Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது - 'நந்தினி' நேர்காணல் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 22, 2014 | , , , , , , ,

குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணாவிரதம் இருந்தார். பழச்சாறு மட்டுமே மிஞ்சியது.

இதெல்லாம் சரிப்பட்டு வராது. தொடர் போராட்டங்களினால் அரசின் செவிட்டுச் செவியில் சங்கு ஊதிப் பார்ப்பது எனத் தம் தந்தையுடன் நீண்ட நெடிய போராட்டத்திற்காய்க் கிளம்பிவிட்டார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. கைதுகளையும் முட்டுக்கட்டைகளையும் கடந்து இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார். நீறு பூத்த நெருப்பாக இப்போராட்டம் வெடித்து அதன் அக்னிச் சூட்டில் மது அரக்கன் கருகிவிடமாட்டானா? என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் நந்தினியைச் சந்திக்க மதுரைக்கேகினோம். தந்தை ஆனந்தனுடன் சமரசத்திற்கான நேர்காணலை நேர்த்தியுடன் தெளிவுடன் தொடர்கிறார் நந்தினி.

நந்தினிக்கு ஏன் மதுவின் மீது அவ்வளவு கோபம்?

எனக்கு மட்டும் இல்ல சார். தன்மானமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தக் கோபம் வரணும். மதுவினால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் என் சமுதாயம் என் கண்முன்னே நாசமடைவதை எப்படி என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? மதுவினால் மானம் இழந்தவர்கள் எத்தனை பேர்? தந்தையை இழந்தவர்கள் எத்தனை பேர்? கணவனை இழந்த என் வயதையொத்த பெண்கள் எத்தனை எத்தனை பேர்? மதுவினால் எத்தனை விபத்துகள். எவ்வளவு பிரச்னைகள்? ஒரே வரியில் சொல்வதானால் எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணமே மதுதான். இதை ஒழிக்காத வரை நம் தமிழகம் ஒருக்காலமும் முன்னேறாது.

உங்கள் போராட்டத்தின் பின்புலம் என்ன..?

(நந்தினி பதில் சொல்லத் தொடங்குமுன் அவருடைய தந்தை ஆனந்தன் குறுக்கிட்டு “ஸார்.. இந்தக் கேள்விக்கு நானே பதில் சொல்றேனே..என்று தொடர்ந்தார்)

நான்தான் என் மகளுக்கு உந்துசக்தி. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றினேன். ஓய்வு பெற 15 ஆண்டுகள் மீதமிருக்கும்போதே விருப்ப ஓய்வு பெற்று சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 18 ஆவது வயதில் அரசுப்பணியில் சேர்ந்தேன். அப்போதிருந்தே அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். தொழிற்சங்க ஈடுபாடு ஏற்பட்டபோது சமுதாயப் புரிதல் எனக்கு அதிகமானது. வேளாண் துறை என்பதால் கிராம மக்களின் வாழ்வை மிக அருகிலிருந்து கவனித்து வருகிறேன். கிராமங்கள் நசிந்து வருகின்றன. இளைஞர்கள் அடித்தளத்தை விட்டு நகரத் தொடங்கிவிட்டார்கள். கலாச்சாரச் சீரழிவு பெருகத் தொடங்கி விட்டது. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி மக்களின் சிந்தனைகளை மழுங்கடித்து குடிகார மக்களின் மீது ஆதிக்கம் செலுத்த அரசு திட்டம் தீட்டியது. மக்களை மயக்க நிலையில் வைத்திருந்தால்தான் அரசின் அநியாயங்களை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். அதனால் அரசே ஊத்திக் கொடுக்க ஆரம்பித்தபோதுதான் போராட்டக் களத்திற்கு என் மகளோடு வந்தேன். என் மகளை முன்னிறுத்தி இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

நந்தினி நீங்கள் உங்கள் தந்தையுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றீர்களே..! அந்தப் போராட்டப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்...! 

மது அரக்கனை ஒழிக்க வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வை முதலில் மேற்கொண்டோம். குடியினால் தந்தையை இழந்த 100 குழந்தைகளை அழைத்துக் கொண்டி முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு விரிவாய் கடிதம் எழுதினோம். எந்தப் பதிலும் இல்லை. டிசம்பர் 24 ஆம் நாள் எம்.ஜி.ஆர் பிறந்தநாள். எனவே முதல்வர் சென்னையில் இருப்பார் என்பதால் 23ஆம் தேதி நான் என் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்னைக்குக் கிளம்பினோம். அன்று மாலையில் நாங்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டோம். இரவு திருவெரும்பூர் காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டோம். 25 ஆம் நாள் காலையில் விடுவிக்கப்பட்டோம்.

முதல்வர் கொடநாடு செல்வதால் நீங்கள் சென்னை வரவேண்டாம் என போயஸ் கார்டனிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. உண்ணா விரதம் மேற்கொண்ட நிலையிலேயே சென்னைக்கு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். குரோம்பேட்டையில் மீண்டும் கைது செய்யப்பட்டோம். உண்ணாவிரதத்தினாலும் பயணத்தினாலும் நாங்கள் மிகவும் களைப்படைந்து இருப்பதால் அங்குள்ள மருத்துவமனையில் எங்களை வைத்தார்கள்.

அங்கிருந்து விடுதலையாகி கொடநாடு நோக்கிச் சென்றோம். செல்கின்ற வழியில் பெருந்துறையில் எங்களை மீண்டும் கைது செய்தார்கள். எங்கள் உண்ணா விரதத்தையும் நாங்கள் விடவில்லை. பெருந்துறை மருத்துவமனையில் எங்களைச் சேர்த்தார்கள். பின்னர் 26 ஆம் தேதி எங்களை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சொல்லி அவர்கள் வாகனத்தில் எங்கள் இருசக்கர வாகனத்தையும் ஏற்றிக்கொண்டு நேராக மதுரைக்குச் சென்று எங்கள் வீட்டில் கொண்டு சேர்த்தார்கள். நாங்கள் வீட்டிற்குள் செல்லவில்லை. மீண்டும் திரும்பி மதுரை வைகை ஆற்றுப்படுகையில் எங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம். என்னுடைய இளைய சகோதரியும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டாள்.

மீண்டும் நாங்கள் கைது செய்யப்படுகிறோம். அப்போதும் உண்ணாவிரதம் 7ஆவது நாளாகத் தொடர்கிறது. எங்கள் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து என்னை திருச்சி பெண்கள் சிறையிலும், என் தந்தையை மதுரை மத்திய சிறையிலும் அடைத்தார்கள். அங்கு எங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் போராட்டத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு ஜாமீன் தர மறுத்தார்கள். இறுதியாக ஜனவரி11 ஆம் நாள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தோம்.

எங்கள் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி மண் வாரித் தூற்றும் போராட்டத்தை மேற்கொள்ளச் சென்றபோது சென்னை மெரினாவில் வைத்து நாங்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். மே3 ஆம் தேதி எனக்கு பரீட்சை இருந்ததால் நான் மே 1 ஆம் நாள் விடுவிக்கப்பட்டேன். என் தந்தையை மே 11 ஆம் நாள் விடுவித்தார்கள்.

ஜூன் 23ஆம் நாள் பழ நெடுமாறன் அவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தை மதுரையில் நடத்தினோம். மதுவை ஒழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். ஜூலை 29 ஆம் நாள் சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை முன்பு மது அரக்கி உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இத்தகைய போராட்டங்களினால் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா..?

9ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு மாணவர்கள் கூடக் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இச் சூழலில் மதுவுக்கெதிரான குரல் எழும்போதுதான் சமுதாயம் விழிப்புஉணர்வு அடையும். எங்கள் போராட்டங்களினால் ஓரளவு மக்களிடம் விழிப்பு உணர்வு வந்துள்ளது. மாற்றங்களை நோக்கித்தான் பயணிக்கின்றோம். நிச்சயம் ஒருநாள் மதுக்கடைகள் இழுத்து மூடப்படும். அந்த மாற்றத்திற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

போராட்டங்களினால் மட்டுமே மதுவை ஒழித்துவிடமுடியுமா? மது ஒழிப்பிற்கான வேறு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?

மதுவை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். indian penal code  ஐபிசி பிரிவு 328 இன் படி அரசு மதுவிற்பது சட்டவிரோதச் செயல். போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா...? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும். மருத்துவத் தேவைக்காக அல்லாமல் போதைப் பொருளைப் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் மது அருந்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்த செய்தியை அண்மையில் படித்திருப்பீர்கள். பலாத்காரத்திற்குத் தூண்டுதலான மதுவை அரசுதான் கொடுத்திருக்கிறது என்றால் இந்தக் குற்றத்தைத் தூண்டிய வழக்கில் அரசையும் இணைக்க முடியும். தவறுகளைத் தடுக்க வேண்டிய அரசே சாராயம் விற்பதுதான் வேதனை. சட்டத்தை அரசே காலில் போட்டு மிதிக்கும்போது சட்டத்திற்குத்தான் என்ன மரியாதை? எங்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுபோன்ற சட்டப்பூர்வ விளக்கத்தைப் போராட்டங்களின் மூலம் முன்னெடுத்து வைக்கின்றோம். எங்கள் போராட்டம் ஒரு நாள் மக்கள் போராட்டத்திற்குத் தூண்டும் என நம்புகிறோம். மக்களின் ஒருமித்த குரல் ஓங்கி எழும்போது இந்த நியாயமான குரலுக்கு அரசு ஒருநாள் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.

மதுவினால் அரசுக்கு வருமானம் வருகிறது. மதுவைத் தடைசெய்தால் வருமானம் தடைபடுமே என்ற காரணத்தைச் சிலர் முன்வைக்கின்றார்களே....!

மதுவினால் அரசுக்கு வருமானம் என்று தினமலர் பத்திரிகைதான் செய்தியைப் பரப்பிவருகிறது. டாஸ்மாக்கைக் காப்பாற்றுவதில் தினமலரின் பங்கு முக்கியமானது. அரசுக்கு வருமானம் என்பது மூளைச்சலவை. சாராயத்தைக் கொடுத்துக் கணவனிடமிருந்து காசு பறிப்பார்கள். வீட்டுக்கு ஆடு, மாடு கொடுப்பார்களாம். உங்களிடம் இலவசம் கேட்டது யார்? அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழியே இல்லையா? கிரானைட் கற்களைத் தனியார் சுரண்டி விற்கிறார்களே... அரசு கிரானைட், தாது மணல்களை எடுத்து வருமானம் பார்க்கட்டுமே...! ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடிக்கு குடிக்கிறார்கள் மக்கள். மதுவைத் தடைசெய்தால் அந்த 50ஆயிரம், 60ஆயிரம் கோடியைத் தொழிலில் போடுவார்கள். வீடு கட்டுவார்கள். அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்தாலும் அது அரசுக்கு நன்மையைத்தானே தரும். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால் அரசுக்குக் கூடுதல் பணம் கிடைக்கும். குடியினால் ஏற்படும் விபத்துகளில் அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு? குடியினால் குடல் வெந்து மருத்துவமனைகளில் செத்து மடியும் மக்களுக்கான மருத்துவச் செலவு எவ்வளவு? எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் மதுவினால் அரசுக்கு பெரும் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம்.

இடதுசாரிகளும் மதுவை ஆதரிக்கின்றார்களே... கவனிக்கின்றீர்களா...?

யார் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் குற்றம் குற்றமே..! டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கூறுகின்றார்கள். இதில் தொழிலாளியின் நலம் எதுவுமில்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாற்றுப் பணிகளை வழங்கக் கோரி இருக்கலாம். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோருவது டாஸ்மாக்கை நிரந்தரப்படுத்து என்பதுதான் அதன் அர்த்தம். எந்தத் தொழிலாளி, பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ.. அவர்களின் அன்றாடக் கூலியை மதுவின் மூலம் அரசு வம்படியாகப் பிடுங்கிக் கொள்கிறது. மட்டுமில்லை உழைக்கும் வர்க்கத்தை நாசப்படுத்துவதும் இந்த மது அரக்கன்தான். மதுவை ஒழிக்க முன்வரவேண்டிய இடதுசாரிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது வேதனையானது. துயரமானது.

இந்தியா முழுவதிலும் தடை செய்தால்தான் தமிழகத்திலும் மதுஒழிப்பு சாத்தியம் என்பது சரியா..?

மதுவிலக்கு மாநில அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம். இந்தியாவில் தடை செய்தால்தான் மாநிலத்திலும் தடை செய்வோம் என்றால் மாநில சுயாட்சிக்கு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? 1971 வரை மது தடை செய்யப்பட்ட மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்திக்கொண்டு அவருடைய கொள்கைக்கு எதிராக மது வியாபாரம் செய்கின்றனர். அ.தி.மு.க ஏதாவது திட்டம் கொண்டு வந்தால் அடுத்துவரும் திமுக அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விடும். திமுக கொண்டு வந்த புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், உழவர் சந்தை, சமத்துவபுரம் என்று  எத்திட்டத்தையும் அடுத்து வரும் அதிமுக அத்தனை திட்டங்களையும் கடாசிவிடும். ஆனால் என்ன ஒற்றுமை பாருங்கள். மது விற்பதில் மட்டும் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை..! டாஸ்மாக்கைத் திறந்தது அதிமுக; அதற்காகவாவது திமுக அதை இழுத்து மூடியிருக்கலாம். கலைஞர்தான் மதுவிலக்கை உடைத்து மது ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்தவர். கலைஞர் கொண்டு வந்ததை அதிமுக ஆதரிக்கலாமா? அதற்காகவாவது மதுவைத் தடை செய்திருக்கலாம் இல்லையா....!?

உங்கள் போராட்டத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எப்படி இருக்கின்றன..?

மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது. நான் படிக்கின்ற சட்டக்கல்லூரி மாணவர்களும் உறுதுணையாக இருக்கின்றார்கள். மதுவை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் வைகோ, தமிழருவி மணியன், டாக்டர் ராமதாஸ் போன்றோர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவிக்கின்றார்களே தவிர இதை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்வதில் முனைப்புக் காட்டவில்லை. மதுவுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் ஓரணியில் திரண்டாலே இந்த மதுவை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அரசியல்வாதிகள் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள்தானே....! எங்களுடைய போராட்டங்கள் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் கூட போதிய முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்களில் இச்செய்திகள் இன்னும் அழுத்தம் பெறுமானால் இது மக்கள் போராட்டமாக மாற வாய்ப்பு இருக்கின்றது. இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எங்கள் போராட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. கடந்த ஆண்டு முஸ்லிம் கட்சியின் தலைவர் ஒருவர் எங்களைச் சந்தித்து ரமளான் முடியட்டும். உங்கள் போராட்டத்தை நாங்கள் வீரியமாக்குகின்றோம் என்றார்கள். இதோ அடுத்த ரமளானும் வந்துவிட்டது. அவர்கள் வரவில்லை. எல்லாருக்கும் நிறைய வேலைகள் இருக்கும். அதே வேளையில் இது தலையாயப் பணி இல்லையா..? நாங்கள்தான் முன்நின்று நடத்தவேண்டும் என்பதில்லை. தகுதியானவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும். எப்படியாவது மது ஒழிந்தால் சரி..!

மதுவை முற்றாக ஒழித்துவிட முடியும் என்று நம்புகின்றீர்களா...?

நிச்சயமாக...! மது இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். மதுவற்ற நாடாக இந்தியா மாறும். அதற்கான போராட்டவிதை என்றோ தூவப்பட்டு விட்டது. நாங்கள் அதில் இணைந்துள்ளோம். சமூக நலனிலும், நாட்டு நலனிலும் அக்கரை கொண்டவர்கள் ஒரணியில் இணையும் போது மதுவை இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் ஒழித்தே தீருவோம்.

சந்திப்பு: வி.எஸ்.முஹம்மது அமீன்  
நன்றி : சமரசம் ஜுலை 2014. 

பரிந்துரை : அதிரை அஹ்மத் 

21 Responses So Far:

Ebrahim Ansari said...

தமிழகத்தின் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் எல்லா விஷயங்களிலும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள்.

ஆனால் மது உற்பத்தி, விற்பனை, கடைகள் , கடைகளுக்குள்ளே நடக்கும் பார்கள், அந்த பார்களில் நடத்தப்படும் உணவுக் கடைகள் ஆகியவை நடத்துவதில் கூட்டணியாக செயல்படுகிறார்கள். இது வெளிப்படையான விஷயம்.

இன்னும் குறிப்பாக சொல்லபோனால் சமூகத்தில் ஒரே குறிப்பிட்ட பிரிவினர்கள்தான் இவைகளைத் தங்களுக்குள் பங்கீட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் இருந்தாலும் இவர்கள் உறவினர்கள்.

ஒரு பெரிய சாராய சாம்ராஜ்யத்தை சின்னஞ்சிறு நந்தினியால் தகர்க்க முடியுமா?

பெரிய அளவில் மக்கள் இயக்கம் தேவை. விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தேவை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அர்ப்பணிப்பு - தங்களின் பணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் மது ஒழிப்புப் பிரச்சாரம் தேவை.
இல்லாவிட்டால் அழிவைத் தடுக்க இயலாது.


பரிந்துரை செய்த பெரியவர் அஹமத் காக்கா அவர்களுக்கு நன்றி.

crown said...

அரசு ஒரு நந்தி அது இனியும் நகரும்??ஆனாலும் அடிக்க,அடிக்க அம்பியும் நகரும் என்பது போல் சகோதரி நந்தினியின் அடி ஆரம்பம் இனி சமுதாயம் ஓங்கி அடிக்க இந்த அம்மா ஆட்சி நகர்ந்து கொடுக்காதோ???? பரிந்துரை செய்த அஹமத் சாட்சா அவர்களுக்கு நன்றி.

crown said...

எந்த அரசியல் போக்குக்கும் "சமரசம்" செய்துகொள்ளாத இந்த சகோதரியின் போராட்டத்திற்கு நாமும் துணை நிற்கவேண்டும்.அப்பொழுதான் தள்ளாடும் தமிழகம் நிமிர்ந்து நிற்கும்!

Aboobakkar, Can. said...

தனிமனித ஒழுக்கத்தினால் மட்டுமே உலகமெங்கும் மதுவை ஒழிக்கமுடியும் மாறாக அரசுகள் மதுக்கடைகளை மூடினால் கள்ள சாராயம் களைகட்டிவிடும்.

sabeer.abushahruk said...

மது விலக்கு வேண்டி பொது (நல) வழக்கு அபரிதமான அளவில் போட்டால் போதை இருள் நீங்க ஒளி விளக்கு வாய்க்காதா?

பரிந்துரைக்கும் அஹ்மது காக்காவுக்கு நன்றி!

Unknown said...

மதுவை ஒழிப்பதற்கு ஒரே வழி 'இஸ்லாம் நிலைநாட்ட படுவது' - மீண்டும் கூறுகிறேன் - 'இஸ்லாம் நிலைநாட்டபடுவது' மட்டும் தானே தவிர போராட்டமோ, தனி மனித ஒழுக்கமோ அல்லது வேறு வழிகளோ எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

இதை எப்படி உறுதியாக என்னால் கூறமுடிகிறது என்பதை பார்ப்போம்.

முதலாவதாக 'தனி மனித ஒழுக்கமெல்லாம்' இன்றைய 'கார்பரேட் பார்டி கலாச்சாரத்தில்' அடித்து கொண்டு பொய் அம்மணமாக நிற்பத்தையும் - அந்த நிர்வாண நிர்பந்தமே நாகரிகம், குழு ஊக்கத்தின் அடையாளம் என்று கட்டாயப்படுத்தபடுவது யாவரும் அறிந்ததே.

மது, சாராய விருந்துகள் இல்லாமல் இன்று 'வர்த்தக சந்திப்போ' அல்லது 'நிறுவன கூட்டங்களோ' இல்லை என்பதுதான் தற்போதைய நிலவரமாகும்.

அடுத்ததாக 'ஷியாக்களின் நாடான' இஸ்லாமிய எதிர்ப்பு போலி ஆயதொல்லாஹ் சர்வாதிகார சமாதி வணகிகளின் நாட்டை எடுத்து கொண்டால் - இஸ்லாமிய மது ஒழிப்பு சட்டமாக உள்ளதை காணலாம்.

ஆனால் சமாதி வணங்கி பயல்களின் நாடுகளான ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், ஈராக் யாவும் மது, சாராயம் ஆறாக ஓடும் நாடுகளாக திகழ்வது தான் உண்மை நிலவரம்.

உலக அளவில் இதே போன்று குறிப்பாக 'ஷியா போலி முஸ்லீம்கள் ' வாழும் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் எல்லா நாடுகளிலும் 'நைஜீரியா முதல் பாகிஸ்தான் வரை' சமாதி வணக்கத்தை போலவே - 'மது, சாராயம்' யாவும் ஆறாக ஓடுவது 'யாவரும் அறிந்த ரகசியம்'.

முஸ்லீமல்லாத நாடுகளில் 'மது சாராயம்' ஒரு இன்றியமையாத அடிப்படை தேவையாக மாறிவிட்டதும் கண்கூடு.

இந்தியாவில் 'மது விலக்கு' முழுமையாக அமுல் படுத்தப்பட்ட 'குஜராத்' போன்ற மாநிலங்களில் கூட 'கள்ளச்சாராய விநியோகமும் முழுமையாக' அமுல் படுத்தப்பட்டுள்ளது என்பதை தேமுதிக வின் 'விஜயகாந்து' போன்ற தேசிய தலைவர்கள் கூட கண்டிப்பாக அறிந்து வைத்திருப்பார்கள்.

இந்நிலையில் உலகில் மது விலக்கை 'அமல் படுத்துவதில்' ஓரளவிற்கு வெற்றி பெற்ற நாடுகள் என்றால் 'சவூதி அரேபியா' துவங்கி உண்மையான 'இஸ்லாமிய தவ்ஹீத்' குறித்த விழிப்புணர்வுள்ள சமுதயகங்களை கொண்ட ஒரு சில நாடுகள் மட்டும்தான் என துணிந்து கூற இயலும்.

கடந்த 1400 கால வரலாற்றிலும் 'இஸ்லாம்' மட்டுமே 'மது விலக்கை' செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பதை காணலாம்.

மது விலக்கை அமுல் செய்வதில் 'இஸ்லாத்தின் வெற்றிக்கு' ஒரு முக்கிய காரணம் உள்ளது.

அந்த காரணம் என்னவென்றால் 'மது குடிக்கும் நிலையில்' ஒருவன் ஷிஆ சமாதி வணங்கியாக இருக்கலாம் (பாகிஸ்தானின் தந்தையான ஷியா முஹம்மதலி ஜின்னாஹ் ஒரு குடிகாரன்), கிருத்துவனாக இருக்கலாம், யூதனாக இருக்க இயலும், ஹிந்துவாக இருக்கலாம், பௌத்தனாக - சீகியனாக என்று வேறு எந்த மதத்தை சாரந்தவானகவும் இருக்க முடியும் ஆனால் ஒரு முஸ்லீமாக மட்டும் இருக்க முடியாது.

இஸ்லாம் மட்டும் தான் 'மது மற்றும் போதையிலும், விபச்சாரத்திலும் தன்னிலை இழந்த' ஒருவன் அதிலிருந்து மீண்டு சுயநினைவை அடையும் வரை 'முஸ்லீமாக மாட்டான்' என்பதை 'ஓங்கி தலையில்' அடித்தார் போன்று சொல்லும் ஒரே மதம்.

அதுவே 'மது விலக்கில்' இஸ்லாத்தின் வெற்றிக்கான ஒரே நேரடி காரணம்.

எனவே 'நந்தினி' போன்றோர் 'மது ஒழிப்பு' என்று 'காந்தியால் கூட' சாதிக்க முடியாததை செய்ய முயன்று தங்களது சக்தியை விரயம் செய்து 'நொந்து நூடுல்ஸாக' போவதை விட்டு விட்டு - இஸ்லாத்தை அறிந்த 'முஸ்லீம்களாகி' - இஸ்லாத்தை நிலை நிறுத்த முயன்றால் மட்டுமே தாங்கள் சார்ந்த சமூகத்தை 'மது அரக்கனிடமிருந்து' ஓரளவிற்கு மீட்க முடியும் என்பதை உணரவேண்டும்.

எனது கூற்றில் சந்தேகமிறுப்போர் 'வரலாற்றை' புரட்டி அறிந்து கொள்ளட்டும் - சமகால நிலவரங்களையும் ஆய்வு செய்யட்டும். 'இஸ்லாத்தை தவிர மதுவை குறிப்பிடத்தக்க அளவில் ஒழிக்க வேறு வழியே' இல்லை என்பதை உணர்வார்கள்.

sheikdawoodmohamedfarook said...

மதம்.மார்க்கம்வேதம்,போராட்டம் ஆகிய எல்லாவற்றையும் விட மனிதனாய் பார்த்துதிருந்தாவிட்டால்எந்தபாவச்செயலையும் ஒழிக்கவே முடியாது. இப்'போதை'க்குஒருமனிதனைதிருத்தவேறுஒருமனிதனாலோ,மார்க்க போதனையாலோ. அரசுசட்டத்தாலோ, போராடத்தாலோ எதுவும் ஆகப்போவதில்லை.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Alcohol drinking is a habitual addiction similar to smoking. An individual who starts this dinking habit becoming addict to alcohol.

Relieving from drinking or smoking addiction is a tough challenge.

There are different reasons told by the persons who consume alcohol.

They are to get relief from tough day work.
For fun enjoyment in parties of birth or death or careers or companies.
To get relief from painful feelings and worries. To revenge.
To get courage while attempting to murder someone or to make troubles in families or in public. etc.

In all of those drinking moments drinker loses his/her own rational sense. As for as the drunkard is not making trouble to others(in those religions which permits alcohol) its tolerable. But human(of any religion including athiests) can not maintain discipline in drinking alcohol.

In order to reform the society in this regard a strategic plan is vital from school education. In all religions the alcohol drinking is to be viewed as a vicious and bad act since it currupts individual and spoil vitality of society.

May God almighty show us straight path and save our community from this vicious alcohol drinking habits.

B. Ahamed Ameen from Adirai.

adiraimansoor said...

சகோதரி நந்தினியின் சமூக தொலை நோக்கு பார்வையும் அவளுடைய தைரியமும் மிகவும் பாராட்டிற்குறியது.
நம் சமுதாய இயக்கங்களாள்தான் இப்படி செய்வதற்கு தில் இல்லை குறைந்தது சகோதரி நந்தினிக்காவது நாம் பக்கபலமாக இருந்து
போராட்டம் சிறக்க வாயளவில் இல்லாமல் அதை செயல் வடிவிலே கொண்டுவர முன் வர வேண்டும்
தமிழகத்தில் உள்ள அணைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்புவிடுத்து அவர்களையும் அழைத்து ரொம்ப ஸ்ட்ரங்காக இந்த போராட்டத்தை நடத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்

சகோதரி கூறும் ஒவ்வொரு பாயிண்டையும் மாணவர்களுக்கு எடுத்து செல்லவேண்டும்
நம் சமுதாய இயக்கங்கள் செய்ய முன் வருமா?

adiraimansoor said...

///மதுவை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். indian penal code ஐபிசி பிரிவு 328 இன் படி அரசு மதுவிற்பது சட்டவிரோதச் செயல். போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா...? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும்///

தமிழக அரசியலுக்கு சகோதரி நந்தினியின் மிகப்பெரும் சவால், இந்த சவாலுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் ஆட்சி செய்வதுதகுதியற்றவர்களே
அது அதிமுகவாக இருந்தாலும் சரிதான் திமுகவாக இருந்தாலும் சரிதான்

adiraimansoor said...

////வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி///

இந்த அடையாளப் போராட்டமெல்லாம் வெரும் கண்துடைப்பு, நாமும் இப்படி போராடினோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும் அதில் தம்மை பெரிய ஆள் என்று சீன்போடும் அரங்கேற்றமேயன்றி வேறில்லை
சகோதரி நந்தினி போன்று எந்த தலைவனாவது இதுவரை இப்படி போராடி இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் உண்மையான போராட்டம் இப்படி பத்து பேர் போராடினாலே மக்களிடம் விழிப்புணர்வு வரும்

adiraimansoor said...

இந்த பதிவு அதிரை நிருபரில் போட்டி இருப்பது
அதிரை நிருபருக்கு சக்திவாய்ந்த உரம் என்றே நான் கருதுகின்றேன் இது சமரசத்தில் வந்ததாக இருந்தாலும் சரியே
அல்ஹம்துலில்லாஹ்
இந்த பதிவு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் இதற்கு குறைந்த அளவே பின்னூட்டங்கள் பதிந்திருப்பது நம் சமுதாயத்தின் பெரும் பின்னடைவே
இப்படிபட்ட பதிவுகளுக்கு இந்த பதிவை படிக்கும் அணைவரும் கருத்திட்டு தமது எதிர்ப்பை பலமாக காட்டியும் சகோதரி நந்தினிக்கு நம்து ஆதரவை தெரிவித்தும் இருக்கவேண்டும்
அயிரக்கணக்கான பின்னூட்டங்களை மதுவுக்கு எதிராக பதியவேண்டும் அதன் மூலம் தமிழகத்தில் மக்களுக்கு விழிப்புனர்வு உண்டாகி மதுவிலக்கு அமுலுக்கு கொண்டுவர போராட்டங்களை ஆங்காங்கே முடிக்கிவிட்டு எப்படியாவது தமிழகத்தை ஆளுகின்றவர்கள் வேறுவழியில்லாமல் மதுவிலக்கை அமுல் படுத்தும் விதமாக போராட்டங்கள் அமைய வேண்டும்
சும்மா ஒரு நாள் கொடியை பிடித்துவிட்டு வீட்டில் வந்து தூங்கும் போராட்டமாக இருந்தால் அதற்கு எந்த எபெக்ட்டும் இருக்காது

சகோதரி நந்தினியின் போராட்டம்போல் இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் மதுவிலக்கு தமிழகத்தில் அமுலுக்கு வரும்

ஒரு நந்தினியே இப்படி செய்யும்போது ஓராயிரம் நந்தினிகள் கிளம்பினால் நிச்சயம் மதுவைபற்றி அரசு பரிசீலிக்கும் என்பது நிச்சயம் யாரும் இப்படி போராட்டம் செய்யாததினாலும் இதை பற்றி யாரும் தட்டி கேட்காததினாலும் தமிழக அரசே தம்து நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல் பட்டு கொண்டிருப்பது வெட்ககேடே

adiraimansoor said...

சகோதரர் Khan testant
எழுதி இருக்கும் விஷயங்களில் அடிப்படை உண்மைகள் இருந்தாலும் அதில் தொலை நோக்கு பார்வை இருந்தாலும் அதற்காக இப்போராட்டத்தை டிஸ்கரேஜ் செய்யக்கூடாது

அடிப்படைவிஷயங்கள் தானக நடந்து கொண்டுதான் இருக்கின்றன

இருந்த போதிலும் உன்னாவிரத போராட்டங்களாலும் எத்தனையோ போராட்டங்களாலும் அரசியல் சட்டங்களிலும் எத்தனையோ மாற்றங்கள் நடந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது
அதற்கு உதாரணம் ஹிந்தி ஒழிப்பு போராட்டம் அந்த போராட்டத்தினால் தமிழகத்தில் ஹிந்தி ஒழிக்கப்பட்டது எல்லா மானிலங்களிலும் ஹிந்தி இருந்தலும் இந்தியாவின் தேசிய மொழி இன்றுவரை தமிழகத்தில் இந்தி இல்லை
இதற்கு காரணம் அந்த போராட்டத்தின் தாக்கம்தான்
ஹிந்தியை ஒழித்தது சரியில்லை என்பது வேறு விசயம்
போராட்டத்ஹ்டின் தாக்கம் இன்றுவரை தொடர்கின்றது என்பதை குறிப்பிடவே இதை சுட்டிக்காட்டியுள்ளேன் இது போன்று எத்தனை விஷயங்கள் போராட்டத்தின் காரணமாக முடிவுக்கு வந்துதான் இருக்கின்றது

ஆனபடியால் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு போராடும் போராட்டத்தை குறை கூறுவதை
நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது

adiraimansoor said...

மாணவர்களாலும் தொழில் சங்க ஊழியர்களாலும் நத்தப்பட்ட எத்தனையோ போராட்டங்கள் வெற்றி கண்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்

sheikdawoodmohamedfarook said...

மதுவைதடைசெய்யாதஇந்துமதத்திலிருந்துஒருசகோதரிஅதற்க்குஎதிராகபோராடபுறப்பட்டபோதுமதுஅருந்துவது 'ஹராம்'என்ற இஸ்லாத்தை தழுவியவர்களின்இஸ்லாமியகட்சிகார்கள்மௌனித்துகிடக்கிறார்களே. தேர்தல்நேரத்தில்மட்டும்தான்அவர்களுக்கு'போராட்ட'Maniacவருமோ?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

// இப்போராட்டத்தை டிஸ்கரேஜ் செய்யக்கூடாது //

நான் எங்கே போராட்டத்தை கெடுத்தேன்? மாறாக சரியாக போராடும் முறை எது என்பதை அல்லவா கற்று கொடுத்தேன்.

இங்கே தீவிரமாக எழுதும் யாவரும் நான் போராடிய அளவிற்கு மதுவை, புகை பிடிப்பதை, ஆம்வே போன்ற எம்எல்எம் மற்றும் லஞ்ச ஊழல் போன்ற சமூக தீமைகளை எதிர்த்து அதற்காக திட்டு, அடி, உதை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் விளைவுகளை எதிர் நோக்கி இருப்பீர்களா என்பதது எனக்கு தெரியாது.

அரசு ஊழியனாக இருந்த காலத்தில் இவற்றால் நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஆனால் இவற்றை எதிர்த்து போராடியதற்காக நான் பட்ட அடி உதைகள், அவமானங்கள், உருவாக்கி கொண்ட எதிரிகள் ஆகியவைதான் தீமைகளின் ஊற்றுக்கண் எது என்பதை என்னை சிந்திக்க தூண்டியது.

எனது அனுபவத்தையும் அவற்றில் நான் பெற்ற பாடங்களையும்தான் நந்தினிக்கும் மற்றவர்களுக்கும் அனுபவ உண்மைகளாக ஒரு முஸ்லீம் என்ற முறையில் பகிர்ந்துள்ளேன்.

தீமைகளை தனித்தனியாக எதிர்ப்பதால் - சக்தி விரையமாகுமே அன்றி எந்த நன்மையையும் வரப்போவதில்லை என்பது எனது தீர்மானமான முடிவு.

அடுத்ததாக தீமைகளுக்கு அடிநாதமான விடயங்களை விட்டு விட்டு தீமைகளை எதிர்ப்பதும் பலன் தராது என்பது எனது கருத்து.

உதாரணமாக கற்பழிப்பு என்று கொடும் தீமைக்கு 'மது' அரக்கன் காரணமாவது போல 'இணையத்தில்' - 'பரத்தையர் வர்ணனனை' (Pornography) யும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

அவ்வாறெனில் கற்பழிப்பை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மது, இணையம் உள்ளிட்ட எல்லா குற்ற மூலங்களையும் தடுக்க பாடுபட்டால் தான் பயனளிக்கும் என்பது யாவரும் அறிந்தது தானே.

எனவே தான் நபிகள் நாயகம் தனது பிரச்சாரத்தை துவக்கும் போது முதலில் 'ஓரிறை கொள்கையை' கூறி துவக்கினார்கள்.

அல்லாஹுவும் 'இஸ்லாத்தின்' ஆரம்ப நிலைகளில் 'ஓரிறை கொள்கையை நேர்வழியை வலியுறுத்தி இஸ்லாமிய கொள்கைகள் நிலைநாட்ட பட்ட பின்பே 'மது போதையை' தடை செய்யும் கட்டளைகளை பிறப்பித்துள்ளான்.

இதனால்தான் மது குடித்துக்கொண்டே தொழுகையிலும் ஆரம்ப கால முஸ்லீம்கள் ஈடுபட்டனர்.

பின்னர் 'ஓரிறை கொள்கையில்' ஊறிய இதயங்கள் 'மது' தடை செய்யப்பட்ட பொது உடனே 'ஊரல்களை' உடைத்து நொறுக்கியதா இல்லையா?

இப்போது நடப்பதது என்னவென்றால் 'மதுவை விட' கொடிய 'இணை வைத்தாலும்', 'சமாதி வணக்கமும்', 'ஷிஆ மற்றும் சூபி' கொள்கைகளும் முஸ்லீம்களையும், பள்ளிவாசல்களையும் கட்டுக்குள் கொண்டு வந்த விட்ட நிலையில் - 'ஓரிறை கொள்கையின்' எதிரிகளை பள்ளிவாசல்களிலும், இயக்கங்களிலும் அதிகாரம் செலுத்த வைத்து விட்டு - 'மதுவை எதிர்க்கிறேன்' என்று கிளம்புவது பலன் தருமா என்பதை யோசியுங்கள்.

எனவே தீமைகளை எதிர்பதற்கு ஒரு வழி முறை உள்ளது - அதற்கு அல்லாஹுவும், ரசூலும் முன்மாதிரியாக இருந்துள்ளனர்.

இதை 'இஸ்லாத்தை' கற்பதன் மூலம் 'ஈமான் என்னும் நம்பிக்கை' கொள்வதன் மூலமும் கற்று கொள்ளலாம் அல்லது என்னை போன்று அடி பட்டு மிதி வாங்கியும் கற்று கொள்ளலாம்.

தனது செயல்பாடுகளில் 'முன்னுருமை முறைமைகளை' (Prioritization) அறிந்து செயல் படுத்தாத எந்த சமுதாயமும், தனி மனிதர்களும் வெற்றியாளர்களாக திகழ்வது அரிது.

ஒரு முஸ்லீம் என்ற முறையில் சொல்வது மட்டும் தான் எனது கடமை - இந்திய ஜனநாயக நாட்டில் - கேட்பதும் விடுவதும் அவரவர் இஷ்டம்.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

///இப்போது நடப்பதது என்னவென்றால் 'மதுவை விட' கொடிய 'இணை வைத்தாலும்', 'சமாதி வணக்கமும்', 'ஷிஆ மற்றும் சூபி' கொள்கைகளும் முஸ்லீம்களையும், பள்ளிவாசல்களையும் கட்டுக்குள் கொண்டு வந்த விட்ட நிலையில் - 'ஓரிறை கொள்கையின்' எதிரிகளை பள்ளிவாசல்களிலும், இயக்கங்களிலும் அதிகாரம் செலுத்த வைத்து விட்டு - 'மதுவை எதிர்க்கிறேன்' என்று கிளம்புவது பலன் தருமா என்பதை யோசியுங்கள். /////

மாஷா அல்லாஹ் சரியான ஆனித்தரமான சிந்தனைதான் இருந்தாலும் எல்லா குற்றத்திற்கும் பேசாக இருக்க கூடிய மது என்னும் கொடிய விஷத்தையும் நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்துவிடமுடியாது அல்லவா

எந்த ஒரு சிந்தனையுமே ஒரு மனிதரில் இருந்து உருவாகி வலுப்பெற்று அது சிறிது சிறிதாக மக்கள் பலத்தை பெற்று இது இறுதி வடிவம் பெற்று மக்கள் பலத்தின் கூடுதல் குறைவை வைத்து வெற்றியும் தோவியும் காணும்

இப்பொழுது நந்தினி என்ற சகோதரியின் மூலாமக உருபெற்றுள்ளது அது முழு வடிவம் பெற பொது மக்களின் ஆதரவுஅகளும் இயக்கங்களின் ஆதர்வுகளும் மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் நந்தினியுடன் கை கோர்த்து போராட்டம் செய்தாலே அந்த போராட்டம் முழு வடிவம் பெற்று வெற்றியும் காண் வாய்ப்புகள் உள்ளன

தனிப்பட்ட ஒருத்தியால் எதுவும் சாதிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே
நான் கேட்ப்பது நாம் ஏன் அதை டிஸ்கரேஜ் செய்ய வேண்டும்

அது நடக்குகின்றபடி நடக்கட்டும் நாமும் நந்தினியுடன் சேர்ந்து கை கோர்ப்போம் என்றுதான் கூறுகின்றேன்.

நந்தினி போன்று இதுவரையும் யாரும் தனி மனிதனாக இந்த அளவுக்கு இறங்கி போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நீங்கள் கூறுபவற்றையும் ஒதிக்கிவிட முடியாது இதையும் ஒதிக்கிவிட முடியாது

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு