்தையை நாம் சரியாக உணரவில்லை என்பது நாம் நம்முடைய வாழ்விலிருந்து கண்டுவரும் உண்மை. பெருமையின் உச்சக்கட்ட்த்தில் சிறிய பெரிய உதவிகளைச் சுய விளம்பரங்களின் மூலம் முக்கியத்துவம் கொடுக்கிறோமா இல்லையா? நான் உத்தமனாக வாழ்கிறேன், அவன் இப்படிப்பட்டவன், இவன் இப்படிப்பட்டவன் என்று அடுத்தவனை இழிவுபடுத்தி நம்மை நாமே பெறுமையடித்துக் கொள்கிறோமா இல்லையா? எனக்கு கோபம் என்பதே வராது, நான் காசு எல்லாம் பார்க்க மாட்டேன் தர்மம் அள்ளிக்கொடுப்பேன் மேலும் நான் மார்க்கத்தில் வழி தவறாதவன் அவன் வழி தவறியவன் என்று சொர்கத்துக்கு அனுமதி சீட்டு வாங்கியவர்கள் போன்று பேசிக் கொள்பவர்களாக இருக்கிறோமா இல்லையா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M. தாஜுதீன் 

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு