Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) 16

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2013 | , , , , ,

தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து உலகின் சாதிக் கொடுமையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஓர் அதிர்ச்சியான செய்தி பெரிதும் பாதித்தது. அதுதான் 2010ம் ஆண்டு அல்லாஹ்வின் நாட்டப்படி தூய இஸ்லாத்தை தழுவிய டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி. திங்கள் கிழமை காலைப் பொழுதில் மரணச் செய்தியை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் ஆழ்ந்த சோகம் ஒட்டிக் கொண்டது. இது நம்மில் சொந்தம் ஒருவர் மறைந்த துயருக்கு நிகராக வாட்டியது. எங்கிருந்தோ இருந்தவர் இஸ்லாத்தை ஏற்று, அவருக்கு இறைவன் விதித்த மரணம் வந்தடைந்ததும் ஏன் என் மனது இப்படி பதறியது. இதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்கள் உண்டு.

இறை மறுப்புக் கொள்கையில் இருந்து தீவிர பிரச்சாரம் செய்து பின்னர் அதிலிருந்து விலகி, இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன்தான் ‘அல்லாஹ்’ என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துச் சென்ற முன்மாதிரி முஸ்லிமாக வாழ்ந்து மரணித்துள்ளார்கள் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்).


இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) தமிழகம் மட்டுமல்ல அயல்நாடுகளில் வசிக்கும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்களிடம், இறைவனின் நாட்டப்படி ‘ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை மட்டும் சொல்லாமல், முஸ்லீம்கள் தூய இஸ்லாத்தின்படி எவ்வாறு முறையாக வாழவேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள்’ என்பது உலகறிந்த முக்கியத் தகவல்.

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களை இந்த வருடம் (2013) மே-மாதம் அமீரகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? என்ற ஆவணப் படம் துபாயில் அறிமுகம் செய்யும் ஏற்பாட்டிற்கு உதவும் வாய்ப்பு எனக்கும் எனது சொந்தமான மெய்னுதீனுக்கும் கிடைத்தது. எதிர்பாராத அவசர ஏற்பாடாக இருந்தாலும் அன்றைய தினம் மடிக்கணினி (Laptop), ஒளிப்படக்காட்டி (Projector) இவைகளை குறைந்தபட்ச நேரத்தில் நானும், மெய்னுதீன் இணைந்து அந்த வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படத்தை அங்கு வந்திருந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டது.

அன்றைய தினம் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்கள் ஜாஃபர் அலி, ரஃபி அஹமது, மற்றும் சென்னையிலிருந்து டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுடன் வந்திருந்த சகோதரர் செங்கிஸ்கானும் ஒரே காரில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களுடன் பயணித்தோம். உண்மையில் நினைவை விட்டு அகலாத நிகழ்வு. அந்த 30 நிமிடத்தில், டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மேடையில் பேசாத சில முக்கியத் தகவல்களை அவர்களால் சொல்லக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

இஸ்லாத்தை பெரும் தலைவர்களுக்கு எத்திவைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார், கருணாநிதி முதல் போப் ஆண்டவர் வரை சென்று இஸ்லாத்தை எத்தி வைத்து அவர்களோடு விவாதிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைச் சொன்னார். அவ்வாறான விவாதங்களை காணொளியாக ஆவணப்படுத்தி வெளியிடுவேன் என்றும் உறுதியாக சொன்னார். கலைஞர் கருணாநிதியை இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்ததாகவும், கலைஞர் ஒரு வாக்குறுதி கொடுத்ததாகவும் அந்த சந்தர்பத்தில் சொன்னார். அந்த வாக்குறுதி என்னவென்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இஸ்லாத்தின் பக்கம் கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் அழைப்பு விடுப்பேன் என்று தெளிவாக, உறுதியுடன் சொன்னார்கள்.

திரைப்படத் துறையில் பிரபலமானவர்களில் முக்கியமானவரான AVM சரவணன் அவர்களுக்கு இஸ்லாதிற்கு வர ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லியதோடு அல்லாமல் தன்னிடம் AVM சரவணனன் அவர்கள் பல இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாங்கி சென்றுள்ளதாகவும், தனக்கு இருக்கும் ஒரு சில பணப் பிரச்சினைகளை முடித்துவிட்டு இஸ்லாத்தில் இணைவது குறித்து யோசிப்பேன் என்று AVM சரவணன் அவர்கள் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சொன்னார் என்ற மற்றுமொரு தகவல், அப்போது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எனக்கும், சகோதரர்கள் ரஃபி அஹமது ஜஃபர் அலி ஆகியோருக்கும் மிகவும் இன்பமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தன்னோடு ஒன்றாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக கட்சி தலைவர் வைகோ ஆகியோர் இஸ்லாத்தை பற்றி அறிந்தவர்கள், அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மிகவும் தகுதியானவர்கள். அவர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்கள் டாக்டர் அப்துல்லாஹ்.

ஒரு முறை ஒரு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது, 7 வருடம் பட்டம் பெற்ற ஒரு இளம் மவ்லவி மற்றொரு மார்க்க சொற்பொழிவாளரை பற்றி தன் உரையில் பொது மேடையிலேயே குறை கூறி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அது தனக்கு மிகவும் எரிச்சலடைய செய்ததாகவும் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு சொன்னார்கள். தன்னைப் போன்ற இன்னொரு இஸ்லாமிய சகோதரனை திட்டுவது தான் மார்க்க சொற்பொழிவு என்று பல மார்க்க சொற்பொழிவாளர்கள் கருதுகிறார்களே, இதற்காகத்தான் 7 வருடம் மதர்ஸாவில் படித்தீர்களா? என்று ஆதங்கத்தோடு வினவியதையும் எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

கருணாநிதி, AVM சரவணன், திருமாவளவன், வைகோ ஆகியோருக்கும் இஸ்லாத்திற்கும் இருக்கும் தொடர்பு பற்றி ஒரு காணொளி பேட்டி தர முடியுமா என்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் கேட்டேன். “அல்லாஹ்வை தவிர நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், நிச்சயம் அவர்கள் தொடர்பாக பேட்டி தாராளமாக தருவேன்” என்று சொல்லி மறுநாள் துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலுக்கு வர சொன்னார்கள்.

மறுநாள் எனது மற்றொரு சொந்தமான அஹமது முஹ்சீனையும் உடன் அழைத்துச் சென்றேன். மனோதத்துவ நிபுணரான டாக்டர் அப்துல்லாஹ் அவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக நிறைய பேர் அங்கே காத்திருந்த காரணத்தால், என்னிடம் பேட்டி தருவதாக சொல்லியிருந்தது அன்று நடைபெறாமல் போனது. இன்ஷா அல்லாஹ் திருமாவளவன், கருணாநிதி, AVM சரவணன், வைகோ ஆகியோருக்கும் இஸ்லாத்திற்கு உள்ள தொடர்பு பற்றி நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது பற்றி பொதுவில் பேசுவேன் என்று சொல்லி எங்களிடமிருந்து விடை பெற்றார் டாக்டர் அப்துல்லாஹ். 

முனைவர் பட்டம் பெற்று உலக புகழ்பெற்ற மனிதராக 63 வயது நிறைந்தவர்களக இருந்தாலும் 16 வயது வாலிபர் போல் மிகவும் சுறுசுறுப்புடன் தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், சிந்திக்க தூண்டும் நல்ல கருத்துகளாலும் குறுகிய சில நிமிடங்களில் எங்கள் அனைவரின் உள்ளத்திலும் நீங்காத இடம் பிடித்த அவர்களை சராசரி வயதில் முதிர்ந்த மனிதராக மட்டும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மரணம் நம் எல்லோருக்கும் ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகிறது.

நம்மில் சக முஸ்லீம் ஒருவர் உடல் நிலை பாதிக்கப் பட்டிருக்கிறார் என்றால், கருத்து வேறுபாடுகளை மறந்து அவரிடம் நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும், தூய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் அவர்களை மருத்துவமனைகளில் சந்தித்து அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அல்லது அவர்கள் சார்ந்த இயக்கச் சகோதரர்களை பிரார்த்திக்கச் சொன்ன இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் மிகமிகக் குறைவே ! இதில் நிறைய தலைவர்கள் தலைமறைவானது ஏன் என்றுதான் புரியவில்லை.

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படாமல் மருத்துவ ஆராய்ச்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்ய வேண்டும், இவை அல்லாமல் வேறு வழியில் அந்த உடலை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. தூய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு உடல் தானம் செய்வது பற்றி அறிந்தும் அதனை தவறு என்று எடுத்துச் சொல்ல தவறியவர்கள் இதற்கு அல்லாஹ்விடம் பொறுப்பாவார்கள்.

வாழும் வரைக் கற்றுக் கொடுப்பவராக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் இறப்பில் கூட இஸ்லாமிய சமுதாயத்திற்கு சில படிப்பினைகளையும் விட்டு சென்றுள்ளார்கள். அதில் முதலாவது இஸ்லாத்த்தை ஏற்கும் சகோதர சகோதரிகளின் வருகையைக் கொண்டாடும் நாம் வந்தபின் செய்ய வேண்டிய கடமைகளில் பொடுபோக்காக இருந்து வழிகாட்ட தவறி இருக்கிறோம். முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் எனும் இறை வசனத்தின் படி இஸ்லாத்தை ஏற்று வந்தவர்களை முஸ்லிம்களாகவே மரணிக்கவும் கடைசிவரை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் நமது கடமையாகும்.

இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்ற சகோதர சகோதரிகளிடம் உடல் தானம் செய்தவது தவறு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மரணத்திற்கு பின் இறுதிக் காரியங்கள் இஸ்லாமிய முறைப்படி நடக்க வேண்டும் என்ற உறுதி மொழியை எழுத்துபூர்வமாக எவ்வித சட்டச் சிக்கல்கள் எழாமல் இருப்பதற்கு முன்னின்று செய்து முடிக்க வேண்டும்.

கருணாநிதி, வைகோ திருமாவளவன் AVM சரவணன் ஆகியோரை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்க முயற்சி செய்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவர்கள் அனைவரையும் தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்க இனி நம்மில் யார் முன் வரப்போகிறார்கள்? அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். அல்லாஹ்விடம் மட்டுமே அதற்கான விடை உள்ளது. அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழி படுத்துகிறான், தான் நாடியோரை இழிவு படுத்துகிறான்.

வல்ல ரஹ்மானே, மரணித்த நம் சகோதரர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தை கொடுப்பாயாக. அன்னாரை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பததார்கள், நண்பர்கள், முஸ்லீம்கள் அனைவருக்கும் பொருமையை கொடுப்பாயாக. 

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் கடைசி அமீரக பயணத்தில் பேசியபோது பதிக்கப்பட்ட காணொளி.


M.தாஜுதீன்

16 Responses So Far:

sabeer.abushahruk said...

டாக்டர் அப்துல்லாஹ்வின் தவா திட்டங்களையும் ஆர்வத்தையும் கேட்கும்போது இன்னும் கொஞ்சகாலம் விட்டுவைத்தாலென்ன யா அல்லாஹ் என்று கேட்கத் தோன்றுகிறது.

அவருக்கு சொர்க்கத்தை தந்தருள் யா அல்லாஹ்.

Shameed said...

டாக்டர் அப்துல்லாஹ் பற்றிய பல அறிய தகவல்கள்.

Shameed said...

வல்ல ரஹ்மானே, மரணித்த நம் சகோதரர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தை கொடுப்பாயாக. அன்னாரை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பததார்கள், நண்பர்கள், முஸ்லீம்கள் அனைவருக்கும் பொருமையை கொடுப்பாயாக.

KALAM SHAICK ABDUL KADER said...

யா அல்லாஹ்!
இவர்களுக்கு சுவர்க்கத்தை ஆகுமானதாக்கி,
நரகிலிருந்தும் காப்பாயாக...
யா அல்லாஹ் இவர்களுடைய குடும்பத்தார்க்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக


அன்னாருடன் ஒரு வாரகாலம் மார்க்கம் மற்றும் இலக்கிய கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பினையும், சத்யமார்க்கம் இணையதளத்திற்கான பேட்டியிலும் துபையில் இருந்தேன்; அவர்கள் எனக்களித்த வழிகாட்டுதல் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகின்றது. நேற்றிரவு இந்த செய்தி கிட்டியதும் நடுநிசி என்று கூட பாராமல் எல்லா வலைத்த்ளங்கட்கும் அனுப்பி வைத்தேன். தொல்.,திருமாவளவன், வைகோ, நாஞ்சில் சம்பத் ஆகியோர்க்கு தான் கண்ட இஸ்லாத்தை எத்தி வைத்திருப்பதாக என்னிடம் சொன்னார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களின் உழைப்புக்கு உறுதியாக பலன்கிட்டுமாக (ஆமீன்); கலைஞரிடமும் இஸ்லாமிய அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். தன்னிடம் நெருக்கமாக இருப்போரிடம் இஸ்லாமிய அழைப்பை மிகவும் “ஹிக்மத” ஆக எடுத்து வைத்திருப்பதாகவும் அன்னார் என்னிடம் சொன்னார்கள்,

எத்தனைப் பேட்டிகளில் அவர்களை மடக்கி மடக்கிக் குறுக்கு விசாரணை செய்தாலும் நகைச்சுவை உணர்வுடனே மறுமொழி கொடுக்கும் பேராற்றலை அவர்கட்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்.

இலக்கியத்திலும் அவர்கள் பேராசானாக விளங்கியிருந்தார்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களின் கனவு அன்னாரின் மறைவுக்கு பிறகாவது ஜனாப் கருணாநிதி முதல் ஜனாப் திருமாவளவன் வரை இன்னும் அன்னார் எண்ணிய அனைவருக்கும் நேர்வழி கிடைக்கட்டுமாக! ஆமீன்.

அன்னாருக்கு மறுமை வாழ்வு சுவர்க்கமாக இருக்கட்டும். ஆமீன்.

Ebrahim Ansari said...

நம்முடன் திரு. திருமாவளவன் வைத்துள்ள நெருக்கம் அவரும் அவரது இயக்கத்தினரும் நம்மை நோக்கி வரக கூடும் என்கிற வானிலை அறிக்கையை தந்து கொண்டு இருக்கிறது. மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களுடைய இறுதி சடங்குகள் மற்றும் சட்ட பூர்வமான நடவடிக்கைகளில் திருமாவளவன் ஆற்றிய அரும்பணி மகத்தானது என்று ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் மூலம் அறியப் பெறுகிறோம்.

இயக்கங்களின் மற்ற தலைவர்கள் கை கட்டி நின்ற நிலையில் பம்பரமாகப் பணியாற்றிய திருமா பாராட்டுக்குரியவர். விரைவில் இஸ்லாத்தை ஏற்க நாம் வேண்டுவோமாக.

பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ள மற்றவர்கள் என்னைப் பொருத்தவரை "விலாங்கு மீன்கள்" .

Ebrahim Ansari said...

https://www.facebook.com/photo.php?fbid=572246466155594&set=a.183771275003117.39864.100001107375871&type=1&ref=nf

மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களுடைய ஜனாஸாத் தொழுகை.

ZAKIR HUSSAIN said...

//இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்ற சகோதர சகோதரிகளிடம் உடல் தானம் செய்தவது தவறு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். //

அப்படி என்றால் கண்தானம் மற்றும் உடல் உறுப்புதானம் இஸ்லாத்தில் தவறானதா?. இங்கு மலேசியாவில் இஸ்லாமியத்துறை இதை தவறு என்று ஃபத்வா கொடுக்கவில்லை. ஆனால் இது போன்ற தானங்களை வரவேற்று ஃபத்வா கொடுத்து இருக்கிறது.

adiraimansoor said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இருதியில் வலுவான ஈமானுடன் இவ்வுளகை விட்டுச்சென்ற அப்துல்லா அவர்களின் சொர்க்கப் பயணம் தொடங்கிவிட்டது அன்னாரின் ஆகிரத்துடைய வாழ்க்கை வெற்றியடைய அல்லாஹ்விடம் இறஞ்சுவோம்.
அன்னாரின் குடும்பாத்தார்களுக்கு அல்லாஹ் பொருமையையும் மன அமைதியயும் கொடுப்பானாக. நம்மை விட்டுச்சென்ற அப்துல்லா அவர்கள் குறுகிய காலத்தில் நமக்குத் தெரியாத நிறைய பொக்கிஷங்களை கருத்துக்களை விட்டுச்சென்றுள்ளார். அப்துல்லா அவர்கள் மறைந்தாலும் அவர்களின் ஊர் உராக சென்று அழைப்பு பனியில் ஈடுபட்ட பொழுது அவர்கள் வாயால் உதிர்ந்த முத்துக்கள் நம்மிடையே ஆடியோவாகவும் வீடியோவாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் செய்த அதே பனியை அந்த முத்துக்களைவைத்தே இப்பொழுது மாற்றுமத நன்பர்களிடம் இன்ஷா அல்லாஹ் நாம் அணைவரும் அழைப்பு பனியை நாம் தொடருவோம்

Unknown said...

உயர்ந்த எண்ணங்களை உள்ளத்திலே தேக்கிவைத்து அது முடிவுபெருமுன் இவ்வுலகத்திற்கு விடை கொடுத்து நம் இஸ்லாமியர்களின் உள்ளத்திலும் ஒரு தாவா என்னும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி மறைந்திருக்கின்றார்கள் அப்துல்லாஹ் ( பெரியார் தாசன் ) அவர்கள்.

அரசியலில் பெரிய சக்திகளாக விளங்குபவர்களுக்கு தாவா செய்ய முயற்சி செய்யவேணும் எண்ணம் எழுவதே மிகப்பெரும் ஒரு எதிர்ப்புடன் கூடிய அழைப்பு முயற்சி. இந்த எண்ணம் எழுந்ததர்க்கே அல்லாஹ் அப்துல்லாஹ் அவர்களுக்கு மாபெரும் நற்க்கூலி தரப்போதுமானவன்

அல்லாஹ் மறைந்த அப்துல்லாஹ் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து , சுவர்க்கத்தை நசீபாக்குவானாக !

ஆமீன்

அபு ஆசிப்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAKIR HUSSAIN சொன்னது…

அப்படி என்றால் கண்தானம் மற்றும் உடல் உறுப்புதானம் இஸ்லாத்தில் தவறானதா?. இங்கு மலேசியாவில் இஸ்லாமியத்துறை இதை தவறு என்று ஃபத்வா கொடுக்கவில்லை. ஆனால் இது போன்ற தானங்களை வரவேற்று ஃபத்வா கொடுத்து இருக்கிறது.//


அஸ்ஸலாமு அலைக்கும், ஜாஹிர் காக்கா.. தங்களின் கருத்துக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா...

இறந்த ஓர் முஸ்லீமை உடனே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழி அதற்கு மாற்றமாக அடக்கம் செய்யாமல் பிற வழிகளை தேடுவது நபி(ஸல்) காட்டித் தந்த வழிமுறையை புறக்கணிப்பதாகவே அநேக உலமாக்களால் கருத்தப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் தொடர்பாக உலமாக்களிடம் மாற்றுக் கருத்துக்கள் உள்ளது என்பதும் உண்மை. இது தொடர்பாக நீண்ட தகவல்களுடன் ஒரு தனிபதிவாக எழுதலாம்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அப்துல்லாஹ் என்னும் வீரியமிக்க இவ்விதை மூலம் ஆழ விதைத்து வெளியில் அது பெரு விருச்சமாய் இப்பாருக்கு நன்மை பல பயக்கும் விழுதுகள் மூலம் இத்தரணி சிறக்க, அமைதி தவழ அதை அற்புதமாய், ஆச்சர்யமாய் இயக்கி ஆளுமை செலுத்தும் அந்த அல்லாஹ்வே நல்லருள் புரிந்து நம்மையெல்லாம் காத்தருளட்டும்...ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நேற்று சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகில் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பாராமல் சிரியாவின் பஸார் அல் அசத் என்னும் மனித மிருகத்தின் அராஜக,அடக்குமுறை அரசை ஆதரிக்கும் சில ஷியா புல்லுருவிகள் விச வாயு மூலம் தாக்கி பச்சிளம் குழந்தைகள் முதல் அவ்விச காற்றை சுவாசித்த பெரியவர்கள் வரை சுமார் 1,300 அப்பாவி பொது ஜனங்களை பூச்சி மருந்து அடித்து கொல்லப்படும் கரையான்கள் போல் கொன்று குவித்திருக்கிறது.

இதை கண்டும் காணாதது போல் வாய் பொத்தி நிற்கும் ஊடகங்களும், ஐ.நா. சபையும், அமெரிக்க ஏகாதிபத்ய அரசுகளும், நேட்டோ படைகளும் செத்த பாம்பாய் செயலிழந்து நிற்கிறது அங்கு எண்ணெய் வளம் இல்லாமல் இருப்பதாலோ? என்னவோ?

ம‌ண்ணுக்கு மேல் ந‌ட‌க்கும் அநியாய‌ அட்டூழிய‌ங்க‌ள் இவ‌ர்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெளிவாய் தெரிந்தும் புழ‌ப்ப‌டுவ‌தில்லை. செயற்கை கோள் காட்டும் ம‌ண்ணுக்கு கீழ் இருக்கும் வ‌ள‌ங்க‌ளே இவ‌ர்க‌ளின் குறிக்கோள்.

யா அல்லாஹ்! இந்தக்கபோதிகளின் உதவியும், பாதுகாப்பும் எம‌க்கு தேவையில்லை. நீயே முழு பொறுப்பேற்று அப்பாவி ம‌னித‌ ச‌முதாய‌த்தையும், ஷரியத்தை பின்பற்றும் இஸ்லாமிய‌ வ‌ர்க்க‌த்தையும் காத்த‌ருள்வாயாக‌.....ஆமீன்.

அப்துல்மாலிக் said...

ஒரு நல்ல, உள்ளச்சத்தோடு தாவா பணி செய்ய விரும்பி, முன்னனி தலைவர்களை ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்ளச்சொல்வது என்பது வரவேற்க்கக்கூடிய ஒன்று. அவ்வாரானவர்கள் ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் இஸ்லாத்தை ஏற்பேயார்களானால் அதுவே மர்ஹூம் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் வெற்றி

வல்ல இறைவன் அன்னாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவர்கத்தை கபூலாக்குவானாகவும் ஆமீன்

adiraimansoor said...

//ம‌ண்ணுக்கு மேல் ந‌ட‌க்கும் அநியாய‌ அட்டூழிய‌ங்க‌ள் இவ‌ர்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெளிவாய் தெரிந்தும் புழ‌ப்ப‌டுவ‌தில்லை. செயற்கை கோள் காட்டும் ம‌ண்ணுக்கு கீழ் இருக்கும் வ‌ள‌ங்க‌ளே இவ‌ர்க‌ளின் குறிக்கோள்.

யா அல்லாஹ்! இந்தக்கபோதிகளின் உதவியும், பாதுகாப்பும் எம‌க்கு தேவையில்லை. நீயே முழு பொறுப்பேற்று அப்பாவி ம‌னித‌ ச‌முதாய‌த்தையும், ஷரியத்தை பின்பற்றும் இஸ்லாமிய‌ வ‌ர்க்க‌த்தையும் காத்த‌ருள்வாயாக‌.....ஆமீன்.//

நெய்னா நீ நம்ம நைனாயா
அமெரிக்கா போன்ற ஏகாதிபதியர்களுக்கு
செருப்படி கொடுக்கும் வார்த்தைகள் எனக்கு பிடித்திருக்கு

Adirai pasanga😎 said...

Ebrahim Ansari காக்கா சொன்னது

//இயக்கங்களின் மற்ற தலைவர்கள் கை கட்டி நின்ற நிலையில் பம்பரமாகப் பணியாற்றிய திருமா பாராட்டுக்குரியவர். விரைவில் இஸ்லாத்தை ஏற்க நாம் வேண்டுவோமாக. //

மிகவும் கவலைக்கும் வருத்தத்திற்கும் உரிய செய்தியாகும்.
நமது சமுதாய தலைவர்கள் ஏனோ இயக்க மயக்கத்திலேயே இருக்கிறார்கள் போலும்.அல்லது அவர்களுக்கு இதுபோன்ற காரியங்களில் வந்து உடன் பங்குபெற முடியாத அளவுக்கு வேலைப்பளு காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

அல்லாஹ்தான் அனைவருக்கும் நேர்வழி கட்ட வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு