நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைக்கு தடைகளை மீறி தவழ்ந்து வந்த தண்ணீர் ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, டிசம்பர் 28, 2013 | , , , , , ,


நல்ல காரியங்கள் நடக்கும்போது, நெஞ்சில் பால் வார்த்தது போல இருந்தது என்று சொல்வது பண்பாடு ; பழக்கம். 

அத்திப்பட்டியாக மாறிக் கொண்டிருந்த அதிராம்பட்டினம், தார் பாலைவனத்தின் தத்துப் பிள்ளையாக மாறிப் போய் விடுமோ என்ற அச்சம் அதிரை மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேர் இதயத்தையும் சுரண்டிக் கொண்டிருந்த கேள்வியாகும். கடந்த பல வருடங்களாக வானம் பாடிய பஞ்சப் பாட்டு காரணமாக மழை பொய்த்துப் போனது. மேகங்கள் திரண்டு வந்து வேடிக்கை காட்டினவே தவிர மழையாகப் பொழிந்து மகிழ்வூட்டவில்லை. இதனால் ததும்பி, நிரம்பி வழிந்த வரலாற்று சிறப்பு மிக்க அதிரையின் குளங்கள், விளயாட்டுத் திடல்களாக விபரீதமாக மாறிப் போயின. இந்தக் குளங்கள் வறண்டு போனதால் நிலத்தடி நீர் மட்டம் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பூமிக்குள் போனது. செவ்வாய் கிரகத்துக்கு சந்திரயான் அனுப்பி வைப்பது போல் தண்ணீரைத்தேடி பூமியின் வயிற்றுக்குள்ளும் ஒரு செயற்கை ‘துளை’க் கோளை அனுப்ப வேண்டுமோ என்கிற ஐயம் உண்டானது. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் குடங்கள் தவம் கிடக்க ஆரம்பித்தன. தண்ணீர்! தண்ணீர்! என்று கூவிக் கொண்டு காலிக் குடங்களுடன் மக்கள் வீதிக்கு வந்து சாலை மறியல் முதலிய போராட்டங்களை அரங்கேற்றினார்கள்; ஆக அதனையும் அதிரைக்கு அறிமுகப் படுத்தினார்கள். 

மழை பொய்த்துப் போனாலும், கர்நாடகம் எப்போதாவது இரக்கம் காட்டி திறந்து விடும் தண்ணீரும் வந்து சேர இயலாத வகையில் ஆற்று நீர்ப் பிரசவ வாசல்கள், மண்மேடுகளால் தடுக்கப்பட்டு மலடாகப் போயின. வரலாற்று சிறப்புமிக்க காவேரி மேட்டூர் திட்ட வாய்க்கால் குப்பை கூளங்கள் குடியிருக்கும் மாளிகை ஆனது. அதோடு குப்பைகளாக இருந்த அரசியல் சித்தர்கள் கோபுரங்களில் உட்கார்ந்தார்கள். குப்பை குளங்களுடன் சாக்கடை நீரும் கைகோர்த்து கூட்டணி அமைத்துக் கொண்டு சுற்றுச் சூழலை மாசுபடுத்தின. கொசுக்களின் கொண்டாட்டமும், மருத்துவமனைகளில் மக்களின் கூட்டமும் விபரீத விளைவுகளாயின. முப்பது ஆண்டுகளாக இதற்கு ஒரு விடியலைத் தேடி அதிரையரின் இதயங்கள் ஏங்கின. 

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற நிலைமை ஏற்பட்ட நிலையில் சில நல்லெண்ணமும் செயல்திறனும் படைத்த சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இதுபற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். வெறும் வாய்ப் பேச்சு மட்டும் பயன் தராது நமக்கு நாமே ஒன்று கூடி வியர்வை சிந்தினால்தான் தண்ணீரை ஊருக்குள் கொண்டுவர முடியும் என்கிற நிதர்சனம் உணரப்பட்டது. அதற்காக நிதியும் திரட்டப் பட்டது. ஊரின் அருகில் இருக்கும் ஏரிகளில் இருந்து ஊருக்குள் நீரைக் கொண்டுவர என்றோ ஒரு காலத்தில் ஆண்ட அரசு போட்ட திட்டத்தின் வாய்க்கால் ஒரு நீட்டிப் படுத்துவிட்ட வெறும் நெடுங்கோடாக கிடப்பதை நேர் செய்தால் மட்டுமே பயன்பெற முடியும் என்பது விவாதங்களின் மூலம் உணரப்பட்டது. உறங்கிக் கிடக்கும் வாய்க்காலை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தொடங்கப்படுவது ஒன்றே இதற்கான வழி என்பதை உணர முப்பது வருடங்க ஆயின. அதற்கு முன், இந்த வரப்பிரசாதமான வாய்க்காலின் வரலாறை தெரிந்து கொள்வது அவசியம்.

சி. எம். பி. திட்டம் என்றால் என்ன? ஏன்? எதற்கு?

ஆங்கிலேயர் காலத்திலேயே தொலை நோக்குப் பார்வையுடன் போடப்பட்ட திட்டமே C.M.P என்று அழைக்கப் படுகிற Cauvery Mettur Project ஆகும். 

காவிரி டெல்டாவின் நெற்களஞ்சியங்களை மனதில் வைத்தும் கடைமடைப் பகுதிகளை எண்ணத்தில் கொண்டும் போடப்பட்ட திட்டமே Cauvery Mettur Project ஆகும். அடிப்படையில் தென்மேற்கு பருவமழை மழை மிதமிஞ்சி பொழியும்போதும் வட கிழக்கு பருவமழை அடிக்கடி தவறும் போதும் , காவிரி டெல்டா பகுதியின் விவசாயப் பணிகளைப் பாதித்து வந்தது. ஆகவே அதிகம் மழை பெய்தால் வரும் உபரி நீரை அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்வதன் மூலம் வெள்ளத்தை தடுக்கவும் தொடர்ந்த விவசாயப் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு தடையின்றி தண்ணீர் கொடுக்கவும் காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கும் தட்டுப் பாடு இல்லாமல் ஒரே சீரான முறையில் தண்ணீர் வழங்கவுமே இந்தத் திட்டம் போடப்பட்டது . 

“When South-west supply is copious and dependable the North-east Monsoon frequently affected the cultivation of the Cauvery Delta. The Chief aim of the Cauvery Mettur System is to remedy the system of affairs by storing the water of the surplus floods in the South-west Monsoon and distributing them evenly through the succeeding the irrigation period.” என்று திட்ட அறிக்கை கூறுகிறது. 

இந்த திட்டத்தை கலோனியல் W.M.எல்லிஸ் என்பவர் 1910 ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசுக்கு சமர்ப்பித்தார். ஆனாலும் திட்டம் நிறைவேற்றப்பட்டு 20ம் நாள் ஜூலை மாதம்1925 வருடம், அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவில் இருக்கும் ஏரிகளுக்கு நீர் விடப்பட்டு பிறகு வயல் வரப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே முக்கிய நோக்கம்.

The final and carefully designed Cauvery Mettur Project was submitted by Col.W.M. Ellis in 1910 and the execution of the scheme was started on 20.07.1925, when the first blast was made. The project as designed, provides for a sixty square miles lake impounding 93,500 mcft. of water. The dam is 5,300 ft. long and the reservoir backs up 33 miles to the foot of 70ft. high Hogenekkal falls which become partly submergible.

A new canal, the Grand anicut canal, with a capacity of 4,200 cusecs, was also excavated to supply an extent of 2,71,000 acres of new irrigation. The total cultivation in the delta 10,82,000 acres of single crop and 2,70,000 acres of double crop. The reservoir is expected to supply the requirements of this area of 13,52,000 acres.

இதன் அடிப்படையிலேயே ஒழுங்கு படுத்தப்பட்ட கால்வாய்கள் திட்டமிட்டு பல பகுதிகளிலும் வெட்டப்பட்டு நீர் வரத்து தட்டுப்பாடு இல்லாமல் ஓட ஆரம்பித்து வந்து கொண்டு இருந்தது. 

சுதந்திரம் பெற்று விட்டால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறப்பட்டது. ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு பாலாறும் தேனாறும் கிடக்கட்டும் அதற்கு முன்பு ஓடிக் கொண்டிருந்த நீராறு கூட சரிவர ஓடவில்லை என்பதே கசப்பான உண்மை. காமராசர் முதல்வராக இருந்த காலம் வரை விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் ஏற்கனவே போடப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்ந்து சரியாக பராமரிக்கும்படியும் மேலும் புதிதாக பல அணைகள் கட்டப்பட்டு மேலும் நீர்ப்பாசன வசதிகள் நாடெங்கும் ஏற்படும்படியும் பார்த்துக் கொண்டார். 

கரிகால் சோழனால் காவிரியில் கட்டப்பட்ட கல்லணை, முதலாம் ராஜ-ராஜ சோழனால் அமைக்கப்பட்ட உய்யக் கொண்டான் கால்வாய், பாண்டிய மன்னர்களால் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட பல கல் அணைகள் தமிழர்களின் பொறியியல் மேன்மைக்கும் நீர்பாசன முறைகளுக்கும் சான்றாக விளங்குகிறது. மேட்டூர் அணை, பெரியாறு அணை ஆகிய இரண்டைத் தவிர ஆங்கிலேயர்களின் காலத்தில்நிறைவேற்றப்பட்ட நீர்ப்ப்பாசன திட்டங்கள் யாவையும் சிறுசிறு திட்டங்கள்தான். 1889 முதல் 1947 வரை ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 9,75,096 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன. விடுதலை பெற்ற 1947லிருந்து 1954 வரை தற்போதைய தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 66,000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பயன்பெற்றன. 

1954-ஆம் ஆண்டு பதவி ஏற்ற காமராஜர் நீர்ப்பாசன திட்டங்களால் மூன்று பெரும் நன்மைகள் உணவு உற்பத்திப் பெருக்கம், புதியபாசனப் பகுதிகளால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பு மற்றும் மின்சார உற்பத்தி இருப்பதைக் கண்டார். அதன் விளைவாக, சிறிதளவு வாய்ப்பு இருந்த நதிகளிலும் கூட அதற்கேற்ற நீர்ப்பாசனத் திட்டம் என்ற நிலையில், தமிழகத்தின் எல்லா நதிகளிலும் பாசனத் திட்டங்களை ஏற்படுத்தியது காமராஜர் ஆட்சி. இதன் காரணமாக, காமராஜர் ஆட்சியிலிருந்து ஒன்பது ஆண்டுகளில் பெரிய அணைத் திட்டங்களால் மட்டும் ஏறக்குறைய 3,73,436 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதிப் பெற்றது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பெரிய அணைத் திட்டங்களை காணும்போது, ஒருவேளை அவரது ஆட்சியின் காலத்திலேயே நிறை வேற்றப்படாமல் இருந்திருந்தால் அவைகள் நிறைவு பெறாத திட்டங்கள் என்ற பட்டியலில் சேர்ந்திருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

அதன்பிறகு வந்த ஆட்சிகள் ஆற்றிலே போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி! என்று தங்களை நோக்கியே அனைத்து வாய்க்கால்களையும் திருப்பிவிட்டுக் கொண்டன என்பது அனைவரும் ஏற்றே ஆகவேண்டிய உண்மை! உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பொது நன்மைகள் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகள் அதன்பிறகு மாறி மாறி வந்த அனைத்து ஆட்சிகளிலும் தொடர்ந்தன. 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல் ஊழலே பொதுப் பணித்துறையில்தான் நடந்தது என்று சர்க்காரியா கமிஷன் சான்று பகர்கிறது. வீராணம் ஏரியையும் பண்ருட்டியிலிருந்து செல்லும் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றும் வருடக் கணக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் குழாய்களின் பட்டாளமே இதற்கு வெட்கக் கேடான சான்றாகும். 

ஆறுகள் தூர்வாரப் படவில்லை. அப்படியே வாரப்பட திட்டம் போடப்பட்டாலும் அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து திட்டத்தின் பெயர் கூறி பணம் வெளியானது. அந்தப் பணம் மட்டுமே வாரப்பட்டது. சாட்சி வேண்டுமென்றால் பட்டுக்கோட்டை – முத்துப்பேட்டை சாலையில் அணைக்காடு அருகில் இருக்கும் ஆற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆறுகளில் புல்லும் புதரும் அப்படியே மண்டிக் கிடக்கின்றன. திடீரென்று கனமழை பெய்தால் ஊரில் வெள்ளம் வருகிறது. விளைந்த வயல்களில் நீர் புகுந்துவிடுகிறது. முறையான நீர்ப்பாசன வசதிகளை வருடந்தோறும் பராமரித்து வந்தால் இந்நிலைகள் ஏற்படாது. மனிதன் ஒரு நாளைக்கு ஒருவேளையாவது குளிக்க அலைகிறான்; மாதந்தோறும் முடிவெட்டிக் கொள்கிறான்; வாரம் ஒருமுறையாவது முகச்சவரம் செய்து கொள்கிறான். ஆனால் தனது வாழ்வின் ஆதாரங்களான ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளை அதேபோல் வருடத்துக்கு ஒருமுறையாவது பராமரித்து வரவேண்டும் என்கிற பழக்கம் அரசிடம் இல்லை. ஒரு விவசாயத்தை நம்பி இருக்கும் நாட்டுக்கு ஆறுகளை நீர்நிலைகளை அலட்சியம் செய்யும் போக்கு ஒரு சாபக்கேடு. 

இப்போது இந்த பொதுவான தமிழகத்தின் நிலைமைகளைத் தாண்டி மீண்டும் நமது உள்ளூர்ப் பிரச்சனைகளுக்கு வரலாம். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சி. எம். பி. திட்டம் தனது வேர்களைப் பரப்பிய பகுதிகளில் அதிரையும் அடங்கி இருந்தது. ‘அது ஒரு அழகிய நிலாக் காலம்’ என்று சொல்வார்களே அப்படி, காலில் வெள்ளிக் கொலுசு அணிந்து தத்தித்தத்தி நடந்து வரும் குழந்தையின் அழகுபோல் தங்கு தடையின்றி, கடைமடைப் பகுதியான அதிரையில் காவிரியில் நீர் வரும் காலங்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அதிரையின் மேற்குப் பகுதியான மிலாரிக்காடு எல்லையில் புகுந்து புறப்பட்டு வரும் கால்வாய் நீர், வரும் வழியில் இருக்கும் நன்செய் புன்செய் பயிர்களை நனைத்துக் கொண்டே சிற்றோடையாக ஓடி வரும். அப்படி வரும் நீர் வரும் வழியில் இருக்கும் அதிரையின் குளங்களை நிரப்பிக் கொண்டே வழிந்து ஓடி அடுத்த குளத்துக்குச் செல்லும். அப்படி செல்லுகின்ற வகையில் கால்வாயின் வழிகள் வருடந்தோறும் பொதுப் பணித்துறையால் செப்பனிடப் பட்டன. குளங்களுக்கு தண்ணீர் நிரம்புவதற்கு அந்தந்த பகுதிகளில் இருந்த இளைஞர்களும் தன்னார்வமாக தொண்டாற்றுவார்கள். ஆனால் இந்த நிலைமைகள் கடந்த பல வருடங்களாக மாறிப் போயின. நமதூர் மக்களின் வாழ்வாதாரமான தென்னை விவசாயம் பொய்த்துப் போன நிலைமைகளும் விளைவாக ஏற்பட்டன. 

இந்த வருடம், ஊர் காய்ந்த காய்ச்சலில், தொடர்ந்த கோரிக்கைகளின் காரணமாக தெருக்களின் அனைத்து முஹல்லாக்களும், பேரூராட்சித் தலைவரும் இந்தப் பிரச்னையை கைகளில் எடுத்துக் கொண்டனர். அதிரை பைத்துல்மால் கட்டிடத்தில் ஊரின் பல சமூக நல்லார்வமுடையவர்கள் கலந்து பேசி தண்ணீரைக் கொண்டு வந்து குளங்களை நிரப்புவதற்கான திட்டங்களை கலந்து ஆலோசித்தார்கள். அதன்படி செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டன. காரியங்களில் அதிரை பேரூராட்சித் தலைவரும் முன்னின்று தேவையான ஏற்பாடுகளை செய்ததோடு அல்லாமல் களத்தில் இறங்கியும் ஒத்துழைப்பு கொடுத்தார். 

இதுவரை எல்லாம் சரிதான். அதன்பின் நம்மவர்களுக்கே உரிய இயல்பான நண்டு வேலை ஆரம்பித்துவிட்டது. தண்ணீர் கொண்டு வந்த புகழை யார் பெற்றுக் கொள்வது என்று அரசியலின் அடிப்படையில் வேறு ஒரு அணி முயற்சிப்பதாக ஒரு வலைப்பூ செய்தி வெளியிட்டது. இவ்வளவு நாட்களாக இதற்காக முயற்சி எடுக்காத சிலர் மேற்சொன்ன முயற்சிகளைத் தடை செய்து வேறு வழியில் தண்ணீர் கொண்டு வருவதற்காக முயற்சி செய்கிறார்கள் என்று பேரூராட்சி மன்றத் தலைவரும் ஒரு காணொளிப் பேட்டியில் கோபமாக சாடிய பேட்டியினை அதிரையின் முன்னோடி வலைத்தளதில் பதிக்கப்பட்டது. தாகத்துடன் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்த மக்களின் நடுவே அரசியல் நீயா நானா போட்டி ஆரம்பித்து விட்டதைக் கண்ட நடுநிலையாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்கய்யா! என்ற புலம்பல்களும் வெளியாகின. 

இந்தப் பலே பலே போட்டி அனைத்துலக அகமான முகநூலிலும் எதிரொலித்தது. அடேயப்பா! எவ்வளவு வகை வகையான கருத்தாடல்கள். காட்டாமணக்குச் செடிகள் மண்டிப் போய் கால்வாயை அடைத்த போது காணப்படாதவர்கள்- கழிவு நீர் கால்வாயாக சி. எம். பி. சிற்றோடை சீர்கெட்ட நேரத்தில் காணாமல் போயிருந்தவர்கள் – மண்மேடுகள் இந்த வாய்க்காலை மூடி மறைத்த காலத்தில் முகத்தை மூடிக் கொண்டு தூங்கிக் குறட்டை விட்டவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வார்த்தை சண்டை போடத் தொடங்கினார்கள். ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்க ஆளைக் காணோம். ஆனால் செய்பவர்களையும் குற்றம் சொல்ல அரசியல் சாயம் பூசி பலர் படை எடுத்து வந்தார்கள். 

இவ்வளவு காலம் உடுப்பை துவைப்பதுதான் தண்ணீர் என நினைத்து இருந்தோம் . ஆனால் ஒருவர் மேல் ஒருவர் கடுப்பையும் காழ்ப்புணர்வையும் காட்டவும் தண்ணீர் பயன்படும் என்று இதன் மூலம் தெரிந்தது. வலது கரமாகவும் இடது கரமாகவும் செயல்பட வேண்டிய அதிகாரவர்க்கத்தில் இருந்த பேரூராட்சி மன்றத் தலைவருக்கும் மன்ற துணைத் தலைவருக்கும் இருந்த காழ்ப்புணர்வுகள் சி. எம். பி. வாய்க்காலில் தண்ணீர் பொங்கி பிரவாகம் எடுக்கும் முன்பே பிரவாகமெடுத்தது. 

பேரூராட்சியின் துணைத் தலைவரும் தனது பங்குக்கு தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு காணொளிப் பேட்டியை ஒளிபரப்பினார். அவர் வெண்டாக் கோட்டையில் இருந்து கரிசமணி ஏரி வழியாக தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக விளக்கம் கொடுத்தார். அவருடைய முயற்சிகளையும் பாராட்டுகின்ற அதே வேளையில் தமிழகத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த துணைத் தலைவருக்கும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த பேருராட்சி மன்றத் தலைவருக்கும் நிலவி வந்துள்ள ‘ஒத்துழையாமை’ வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலைமை மிக மிக துரதிஷ்டவசமானது என்பதை மக்கள் உணர்ந்து வருத்தப்பட்டனர். பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். ஆயிரம் ஆனாலும் அவரால் சில காரியங்களை சாதிக்க இப்போது அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இருக்கும். அந்த தொடர்பைக் கொண்டு ஊரின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நிர்வாகத்தினருக்கு இடையில் தேவைப்பட்டது புரிந்துணர்வு. ஆனால் இந்த புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஒரு குடம் வைத்துப் பிடிக்க வேண்டிய நிலை இதுவரை அதிரையின் வரலாற்றில் இல்லாத நிலை. 

இதற்கு இடையில் பேரூராட்சித் தலைவரின் களப்பணியில் இணைந்து பல நல்லெண்ணம் கொண்ட இளைஞர்களின் இரவு பகல் பாராத கடும் உழைப்பில் ஈடுபட்ட பல புகைப்படங்கள் வலை தளங்களில் வெளியாகி ஒரு நம்பிக்கையை துளிர் விடச் செய்தது. பலர் நிதி உதவியும் செய்தார்கள். துபாயில் இருந்து சம்சுல் இஸ்லாம் சங்கம் நிதி திரட்டி அனுப்பியதாக செய்திகள் வெளியாயின. இவ்வாறான உதவியைக் கொண்டும் சி. எம். பி. வாய்க்கால் அதிரைக்கு வரும் வழிகளில் இருந்த இடையூறுகள் யாவும் நீக்கப்பட்டு ‘செம்புலப் பெயல் நீர் அன்புடை நெஞ்சத்துடன் கலந்தது போல்’ செம்மண் நிறத்தில் நீர் வந்தது. வரும் வழியில் நெல்லுக் கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே பொசிந்தது. பல வருடங்கள் காணாத கன்றை கண்டுவிட்ட தாய்ப் பசுபோல் தண்ணீர், குளங்களின் செக்கடிக் குளத்திலும் ஆலடிக் குளத்திலும் ஆர்ப்பரித்துப் பாய்ந்து அவை நிரம்பத் தொடங்கின. வழிய வரவேண்டிய நீருக்கு வழியமைத்துக் கொடுத்து வரவேற்பு அமைத்து இந்த சாதனையை செய்து காட்டிய பேரூராட்சி மன்றத் தலைவரையும் அவரோடு பணியாற்றிய அனைத்து இளைஞர்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். 

ஆனாலும் !

ஆலடிக் குளத்துக்கும், செக்கடிக் குளத்துக்கும் முன்னதாக காட்டுக் குளம் என்ற குளமும் மரைக்கா குளமும் இருக்க , தண்ணீர் நேராக ஆலடிக் குளத்துக்கும், செக்கடிக் குளத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப் பட்ட முடிவுக்கு உரிய காரணம் ஊரில் பலருக்கு விளங்கவில்லை. குறிப்பிட்ட சில குளங்களுக்கு மட்டுமே இந்த முயற்சி என்றால் அது இன்னும் மோசமான நிலைமைகளில் இருந்து நாமும் நமது மனமும் விடுபடவில்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் இந்தப் பணியை செய்து முடிக்க வேண்டிய நிலையில் வாய்க்காலில் வந்த தண்ணீரின் அளவும் அழுத்தமும் அதிகமாக இருந்ததால் குளத்தில் பாய்ந்த தண்ணீர் வாய்க்காலில் விழுந்து பெருமளவு வீணாகி விட்டதாகத் தெரிகிறது. அவ்வளவு அழுத்தம் வரும் முன்பே காட்டுக் குளத்துக்கும் ஒரு கால்வாய் வெட்டிப் பாயும்படி விட்டு இருந்தால் இப்படி வீணான நீர் அந்தக் குளத்துக்கும் சென்று நிரம்பி இருக்கும் என்று ஒரு கருத்து பலமாக நிலவுகிறது. 

செக்கடிக் குளத்துக்கும் ஆலடிக் குளத்துக்கும் கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் மரைக்கா குளத்துக்கும் செடியன் குளத்துக்கும் கொடுக்கப் படவில்லை என்று தொடர்புடைய முஹல்லாவாசிகளுக்கு மனவருத்தம். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் இடம் தனியாக மனு கொடுத்து அனுமதி வாங்கி , தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் இளைய தலைமுறையின் நல்லதொரு உழைப்பால் மரைக்கா குளத்திலும் தண்ணீர் நிரம்பிக் கொண்டு இருப்பதாக தெரிகிறது. பொதுப் பணித்துறை, சி எம் பி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீர் விடுகிறார்கள். ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் நமது பகுதிக்குரிய கால்வாயில் தண்ணீர் வரும். இனி வரும் தண்ணீரை மகிழங்கோட்டை அருகே உள்ள பிரிவு வாய்க்காலில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து செடியன் குளத்துக்கும் தண்ணீர் செல்லும்படிச் செய்தால் பழியில் இருந்து தப்பலாம். 

நிற்க !

சில கேள்விகளை இங்கு வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறோம். தண்ணீர் பிரச்னை – குளங்களில் நீர் இல்லை என்பது அதிரையின் எல்லாக் குளத்துக்கும் எல்லாத் தெருவுக்கும் உரிய பொதுப் பிரச்னை. இது ஊர் தழுவிய பிரச்னை. இப்படிப் பட்ட ஜீவாதாரப் பிரச்னையைத் தீர்க்க திட்டமிடும்போது ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்கிற கோஷம் எழும்பாமல் பார்த்து எல்லோருக்கும் எல்லாம் என்கிற வகையில் செய்து கொடுக்க வேண்டியது பொறுப்பில் உள்ளோரின் பொறுப்பாகும் என்பதை மறுக்க இயலுமா?

இரண்டாவதாக, தண்ணீர் போன்ற தலையாயப் பிரச்னையில் கூட மக்கள் பிரதிநிதிகளால் கலந்து பேசப்பட்டு நமக்குள் புரிந்துணர்வை நிலை நாட்டி ஊருக்கு நல்லது செய்ய ஒன்றுபட முடியவில்லை என்றால் சாதாரணப் பிரச்னைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் எப்படி மேற்கொள்வார்கள் என்கிற மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? 

இப்போது ஊர் கூடி நீர் கொண்டு வந்தது போல் எல்லா வருடங்களும் மக்களே ஒன்று கூடி நிதி திரட்டி ஊருக்கு வேண்டிய காரியங்களை செய்து கொள்ள எல்லாக் காலங்களிலும் இயலுமா? அரசின் உதவிகளை நாம் பணிந்து கோர வேண்டுமா அல்லது துணிந்து எதிர்க்க வேண்டுமா?

நம்மவர்களின் ஒற்றுமையே ஊரின் பலம். தனி நபர்களுக்கிடையில் ஏற்படும் மனவருத்தங்களை பொதுவான ஊர்ப்பிரச்னைகளில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதும் ‘இருப்பவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ இருப்பதும் அனைவரையும் அரவணைத்து சாதனைகள் புரிவதும் பொறுப்பில் உள்ளோர்க்குரிய இன்றியமையாத கடமைகள். 

அதிரைநிருபர் பதிப்பகம்

29 Responses So Far:

Yasir சொன்னது…

ஒரு பொதுஅதிரையனின் மனசாட்சி இங்கே பேசி இருக்கின்றது...மிக முதிர்ச்சியாக நியாயமாக எழுதப்பட்டு இருக்கின்றது கட்டுரை....ஓரவஞ்சனையாக செய்யப்பட்டு இருக்கும் இந்த `குளம் நிரப்பும்` வைபவம் என்னைப் பொருத்தவரை பாரட்டதக்க செயல் அல்ல...

அபூ சுஹைமா சொன்னது…

நல்ல கட்டுரை. நீரின் பின்னுள்ள அரசியல் எனக்குத் தெரியாது. செக்கடி, ஆலடி குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்த பணி என்பதால் இந்த குளங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பார்கள் என்று நல்லெண்ணம் கொள்கிறேன். இது அரசுப் பணியாகவோ, கட்சிப் பணியாகவோ நடக்கவில்லை என்பதே என் நல்லெண்ணத்தின் அடிப்படை.

sabeer.abushahruk சொன்னது…

நல்ல அலசல்... வாய்க்கால் தண்ணீரிலா குளத்துநீரிலா அலசினீர்கள்? சுத்தமாகத் தெளிந்து விளங்குகிறது கட்டுரை.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற கற்றுக்குட்டித்தனமில்லாமல் நிதானமாகவும் நிறைவாகவும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை ஆவணப் படுத்தத் தகுந்தது.

அதிரையின் எல்லாத் தளங்களிலும் மீள்பதிக்கத் தகுந்தது.

வாழ்த்துகள் அ.நி.

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாம அலைக்கும்(வரஹ்)
மனமிருந்தால் மார்க்கமுண்டு!

தண்ணீர் வல்ல அல்லாஹ் வழங்கிய அருட்கொடை அல்லவா!

அல்லாஹ்வின் அருட்கொடையில் பொதுநலம் அவசியம்!
பொதுநலமில்லாமல், சுயநலம் இருந்தால்: அல்லாஹ்வின் சோதனைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்.

பொது நல நோக்கில் வரையப்பெற்ற கட்டுரை வாழ்த்துக்கள்!

sheikdawoodmohamedfarook சொன்னது…

காஸுகொடுதவர்களுக்கே தண்ணீர்என்றால் காசில்லாத ஏழைமக்கள் தண்ணீருக்கு எங்கேபோவார்கள்? மழைவேண்டி அண்ணாவியார் எழுதிய மழைபாட்டுபாடவேண்டியதுதானா?

sheikdawoodmohamedfarook சொன்னது…

அடுத்தபஞ்சாயத்து தேர்தலில் ஒட்டு கே ட்க்கும்போது பணத்தோடு அண்ணாவியார் மழைபாட்டு புத்தகமும் சேர்த்துக்கொடுங்கள். ராகம் போட்டு பாடிக்கொண்டிருக்கிறோம்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

பட்டுக்கோட்டை சந்தையில் வாங்கிய ஆடு அதிராம்பட்டினம் வந்தால் கழுதையாகிப்போகும்.இதில் சி.எம்.பி.தண்ணீர் விதிவிலக்கல்ல! அ.நி.தலையங்கம்./ நீதியின் தராசுமுள் யாருக்கும் வளையாத செங்கோலாய் நிமிர்ந்து நிற்கிறது.பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//ஆலடிகுளத்துக்கும் செக்கடி குளத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்ட காரணம் என்ன ?//
நிதியை நாடி நதி ஓடியது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நல்ல அலசல்

ஆனால் இவ்வரிகள் தவிர!
//ஆலடிக் குளத்துக்கும், செக்கடிக் குளத்துக்கும் முன்னதாக காட்டுக் குளம் என்ற குளமும் மரைக்கா குளமும் இருக்க , தண்ணீர் நேராக ஆலடிக் குளத்துக்கும், செக்கடிக் குளத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப் பட்ட முடிவுக்கு உரிய காரணம் ஊரில் பலருக்கு விளங்கவில்லை. குறிப்பிட்ட சில குளங்களுக்கு மட்டுமே இந்த முயற்சி என்றால்//

குறிப்பிட்ட இரு குளம் மட்டுமே நிரப்பி விட்டு தொடர்ந்து தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தும் திருப்பி விடப்பட்டு தடுக்கப்பட்டு நயவஞ்சகம் செய்திருந்தால் மட்டுமே மேற்குறிப்பிட்ட வரி முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
குளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்த பணி என்பதால் பொறுப்பில் உள்ளவர் வாழ்ந்த வளர்ந்த இந்த குளங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பார்கள் என்று நல்லெண்ணம் கொள்வதே சகிப்புக்கும் அடுத்த குளங்கள் பற்றிய முயற்சிக்கும் நல்லது. அதை விட்டு ஆரம்பத்திலேயே குழப்ப நினைப்பது நல்லதல்ல.
மாநிலத்தின் திட்டங்கள் காஞ்சி புரம் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களை கடந்து தான் தஞ்சை வரும் என்றிருந்தால் என்னாவது?
தேவை முன்னுரிமை அடைப்படையில் திட்டம் வந்தடைவது தப்பே இல்லெ என்பதை விளங்காதவர்கள் அறிய வேண்டும்.

Shameed சொன்னது…

CMP வாய்காலில் தண்ணீர் வந்தது பற்றி வந்த கட்டுரைகளிலே முதல்தரமான கட்டுரை இது என்பது என் கருத்து காரணம் தட்ட வேண்டிய இட்டத்தில் தட்டியும் குட்ட வேண்டிய இடத்தில் குட்டியும் நடு நிலைமையுடன் வந்த கட்டுரைஎன்பதால்

Shameed சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Shameed சொன்னது…

காட்டுக்குளத்திற்கு முதலில் நீர் நிறைத்து இருந்தால் ஊர் முழுதும் ஓரளவு பயன் அடைந்து இருக்கும் காரணம் ஊருக்கு நீர் அளித்துவரும் ஆழ்துளை கிணறுகள் பெரும்பாலும் காட்டு குளத்தை சுற்றியோ அமைந்துள்ளது இந்தக்குளம் முதலில் நிறைந்தால் அதன் சுற்றுப்பகுதிகளின் நிலத்தடி நீர் மேம்பட்டு இருக்கும்

நீர் நிறைந்த குழப்பகுதியை சார்ந்தவர்கள் முன்னெடுத்த பணி என்பதால் முதலில் அவர்கள் பகுதிக்கு நீர் கொண்டு சென்றது சஹன் பரத்த கூடியவர்கள் முதலில் சாப்பிட்டு முடித்துவிட்டு பிறகு விருந்தாளிகளை கவனித்ததுபோல் போல் ஆகிவிட்டது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

காட்டுக்குளம் நிறைந்தால் சுற்றியுள்ள மண் வளம் நிச்சயம் உயரும்.

செக்கடி நிறைந்தால் மண் வளம் ப்ளஸ் மன வளம் தரும் இயற்கையும் அழகு பெறுமே!

சாப்பாடு விசயத்தை தானும் உண்டு பிறருக்கும் என்று எடுத்துக் கொண்டால்?

sabeer.abushahruk சொன்னது…

வெட்டிக்குளம்:

தத்தளிச்சு - பின்னர்
நான் தப்படிச்சு
குளித்த குளம்

வெட்டெடுக்க நாதியின்றி
தட்டெடுத்து வைத்ததுபோல்
குட்டையாகிப் போனதுவே

வெட்டிக்குளம் ஈன்ற
குட்டிக்குளம் தாந்தோன்றி
புதைத்து நாளாச்சு
புதிதுபுதிதாய் வீடாச்சு

ஊருணியோ உலர்ந்தாச்சு
வெட்டிக்குளம் இப்ப
வெடிப்புக் குளமாச்சு

அடுத்த வருட
கந்தூரி ஊர்வலத்தில்
வெட்டிக்குள மாடல் வரும்

தூத்துப்போடும் நாள்
தூரத்தில் இல்லை
வெட்டிக் குளம் அழித்த
வெட்டியான குலம் எமதே!

Ebrahim Ansari சொன்னது…

நியாயமான கட்டுரையாக தோன்றுகிறது.

தம்பி ஜகபர் சாதிக் குறிப்பிட்டபடி இதில் வஞ்சகம் என்கிற வார்த்தையை சொல்ல விரும்பவில்லை. அதே நேரம் இப்படி குறிப்பிட்ட சில குளத்துக்குத்தான் தண்ணீர் என்ற்கிற நிலைப்பாடு எடுத்து செயல்படும்போது இணைய தளங்களில் , அதிரைக்குத் தண்ணீர் என்று தலைப்பிட வேண்டியதில்லை. செக்கடிக் குளத்துக்கும் ஆலடிக் குளத்துக்கும் தண்ணீர் என்று தலைப்பிட்டு இருக்கலாம்.
யாரும் இதை பிரச்னையாக நினைக்க மாட்டார்கள்.

மேலும் பேரூராட்சித்தலைவர் அவர்கள் முன்னின்று நடத்திய பணி என்பதால் அது பொதுவான் பணியாக இருக்குமென்று மொத்த ஊரின் கடைமடைப் பகுதியான கரையூர் தெரு வரைக்கும் தண்ணீர் வருமென்று என்னைப் போல பல பேயன் களெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தோம்.

தோழர் அபூ சுகைமா அவர்கள் // செக்கடி, ஆலடி குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்த பணி என்பதால் இந்த குளங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பார்கள் என்று நல்லெண்ணம் கொள்கிறேன். இது அரசுப் பணியாகவோ, கட்சிப் பணியாகவோ நடக்கவில்லை என்பதே என் நல்லெண்ணத்தின் அடிப்படை.// ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் ஒரு நெருடல்-

பிரச்னை ஊர் முழுதுக்கும் பொதுவானது. ஊரின் அனைத்துத் தரப்பு சமூக நல ஆர்வலர்களையும் ஒன்று கூட்டி பைத்துல் மாலில் வைத்தே இதற்கான திட்டம் தீட்டப்பட்டு நிதியும் அப்போதே திரட்ட ஆரம்பிக்கப் பட்டது. உதாரணத்துக்கு, அந்தக் கூட்டத்தில் கடல்கரைத் தெருவைச் சேர்ந்த அக்பர் ஹாஜியாரும் , பிலால் நகரைச் சேர்ந்த வாப்பு மறைக்காயரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பொதுவான திட்டம் போடவேண்டுமென்ற எண்ணம் இருந்ததால் ஒரு முஹல்லாவுக்கு இவ்வளவு பணமும் இவ்வளவு ஆட்களும் வேண்டுமென்று கேட்டு இருந்தால் தந்து இருப்பார்கள். சம்சுல் இஸ்லாம் சங்கம் தந்த இருபத்து ஐந்தாயிரத்தால் மட்டுமே இந்தக் காரியம் சாதிக்கப் படவில்லை.

அதிரையின் பூகோளம், தண்ணீர் கொண்டுவருவதற்காக ஒரு பூகோளம் என்றும் வாக்குக் கேட்பதற்காக ஒரு பூகோளம் என்றும் பிளவு படுத்தப படுவது ஒரு நெருடலே

மற்றவர்களைப் "பார்க்க வைத்துக் கொண்டு " தின்றதைப் போலவே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு சிறு எல்லையிலேயே இப்படி மனப்பான்மைகள் இருக்கும்போது கர்நாடகத்தை குறைசொல்ல நமக்கு சற்றும் தகுதியில்ல. .


sheikdawoodmohamedfarook சொன்னது…

//குறிப்பிட்ட இரு குளங்கள் மட்டுமே நிறப்பிவிட்டு தொடர்ந்து// காட்டுக்குளதுக்கும் மரைக்கார் குளத்துக்கும் அப்பால்இருக்கும் அந்த இரு குளங்களுக்கும் முதல் சலுகை அளிக்க அந்த இரு குளங்களும் நபிமார்கள் வெட்டிய புனித குளமா ?அதில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம்கறைந்து புண்ணியம் நிறைந்து புனிதவானாக ஈர வேட்டியுடன் சொர்க்கம் போய் சேர்ந்து விடமுடியுமா?

sheikdawoodmohamedfarook சொன்னது…

ஈத்பெருநாளில் மத நல்லிணக்க கூட்டம் கூட்டிசர்வ மதஒற்றுமை பற்றி போதனை செய்தோம்.இப்போது தண்ணீரில் வேற்றுமை காட்டி வேதனை செய்தோம்.

Ebrahim Ansari சொன்னது…

http://4.bp.blogspot.com/-vyPdlEwzXJw/UrFC2INc8RI/AAAAAAAAJTY/kLdjftl2AJA/s1600/IMG-20131218-WA0017-795032.jpg

அதிரடியாக களத்தில் இறங்கிய சமூக ஆர்வலர்கள். -

யாருக்காக ? இது யாருக்காக?

Ebrahim Ansari சொன்னது…

//வெட்டிக்குளம்:

தத்தளிச்சு - பின்னர்
நான் தப்படிச்சு
குளித்த குளம்

வெட்டெடுக்க நாதியின்றி
தட்டெடுத்து வைத்ததுபோல்
குட்டையாகிப் போனதுவே

வெட்டிக்குளம் ஈன்ற
குட்டிக்குளம் தாந்தோன்றி
புதைத்து நாளாச்சு
புதிதுபுதிதாய் வீடாச்சு

ஊருணியோ உலர்ந்தாச்சு
வெட்டிக்குளம் இப்ப
வெடிப்புக் குளமாச்சு

அடுத்த வருட
கந்தூரி ஊர்வலத்தில்
வெட்டிக்குள மாடல் வரும்

தூத்துப்போடும் நாள்
தூரத்தில் இல்லை
வெட்டிக் குளம் அழித்த
வெட்டியான குலம் எமதே!//

ஒரு நல்லெண்ணத்தில் சொல்கிறேன். அந்தந்தத் தெருவாசிகள் இதற்காக மீண்டும் நிதி திரட்டி உங்கள் முகல்லாவில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு இது போல காரியங்களில் ஊருக்குப் பொதுவாக செய்வதை விட்டுவிட்டு வருடா வருடம் காலண்டர் மட்டும் விநியோகித்துக் கொண்டு இருக்கிறது.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//வெட்டிக்குளம்தூத்துபோடும் நாள் தூரத்தில் இல்லை// வீடுகட்ட ப்ளூபிரிண்ட் ரெடிஆச்சா?

crown சொன்னது…

நியாயமான கட்டுரையாக தோன்றுகிறது.

தம்பி ஜகபர் சாதிக் குறிப்பிட்டபடி இதில் வஞ்சகம் என்கிற வார்த்தையை சொல்ல விரும்பவில்லை. அதே நேரம் இப்படி குறிப்பிட்ட சில குளத்துக்குத்தான் தண்ணீர் என்ற்கிற நிலைப்பாடு எடுத்து செயல்படும்போது இணைய தளங்களில் , அதிரைக்குத் தண்ணீர் என்று தலைப்பிட வேண்டியதில்லை. செக்கடிக் குளத்துக்கும் ஆலடிக் குளத்துக்கும் தண்ணீர் என்று தலைப்பிட்டு இருக்கலாம்.
யாரும் இதை பிரச்னையாக நினைக்க மாட்டார்கள்.

மேலும் பேரூராட்சித்தலைவர் அவர்கள் முன்னின்று நடத்திய பணி என்பதால் அது பொதுவான் பணியாக இருக்குமென்று மொத்த ஊரின் கடைமடைப் பகுதியான கரையூர் தெரு வரைக்கும் தண்ணீர் வருமென்று என்னைப் போல பல பேயன் களெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தோம்.

தோழர் அபூ சுகைமா அவர்கள் // செக்கடி, ஆலடி குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்த பணி என்பதால் இந்த குளங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பார்கள் என்று நல்லெண்ணம் கொள்கிறேன். இது அரசுப் பணியாகவோ, கட்சிப் பணியாகவோ நடக்கவில்லை என்பதே என் நல்லெண்ணத்தின் அடிப்படை.// ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் ஒரு நெருடல்-

பிரச்னை ஊர் முழுதுக்கும் பொதுவானது. ஊரின் அனைத்துத் தரப்பு சமூக நல ஆர்வலர்களையும் ஒன்று கூட்டி பைத்துல் மாலில் வைத்தே இதற்கான திட்டம் தீட்டப்பட்டு நிதியும் அப்போதே திரட்ட ஆரம்பிக்கப் பட்டது. உதாரணத்துக்கு, அந்தக் கூட்டத்தில் கடல்கரைத் தெருவைச் சேர்ந்த அக்பர் ஹாஜியாரும் , பிலால் நகரைச் சேர்ந்த வாப்பு மறைக்காயரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பொதுவான திட்டம் போடவேண்டுமென்ற எண்ணம் இருந்ததால் ஒரு முஹல்லாவுக்கு இவ்வளவு பணமும் இவ்வளவு ஆட்களும் வேண்டுமென்று கேட்டு இருந்தால் தந்து இருப்பார்கள். சம்சுல் இஸ்லாம் சங்கம் தந்த இருபத்து ஐந்தாயிரத்தால் மட்டுமே இந்தக் காரியம் சாதிக்கப் படவில்லை.

அதிரையின் பூகோளம், தண்ணீர் கொண்டுவருவதற்காக ஒரு பூகோளம் என்றும் வாக்குக் கேட்பதற்காக ஒரு பூகோளம் என்றும் பிளவு படுத்தப படுவது ஒரு நெருடலே

மற்றவர்களைப் "பார்க்க வைத்துக் கொண்டு " தின்றதைப் போலவே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு சிறு எல்லையிலேயே இப்படி மனப்பான்மைகள் இருக்கும்போது கர்நாடகத்தை குறைசொல்ல நமக்கு சற்றும் தகுதியில்ல. .
-------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். வேதனையுடன் முன்மொழிகிறேன். நீர் அடித்து நீர் விலகும் அவலம்!ஓர் குலம் என்பது சேறு குளமாய், இப்படி நீண்டதொரு பிரட்சனையில் குட்டையை குழப்பி அரசியல் தூண்டி(ல்)விட்டதார்?
-----
நன்றி: அ.இ காக்கா.

ZAKIR HUSSAIN சொன்னது…

நீரின் குணம் அது ஏற்றம், தாழ்வு , எதுவும் பார்க்காது.

அதிராம்பட்டினத்து அதே நீர் வளம் கிடைத்தால் அதன் குணத்தையே மாற்றும் பாகுபாடுகள் போதிக்கப்படும்.

அதிராம்பட்டினத்தான் ஆட்டை கழுதையாக்கியவன் என்ற சொலவடை இருக்கிறது.

இனிமேல் தண்ணீருக்கும் பேதம் கற்பித்தவன் என்று சொலவடை வந்து விடலாம்.

M.I.அப்துல் ஜப்பார் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு தெரிந்த சில உண்மைகளை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்
அதிரை சேர்மனுடன் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் அதிரைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து சுத்தம் செய்தது C M P வாய்க்காலை மட்டும் தானே தவிர செக்கடி குளத்திற்கு செல்லும் வாய்க்காலை இல்லை என்பதை முதலில் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் நான் உட்பட அதிகமான மக்கள் தண்ணீர் வருவது கஷ்டம் என்றுதான் நினைத்தார்கள்
அல்லாஹ்வின் உதவியால் தண்ணீர் அதிரைக்கு வந்தது C M P வாய்காலில் இருந்து குளத்திற்கு செல்லும் வாய்க்கால் சுத்தமாக இ ருந்தது செக்கடி குளத்திற்கும் ஆலடிக்கள்த்திற்கு மட்டும் மன்னப்பா குளத்திற்கு உள்ள வழிகள் மட்டுமே இதனால் தான் முதலில் செக்கடிக்குளத்திற்கு தண்ணீர் விட்டார்கள் அதன் உபரி தண்ணீர்தான் ஆலடிக்குளத்திற்கு சென்றது C M P வாய்க்காலில் தண்ணீர் வந்துக்கொண்டு இருக்கும்போது மேலத்தெருவை சார்ந்த சில நன்பர்கள் (மறுத்தால் பெயரை வெளியிடுவேன்) அஸ்லத்தை பார்த்து மரைக்காயர் குளத்திற்கும் தண்ணீர் விடுங்கள் என்று கோரிக்கை வைத்தபோது அஸ்லம் சொன்ன வார்த்தை தண்ணீர் விடுவோம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழியை சரிசெய்யுங்கள் என்று சென்னபோது தானும் பக்கத்தில் இருந்தேன் உண்மையில் இங்கு கருத்திட்ட சகோதர்கள் கூறியதுபோல ஒருவேலை ;சேர்மன் உள்ளத்தில் உள்ளதை வெளிகாட்டுவதற்கு கூட வாய்ப்பழிக்காமல் தண்ணீiரை நிறுத்திவிட்டார்கள் செக்கடிக்குளம் முழுமையாக நிரம்பிர பிறகு மரைக்காயர் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை என்றால் சேர்மனை குறை கூறலாம்

sheikdawoodmohamedfarook சொன்னது…

நடந்தவரை சரி! இனி மற்ற குளக்கரை ஓரங்களில் கொக்கு குருவிகள் எப்போ வரும் என்று பேரூர்ஆட்சி தலைவர் சொல்வாரா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சேர்மன் சொல்றார். ஐயப்பட்டவர்கள் கேட்டு அறிய லிங்க் இதோ
www.facebook.com/photo.php?v=1407336532842144

Ebrahim Ansari சொன்னது…

எந்த சமூக நல ஆர்வலர்கள் ஒன்று கூடி இந்தத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டதோ அவர்களை மீண்டும் கூட்ட வேண்டும். நடந்த விஷயங்களை எடுத்துச் சொல்லி விவாதித்து தவறான புரிந்துணர்வுகளை நீக்கி ஒன்றுபட வேண்டும். பேரூராட்சித் தலைவர் அவர்கள் சொல்வது போல்வரும் தண்ணீரை அரசியல் நோக்கம் உடையோர் தடுத்து நிறுத்தி இருந்தால் அவர்களை எதிர்த்து அனைத்துத் தெருவினரும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். ஒரு வாழ்வு ஆதாரமான செயலில் அரசியல் சாயம் பூசி அதைத் தடுத்து நிறுத்துவார்களானால் அப்படிப்பட்ட பாவிகளை மன்னிக்கவே கூடாது. இதற்கு மக்கள் இயக்கம் காண வேண்டும்.

மற்றொரு விஷயம், யாரும் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இந்தப் பிரச்சனையில் கருத்துத் தெரிவித்த சில நண்பர்கள் , செக்கடிக் குளம் மற்றும் ஆலடிக்குளத்தை அடுத்து வாழ்பவர்கள் செய்த முயற்சியால்தான் தண்ணீர் வந்தது என்றும் அதனால் மற்றவர்கள் வருத்தப் பட வேண்டாமென்றும் கருத்துப் பட கருத்துத் தெரிவித்து இருந்தார்கள்.தண்ணீர் முன்னுரிமை என்றெல்லாம் பேசினார்கள். தண்ணீர் முன்னுரிமை எல்லோருக்கும் பொதுவானதே.

பேரூராட்சித்தலைவர் சம்பந்தப் பட்டதால் ஊர் முழுதும் உள்ள குளங்கள் தண்ணீரை எதிர்பார்த்தன என்று மற்றவர்கள் வாதிட்டனர்; நினைத்தனர்; இப்படி சதிகாரர்கள் தண்ணீரை தடுத்து நிறுத்தினார்கள் அதனால் மற்ற குளங்களுக்கு தண்ணீர் வர இயலவில்லை என்பதை அன்றே போட்டு உடைத்து இருந்தால் இவ்வளவு மன வருத்தங்கள் வளர்ந்து இருக்காது.

இப்போதும் ஊர் மக்கள் - நல்லவர்கள- உண்மையான சமூக ஆர்வலர்கள் பேரூராட்சித்தலைவர் அவர்களின் பின்னால் அணி திரளத் தயாராகவே இருப்பார்கள். " கருப்பு ஆடுகளை " அடையாளம் காட்டுங்கள்.

அவர்களால் தடுக்கப் பட்ட நீரை மீண்டும் கொண்டுவர மக்கள் ஒத்துழைப்புடன் மீண்டும் அரசை அணுகுங்கள்.

Ebrahim Ansari சொன்னது…

Dear Thambi Crown ,

Wa alaikkumussalam.

Jasak Allah.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு