Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க... ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2013 | , , ,


இறைவன் நாட்டத்தில் மனிதனாய் பிறந்த அனைவரும் தான் உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இந்த நாள் வரை வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், மறக்க முடியா சம்பவங்களும் சம்பவித்திருக்கும். அவை யாவும் நாம் வேதனையில் வாடும் பொழுதோ அல்லது தனியே இருக்கும் பொழுதோ ஒவ்வொன்றாக அசை போட்டால் அது உள்ளத்திற்கு ஆனந்தமளிக்கும். அப்படிப்பட்ட நினைவுகள் பல அவற்றில் சில இங்கே உங்களுக்காக அசைப்போட ஆசை கொள்கிறேன்.

1. ஆரம்பப்பள்ளிக்கு வாப்பா, உம்மாவிடம் அடம் பிடித்துச்சென்று வந்தது.

2. கரும் சிலேட்டு பலகையில் கல்லுக்குச்சியை நாம் பிடிக்க நம் கையை ஆசிரியை பிடிக்க அ, ஆ, இ, ஈ என்று எழுதப்பழகியது.

3. 1, 2, 3, 4 எழுத ஆரம்பிக்கும் பொழுது 8 போட சிரமப்பட்டு இரு சிறு வட்டங்களை (00) அருகருகில் போட்டு அதை ஒன்றோடொன்று ஒட்ட வைத்து பெருமிதம் அடைந்தது.

4. நம்மை விட மூத்த மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், பேனா, லப்பர், ஸ்கேல் என ஒரே பெட்டியில் வரும் ஜாமின்ட்ரி பாக்ஸை பயன் படுத்த ஆசை கொள்வது.

5. பள்ளியில் நோட்டு புத்தகம் போல் இருக்கும் எசனல் குர்'ஆன் ஓதிக்கொண்டிருந்த நாம் ரைஹான் பலகை வைத்து ஓதும் முப்பது ஜுஸ்வு குர்'ஆன் ஓத ஆசையுடன் காத்திருந்தது. 

6. பாடப்புத்தகத்தில் மயிலிறகை மறைத்து வைத்து அது குட்டி போடும் என நம்பி அடுத்த நாளுக்காக காத்திருப்பது.

7. வரைகிறோமோ அல்லது கிறுக்குகிறோமோ? ஆனால் வண்ண, வண்ண கலர் பென்சில்களை ஆவலுடன் சேர்த்து வைப்பது.

8. பள்ளிக்கு எடுத்துச்சென்ற மிட்டாயை மறைத்து வைத்து திண்பது.

9. பள்ளி முடிந்து எப்படா வீடு வரும் என காத்திருந்து வீடு வந்ததும் தெரு சிறுவர்களுடன் விளையாட சிட்டாய் பறந்து சென்றது.

10. சரிவர கவனமின்மையால் காலில் உடைந்த கிளாஸ் (வீதல்ரோடு), முட்கள் குத்தி ரத்தம் கசிவதும் அதை பொருட்படுத்தாமல் விளையாடுவதும் பிறகு அதில் மண்புகுந்து சீழ் வைத்து காய்ச்சல் வருவதும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டு வருவதும். புண் ஆறியதும் மீண்டும் தன் கவனக்குறைவை தொடர்வதும், விளையாடி மகிழ்வதும்.

11. உள்ளூர் ஜனாதிபதிகளை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலும், அதற்காக தயாராகும் வாக்குச்சீட்டுகளும், அக்கம்பக்கத்து வாக்காளர்களை அழைத்து வந்து வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட கயிறு ரயில் வண்டிகளும்.

12. நீடித்த பகையை உண்டாக்காத அடிக்கடி வரும் சண்டைகளும் (காயா? பழமா?), பிறகு உறவாடி ஒருவருக்கொருவர் மகிழ்வதும்.

13. கட்சிக்கொடிகளை வண்ணப்பட்டங்களாய் செய்து அதை நைலான் கயிறுகள் மூலம் வானில் உயர பறக்கச்செய்து அதற்கு காகித தந்தி மூலம் தன் வாழ்த்துக்களை நூலில் அனுப்பி மகிழ்ந்தது. (பிறகு அந்த கட்சிகளெல்லாம் நமக்கு ஆப்படித்தது வேறு கதை).

14. வீட்டிலிருந்து கள்ளத்தனமாய் வேட்டியில் ஒளித்து எடுத்துச்சென்ற அரிசிக்கு தெரு ஆச்சியிடம் வாங்கித்திண்ட மாங்காய் ஊறுகாயும், மரவள்ளிக்கிழங்கும், நாகப்பழமும், எலந்தைப்பழமும், பனங்கிழங்கும், வெள்ளரிப்பழமும் இன்னும் பிற திண்பண்டங்களுடன் "ஆனந்தம் கொட்டிக்கிடக்குது ஆச்சியின் கூடையிலே" என சொல்ல வைக்கும்.

15. குளங்களில் குளித்து கும்மாளமிடுவதும் ஆழத்திற்கு சென்று தரையில் மண்ணை எடுத்து வந்து செவ்வாய்க்கிரக மண்ணை எடுத்து வந்தது போல் பரவசமடைவதும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச்சென்று வாழ்க்கையில் ஒட்டு மொத்த இடர்களையும் தாண்டி வந்தது போல் பெருமிதம் கொள்வதும்.

16. மழைக்காலங்களில் வெளியில் விளையாட வழியின்றி வீட்டின் வாசலில் ஓடிய சிறு ஓடையில் விடப்பட்ட காகித கத்திக்கப்பல் சிறிது தூரம் ஓடி தண்ணீரில் ஊறி மூழ்கடிக்கப்பட்டதால் ஒவ்வொரு வீட்டின் வாசலும் அந்தந்த வீட்டு சிறுவர்களின் வாழ்வில் டைட்டானிக் கப்பல்கள் மூழ்கிய இடங்களே.

17. விரும்பிய வண்ணத்தில், டிசைனில் துணி எடுத்து தைத்து போட்ட சட்டைகளும், பெல்ஸ், பேரலல் பேக்கி பேண்ட்களும் வருடங்கள் பல உருண்டோடி விட்டாலும் அது நினைவலைகளில் இன்னும் புத்தம்புதிதாகவே மினுமினுத்து காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கிறது.

18. நண்பர்களின் உதவியில் தட்டுத்தடுமாறி ஓட்டிய சைக்கிள்களும் பின்னொரு நாள் அந்த சைக்கிளுக்கே உரிமையாளர் ஆனதும் மிதிவண்டியை மிதித்து காற்றில் தன் சட்டையும், பனியனும் சந்தோசத்தில் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள வேகமாய் பறந்ததும்.

19. அதுவும் ஒரு நாள் நம் வாழ்வில் நடந்தேறும் என்றறியாமல் உறவினர்களின் சுன்னத், கலியாண வைபவங்களில் குதூகலமாய் கலந்து கொண்டு பந்தலுக்கு கொடி கட்டி பரவசமடைந்ததும், வண்ணக்காகிதத்தில் பூவந்தி உருண்டை உருட்டி மகிழ்ந்ததும்.

20. புனித ரமழான் நோன்பு காலங்களில் ஒரு புறம் செய்து முடித்த சேட்டைகளும், மறுபுறம் தொழுது வணங்கிய வணக்க வழிபாடுகளும் ஒவ்வொன்றாக சொல்லிமாளாது இங்கு எழுதி தீராது.

21. அன்று தரையில் அமர்ந்து கண்டுகளித்த கட்டணக்கால்பந்தாட்ட போட்டிகள் இன்று உள்ளத்தின் அரியணையில் அமர்ந்து எமக்கு நினைவலைகளில் உலகக்கோப்பை போல் உற்சாகமூட்டிக்கொண்டிருக்கின்றன. 

22. தெருவில் ஓடிய அம்பாசிடர் கார்களில் ஆபத்தறியாமல் பின்புறம் தொங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்று விட்டு வந்ததை பெரும் சாகசமாய் நண்பர்களுடன் சொல்லி மகிழ்ந்ததும்.

23. அட்டபில்லில் அடிபட்டக்குருவிகளின் வருத்தம் உணராமல் அன்று ஆனந்தமடைந்தது இன்று வேதனையடையச்செய்கிறது.

24. தென்கிழக்கில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டால் அதனால் வர இருக்கும் பள்ளி விடுமுறையை எண்ணி சந்தோசமடைந்ததும்.

25. நீண்ட நாட்களுக்குப்பின் அரபுநாட்டிலிருந்து வந்திறங்கிய சொந்தபந்தங்கள் அன்பளிப்பாய் தந்த அலிலப்பரும், ஹீரோ பேனாவும், வாயில் மெல்ல தந்த சிவிங்கமும் இன்றும் எம்மை மெல்ல, மெல்ல அசை போட வைத்து விட்டன.

26. கம்பனில் குதூகலமாய் சென்னை சென்று வந்ததும் வரும் வழியில் தூக்க கலக்கத்தில் திருவாரூரில் எழுப்பப்பட்டு நடு இரவில் எதற்கென்றே தெரியாமல் பால் வாங்கி தந்ததும்.

27. இறைவன் நாட்டத்தில் நாமும் மெல்ல, மெல்ல பெரியவனாகி பாஸ்போட்டுக்கும் விண்ணப்பித்து அதுவும் முறையே கையில் கிடைத்து வீட்டுப்பெரியவர்களின் (அப்பா, பெரியம்மா,.....) வாழ்த்துக்களுடனும் து'ஆவுடனும் எப்பொழுது திரும்புவோம் என அறியாமல் விமானம் ஏறி அரபு நாடு வந்திறங்கியதும் சில வருடங்கள் இங்கு செலவு செய்து ஊர் திரும்பியதும் நம்மை வாழ்த்தி து'ஆச்செய்து வழியனுப்பிய அந்த பெரியவர்களை காணாது கண் கலங்கியதும் என் உள்ளக்கிடங்கில் நங்கூரமிட்டு பல சுனாமிகள் வந்து சென்றும் நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.

28. கட்டுக்கம்பி போல் இருந்த தலை முடியை கட்டுக்குள் கொண்டு வர சுருள் வடிவ சீப்பு கொண்டு சீவி தலையை செம்மைப்படுத்தியதும் (அதில் டிஸ்க்கோ, பங்க், நடுவாங்கு, ஹிப்பி, கிராப்பு, மாப்ளை கட்டிங்க் என பீத்திக்கொண்டதும்)

29. உள்ளாடை தெரிய அணிந்த மெல்லிய காட்டன் (மார்ட்டின்) சட்டைகளும் அந்த நேரம் பயன்படுத்தாமல் தவித்து வந்த பாக்கெட்டின் பத்து ரூபாய் சலவை நோட்டும், கரகர வென சப்தம் செய்து செக்கிழுத்த செம்மலாய் எம்மை நினைக்க வைக்கும் சோலப்புரி செருப்பும்.

30. மூத்த தெரு சகோதரிகள் சிறுவனாய் இருந்த எம்மை சினுங்காமல் இருக்க அவர்கள் உப்புக்கு சப்பானியாய் எம்மை சேர்த்துக்கொண்டு விளையாடிய விளையாட்டுக்களும் (கொலை, கொலையா மந்திரிக்கா, தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு.... அந்த விளையாட்டுக்களெல்லாம் இன்று ஒய் திஸ் கொலவெறி? என பரிணாமம் பெற்று விட்டது)

31. கால்பந்தை ஒன்பது இடத்தில் தையல் போட்டு அதன் டீயூபில் இரும்புக்குண்டை (பால்ரஸ்) அடைத்து மாதக்கணக்கில் அதை உதைத்து விளையாடி மகிழ்ந்த நினைவுகளும்....

32. அன்று ஒவ்வொருவரின் தலையில் கவிழ்க்கப்பட்ட வெல்வெட் துணியிலான கருப்பு/ஊதா தொப்பி நினைவலைகளில் அது இன்றும் நேராகத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை, எத்தனை, நினைக்க, நினைக்க, இனிக்க, இனிக்க, உள்ளம் பறக்க, பறக்க.........

இன்ஷா அல்லாஹ் விடுபட்ட இன்னும் நல்ல பல நினைவுகளை உங்கள் அனுபவத்திலிருந்து பின்னூட்டத்தின் மூலம் பிண்ணி எடுக்க அ.நி. சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு அதிரைநிருபர் பொக்கிஷம் தொடருக்காக...

20 Responses So Far:

Ebrahim Ansari said...

என்னேத்தே எழுதுறது வாப்பா? எல்லாம்தான் முச்சூடா எழுதிட்டியலே.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அன்று பொருளாதாரம் வீடு தோறும் பெரலி பண்ணிக்கொண்டிருந்தாலும் சொந்தபந்தங்கள் உறவு முறைப்பேணல் எக்கச்சக்கமாய் குமிஞ்சி கிடந்தது. ஆனால் இன்று பொருளாதாரம் வீடு தோறும் பலாத்தொட்டி ஆடிக்கொண்டிருந்தாலும் சொந்தபந்தங்கள் வெந்த புண்ணில் மொளவாக்கா தடவி ஓதிப்பார்த்து செல்கின்றன. சந்தோசம் தருவதில்லை என்பது சுருக்கம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அன்று எட்டுத்திசையும் பரவி இருந்த எம் சந்தோசம் இன்று கையடக்க செவ்வக செல்ஃபோனில் செத்துப்போய் அடக்கமானது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மழைக்கால நடுநிசி இரவில் கையில் மண்வெட்டியுடன் மண் மூட்டை சுமந்து கடலில் கலக்க இருந்த மழை நீரை தெரு குளத்திற்கு கொண்டு வந்து சேர்த்து குதூகளமடைந்தது அன்றைய இளைஞர் பட்டாளம்.

அன்றாய்ட் ஃபோன் வழங்குவதிலும் அதை அன்றாடம் அப்டேட் செய்வதிலும் அடங்கிப்போய் கலெக்டரிடம் மனு கொடுத்து முடித்துக்கொள்கிறது அதன் முயற்சிகளை.

crown said...

மழைக்கால நடுநிசி இரவில் கையில் மண்வெட்டியுடன் மண் மூட்டை சுமந்து கடலில் கலக்க இருந்த மழை நீரை தெரு குளத்திற்கு கொண்டு வந்து சேர்த்து குதூகளமடைந்தது அன்றைய இளைஞர் பட்டாளம்.

அன்றாய்ட் ஃபோன் வழங்குவதிலும் அதை அன்றாடம் அப்டேட் செய்வதிலும் அடங்கிப்போய் கலெக்டரிடம் மனு கொடுத்து முடித்துக்கொள்கிறது அதன் முயற்சிகளை.
---------------------------------------------------------------------------------------------------


அஸ்ஸலாமுலைக்கும். இயலாமை,ஆதங்கம் இந்த தலைப்பின் கீழ் வந்திருக்கும் இந்த கருத்து நானோ, கவிச்சக்கரவர்த்தியோ,தம்பி ஷபாத்தோ,கவியன்பனோ, மு.செ.மு ஜாபரோ எழுதியிருந்தால் கவிதைன்னு இங்கே சொல்லியிருபாங்க! அருமையான கருத்து என்ன சபீர் காக்கா நான் சொல்வது சரிதானே?

Unknown said...

வாப்பா சென்னையிலிருந்து ஊர் வரும்போது அரக்கிடா குதிரை வண்டியை எதிர்பார்த்து நின்ற தருணம் (அரக்கிடா குதிரை வண்டியில் தான் எங்க வாப்பா வருவாக )

பம்பரம் விளையாடும்போது தரைக்கு பதிலாக மணலிலயே குத்தி எடுத்து பம்பரத்தின் சீற்றம் அடங்குவர்தர்க்குள் மணலிலேயே விரலைவிட்டு எடுத்து பம்பர விளையாட்டில் சூரன் என்று மற்றவர்களுக்கு உணர வைத்தது.

உம்மா ஒரு ரூபா தந்து போய் இறால் வாங்கி வா என்று கடைக்கு அனுப்பி , இறால் காரியிடம் எப்படியும் ஒரு ரூபாய்க்கு உள்ள இறாலை 80 அல்லது 90 காசுக்கு அடம்பிடித்து பேரம் பேசி வாங்கி மீதமுள்ள காசில் கொட்டிக்கடலையோ அல்லது வள்ளிக்கிழங்கோ வாங்கித்தின்று மகிழ்ந்ததில்
அடைந்த சந்தோசம் இன்றும் நினைவில் நின்றவை.

கல்யாண பந்தலில் ஒருமுறை சர்பத் குடித்து விட்டு இரண்டாவது தடவை குடிக்க முதலில் தந்த நபர் கண்ணில் படாமல் அடுத்தவரிடமிருந்து இரண்டாவதாக வாங்கிக்குடித்ததை பெருமையாக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தது.

நோன்பு திறக்கும் நேரம் ஜாவியாவில் இறைச்சி கஞ்சி கொடுக்கும் தினங்களில் சட்டியில் ஒரு துண்டு இறைச்சி இருந்தாலும் அந்த பெருமையான விஷயத்தை அடுத்த நாள் நோன்பு திறக்கும் நேரம் வரை பெருமிதத்துடன் நண்பர்களிடம் சொல்லி மகிழ்வது.

ஜாவியாவில் (40 நாட்கள் தொடர் ஹதீஸ் ஓதும் தினங்களில்) நான் உயரம் கம்மியாக இருந்ததினால் அவர்கள் வைத்திருக்கும் அளவு கம்பின் உயரம் என்னைவிட உயரமாக இருந்ததினால் உள்ளே அனுமதி இல்லை என்று போக விடமறுத்த தினங்களில் நேர்த்திக்கடனாக சேவலோ அல்லது கோழியோ கொண்டு போய் கொடுத்து உள்ளே போகும்போது அந்த நேர்த்திக்கடனுக்காக ஒரு நாற்சா பொட்டலம் அட்வான்சாக கிடைத்துவிடும், அதுவும், ஹதீஸ் முடிந்து கொடுக்கும் நார்சாவுமாக சேர்ந்து இரண்டு பொட்டலங்களோடு வெளியில் இருந்து வரும்போது அப்பொழு ஏற்ப்படும் சந்தோசம் சொல்லி மாளாது.

மீண்டும் வருவேன்.

அபு ஆசிப்.

.

adiraimansoor said...

முனாசெனாமுனா தற்போதைய என் நினைவுகளை கலைத்து மீண்டும் எனக்கு இளமை திரும்பியதுபோல்
ஒரு பிரமை. திரும்பாதா? அந்த வாழ்க்கை எத்தனை இன்பமான வாழ்க்கை? எதற்கு கவலைப்பட்டோம் எதைபத்தி சிந்தித்தோம்? எத்தன இன்பங்கள் அந்த வாழ்க்கையில் கொட்டி கிடந்தான ஒன்றா இரண்டா பல்லாயிரக்கணக்கான இன்பங்கள் நம்மை சூழ்ந்திருந்தன

இப்பொழுது என்னதான் ஸ்மார்ட் போன் வழியாக உலகம் கையில் இருந்தாலும் எத்தனை விஷயங்கள் விரல் நுனியில் இருந்தாலும் ஸ்மார்ட் போன்கல் முன்னாடி நாம் என்னமோ பெத்தடின் மாத்திரை உபயோகித்தவன் போல் மவுனமாகத்தானே இருக்கின்றோம். கூடி மிகிழ்ந்து ஓடி ஆடி மகிழ முடியவில்லையே ஸ்மார்ட் போன்கள் எல்லோரையும் ஒரு கட்டுக்குள் அடக்கிவிட்டதே என்று சொல்வதைவிட

சிலபேர் விரித்திருக்கு வலையில் நம்மை வீழ்த்திவிட்டார்கள் நாமும் விட்டில் பூச்சிகளைப்போல் வீழ்ந்துவிட்டோம் நம்மை இப்பொழுது ஆன்லைன் மூலமாக சிலபேர் நம்மை கண்கானித்து கொண்டிருப்பது அறியாமலே இருக்கும் கொஞ்ச நிஞ்ச மகிழ்வுகளையும் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் நம் வாழ்க்கையை ஸ்மார்ட் போன்கல் முன்னாடி தொலைத்து கொண்டிருக்கின்றோம்

sabeer.abushahruk said...

நெய்னா,

உங்கள் நினைவலைகளில் சொல்லிய பல எனக்கும் பொருந்தும். எனினும் விடுபட்டவையாக...

ரிவால்வார் ரீட்டா மேட்னி பார்க்க காசு தராததால் உம்மாக்கு தெரியாமல் ரால் மண்டை கிள்ளிக்கொடுத்து அந்த காசில் படம்பார்த்ததும், அது தெரிந்துபோய் உம்மாவிடம் வாங்கிய் அடி.

ஹிசுபு ஓதும் போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கி தமாம் விடும் அன்று கொடுத்த பரிசுத் தொகை 10 ரூபாயை உம்மாவிடம் கொடுத்தபோது அடைந்த சந்தோஷம்.

+2 படிக்கும்போது சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்ட்டபோது கிடைத்த மகிழ்ச்சி.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்,

ஆம் சரியாகச் சொன்னீர்கள். கவிதை என்பது:


"Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility."williyam wordsworth

نتائج الاعداية بسوريا said...

செக்கடிக்குளத்தில் நீச்சல் போட்டி வைத்து , யார் முதலில் பெண்கள் கரையை தொட்டுவிட்டு (9 அல்லது 10 வயது சிறுவனாக இருந்த போது ) மீண்டும் இந்த கரைக்கு வருவது என்று போட்டி வைத்து , கரையை தொட்டு விட்டு திரும்ப வரும்போது மூச்சு இளைச்சு பாதியிலேயே மீண்டும் பெண்கள் கரைக்கு வந்து அங்கிருந்து நடந்து வந்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

நோன்பு காலங்களில் தராவீஹுக்குப்பிரகு ஹிஜ்பு ஓதும்போது லவ்ட்டுதம்பி பக்கத்தில் யார் உட்காருவது என்ற போட்டியில் நண்பர்களுக்கு இடையில் முதலி போய் உட்கார்ந்து விட்டால் அந்த வெற்றி நினைப்பு அடுத்த நாள் வரை நினைவில் இருக்கும், பெரும்பாலும் நண்பன் செய்யது அஹ்மத் கபீர் ( இன்று துபாயில் ) அல்லது இ.மு. இப்ராஹிம் ( இன்று அமெரிக்காவில் ) ஜெயித்து விடுவர்.

துளுக்காப்பள்ளியில் (இன்றைய தக்வா பள்ளி ) எப்பொழுதும், எல்லா பள்ளியிலும் முடிந்த பிறகுதான் ஹிஜ்பு முடியும், நாங்கள் நார்சாவுக்காக வேறு எந்த பள்ளிக்கும் போவதில்லை துலுக்கா பள்ளி மட்டும்தான் கதி.
அப்படி இருக்கும்போது, ஒரு சிலர் எல்லா பள்ளி நார்சாவையும் வாங்கிக்கிட்டு வந்து கடைசியாக முடியும் எங்கள் பள்ளியிலும் நாற்சா வாங்க வந்து எங்கள் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்வது எங்களுக்கு பிடிக்காது. ஆதலால் அவர்களை மனசுக்குள்ளேயே திட்டி தீர்ப்பது.

பம்பரம் விளையாடும்போது , ஒரு சில போட்டியில் நாம் தோத்து விட்டால் நம் பம்பரத்திற்கு எல்லோருமாக சேர்ந்து ஊண்டு ( தோற்றதர்க்குரிய தண்டனை )
வைப்பார்கள். அது நம் கண்களிளுருந்து கண்ணீரை வரவைக்கும்.

கிளித்தட்டு போட்டியில் எல்லோரையும் வெட்டி ( கட் செய்து ) கடைசியாக உள்ளவனிடம் அடி வாங்கி விட்டால் ஆரம்ப முதற்கொண்டு வந்த எல்லா தடைகளும் வென்றது வீணாகப் போய்விட்டதே அதை நினைத்து அடுத்த நாள் வரை நொந்து நூலாவது.

மிச்சம் ஏதும் நினைவில் நிழலாடினால் மீண்டும்.

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

இது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் மீள்பதிவாக மனதளைகளில் உலவவிட ,

அதாதவது
காதர் முஹிதீன் பள்ளியில் படிக்கும் காலங்களில்
ஒவ்வரு வருடமும் பாட்டுப்போட்டியில் ( இஸ்லாமிய கீதங்கள் மட்டுமே ) அவ்வபொழுது ஏதாவது தலைவர்கள் பிறந்த தினம் என்று ஒரு சில இஸ்லாமிய கீதங்கள் அல்லாத பாட்டுப்போட்டியிலும் கலந்து கொள்வது உண்டு) பெரும்பாலும் (90%) நான் படிக்கும் காலங்கள் வரை நானே வென்றிருக்கின்றேன், இது சபீர் முதற்கொண்டு அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்த விஷயம். நான் சொல்ல வருவது என்னவென்றால், ( பெருமைக்காக சொல்லவில்லை ) என் பெயர் அழைக்கப்பட்டவுடன்) ஒரு கரகோஷம் எழும்பும் பாருங்கள் அது பள்ளியையே அதிரவைக்கும். இன்றும் அந்த நிகழ்வை நினைத்தாலும் என் மனதில் பூரிப்பு தொட்டு செல்லும். (அந்த குரல் வளம் இப்பொழுது இல்லை அது வேறு விஷயம் )

குறிப்பாக அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததை கேளுங்கள் என்ற பாடல் பாடி
நான் தோற்றதே இல்லை.

பள்ளிக்கு செல்லுமுன் காலையில் உம்மா தரவேண்டிய தேத்தண்ணி (TEA) கொஞ்சம் தாமதமாகும் படசத்தில் தேத்தண்ணி குடிக்காமல் போய், பள்ளிக்கு போய் விட்டு வந்து நமக்குரிய பங்காக மூடியிருக்கும் டீயை அப்படியே சூடு காட்டாமல் மொடக் மொடக் என்று ஒரே மூச்சில் குடித்து முடித்து குவளையை வைத்து விட்டு மறு வேலை பார்ப்பது.

இன்னும் வரும்.

அபு ஆசிப்.

Shameed said...

நொங்கு "கோந்தை"வண்டி கைரு கட்டி ரயில் வண்டி சைக்கிள் ரிம் வண்டி சைக்கிள் டயர் வண்டி இப்படி வண்டி வண்டியா நிறைய நம் இளமைகால நினைவுகளை இனிக்க இனிக்க சொல்லலாம்

نتائج الاعداية بسوريا said...

பாட்டுப்போட்டியில் போட்டியாளர்கள் அனைவரும் பாடிமுடித்தவுடன், நடுவர்கள் பாட்டுப்போட்டியில் வென்றவர்களை அறிவிப்பதருக்கு முன்பாக
ஒவ்வொரு வருக்கும் அவர்களின் குரல் வளம், மனப்பாடம், சொல் உச்சரிப்பு, எந்தவிட தேவையற்ற இடைவெளி விடாமை, முன் பின் பாடாமல் இருத்தல் போன்ற ஒவ்வொன்றுக்கும் மார்க் போடுவார்கள்.

இது கிட்டத்தட்ட ஒரு 10 அல்லது 15 நிமிடம் வரை இருக்கும். இந்த இடைவெளியில் யார் முதலாவத வருவாரோ அவரை கூப்பிட்டு பாட சொல்லுவார்கள் அந்த நிமிடமே தெரிந்து விடும் இவன் தான் முதல் என்று.
அதே போல் பல முறை நான் பாட அழைக்கப்பட்டு இருக்கின்றேன். அந்த தருணம் ஒரு குதூகலமே.

அபு ஆசிப்.

adiraimansoor said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நெய்னா!

மெமரி பவரு சுத்தமா அவுட்டு! அதனாலெ காலைலெ வரலெ!

உன் மெமரி பவராவது நிலைத்து இன்னும் அந்த ஸ்டோரேஜில் இருந்து வருவதை அப்பப்ப எழுதி பொக்கிசத்தை சமர்ப்பித்து விடு மச்சான்!

Unknown said...

நெய்னாவுக்கு இதே வேலையாப்போச்சு.. அப்பப்ப இதுமாதிரி எழுதி எங்க தூக்கத்தை கெடுக்குறது.,

கொஞ்சம் மறந்தாலும் யான் வாப்பா ஞாஃபுவம் காட்டுறீய?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

யான் ஜபருல்லாஹ்!
தேன் குரலால் பாடியே ஆளை அப்பப்ப மயக்குவது மட்டும் தேவலையா?

Unknown said...

//தேன் குரலால் பாடியே ஆளை அப்பப்ப மயக்குவது மட்டும் தேவலையா? //

வாடா வாப்பா... ஜஹபர் சாதிக்

டச் விட்டு போயிடக் கூடாதுல அதுக்குதான்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு