Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் [ரமளான் ஸ்பெஷல்] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2014 | , , , ,

ரமளான் ஸ்பெஷல்

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத் தக்க ஒன்று. ஈத்துவக்கும் இன்பத்தை கடமை யாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள். பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும் ; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக்  குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை  மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி. ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம். 

ஜகாத் பற்றிய கடந்த அத்தியயங்களில் படித்து வரும் அன்பானவர்களுக்கு இன்னும் ஒரு சிறு விளக்கம் இந்த அத்தியாயத்தில் விவாதித்து விட்டு பின்னர் இன்னும் சில இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளுக்கு செல்லலாம்.  

யாருக்கு ஜகாத் கடமையாகிறது என்கிற கேள்விக்கு ‘நிஸாப்’ என்கிற அளவுகோலை வைத்து இருக்கிறார்கள். சொத்தானது ஜகாத் கடமையாவதற்குரிய உச்ச வரம்பை  அடைந்திருந்தால்  அதனை  ‘நிஸாப்’ என்று அழைக்கலாம். நிஸாப்  என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையாக மாறுபட்டு ஜகாத் கொடுப்பதன் அளவை  நிர்ணயம் செய்கிறது. 

பொதுவாக , புனித ரமழான்  மாதத்தில்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ரமழானில் ‘ஸதகா’ வலியுறுத்தப்படுகின்றது. எனினும், ஜகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும் . வருடக் கணக்குப் பார்ப்பதற்கு முஸ்லிம்கள் பிறைக்   கணக்கின் அடிப்படையில் சந்திர கணக்கு அடிப்படையில்தான் கணிக்க வேண்டும் . மாறாக, சூரிய அடிப்படையிலான கணிப்புகளை செய்தால் நாட்கள் வேறுபடும். பிறை பார்த்து நோன்பு வைக்கிறோம் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுகிறோம் . எனவே வருடம் கணக்கிடுவதற்கு சந்திரக் கணக்கையே தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று நாம் ஏற்கலாம். 

ரமழான் மாதத்தைப்  பொதுவாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் ரமழான் மாதத்தில் செய்யப் படும் நன்மைகளுக்கும் அமல்களுக்கும் இறைவனிடத்தில் அதிக நன்மைகள் கிடைக்கும் என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். மேலும் பொதுவாக பணம் படைத்தவர்கள் பலர் இந்தப் புனித  மாதத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று நோன்பு மற்றும் அமல்களில் ஈடுபட விரும்புவார்கள்.  ஜகாத்தை தங்களின் கரங்களால் வழங்க வேண்டுமென்று விரும்புவோர்களும் உண்டு.  இந்தக் காரணத்தால் ஜகாத் வழங்குவதற்கு ரமழான் மாதத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் ரமழானில்தான் வழங்க வேண்டுமென்று  சட்டமல்ல. அந்தந்த தேவைகளுக்கு சூழ்நிலைகளுக்கு  ஏற்றபடி ஜகாத்தை வழங்கலாம்.  உதாரணமாக அடிமைகளை விடுவிக்க, கல்விப் பணிகளுக்கு, புதிதாக இஸ்லாத்துக்கு வந்த சகோதரர்களுக்கு உதவ என்று அல்லாஹ் விதித்த ( 9:60)  விதிகளின்படி தேவைக்கு வழங்க வேண்டும். அசாதாரண சூழ்நிலைகளில் ரமழான் வரும் வரை காத்திருக்க வேண்டுமென்பது  கொடுக்க மாட்டாதவன் சினை ஆட்டைக் காட்டுவதற்கு ஒப்பானது. தேவையில் உதவுவதே உண்மையான உதவி. 

இன்று நம்மிடையே எழுந்துள்ள ஒரு முக்கியமான கேள்வி ஜகாத்தை எப்படிப் பங்கீடு செய்வது என்பதுமாகும். சிறு செல்வந்தர்கள்  தாங்கள் கொடுக்க வேண்டிய ஜகாத் தொகைகளை கணக்கிட்டு பெரும்பாலும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும், அண்டை அயலார்களுக்கும் வழங்குகிறார்கள். பல பணக்காரர்கள் தாங்கள் கணக்கிடும்  ஜகாத் தொகைகளை சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு ஒரு காம்பவுண்டுக்குள் ஏழைகளின் கூட்டத்தை அடைத்து வைத்துக்கொண்டு ஜகாத் திருவிழா நடத்துகிற அவலங்களும் நடைபெறுகின்றன. இதனால் கூட்டத்தில் சிக்கி பலர் இறந்து போன நிகழ்வுகளும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒரு பொதுவான அமைப்பின் மூலம் ஜகாத் தருவோரிடமிருந்து நிதியைத் திரட்டி அந்த அமைப்பின் மூலம் தேவையானவர்களையும் தகுதியானவர்களையும் கண்டறிந்து உதவுவது என்கிற செயல்முறைகள்  பல பெரிய முஸ்லிம் ஜமாஅத் இருக்கும் ஊர்களில் இன்று நடைமுறைப் படுத்தப் படுகின்றன. இதுவும் தவிர மாறுபட்ட இயக்கங்களும் தங்களின் சார்பாக போட்டி போட்டுக் கொண்டு ஜகாத் நிதியை வசூல் செய்கின்றன. 

“(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..” (9:103).

என்ற வசனம் மூலம் ஜகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து வசூல் செய்யுங்கள்  என்று கூறப்படுகின்றது. மேலும்  நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,

“அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்”  எனக் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி). நூல்: முஸ்லிம்.

இந்த நபிமொழி ஜகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

ஜகாத் பெற தகுதியான எட்டு வகையினர்  பற்றி திருமறை  குறிப்பிடும் போது ஜகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.

“(ஜகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,.” (9:60).

என்று கூறுகின்றது. இதுவும் ஜகாத்தைச் வசூலிக்க  ஒரு பணியாளர் மற்றும் அமைப்பு என்கிற  கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அடிப்படையில் ஜகாத்தை பொது நன்மையைக் கருதும் ஒரு சிலர் ஒன்று இணைந்து ஒரு குழுவாக  சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அவை யாவை என்பதைப் பார்க்கலாம்.

அளவில் பெரும் தொகை :

ஒரு ஊரில் ஜகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் அதிகம் பேர் இருந்து  பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஜகாத்தும் ஒன்று திரட்டப்பட்டால் வசூலாகும் ஜகாத்தின்  தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள கணிசமான  அளவுள்ள ஏழைகளின்  பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதுடன் பல்வேறு வகைப் பட்ட பிரச்னைகளையும் பெரும்தொகை கையில் இருந்தால் பிரச்னைகளை ஒட்டுமொத்தமாக  தீர்க்கும் வகையில் அணுக முடியும்.  இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. சிதறிப் போன செல்வம் சிறப்பாக சாதிக்க இயலாது. திரண்ட செல்வத்தால் நிறைய சாதிக்க வாய்ப்புண்டு.  தனி மரங்கள் தோப்பாவதில்லை. 

முன் திட்டமிட்ட முறையான  பகிர்ந்தளிப்பு:

கூட்டுமுறையில் ஜகாத்  சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அனைவருக்கும் கிடைக்கும் வகை :

கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஜகாத்  சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.

சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:

தேவையுடையோர் தனித்தனி நபர்களை அணுகி ஜகாத் பெற பிடரியை சொரிந்து கொண்டும் வீணாகப் புகழ்ந்துகொண்டும்  முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய மரியாதை  பாதிக்கப்படுகிறது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயமரியாதை  பாதுகாக்கப்படுகின்றது.

தற்பெருமைக்கு இடமிருக்காது:

தனித்தனியாக ஜகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமையும் தம்பட்டமும்  எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஜகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும்; தொழுவதற்கு நாற்காலி எடுத்துப் போடவேண்டும்;  பல்லிளிக்க வேண்டும் சில நேரங்களில் வீட்டு வேலைகளைக்கூட செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் நீக்கப் பட்டு  செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். யாருடைய பணம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியாமல் இருக்கும். 

ஜகாத்தின் நோக்கம் நிறைவேறும்:

ஜகாத்தின் நோக்கமே புனர் வாழ்வாகும். தனிப்பட்ட முறையில் ஒருவரது உண்மையான தேவைகளை அளவிடாமல் செய்யப்படும் சிறு அளவிலான உதவிகளால் புனர் வாழ்வு என்பது அவ்வளவு சாத்தியமல்ல. அதே நேரம் பலர் இணைந்து ,  ஒரு கணிசமான தொகையை ஒருவருக்கு வழங்கினால்  வாழ்வை புனரமைத்துக் கொள்ள அவருக்கு உதவும் என்கிற கருத்தும் இருக்கிறது. தனித்தனியாய் நூறு இருநூறு  என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது கடன்கலைத்  தீர்க்க அல்லது தொழில் செய்வதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஜகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.

ஜகாத்தை கணக்கிடும் முறைக்  குறைபாடுகள் நீங்க :

நூற்றுக்கு இரண்டரை வீதம் என ஜகாத் கட்டாயமாக  கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ வங்கிக் கரன்சிகளை சில்லரையாக  மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஜகாத்தை நிறைவேற்றிவிட்டதாக மனதிருப்தி கொள்கின்றனர். இறைவனின் கணக்கில் செலுத்த வேண்டியது பாக்கி நின்று கொண்டே இருக்கும். பகுதியாகக் கொடுத்தால் பயன் இல்லை. . கூட்டு நடைமுறை மூலமாக தான் கொடுக்க வேண்டிய மொத்த ஜகாத் தொகையை கணக்கிட்டு கொடுத்துவிட்டால்   இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.

பிச்சைக்காரர்களின் கூட்டத்தை  தடுத்தல் :

தனித் தனியாக ஜகாத்  வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஜகாத், சதகா, ஹதியா, பித்ரா என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்குப் படையெடுக்கும் நிரந்த /தற்காலிக  கூட்டம் இதற்கு கண்ணேதிரே காணும்  காட்சியாகும். அது மட்டுமல்ல பல பிற மதத்தவர் முஸ்லிம்களைப் போல் வேடமிட்டு தொப்பி,  முக்காடு போன்ற காஸ்ட்யூம் அணிந்து கலந்து வர ஆரம்பிக்கின்றனர். கூட்டு முறையில் இனம் கண்டு கொடுத்தால் , ஜகாத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டுமென்கிற இறைவனின் விதி மீறப்பட வாய்ப்பில்லாமல் போகும்.  

தன்மானம் கருதும்  மரியாதையுள்ள  ஏழைகள் பாதுகாக்கப்படல்:

வறுமையில் உழன்றாலும் ‘ஏற்பது இகழ்ச்சி’  என்று எண்ணும் குணமுள்ளோர்- கையேந்த தயங்கும் குணமுள்ளோர் ஜகாத்தை கேட்கவோ வேண்டிப் பெறவோ தயங்குவார்கள். ஆனாலும் ஜகாத் பெறத் தகுதி படைத்த அத்தகையோரைக் கண்டறிந்து அவர்களுக்கும்   ஜகாத்தின் பங்கு வழங்கப் பட கூட்டு முறை ஜகாத் துணை புரியும். அழும் பிள்ளையே பால் குடிக்கும் அதற்காக அழாத பிள்ளைகளை பட்டினி போடுவது தர்மம் அல்லவே. 

குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை:

வாய்ப்பகட்டு பேசும்  பல புரபஷனல் இரப்போறை  நாம் நிறையக் கண்டு இருக்கிறோம். கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஜகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் ஊர்கள்  பூறாகச் சுற்றிச்  சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று அதிகமாக திரட்டிக் கொள்ளவும் வாயற்ற  இப்பழக்கமற்ற ஜகாத் பெற தகுதி உடைய நல்லோர்கள் பாதிக்கவும் படுகின்றனர். அனைவரையும் அளவிட்டு வழங்கப் படும் கூட்டு நடை முறை இதைத் தடுக்கும். 

 உள்ளூரில் ஜகாத் வழங்கப்பட:

ஒரு ஊரில் திரட்டப் படும்  ஜகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படுவது உள்ளூர்ப் பொருளாதாரத்தை - அண்டை அயலாருடைய செல்வ நிலையை மேம்படுத்தும். வாழ்வின் அத்தியாவசியங்களை நிறைவேற்றும்.  இது அடிப்படைத் தத்துவம்.  பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஜகாத் பெறுகின்றான். இதனால் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தடைப் படுகிறது. இது ஜகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும். கூட்டு முறையில் இந்நிலை தவிர்க்கப் படும். 

உள்ளூர் செல்வந்தர்களிடையே ஒன்றுபட்ட  புரிந்துணர்வு:

கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஜகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு ஊரின் அனைத்து ஜமாத்துகளும் இணைந்து பைத்துல் மால் போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஜகாத்தைப் பகிர்ந்து அளிக்கலாம். 

கூட்டுமுறையில் ஜகாத் திரட்டப் பட்டு கொடுக்கப் படக்கூடாது என்கிற வாதமும் நிலவுகிறது. இதற்கு சொல்லப் படும் முக்கியமான காரணம், இத்தகைய நிதிகளை கையாள்வோருடைய கைசுத்தம் பற்றியது. மேலும் தனக்கு வேண்டியவர்களுக்கு, தெருக்காரர்களுக்கு , உறவினர்களுக்கு பொது நிதியிலிருந்து  எடுத்து தாராளமாக வழங்கி தங்களுடைய சொந்த செல்வாக்குகளை வளர்த்துக் கொள்வார்கள் . அதாவது ஊரார் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஒதிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அண்மையில் சில இயக்கங்கள் திரட்டிய ஜகாத் மற்றும் பித்ரா போன்ற நிதிகள் சரிவர பகிரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை  ஒருவர் மீது ஒருவர் சாட்டிக்கொண்டனர்.  

கூட்டு முறையில் ஜகாத் வழங்கிய செல்வந்தர்கள் அப்படி தாங்கள் வழங்கிய புனிதப் பணம் சரியான முறையில் பகிரப் படவில்லை என்று அறிந்தால் அடுத்தடுத்த வருடங்களில்  இந்த பைத்துல்மால் போன்ற பொது அமைப்பை நம்பி ஜகாத் நிதியைதர யோசிப்பார்கள். இந்த அறப்பணியில்  தொய்வு ஏற்படும். 

இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு ஒன்றுபட்ட ஜகாத் அமைப்பு நிறுவப் படுவதற்கான சாத்தியக்கூறு ஒரு சதவீதம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். இங்கு ஒன்று பட்ட  முஸ்லிம் தலைமை இல்லை. இதனால் அருட் தூதர் முகம்மது ( ஸல்) அவர்கள் காலத்திலும் ஏனைய கலிபாக்கள் மற்றும் நபித்தோழர்கள் காலத்திலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்ட இந்த வறுமை ஒழிப்புத் திட்டம் இன்றைக்கு இறை அச்சம் குறைவானதன் காரணமாகவும் போட்டி அரசியல் காரணமாகவும் தலைவர்கள் என்று பவனி வருகிறவர்களிடம் ஏற்பட்டுள்ள ஈகோ காரணமாகவும் நடைமுறைப் படுத்த இயலவில்லை. இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். களை எடுக்க வேண்டுமென்றால் களை எடுக்க வேண்டும்.  

ஆயினும் இந்தப் பணியை இப்படி அரைகுறையாக சரியான நிர்வாகம் இல்லை என்று காரணம் கூறி விட்டுவிட இயலாது. எமது ஊராம் அதிரையைப் பொறுத்த மட்டில் இரண்டு அமைப்புகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊர் முழுமைக்கான பைத்துல்மால் என்கிற அமைப்பு ஊரின் பொதுநல விரும்பிகளால் ஒன்றிணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் கர்ழன் ஹசனா என்கிற அல்லாஹ்வுக்கு அழகிய கடன் என்கிற அமைப்பும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்புத் திட்டத்தில் இவை இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்னும் சிறப்புடன் செயல்பட வேண்டும். பல காரியங்களில் இவ்விரண்டு அமைப்புகளும் ஒருங்கிணைந்து (Co- ordination)  செயல்பட வேண்டுமென்பது பலரின் ஆவல். 

ஏழைப் பொதுமக்களின் நலனுக்காக இறைவனால் வழிகாட்டப்பட்ட-  வகுக்கப்பெற்ற இந்தத் திட்டம் ஒருபோதும் தோல்வியுறுவதில்லை. இது  இறைவனால் கட்டளையிடப்பட்ட கடமை. இது தனிமனிதர்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட சொந்த விஷயமல்ல . ஆகவே ஜகாத்தை தருவதற்கு தகுதி பெற்றோர் துல்லியமாகக் கணக்கிட்டு அதனைப் பெற்றிட தகுதி உடையோருக்கு நேரடியாகத் தாங்களே இயன்றவரை கொடுத்துவிட்டு தாங்கள் கணக்கில் மிகுதி இருப்பதை பொதுவான இறையச்சம் கொண்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பிடம் கொடுத்து பகிரச்செய்யலாம்; பகிர்வைக் கண்காணிக்கலாம்; மேற்பார்வை இடலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும். ..
இபுராஹீம் அன்சாரி

குறிப்பு : வாரந்தோறும் பிரதி சனிக்கிழமைகளில் வெளிவந்த இந்த தொடர், ரமளான் காலங்களில் ஈடுபடும் வணக்க வழிபாடுகளை அதிகம் முன்னெடுத்து வருவதால் இன்று முக்கிய பதிவாக பதிக்கப்பட்டுள்ளது, இந்த அத்தியாயத்தின் பேசுபொருள் அனைவருக்கும் உரிய காலத்தில் பயன்படவேண்டும் என்ற தூய எண்ணத்தில் இன்ஷா அல்லாஹ் !

12 Responses So Far:

sabeer.abushahruk said...

முழுமையான, தெளிவான வழிமுறைகள்!

நன்றி, காக்கா.

sabeer.abushahruk said...

ஆம்,

மனிதன் வகுத்த சட்டங்களில்தான் ஓட்டை ஒடிசல் இருக்கும்; அசாத்தியமான காரியங்கள் வலியுறுத்தப்பட்டு அதைப் பின்பற்ற முடியாமல் சட்ட மீறலில் மனிதன் ஈடுபடுவான்.

அப்புறம், வரி ஏய்ப்பு, ஆடிட்டர், கருப்புப் பணம், ரெய்டு, கோர்ட்டு, கேசு, வக்கீல், வாய்தா, முன் ஜாமீன், கடைசியில் லஞ்ச் லாவண்யம், தேர்தல், உங்கள் ஓட்டு, அரசாங்கம், அமைச்சர்....அப்பாடா கடைசியில்...

சட்டத் திருத்தம்!!!

ஆனால், இது அல்லாஹ்வின் சட்டம்; ரசூலின்(ஸல்) வழி முறை!

இது குறை சொல்ல முடியாத குற்றம் காண முடியாத பொருளாதாரச் சட்டம்! பின்பற்றுதலே செற்றிக்கான ஒரே வழி என்று ஆணித்தரமாக, பார்ட் பார்ட்டாகப் பிரித்து விளக்கி விட்டீர்கல்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

காக்கா,

அந்தோ....அங்கே... அது நம்ம க்ரவுன் தானே?

அஸ்ஸலாமு அலைக்கும் கிரவுன்.

என்ன நோம்பாளியை ரொம்ப நாளாக் காணோம்?

நலம்தானே?

(கிரவுனைப் பார்த்த ஆர்வக்கோளாறில் பதிந்த பதிவுக்கு தொடர்பில்லாத இந்த கருத்தை மன்னிக்கவும்)

sheikdawoodmohamedfarook said...

//தனித்தனியாக ஜக்காத்வழங்குபவர்கள் கூட்டுறவுமுறையில் வழங்குவது.....// கூட்டுறவு முறையில் சக்காத் வழங்கும் குழுவின் உறுப்பினர்களும் மனிதர்களே! இவர்களிடமும்,ஆணவம் வெத்துஅதிகாரம் இல்லாமல் இருக்குமென்றுசொல்லமுடியாது.இதன்மூலம்ஊரில்,தெருவில்அரசியல்மற்றும் சுய செல்வாக்கு தேட நாற்றங்கால் அமைத்து நடவுசெய்து அறுவடைக்கு கச்சைகட்டுவார்கள்.கொடுப்பவரின் நல் எண்ணத்திற்கு எதிரானவிளைவுகள் ஏற்ப்படநிறையவேவாய்ப்புகள்உண்டு.வலக்கரம்ஈவதைஇடக்கரம்காணா திருப்பதே ‘ஈகை’.

Ebrahim Ansari said...

பெரியவர் எஸ் எம் எப் அவர்களின் கருத்து

//இவர்களிடமும்,ஆணவம் வெத்துஅதிகாரம் இல்லாமல் இருக்குமென்றுசொல்லமுடியாது.இதன்மூலம்ஊரில்,தெருவில்அரசியல்மற்றும் சுய செல்வாக்கு தேட நாற்றங்கால் அமைத்து நடவுசெய்து அறுவடைக்கு கச்சைகட்டுவார்கள்.//

இத்தகைய பொறுப்பில் இருப்பவர்களிடமும் NEPOTISM என்கிற வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுதல் இருக்குமானால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

ஆமாம் அங்கே தம்பி கிரவுன்தான்.

உங்கள் இருவரின் இனிய தமிழ் விளையாட்டைக் காணாமல் இணைய தளமே என்னோடு சேர்ந்து ஏங்கிக் கிடக்கிறது.

sheikdawoodmohamedfarook said...

//இத்தகையபொறுப்பில்இருப்பவர்கள்.......அல்லாவுக்குபதில்சொல்லியாக வேண்டும்//மைத்துனர் இ.அ.சொன்னது. அல்லாவின்பயம்நெஞ்சில்கொண்டவர்கள்கோடிகுவித்தாலும்ஓடிஓடி அழைத்தாலும்கூடிவரமாட்டார்கள்.ஓடிபோய்ஒழிந்துவிடுவார்கள். இதற்க்கெனவேஒருகூட்டம்புகழ்தேடிநாக்கைதொங்கப்போட்டுகொண்டு அல்லும்பகலும்அலைந்துகொண்டேஇருக்கிறது.அவர்களுக்குதேவைபுகழ்;அல்லாவின்மீதுபயம்மல்ல.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

காக்கா,

அந்தோ....அங்கே... அது நம்ம க்ரவுன் தானே?

அஸ்ஸலாமு அலைக்கும் கிரவுன்.

என்ன நோம்பாளியை ரொம்ப நாளாக் காணோம்?

நலம்தானே?

(கிரவுனைப் பார்த்த ஆர்வக்கோளாறில் பதிந்த பதிவுக்கு தொடர்பில்லாத இந்த கருத்தை மன்னிக்கவும்)
-------------------------------------------------------------------
வலைக்கும்முஸ்ஸலாம்!விரல் சுட்டும் நபர் நானேதான்!விரல் நுனியில் விபரம் வைத்திருந்தால் அது சாதனை!விரல் நுனியில் வினை( நோவு)வைத்திருந்தால் அது வேதனை!விரல் நுனியில் சிறு கட்டிபோல் வந்து மனதில் தோன்றும் எதையும் தட்டச்சு செய்ய முடியாமல் என் நோக்கத்தில் ஒரு தேக்கம்,எந்த ஆக்கத்துக்கும் ஊக்கம் தரும் கருத்திடமுடியாமல் சோகம் இப்ப அல்ஹம்துலில்லாஹ் நலம்!இனி யெல்லாம் சுகமே!எல்லாருக்கும் ,இந்த புனிதமாதத்தில் அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்.ஆமீன்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

தம்பி சபீர் அவர்களுக்கு,

ஆமாம் அங்கே தம்பி கிரவுன்தான்.

உங்கள் இருவரின் இனிய தமிழ் விளையாட்டைக் காணாமல் இணைய தளமே என்னோடு சேர்ந்து ஏங்கிக் கிடக்கிறது.
------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா! நலமா? அன்பின் வெளிப்பாடு என்னை நெகிழவைக்கிறது!ஒரு அறிஞரின் வாழ்த்து,என்னை மகிழவைக்கிறது.அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.

crown said...

எடிட்டர் காக்காவுக்கு! என் மேல் கோபம் என நினைக்கிறேன்!

crown said...

நம்மை காத்துகொள்ள 'ஜகாத்" தேவை! நன்மையை சேர்த்துகொள்ள 'ஜகாத்'வேண்டும்.காத்து
இருக்கும் போதே தூற்றி கொள் என்பதுபோல்,இஸ்லாம் வறியவர்கள் மேல் வீசும் தென்றல் காற்று! அது காத்திருக்கு,கடமைக்குரியவர்கள் கடல் அளவில் வாழ்கிச்செல்லலாம் இந்த நன்மை காத்து,ஜகாத்து!இதுவீசும் போது சில காலங்களுக்கு வறுமை வாடை ஒடிப்போகும்!காலத்தின் அவசியம் கருதிய நல் ஆக்கம்!

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன் அவர்களே! அலைக்குமுஸ் சலாம். வருக!

தென்றல் காற்று தெற்கே இருந்துதான் வரும் . இப்போ மேற்கிலிருந்தும் வருகிறதா? உங்களின் தமிழ்க் காற்று எங்களுக்குத் தென்றல்.
மழை இல்லாமல் கிடக்கும் நாங்கள் இந்தக் காற்றும் வீசாவிட்டால் வாடி விடுகிறோம்.

விரலில் வந்த வேதனை விரைவில் நலமானது அறிய மகிழ்ச்சி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு