Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாடு கடத்தப் பட்ட நல்ல முஸ்லிம் வீரர் ஷேக் உசேன் 23

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2013 | , ,

தொடர் - 10

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுத நினைக்கும் யாவரும் தமிழகத்தின் பங்களிப்பை தள்ளுபடி செய்ய இயலாது. அதிலும் குறிப்பாக, பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் தமிழக வரலாறு, பலரின் இரத்தத்தால் தோய்க்கப்பட்டு தன்னலமற்ற தியாகத்தால் அலங்கரிக்கப் பட்டு எழுதப்பட்டது. இப்படி சிந்தப்பட்ட இரத்தத்திலும் தியாகத்திலும் முஸ்லிம்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதுவரை வெளியில் அவ்வளவாக அறியப்படாத , சொல்லப் படாத ஒரு வீரமகனின் கண்ணீர்க் கதைமூலம் இங்கே இந்த வாரம் பகிர விரும்புகிறேன். இது கதையல்ல வரலாறுதான் ஆனால் யாரைப் பற்றிப் பேசுகிறோமோ அவருடைய கதை; நமக்கோ வரலாறு . ஆனால் மறைக்கப் பட்ட வரலாறு. மறைத்ததை துரத்திப் பிடித்து வழங்குவது எழுதப்படும் வார்த்தைகளே கண்ணீர் சிந்தும் வரலாறு.

ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தமிழக சுதந்திரப் போராட்ட வீரத்தலைவர்களில் முக்கிய இடம் வகிப்பவர்கள் ‘துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தை’ என்று முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனும், மருது சகோதரர்கள் என்று புகழப்பட்ட சிவகங்கைச் சீமையை ஆண்ட சின்ன மருதும் பெரிய மருதும் ஆவார்கள். 

கயத்தாறில் கட்டட பொம்மன் தூக்கிலப் பட்டார். ஆனால் மருது சகோதரர்கள் அந்நிய ஆட்சியால் தண்டிக்கப் பட்டது ஒரு ஒட்டுமொத்த அந்நிய ஆட்சியின் அத்துமீறலும் அநியாயமும் அழித்தொழிப்பும் ஆகும். தங்களின் ஒட்டு மொத்தக் குடும்பம், தளபதிகள், போர் வீரர்கள் உட்பட ஒரே நாளில் மக்களின் முன்பாக ஐநூறு பேர்கள் வரிசையாக தூக்கிலப் பட்டு ஒவ்வொரு உயிரற்ற பிணங்களும் வரிசையாக தொங்கிய காட்சியை நாம் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. ஆனால் அந்தக் கொடிய காட்சியைக் கண்டு ரசித்து கை தட்டி ரசித்தவர்கள் ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு ‘ என்று போதித்த பரம்பரையில் வந்தவர்கள். இதைப் பற்றி கர்னல் வேல்ஸ் தனது “ இராணுவ நினைவுகள் “ என்கிற நூலில் விரிவாக எழுதி இருக்கிறார். 

சிவகங்கையின் அருகில் திருப்பத்தூர் என்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க வீரமிக்க மறவர் குலம் வாழ்ந்த ஊர் உள்ளது. அந்த திருப்பத்தூர் கோட்டையின் வாயிலில் அன்று துடிக்கும் நெஞ்சத்துடனும் விழிகளில் கண்ணீர்க் கோலத்துடனும் தங்களின் உதடுகளில் பாவிகள் பறப்பான் புலம்பும் வார்த்தைகளுடன் மக்கள் திரண்டனர். அன்று அந்தக் கோட்டை வாயிலில் மக்கள் திரளக் காரணம் அங்கு ஒன்றும் மஞ்சு விரட்டோ ஜல்லிக்கட்டோ சேவல் சண்டையோ கிடாய்கள் முட்டிக் கொள்ளும் வீர விளையாட்டோ நடைபெறவில்லை. மாறாக, அன்று அந்தக் கோட்டை வாயிலில் ஒரு கொடுமை அரங்கேற இருந்தது. 

ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை ஒவ்வொருவராகத் தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.

முதலில் அஞ்சாநெஞ்சன் சின்ன மருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். கையறு நிலையில் கதறி அழுவதைத் தவிர கூடி நின்ற அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை. சுற்றிலும் துப்பாக்கிகளுடன் அன்னியக் காவலர்களும் இந்நாட்டு ஏவலர்களும் நின்று கொண்டிருந்தனர்.

கடைசியாக சின்ன மருதுவின் இளையமகன் துரைச்சாமியை தூக்கிலிடும் முறை வந்தபோது அவர் பதினைந்து வயதே நிரம்பிய பாலகன் என்பதால். வயது குறைவாக இருந்ததைக் காரணம் காட்டி அவனை மட்டும் ஆங்கில அரசு தூக்கிலிடவில்லை. ஆங்கிலேயர் மனதில் அவருக்காக வேறொரு திட்டம் இருந்தது. அதன்படி அச்சிறுவன் துரைச்சாமியின் உடல் முழுதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டி விட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியை அந்த சிறுவனைக் காண வைத்தது வரலாற்றுக் கொடுமை. துரைச்சாமியோடு சேர்த்து இன்னொரு மாவீரனையும் உடல் முழுதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இரும்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டிவிட்டிருந்தார்கள்.இருவரையும் ஒரே சங்கிலியால் பிணைத்துக் கட்டி இருந்தது உயர்ந்தபட்ச சோகம். 

அப்படி துரைச்சாமியுடன் ஒரே இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப் பட்டவர்தான் இந்தப் பதிவின் கதாநாயகனான அந்த முஸ்லிம் மாவீரன். அவனை விட்டு வைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராகவளர்த்து உருவாக்கி விடுவான் என்ற பயம் பறங்கியருக்கு. அந்த மாவீரனையும் சேர்த்து 72 பேரை சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. மொத்தம் 72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டுமே காலில் இரும்பு குண்டுகளைப் பிணைத்திருந்தார்கள்.

இப்படி மருது சகோதர்களின் பதினைந்து வயதே ஆகிய வாரிசாகிய துரைச்சாமியுடன் ஒரே இரும்புச் சங்கிலியால் பிணைக்கபப்ட்டு நாடுகடத்த உத்தரவிடப் பட்ட அந்த மாவீரன் தான் இச்சப்பட்டி அமில்தார் ஷேக் உசேன் ஆவார். மருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் எள் என்றால் எண்ணெய் கொண்டுவரும் விவேகமும் வீரமும் மிகுந்த முதன்மையானவர்.

நாட்டுப்பற்றுள்ள முஸ்லிம் வீரராக சின்னமருதுவின் படைத்தளபதி ஷேக் உசேன் விளங்கினார். புலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரத்தலைவர்களின் ஆட்சி காலங்களில் முஸ்லிம்கள், படைத்தளபதியாகவும் அரசிலும் போராட்டங்களிலும் போர்களிலும் முக்கியப் பொறுப்புகளையும் தியாகங்களையும் செய்தார்கள் என்று கட்டபொம்மன் தொடர்புடைய நாட்டுப் புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. 

எடுத்துக் காட்டாக, கட்டபொம்மன் , இராமநாத புரத்துக்குச் சென்று ஜாக்சன் துரையை சந்திக்கச்சென்று “வானம் பொழிகிறது பூமி விளைகிறது . ஏன் கேட்கிறாய் கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிரம்பக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை எடுத்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அல்லது அங்குக் கொஞ்சி விளையாடும் என் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா? அல்லது மாமனா மச்சானா? மானங்கேட்டவனே" என்று வீர முழக்கம் செய்த வேளையில் கட்டபொம்மனோடு கூடவே அந்தப் படையில் சென்றவர்களின் பட்டியல் பற்றிய பாட்டை வீரபாண்டிய கட்ட பொம்மு கதைப் பாடல் என்கிற தனது நூலில் பேராசிரியர் வானமாமலை குறிப்பிடுகிறார். அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள முஸ்லிம் வீரராக சின்ன மருதுவின் படைத்தளபதி ஷேக் உசேன் குறிப்பிடப் படுகிறார். அந்தப் பட்டியல் உள்ள நாட்டுப் புறப் பாட்டு 

“ மம்மது தம்பியும் முகம்மது தம்பியும் 
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான் 
தர்ம குணவான இபுராமு சாகிபும் 
தம்பி இசுமாலு ராவுத்தனும்" – என்று பேராசிரியர் வானமாமலை கூறுகிறார். 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த முதல் கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. 

மலபார் கேரளவர்மா, 
தென் தமிழகத்தில் மருது பாண்டியர், 
திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan), 
மராத்தியில் ஷிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), 
விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர்,
திண்டுக்கல் பாளையக்காரர் 

போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர். இதுவே முதல் அணி . இன்றைய அரசியலில் பேசப்படுவது போன்ற மூன்றாம் அணியல்ல. 

இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் என்பவர் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். அந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 

4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார். ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.

அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் கனீஷ்கான் உடைய நம்பிக்கைக்குரிய முஸ்லிம் வீரர்களாவர். இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர் . 

இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் கோவையைப் போலவே திண்டுக்கல்லிலும் ஒரு புரட்சிப் படையை அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மருதுபாண்டியர் தலைமையில், சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னை தானாக முன்வந்து பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த ஷேக் உசேன்தான். 

வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல.
அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகம், நாட்டுப்பற்று, நிர்வாகத்திறன் என்று சகல விஷயங்களிலும் திறமை வேண்டும். அந்தச் செயலை செய்து தன்னை சிறந்த முஸ்லிம் தமிழ்ப் போராளியாக காட்டிக்கொண்டு நாமெல்லாம் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் ஷேக் உசேன் ஆவார். 

சின்னமருது, பல வெற்றிகளைக் குவிக்க இரும்புக்கோட்டை போல் பக்கபலமாக இருந்ததால் ஷேக் உசேன் மேல் வெள்ளையருக்குக் கடும் கோபம். கடைசியாக நடந்த காளையார்கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு ஷேக் உசேன் போன்ற சின்னமருதுவின் படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினார்கள் பரங்கியர்கள். அதனால் போர் முடிந்ததும் ஷேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் , மருது சகோதர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உட்பட்ட ஐநூறு பேர்கள் தூக்கிலிடப் பட்டதும் மருது குடும்பத்தின் வாரிசான துரைச்சாமியுடன் கட்டி இணைக்கப்பட்டு மலேசியாவிற்குச் சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே ஷேக் உசேனையும் சேர்த்து நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.

இரும்பு குண்டுகள் பிணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும் தூத்துக்குடியில் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்குத் தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும் 15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் ஷேக் உசேன் . துரைச்சாமிக்கு முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்று உறுதி பூண்டார். கடலிலேயே நாட்கள் பல கடந்தன.

தூத்துக்குடியிலிருந்து, பினாங்கு செல்ல, அன்று ஆறு வார கால கப்பல் பயணம். 

72 கைதிகள், 20 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பலர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள் ஆகியன, "அட்மிரல் நெல்சன்' என்ற கப்பலில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல், 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு, பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்டது.

விடுதலை வீரர்களை, இருவர் இருவராக இணைத்து, கைகளில் விலங்குகளைப் பூட்டி, கப்பலில் ஏற்றினர். டிச., 11, 1902ல், கப்பல் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டது.

வழக்கமாக, ஆறு வார காலப் பயணத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி, (5,368படி) பருப்பு, (371 படி) நெய், (421 பலம்) உப்பு, (210 பலம்) ரொட்டி, (5 மூடை) புளி, (3,375 பலம்) கருப்பட்டி, (750) கோழி, (1,100) செம்மறியாடு, (10)குடிநீர் அனைத்தும், தீர்ந்து விட்டன.

பசியிலும், தாகத்திலும் கைதிகள் புழுவாகத் துடித்தனர். கைதிகளில் மூவர், பாஞ்சாலங்குறிச்சி சின்ன பிச்சைத் தேவர், ஆதனூர் சுப்பிரமணிய நாயக்கர், விருப் பாட்சி அப்பா நாயக்கர் ஆகிய மூவரும், கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர்.

கப்பல், 75 நாட்களுக்கு பின், பினாங்கை அடைந்து நங்கூரமிட்டது. கப்பலில் உள்ள கைதிகளை, கரை இறக்குவதற்கான அனுமதி கோரிய கப்பல் தளபதியின் கடிதத்தை தூதர்கள், பினாங்குத் தீவின் கவர்னருக்கு எடுத்துச் சென்றனர்.அங்குள்ள,காரன்வாலிஸ் கோட்டைக்குள் இத்தனை கைதிகளையும் வைப்பதற்கு இடமில்லை என்று கூறப்பட்டது. அதனால், கோட்டைக்கு வெளியே, ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அதன் பின் கைதிகளை கரை இறக்கினர்.

(பார்வை : எஸ்.எம்.கமால் எழுதிய, "மாவீரர் மருது பாண்டியர்!' ).

ஷேக் உசேன் , துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்தத் தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுவார்கள் என்றே தெரியாது.

இங்கே, இன்னொரு வரலாற்று வடுவைக் குறிப்பிட விரும்புகிறேன். மாவீரன் ஷேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேர்களின் உடல் முழுதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருந்ததால் , இவர்கள் நடக்கும்போது ‘கிளிங்! கிளிங்!’ என்ற சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் , ‘கிளிங் கிளிங்’ என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே பினாங்கில் உள்ளோர் அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

ஷேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்ததால், அவரால் சிறிதுதூரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்குமேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.

எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவுகூட கிடைக்காமல் கைகால்களில் இரும்புச் சங்கிளிகளுடன் காலம் தள்ளியது கொடுமையிலும் கொடுமை. இந்தக் கொடுமையை இந்த நாட்டுக்காக இன்முகத்துடன் தாங்கியவன் ஒரு முஸ்லிம் . 

ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க, பினாங்குத் தீவிற்கு வந்திருந்தான்.

உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்கச் சொன்னார்கள். காலில் உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

நீண்ட மௌனத்திற்குப்பிறகு ஷேக் உசேன் , ‘‘என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர, அந்தச் செயலை மட்டும் செய்யமாட்டேன்’’ என்று வீராவேசமாகப் பேசினார். 

ஆனால் துரைச்சாமி, ‘‘நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை என் தாய் நாட்டிற்குத் தெரியப் படுத்துங்கள்’’ என்று ஒரு மனு கொடுத்தார் அதுவும் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் ஷேக் உசேனின் உயிர் அந்தப் பினாங்கு மண்ணில் ஓசையின்றி அடங்கியது.

இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை, ‘‘எனது இராணுவ நினைவுகள்’’ என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான் உலகிற்கே தெரியும். இவ்வாறு, தமிழ்நாட்டில் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய போராளிகளில் முஸ்லிம்கள் முதன்மையானவர்களாய் திகழ்ந்தனர் என்பதே வரலாறு. ஆனால் இத்தகைய வீர வரலாறுகள் விதைவிட்ட நேரத்தில் களைகளாய்த் தோன்றிய காவிக் கூட்டத்தினர் காட்டிக் கொடுத்தே காலம் கடத்திவிட்டு இன்று பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு கருடா சவுக்கியமா என்று முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்துக் கேட்கிறது. இதுவே வியப்பின் சரித்திரக் குறியீடு ; அல்ல ; அல்ல தரித்திரக் குறியீடு. 
இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 
இபுராஹீம் அன்சாரி

எழுத உதவியவை: 
Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 – இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் ஷேக் உசேன் உடைய பெயர் இடம் பெற்றுள்ளது. பார்வை:மேற்படி பக்கம்.45.)
K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803.
Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London).

23 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம் நாட்டுத் தமிழ்த் தியாகி சேக் உசேன் அவர்களின் அரிய தேசப்பற்று தாங்கள் சொல்லி அறிய வேண்டிய நிலைக்கு ஆக்கிவிட்டனர் நம் நாட்டு வரலாற்று கள்ளர்கள்!

இந்த கள்ளர்களை களையெடுத்து உண்மை மறைக்கப்பட நம் முன்னோர்களின் படிப்பறியாமையும் முக்கிய காரணமா காக்கா?

படிப்புக்கு தடை போட நம்மவர்கள்தான் காரணமா அல்லது அதிலும் நம்மவர்களை வைத்தே அன்னியர்களின் மூலம் காவியின் சதியும் இருக்குமா காக்கா?

அரிய வரலாறு தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Ebrahim Ansari said...

தம்பி ஜகபர் அலி அவர்களின் முதல் பின்னூட்டத்துக்கு நன்றி.

//இந்த கள்ளர்களை களையெடுத்து உண்மை மறைக்கப்பட நம் முன்னோர்களின் படிப்பறியாமையும் முக்கிய காரணமா காக்கா?//

நிச்சயமாக அப்படித்தான் நான் நினைக்கிறேன். அந்தக் காலங்களில் ஒரு ஆறாவது ஏழாவது படித்தாலே எங்காவது அகமது கம்பெனியில் அல்லது நெய்னா கம்பெனியில் வேலை வாங்கிக் கொண்டு படிப்பை நிறுத்திவிட்டு கிளம்பிவிடுவார்கள்.

உள்ளூரில் பள்ளி கல்லூரி இருந்தாலும் நமது ஊர்க காரர்களின் படிக்கும் ஆர்வம குறைவாகவே இருந்தது என்பது ஒரு பக்கம்.

படித்தவர்கள் அரசுப் பணிக்கு செல்ல விரும்பாமல் அயல்நாடுகளைத் தேடி படித்த படிப்புக்கு தொடர்பில்லாத பணிகளில் சேர்ந்து வேலை செய்வது ஒரு பக்கம்.

நம்முடைய கல்வி அறிவை நாம் பெருக்கிக் கொள்ள பெரும் தடைக் கல்லாக நின்றது நமது ஊரில் இன்றும் நிலவி வரும் சமூகப் பழக்கம் - சகோதரிகளுக்கு வீடு கொடுக்க வேண்டுமென்று படித்துக் கொண்டு இருப்பவர்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சம்பாதிக்க அல்லது குடும்பச் சுமையைத் தாங்க கிளம்பிவிட்டதும் காரணமென்று நினைக்கிறேன்.

நமது ஊர் ஒரு உதாரணம்தான் ஆனால் சமுதாயத்திலேயே இந்த மனப் பான்மைதான் நிலவுகிறது.

நமது ஊரில் கல்லூரி இருக்கிறது. அதுவும் மாவட்டத்திலேயே பழமையான கல்லூரி. ஆனால் நமது ஊரைச்சேர்ந்த பேராசிரியர்கள் எத்தனை பேர்கள இங்கு பணி ஆற்றுகிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.

நமது கல்லூரியில் படித்த பல வெளியூர்க்காரர்கள் இன்று புகழ்வாய்ந்த மருத்துவர்களாக , வக்கீல்களாக, நீதிபதிகளாக , அரசு மற்றும் வங்கித்துறை அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். நாமோ ?????????????

கல்லூரி மற்றும் பள்ளியில் வழங்கப் படும் பல இலட்சக் கணக்கான ரூபாய் சம்பளத்தில் ஐந்து சதவீதம் கூட நமது ஊர்க்காரர்கள் பெருவதலல. நம்மை நாம் இப்படிப்பட்ட பணிகளுக்கு தகுதி உடையவர்களாக நாம் ஆக்கிக் கொள்வதில்லை.

இந்தக் குற்றச் சாட்டின் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப் பட்டால் இதில் என் பெயரும் உங்கள் பெயரும் இந்தத் தளத்தில் பதியும் அல்லது கருத்தாடல் செய்யும் பலரின் பெயரும் இடம் பெறும்.

Unknown said...

தியாகி ஷேக் உசேனின் வரலாற்றை இந்த காவி உலகம் கண்டுகொள்ளும் என்றெல்லாம் இந்திய நாட்டில் இருந்து கொண்டு நினைக்க முடியாது.

காட்டிக்கொடுத்தவனுக்கும், போலி நாடகத்தை அரங்கேற்றுபவர்களுக்கும் துதி பாடுவதில் காலத்தை கழிப்பவர்களுக்கும் உண்மை தியாகிகளின் ரத்த சரித்திரம் எங்கே தெரியப்போகின்றது ? அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் தியாகம் இவர்களின் நினைவினில் வந்து போக வாய்ப்பே இல்லை.

உண்மை வரலாறு தொடரட்டும்.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

போர்களத்தில் இருந்து கொண்டு தளபதி ஆற்றும் வீர உரைக்குச் சமம் ! உங்களின் இந்தப் பதிவு !

கலங்க வைத்து விட்டது !

காக்கா, உங்களின் எழுத்து நடை ஏதோ எங்கள் கால்களில் போட்ட விலங்கு போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது !

نتائج الاعداية بسوريا said...

கப்பலில் பயணத்திற்காக எடுத்துச்செல்லப்பட்ட உணவுகளின் பட்டியல் முதற்கொண்டு தாங்கள் துல்லியமாக எடுத்து சொல்கின்ற விதம் உண்மையிலேயே தங்களின் முயற்சி வியக்க வைக்கின்றது காக்கா.

அந்தக்கால தண்டனைகளின் தன்மைபற்றி இதுவரை நாங்கள் அறியாதவைஎல்லாம் தங்களின் ஆக்கத்தின் மூலம் எங்களுக்கும் தெரிய வருவது, ஏதோ 200 அல்லாத 300 ஆண்டுகளுக்கு முன்புள்ள வாழ்க்கைக்கே எங்களை எடுத்து செல்வது போன்ற உணர்வை தங்களின் எழுத்தில் கொண்டு வருகின்றீர்கள்.

பள்ளியில் படிக்கும் காலங்களில்தான் எங்களுக்கு உண்மை வரலாறு படிக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நீங்களாவது உண்மையை எடுத்து அக்கு வேறு ஆணிவேராக ஓங்கி சொல்லி வருவது தங்களின் சிந்தனைக்கும், நல்ல தொரு முயச்சிக்கும் பலனாக அமையட்டும்.

அபு ஆசிப்.

Anonymous said...

கல்வியில் நம்மை நாமே பின் நிறுத்திக் கொண்டதால். எல்லாத் துறையிலும் நாம் ஒதுக்கப் பட்டோம். ஒடுக்கப்பட்டோம்.

நமது வரலாறுகளை நாமே அறியாமல் போனோம். அதனால்முழு பூசனிக்காயையும் சோற்றில் மறைத்தார்கள்.

கல்விக் கண் இல்லாததால் பூசணிக்காய் கண்ணிலும் எட்டவில்லை !

கையிலும் தொட்டதில்லை! நாவிலும் பட்டதில்லை!

// படித்து விட்டு அஹமத் கம்பனியில் வேலை செய்தாலும்//

''உங்கள் பாட்டனார் எங்க அப்பாட்டேதான் இ'ருந்தாங்கோ''' என்று இன்னும் நூறு வருசத்துக்கு பிறகும் சொல்லிக் கொண்டே இருப்பாங்களே!

S. முஹம்மது.பாரூக்.அதிராம்பட்டினம்

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

இச்சப்பட்டி அமில்தார் ஷேக் உசேன்::::

இவரின் வீர வரலாறை இது வரை படித்ததில்லை. காவிக் கயவர்கள் உண்மைகளை மறைக்கவே கல்வித்துறையில் ஊடுருவி விஷத்தை வளர்த்து வருகிறார்கள்.

நாட்டை காட்டிக் கொடுத்த கயவர்கள் கையிலேயே நாட்டின் ஆட்சிகள்! (திருடனின் கையில் திருட்டை ஒழிக்க அதிகாரம் கொடுத்தது போல்).

சுதந்திரம் , தியாகம், வீரம் என்றால் என்ன விலை என்று கேட்கும் கயவர்கள் வாழும் நாட்டில் - முஸ்லிம்களின் தியாக வரலாறு இந்திய மக்கள் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்.

தங்களின் சிறந்த பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும் இ.அ. காக்கா

தங்களின் உயர்வான பதிலுக்கு நன்றி.

ஆக அரசுத் துறை என்பது என்னவோ அவங்களுக்கு தான் லாயக்கு என அன்று கருதியதால் இன்று நமது நிலை இந்த அவலத்தில் இருக்கிறது.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வரலாற்று ஏடுகள் இவ்வொன்றாக தங்களின் தயவால் எங்களுக்கு எடுத்துக் கான்பிக்கப்பட்டுவரும் இந்தத் தொடர் சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறதோ இல்லையோ, சிறந்த, உபயோகமான கல்வி விழிப்புணர்வை நேரிடையாக வலியுறுத்துகிறது.

புறக்கணிக்கப்பட்ட இஸ்லாமிய வீரர்களின் வரிசை நீண்டுகொண்டே போவதைப்பார்த்தால் இத்தனை காலம் படித்து வந்ததெல்லாம் சதி என்பது விளங்குகிறது.

எம் ஹெச் ஜே சொல்வதுபோல் நம்மாட்கள் படித்திருந்தால் இந்த நிலைமை நமக்கு நேர்ந்திருக்காது.

இப்போதாவது தங்கள் உழைப்பால் துலங்கட்டும் மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வரலாற்று ஏடுகள் இவ்வொன்றாக தங்களின் தயவால் எங்களுக்கு எடுத்துக் கான்பிக்கப்பட்டுவரும் இந்தத் தொடர் சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறதோ இல்லையோ, சிறந்த, உபயோகமான கல்வி விழிப்புணர்வை நேரிடையாக வலியுறுத்துகிறது.

புறக்கணிக்கப்பட்ட இஸ்லாமிய வீரர்களின் வரிசை நீண்டுகொண்டே போவதைப்பார்த்தால் இத்தனை காலம் படித்து வந்ததெல்லாம் சதி என்பது விளங்குகிறது.

எம் ஹெச் ஜே சொல்வதுபோல் நம்மாட்கள் படித்திருந்தால் இந்த நிலைமை நமக்கு நேர்ந்திருக்காது.

இப்போதாவது தங்கள் உழைப்பால் துலங்கட்டும் மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

ZAKIR HUSSAIN said...

இவ்வளவு விசயமும் புதைத்ததை எடுக்கும் புதையல் தேடும் முயற்சியில் எல்லாவற்றிலும் வெற்றி கண்டுவிட்டீர்கள்.

மறுபடியும் சொல்கிறேன் இது தொடர் எழுதுவதுடன் நிற்கக்கூடாது.


ZAKIR HUSSAIN said...

Type in Google Image as " Fort Cornwallis" ...இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள அந்த இடம் பலர் எடுத்த போட்டோவுடன் பதிவில் இருக்கிறது. பினாங்கு போகும்போது அந்த கடலோரக்காற்றுக்கு மயங்கி அங்கே அருகில் உள்ள கடற்கரையின் சிமென்ட் தடுப்பில் உட்காராமல் வந்ததில்லை. அந்த கோட்டைக்குள் இத்தனை சோகம் இருந்திருக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது.

ZAKIR HUSSAIN said...

Type in Google image as "kapitan keling mosque"...பினாங்கில் இந்த பள்ளிவாசலில் தொழாமல் வந்தது மிகக்குறைவு. எனக்கு மிகவும் பிடித்த அந்த பள்ளியின் சூழல். இன்னும் நம் ஊர் பகுதிகளில் இருக்கும் ஒதுச்செய்யும் ஹவுல் இன்னும் இங்கு இருக்கிறது. அந்த பள்ளியின் ஹவுலை பார்க்கும்போது [ கருங்கல்லில் ஓரச்சுவர் ] எனக்கு கடற்கரைத்தெருவின் பழைய ஹவுல் ஞாபகம் வரும்.பழமை இன்னும் அங்கு பாதுகாக்கப்படுகிறது.

கேப்டன் என்பதை காப்பித்தன் என்றும் " கிலிங்" என்பதற்கு தாங்கள் தந்த விளக்கமும் இன்னும் பேசப்படுகிறது.

மிகவும் பழமையான பள்ளிவாசல், ஆகையால் UNESCO வின் WORD HERITAGE MASJID இல் இடம்பெற்று மாநில அரசால் நிர்வகிக்கப்படுகிறது.

என் தம்பி அன்வர் ஹூசேனின் திருமணம் இங்குதான் நடைபெற்றது.


Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்களே!

கிளிங்க்! என்கிற வார்த்தைக்கும் தமிழர்கள் இன்றும் மலாய் மற்றும் சீனர்களால் கிளிங்கர்கள் என்று அழைக்கப் படுவதையும் பற்றி படித்ததும் மலேசியாவில் வாழ்ந்த சிலரிடமும் மச்சான் எஸ். எம். எப். அவர்களிடமும் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்பே எழுதினேன்.

தம்பி ஜாகீர் அவர்களும் இதை அங்கீகரித்து இருப்பது மகிழ்வாக இருக்கிறது.

நான் பினாங்கு போய் இருந்தபோது எனக்கு இந்த வரலாறு தெரிந்து இருந்தால் நானும் அந்த இடத்துக்குப் போய் வந்து இருப்பேன். மிகவும் தாமதமாகிவிட்டது.

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்கள் அலாவுதீன் மற்றும் கவிஞர் சபீர் ஆகியோருக்கு

வ அலைக்குமுஸ்ஸலாம்.

முஸ்லிம்களின் தியாகமும் அந்த தியாகிகளின் பட்டியலும் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக எடுத்து சமுதாயத்தின் முன் வைப்போம்.

sabeer.abushahruk said...

//நான் பினாங்கு போய் இருந்தபோது எனக்கு இந்த வரலாறு தெரிந்து இருந்தால் நானும் அந்த இடத்துக்குப் போய் வந்து இருப்பேன். மிகவும் தாமதமாகிவிட்டது. //

இல்லை காக்கா.

இன்ஷா அல்லாஹ் நிய்யத் வையுங்கள். ஜாகிர் மகன் கல்யாணத்ல ஒரு பெரிய பட்டாளமாப் போய் ஜமாய்ச்சிட்டு வந்துடுவோம். கீழ்கண்ட வாசகத்தை அல்லாஹ்வுக்காக வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.

//மிகவும் தாமதமாகிவிட்டது.//

sabeer.abushahruk said...

ஓதித்தரும் பள்ளிகளில் அந்த காலத்தில் வீட்டுப்பாடம் ஒப்பிக்காவிடில் காலில் குட்டை போட்டு விடுவார்கள். (நான் ஒருமுறைகூட தண்டிக்கப் பட்டதில்லை) அதை ஒரு நாள்கூட தாங்க முடியாமல் அவதியுறுவர்.

ஷேக் ஹுஸேன் அவர்களின்மீது பூட்டபட்டதௌ "அடிமைப்பெண்" திரைப்படத்தில் காட்டியதுபோல்தானே இருக்கும்?

நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் அஞ்சுகிறதே காக்கா.

Ebrahim Ansari said...

//இன்ஷா அல்லாஹ் நிய்யத் வையுங்கள். ஜாகிர் மகன் கல்யாணத்ல ஒரு பெரிய பட்டாளமாப் போய் ஜமாய்ச்சிட்டு வந்துடுவோம். கீழ்கண்ட வாசகத்தை அல்லாஹ்வுக்காக வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.//

தம்பி சபீர் ! எப்போ எப்போ! இன்ஷா அல்லாஹ் நான் தயார்.

//மிகவும் தாமதமாகிவிட்டது.// வாபஸ் வாங்கியாச்சு.

பள்ளிகளில் குட்டை போடுவது ஒரு மரக்கட்டையில் . அதையே நம்மால் தாங்க முடியாது .

எனக்கு சாபு பள்ளியில் ஓரிரண்டு முறை போடப்பட்ட நினைவு. காரணம் அருகில் உள்ள விலைக்காரத்தேருவில் பள்ளி நேரத்தில் போய் அங்கே சக்கரைவல்லிக் கிழங்கை வாங்கி வந்து பள்ளிக்குள் வைத்துத் தின்றதுக்காக என்று நினைவு.

அடிமைப்பெண் மாதிரி = ஆமாம்.

Yasir said...

வெளுத்தடுக்கபடும் வரலாற்று கறைகள் அல்லாஹ் ஆத்திக் ஆஃபிய மாமா
புறக்கணிக்கப்பட்ட இஸ்லாமிய வீரர்களின் வரிசை நீண்டுகொண்டே போவதைப்பார்த்தால் இத்தனை காலம் படித்து வந்ததெல்லாம் சதி என்பது விளங்குகிறது.

sheikdawoodmohamedfarook said...

சீனர்கள் இந்தியர்களை '' ஓராங் கிளிங்கி அல்லது க்ளிங்கி கூய்'' என்று .கூறுவார்கள். இது மிகவும்இழிவான சொல்லாக கருதப்படுகிறது.தமிழ் முஸ்லிம்களைஅவர்கள் அப்படி அழைப்பதில்லை. மலாய்காரர்கள் தமிழ் முஸ்லிம்களை '' மாமா'' என்று அழைப்பார்கள். குறிப்பு:ஓராங்=மனிதன்.கூய்=சீனமொழியில்பேய் என்று பொருள்.முக்கிய குறிப்பு:என்னைப்போல்Handsomeமான முஸ்லிம்வாலிபர்களை திருமணம் செய்ய அழகியமலாய்-மலையாள மோகினிகள் நிறைய உண்டு. ஆனால் கைக்கூலி வட்டா வீடுஎன்றெல்லாம் பேசப்படாது. எனக்கும்அப்பவே இளமைஊஞ்சல்ஆடும்போது நிறைய கிராக்கி வந்து மோதியது. நான் ஒரு மடச்சாம்புராணி உட்டுட்டேன்.Fortune never knocks your door twice.இது நெப்போலியன் ஹில் என்பவர் சொன்னது. Think and Grow Rich,என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். செல்வந்தர் ஆகா சிறந்தவழிகளை நிறைய சொல்கிறார்.

Unknown said...

தொடர்ந்து இத்தொடரைப் படித்து வருகிறேன்... ஒவ்வொரு எபிசோடும் ஒரு அதிர்ச்சிகரமான மறைக்கப்பட்ட இஸ்லாமிய வீரர்களின் உண்மையை சொல்லி வருகிறது. இதுபோன்ற தொடருக்கு முக்கியத்துவம் தரும் அதிரை நிருபர் தளத்திற்கு நன்றியும், துஆவும்..

இப்ராஹீம் அன்சாரி காக்காவின் அபூர்வ திரட்டு இது. அவர்களின் கடின உழைப்பின் மூலம் வெளிவந்திருக்கும் இத்தொடர் பல சரித்திரங்களைப் படைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் அவா.

குறிப்பாக இந்த் எபிசோட் பிரமிக்க வைக்கும் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளது.

இதுபோன்ற வீரர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டதால். பெரும்பான்மையாக இருக்க வேண்டிய நம் சமுதாயம் சிறுபான்மையாக்கப் பட்டுவிட்டதே!

Ebrahim Ansari said...

இத்தொடரில் புதிதாகக் கருத்து இட்டு இருக்கும் சகோதரர் ஜாபர் ஹசன அவர்கள் தரும் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி செலுத்த கடமைப் பட்டு இருக்கிறேன்.

இதே போல அதிரை நிருபர் தரும் சிறந்த ஆக்கங்களை பலர் படிக்கிறார்கள் ஆனால் கருத்து இடுவது இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

படிப்பவர்கள் தங்களின் அன்பான கருத்துக்களை அறிவுரைகளை வினாக்களை சந்தேகங்களை தெரிவித்தால் இன்னும் தெளிவு பெற உதவியாக இருக்கும்.

கருத்திட்டு ஆர்வமூட்டும் அனைத்து சகோதரர்களுக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு