Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 27

தொடர் நிறைவுறுகிறது

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2012 | , ,

இறையருட்கவிமணி அவர்கள் தமது கவிதைத் திறனால் ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள் ஏராளம்.  மழலைச் செல்வங்களுக்கான குழந்தைப் பாடல்களானாலும் சரி, கவியரங்கப் பாக்களாயினும் சரி, அவற்றினூடே இழைந்தோடும் கருத்துக் கருவூலங்கள் அன்னார் செய்த சிந்தனைப் புரட்சிகளுக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

கல்வியாளர்களும் அறிஞர்களும் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட விழந்த கவிமணியவர்கள், அறிஞர்கள் தாம் கற்ற கல்வியைச் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில், ஆழிய அறிவுக் கருவூலங்களையும் இறையருள் இலக்கியங்களையும் தமிழ் மொழியில் வார்த்தெடுத்துக் கொடுக்க வேண்டிய தேவையைக் கீழ்க்காணும் கவியடிகளில் பாடுகின்றார்:

          “வான்போற்றும் கருத்துகளை வடித்தெடுத்துக் கொடுப்பதுதான்
           தீன்போற்றும் நமக்கெல்லாம் திகழ்கின்ற பணியாகும்
           அறிவுப் பசிஎடுத்தே அலமந்து நிற்போர்க்குச்
           செறிவு மிகைத்திருக்கும் சீர்மறையின் கருத்துகளைச்
           சேர்த்தெடுத்துக் கொடுத்திடுவோம்; செந்தமிழின் சுவைசேர்த்துப்
           பார்த்தெடுத்து வழங்கிடுவோம்; பாருலகில் ஓங்கிடுவோம்!”

இல்லாவிட்டால், ‘கற்றதனால் ஆய பயனென்?’ என்று கேட்பது போல் தோன்றுகின்றதல்லவா?

கற்றோர் செய்ய வேண்டிய அப்பணியை இன்னும் அழகாகப் பாடுவதைக் கேளுங்கள்:

                   “கண்ணைக் கவர்கின்ற கண்ணாடிக் கிண்ணத்தில்
                   வண்ணப் பழச்சாற்றை வார்த்துக் கொடுப்பதுபோல்
                   காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ்நடையில்
                   ஓதப் படைத்திடுவோம் ஓங்கும் நெறிக்கருத்தை!”

‘காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ் நடையில்’ எழுதுவது எல்லாராலும் சாலுமோ?  அறிவுப் பெருக்கமும் சிந்தனைச் சீர்மையும் உள்ளவர்களால்தான் இயலும்.  அத்தகைய முன்னேற்றத்தைத்தான் அறிஞர்களிடம் எதிர்பார்க்கின்றார் ‘இறையருட்கவிமணி’.

வையகத்தைக் கவிஞன் நோக்குவதற்கும் பிறர் நோக்குவதற்கும் பெருத்த வேறுபாடுண்டு.  நிறைகளைப் போற்றும் அதே வேளை, குறைகளைச் சாடும் உணர்ச்சி மிக்க மனப்பாங்கு கவிஞர்களிடம் காணப்படும் ஒன்றாகும்.

                             “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
                                 பாலித் திடவேணும்” என்று பாரதி பாடினான் அல்லவா?

இதுதான் கவிஞன் காணும் வையகப் பரிவு.  அதே பாரதி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்!” என்றும் சீற்றம் கொண்டு சீறிப் பாய்ந்தான்.  சமூகத்தில் குற்றம் காணின், கொதித்தெழுவான் கவிஞன்.  இது போன்று கொதித்தெழுகின்றார் நம் கவிஞர்:

                   “அறந்தேயும் தீச்செயலும் அடுத்தாரைக் கெடுப்பதுவும்
                   புறம்பேசும் தீக்குணமும் பொய்புரட்டும் வஞ்சனையும்
                   குணமொன்றும் நாடாமல் குழிபறிக்கும் குறுமனமும்
                   பணமொன்றே குறியாகும் பண்பில்லா உளப்பாங்கும்
                   உள்ளத்தில் பிறக்காமல் உதட்டளவில் உறைகின்ற
                   கள்ளத்தின் பொய்நகையும் கழுத்தறுக்கும் கொடுமைகளும்
                   மெய்யோட்டும் பையூட்டும் மேதினியைப் பாழாக்கும்
                   கையூட்டும் களியாட்டும் கள்ளூட்டும் பேயாட்டும் .....”

என்றெல்லாம் பாடிச் சாடிவிட்டு,

                   “மனிதகுல வரலாற்றின் மாண்பனைத்தும் போக்கிவிடும்
                   புனிதநபி நெறியினிலே புழுதியினைச் சேர்த்துவிடும்”

என்று பாடி எச்சரிக்கை செய்கின்றார்.   நேர்வழிக்கு ஒரே வழி,

                   “உளம்வாழும் நிலைகாண உயர்மறையின் நெறிசெல்வோம்!”

என்று முடிவுரை பாடுகின்றார் நம் முதுபெரும் கவிஞர். 

கல்வி கற்றல் என்ற பெயரில், மேலை நாட்டு மேதைகள், கீழை நாட்டுக் கெழுதகையோர் பற்றியெல்லாம் படிக்கின்றோம்.  ஆனால், எவருடைய வாழ்க்கை நமது முன்மாதிரியாக இருக்கவேண்டுமோ, அந்த அருள் தூதரின் வாழ்க்கையினைப் படிப்பதில்லை என்று இடித்துரைக்கும் முகமாக,

                   “அறிவுலகப் பேரொளியை அனைத்துலகப் பெருமகரை
                   முறையுடனே நாமறியோம்; முகவரியும் நாமறியோம்.
                   ஆப்பிள் திராட்சையுடன் ஆரஞ்சுப் பழமிருக்கத்
                   தோப்பில் மாங்காயைத் துழாவிக் கடிப்பதுபோல்,
                   குற்றாலத் தருவியிலே குளிக்காமல் பக்கத்துக்
                   கற்றாழைக் குட்டையினைக் கலக்கிப் புரளுதல்போல்
                   விண்கவரும் விரிநூல்கள் வீட்டின் அகத்திருக்கக்
                   கண்கவரும் நூல்படித்துக் கால்வழுக்கிக் கிடக்கின்றோம்!”

அருமை!  எத்துணை அழகிய உவமையுடன் கூடிய உணர்வூட்டல்?!

                   “வணக்கமிலாப் பள்ளிகளும் வாஞ்சையிலா மன்றுகளும்
                   இணக்கமிலா இல்லறமும் இறக்கமிலா நெஞ்சுகளும்
                   உறுதியிலா அறிஞர்களும் ஒழுக்கமிலா இளைஞர்களும்
                   நாணமிலா அரிவையரும் நலன்காணாத் தலைவர்களும்
                   நம்மிடையே பெருகிவிட்டார்; நாடகமே ஆடுகின்றார்!”

குற்றம் களையும் பணியில் கூடி நிற்குமாறு தம்மைப் போன்ற தரமான கவிஞர்களை அறைகூவல் விடுத்து அழைக்கின்றார் அருட்கவிஞர்:

                   “வணிகத்தில் கலப்படமும் வாழ்க்கையிலே பெறுகின்ற
                   அணிசிதைக்கும் சூதுமது ஆகாத கொலைகளவும்
                   வஞ்சனைகள் பொய்புரட்டு வன்முறைகள் தீச்செயல்கள்
                   மிஞ்சிவரும் உலகுக்கு மெய்விளக்காம் கவிதேவை.
                   பணமென்றால் வாய்பிளக்கும் பிணமாக மாறாதீர்!
                   செல்வர்க்கே அடிவருடும் சிறுமையிலே சிக்காதீர்!
                   அனல்கக்கும் கவிதைகளால் அநீதியினைச் சுட்டெரிப்பீர்!
                   புனல்வார்க்கும் கவிதைகளால் புனிதத்தை வளர்த்திடுவீர்!
                   அறவாழ்வு தழைப்பதற்காம் அரும்பணிகள் புரிந்திடுவீர்!”

இவ்வாறு, சீர்திருத்தக்காரர்களாகக் கவிஞர்கள் ஆகும்போது எவர்தான் கவிதைகளை வெறுப்பார்?

                   “கலைகளுக்கே அரசியெனக் கவினடையும் கவிதைகளில்
                   பலவகைகள் பகர்ந்திடுவார் பாருலகின் ஆய்வாளர்
                   உள்ளத்தில் கருவெடுத்தும் உணர்ச்சியிலே ஊற்றெடுத்தும்
                   தெள்ளமுதச் சொற்களிலே தெவிட்டாத உருவெடுத்தும்
                   பள்ளத்துள் பாய்கின்ற வெள்ளமென வெளியாகிக்
                   கள்ளமிலாக் காதுகளைக் கவ்விப் பிடித்திழுத்து
                   நெஞ்சத்தில் விளையாடி நாளெல்லாம் நம்முடனே
                   கொஞ்சுகின்ற குழவிகளே குடியுயர்த்தும் கவிதைகளாம்.

மாசற்ற மனித வாழ்க்கைக்காகக் கவிதைகளின் தேவையை – இஸ்லாம் வகுத்த இனிய நெறியில் இயங்கவேண்டிய கவிதைகளின் தேவையை – மேற்காணும் இறையருள் கவி மணிகளால் நாம் உணரலாம்.

كلام فحسنه حسن وقبيحه قبيح

(நற்கருத்துள்ளவை நல்ல கவிதைகளாகும்;  மோசமான கருத்துள்ளவை மோசமான கவிதைகளாகும்.)

என்று இஸ்லாம் கூறும் இலக்கணத்தில் இணைவோம்!  நம் மறுமை இலக்கினை அடைவோம்!.


(சான்றுகள் கணக்கின்றி உள.  விரிவஞ்சி, இத்துடன் நிறைவாக்குகின்றேன்.) 
முடிவுரை

இக்கவிதை இலக்கிய மரபு மேலும் தொடரவேண்டும்.  இந்த ஆய்வுத் தொடரில் நான் குறிப்பிட்டதற்கொப்ப, கவிதை என்பது மானிட இயல்புத் தன்மையுடன் பின்னிப் பிணைந்ததாகும்.  மனிதனை மனிதனாக வாழ வழி வகுப்பது;  வாழ்வின் உண்மை நிலைகளை உணர்த்துவது;  காலத்தால் கறை படாத கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது;  கற்பனை அழகை விரும்பும் மனித இயல்புக்குக் கருத்துணர்வைத் தர வல்லது;  உண்மையும் அழகுணர்ச்சியும் நிறைந்த சொல் வளத்தால் வாழ்வைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்ட வல்லது;  மனித வாழ்வின் ஆன்மிக இயல்பை உணர்த்த வல்லது;  அதனை ஆர்வத்துடன் படிக்கும் / பாடும் மனிதனுக்குப் புதிய வாழ்வையும் புத்துணர்வையும் கொடுப்பது.

இந்த ஆய்வின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டிய இறைமறை குர்ஆன் வசனத்தில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய ‘ஹிக்மத்’ (நுண்ணறிவு) எனும் சொல் இடம்பெற்றிருப்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவிதையைப் புகழ்ந்துரைத்தபோது ‘ஹிக்மத்’ எனும் அதே சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாலும், “கவிதை என்பது பொய்யால் நிறைந்தது; கவிஞன் பொய்யுரைப்பவன்” என்றெல்லாம் கருத்துக் கொள்ளாமல், கவிதைகள் மூலமும் உண்மைகளை உணர்த்தலாம்;  மனித நேயத்தை மலரச் செய்யலாம்;  மார்க்கத்தை எடுத்துரைக்கலாம் என்றே நம்பவேண்டும்.

இஸ்லாம் என்பது குர்ஆனும் நபிவழியும், அப்பழுக்கில்லாமல் இவ்விரண்டின் அடியொட்டி வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முன்மாதிரிகளும் மட்டுமே.  இந்த அளவுகோள் (yardstick) கொண்டுதான் எதையும் – அது இலக்கியமாகட்டும், இசையாகட்டும், எதுவுமாகட்டும் – வரையறை செய்யவேண்டும்.  இந்த இலக்கணத்தில் அனைத்தும் அடங்கிவிட்டன.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு என்பதுவே எமது அழைப்பியல் நெறியின் துவக்கமும் முடிவுமாகும்!

இத்தனை நாட்கள் என்னுடன் பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.
     
அதிரை அஹமது
adiraiahmed@gmail.com

17 Responses So Far:

Anonymous said...

ஐயா,

சமீபத்தில்தான் இந்த வலைப்பூ எனக்கு அறிமுகமானது, காணக்கிடக்கும் அரிதான புதிய பதிவுகள் நிறைய இருப்பதை அறிந்தேன்.

வாழ்த்துகிறேன் அருமையான தொடர் இவ்வளவு சீக்கிரம் நிறைவை எட்டியிருக்கிறதே!

உங்களின் இந்த தொடர் முழுவதையும் வாசித்து விட்டு தனிமின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

நன்றி,

வெங்கி / மஸ்கட்

Noor Mohamed said...

அன்பின் அஹமது காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

//சான்றுகள் கணக்கின்றி உள. விரிவஞ்சி, இத்துடன் நிறைவாக்குகின்றேன்//

இந்த நிறைவே சரி என்று தாங்கள் சான்று கூறினால், மறுப்பதற்கு வழியின்றி, மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

//இத்தனை நாட்கள் என்னுடன் பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி//

இத்தனை நாட்கள் எங்களின் அறிவு பசிக்கி தீன் வழியில் தீனி தந்த தங்களுக்கு என் நன்றிகள் பல இங்கே சமர்ப்பிக்கின்றேன்.

தாங்கள் நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் பெற்று, வளமுடன் நலமாய் வாழ வல்ல இறைவனை வழுத்துகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் நேரான பாதையை காட்டி அருள்புரிவானாக.

ZAKIR HUSSAIN said...

இந்த ஆக்கம் அதிரை நிருபரில் வர காரணமாக இருந்தவர்களில் சகோதரர். அர அல அவர்களுக்கும், பின்னூட்டமிட்ட எல்லா வாசகர்களுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த ஆக்கம் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் அல்ல. ஒரு தலைப்பை கொடுத்து அதன் சம்பந்தமான விசயங்களை "ஆய்வு செய்து" எழுதுவது என்பது சகோதரர் அதிரை அஹமது போன்ற கற்றறிந்த பெரியோர்களால்தான் முடியும்.


ஒரு விசயத்தை ஆதரித்து அல்லது மறுத்து எழுத அவ்வளவு சிரமம் இருக்காது ஆனால் கவிதை என்று வந்த பிறகு அதை ஆதரித்தோ மறுத்தோ எழுத "கவிதை எழுதும் கலை" சரியாக கற்றிருக்க வேண்டும். அந்த கற்றல் எனும் விசயமும் தெரிந்து கற்றுக்கொடுக்கும் திறமையும் மிக்க சகோதரர் அதிரை அஹமது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நிறைவான இந்த ஆய்வுப் பதிவுக்கு எங்கள் நன்றியும் துஆவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இதோடு விட்டுவிட மாட்டோம் இன்னும் எங்களோடு இணைந்து தந்து கொண்டே இருக்கனும் அதற்கான கரு எதுவானாலும் உவகையே !

//இந்த ஆக்கம் அதிரை நிருபரில் வர காரணமாக இருந்தவர்களில் சகோதரர். அர அல அவர்களுக்கும், பின்னூட்டமிட்ட எல்லா வாசகர்களுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.//

ஆம் ! எங்கே எங்கள் சகோதரன் !? சமீபத்தில் பதிவுத்தடம் குறைவாக இருக்கிறதே..

நன்றியுடன் எதிர் பார்க்கிறோம் A.R.A. :)

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அறிஞர் அவர்களுக்கு நன்றிகள் பல .கவிதைகளைப்பற்றிய தெளிவான பாதையை மிக அழுத்தமாக ,அழமாக மனதில் நிறுவியது இந்த தொடர் .

உங்களின் இந்த தொடரை நிறைய தளங்களில் மேற்கோள் காட்டியதை நாங்கள் வாசகர்கள் என்ற முறையில் மகிழ்ந்தோம் .

கற்று அறிந்த அறிஞரான நீங்கள் இந்த தொடரைபோல் வேறு சில விசயங்களின் மார்க்க அடிப்படையிலான சந்தேகத்தை போக்கும் விதத்தில் வேறு ஒரு தொடரை தொடர்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம் .இன்ஷா அல்லாஹ்.

sabeer.abushahruk said...

மனம் கனக்கிறது
காக்கா,
இன்னொரு தொடர் ஆரம்பியுங்களேன்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா.

இந்த தொடர் முடிந்துவிட்டதா? நம்ப முடியவில்லை என்பதைவிட இந்த உண்மையை மணம் ஏனோ ஏற்க மறுக்கிறது என்பதே உடனடி எண்ணம.

கவிஞர் சபீர் அவர்கள் கூறுவதுபோல் இன்னொரு தொடர் ஆரம்பியுங்கள் என்று கூற நானும் அடுத்து வரிசையில் நிற்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

உலகத்தை பாதிக்கும் அவலம் எல்லாம்
.... உண்மையுள்ள நற்கவிஞன் மனம்கி ழிக்கும்
நலம்நாடும் அறிவாற்றல் கொண்டோர் ஆக்கும்
.. ..நான்குவரிக் கவியெனினும் கனல்ப றக்கும்
மலர்தானும் கனல்மணக்கும் என்றே சொன்னான்
.... மாக்கவிஞன் பாரதிதான் மரபின் மன்னன்
சிலர்வேற்று மொழிக்கலப்பைச் செருகி வைத்து
.. ..செப்புகவி காகிதப்பூ செயற்கை வாசம்!


வல்லெழுத்துச் சொற்களினால் வார்த்தெ டுத்து
.. ..வரும்சினத்தில் கொட்டுகவி கனலை வீசும்!
சொல்லெடுத்துச் சூடேற்றும் பொருள் பேசும்
.. ..சூழலிலே சுழல்மனத்தால் இயக்கப் பெற்ற
நல்லவரின் பேச்சுமொழிக் கவிதை கூட
.. ..நனிசிறக்கும் கருத்துகளைக் கொட்டும் பாவாய்
.வல்லவனின் அருட்பேறு பெற்ற வர்க்கே
..... வாய்க்குமிந்த கவிபுனையும் ஆற்ற லிங்கு


வழக்குரைத்தோர் புரிந்துணர்வில் குறைபா டென்றே
......வஞ்சமின்றிச் சொல்லிவைத்தீர் துவக்க மாக்கி
முழக்கமென ஆய்வினிலே தொடர்ந்து காட்டி
......முத்தான நபிமொழியை முடிவு மாக்கி
வழக்குமுடித் தவிதம்தான் ஆய்வின் பெற்றி
.....வழக்குரைத்தோர் கவிபுனைய வைத்த வெற்றி
கிழக்குதிக்கும் கதிரவனாய் ஒளியே ஏற்றி
.....கிலிபோக்கும் நிலைதந்த நின்னை போற்றி


சேவகமே புரிந்திட்ட நபியின் தோழர்
.......செந்தழலின் யுத்தத்தில் பாடும் பாக்கள்
மேவிடவே படைவீரர் புடைத்து நிற்க
.... மேலவர்கள் சினம்படைக்கும் கவிதைச் சொன்னீர்!
கூவியழைத்(துப்) பகைவர்கள் அஞ்சி யோட
.. ..குரல்வலிமை வஞ்சினமாய்க் கவியும் பாட
நாவினிலே விருந்தாகும் சொல்லால் காட்டி
.. ..நல்வகுப்பை இத்தளத்தில் நடத்திச் சென்றீர்!திருட்டுவகை பலவாகித் தீய்க்கும் நாட்டை
.. தீட்டும்பா வூட்டுமுணர் வோட்டும் கேட்டை!
மிரட்டுகிற மதம்சாதி பேதம் நீங்க
.. மேலான மருந்தாக கவிதை ஓங்க
புரட்டிடும்பொய் சூதுவஞ்சம் ஏய்ப்பு நோய்கள்
.. புன்மையெலாம் பொசுக்கிவிட புதுமை பூக்க
வரட்டுவேதாந் தங்களின்பால் மயக்கம் தீர
.. வருங்கால நலம்சமைப்போம் கவித்தீ யாலே!--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Unknown said...

//Ebrahim Ansari சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா.

இந்த தொடர் முடிந்துவிட்டதா? நம்ப முடியவில்லை என்பதைவிட இந்த உண்மையை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது என்பதே உடனடி எண்ணம.//

வ அலைக்குமுஸ்ஸலாம்.

இப்படித்தான், வாழ்க்கையும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவியாலான நல்ல கருத்துக்களை தவறான கருத்துக்களின் போர்வையால் மறைந்து கிடந்த சிலருடைய உள்ளங்களை.அல்லாஹ்வின் உதவியால்.ஆனித்தரமான கவி தொடரால் கலைந்து எறிந்த அஹமத் அப்பா அவர்களுக்கு. அல்லாஹ் நீண்ட ஆயுளை கொடுத்து அவர்கள். மூலம் இன்னும் அதிகமான நல்ல விசயங்களை தெரிந்துக் கொள்ள அருள் புரிவானாக ஆமீன்.

அதிரை என்.ஷஃபாத் said...

இறையருட்கவிமணியின் கவிதைகளுடன் முத்தாய்ப்பாக முடிந்திருக்கும் இந்த தொடர், கவிதை குறித்த தெளிவினையும், கவிதைக்கு அமையப் பெற வேண்டிய ஒழுங்கினையும் அறியத்தந்திருக்கின்றது. பயனுள்ள தொடர்.!!

Yasir said...

சாந்த முகமும்,காந்த பார்வையும் கொண்ட அஹமது காக்கா அவர்களின் இத்தொடர் தலைமுறைக்களுக்கும் உதவக்கூடியது...அல்லாஹ் அவர்களுக்கு பரிபூரண சுகத்தை கொடுப்பானாக.....மற்றொரு தொடருக்காக தொடர்ந்து காத்திருப்போம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நன்றி, துஆ, வாழ்த்துக்கள்!
இன்னும் இதர அவசியமானதுகள் உங்கள் மூலம் அறிய ஆவல்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பினிய அஹமது மாமா,

//இஸ்லாம் என்பது குர்ஆனும் நபிவழியும், அப்பழுக்கில்லாமல் இவ்விரண்டின் அடியொட்டி வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முன்மாதிரிகளும் மட்டுமே. இந்த அளவுகோள் (yardstick) கொண்டுதான் எதையும் – அது இலக்கியமாகட்டும், இசையாகட்டும், எதுவுமாகட்டும் – வரையறை செய்யவேண்டும். இந்த இலக்கணத்தில் அனைத்தும் அடங்கிவிட்டன.//

எதிர்பார்த்த சரியான conclusion.

நல்ல கவிதைகளும் தீண்டதகாதவை என்று எண்ணிக்கொண்டிருந்த என்னை போன்றவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தியது இந்த கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை.

உங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக..

எங்களுக்கு இது போன்ற மற்றுமொரு புதிய ஆய்வு தொடரை தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அல்லாஹ் போதுமானவன்.

Unknown said...

எந்த ஓர் இலக்கியமும் நிறைவுறுவதே இல்லை. ஏறிய இதயத்தில் அது பயணப்படத் தொடங்கிவிடும். அந்தப் பயணம் எப்போதும் தொடரும் தொடரும் தொடர்ந்த வண்ணமாகத்தான் இருக்கும்.

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

தொடரின் இடை இடையே வந்த
சந்தேக கணைகளை பொறுமையுடன்
தனது கருத்தினை ஆதாரத்தோடு
எடுத்து வைத்தஅறிஞர் அகமது காக்காவின்
எழுத்து பணி தொடர வேண்டும் ..

அன்புடன் மலிக்கா said...

கவிதை என்பது பொய்யால் நிறைந்தது; கவிஞன் பொய்யுரைப்பவன்” என்றெல்லாம் கருத்துக் கொள்ளாமல், கவிதைகள் மூலமும் உண்மைகளை உணர்த்தலாம்; மனித நேயத்தை மலரச் செய்யலாம்; மார்க்கத்தை எடுத்துரைக்கலாம் என்றே நம்பவேண்டும்.
///

மாசாஅல்லாஹ் மிக மிக தெளிவான கட்டுரை. என்னையும் சிலர் ஏன் கவிதை எழுதுகிறாய் இஸ்லாத்திற்க்கு புறம்பான செயல் கவிதை எழுதுவது கேவலம் என்றெல்லாம் சொன்னார்கள்..

இறையச்சத்தை மனதிலும், இறைகட்டளையை எண்ணத்திலும் கொண்டு எழுத ஆரம்பித்து எழுதும் எனக்குள் இவைகலெல்லாம் பெரிதாக தெரியவில்லை.. இறை நிராகரிப்பு ஆபாசம். இவைகளை களைந்து எழுத நினைக்கும் ஒவ்வொரு எழுத்தும் சிறக்கும் எனபது என்கருத்து..

அகமது காக்காவின் இந்த ஆராய்வுகட்டுரை இன்னும் எழுதவே தூண்டுகிறது அல்ஹம்துலில்லாஹ்.. அவனே சகலத்தையும் படைத்தான் மனிதருக்கு அறிவையும் கற்பித்தான் .அவனே அறிந்தவன் அவனே தூய்மையானவன்..

மிக்க நன்றி காக்கா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு