Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 20 21

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2012 | , ,

‘தீவான்’ (ديوان) என்ற சொல் அரபியில் தற்காலத்தில் அலுவலகம், பணியிடம், அரசாணை போன்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டாலும், அரபி இலக்கியத்தில் பொதுவாகத் ‘தொகுப்பு’ என்ற பொருளில் ஆகி, கவிதைகளின் தொகுப்புக்கே குறிப்பாக்கப் பெற்று விளங்குகின்றது.  இவ்வடிப்படையில், ‘தீவான்’ எனும் கவிதைத் தொகுப்புகள் அரபி இலக்கியத்தில் பலவற்றைக் காண்கின்றோம்.

‘தீவான் அலி’, ‘தீவான் ஹஸ்ஸான்’, தீவான் இப்னுல் முபாரக்’, தீவான் அஷ்ஷாஃபிஈ’ முதலான தீவான்கள் அவற்றுள் குறிப்பிடத் தக்கவை. அவற்றில் பொதிந்துள்ள சிந்தனைக் கருவூலங்கள், அவற்றை ஆழ்ந்து படிப்போரை அறிவுச் செல்வர்களாக ஆக்குபவை என்பது மிகைக் கூற்றன்று.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும், அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் அன்புக் கணவருமான அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் நபிவரலாற்றில் எத்தகைய உயர்விடத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதற்கான ஏராளமான சான்றுகள் நம்பத் தக்க நபிமொழிகள் மூலம் உண்மைப் படுத்தப்பட்டுள்ளன.



இளமையில் இஸ்லாத்தை ஏற்று, வாலிபப் பருவத்தில் போர்க்களங்களில் தம் வீரத்தை உண்மைப்படுத்தி, ‘நுபுவ்வத்’ எனும் நபித்துவக் கல்வியை நபியவர்களின் அண்மையில் இருந்து கற்று, அறிவுச் செல்வராகப் புகழ் பெற்றுத் திகழ்ந்த அலீ (ரலி) அவர்களைப் பார்த்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
أنت مني وانا منك
(நீர் என்னைச் சேர்ந்தவராவீர்; நான் உம்மைச் சேர்ந்தவனாவேன்)
(சான்று: சஹீஹுல் புகாரீ – 3700)

அலீ என்னும் அறிவுச் செல்வரிடமிருந்து, அவரின் அறிவுப் பெட்டகத்திலிருந்து கவிதைகள் ஊற்றெடுத்து வரவர, அவரின் தோழர்கள் அவற்றைப் பதிவு செய்தனர். அவற்றின் தொகுப்புதான் ‘தீவான் அலீ’ எனும் கவிக்கோவையாகும். அந்தப் பெருங்கடலில் மூழ்கி எடுத்த முத்துப் பரல் ஒன்று வாசகர்களின் பார்வைக்கு:

النَفسُ تَبكي عَلى الدُنيا وَقَد عَلِمَت ،  إِنَّ السَلامَةَ فيها تَركُ ما فيها
 إلاالَّتي كانَ قَبلَ المَوتِ بانيها لا دارَ لِلمَرءِ بَعدَ المَوتِ يَسكُنُها،
وَإِن بَناها بَشَرٍّ خابَ بانيها فَإِن بَناها بِخَيرٍ طابَ مَسكَنُها،
 حَتّى سَقاها بِكَأسِ المَوتِ ساقيها أَينَ المُلوكُ الَّتي كانَت مُسَلطَنَةً،
وَدورُنا لِخرابِ الدَهرِ نَبنيها أَموالُنا لِذَوي الميراثِ نَجمَعُها،
أًمسَت خَراباً وَدانَ المَوتُ دانيها كَم مِن مَدائِنَ في الآفاقِ قَد بُنِيَت،
مِنَ المَنيَّةِ آمالٌ تُقَوّيها لِكُلِّ نَفسٍ وَإِن كانَت عَلى وَجَلٍ،
 وَالنَفسُ تَنشُرُها وَالمَوتُ يَطويها فَالمَرءُ يَبسُطُها وَالدَهرُ يَقبُضُها،

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                             இலையே எனக்கோர் உறைவிட மென்றே
                                      ஏங்கித் தவிக்கும் ஆன்மாவே!
                             உலகை விட்டுப் போகும் போதோ
                                      உடைமை எல்லாம் போய்விடுமே
                             பலநாள் சேர்த்த செல்வம் உனக்குப்
                                      பயனில் லாது போய்விடுமே
                             நிலையா யிருக்கும் மறுமை வீட்டை
                                      நினைவில் கொண்டு சீர்படுவாய்!

                             நன்மை களினால் கட்டும் வீடு
                                      நாளை மறுமைக் கருவூலம்
                             புன்மைச் செயலால் நிறைந்த வாழ்வோ
                                      புகுத்தும் நரகப் படுகுழியில்
                             என்னா னார்கள் உலகை ஆண்டோர்
எங்கே போனார் அறிவாயோ?
                             இன்மைக் குவளை வெந்நீர் மாந்தி
                                      இறப்பை அடைந்து போய்விட்டார்!

நமது செல்வம் நம்மோ டிணைந்து
          நம்மைத் தொடர்ந்து வாராமல்
தமதாய்க் கொள்ளக் காத்தே நிற்கும்
          தகுதி பெற்ற உறவோர்க்கே!
மமதை கொண்டு விண்ணை முட்டும்
          மாளிகைப் பேரூர் அமைத்தோர்கள்
திமிரு மடங்கி இறப்பை அணைத்துத்
          தேடிப் போனார் நரகத்தை.

ஆன்மா வெல்லாம் உலகிலி ருந்தே
          அழிந்து போகும் உண்மையினால் 
வான்மழை போன்று மரணம் இறங்கி
          வருமென நம்புக மனிதர்களே!
கான்போல் வளரும் மனித இனத்தைக்
          கட்டிப் பிடிக்கும் இறப்பாலே
ஆன்மா மீண்டும் மறுமை வாழ்வில்
          அளவைப் பெறவே  சென்றுவிடும்.

‘யாக்கையின் நிலையாமை’ பற்றியும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது பற்றியும், ‘தன்வினை தன்னைச் சுற்றும்’ என்பது பற்றியும் அழகுற விளக்கும் அலியாரின் கவிதையும்  நமது சிந்தனைக்கும், அதனைப் பின்தொடரும் நற்செயலுக்கும் உரமூட்டுவதாகும்.

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

21 Responses So Far:

அதிரை சித்திக் said...

அலி (ரலி ) வீரம் மட்டுமின்றி கவி ஞானமும்

நிறைந்த செல்வர் என அறிந்ததில் மகிழ்ச்சி ..,

மறுமையின் பயம் ..,இம்மையில் சுகபோக வாழ்வில்

மூழ்குவது மறுமையின் பயத்தை குறைக்கும் என்பதை

அலி (ரலி)அவர்கள் கவி சுட்டி காட்டுகிறது ...இது போன்ற

கவிதைகள் கவிதைகளின் தொகுப்பு அவசியம் நம் கவிதை

பிரியர்கள் கையில் கிடைத்திட வேண்டும் மாற்றார் சாயம்

பூசப்படாத கவிதை நம் கையில் தவழ்ந்திட வாய்ப்புண்டு

sabeer.abushahruk said...

அரபு மொழியறிவு இல்லாததால் இழக்க இருந்த அருமையான கவிதைகளை அஹ்மது காக்கா அவர்கள் அழகு தமிழில் வாசிக்கத் தருவது நன்றிக்கடன் பட வைக்கிறது.

Ebrahim Ansari said...

//அரபு மொழியறிவு இல்லாததால் இழக்க இருந்த அருமையான கவிதைகளை அஹ்மது காக்கா அவர்கள் அழகு தமிழில் வாசிக்கத் தருவது நன்றிக்கடன் பட வைக்கிறது.//

I STRONGLY SECOND THE VIEW OF MR. SABEER.

அன்புடன் புகாரி said...

>>>>யாக்கையின் நிலையாமை’ பற்றியும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது பற்றியும், ‘தன்வினை தன்னைச் சுற்றும்’ என்பது பற்றியும் அழகுற விளக்கும் அலியாரின் கவிதையும் நமது சிந்தனைக்கும், அதனைப் பின்தொடரும் நற்செயலுக்கும் உரமூட்டுவதாகும்.<<<<

உண்மை. அருமையான அலி ரலி கவிதை அழியாக் கவிதைதான்

sabeer.abushahruk said...

வேண்டுகோள்:

அன்புச் சகோதரர் அஸன் புஹாரி அவர்கள் அதிரை நிருபரில் தனி பதிவாக ஒரு பிரத்யேகமான கவிதை பதிய அ.நி. வாசகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

-இப்படிக்கு,
இருட்டின் ருசி கண்ட வெளிச்சப் பூனை.:)

அன்புடன் புகாரி said...

அன்புச் சகோ கவிஞர் சபீர்,

அனேகமாக அதிரை நிருபரில் நான் இட்ட முதல் மறுமொழி உங்களின் கவிதைக்குத்தான். பாராட்டு வரிகளை மனதிற்குள்ளேயே மறைத்துவைக்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஆகவே நான் செய்யும் முதல் காரியமே நான் ரசித்த ஒவ்வொன்றையும் விட்டுவிடாமல் பாராட்டுவதுதான். இப்போது உங்கள் பாராட்டுக்கு என் நன்றி.

என் தாய் அதிரையில் பிறந்தவர்தான். ஆனால் தந்தை ஒரத்தநாடு. நாம்தான் தாய்வழியை ஓரங்கட்டி அவளுக்கு முகமில்லாமல் செய்துவிடுமோமே?

நான் மிக அதிகமாக செடியங்குளத்தில் குளித்திருக்கிறேன். அப்படி ஒரு தெளிந்த நீர் குளத்தை நான் வேறு எங்கும் கண்டதில்லை. ஆடையை நீருக்குள் நின்றும் யாரும் அவிழ்த்துவிட முடியாது :)

அதிரை நிருபர் வாசகர்களின் சார்பாக வந்த விருப்பம் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் என் கவிதை ஒரு தனிப்பதிவாக வருவது வாசகர்களின் கைகளில் இல்லை நிர்வாகிகளின் கொள்கைகளில் இருக்கிறது :)

நானும் இருட்டின் ருசியைக் கண்டு சிலிர்த்த வெளிச்சப் பூனைதான் சபீர்! நல்ல சொற்பதம் கவிஞனின் பிரத்யேகக் கைவரிசை. அது உங்களிடம் இருக்கிறது. வாழ்க!

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர் கவி.புகாரி,

தங்களின் அன்பிற்கு நன்றி.

தற்போது மூனாறுவில் விடுமுறையைக் கழித்து/களித்து வரும் நெறியாளர் ஊர் வந்ததும் தங்களின் பிரத்யேக பதிவு வேண்டி தனி மடலிடுவார் என நம்புகிறேன்.

அதற்கிடையே, கீழே உள்ளது இவ்வார திண்ணை இதழில் இடம் பெற்றுள்ளது. வாசித்து விமரிசிக்க வேண்டுகிறேன்.

***

காத்திருப்பு:

குறிக்கப்பட்ட
ஒரு நாளை நோக்கிய பயணத்தில்
காலத்தின் சுமையில்
கனம் கூடிப் போவதும்

இருப்பது போலவும்
கிடைக்காமல் போகாதெனவும்
இல்லாமல் இருக்காதெனவும்
கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில்
காலத்தின் இருப்பில்
கவனம் கூடிப் போவதுவும்

இதுவும்
கடந்து போகுமென
இதயம்
கிடந்து துடித்தாலும்
காலத்தின் கடப்பில்
பிடி நழுவிப் போவதுவும்

இதோ
இந்த நொடியில்
தீர்ந்துவிடப் போகிறது
அடுத்தது நாம்தான்
என்கிற
அனுமானங்கள்
அடுத்தடுத்த நிமிடங்களில்
சுமையேற்றி வதைப்பதுவும்

என
நிகழ்காலம்
நிழல்போலத் தெளிவின்றிப் போனதால்
சுவாசிக்கக்கூட
பிரயாசைப் பட வேண்டியிருக்கும்

எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
காத்திருப்பும் கணங்களும்!

-சபீர் அபுஷாருக்

நன்றி: www.thinnai.com

அன்புடன் புகாரி said...

=======
எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
காத்திருப்பும் கணங்களும்!
==========

ஆகா, சகோ சபீர், வெகு அருமை!

எனக்கும் இந்தத் தவிப்பும் துடிப்பும் பழக்கமானதுதான். வளைகுடா நிறையவே தரும். அதை இப்படி உணர்வுகெடாமல் வார்த்தைகளில் இறக்கிவைக்கும் கலை கவிஞனுக்கே உரியது. வாழ்த்துக்கள்.

நானும் காத்திருப்புக் கவிதைகள் எழுதி இருக்கிறேன் :)

அன்புடன் புகாரி

crown said...

காத்திருப்பு:
--------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நாங்களும் காத்திருந்தோம் அதிரை நிருபரின் திண்ணையில் ஆனால் காத்திருப்போ திண்னையில் வந்து காத்திருக்கு!அன்னை தவமாய் பத்து மாதம் காத்திருப்பாள் தான் ஈன்றேடுக்கும் மழலைகாய். நாங்களும் காத்திருக்கிறோம் உங்களின் கவிகுழந்தையின் வரவிற்காய் அது தரும் ஆனந்தம் இப்பவும் , இதிலும் எதிலும் தொடரட்டும் உங்கள் கவிபிரசவிப்பு!

crown said...

குறிக்கப்பட்ட
ஒரு நாளை நோக்கிய பயணத்தில்
காலத்தின் சுமையில்
கனம் கூடிப் போவதும்.
------------------------------------
சரியான பரிதவிப்புத்தான்!!! மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்னும் எதார்த்தம்!அருமை! காத்திருப்பின் மடிவுகள் ஒன்றன் மேல் ஒன்றாகி மடிவு மலைபோல் வளர்ந்து கனமாய் போகும் ஒவ்வொருகண காத்திருப்பிலும்.

crown said...

இருப்பது போலவும்
கிடைக்காமல் போகாதெனவும்
இல்லாமல் இருக்காதெனவும்
கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில்
காலத்தின் இருப்பில்
கவனம் கூடிப் போவதுவும்

இதுவும்
கடந்து போகுமென
இதயம்
கிடந்து துடித்தாலும்
காலத்தின் கடப்பில்
பிடி நழுவிப் போவதுவும்
-------------------------------------------



மருதளிக்கும் மனதின் நிலை அங்கும் இங்கும் தாவும் குரங்கென கொண்டால் ஒன்றில் நிலைத்திருப்பதில்லை, நிலைத்திருப்பதில் பிடித்தம் இல்லை. பிடித்தம் நிலயானதா? சரியானதா? எனும் ஒட்டத்தின் ஒத்திகையிலேயே காலம் கழிகிறது. கவிஞரே வார்த்தைக்கே தினறும் இந்த வார்தையை அதன் வரிசையில் வந்து நிற்க சொன்னால். வார்தைக்குள் வார்த்தை போர்களம் போல் ஆனாலும் அதில் காயப்படாமல், கம்பீரமாய் கவனமாய் வெற்றிபெற்றுச்செல்கிறான் உங்கள் கவிதையான சொல்வீரன்.

crown said...

இதோ
இந்த நொடியில்
தீர்ந்துவிடப் போகிறது
அடுத்தது நாம்தான்
என்கிற
அனுமானங்கள்
அடுத்தடுத்த நிமிடங்களில்
சுமையேற்றி வதைப்பதுவும்
------------------------------------------
உங்களுக்கு தொழுகை வைக்கபடுவதற்கு முன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்,,
என்பதை நினைவுப்படுத்துவதாக அமைகிறது என்பது என் சிந்தையில் வந்த உதயம்.

crown said...

எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
காத்திருப்பும் கணங்களும்!
------------------------------------------------------------------
நிதர்சன உண்மை! காத்திருபின் இருப்பிடத்தை பிடிங்கி கொள்ளவோ, அபகரித்து கொள்ளவோ ஏதும் இல்லைதான்!அதுபோல் கணங்களை நிறுத்திப்பார்க்கும் எந்த மனித சக்தியோ, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கருவிகளும் இல்லை. ஆனாலும் நம்மை நாம் மாற்றி கொள்ள அளவு கோலாகவும், முன்மாதிரியாகவும் இருக்கும் இஸ்லாம்., இறைவேதம், நபி(ஸல்) மொழி! மற்றும் நம் அமல்கள் மருமையின் காத்திருபிற்கு நம்மை இட்டுச்செல்லும் நன்மை செய்யும் பு(பி)றக்காரனிகள்.

Ebrahim Ansari said...

சபீர் அவர்களின் கவிதையும் பின்னூட்டமாக சகோ. புஹாரி மற்றும் தம்பி கிரவுன் ஆகியோர் தந்துள்ளவையும் அழகும் தரமும் சங்கமமாகத் தோன்றுகிறது. தரமான கவிதைகளும், த்ரத்திர்கேற்ற ரசிகர்களும் இந்த தளத்தில் கிடைப்பது ஒரு அபூர்வமாகும். மாஷா அல்லாஹ்.

அதிரை சித்திக் said...

புகாரி அவர்களின் கவிதைக்கு ..

சபீர் அவர்களின் காத்திருப்பு கவிதை.... சுவை சேர்க்கும் கவியாய் இருந்தது

கவியை கவிகொண்டு வரவேற்கும் புதுமை ..,

காத்திருப்பின் மறுபக்கத்தை கிரீடம் விளக்கியது கவிதைக்கு கிரீடம் ..,

கவி பேரரசால் .உண்மை கவிஞர் என்று போற்றப்பட்ட கவிஞர் புகாரி

அவர்களின் கவிதையை படிக்க காத்திருப்பதிலும் சுகம் தான்

1980 களில்உறவினர் மடலுக்காக தபால் காரருக்கு காத்திருப்பதை போல்

காத்திருக்கும் உணர்வு ..கவிதைகளை ஒரு சாரார் புகழவும் மறுசாரார்

தர்க்கம் செய்யவும் நல்ல கருத்தரங்கம் நிகழ வேண்டும் ..கவியுடன்

வாருங்கள் அன்பு கவி புகாரி அவர்களே ..,

Yasir said...

வாருங்கள் அன்பு கவி புகாரி அவர்களே ..,

அன்புடன் புகாரி said...

அதிரை நிருபரில் வளரும் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.
அனைத்துச் சகோக்களுக்கும் நன்றி.

எண்ணங்களை எடுத்துவைத்து
உள்ளங்களைப் பகிந்துகொண்டு
உயர்வோம் அழியாத உறவுகளாய்

அன்புடன் புகாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்று மதியம் குன்னூரில் ஓரு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய வந்த த.மு.மு.க. சகோதரர் ஒருவரை சந்தித்தேன், அவரோடு குசலம் விசாரித்து விட்டு, அவர் இறச்சி கடை வைத்திருப்பதாக சொல்லி அறிமுகங்கள் தெளிவானதும்... அடுத்து கேட்டார்

"அதிரை அஹ்மது" அவரகளை உங்களுத் தெரியுமா ?

நான் "ஓ தெரியுமே!?" என்றேன்...

"பேறுபெற்ற பெண்மனி என்ற புத்தகம் எழுதியவர் உங்களூர்காரர்தானே என்றார்"

நான் "ஆமாங்க.. அவர்களேதான் அதன் தொடர் அதிரைநிருபரில் வருவதையும் சொன்னேன், அதோடு கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை, மற்றும் சகோதர வலைபூவில் வரும் "நல்ல தமிழ் எழுதுவோம்" தொடர் இவைகளை பற்றியும் சொன்னேன்.... "

அதோடு அன்று மாலை மீண்டும் அவரை சந்தித்தேன், கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை முதல் 4 பாகம் வாசித்து விட்டதாக சொன்னவர்...

"இவ்வளவு தெளிவாக ஆய்வு செய்துவரும் அறிஞரை அருகில் வைத்திருக்கிறீர்கள் நன்றாக பயன்படுத்துங்கள் என்றார்"

அவரிடம் உங்களின் கருத்துக்களை நீங்களே பதியலாமே என்றேன்...

சந்தோஷமாக இருந்தது...

சரி அடுத்ததாக,

இருட்டை வெளிச்சம் அனைக்கிறதா ?
வெளிச்சத்தை இருட்டு அனைக்கிறதா ?

என்று கவிக் கூட்டம் போட்டு சொல்லுங்க !

அதற்கு முன்னர்,

நான் வரவேற்பதற்கு எப்போதுமே வாசலிலேயே நிற்பவன்..

கவிக் காக்கா வைத்த வேண்டுகோலை நானும் வழிமொழிகிறேன்....

வாருங்கள் சகோ.அசன் புகாரி அவர்களே !

Noor Mohamed said...

//"இவ்வளவு தெளிவாக ஆய்வு செய்துவரும் அறிஞரை அருகில் வைத்திருக்கிறீர்கள் நன்றாக பயன்படுத்துங்கள் என்றார்"//

அஹமது காக்கா அவர்களைப் பற்றியும் அவர்களின் கவிதைத் திறமையையும் 35 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரிலுள்ள பள்ளிவாயிலில் இமாமாக பணிபுரிந்த வேலூரைச் சார்ந்த இமாம் அவர்கள் எங்களிடம் புகழ்ந்து கூறியதோடு, அஹமது காக்கா அவர்களின் சொந்தக்காரர்கள் என்பதால் எங்களை நன்கு உபசரித்தார் என்பதை இங்கே கூறிக் கொள்கிறேன்.

அன்புடன் புகாரி said...

என்னை அதிரை நிருபருக்குள் இழுத்துவந்த மந்திரத் தலைப்பு ”கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை” என்பதுதான்.

இஸ்லாமில் கவிதை பற்றி எனக்கு எட்டிய கண்ணோட்டத்தில் நான் என் ஆறாவது கவிதை நூலின் முன்னுரையில் சில வரிகள் எழுதி இருக்கிறேன்.

இங்கே அதிரை நிருபரில் யார் என்ன சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கலாமே என்ற ஒரு சாதாரண எதிர் பார்ப்பில்தான் வந்தேன். ஆனால் இங்கு வந்து மூத்த சகோ கவிஞர் அஹ்மது அவர்களின் ஆய்வுக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கியதுமே என் இதயம் முழுவதாலும் நேசிக்கத் தொடங்கிவிட்டேன். என் உள்ளத்தில் உற்சாக நட்சத்திரங்கள் கோடி கோடியாய்ப் பூக்கத் தொடங்கின.

பல காலம் நான் பல மத முரடர்களால் பலமாகக் காயப்படுத்தப் பட்டிருக்கிறேன். போகின்ற போக்கில் எதைப்பற்றியும் யோசிக்காமல் வசைச் சொல் வீசிவிட்டுப் போய்விடும் அந்த நல்லவர்களுக்கு நல்லபுத்தி தருவதாக அமைந்திருக்கும் மூத்தசகோ அஹ்மது அவர்களின் இந்தத் தொடரை நான் வாழ்நாளெல்லாம் பாராட்டுவேன்.

என் தாய், தம்பி, தாரம், நட்புவட்டம் என்று அனைவருக்கும் இந்தத் தொடரை நான் பரிந்துரை செய்தவண்ணமாய்த்தான் இருக்கிறேன்.

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு