காலணிகளை வெளியே விடவும்!

அம்மா…!
இந்த
இடிபாடுகளுக்கிடையே
என்னை
இறக்கி வைத்துவிட்டு
எங்கே போனாய்

சுயநலக் கோடரியால்
எல்லா
கிளைகளையும் துண்டித்துக்கொண்டு
ஒற்றை மரமென
ஆகிவிட்ட மனிதக் காடுகளில்
நிழலின்றி அவதியுறுகிறேன்

கத்தியையும் கடப்பாறைகளையும்
கலந்தாலோசிக்க விட்டால்
காயங்கள்தானே மிஞ்சும்?

பாவிக்கும் காவிக்கும்
இயல்பாக அமைந்திட்ட
எதுகை மோனையோடு
எடு கையில்
முனை கூரிய வாளென
குத்திச் சாய்க்கிறது
ஒரு கூட்டம்

அரிதாரம் பூசி
அவதாரமாய்
அபிநயிப்போரிடமோ

அலங்காரமாய்ப் பேசி
அரை மயக்கத்தில் ஆழ்த்துவோரிடமோ
சிக்கித் தவிக்கிறது
சமுதாயம்

அப்பாவிகள் அணிவித்த
மகுடத்தின்
மந்திரக்கோலையும் மிஞ்சும்
மகிமையால்
சொத்துக் குவிப்பிலோ
சுகக் களிப்பிலோ
திளைக்கிறது தலைமை

அலாவுதீன் பூதம் கொண்டு
அழிக்க முனைந்தாலும்
அலிபாபாவின் திருடர்களாய்
மிகைக்கிறார்கள்

துறவி வேடதாரிகள்
இல்லறம் சுகிக்க,
நல்லற இலக்கணங்களாம்
அன்பு
பாசம்
அக்கறை
நேசம் என
மனிதப் பண்புகள் அற்றுப்போய்
இல்லறப் போர்வைக்குள்
ஒற்றைப்பட்டுத் தவிக்கிறது மானுடம்

உட்காயங்களால் அழும்
உன்
சேயை விட்டு
எங்கே சென்றாய் அம்மா

கைகளைத் தூளியாக்கி
மெய்யோடு அனைப்பாயே
அந்த
மந்திரத் தொடுகைக்கு
ஏங்கித் தவிக்கவிட்டு
எங்கே போனாய்

கால் நீட்ட இடம் இன்றி
கை விரிக்க வலம் இன்றி
நிமிரவோ திமிறவோ
வழியின்றி
குறுகிக்கிடந்த கருவரையில்
உண்ட சக்தியையும்
உன் சுவாசக்காற்றையும்
என்னோடு பகிர்ந்து
ஈன்றெடுத்த நீ
இன்றெடுத்து என்னை
வெளியே விட்டுவிட்டு
எங்கே சென்றாய்

நீ வரும்வரை
உன்னைப் படம் வரைந்து
உள்ளே
எனக்கோர் இடம் பிடித்தேன்

உனக்கென எனில்
காத்திருப்பிலும் களித்திருப்பேன்
எனினும் நீ
சீக்கிரம் வந்து விடு!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

14 கருத்துகள்

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

சுவற்றிலோ ஓவியம்.எழுத்திலோ சிந்தனை நிறைந்த காவியம்.

கயவர்கள் திருந்தட்டும் .மக்களிடையே புத்துணர்ச்சி மலருட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

'கிரவ்ன்' இங்கே வா வா...
இந்த கவிதைக்கு
'கிரவ்ன்' ஒன்று தா தா...

sabeer.abushahruk சொன்னது…

அம்மா என்னும் உறவு உலகத்தில் தலையாயது. அம்மாவைத் தேடும் பிள்ளைகளின் தவிப்பினை அனுபவித்து எழுதியது கீழே:

அம்மாவின் அங்கி!

திங்கள் முதல் வெள்ளிவரை
நெடுந்தொடர் நாயகிகளின்
குடும்பப் பிரச்சினைகளில்
ஒன்றிப்போன மனைவி

வார விடுமுறையின் துவக்கத்தில்
காரணமின்றி கோபித்துக்கொண்டு
மகளின் அறையில் படுத்துக்கொள்ள

என்னுடன் படுத்துக்கொண்ட
சின்னவன்
நெடுநேரமாகியும்
தூக்கமில்லாமல்
என் தோளிலேயே தவித்திருந்தான்

டைனோஸர் கதை
கேசம் துழாவிய வருடல்
என
எந்த முயற்சியும் அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க

சட்டென எழுந்து
மேசையின் இழுவரையில்
மடித்திருந்த
மனைவியின்
இரவு அங்கி ஒன்றை
எடுத்துவந்து
அதன்
முன்கழுத்து வளைவில் தொங்கிய
நாடாக்களின் குஞ்சத்தினை
நெருடிக் கொண்டிருந்தவன்
சடுதியில் உறங்கிப்போனான்

புதுமையான வடிவங்களிலும்
எழிலான வண்ணங்களிலும்
எத்தனையோ
நவீன
கவர்ச்சியான இரவு அங்கிகள்
வந்துவிட்டப்போதிலும்
அந்தக்
குஞ்சம் வைத்த
பழைய வடிவத்து அங்கியையே
அவள் தேடித்தேடி வாங்கியது நினைவுக்கு வர
அடுத்த அறைக்குச் சென்று
அவன் அம்மாவின்
ஆழ்ந்த உறக்கத்தை
நெடுநேரம்
பார்த்துக்கொண்டு நின்றேன்.

-சபீர்
நன்றி: திண்ணை.காம்

sheikdawoodmohamedfarook சொன்னது…

//அலிபாபாவின் திருடர்களாய் மிகைக்கிறார்கள்// அலிபாபாவின்திருடர்கள் எல்லாம் 'திருடுவது எப்படி?' என்றுஇவர்கள் பள்ளியில் பாடம் கேட்க'சீட்டு'கேட்டு Q வரிசையில் இடிச்சுபுடிச்சுகிட்டுநிக்கிறாகளே!

sabeer.abushahruk சொன்னது…

எல் எம் எஸ் / அபு இபு / ஃபாரூக் மாமா,

வாசித்துக் கருத்திட்டமைக்கு ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

அப்துல்மாலிக் சொன்னது…

சூப்பர் கவிக்காக்கா

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.தாமததுக்கு வருந்துகிறேன்.கண்கலங்க வைக்கும் கவிதை!

crown சொன்னது…

அம்மா…!
இந்த
இடிபாடுகளுக்கிடையே
என்னை
இறக்கி வைத்துவிட்டு
எங்கே போனாய்
----------------------------------------------------------
கரிங்கல் இதயம் படைத்தவர்கள் தயை இல்லாமல் தாயையும் கொல்லுவர் சேயையும் கொல்லுவர்!காவி ஓனாய்களுக்கு மனிதாபிமானம்!கொத்துபுராட்டா!

crown சொன்னது…

சுயநலக் கோடரியால்
எல்லா
கிளைகளையும் துண்டித்துக்கொண்டு
ஒற்றை மரமென
ஆகிவிட்ட மனிதக் காடுகளில்
நிழலின்றி அவதியுறுகிறேன்
--------------------------------------------------------------
சுயனலக்கோடாரி இது சரியான வார்தை பிரையோகம் !இப்படி மனிதாபிமானம் சிதைக்கப்பட்டுதான் புனிதம் புதைக்கப்பட்டுவிட்டது!

crown சொன்னது…

கத்தியையும் கடப்பாறைகளையும்
கலந்தாலோசிக்க விட்டால்
காயங்கள்தானே மிஞ்சும்?

பாவிக்கும் காவிக்கும்
இயல்பாக அமைந்திட்ட
எதுகை மோனையோடு
எடு கையில்
முனை கூரிய வாளென
குத்திச் சாய்க்கிறது
ஒரு கூட்டம்
----------------------------------------
கொடுங்கோலனிடம் ஆட்சியை அல்லாஹ் கொடுத்து நம்மை சோதிப்பான் என்பது இப்ப நடந்துகிட்டு இருக்கு! நாம் நம் ஒற்றுமையில் அந்த சதிகாரர்களை வீழ்த்த இது ஆரம்பத்தருணம்.

crown சொன்னது…

அரிதாரம் பூசி
அவதாரமாய்
அபிநயிப்போரிடமோ

அலங்காரமாய்ப் பேசி
அரை மயக்கத்தில் ஆழ்த்துவோரிடமோ
சிக்கித் தவிக்கிறது
சமுதாயம்

அப்பாவிகள் அணிவித்த
மகுடத்தின்
மந்திரக்கோலையும் மிஞ்சும்
மகிமையால்
சொத்துக் குவிப்பிலோ
சுகக் களிப்பிலோ
திளைக்கிறது தலைமை

அலாவுதீன் பூதம் கொண்டு
அழிக்க முனைந்தாலும்
அலிபாபாவின் திருடர்களாய்
மிகைக்கிறார்கள்
--------------------------------------------------------------
நாட்டில் நடக்கும் நாடகத்தின் நிதர்சனத்தை கவிஞர் விவரிக்கிறார். இந்த ஒத்திகைக்கு நாமும் நம்மை அறியாமல் ஒத்துகையாக இருப்பது துரதிஸ்டம்!ஆகேவே ஒரு குடையிம் கீழ் ஆலோசனை செய்து எந்த செயலும் செய்தால் இன்சா அல்லாஹ் வெற்றி நிச்சயம்!

crown சொன்னது…

இப்படியே தொடர் எச்சரிக்கை,விழிப்புணர்வு ஆக்கம் செய்து வரும் உங்களுக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் நல்குவானாக ஆமீன்.

sabeer.abushahruk சொன்னது…

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

பிஸியாக இருந்திருப்பீர்கள் என்றுதான் வறுந்தி அழைக்கவில்லை எனினும் தேடல் இருந்தது.

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், க்ரவ்ன்!

Unknown சொன்னது…

Picture College crack