Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று! நாளை! – தொடர் - 23 13

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2013 | , , , ,

நேற்றும் இன்றும் நீதிமன்றங்களின்  முன்  வரும் வழக்குகள் பல விசித்திரமானவையாகவும் அவற்றின் தீர்ப்புகள் வெளிவரும்போது மக்களால் நம்ப முடியாமலும் இருந்து இருக்கின்றன. நாளையும் இப்படித்தான் ஆகுமென்று நாம் சொல்ல முடியும். சில நேற்றைய  மற்றும் இன்றைய வழக்குகளைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டத்தை பானைச் சோற்றை பதம் பார்க்கும் வகையில் பார்க்கலாம்.  சுதந்திர இந்தியாவில்தான் இந்த நிலை என்பதல்ல. சுதந்திரத்துக்கு முன்பே அதாவது நேற்று சில பிரபலங்கள் மேல் குற்றச்சாட்டுகள் வந்ததும் அதை புலனாய்வுத்துறை கையாண்ட விதமும் நீதிமன்றத்தில் அவைகளை சமர்ப்பித்த விதமும் பின் அதை முன்னிட்டு நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்புகளும் இன்று சங்கரராமன் கொலை வழக்கு கையாளப்பட்ட முறைகளுக்கு சற்றும்  இளைத்தவை அல்ல.

தமிழ் நாட்டில் புகழ் பெற்ற கொலைவழக்கு என்றால் நேற்றைய வயதினருக்கு நினைவுக்கு வருபவற்றுள்  லட்சுமி  காந்தன் கொலை வழக்கும் ஒன்றாகும்.  இந்த லட்சுமிகாந்தன் என்பவர் ஒரு பத்திரிகை ஆசிரியர். பத்திரிகை என்றால் தினமணியோ தினத்தந்தியோ மாலைமுரசோ போல அல்ல. நாட்டில் பிரபலமாக இருக்கும் பலரின் அந்தரங்க வாழ்வை ஆராய்ந்து பரபரப்பான பாலியல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதுதான் இவர் நடத்திய பத்திரிகையின் முக்கிய வேலை. இது ஒரு பாலியல் புலனாய்வு பத்திரிகை.  இப்படி வெளியிடுவதில் சில உண்மைகளும் இருக்கும் என்று சொல்கிறார்கள். உண்மைகள் கசக்கும் என்று சொல்வார்கள். அப்படிக் கசிந்து ,  கசந்த உண்மைகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டு, தொடர்புடையோரை சலனப்படுத்தி கோபம்  கொள்ள வைத்ததென்னவோ உண்மை.

திரைத்துறையில் இருப்பவர்களே இவரது முக்கியக் குறி. திரைத்துறையில் இருப்பவர்கள் சற்று அப்படி இப்படி ‘கண்போன போக்கிலே கால் போகும் ‘ வாழ்வை வாழ்பவர்கள்தான் என்பது உலகறிந்ததே. கருவாட்டு வியாபாரம் செய்பவர்களிடம் மல்லிகையின் மணத்தை எதிர்பார்க்க இயலாதுதான் . அப்படிப்பட்ட     ‘ ஒருமாதிரியான ‘செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு அவதூறு பரப்புவதே இந்தப் பத்திரிகையின் வேலை. சுருக்கமாக சொல்லப்போனால் அது,  நீல விஷயங்களை பச்சையாக எழுதும் ஒரு மஞ்சள் பத்திரிக்கை.

அந்தப் பத்திரிகையின் பெயர் இன்னும் விபரீதமானது ; வேடிக்கையானது . பத்திரிகையின் பெயர்  இந்துநேசன் என்பதாகும். ஆனால் இந்தப் பத்திரிக்கை இந்து மதத்தை சார்ந்தது அல்ல. அந்த மதத்தின் கோட்பாடுகளை பரப்பியதோ எழுதியதோ அல்ல. இப்படிப்பட்டத்  தரம் உள்ள   பத்திரிகையை  நடத்திய லட்சுமி காந்தன் பலதரப்பில் இருந்தும் பகையைத் தேடி வைத்து இருந்தார்.

அவரை யாரோ சிலர் 1944 நவம்பர் ஒன்பதாம் நாள் கத்தியால் குத்திவிடுகிறார்கள். கொலையாளிகளை யார் என்று ஊகிக்க எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் மரணம் அடையும் முன், லட்சுமி காந்தனின்  வாக்கு மூலம் வடிவேலு மற்றும் நாகலிங்கம் என்று பெயர்களைக்  குறிப்பிடுகிறது. அவர்களுடன் இன்னும் சிலர் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் லட்சுமி காந்தனைக்  கொலை செய்ய மோடிவ் என்கிற நோக்கம் இல்லை. இவர்கள் கூலிப் படையினரே. இவர்களுள் ஒருவன் ஜெயாநாதன். திடீர் திருப்பமாக ஜெயாநாதன்  அப்ரூவராக மாறுகிறான். அப்போது ஒரு க்ளூ கிடைக்கிறது.

லட்சுமிகாந்தன்  ஏற்கனவே நடத்திவந்த ‘சினிதூது’  என்கிற பத்திரிகையை தடை செய்யும்படி  அன்றைய  கவர்னரிடம், எம் கே டி தியாகராஜ   பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் மனுகொடுத்திருந்தார்கள். மேலும் இவர்கள் இருவரையும் பற்றியும்  பலமுறை பாலியல் தொடர்பான செய்திகளை இந்துநேசன் வெளியிட்டது. இப்படியான சில பல முகாந்தரங்களை முன்வைத்து  நவம்பர் 27ஆம் நாள்  வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டு, அன்றைய சூப்பர் ஸ்டார் ஆன பாகவதரும் புகழ்பெற்ற கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனும் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக வெள்ளைக்காரனின்  நிர்வாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

அன்றைய காலங்களில் உலகப்போர் செய்திகளைக் கேட்பதற்காக வானொலியை உயிர்ப்பித்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ”லெட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடிகர் எம். கே. தியாகராஜா பாகவதர், நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், மற்றும் படத்தயாரிப்பாளர் எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு கைது செய்யப்பட்டார்கள் என்பதே அச்செய்தி. கைது ஆன அடுத்தநாள் முதலே  பாகவதர், மனிதருள் மறைந்திருந்த நரிகளையும், நாய்களையும் புரிந்துகொள்கிறார். சிரிக்க சிரிக்க அட்வான்ஸ் கொடுத்த பட அதிபர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். பொறாமைகொண்ட போட்டியாளர்கள் மகிழ்கிறார்கள். துன்பத்தில் விட்டு விலகி ஓடுபவர்களைக் கண்டு வேதனைப்படுகிறார்.  ‘மன்மதன் லீலையை வென்றார் உண்டோ ‘ என்று அவர் பாடியதும் மறந்து போகிறது. ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் காட்ட ‘ யாரும் அவருடன் இல்லை.

இடையில் சிலகாலம் ஜாமீனில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் வழக்கு விசாரணை பூர்த்தியானபோது,  வடிவேலு, நாகலிங்கம், ஆரிய வீரசேனன், ராஜபாதர் ஆகியோர் கொலை செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டனர். இவர்களைத் தூண்டி கொலைக்கான சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக தண்டிக்கபபடவேண்டுமென்று  ஒன்பது பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் ஆறுபேர் தீர்ப்பு வழங்கியதால்   பாகவதர் மற்றும் என் எஸ் கே க்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு ஜாமீன் ரத்துசெய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல காரணங்களை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல் முறையீடு செய்தார்கள். 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அதன்பின் அன்றைய  வழக்கப்படி லண்டன் பிரிவி கவுன்சிலில் மேல் முறையீடு செய்தனர். மிக கடும் சட்டமுயற்சிகளுக்கு பிறகு லண்டனில் உள்ள பிரிவியு கவுன்சில் அளித்த தீர்ப்பால்,  இரண்டு வருடம் மூன்று மாத சிறைவாசத்திற்குப் பிறகு நிரபாரதி என இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள். விடுதலைக்கு லண்டன் பிரிவி கவுன்சில் அளித்த தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் அப்ரூவர்  ஜெயந்தன் கொடுத்த வாக்கு மூலத்தில் இருந்த குழப்பங்கள். ஆறுவகையான வாக்குமூலங்களை அப்ரூவர் கொடுத்திருந்தார். (இதைப் படிக்கும்போது புதுவை- காஞ்சி-  பிறழ் சாட்சி ஆகியவை நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. ) இதனால் சாட்சியம் நிருபிக்கப்படவில்லை என்று இருவரும் விடுதலை ஆனார்கள்.   நிரபராதி என நிருபிப்பதற்குள் பாகவதரும், கலைவாணரும் சம்பாதித்த அனைத்தையும் இழக்க வேண்டியதாகிவிட்டது. அந்தக் காலத்திலேயே வழக்காட வந்த பம்பாய் வக்கீல் கே. எம். முன்ஷிக்கு ஒரு நாளைக்கு ரூ . 75,000/= தரப்பட்டதாம்.


சிறையில் இருந்து விடுதலையான இருவரின் வாழ்க்கையிலும் நேர்மாறான விளைவுகள். அன்றைய சூப்பர் ஸ்டார் ஆக இருந்த தியாக ராஜ பாகதவரின் வாழ்க்கை பெரிய சரிவை சந்தித்தது. ஒருகாலத்தில், அவர் கேட்ட தொகையைக் கொடுத்து திரைப்படங்களில் புக் செய்தவர்கள் இன்று அவரை எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்ககூட இல்லை. ‘வாழ்க்கை என்னும் ஓடம வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்கவொன்னா வேதம்’ என்று பாடாத குறையாக ஏழ்மை நிலைக்குத் தள்ளப் பட்டார். தன்னுடைய இறுதிக் காலத்தில் கோயில்களில் பாட்டுப் பாடி ஜீவனம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். “ என்னைப் போல வாழ்ந்தவனும் இல்லை என்னைப் போல வீழ்ந்தவனும் இல்லை என்பது அவரைப் பற்றிய அவருடைய கணிப்பும் கருத்தும்.

அதற்கு மாறாக, என் எஸ் கிருஷ்ணனின் வாழ்வு மறுமலர்ச்சி கண்டது. காரணம் திராவிட இயக்கங்களில் தொடர்புடையோர் சுயமரியாதை பிரச்சாரத்துக்கு திரைப்படங்களை கருவியாகப் பயன்படுத்தும் காலம் ஆரம்பமானதால் என் எஸ் கிருஷ்ணனை ,  அந்தப்  புதிய பரிணாமம்  மிக உயரே தூக்கியது. தனது  மனைவி மதுரத்துடன் இணைந்து பல சிரிக்கவும் சிந்திக்கவுமான கருத்துக்களை பரப்பினார். கலைவாணர் என்ற பட்டமும் வழங்கப் பட்டார்.


லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பின் தமிழகத்தில் புகழ்பெற்ற கொலை வழக்கு, 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்காகும். இன்றும் கூட , வருடம் தோறும பரமக்குடிப் பகுதியை பரபரப்பாக்கும் நிகழ்வு அது. தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும்  வகுப்பைச் சார்ந்தவர்.  தேவர் சாதி யைச் சேர்ந்தவர்களால் , அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி , தனது 33 ஆம் வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில்    புகழ்பெற்ற முதுகுளத்தூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி இருந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வாழ்க்கையை நாம் பலவகையில் இன்று பார்க்க முடிகிறது. அவரது ஆரம்ப கட்டத்தில் தேசவிடுதலையில் பங்கெடுத்துச் சிறை சென்றவராக, சமூக சீர்திருத்தவாதியாக, தொழிற்சங்கவாதியாகக் காண்கிறோம். இரண்டாம் கட்டத்தில் அவர் காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை இழந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி, அரசியலில் தனிமைப்பட்டு, கசப்படைந்த சாதித்தலைவராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் அவர் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. காமராஜருக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் கசிந்த நீயா நானா போட்டியும் இந்த வழக்கில் தேவர் சேர்க்கப் படக் காரணம் என்கிற கருத்தும் நிலவுகிறது. தலித் இந்துக்கள்  கிருத்தவர்களாக மதம் மாறுவதன் பின்னணியும் இம்மானுவேல் சேகரன் கொலை  செய்யப் படுவதற்குக் காரணம் என்றும் சொல்லப் படுகிறது.

அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. அதனால் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

இம்மானுவேல் கொலை வழக்கின் விசாரணை புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அனந்த நாராயணன் முன்னிலையில் நடைபெறத் தொடங்கியது. இந்த வழக்கை அரசுத்தரப்பில் நடத்த அரசு வழக்கறிஞராக எத்திராஜ் என்கிற புகழ்பெற்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். இம்மானுவேல் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராக பணிபுரிய எண்ணற்ற வழக்கறிஞர்கள் தயக்கம் காட்டினார்கள். காரணம் பல மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதைக் காரணம் காட்டி திருச்சி மற்றும் திருநெல்வேலி  பகுதிகளைச் சேர்ந்த சில சிறந்த வழக்கறிஞர்கள் ஆரம்பத்தில் ஒப்புதல் காட்டிவிட்டு பின்பு ஒதுங்கிக் கொண்டார்கள்.  முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் சார்பில் வாதிடுவதற்காக அன்றைய மிகப் பிரபலமான வி. ராஜகோபாலாச்சாரியார் அமர்த்தப் பட்டு இருந்தார்.

விசாரனை ஆரம்பம் ஆன அன்று சிறையில் இருந்து தேவர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அந்த நாயகனைக் காண புதுக் கோட்டை நீதிமன்றத்தில் மக்கள் கூட்டம் கொந்தளித்துக் கூடியது. அவர் நல்லவரா? கெட்டவரா? என்று பலர் மனங்களில் வினாக்கள். வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வழக்குக் கூண்டில் முத்துராமலிங்கத்தேவர் ஏறி நின்று வணக்கம் சொல்லி கை கூப்பினார்.

அப்போது அரசு வழக்கறிஞர் எத்திராஜ் எழுந்து நீதிபதியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “ கனம நீதிபதி அவர்களே! முத்துராமலிங்கத் தேவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மக்களின் அன்புக்குப் பாத்திரமானவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளவர். விசாரணை நடைபெறும் நேரத்தில் விசாரணைக்  கூண்டில்  அவர் நின்று கொண்டு இருப்பது சரியாகத் தோன்றவில்லை. அவர் உட்காரத்தக்க வகையில்  கூண்டில் ஒரு நாற்காலி போட ஆணையிடுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் “ என்றார். அனைவரும் அரசு வக்கீலை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நீதிபதியும் கோரிக்கையை ஏற்று ஒரு நாற்காலி போட ஆணையிட்டு தேவரை அதில் அமர்ந்துகொள்ளச் சொன்னார். தேவரும் நன்றி சொல்லி அமர்ந்தார். அரசு வழக்கறிஞரின் இந்த நல்லெண்ண கோரிக்கை மரபுகளை மீறிய கைதட்டலை நீதிமன்றத்தில் ஒலிக்கச் செய்தது. அரசு வழக்கறிஞர் நியாய உணர்வுடன் நடந்து கொள்வார் என்ற எண்ணம் தேவரின் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையின் பின்னணியில் காமராசர் இருந்ததாக ஒரு செய்தி உண்டு.

அடுத்து இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அரசு தரப்பில் வழக்கை நடத்தவேண்டிய பப்ளிக் ப்ராசிக்யூட்டரான  பாரிஸ்டர் எத்திராஜ்   (இவர்தான் சென்னை எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர்)  எடுத்த எடுப்பிலேயே நீதிபதியைப் பார்த்து சொல்லிவிட்டார்., ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் ‘ எனக் கேட்டுக் கொண்டார்.  வழக்கத்துக்கு மாறாக விநோதமாக, அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது. வெடிகள் முழங்க முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டார். இது எப்படி இருக்கு?

அதற்குப் பின் தமிழகத்தைக் கவர்ந்த மற்றொரு கொலைமுயற்சி வழக்கு அதுவும் திரைப்படத்துறை தொடர்பானது. அதுவும் புகழ்பெற்ற இருவர் தொடர்புடைய  பரபரப்பான துப்பாக்கிச் சூடு வழக்கு.  புரட்சி நடிகராக இருந்து பிறகு புரட்சித் தலைவராக மாறிய எம்ஜிஆர் மற்றும் நடிகவேள் எம் ஆர் இராதா தொடர்புடைய வழக்கு.

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும் திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.  இந்த சந்திப்பின்போது நடந்த தகராறில் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். எம் ஆர். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும்   தோளிலுமாக  இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து    எம் ஆர் இராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு  தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர்., தமிழ் திரைப்படங்களில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணா  தலைமையிலான தி மு க வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. அன்றைய சென்னை மாநிலம் இன்றைய தமிழ்நாடு,  சட்ட மன்றத்துக்கு  தேர்தல் நடைபெற இருந்த நேரம். வெற்றியை தி மு க எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. திமுகவின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது. எம்ஜியார் பணமாக தேர்தல் நிதி கொடுத்த போது ‘பணம் வேண்டாம் உன் முகத்தை மக்களிடம் காட்டு அது போதும் ‘ என்று அண்ணா சொன்ன தேர்தல்.

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக  மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.  பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட , எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான  திராவிடர் கழகம் , தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான எம் ஆர் இராதா , காமராசரின் அனுதாபி மற்றும் நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும்  தீவிரப்  பிரச்சாரமும் செய்து வந்தார். ஆகவே இருவருக்குமிடையில் அரசியல் பகைமையும் இருந்தது. மேலும் திரைப்படத்துக்கு நிதி உதவி செய்த வகையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இருந்தது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று எம்ஜிஆர்  சார்ந்திருந்த தி.மு.க. வின் அரசு அண்ணா தலைமையில் அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட எம்ஜிஆரும்  பெரும் வாக்கு எண்ணிக்கையில் பரங்கிமலைத் தொகுதியில்  வெற்றி பெற்றார்.  இதனால் பின்னாளில் தமிழக அரசியல் சரித்திரத்தில் படுத்துக் கொண்டே ஜெயித்தவர் என்று எம்ஜியாரைக் குறிப்பிடுவார்கள்.

முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்து வழக்கை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றினார்.  அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு  நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும்,  இராதா தரப்பில் வழக்கறிஞர் வானமாமலையும் வாதாடினர்.  ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு 1968-ஆம் ஆண்டு ஏப்பிரல் 24-ஆம் நாளன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.  தண்டனைக் காலத்தை சிறையில் கழித்துவிட்டு எம் ஆர் இராதா     விடுதலையானார்.  எதையுமே நகைச்சுவையாக குறிப்பிடும் இயல்புடைய எம் ஆர் இராதா,  தனது விடுதலைக்குப் பிறகு மலேசியா சென்றார். அங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியது வேடிக்கையும் வியப்பும் நிறைந்தது.

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் எனக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்.

மேலும் பலமுறை பத்திரிகைகளிடம் 'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம்’ என்றார்.

இப்படி தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு வழக்கு பரபரப்பில் தொடங்கி அனுதாப வாக்குகளாக மாறி ஆட்சியை மாற்ற காரணமாகி குற்றம் சாட்டப்பட்டு தண்டனையை அனுபவித்தவரின் நகைச்சுவையான கமெண்ட்ஸ் ஆக மாறிப் போனது.

இங்கே மேலே  குறிப்பிட்டுக் காட்டியுள்ள மூன்று வழக்குகளிலும் ஒரு பொதுவான சில அம்சங்கள்  இழையோடி இருப்பதைக் காணலாம். அதுவே அரசியல் தலையீடு- அரசின் ஆரம்பகால கடுமையான போக்கு- பின் நீர்த்துப் போகச்செய்யும் செயல்கள் - அதன் காரணமான நீதிமன்றத்தின் போக்கு-  தீர்ப்பு ஆகியவைதான் அவைகள்.

இவை இன்றும் தொடர்கின்றன. உதாரணமாக, நாட்டையே உலுக்கிய ராஜீவ் காந்தி கொலைவழக்கில்  பேரறிவாளன் என்கிற இளைஞனுக்கு தூக்கு தண்டனை வழங்க காரணமாக இருந்தது அவர் கொடுத்த வாக்குமூலம். ஆனால் இருபத்தி  இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கும்   பேரறிவாளனின் வாக்கு மூலத்தை தான் மாற்றி எழுதியதாக இன்று  சி பி ஐ அமைப்பின் ஒரு பொறுப்புள்ள அதிகாரி சொல்கிறார் என்றால் மக்கள் யாரைத்தான் நம்ப முடியும்?

ஒரு ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி – அதுமட்டுமல்ல தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஒரு பாலியல் புகாரில் சிக்க வைக்கப் படுகிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமைத்த நீதிபதிகள் குழுவும் அவரை குற்றவாளி என்று அறிக்கை தருகிறது.  இவைகளை எல்லாம் பார்க்கும்போது நீதி – நீதி மன்றங்கள்- சட்டம் – புலன் விசாரணை – காவல்துறை- ஆகிய யாரையுமே நம்ப இயலவில்லை என்பதே நிதர்சனம். அழுகிற பிள்ளைகள் பால் குடிக்கின்றன. செல்வாக்கும் சொல்வாக்கும் உள்ள சங்கராச்சாரியார்கள் போன்றவர்கள் எதையும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நிலை இருக்கிறவரை சாதாரண மனிதனுக்கு சட்டம் ஒரு இருட்டறைதான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.

ஆக்கம்: முத்துப் பேட்டை. P.  பகுருதீன் B. Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நீதி !
நேற்று இன்று நாளை !

'நிதி'யோடு
நிலைத்திருக்கிறது !

விதியென்றும்
சதியென்றும்..

சாமானியன்
சமாதானமடைகிறான்...!

ஓ... இவர்களெல்லாம் போற்றத் தக்கவர்கள் !

// சாதாரண மனிதனுக்கு சட்டம் ஒரு இருட்டறைதான்.//

சாதாரண மனிதனுக்கு 'நீ' 'தீ' யவனோ? என்றே சுட்டும்...

காக்கா, அந்த லட்சுமி காந்தனின் இளமைச் சூழலும் அவர் எப்படி லிங்கிச் செட்டித் தெருவில் இயங்கி வந்த 'இந்து நேஷன்' என்ற பத்திரிக்கைக்குள் நுழைந்தார் என்ற கூடுதல் தகவலை என்றோ வாசித்த ஞாபகம் வந்து விட்டது...!

நிறைய பேருக்கு தெரியாத 'நேற்றைய' தில்லாலங்கடி விஷயங்களை தேடியெடுத்து 'இன்று' தொகுத்து வழங்கும் இந்த தொடர் 'நாளை'யும் பேசப்படும் !

Shameed said...

கட்டுரையின் பின்னணியில் கடும் உழைப்பும் முயற்சியும் தென் படுகின்றது

sabeer.abushahruk said...

மூன்று கதைகளைக் கொண்ட ஒரு திரைப்படம்போல் அருமையாக விவரிக்கிறது இந்த வார நேற்று இன்று நாளை.

sabeer.abushahruk said...

அந்தக் கருப்பு வெள்ளை காலத்து கொலை வழக்குகள்கூட இழுத்து அடித்துத்தான் தீர்க்கப்பட்டனவா?

// ‘மன்மதன் லீலையை வென்றார் உண்டோ ‘ என்று அவர் பாடியதும் மறந்து போகிறது. ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் காட்ட ‘ யாரும் அவருடன் இல்லை.//

அவர்கள் பாடிய பாடல்களை வைத்தே அவர்கள் நிலைமையைச் சொல்வது கட்டுரையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

கலக்குங்கள் காக்காமார்களே.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சோடிப்பு தான் தீர்ப்பு என்பதற்கு நல்ல படிப்பினை தரும் சுவையான உருவாக்கம்!

இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நீதிபதிகளுக்கு வரும் வரை நேர்மையை உண்மையை எதிர் பார்க்க முடியாது என்பதும்,

பணமும், அரசியலும், ஆளின் தன்மையுமே இன்று தீர்ப்பின் அடிப்படை என்பதும் அறிய முடிகிறது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
////இவைகளை எல்லாம் பார்க்கும்போது நீதி – நீதி மன்றங்கள்- சட்டம் – புலன் விசாரணை – காவல்துறை- ஆகிய யாரையுமே நம்ப இயலவில்லை என்பதே நிதர்சனம்./////
********************************************
இதுதான் உண்மை!
லட்சாதிபதிகள் இருக்கும் பொழுது நீதிகள் சந்தாக்கில் (பாடையில் என்று சொல்வார்கள்) சென்று கொண்டு இருக்கிறது.

வருகிற காலம் ஹைடெக் காலம். கோடியை தாண்டும் கோடீஸ்.........வரர்கள் நிறைய ஊதி பெருத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உலக கொள்ளையர்களும் ---- இந்திய கொள்ளையர்கள் (பணக்காரர்கள்)கூட்டணி அமைத்து காலங்கள் உருண்டு கொண்டு இருக்கிறது.

அதனால் வருகின்ற காலங்களில் மனிதர்கள் நீதியை பெற வேண்டும் என்றால் ''செவ்வாய் கிரகத்தில்'' போய் பெற்றுக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி !

@ பிணங்களிடம் நீதி இருந்தால் அது வெட்டியானைக் காட்டியாக் கொடுக்கும் ?
மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி !

@ பிணங்களிடம் நீதி இருந்தால் அது வெட்டியானைக் காட்டியாக் கொடுக்கும் ?

sabeer.abushahruk said...

காக்கா,

மோடி கேஸ், இன்னுமொரு ஸூ...டொப்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//@ பிணங்களிடம் நீதி இருந்தால் அது வெட்டியானைக் காட்டியாக் கொடுக்கும் ?//

அவனுங்களுக்கே தெரியும் எரித்த உயிர்கள் திரும்பி வந்து சாட்சி சொல்லாது என்ற தெனாவெட்டு !

இனிமே ! எவரும் நீதி வென்றது என்று மார்தட்டினால் பைத்தியம் என்றுதான் அழைக்கனும் !

Ebrahim Ansari said...

நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்வதாலேயே குற்றம் சாட்டப் பட்டவன் குற்றவாளி அல்ல என்பதல்ல. நீதி மன்றங்கள் விடுவித்து இருக்கலாம். மக்கள் மன்றம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

ஜாக்கியா ஜாப்ரி பெரும் போராட்டத்தை நீதி வேண்டி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இளம்பெண் வேவு பார்க்கப் பட்ட விவகாரத்தில் மோடி மீது வழக்குத் தொடர மத்திய மந்திரி சபை ஒப்புக் கொண்டுள்ளது.

எதிலாவது மாட்டுவான். இறைவன் மாட்ட வைப்பான்.

Ebrahim Ansari said...

அன்பின் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ் ஸலாம்.

மும்பையில் நடந்த கலவரத்துக்காக பல் முஸ்லிம்களின் மீது வழக்கு சிறை .கிருஷ்ணா கமிஷன் குற்றவாளி என்று சுட்டிக் காட்டிய தாக்கரே வம்சத்தின் மீது ஒரு துரும்பு கூட எடுத்துப் போடப்படவில்லை.

குஜராத்தில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்களைக் கொன்றவர்களுக்கு இதுவரை எவ்வித தண்டனையும் வழங்கப் படவில்லை. கூட்டு மனசாட்சி என்று ஒரு புதிய கருத்து முஸ்லிம்களை தண்டிக்க மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகிறது.

காரணம், ஒற்றுமை இல்லாத சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் மாறிவிட்டதுதான்.

sabeer.abushahruk said...

சாந்த சொரூபமாய்
முகத்தைக் காட்ட
மோடிக்கு
தாடி ஒரு பசுத்தோல்

ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடியோ
ஆரம்பம் சாயாக் கடை
என்பதை மறைத்து
ஐ ட்டி தோரணைக்காக்

தம் கட்சிக்குள்ளேயே
பதுங்கிப் பாய்ந்தவன்...
நாமோ எதிர்கட்சி

கரசேவையோ கட்சிக்கூட்டமோ
சிங்கமல்ல
சிங்கிளாக வர.

இவன்
பிததமாரானால்
இந்தியாவுக்கு மட்டும்
தஜ்ஜால்
தற்காலமே
வந்துவிட்டது போலாகும்


Ebrahim Ansari said...

//இந்தியாவுக்கு மட்டும்
தஜ்ஜால்
தற்காலமே
வந்துவிட்டது போலாகும்//

சமுதாயம் இதை உணர வேண்டும். ஒன்றுபட வேண்டும்.

விவாத அரங்குகளில் பிஜேபி சார்பாகப் பேசுகிறவர்கள் நம்மைப் பார்த்து கேட்கும் ஒரு நாணம் கொள்ளத்தக்க கேள்வி

" மோடி முஸ்லிம்களைக் கொன்று இருந்தால் குஜராத்தில் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வசிக்கும் தொகுதிகளில் எல்லாம் மோடியின் கட்சி வெற்றி பெற்று ள்ளதே!" என்பதுதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு