Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 21 36

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2012 | , ,

கவிஞன் சிந்தனையாளன்;  நேர்மையின் பக்கம் நிலைத்திருப்பவன்; நேர்மைக்காகக் குரல் கொடுப்பவன்; ஒரு வேளை, சூழல் அவனுக்குச் சரியான தகவலைத் தந்திராததால் தவற்றைச் செய்தாலும், எது உண்மை எனத் தெரியவரும்போது, மனமிரங்கித் தன்னைத் திருத்திக்கொள்ளும் தன்மையுடையவன்.  இது ஏன் என்று சிந்திக்கும்போது நமக்குத் தெரியவரும் உண்மை இதுதான்:  கவிஞனின் கவிதை, கட்டுக்குள் அடங்கும் சிந்தனையின் சீரிய வடிவம்.  கதை, கட்டுரைகளைப் போன்று விரிந்த பொருளை விரைந்து கூறுவதன்று.  கவிதையினைப் படிக்க, புரியப் பொறுமையும் நிதானமும் வேண்டும்.  இங்குதான், கவிஞன் மற்றவர்களை விட்டு வேறுபடுகின்றான்.  கவிதையைப் புரிவதற்கு முன் கவிஞனைப் புரியவேண்டும்.

இவ்வாறு கூறும்போது, ‘கவிஞர்கள்’ என்று தம்மை விளம்பரப்படுத்தும் அனைவரையும் – அவர்களின் ‘எண்ணக் குவியல்கள்’ அனைத்தையும் தூக்கிப் பிடிப்பதாக வாசகர்கள் கருதக் கூடாது.  அப்படியாயின், நல்ல கவிஞர்களை அடையாளப் படுத்துவது எங்ஙனம்?  இதற்குத்தான், முதலில் தீய கவிஞர்களை அறிமுகப் படுத்திவிட்டு, நல்ல கவிஞர்களை அடையாளப் படுத்துகின்றது அல்குர்ஆன் இப்படி: 

إلا الذين امنوا و عمل الصالحات و ذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا و سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون

“(ஆயினும்) அவர்களுள் எவர்  நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை மிகைப்பட நினைவுகூர்ந்து, (பிறர் நிந்தனையால்) அநீதிக்கு உள்ளானதன் பின்னர் பழி வாங்கினாரோ, அவரைத் தவிர (மற்றவர்கள் குற்ற வாளிகள்தாம்.  பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாம் எங்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்பதை மிக விரைவில் அறிந்துகொள்வர்.”         (26:227)

கவிஞர் லபீத் பின் ரபீஆவைப் பற்றி முன் சில பதிவுகளில் நாம் பார்த்துள்ளோம்.  இவர் நூற்று நாற்பத்தைந்து வயதுவரை (இன்னோர் அறிவிப்பின்படி, நூற்று ஐம்பத்தேழு வயதுவரை) வாழ்ந்தவர்.  அவர் தொண்ணூறு வயதை எட்டிய பின்னர்தான் இஸ்லாத்தை ஏற்றார்!  அதுவரை, கவிதையே அவருடைய வாழ்க்கையாக இருந்தது.  அவர் இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும்கூட, அழகிய கருத்துகள் பொதிந்த கவிதைகளையே யாத்துவந்தார்.  அதனால்தான் அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் லபீதின் கவிதைகளைப் பிறர் பாடக் கேட்டு மகிழ்ந்துள்ளார்கள்!

‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்திலும், இஸ்லாம் அறிமுகப் படுத்தப்பட்ட கால கட்டத்திலும், இவருடைய கவிதைகள் உண்மை பொதிந்தவையாக, சிறந்த கற்பனை வளம் நிறைந்தவையாக இருந்தன.   அவற்றுள் ஒன்றுதான்,

الا كل شيء ما خلا الله باطل

அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே பொய்யானவை (அழியக்கூடியவை)

எனும் கவியடியாகும்.  இதனைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் விதந்து கூறினார்கள்.  அந்த நேரத்தில் லபீத் இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை.  ஹிஜ்ரி ஒன்பதில்தான் – அதாவது, மக்கா வெற்றிக்குப் பின்னர் – பெருமானார் முன்னிலையில் முஸ்லிம் ஆனார்.

பெருமானாரின் இறப்பிற்குப் பின்னர் லபீத் ‘ஷாம்’ நாட்டிற்குப் போய்த் தங்கிவிட்டார்.  அப்போது ஷாம் நாடு வளம் கொழித்த நாடாக இருந்தது.  அதனால், அங்குப் போய்த் தங்கிவிட்ட நபித் தோழர்களுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்ற ஆணையை  கலீஃபாவான அபூபக்ர் (ரலி) அவர்கள் பிறப்பித்திருந்தார்கள்.  இந்த வகையில், கவிஞர் லபீதுக்கும் ஐநூறு திர்ஹம் கிடைத்துவந்தது.  இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள்.  தமது பிந்திய வாழ்நாளில் கவிதைகளையும் கவிஞர்களையும் ஆதரித்துவந்த உமரவர்கள், லபீதுக்குக் கொடுக்கப்பட்டுவந்த ஐநூறு திர்ஹத்தை இரண்டாயிரமாக உயர்த்தி வழங்குமாறு, கூஃபாவின் ஆளுநருக்கு ஆணை பிறப்பித்தார்கள்.

கூஃபாவின் ஆளுநர் கவிஞர் லபீதை வரவழைத்து, அவரின் கவிதைகளைத் தமக்குப் படித்துக் காட்டுமாறு கேட்டார்.  ஆனால் கவிஞர் லபீதோ, அருள்மறை குர்ஆனின் நீண்ட அத்தியாயமான ‘சூரத்துல் பகரா’வை ஓதினார்.  இறைமறையின் இலக்கியத் தரத்தின் முன் தமது கவிதை எம்மாத்திரம் என்பதை அறிந்தவராக, “இந்த வேதத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவிய பின்னர், கவி பாடுவதை விட்டு அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான்” என்று மறுமொழி பகர்ந்தார்.

பிற்காலத்தில் அபூசுஃப்யான் கலீஃபாப் பொறுப்பை ஏற்றபோது, லபீதுக்கான உதவித் தொகையைக் குறைக்குமாறு கூஃபாவின் ஆளுநருக்குக் கட்டளையிட்டார்.  இதையறிந்த கவிஞர் லபீத், “நான் இன்னும் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை.  அதனால், உதவிப் பணத்தைக் குறைப்பதால் பயன் ஒன்றுமில்லை” என்றார்.  அடுத்த சில மாதங்களில் அவர் இறந்தும் போனார்! 

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

36 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//கூஃபாவின் ஆளுநர் கவிஞர் லபீதை வரவழைத்து, அவரின் கவிதைகளைத் தமக்குப் படித்துக் காட்டுமாறு கேட்டார். ஆனால் கவிஞர் லபீதோ, அருள்மறை குர்ஆனின் நீண்ட அத்தியாயமான ‘சூரத்துல் பகரா’வை ஓதினார். இறைமறையின் இலக்கியத் தரத்தின் முன் தமது கவிதை எம்மாத்திரம் என்பதை அறிந்தவராக, “இந்த வேதத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவிய பின்னர், கவி பாடுவதை விட்டு அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான்” என்று மறுமொழி பகர்ந்தார்.//

அல்லாஹு அக்பர்

அதிரை சித்திக் said...

கவிதையை புரியமுன் கவிஞனை அறிய வேண்டும் >>>>

கவிஞர் லயீத் (ரலி) அவர்களின் கவிதையை கேட்டு நபி (ஸல்)அவர்கள்

மகிழ்த்திருக்கிரார்கள்..எனவே நபிகளாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கவிதையை

நாம் புறக்கணிக்க தேவை இல்லை ..அறிஞர் அகமது காக்காஅற்புதமாய்

தெரிவித்த கருத்து..மீண்டும் கூறி புளங்காகிதம் அடைகிறேன் ,கவிதையை படிக்குமுன்

எழுதிய கவிஞனை பார் ..கவி மீது குற்றமென்றால் எழுதிய கவிஞன் தான் குற்றவாலி .,

கவிதை ..எழுதி ..மகிழ்வோம்.படித்து மகிழ்வோம் ...

sabeer.abushahruk said...

//இறைமறையின் இலக்கியத் தரத்தின் முன் தமது கவிதை எம்மாத்திரம்//

உண்மை. இறைமறையின் இலக்கியத் தரத்தின் முன் யாரின் கவிதையோ கட்டுரையோ எதுவுமே எம்மாத்திரம்!!! உண்மை.

Meerashah Rafia said...

ஆராய்ச்சி தொடரட்டும்..

ZAKIR HUSSAIN said...

Dear Brother Meerasha,

after a long break i am reading your comments [ or else i might have missed to read]..How is your father?

KALAM SHAICK ABDUL KADER said...

//கவிஞன் சிந்தனையாளன்; நேர்மையின் பக்கம் நிலைத்திருப்பவன்; நேர்மைக்காகக் குரல் கொடுப்பவன்; ஒரு வேளை, சூழல் அவனுக்குச் சரியான தகவலைத் தந்திராததால் தவற்றைச் செய்தாலும், எது உண்மை எனத் தெரியவரும்போது, மனமிரங்கித் தன்னைத் திருத்திக்கொள்ளும் தன்மையுடையவன். இது ஏன் என்று சிந்திக்கும்போது நமக்குத் தெரியவரும் உண்மை இதுதான்: கவிஞனின் கவிதை, கட்டுக்குள் அடங்கும் சிந்தனையின் சீரிய வடிவம். கதை, கட்டுரைகளைப் போன்று விரிந்த பொருளை விரைந்து கூறுவதன்று. கவிதையினைப் படிக்க, புரியப் பொறுமையும் நிதானமும் வேண்டும். இங்குதான், கவிஞன் மற்றவர்களை விட்டு வேறுபடுகின்றான். கவிதையைப் புரிவதற்கு முன் கவிஞனைப் புரியவேண்டும்.//

இம்முன்னுரையே இவ்வாய்வின் உடலுரையும், முடிவுரையும் ஆகும் என்று நம்புகிறேன். ஊர் வந்தது முதல் சிகிச்சை நிமித்தமாக வெளியூர்ப் பயணமாகி வருவதால் ஆசிரியர் அவர்களை இன்னும் சந்திக்கவில்லை; இன்ஷா அல்லாஹ் நூலகத்திற்குச் சென்று (நான் முன்பு எழுதியபடி) அல்-குர்-ஆன் தர்ஜமாவை “வெண்பாவில்” வடித்துள்ள அந்த நூலைப் பெற்றுத் தங்களிடம் காண்பிப்பேன்; தங்களின் இவ்வாய்வுக்கு மற்றுமோர் ஆதாரமாக அமையும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடர் ஆய்வின் முத்தாய்ப்பு இந்த அத்தியாயம் !

தொடரட்டும் ஆய்வு இன்ஷா அல்லாஹ் !

Meerashah Rafia said...

ZAKIR HUSSAIN சொன்னது…
Dear Brother Meerasha,

after a long break i am reading your comments [ or else i might have missed to read]..How is your father?


//How is your father?//
Dad is Koyis(சவூதி அரேபியாவுல இருந்துகிட்டு இந்த ஒத்த வார்த்தைகூட தெரியாட்டி எப்புடி!).

//after a long break i am reading your comments//

அது என்னமோ தெரியல காக்கா திருமணம்னு ஒன்றை முடித்து வைத்த நாளிலிருந்து பின்னூட்டும் இட நினைத்தால் முன்னந்தலை பின் வாங்குகிறது(அதற்காக 24/7 மீட்டர் பொட்டி கிராஸ் டாக்ல ஓடுதுன்னு நினைத்துவிடாதீர்கள்..)..ஒரு வேலை இந்த தளங்கள் நீங்களெல்லாம் திருமணம் முடிக்கும் சமயம் இருந்திருந்தால் case study பண்ணிருந்திருக்கலாம். முக்கியமாக சகோ.கிரௌன் அவர்களின் பாரா பின்னூட்டங்கள் கூடுதல்,குறைதல்களை வைத்து..

MSM(MR)

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய மூத்தசகோ ஆய்வாளர் அஹ்மது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

முதலில், ஒரு கவிஞன் யார் என்பதற்கான அழகிய முன்னுரை.

பின் ஒரு நல்ல கவிஞன் என்பவன் வாழ்நாளெல்லாம் செய்த கவிதைகளும் அவன் இஸ்லாமியனாய் இல்லாதபோதும் நல்லதையே கூறிவந்ததைச் சொல்லும்போது, இயற்கையாகவே அமைந்த கவிஞனின் நற்பண்பு. அது இறைவன் கொடுத்த வரமல்லவா?

அந்த உயர்வான கவிதைகளை கவிஞன் இஸ்லாமியனாய் மாறாதபோதும் நேசித்த நபி பெருமானாரின் பெருந்தன்மை. அதைத் தொடர்ந்த கலீபாக்களின் மரியாதை.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, “இறைமறையின் இலக்கியத் தரத்தின் முன் தமது கவிதை எம்மாத்திரம்” என்று கூறும் அசலான கவிஞனின் அதி உய்வர்வான பண்பு.

இவற்றினூடே இறைமறை ஒரு பேரிலியக்கியம் என்று அழுத்தமாகக் கூறியதன் மூலமாகக் கவிதை இலக்கியங்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

அப்பப்பா.... இந்த அத்தியாயம் வெகு பிரமாதம், மெய்சிலிர்க்க வைத்தது!

உங்கள் ஆய்வுகள் இன்னும் பல கலைகளுக்குள்ளும் பயணிக்க வேண்டும். இறைவன் அதற்கான அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறான். அதன் மூலமாக இஸ்லாம் பண்டை அறிவிலார் பூட்டிய கட்டுகளை உடைத்துத் தன் உண்மை முகத்துடன் மிளிரும் ஒளிரும்.

என்னை அறிவதற்காகவேயன்றி வேறெதற்காகவும் உங்களைப் படைக்கவில்லை என்றானே, அதன் பொருளை அப்படியே உணர்த்தி வருகிறீர்கள். நீங்கள் அறிகிறீர்கள். அறிவதை அமைதியாக எடுத்து வைக்கிறீர்கள். நாங்கள் அறிகிறோம்.

நன்றிகள் ஐயா!

அன்புடன் புகாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் அன்பு(டன்) புகாரி அவர்களுக்கு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கவிதை, ஓர் இஸ்லாமிய பார்வை தெளிவாக்கிவரும் பல விடயங்களில் இந்த அத்தியாயம் கவிஞர்களுக்குரிய இலக்கணத்தை தெளிவாக்கியிருப்பதை நாம் அறிவோம் !

நிற்க !

நல்ல தமிழ், நாகரீக எழுத்து, நிலைத்த வாதம், நேர் கொண்டதை ஏற்பது, உண்மையை உள்ளபடி ஏற்பது என்ற பண்புகள் நிறைந்த உங்களின் ஆற்றல் அதிரைநிருபரின் தரமான வாசகர்களின் நேசம் சூழ்ந்த பங்கிற்காக கவிதை வடிவிலோ கட்டுரை வடிவிலோ தங்களின் ஆக்கங்கள் பதிவாக வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்...

அதிரைநிருபர் வலைத்தளம் நெறியாளுமைக்கு உட்பட்டு, இஸ்லாம் கூறும் நன்னெறி காட்டுக்கோப்பிலிருந்து பிறழா எழுத்துக்கள் சமுதாயத்திற்கும், நம் எழுத்துக்களை நேசிக்கும் வாசகர்களுக்கு பலன் அளிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் ஆதரவு அளிக்கும், குறிப்பாக ஏராளமான இணைய, காகித, கானொளி ஊடகங்கள் இருந்தாலும் சிறுவட்டமாக இருக்கும் நம் சமுதாயத்திற்கென்று பயன் தரும் ஆக்கங்கள் அனைத்திற்கும் என்றும் முன்னுரிமை கொடுக்கும் என்பதை இங்கு வருகைதரும் வாசர்களும் நன்கறிவார்கள்.

ஆக, !

வேண்டுகோளின் திறவுகோலை கையில் எடுத்தவன் என்பதால் நான் முதலில் உங்களை அழைக்கிறேன்...

சிந்தனையாளர்களின் எழுத்துக்கள் எட்டுதிசைக்கு எட்டிட அதிரைநிருபரும் ஒரு நல்ல தளமே. !

அன்புடன்,
அபுஇபுறாஹிம்

Ebrahim Ansari said...

//கவிதையைப் புரிவதற்கு முன் கவிஞனைப் புரியவேண்டும்.//

YES!YES!YES!

crown said...

சகோதரர் அன்பு(டன்) புகாரி அவர்களுக்கு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆக, !

வேண்டுகோளின் திறவுகோலை கையில் எடுத்தவன் என்பதால் நான் முதலில் உங்களை அழைக்கிறேன்...

சிந்தனையாளர்களின் எழுத்துக்கள் எட்டுதிசைக்கு எட்டிட அதிரைநிருபரும் ஒரு நல்ல தளமே. !

அன்புடன்,
அபுஇபுறாஹிம்
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் சொல்ல நினைத்ததை இவர் முந்திவிட்டார்(என்ன இருந்தாலும் மூத்தவர் இல்லையா)புகாரி அண்ணன் ஒரு கவிதை தரலாமே?

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரி .

அதிரை நிருபரில் கவிதை விதைக்க

விதை போட்டு நாளாயிற்று ..

முளை விடுமா .துளிர் விடுமா

செடியாகி ..பூ பூத்து குலுங்குமா ..

கவிதை மனம் வீசுமா ..கவிக்காக

காத்திருக்கும் கவி விதைப்போர் கூட்டம்

ஒரு புறம் என்னை போன்ற கவி நுகர்வோர்

மறுபுறம் ..கவியின் கருத்து கண்டு

புளங்காகிதம் கொள்ளவும் கருவை மறுத்து

சொற்போர் செய்யவும் நல்ல களம் காத்திருக்கிறது

வாருங்கள் கவியுடன் பின்னூட்டம் விழி பிதுங்கட்டும்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//தனி பதிவிட இது தங்களுக்கும் தளம் என வரவேற்பு வளையத்தில் இணைந்திருக்கும் அன்பு சகோ. அதிரையின் சொந்தம் அசன் புஹாரி அவர்களே//
வருக! தருக!! சுவைக்க!!!

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய இபுறாகிமின்தந்தை எம். நைனாதம்பி அவர்களுக்கு,
அன்பும் அமைதியும் அருளாகட்டும்!

என்மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு என் நன்றிகள் ஆயிரமாய்.

>>>>தங்களின் ஆக்கங்கள் பதிவாக வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்<<<<

மிக்க நன்றி. நான் மாட்டேன் என்றா சொல்லப்போகிறேன். அன்புள்ளம் கொண்டோர்முன் அன்பாய் நிற்பது பாக்கியமல்லவா? அழைப்பு வரட்டும் பார்க்கலாம்.

>>>>அதிரைநிருபர் வலைத்தளம் நெறியாளுமைக்கு உட்பட்டு,<<<

”இஸ்லாம் பண்டை அறிவிலார் பூட்டிய கட்டுகளை உடைத்துத் தன் உண்மை முகத்துடன் மிளிரும் ஒளிரும்.” என்ற என் எண்ணம் அதிரை நிருபர் வலைத்தள நெறியாளுமைக்கு உட்படுமா என்று அதிரை நிருபர்களுக்குத்தான் தெரியும். அவர்கள் எனக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றே உணர்கிறேன்! நான் இங்கு வந்ததே ”கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை” என்ற தலைப்பில் மயங்கித்தான் :)

நான் அறிந்தவரை, என் அன்பிற்கும் நேசத்திற்கும் உரிய ஜமீல் நாணா ஒரு பழைமைவாதி. தன் தெளிந்த சிந்தனைகளையும் அவருக்கு எதிராக அவரே போட்டுப் புதைத்துக்கொள்பவர். அதிரை நிருபர்கள் யார் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் ஜமீல் நாணாவை தாம் பின்பற்றும் மரபாகக் குறிப்பிட்டுப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆகவே.... சகோதரர்களே...... (நான் என்னத்தைச் சொல்ல?) ஆனால் ஒன்று ஜமீல் நாணாவிற்கு என் கவிதைகளைப் பிடிக்கும் :)

>>>>இஸ்லாம் கூறும் நன்னெறி காட்டுக்கோப்பிலிருந்து பிறழா எழுத்துக்கள்<<<<<

ஓ... அதை நிச்சயம் செய்வேன்! ஆனால் எது இஸ்லாம் கூறும் நன்னெறிக் கோப்பு என்பதில்தான் காலகாலமாகப் போர் நிலவுகிறதே? இதில் எங்கணம் எல்லோரும் ஒன்றாய் உடன்பட?

>>>>நம் சமுதாயத்திற்கென்று பயன் தரும் ஆக்கங்கள்<<<<

இது ஒன்றுமட்டுமே இப்போதைய என் குறிக்கோள். இதை நான் செய்வது உறுதி - இங்கோ அல்லது எங்கோ!

>>>வேண்டுகோளின் திறவுகோலை கையில் எடுத்தவன் என்பதால் நான் முதலில் உங்களை அழைக்கிறேன்...<<<<

இந்த அன்பு மட்டுமே போதும். ஆயிரம் கவிதைகளை இட்டதாக நான் மகிழ்வடைகிறேன், அபுஇபுறாகிம் அவர்களே.

>>>>சிந்தனையாளர்களின் எழுத்துக்கள் எட்டுதிசைக்கு எட்டிட அதிரைநிருபரும் ஒரு நல்ல தளமே. !<<<<

நான் மாற்றிச் சொல்வேனா? அவர்கள் கவலை அவர்களுக்கு :) நான் என்ன செய்யமுடியும். அதிரை நிருபர் ஓர் அருமை வலைப்பூ என்பதில் எனக்கு சொட்டளவும் ஐயமில்லை.

அதே சமயம் நான் உங்கள் விருப்பத்தைக் கேட்டுவிட்டு அப்படியே அசையாமல் இருக்கும் ஜந்துவல்ல. இதோ அடுத்த மடலில் இங்கேயே ஒரு கவிதையை இடுகிறேன். தனி இடுகை இல்லாவிட்டால் என்ன, இடுகைதானே முக்கியம்?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பினிய சகோக்கள் க்ரௌன், சித்திக், ஜகபர் அனைவருக்கும் என் நன்றி மழை பொழிகிறது. அதன் ஒவ்வொரு துளியிலும் உங்கள் அன்பே தெரிகிறது

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

கல்யாணமாம் கல்யாணம்

ஊரலசி உறவலசி
உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டுச்
சிரிப்பாளே பெண்ணின்தாய்

crown said...

ஆத்தோரம் அல்லாடும்
அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
முடியாது மாத்திவைக்க.
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆஹா! நல்ல உருவகம் அதே வேளை நிதர்சன உண்மை!

crown said...

உண்பதை வாய்மறுக்க
உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
எல்லாமும் துடிதுடிக்க.
-----------------------------------------------
சரிதான்! அந்தானின் நிலை இதுதான் என பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டீர்கவிஞர்காள்!அத்துனையும் அமுதம் என்றால் அத்துணையாய் வருபவளும் அமுதமே எனலாம். வார்தை பூ கவிதையாய் மலர்ந்திருக்கு வாசனை கூடி வாசகரை சுகந்தத்தால் வாட்டி எடுக்கும் வாழ்துக்கள்.

crown said...

முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டுச்
சிரிப்பாளே பெண்ணின்தாய்
-----------------------------------------------------------
தாயின் கண்ணீரை விட தாயின் பாசமே ஈரமிக்கது. நல்ல ரசனையான கவிதை ! வார்தைக்கு வார்தை வாழ்த்த சொல்லுது. நல்ல தமிழ் கொண்டு நலமாய் கவிதை பூசெண்டு மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் தந்துள்ளீர் இதுபோல் பல நல் கவிதை வேண்டி கோரிக்கை வைக்கின்றேன். எல்லா புகழும் அல்லாஹுக்கே!

crown said...

//after a long break i am reading your comments//
அது என்னமோ தெரியல காக்கா திருமணம்னு ஒன்றை முடித்து வைத்த நாளிலிருந்து பின்னூட்டும் இட நினைத்தால் முன்னந்தலை பின் வாங்குகிறது(அதற்காக 24/7 மீட்டர் பொட்டி கிராஸ் டாக்ல ஓடுதுன்னு நினைத்துவிடாதீர்கள்..)..ஒரு வேலை இந்த தளங்கள் நீங்களெல்லாம் திருமணம் முடிக்கும் சமயம் இருந்திருந்தால் case study பண்ணிருந்திருக்கலாம். முக்கியமாக சகோ.கிரௌன் அவர்களின் பாரா பின்னூட்டங்கள் கூடுதல்,குறைதல்களை வைத்து..

MSM(MR)
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி நலம்தானே? வாப்பா மற்றும் வீட்டில் யாவரின் நலமறிய ஆவல். என் பின்னூட்டங்களின் பாராவை வைத்து இருக்கட்டும் உங்களின் பின்னூ(ஊ)ட்டம் பாராமல் எனக்கு எதுவும் வாராது! வார்த்தைகள் கர்பனைக்குள் வாராது! கற்பனையும் பாராமுகமாகிவிடுகிறதே தம்பி!

அதிரை சித்திக் said...

ஊரலசி ,உறவலசி ,நட்பலசி .வேரலசி ,விழுதலசி .

முதலில் புரிய வில்லை ..அலசி ..ஆராய்ந்து ..

அட அன்றாடம் பேசும் தமிழ் ..

அன்பு கவி புகாரி ..உங்கள் தமிழ் அழகு .

கருத்தழகு ..மண மகளின் மகிழ்ச்சி முதல்

பெற்ற தாயின் கண்ணீர் வரை அலசி விட்டது

உங்கள் கவிதை அபாரம் ....

Ebrahim Ansari said...

அன்பு புகாரி அவர்களே!

முகமன் கூறி வரவேற்கிறேன். அழைப்பை ஏற்று வார்த்த கவிதை தொடக்கமே துள்ளலுடன். ரசித்துப் படித்தேன். பாராட்டுக்கள்.

அன்புடன் புகாரி said...

அன்றிகினியவர்களே,

உங்கள் பின்னூட்டங்கள் மிகுந்த மகிழ்வினைத் தருகின்றன. ஆனால் ஆய்வாளர் மூத்தசகோ அகமது அவர்களை நினைத்தால்தான் கலக்கமாக இருக்கிறது. அவரின் இழையில் இப்படி நுழைய நேருகிறதே என் நிலை என்று மனம் அங்கலாய்க்கிறது. என்னை அவர் அன்போடு மன்னிப்பாராக.

சகோ க்ரவுன் கவிதைகளின் ரசிகராக இல்லை ஒரு கவிதையாகவே இருக்கிறார். அவரின் பின்னூட்டங்கள் கவிதையின் திசையில் பயணப்படுகின்றன. உங்களால் கவிதைகள் எழுதமுடியும் க்ரவுன். கவிதைகள் எழுதி இருக்கிறீர்களா?

சகோ சித்திக், ஒரு பத்திரிகையாளரின் விழிகளோடு அலசிப் பார்த்திருக்கிறார். நன்றி

சகோ இ. அன்சாரியின் முகமனுக்கு நன்றி

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் புகாரி (கனடா கவிஞர்)அவர்களின் கவிதைகள் முன்பக்கம் இடப்பட்டால் இன்னும் கூடுதல் அங்கீகாரம் உடையனவாக அமையும்.

கனடா அன்புடன் புகாரி அவர்களின்ள் இக்கவிதை(திருமண) மாலை/ புதுக்கவிதையின் மணம்வீசும் மலர்வரிகள் மரபு நாரில் பாமாலையாக என்னால் கணிக்க முடிகின்றது. எதுகை, மோனையுடன் நான்கு சீர்களுடன் அமைக்கப்பட்டுள்ள மரபுவழியில் உட்புகுத்தியுள்ள வரிகள் ஆற்றொழுக்கு நடையுடன் ஓட்டம் குன்றாமலும் புதுக்கவிதை வீச்சில் இணைத்துள்ள இம்மரபு புதுக்கவிதை அடியேனும் , எனக்கும் புகாரி அவர்கட்கும் நண்பரான கவிஞர் அஸ்மின்(இலங்கை)அவர்களும் மிகவும் விருப்பத்துடன் இயற்ற நாடும் நற்கவிதை. இதனை (மரபும் புதிதும் கலந்த கலவை)தான் எனது இலட்சியமும், இலங்கை கவிஞர் அஸ்மின் அவர்களுடையதும் என்பதை ‘அன்புடன்’ இணையத்தில் அவர்களின் பேட்டியில் படித்த நாள் முதல் என் மனம் கூறுவதை இன்று கனடா கவிஞர் அவர்களின் கவிதை கண்டதும் ‘மலரும் நினைவுகளாய்” ஈண்டு பதிகின்றேன்

crown said...
This comment has been removed by the author.
crown said...

(மரபும் புதிதும் கலந்த கலவை)தான் எனது இலட்சியமும், இலங்கை கவிஞர் அஸ்மின் அவர்களுடையதும் என்பதை ‘அன்புடன்’ இணையத்தில் அவர்களின் பேட்டியில் படித்த நாள் முதல் என் மனம் கூறுவதை இன்று கனடா கவிஞர் அவர்களின் கவிதை கண்டதும் ‘மலரும் நினைவுகளாய்” ஈண்டு பதிகின்றேன்
.
---------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். அண்ணன் புகாரி அவர்களுக்கு கவிஞன் தம்பி அஸ்மினுக்கு என் சலாம் சொல்லவும் கலந்துரையாடி வெகு நாட்கள் ஆகிறது.(இப்ப நினைவு வைத்திருக்கிறாரா- ஹஹ்ஹஹஹ்ஹஹ)கேட்டதாகவும் சொல்லவும். அவரின் தந்தை வழி மரைக்காபட்டினம் என சொன்னதாக நினைவு. நல்லவர் பண்பாளர், சீரிய சிந்தைக்கு சொந்தகாரர்.(எங்களுக்கும் தெரியும் நு காட்டிகிட்டோம்ல! அஹஹஹ்ஹஹ்)

Meerashah Rafia said...

crown சொன்னது…//அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி நலம்தானே? வாப்பா மற்றும் வீட்டில் யாவரின் நலமறிய ஆவல்.//
Alhamdulillah all is well.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆசிரியர், இக்கட்டுரையாளர்- ஆய்வாளார் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்களை நேரில் கண்டு உரையாட வந்தேன்; தங்கள் ஊரில் இல்லை; அலைபேசியிலும் அழைத்து மறுமொழிக் கிட்டவில்லை. நன்று.

நேற்று கிளை நூலகத்தில் தேடிக் கண்டுபிடித்த நூலைத் தங்களிடம் கொணர்ந்து காட்டிட மிகவும் அவாவுற்றேன்; ஆனால், நூலகத்தின் பொறுப்பாளர் , “இப்பெரிய நூல் விலை அதிகம் என்பதால் குறிப்புகள் எடுக்க மட்டும் தான்; உங்களிடம் உறுப்பினர் அட்டை இருந்தாலும் இப்பெரிய நூலை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை” என்று சொன்னார். அதனால் அந்நூலின் முகப்பில் உள்ள முகவரி மட்டும் குறித்துக் கொண்டேன்; இன்ஷா அல்லாஹ் நான் விலைக்கு வாங்கி என் கைக்குக் கிட்டியதும் தங்கட்கு அன்பளிப்பாக வழங்குவேன்:

“திருமறையின் தேன்மலர்கள்”

திருக் குர் ஆன் வெண்பா

வே.ப. பாபுல் சாஹிப்

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
“நியூடெக் வைபவ்”
57அ- 53வது தெரு
அசோக் நகர்- சென்னை 600 083
தொலைபேசி: 044 24896979 / 65855704
விலை: உருபா 500/=(ஐநூறு)

சற்றுமுன்னர், அப்பதிப்பகத்தாரிடம் அலைபேசியில் பேசினேன்; உருபா 500/ மட்டும் பணவாணையில் அனுப்பினால் அஞ்சல் வழியாக எனக்கு அனுப்பி விடுவர் என்றும்; பட்டுக்கோட்டை அரசி புத்தக நிலையத்திலும் கிடைக்கும் என்றும் மறுமொழி பகர்ந்தனர்.

அந்நூல் முழுவதும் அல்-குர்-ஆன் மொழியாக்கத்தை (தர்ஜமா) வெண்பா எனும் யாப்புக் கவிதையில் முழுமையாக அமைத்துள்ளார் அந்நூலாசிரியர். இஃது ஒன்றே போதும், ”நற்கவிதைக்கு இஸ்லாத்தில் தடையேதுமில்லை” என்றுச் சான்று கூற!

அதிரை சித்திக் said...

சகோ க்ரவுன் கவிதைகளின் ரசிகராக இல்லை ஒரு கவிதையாகவே இருக்கிறார். அவரின் பின்னூட்டங்கள் கவிதையின் திசையில் பயணப்படுகின்றன. உங்களால் கவிதைகள் >>>>>>>>>

அன்பு கவி புகாரி ...கிரௌன் என்கிற தஸ்தகீர் ..இயற்கையான பிறவி கவிஞன் ..பள்ளி பருவத்தில் தமிழ் புலவரின்

செல்ல பிள்ளை ..கண்களால் பார்த்த மறு நிமிடம் இல்லை இல்லை மறு நொடியில் கவி மழைபொழியும் ..நீ இங்கு சுகமே ..

நான் அங்கு சுகமா ..என்ற சினிமா பாடல் வரி ..பாடல் வர இரண்டு வருடத்திற்கு முன் இவர் பாடி விட்டார் ...


கவிதையால் தூக்கம் துலைத்தவர்..தற்போது கவிதைக்கு கடிவாளம் இட்டு வைத்துள்ளார் ..இவரின் எண்ணஓட்டத்திற்கு

எழுதுகோலால் ஈடு கொடுக்க முடியாது ..டேப் ரிகார்டர் ..அல்லது கணணி ஓகே ..இவரிடம் பேசுவது ..கவியரங்கம் தான் ..

crown said...

அதிரை சித்திக் சொன்னது…
--------------------------------
அன்பு கவி புகாரி ...கிரௌன் என்கிற தஸ்தகீர் .
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
சொன்னவைகள் உண்மைகள் என்றாலும் புகழுக்குரியவன் அல்லாஹ்வே! அன்பை வெளிப்படுத்தவேண்டியசூழ்னிலை உங்களுக்கு என்னால் ஏற்பட்டுவிட்டது. அன்பிற்கு நன்றியாய் முன்பைவிட அன்பை அதிகமாக்குகிறேன்.இங்கே மாகா கவிஞர்களும் , அறிஞர்களும் வந்து போகும் இடம் இதில் என்னைப்போல் ஒ(சி)றுவனைப்பற்றி வரும் செய்தி கூச்சம் ஏற்படுத்துகிறது. இனியேனும் எனக்கு இந்த அவஸ்தை அன்பின் காரனமாகவும். நட்பின் காரணமாகவும் தராதீர்கள். அல்லாஹ்க்கே எல்லாப்புகழும் அல்லஹுவே நன்கு அறிந்தவன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//அதிரைப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். சுருக்கி அழைக்கப்படுவதோ அதிரை. தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்த காலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக அதிரை அறிஞர் தமிழ்மாமணி புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் ( ANNAVIYAR ) என்று அழைக்கப்படும் புலவரும் ஒருவர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முகைதீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902’ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ஆய்வு தொடரும்...........

நன்றி : ஹமீத் ஜாஃபர்
தகவல் : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார்//

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய நண்பர் கலாம்,

தமிழ் முஸ்லிம்கள் பெருமைப்படக்கூடிய பெரியவர்கள் பற்றிய தகவலை இட்டு என்னைப் பெருமைப்படவைத்தீர்கள். நன்றி.

இவர்கள் அனைவரின் ஆக்கங்களையும் இன்சால்லா நான் வாசித்து மகிழ வேண்டும். அதற்கான அமைதியான நேரத்தை இறைவன் எனக்கு அருளவேண்டும்.

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

கவி.புகாரி,

//முந்தானை எடுத்துமெல்ல
முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டுச்
சிரிப்பாளே பெண்ணின்தாய்//

...இப்படி முடித்தது மிகக் கவர்ந்தது.

தனிப்பதிவு வராததற்கு;அதற்கான அழைப்பு தங்களுக்கு தனி மின்னஞ்சலில் அ.நி.யிலிருந்து வராததற்கும் தங்களின் மின்னிஞ்சல் முகவரி தெரியாததுதான் காரணம் என நினைக்கிறேன்.

தங்களின் இமெயில் ஐடியை இங்கு தயை செய்து பதியவும், நன்றி.

கவிஞர் அஸ்மின் said...

இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி மேற்குலகின் அவதூறுகளுக்கு பதில் சொல்லும் விதமாக அவர் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை கொண்டு இக்கவிதை அமைந்துள்ளது.

இக்கவிதை 2011ம் ஆண்டு மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இறுதி நாள் நிகழ்வில் கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் என்னால் பாடப்பட்டது.


பொறுமை.


நெறிகெட்ட காபிர்கள் மக்காவெங்கும்
நெருப்போடு இணைவைத்து வணங்கும்வேளை
தறிகெட்டோர் வெறிகொண்டு கஃபாவெங்கும்
தங்கத்தால் சிலைவைத்து களிக்கும்வேளை
புரியாத மாந்தர்கள் நபிகள் நெஞ்சை
புண்ணாக்கி பழியுரைகள் கூறும் வேளை
அறியாமை இருள்விலக இஸ்லாம் மார்க்கம்
அண்ணலார் பொறுமையினால் தளைக்கலாச்சு!

கருணைமிகு எம்பெருமான் மக்கா நகரில்
காலாற அவ்வேளை நடந்து வந்தார்.
தெருவழியே ஒருகிழவி தலையில் மூட்டை
சுமந்தபடி முனகலுடன் முன்னே வந்தாள்.
கிறுகிறுப்பு தரும்வெயிலில் நடந்துவந்த
கிழவியவள் நிலைகண்டு முன்னே சென்ற
திருநபியோ 'என்தாயே உங்கள் சுமையை
நான்தலையில் சுமக்கின்றேன் தருவீர் என்றார்

'இல்லைநான் தொலைதூரம் செல்லவேண்டும்
வீண்சிரமம் உமக்கெதற்கு' விலகுமென்றாள்.
வெள்ளைமனம் உள்ள நபி அவளைப் பார்த்து
வெகுதூரம் சென்றாலும் வருவே னுங்கள்
பிள்ளைபோல் எனை எண்ணி தருவீரென்று
பிரியமுடன் அவளிடத்தில் கேட்டுநின்றார்
சுள்ளென்ற வெயில்பொழுதில் நபிகள் தலையில்
சுமைஏற்றி அவள்பின்னே நடக்கலானாள்...!

'தள்ளாடும் இவ்வயதில் நீங்க ளுங்கள்
தாய்மண்ணை விட்டுஏன் போகின்றீர்கள்..
பிள்ளைகள் உள்ளனரா அங்கு?' என்று
தொலைதூரம் சென்றநபி வினவலானார்.
'பொல்லாத ஒருகொடியோன் எங்கள் முன்னோர்
வணங்கிவரும் தெய்வமெலாம் பொய்என்கின்றான்
'அல்லாஹ்'வை வணங்கட்டாம் என்று சொல்லி
ஆத்திரத்தை கிளப்பு கிறான் அதனால் போறேன்'

'கல்லெடுத்து அவன் தலையை உடைக்கும் சக்தி
கடுகளவும் எனக்கில்லை அதனால் போறேன்.
கொள்ளையிலே போகட்டும் 'முஹம்மத்' என்னை
கொன்றாலும் அவன்பேச்சை கேட்கமாட்டேன்.
எல்லோரும் அவன் வழியில் போனால் கூட
ஒருபோதும் அவன்வழியில் போகமாட்டேன்.
நில்லேன்நான் அவனில்லா ஊரை நோக்கி
நிம்மதியை தேடித்தான் போறேன் என்றாள்.'

வறுமைப்பூ தன்வாழ்வில் பூத்தபோதும்
வயிற்றினிலே கல்சுமந்து நின்றமன்னர்.
பொறுமையினை எளிமையினை நேர்மைதன்னை
பொக்கிஷமாய் வைத்திருக்கும் எங்கள்தூதர்.
அருமைநபி 'அல்லாஹ்'வின் அருளினாலே
அருங்குணங்கள் அத்தனையும் கொண்ட அண்ணல்.
சிறுமையுடன் அவள்சொன்ன பேச்சை கேட்டு
சிறிதளவும் கோபமின்றி தொடர்ந்து சென்றார்.

கேவலமாய் ஒருவர் எமை கேலிசெய்தால்
கேட்டிருந்து ரசிப்போமா உடனேபேசும்
நாவறுத்து அவர்கையில் கொடுத்துவிட்டு
நம்சக்தி என்னவென்று காட்டுவோமா?
சாபமிட்ட கிழவியவள் சுமையைத் தூக்கி
சாந்திநபி சாந்தமுடன் செல்லுகின்றார்.
கோபமென்ற சொல்கூட அறியா தந்த
கோமகனின் பொறுமையினை என்னவென்பேன்.

செல்லுமிடம் சேர்ந்ததனால் தலையின் சுமையை
வள்ளல்மனம் உள்ளநபி இறக்கி வைத்து
'நல்லபடி வந்துவிட்டோம் மகிழ்ச்சி 'உம்மா'
நான்சென்று வருகின்றேன்' என்றார் பணிவாய்.
'எல்லையற்ற பேரன்பு உள்ளம் கொண்ட
பிள்ளைநீர் யாரென்று' கிழவி கேட்டாள்.
அல்லல்தரும் கொடியவனாய் நீங்கள் சொன்ன
பொல்லாத நபிமுஹம்மது நான்தான் என்றார்.

சங்கைமிக்க நபிபெருமான் வார்த்தை கேட்டு
கங்கைபோல் நீர்பெருக அழுதமாது
தங்கமனம் படைத்தவரே! நபியே உம்மை
தவறாகப் பேசியதை மன்னியுங்கள்.
உங்களது பொறுமையினால் இஸ்லாம் மார்க்கம்
உலகமெலாம் பரவுமிது உண்மையென்று
அங்கமெல்லாம் நடுநடுங்க ஈமான் கொண்டு
அண்ணலார் கரம்பற்றி கலிமா சொன்னார்.

KALAM SHAICK ABDUL KADER said...

என் அருமை நண்பர் கவிஞர் அஸ்மின் அவர்கள் அதிரை நிருபர் எனும் பல்கலைக்கழகத்தில் இணைந்திருப்பது கண்டு மட்டிலா மகிழ்ச்சி அடைகின்றேன்;

அருமை நண்பரே வருக!
கரும்பாய் இனிக்கும் கவிதைகள் தருக!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு