நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலாலா ஒரு மாயையா? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, அக்டோபர் 19, 2014 | , , , ,

இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா
பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும்…

சரி, பிறகு எழுதலாம் என்று. விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் எப்போதுமே வேண்டியதில்லை என்றாகிவிடும்.

முதலில் எல்லோரும் சொல்வது போலவே மலாலாவுக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்வோம்!

அது தகுதியுடையதா அல்லது இல்லையா என்பதை இக்கட்டுரையின் முடிவில் உங்களின் தீர்ப்பில் தெரிந்து கொள்வோம்.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை பெறுவதற்காக இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தனிநபர்களின் மனுக்கள் மற்றும் 47 நிறுவனங்கள் உள்பட 278 மனுக்கள் பரிசீலனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதியாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த திரு.கைலாஷ் சத்யார்த்தி மற்றொருவர் பாகிஸ்தானைச் சார்ந்த இங்கிலாந்து வாழ் சிறுமி மலாலா யூஸுஃப்ஸாய்.

“சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வி அவர்களைச் சென்றடைய பாடுபடுதல் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் / இளைஞர்கள் நலன் காக்கப் போராடுதல், குறிப்பாக ’தஃலிபான்’களின் அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் கல்வியில் உயர உழைக்கிறார்.” எனும் அடிப்படையில் நோபல் பரிசுக்கு மலாலா தேர்வானார் என்ற பரிசு ஊக்குவிப்புச் செய்தியினை அறியமுடிகிறது.

பாகிஸ்தானில் பல பள்ளிக்கூடங்களை நடத்திவரும் ஜியாவுதீன் யூஸுஃப்ஸாய் மற்றும் தூர்பெகாய் யூஸுஃப்ஸாய் ஆகியோரின் மகளாக 1997ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் 12ம் தேதி வடமேற்கு மாகாணமான மிங்கோராவில் பிறக்கிறார் மலாலா யூஸுஃப்ஸாய். 

செல்வந்தரின் மகளாக வளர்கிறார். தன்னுடைய 11ம் வயதில் BBC Blogல் ’தஃலிபான்’களின் அடக்குமுறை பற்றி எழுதுகிறார். அதன் உண்மைநிலை அறிய BBC குழு அங்கு வருகிறது. பின்பு மலாலாவுக்கு ஒரு சர்வதேச விருது அளிக்கப்படுகிறது. பிறகு ’தஃலிபான்’களின் பார்வை மலாலா பக்கம் திரும்புகிறது. 

அதாவது, 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி பள்ளிக்கூடம் செல்லும் வழியில் மலாலா, ’தஃலிபான்’களின் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகிறார். பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று பின் மேல் சிகிச்சைக்காக இலண்டன் செல்கிறார். சிகிச்சைக்குப் பிறகு பள்ளிப் படிப்பினை அங்கேயே தொடர்கிறார். இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார். அமெரிக்கா செல்கிறார்; அதிபரை சந்திக்கிறார். வேறு சில நாடுகளுக்குப் பயணிக்கிறார். புத்தகம் எழுதுகிறார். இப்போது நோபல் பரிசளிக்கப்பட்டிருக்கிறார்.

மேற்சொன்னவைதான் ஊடகங்கள் வாயிலாக நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட மலாலா கதை.

சரி, இப்போது ஷபானா பாஸிஜ் ராஸிக் என்பவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஆம் இவரைப் பற்றி நமது ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிந்திராத நிலையில் அறிமுகம் என்பதே சரியான சொல்லாய் இருக்கும்.

இவரது வாழ்க்கை மலாலா போன்று மலர்களால் மூடிய சோலையல்ல; முள்கள் நிறைந்த பாலை.

தங்களின் பள்ளியில் சேர்த்து கல்வியூட்ட, மலாலா போன்று பள்ளிக்கூடங்களின் முதலாளி அல்ல இவரின் பெற்றோர்கள்!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து அவர்களுக்கு கல்வியூட்ட வேண்டும் என்று நினைத்த கருணைமிகு பெற்றோருக்குப் பிறந்தவர் ஷபானா பாஸிஜ் ராஸிக். 

ஆஃப்கான் தலைநகர் காபூலில் பிறந்து வளர்ந்த இவரின் தற்போதைய வயது 24.

ஷபானா சிறுமியாக இருந்த பொழுது ஆஃப்கான் தஃலிபான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எங்கும் கெடுபிடி, பெண் குழந்தைகள் வெளியில் செல்லமுடியாத சூழல். படிப்பிற்காக வெளியே செல்லுதல்கூடாது என்று ஊர்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம். அன்று வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் மட்டுமே (25வயது அதற்கு மேற்பட்டோர்) முறையாக பள்ளி சென்று எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். 

42 இலட்சம் குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் (இதில் பெண் குழந்தைகள் சதவீதம் அதிகம்) கல்வியை எட்டாக் கனியாகப் பார்த்திருந்த சூழல். காரணம் அன்று அங்கு நிலவிய போர் மேகம், போர் என்ற பெயரில் வன்முறை, வாழ்வாதாரங்களை இழந்த ஏழ்மை நிலை இவையனைத்திற்கும் மேலாக ஊர்க்கட்டுப்பாடு என்று அன்று பிள்ளைகள் வீடுகளில் முடங்கிக் கிடந்த பரிதாப நிலை.

இதுபோன்ற சூழலில்தான் ஷபானாவின் தந்தை, மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும் தன் மகளுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டுமென நினைக்கிறார். இவர் போன்ற பெற்றோர் எடுத்த முடிவினால் நகரத்தில் ஆங்காங்கு நடைபெறும் இரகசியப் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கின்றனர். 

பள்ளி என்றால் நாம் கற்பனை செய்வது போலில்லாமல், ஒரு வீட்டின் ஹாலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடைத்து வைத்து கல்வி போதிக்கப்படும். அனைவரும் ஒரே நேரத்தில் வருவது கூடாது; அதேபோல கலைந்து செல்லும் போதும் கூட்டமாக செல்லுதல் கூடாது. இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி, போதிக்கும் ஆசிரியர்கள், பாதுகாப்பிற்கென வரும் பெற்றோர்கள் என எவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

இதுபோன்ற ஒரு பள்ளிக்குத்தான் ஷபானா அனுப்பப்படுகிறார். எப்படித் தெரியுமா? ஆண் பிள்ளையின் உடைகளை அணிந்து, மளிகைக் கடைக்கு சாமான்கள் வாங்குவது போன்ற தோற்றத்தில் பையில் புத்தகங்களை அடுக்கி சென்று வருகிறார். தினமும் ஒரே பாதையில் சென்றால் சந்தேகம் ஏற்படுமென்று தினமும் வெவ்வேறு பாதைகளில் அந்த இரகசியப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்.

இப்படி நித்தமும் உயிரைப் பணயம் வைத்து பள்ளி சென்று வந்த நிலையில், 2001ம் ஆண்டு ’தஃலிபான்’களின் ஆட்சி கவிழ்கிறது. அப்பாவிற்கும் மகளுக்கும் மனம் நிறைய மகிழ்ச்சி, என்னவெனில் இனிமேல் நாம் முறையான வழக்கமான பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்கலாம் என்பதே. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை, கலவரம் காரணமாக அது கனவாகிப் போனது. ஆனால் தொடர்ந்து இரகசியப் பள்ளியின் கல்வியில் மிளிர்கிறார் ஷபானா.

ஒருமுறை மிகவும் விரக்தியான மனநிலையில், “இப்படி ஒரு சூழலில் நான் படிக்க வேண்டுமா அப்பா?” என்று ஷபானா கேட்க, ”இதுமட்டுமல்ல மகளே, உன் வாழ்க்கையில் நீ செல்வங்களை இழக்கலாம், பெற்றோரை இழக்கலாம் ஏன் நீ கூட நாடு கடத்தப்படலாம். ஆனால் இறுதிவரையிலும் உன் கூடவே இருக்கப்போவது நீ கற்கும் கல்வியும் பெறும் அறிவும் மட்டுமே! உன் படிப்பின் கட்டணத்திற்காக எங்கள் இரத்தத்தை விற்றேனும் பணம் கட்ட வேண்டிய சூழல் வந்தாலும் அப்படியே தருகிறோம்” என்று கல்வியின் அவசியத்தை உணர்த்தினார் தந்தை.

இந்நிலையில், படிப்பில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஷபானா, அமெரிக்காவின் YES (Youth Exchange Studies) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தனது (மேல்நிலைப்) பள்ளிப் படிப்பை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பினைப் பெறுகிறார். அதிகமான சகமாணவர்கள் ஆஃப்கான் பற்றி தெரிந்துகொள்ள இவரிடம் வந்து குவிகின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மூலம் தன் நாட்டின் முகம் தெரிகிறது. பட்ட துன்பம் தெரிகிறது, அடிப்படைக் கல்வி, சுகாதாரம் மறுக்கப்பட்டு இருப்பதை, ஏறத்தாழ 90 சதவீத பெண்கள் முறையான கல்வியறிவற்று இருப்பதை உணர்கிறார். ஆஃப்கான் பற்றி அதிகம் அமெரிக்காவில் பேசுகிறார். ஆஃப்கானின் தூதுவர் போல பார்க்கப்படுகிறார்.

இவரை துணை நிறுவனராகக் கொண்டு 2008ல் SOLA (School Of Leadership Afghanistan) என்ற சர்வதேச தரம் கொண்ட பெண்களுக்கான உறைவிடப் பள்ளி ஆரம்பிக்கப்படுகிறது. இதுவே ஆஃப்கானின் முதல் மற்றும் ஒரே பெண்களுக்கான உறைவிடப்பள்ளி ஆகும். 34 மாகாணங்களைக் கொண்டுள்ள ஆஃப்கானின் அனைத்து தரப்பு மாணவிகளும் இங்கு வந்து பயிலும் நோக்கத்துடன் உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டுகிறது.

கள ஆய்வுப்பணி, பள்ளிக்கூடம் நிறுவுதலுக்குப் பிறகு 2011ம் ஆண்டில் அமெரிக்கா திரும்பி  Middlebury கல்லூரியில் International Studies and Women & Gender Studies எனும் ஆய்வுப் படிப்பில் பட்டம் பெறுகிறார்.  தாம் சிறுவயதில் கல்விக்காக பட்ட துயர், துன்பம் இனி ஆஃப்கான் பெண் குழந்தைகள் படக்கூடாது என்ற நோக்கத்தில் தம் கல்லூரிக் காலத்திலேயே HELA எனும் பெயர்  (ஆஃப்கான் மொழியில் நம்பிக்கை எனும் பொருள்)  கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல், திறமையான ஆசிரியர்களை உருவாக்குதல், உலக மொழிகள் கற்பித்தல், நெருக்கடியான சூழலில் சிந்திக்கும் ஆற்றல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயிற்றுவித்தல், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதாரம் மற்றும் சத்துணவு பற்றிய விழிப்புணர்வுக் கல்வி என ஒரு பெரிய திட்டங்களுடன் இந்த தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுகிறது.நான்கு மாணவிகளுடன் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இன்று ஆஃப்கானின் 14 மாகானங்களிலிருந்தும் மாணவிகள் தங்கிப் பயிலுகின்றனர், இங்கு பயின்று மேற்படிப்பிற்காக இதுவரை 40 மாணவர்களுக்கு ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள உறைவிடப் பள்ளி, பல்கலைக்கழகங்களில் படிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 34 மாகாணங்களுக்கான ஆளுமைகளை தலா பத்து வீதம் 340 தலைவர்களை உருவாக்குவது என்று சொல்கிறார் ஷபானா

ஒரு மாணவியை உருவாக்குதல் என்பதிலிருந்து விலகி அதற்கும் மேலாக இந்நாட்டின் ஒரு தலைவியை உருவாக்குவதே SOLAவின் இலட்சியம் என்கிறார். மாணவி எந்த பிரிவைச் சார்ந்தவராய் இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல இங்கு வந்தவுடன் நீ ஒரு SOLA பெண் என்பதாக அவர்களிடம் அறிவுறுத்துகிறார்.

ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஆஃப்கானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு போகமுடியாத நிலை இருந்தது. அரசியல் என்பது ஒருபுறமிருந்தாலும், மேலே படிக்க பள்ளிகள் இல்லை, பொருளாதார சரிவுநிலை, கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை, இதுபோன்ற சில காரணங்களுக்காகவும் 12 வயதினையெட்டிய பெண் பிள்ளைகள் வீட்டில் வைக்கப்பட்டனர், வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனிக்கும் படி பணிக்கப்பட்டனர். சமையல், வீட்டைப் பராமரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர், பிறகு திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவார்கள்.

இந்நிலையை மாற்றி அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும், எனக்கு கிடைத்த இந்த கல்வியறிவு மற்ற பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு முயற்சியில் அவர்களது பயனுள்ள நேரங்கள் அனைத்தும், அவர்களை இந்த உலகிற்கு பயனுள்ளவர்களாக மாற்றுவதற்கு எனக்கு வேண்டும். அதுதான் இந்த உறைவிடப் பள்ளியின் இலட்சியம், நோக்கம் என்று தன் உறைவிடப் பள்ளியின் கனவினை விவரிக்கிறார் ஷபானா.

.இந்த வெற்றிகரமான திட்டத்தை மற்ற நாடுகளில் எங்கெங்கெல்லாம் பெண் குழந்தைகளின் உரிமைகள் நசுக்கப்படுகின்றதோ அங்கு தொடங்குவதே அடுத்த கட்டப் பணி என்கிறார் திடமாக. 
  • தன் நாட்டின் பெண்களின் கல்விக்காக கல்லூரிப் பருவத்தி்லேயே அயாராது சிந்திக்கும், உழைக்கும் இவருக்கு, மிக உயர்ந்த பத்து கல்லூரி மாணவிகளில் ஒருவர் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிகை விருது வழங்குகிறது.
  • இவர் படித்த கல்லூரி இவருக்கு தலைசிறந்த பொதுச்சேவகி பட்டம் /விருதினை வழங்கி கௌரவிக்கிறது.
  • இவரை 2011-2012ம் ஆண்டின் தேசிய பெண்கள் நலன் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அரசின் கிராம மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சகம் நியமித்தது.

இந்த ஆண்டின் வளரும் ஆராய்ச்சியாளர் எனும் பட்டத்தை நேஷ்னல் ஜியோக்ராபிக்ஸ் கொடுத்துள்ளது.

சர்வதேச அரங்குகளில் இவரின் குரல் பெண்களின் முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம், தலைமைப் பண்பு ஆகியவைப் பற்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவரின் முயற்சிகளை.இப்படியே இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆஃப்கான் போன்ற நாடுகளில் வளரும் பெண் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் உழைத்தல் என்பதினைப் போற்றி அமைதிக்கான நோபல் பெற வேண்டியது யார்?

உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்!

'புதுசுரபி' ரஃபீக்

5 Responses So Far:

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Rafeeq,

Thanks for sharing the information about revolutionary women from Pakistan and Afganistan.

The article highlights the importance of girls education for their great future and appreciations for them by award or deserving award.

The two of the social activists are seeming socially responsible by showing their compassion to the fellow girls all over the world especially the girls from their origin countries.

But through my observations, my opinion about real leadership, huge responsibilities of uplifting the societies to do excellence in education, international relationships, economy and business are the men's inherent qualities and characters. Women can play supportive roles in all of the above endeavors of men rather than primary roles, due to their capabilities limitations.

Exceptions(women) can be appreciated for their endeavor. Politics play behind everywhere.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Decision making is one of the important qualities in leadership. From my general observation, women are making decisions intuitively. And when things are getting wrong they wont take the responsibilities on their shoulders, instead escape and indicate some other is reason for the mistakes happened.

Women are compassionate, caring, kind, loving, multi taskers and excellent motivators.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

ZAKIR HUSSAIN சொன்னது…

ஷபான பாஸிஜ் அவர்களின் தியாகமும் உழைப்பும் உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று அது நடக்காமல் போகலாம் ஆனால் காலம் இப்படியே இருந்து விடாது.

ஆனால் மலாலாவின் தியாகமும், உழைப்பும் எந்த வகையிலும் குறைந்ததல்ல...தவிரவும் மிகவும் போற்றுதலுக்குறியது.

சமீபத்தில் அவருக்கு கிடைத்த நோபல் பரிசு மிகவும் சரியானதே.
அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தார் என்பதையோ அவரது தந்தை கல்வித்துறையில் உயர்ந்த இடத்தில் இருந்தவர் என்ற விசயங்கள் எதுவும் அவரது அங்கீகாரத்திற்கோ , கிடைக்கப்போகும் மரியாதைக்கோ தடையாக இருக்க முடியாது.மலாலா இந்த நோபல் பரிசுக்கான தகுதிகள் பெற்றதால்தான் கொடுத்திருக்கிறார்கள். [ REFER: http://www.nobelprize.org/nomination/peace/ ]

மலாலா நோபல் பரிசு பெற்றவுடன் முஸ்லீம்கள் / முஸ்லீம் அல்லாதவர்கள் அனைத்து மக்களும் பாராட்டினார்கள். அதே சமயம் சில முஸ்லீம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் [ஆப்கானில் உள்ள தறுதலை தலைவர்கள் என நினைக்கிறேன்.....தலிபான் களில் நிறைய பேர் கஞ்சா பார்ட்டிகள் / ஹெட்ரோ செக்சுவல்ஸ்] ' நம்பிக்கையற்றவர்களின் தரகர் ' என்று மலாலாவை குற்றம் சொன்னார்கள்.

இவர்கள் சொல்வது வெள்ளைக்காரன் இறை நம்பிக்கையற்றவன் என்பதுதான். என்னுடைய கேள்வி ' சரி....முஸ்லீம் / இறைவனை நம்புகிறவன் / நபி [ சல் ] அவர்களின் போதனையை பின்பற்றுகிறவன் [ அதாவது 'ஹிந்தாவை மன்னித்த / வாழ்நாள் முழுதும் யாரையும் புண்படுத்தாத / தன் கொள்கையை ஏற்காதவர்களை வன்முறையால் இஸ்லாத்தை ஏற்க சொல்லாத / தனது அன்பாலும் ...இறைவேதத்தில் இருக்கும் உண்மையாலும் மட்டும் இஸ்லாத்துக்கு அழைத்த அதே நபியை பின்பற்றும் இந்த ஆப்கான் தலிபான் கள் அந்த சிறுமிக்கு கொடுத்த பரிசு என்ன .....துப்பாக்கி சூடு. பெண்குழந்தைகள் படிக்க வேண்டும் / வாழக்கையில் முன்னேற வேண்டும்...பெண் என்பவளின் உலகம் சமயலரையும் , படுக்கையரையும் மட்டும் அல்ல என்று இந்த தலைப்பாக்கட்டி தலிபான் களின் வீட்டுப்பிள்ளையோ , அல்லது அவனுக வைத்திருக்கும் வப்பாட்டியோ எழுதினால் இதே துப்பாக்கி சூடு நடத்துவானுங்களா?...நிச்சயம் இல்லை.

ஒரு பெண் ஆணை விட சாதிக்க முடியாது ...சாதிக்க கூடாது என்பதில்தான் தாலிபான் களின் கவனம். அதனால் தான் தொடர்ந்து இவர்களாக ஏற்படுத்திக்கொண்ட சில அடிமைபடுத்தும் கொள்கைகளை பெண்கள் மீது நடைமுறை படுத்தினார்கள்...இன்னும் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.அந்த துப்பாக்கி சூட்டில் மலாலாவின் தலையில் ஒரு பகுதி அப்படியே சிதைந்தது.மூலையின் க்ரேனியம் / கார்ட்டெக்ஸ் பெரும்பாதிப்புக்குள்ளானது.

நம்பிக்கையற்றவர்களின் மருத்துவம் மிகவும் உதவியாக இருந்தது அவர் மீண்டும் உயிர் பெற. இறைவனின் உதவியும் நாட்டமும் ஏன் இந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். ஏதோ நன்மை இருக்கத்தான் செய்யும்.

மலாலா நோபல் பரிசு பெற நினைத்து இந்த கஷ்டங்களை அனுபவித்து இருக்க மாட்டார். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் உயிர் போய் உயிர் வந்த பிறகு வழங்கப்பட்டிருக்கிறது.

இமைகளின் இடைவெளியில் கனவுகளை சுமந்து செல்லும் வயதில்...தனது இனம் / பெண் இனம் / கல்வி என்று பெரிய விசயங்களை சுமந்த இந்த மலாலா நோபல் பரிசுக்கு தகுதியானவராகவே பார்க்கிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

ரெண்டு பேருமே விருதுக்குத் தகுதியானவர்களே!

அப்துல்மாலிக் சொன்னது…

ஷபானாவும் தாலிபான்களால் கொலைமுயற்சி நடந்தால் (நடத்தப்பட்டால்) ஒரு வேலை மேலை நாடுகள் கண்டிருக்குமோ என்ன்வோ....

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+