Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 36 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2014 | , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

கடந்த அத்தியாயத்தில் பங்கு சந்தைகள் பற்றிய அமைப்பு மற்றும் தன்மைகளைக் கண்டோம். பங்கு சந்தை வர்த்தகத்தில் ஹாராமான நூலின் இழைகள் ஊடுருவி இருப்பதால் அவற்றில் ஈடுபடுவதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று மார்க்க அறிஞர்கள் செய்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டி , உலகம் ஒரு பாதையில் போய் முன்னேறும் சூழ்நிலையில் முஸ்லிம்கள் அந்த முன்னேற்றத்துடன் இணைந்து செல்லாமல் நம்மை மார்க்கம் தடுக்குமா என்ற வினாவை எழுப்பியதுடன் , எவற்றை ஹராம் என்று மார்க்கம் தடுக்கிறதோ அத்தகைய விஷப் பூச்சிகளை அழித்து ஒழித்துவிட்டு முழுக்க முழுக்க இஸ்லாமிய வழியில் இயங்கும் தன்மை கொண்ட பங்கு சந்தை வர்த்தக முறைகளை மார்க்க அறிஞர்கள் வடிவமைத்துத் தர இயலாதா அதைக் கொண்டு இந்த சமுதாயம் பொருளாதார வழிகளில் முன்னேற்றமும் தனது வழக்கமான முறைகளை மாற்றியும் வளர்த்துக் கொள்ள இயலாதா என்றும் நமது ஆதங்கத்தையும் வெளியிட்டு இருந்தோம். 

நாம் எதிர்பார்த்தபடி கட்டுரையின் கருத்துக்களை வரவேற்றும் விமர்சித்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய மவுலானா அசதுல்லா அவர்களும் அன்புக்குரிய தம்பி மன்சூர் அவர்களும் விமர்சனமாக சில கருத்துக்களை சுட்டிக் காட்டி இருந்தார்கள். அவற்றை மிகுந்த மரியாதையுடன் நாம் ஏற்றுக் கொண்டோம். 

அதே போல மலேசியாவிலிருந்து , தம்பி ஜாகிர் ஹுசேன் அங்கு நிலவும் சில இஸ்லாமிய அடிப்படையிலான முறைகளையும் வெளிப்படுத்தி அதே ரீதியில் இங்கும் ஏற்படுத்தலாம் என்கிற விதத்திதில் கருத்து வெளியிட்டு இருந்தார்கள். மேலும் தம்பி கவிஞர் சபீர் அவர்களும் களைய வேண்டிய களங்கங்களைக் களைந்து தூய்மைப்படுத்தி பங்கு சந்தைகளை இஸ்லாமிய முறைப்படி அமைத்துக் கொள்ள முயல வேண்டுமென்ற ஊக்கமான கருத்தை வெளியிட்டு இருந்தார்கள். 

இவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்க வேண்டிய கடப்பாட்டுடன் சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தொடக்கமாக, மார்க்கம் படித்த கல்வியாளர்கள் , உலமாக்கள் ஆகியோர் மீதும் அவர்கள் சொல்லும் கருத்துக்கள் மீதும் நமது முழு நம்பிக்கையை மீண்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். உலமாக்கள் சொல்வது மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்கள்தான் என்பதும் அவைகள் நம்மை எச்சரிக்கை செய்து தீய வழிகளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல் காப்பாற்றத்தான் என்பதையும் நாம் அவர்கள் மீதுள்ள மரியாதை கலந்த அன்புடன் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறோம். 

அதே நேரம் மார்க்கம் படித்த எல்லோர் மீதும் இந்த அளவு கோலை வைக்க முடியாத துரதிஷ்டமான நிலைக்கு இன்றைய சமுதாயம் தள்ளப்பட்டு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளும்படி அல்லது இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறதா என்று பரிசீலிக்கும்படியும் நாம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 

நாம் இது பற்றி மிக விரிவாக குறிப்பிட விரும்பவில்லை. அனைத்துமே உள்ளங்கை நெல்லிக்கனியாக விரிந்து கிடக்கிறது. மார்க்கம் பயின்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இந்த சமுதாயத்தின் உண்மையானதும் இன்றைய தேவையானதுமான ஒற்றுமையைக் குலைக்கும் விதத்தில் நடந்து இந்த மார்க்கத்தின் பெயராலேயே சமுதாயத்தை பல்வேறு கூறு போட்டு ஒற்றுமையின்மை அரங்கேறிக் கொண்டு இருப்பதை மனசாட்சி உள்ள உலமாக்கள் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த சமுதாயம் சின்னாபின்னப்பட்டுப் போய்க் கிடக்கின்ற காட்சிகளைக் கண்டு கண்ணீர் வடிக்கிற உலமாக்களையும் நம்மிடையே நாம் கண்டு வருகிறோம்.

இது ஒரு புறம் இருக்க, பல முக்கியமான மார்க்க விஷயங்களில் உலமாக்களிடையே கருத்துப் பிளவுகள், ஆளுக்கு ஆள் தனிப்பட்ட அபிப்பிராயங்கள், ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு ஐந்து நாட்கள் வரை நடக்கும் விவாத அரங்குகள் , அரசியல் பிளவுகள், எனக்குப் பிடிப்பவரை உனக்குப் பிடிக்காது உனக்குப் பிடித்தவரை நான் ஏற்க மாட்டேன் என்கிற பிளவுகள் , பிரச்னனைகள் இருப்பதையும் நாம் ஒதுக்கிவிடத் தயாரில்லை. ஒரே இறைவனை வணங்குகிற ஒரே மார்க்கத்தை பின்பற்றுகிற மார்க்கம் படித்த ஆலிம்களை திறந்த வெளி அரங்குகளில் கருத்து மோதல்களுக்குக் காரணமாக்குவது எது? 

ஆகவே பல்வேறு பொருள்களில் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் அல்லது மார்க்கத்தை நாம் பார்க்கும் பார்வைகள் வித்தியாசப்படுவதை மறுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்; உண்மை. 

இது ஒரு பக்கம் இருக்க, நாம் இங்கு பேசுபொருளாக எடுத்துக் கொண்ட பங்கு சந்தை பற்றிய இஸ்லாமிய பொருளாதார சிந்தனைகளுக்காக பல உலமாக்கள் நடத்துகின்ற வலைதளங்களையும் பதிவு செய்யப்பட்ட அவர்களது சொற்பொழிவுகளையும் பெரும் புகழ்பெற்ற சில மேதைகள் என்று கூறப்படுகிற பலர் எழுதிய கட்டுரைகளையும் பல மாதங்களாக தேடித் தேடிப் படிக்க நேர்ந்த போது நமக்குக் கிடைத்த கருத்துக்களின் சாரம்தான் நாம் தொகுப்பாக , கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்த கீழ்க்கண்ட கருத்துகளாகும். இவற்றை இந்தியா மற்றும் இலங்கையின் மார்க்க அறிஞர்களுடைய கருத்துக்களில் இருந்தே நாம் தொகுத்தோம். அத்துடன் அவற்றை உள்ளூரில் சில மார்க்க அறிஞர்களிடமும் படித்துக் காட்டி விவாதித்ததில் அவர்களும் அதே கருத்துக்களையே வலியுறுத்திக் கூறினார்கள். அவற்றை மீண்டும் தருகிறோம்.
  • உதாரணமாக, ஒரு நிறுவனத்திடம் இருக்கும் பங்குகளின் உண்மை மதிப்பு இருபது இலட்சம் ரூபாய் என்றால் அதை இரண்டு கோடி என்கிற அளவுக்கு மதிப்புக் காட்டி சொல்லப்படுகிறது. ஆகவே உண்மை மதிப்புக்கும் சொல்லப்படும் மதிப்புக்கும் இடையே ஒரு கோடியே எண்பது இலட்சம் வித்தியாசப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களில் நாம் செய்யும் முதலீடு, உண்மையின் அடிப்படையை தகர்த்துவிடுவதால் மார்க்கம் வகுத்த வணிக வழிமுறைகளுக்கு மாறுபாடாக நிற்கிறது. இல்லாததை இருப்பதாக காட்டப்படுவதால் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வணிகத்தில் நேர்மை என்கிற அடிப்படை தகர்ந்து போகிறது. 
  • பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் அந்த நிறுவனங்களின் கணக்குகளை சோதித்துப் பார்க்கவோ அல்லது நிர்வாகத்தில் தலையிடவோ அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. நமது கண் பார்வைக்குட்படாத ஒரு நிறுவனத்தில் முதலீடுகள் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல. 
  • பங்கு சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பணம் எத்தகைய பொருட்களை வாங்க/ விற்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் பங்கு வாங்கிய நிறுவனத்தின் பணம் , மதுக்கடைகள் நடத்தவும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள் நடத்தவும் கூட பயன்படுத்தப்படலாம். இப்படி தனது பணம் ஹராமான வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஹலாலான வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதாஎன்று அறிய முடியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விடும் பங்குச் சந்தை வணிகத்தில் முஸ்லிம்கள் இறங்கக் கூடாது என்று பல மார்க்க அறிஞர்கள் மற்றும் பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். 
பங்கு சந்தை வர்த்தகத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்ளவே கூடாதா? என்கிற நமது கேள்விக்கு பதில் கூடாது ! கூடாது ! என்பதுதான் நமக்கு பல் வேறு முனைகளில் இருந்தும் நமக்குக் கிடைத்த பதில்கள். கருத்து மாறுபாடுகள் கொண்டவர்கள் கூட இந்த விஷயத்தில் ஒற்றுமையாக கருத்துச் சொல்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில்தான் நாம் மார்க்க அறிஞர்களுக்கு சில கோரிக்கைகளை வைத்தோம். நமது கோரிக்கைகள் இவைதான்.

இந்த நவீன யுகத்தில் - புதுமைகளை புரட்டிப் போட்டுப் பார்க்கும் வணிக சமூகத்தில் வளர்ச்சியின் பாதையில் செல்ல மார்க்கம் ஒரு தடையாக இருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது.

என்றும், 

வங்கிகளில் வட்டியை ஒழித்து இஸ்லாமிய வங்கி முறையை மார்க்க அறிஞர்கள் தந்திருப்பது போல் இஸ்லாமிய பங்குச் சந்தை முறைகளையும் களைய வேண்டியவைகளைக் களைந்து வடிவமைத்து வழங்கினால் அது சமுதாயம் நவீன பொருளாதார வளர்ச்சியுடன் இணையாக போட்டி போட்டு வளர வழி வகுக்கும்தானே! எடுத்த எடுப்பிலேயே ஒன்றைத் தவறு என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லும் மார்க்க அறிஞர்கள் அந்தத் தவறுகளைக் களைய வழிகளையும் சொல்லித் தர மாட்டார்களா? இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளை விலங்கிடாதீர்கள்; சிந்தித்து அல்லாஹ் ஏற்கும் வழியில் சிறகாக ஆக்கித்தாருங்கள் என்று மார்க்க நல் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

என்பவை நமது கோரிக்கைகளாக இருந்தன. 

மார்க்க அறிஞர்களை நோக்கி நாம் விடுத்த கோரிக்கை ஒரு புறத்திலே நியாயமாக இருந்தாலும் மறு புறத்தில் நோக்கினால் இவைகளை தீர்க்கமாக அலசி ஆராய்ந்து முடிவுகள் சொல்லக் கூடிய அளவுக்கு பொதுவாகவும் பரவலாகவும் மார்க்க அறிஞர்கள் கூட இயலாதவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் மார்க்கத்தின் சட்டங்களைப் பயின்ற அளவுக்கு அவர்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டங்களை- அவை இந்தியா, மலேசியா, இலங்கை, அரபு நாடுகள் , வங்க தேசம் , பாகிஸ்தான் போன்ற எந்த நாடாக இருந்தாலும் பயிலுகின்ற வாய்ப்பும் அப்படிப்பட்ட உள்ளூர் சட்டங்களை மார்க்க சட்டங்களுடன் ஒப்பிட்டு சொல்லக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்கு கல்விமூலம் வழங்கப்பட்டிருப்பது மிக மிகக் குறைவுதான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். 

உதாரணமாக பங்கு சந்தை வணிகம் தொடர்பாக வரையறுத்த மார்க்க அறிஞர்கள் தங்கள் அறிந்த மார்க்கத்தின் அடிப்படையில் அது ஹராம் என்று எடுத்த எடுப்பில் சொல்லி விட்டார்கள். அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் அது சரிதான். ஆனால் இந்திய நாட்டில் அமுலில் இருக்கும் சட்டங்களின்படி இதை ஹலால் ஆக ஆக்கிக் கொள்ள இயலும் என்பதை எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு – அதில் வாய்ப்பு இருந்து அவர்களால் சொல்ல முடியவில்லை. இதற்குக் காரணம் கல்வி என்பது மார்க்கக் கல்வி என்கிற அளவோடு நின்று விடுவதுதான். இன்றைய நவீனக் கல்வியையும் அவர்களுக்கு சேர்த்து அளிக்கப்பட்டால் இந்தக் குறைகள் நீங்க வாய்ப்புண்டு. இதையே வேறு விதத்திலும் சொல்லாம் உலகக்கல்வியை மட்டும் படித்து விட்டு அதில் உள்ள ஹராம் ஹலால் பார்க்காத அறியாத முஸ்லிம்களுக்கு மார்க்கக் கல்வியும் சேர்த்து புகட்டப்பட்டால் இந்தக் குறைகள் இன்னும் அதிக அளவில் நீங்க வாய்ப்புண்டு. 

ஒரு சில சட்ட பூர்வமான ஆதாரங்களை சுட்டிக் காட்டி இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பங்குச் சந்தை வணிகத்தில் தாராளமாக ஈடுபடலாம் என்பதை இனி நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். எனது இந்த கருத்துக்கு நான் பக்க பலமாக அழைத்திருப்பது இந்திய கம்பெனிகள் சட்டத்தையும் பங்கு சந்தை வணிகம் தொடர்பாக இந்த கம்பெனிகள் சட்டம் தந்திருக்கும் பாதுகாப்பான தன்மைகளையும்தான். இந்த பாதுகாப்பான முறைகளை முஸ்லிம்கள் பின்பற்றி தாங்களும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்பது எனது மிகத் தாழ்மையான கருத்து. இந்தியாவைப் பற்றி மட்டும் இதில் குறிப்பிடுகிறேன். மற்ற நாட்டின் சட்டங்களை எல்லாம் நாம் படித்துப் பார்க்கவில்லை. அத்துடன் மலேசிய போன்ற இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்தி இவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பதை தம்பி ஜாகிர் உசேன் பல எடுத்துக் காட்டுக்களைக் கூறி விளக்கி இருக்கிறார். இதே நிலைமைதான் மற்ற அரபுநாடுகளிலும் இருக்கின்றன; சட்டங்கள் சரியாகப் பின்பற்றப்படுகின்றன. பல அரபு நிறுவனங்கள் உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன. இத்தகைய முதலீடுகள் ஷரியா முறையிலேயே செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றன.

இப்போது இந்திய சட்டங்கள் நமக்கு எவ்விதம் வர்த்தக சுதந்திரம் வழங்குகின்றன என்பதையும் அவற்றைப் பயன்படுத்தி முஸ்லிம்களும் பங்குச் சந்தையில் மார்க்கத்தின் விதிகளைப் பேணி எவ்வாறு ஈடுபட முடியுமென்றும் என்று சுருக்கமாகப் பார்க்கலாம். 

இந்தியாவில் இருக்கும் கம்பெனி விவகாரங்களை ஒழுங்கு படுத்த கம்பெனிஸ் ஆக்ட் என்று ஒரு சட்டம் இருக்கிறது. The Companies Act 1956 என அழைக்கப்படும் இந்த சட்டம் 1956 ஆம் வருடம் இயற்றப்பட்டது . இந்த சட்டத்தில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி 2013 ஆம் வருடம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இப்போது அமுலில் இருந்து வருகிறது. 

நாம் ஏற்கனவே ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனிதான் பங்குச் சந்தையில் பங்குகளை வெளிமார்க்கெட்டில் வெளியிட்டு விற்பனை செய்ய முடியும் என்று பார்த்தோம். அந்த வகையில் அவற்றை ஒழுங்கு படுத்துவதில் இந்த கம்பெனிகள் சட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. பங்குகளை வெளிச் சந்தையில் வெளியிடும் முன்பாக ஒவ்வொரு கம்பெனியும் இந்த கம்பெனி சட்டத்தின் விதிகளின்படி தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அத்துடன் பங்குகளை வெளியிடும் முன்பாக இந்த சட்டத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்துகொண்டு அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட பிறகுதான் பங்குகளை விற்பனை செய்ய விளம்பரப் படுத்த முடியும். அவ்விதம் தேவைப்படுகிற சட்டபூர்வமான இரண்டு இன்றியமையாத டாகுமேண்டுகள் யாவை என்றால்

1. Memorandum of Association 
2. Articles of Association. 

ஆகியவையாகும். இவைகளைப் பற்றி வணிகவியல் மற்றும் பொருளியல் படிக்கிற பல்கலைக் கழக மாணவர்கள் பக்கம் பக்கமாகப் படிக்க வேண்டியும் எழுத வேண்டியும் வரும். ஆனால் நமது பேசுபொருளுக்கு வேண்டிய முக்கியமான சாராம்சங்களை மட்டுமே குறிப்பிட்டு இந்த அத்தியாயத்தை நிறைவு செய்வோம். 

Memorandum of Association:- 

The Memorandum of Association of a Company, is the document that governs the relationship between the company and the outside. It is one of the documents required to incorporate a Company.

It is basically a statement that the subscribers wish to form a company under the Act, have agreed to become members and, in the case of a company that is to have a share capital, to take at least one share each.

இது ஒரு வெளி உலகத்துக்கு தங்களால் ஒரு நிறுவனம் அமைக்கபட்டிருக்கிறது என்பதை அறிவிக்கச் செய்யும் ஒரு அறிவிப்பு. குறிப்பிட்ட சட்டத்தின் பிரகாரம் இன்னின்னார் சேர்ந்து அமையவிருக்கும் நிறுவனத்தைப் பற்றி அது கொண்டிருக்கும் வணிக நோக்கங்கள் பற்றிய ஒரு அறிவிப்புத் தான் Memorandum of Association ஆகும். இந்த அறிவிப்பிலேயே இந்த நிறுவனம் பற்றிய அமைப்பின் உண்மைகளையும் வணிக நோக்கங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். 

ஒரு குழுமம் அமைக்கப்படுவது உலக இயல்புக்கு மாறான வணிகம் செய்வதற்காக என்றால் அதை அரசே தடுத்து நிறுத்திவிடும். உதாரணமாக பத்து பேர் ஒரு கம்பெனியாக சேர்ந்து அமைத்துக் கொள்வதன் நோக்கம் வீடுகளில் கொள்ளை அடிப்பது அல்லது கண்களைத் திருடி விற்பது போன்ற கொடிய விஷயங்கள் என்றால் அவற்றிற்கு அமைப்பு அனுமதி கிடைக்காது. 

Articles of Association :-

A company's Articles of Association form the company's constitution , defines the responsibilities of the Directors, the kind of business to be undertaken, and the means by which the shareholders exert control over the Board of Directors. (அடிக்கோடிட்டிருப்பதை கவனிக்க வேண்டுகிறேன்)

A company is an incorporated body so there should be some rules and regulations formed for the management of its internal affairs and conduct of its business as well as the relation between the members and the company. Moreover, the rights and duties of its members and the company are to be recorded. This is why Articles of Association are necessary. The Articles of Association is a document that contains the purpose of the company as well as the duties and responsibilities of its members defined and recorded clearly. It is an important document which needs to be filed with the Government Authorities.

கம்பெனி அமைப்பில் இது ஒரு முக்கியமான டாகுமென்ட் ஆகும். ஒரு நிறுவனம் அமைக்க காரணமான முக்கியமான நோக்கங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டும். அத்தியாவசியமாக எத்தகைய தொழில்களில் ஒரு கம்பெனி தனது பங்கு மூலதனத்தை உள்ளிடப் போகிறது என்பதை இதில் குறிப்பிட்டாக வேண்டும். அப்படிக் குறிப்பிட்ட தொழில்களில் அல்லாமல் வேறு எந்த தொழிலிலும் பங்காகத் திரட்டப்பட்ட மூலதனத்தை உள்ளிட்டால் அது சட்டப்படித் தவறு என்பதுடன் இதனைத் தட்டிக் கேட்க பங்குதாரர்களுக்கும் சட்டப்படி உரிமை உண்டு. 

உதாரணமாக ஒரு கம்பெனியின் ஆர்டிகிள்ஸ் ஆப் அசோஸியேசனில் இந்தக் கம்பெனியின் வணிக நோக்கம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது, உதிரி பாகங்களை உற்பத்தி செய்வது, நிலங்களை வாங்கி விற்பது போன்றவைகள் என்று இருந்தால் அவைகளை இந்த டாகுமெண்டில் குறிப்பிட வேண்டும். இதில் குறிப்பிடப்பட்ட வணிகங்களுக்கு மட்டும்தான் பங்குகளை வெளிச்சந்தையில் இருந்து திரட்ட வேண்டும்; பயன்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, இந்த டாகுமெண்டில் குறிப்பிடப்படாத வேறு எந்தத் தொழிலுக்காகவும் பங்கு மூலதனமும் திரட்டக் கூடாது ; இதில் குறிப்பிடப்படாத வணிகச் செயல்பாடுகளுக்காக அந்த நிதியைப் பயன் படுத்தவும் கூடாது. 

இப்படி ஒரு சட்ட பூர்வமான வாய்ப்பு இருக்கும்போது முஸ்லிம்கள் ஏன் பங்குச் சந்தையில் ஈடுபடக் கூடாது? எந்தக் கம்பெனியின் பங்குகளை நாம் வாங்குகிறோமோ அந்தக் கம்பெனி இலாப விகிதம் கூடுதல் தருகிறது என்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அந்தக் கம்பெனி எவ்வகையான வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது என்பதை அந்தக் கம்பெனியின் வணிக நோக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆர்டிகிள்ஸ் ஆப் அசோஸியேசனையும் படித்துப் பார்த்து அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் விற்கலாமே! இதில் தடை என்ன இருக்க முடியும் என்பதை சான்றோர்கள் கூற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நடை முறையில் என்ன நடக்கிறது என்றால் பங்குத் தரகர்கள் நம்மை அழைக்கிறார்கள்; ஆசைகாட்டுகிறார்கள்; எந்தக் கம்பெனி என்ன வணிகம் செய்கிறது என்பன போன்ற எந்த விபரமும் தெரிந்து கொள்ளாமல் பணம் கூடுதலாகக் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் முதலீடு செய்து பங்குகளை வாங்குகிறோம். நமது பணம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மது பாட்டில்கள் வாங்கவும், மாதுக்கள் நடனமாடவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியாமல் அதில் ஈடுபடுவது நமது குற்றம்தானே தவிர பங்கு சந்தை போன்ற ஒரு வணிக அமைப்பின் குற்றமல்ல. ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுக்கும் முன்பு எவ்வாறு பெண் கேட்கும் குடும்பத்தின் வரலாறுகளைக் கிண்டிக் கிழங்கு எடுக்கிறோமோ அவ்வாறு நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களின் உண்மை நிலைகளை ஆராய்ந்து அதன்படி அவற்றில் ஈடுபடுவது தவறில்லை என்பதே எமது தாழ்மையான கருத்து. அத்தகைய ஆய்வுக்கான வழிகளை சட்டம் வழங்கி இருப்பதை அறியாமல் இருப்பதுதான் நமது குறைபாடு. 

அடுத்து பங்கு சந்தையில் யூகம் என்கிற ஒரு அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது. இதனாலும் இதனை ஒதுக்க வேண்டுமென்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. யூகம் என்பதை நம்மைப் பொறுத்தவரை ஒரு ஐடியா அல்லது ஒரு குறிப்பிட்ட வணிகம் இப்படிப் போகும் என்கிற தனது மூளையை பயன்படுத்தும் அனுபவம் மற்றும் அறிவுபூர்வமான நிகழ்வாகவே நாம் பார்க்கிறோம். 

ஒரு பல சரக்குக் கடையில் ஐந்து கிலோ வெல்லக் கட்டியை வாங்கி வைப்பது அது நாளடைவில் விற்கும் என்பதால்தானே! விற்பனைப் பிரதிநிதி ஒரு பொருளை நம்மிடம் காட்டும்போது அந்தப் பொருளை விற்றுத் தீர்த்துவிடலாமென்ற துணிச்சலுடன் ஒரு கடைக்காரர் கூடுதலாக வாங்கி வைப்பது இயல்பானதுதானே! அந்தத் துணிச்சலுக்கான வெகுமதிதானே இலாபம். இதில் யாரும் ஏமாற்றப்படவில்லையே!

உணவுப் பொருள்களையும் மக்களுக்கு அத்தியாவசியமான பொருள்களையும் எதிர்காலத்தில் விலை ஏறும் என்று யூகித்துப் பதுக்கிவைத்தால் அதுதான் ஹராமாக கருதப்பட வேண்டும். செயற்கையானப் பற்றாக்குறையை ஏற்படுத்தி- பதுக்கி- அதனால் விலைகளை ஏறச் செய்து கொள்ளை இலாபம் அடிப்பது தடுக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகையோருக்கு தூக்குதண்டனை கூட வழங்கப்படலாம். 

ஆனால் ஒரு குறிப்பிட்ட வணிகம், உலக அளவில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தகுந்தபடி குறிப்பிட்ட காலத்தில் இலாபத்தைத் தரும் என்கிற அறிவின் கணிப்பின் காரணமாக ஏற்படும் இலாப வெகுமதியை யூக வணிகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எப்படி தவிர்த்துக் கொள்ள இயலும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டு இருக்கிறோம். கம்பெனிகளின் பங்குகள் என்பது உணவுப் பொருள்கள் அல்ல. அவை ஒருவகை முதலீடுகள். விலை குறைவாக இருக்கும்போது வாங்கி தொழில்வளர்ச்சியின் காரணமாக விலை கூடும்போது விற்று இலாபம் சம்பாதிப்பது என்பது நிலபுலன்களின் முதலீடுகள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்போது பங்குச் சந்தை பங்குகள் விஷயத்தில் – அவைகள் ஹராமான செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்று உறுதி செய்துகொண்டு - முதலீடு செய்யும் பட்சத்தில் ஏன் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது ? இந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு சிந்தனைக்கான சமர்ப்பித்தலே தவிர இந்தக் கருத்துக்களில் பிடிவாதம் நமக்குக் கிடையாது. 

இறுதியாக கண்ணியத்துக் குரிய மவுலானா அசதுல்லா அவர்கள் தங்க்லீசில் எழுதியுள்ள வரிகளை தமிழ்ப் படுத்தி இங்கு தந்து அதற்கு பதில் கூறி இதை நிறைவு செய்து கொள்ளலாம். 


“நம் நாட்டில் உள்ள எழுதப்படாத விதி ஏழைகளும் படிப்பு ஏறாத மாணவர்களும்தான் மதரசா செல்கிறார்கள். அதனால் மார்க்கத்தில் எல்லா நுட்பங்களையும் அவர்கள் அனைவரும் அறிந்து கொள்வது சிரமம்தான். எனவே படித்தவர்கள் இதைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். ஹலாலான எல்லா முறைகளையும் எடுத்துக் கூறி அதையும் உலமாக்கள் ஹராம் என்று கூறினால் அப்போது கட்டுரையின் கடைசியில் கேட்கப்பட்ட கேள்விபற்றி யோசிப்போம். “ என்பது மவுலானா அவர்களின் கருத்து. 

“ஏழைகளும் படிப்பு ஏறாத மாணவர்களும்தான் மதரசா செல்கிறார்கள்” என்று கூறப்பட்டிருப்பது ஒரு உண்மையான வேதனை தரும் சித்திரம். என்னைக் கேட்டால் இந்த நிலை இந்த சமுதாயத்தின் மீது படிந்துள்ள சாபக்கேடு; களையப்பட வேண்டிய அழுக்கு என்றுதான் கூறுவேன். மதரசா சென்று படிக்கிற பெரும்பான்மையானோர் உலகில் இன்று பயிற்றுவிக்கப்படும் நவீனக் கல்வி மற்றும் நாட்டு நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஏழைகளும் பரிதாபத்துக்குரிய அநாதைகளும் மட்டுமே பயிலுகின்ற கூடங்களாகவே மதரசாக்கள் திகழ்கின்றன. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் டாக்டர், இஞ்சினீயர், வக்கீல் என்று படிக்கக் கிளம்பி விடுகிறார்கள். காரணம் மார்க்கக் கல்வி கற்றால் பெரும்பணம் சம்பாதிக்க இயலாது என்கிற நிலைமைதான். வசதியற்றவர்கள் இலவச மதரசாக்களில் வேறு வழி இல்லாமல் கூட சேர்கிறார்கள். என்றைக்கு இலட்சாதிபதி வீட்டுப் பிள்ளைகளும் மதரசாக்களில் சேர்ந்து மார்க்கக் கல்வி பயில அடித்துப் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அன்றுதான் இந்த சமுதாயம் உருப்படும். 

அதுமட்டுமல்லாமல் , உலகக் கல்வியில் இரண்டு பி ஹெச் டி பட்டம் பெற்றுள்ள ஒரு முஸ்லிமுக்கு அத்தஹிய்யாத்தும் வஜ்ஜஹத்தும் கூட முழுமையாக ஓதத் தெரியவில்லை என்கிற நிலைமையும்இருக்கிறது. அதே போல் மார்க்கக் கல்வியில் கரை கண்டவர்களுக்கு அடுத்த தெருவில் நடக்கும் செய்திகள் பற்றிக் கூடத் தெரியாமல் இருக்கிறது. இந்த இரு தரப்பாருக்கும் அறிவு என்பது ஒரு பாதரசம் போல் ஒரு அளவுக்கு மேல் ஏறவில்லை என்பதே நிதர்சனம். 

ஆகவே இருவகைக் கல்வி முறைகளையும் கலந்து கற்பதற்கு மார்க்கத்திலும் இடம் வேண்டும்; சமுதாயத்திலும் இடம் வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால்தான் ஒரு உண்மையான அறிவு வளர்ச்சியும் சிந்தனைகளும் திட்டங்களும் சீர்திருத்தங்களும் ஏற்பட்டதாக நாம் பொருள் கொள்ள முடியும். மார்க்கக் கல்வியில் உயர்பட்டம் பெற்றவர்கள் குறைந்தபட்சம் அடிப்படை ஆங்கில அறிவும் நடைமுறையில் உள்ள அடிப்படை அரசியல், பொருளாதார, சட்ட அறிவுகளையும் பெற வழி செய்ய வேண்டும். அதே போல் நவீனக் கல்வியில் பெரும் பட்டங்களைப் பெற்றுள்ள பேராசிரியர்கள் மார்க்கக் கல்வியும் பெற்று சிறக்க வழி காண வேண்டும். இனி இதைப் பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். 

இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி

13 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//ஆகவேஇருவகை கல்வியையும்கற்பதற்க்கு// ‘Phd.பட்டம்பெற்றவர்கள் மதர்சாமாணவர்களுக்கு ஒருவாரம் நவீனகல்வி பாடம் நடத்த வேண்டும். அடுத்த வாரம் மதரஸாமாணவர்கள்Phd,க்கு மார்க்க கல்வி போதிக்க வேண்டும்’என்றEducation Exchange System.கொண்டுவந்தால் நிறுவைத்தராசின் இருதட்டுக்களும் ஓரளவு சமநிலைக்கு வரும். ’யோசிக்கலாமே!’என்றாலும் Phd. ஓரளவு ஒத்து வரும். ஆனால் மதரஸா கொஞ்சம்மக்கர்பண்ணும். ஒருஆலிம்என்னிடம்சொன்னார்’’நம் ஊருக்கு பயான் பண்ண சித்தார்கோட்டையில்இருந்துதான்ஆலிம்வரவேண்டுமா? எத்தனையே பெரிய-பெரிய ஆலிம்கள் இருந்த ஊர் இந்த ஊரென்று’’ ஆலிம்களின் பெயர்களைஅடுக்கிகொண்டேபோனார். ’’அதிராம்பட்டினத்திற்கும் சித்தார்கோட்டைக்கும் அரபியாவிலிருந்துதான் இஸ்லாம்வந்தது.வந்ததுஎல்லாம்ஒரேஇஸ்லாம்தான். இதிலென்ன அதிராம்பட்டினம்-சித்தார்கோட்டை?’’என்றேன்’ ‘’மேலும்அதிராம்பட்டினத்திலிருந்துமக்காவுக்குவுள்ளதூரத்தைவிட சித்தார்கோட்டைக்கும்மக்காவுக்கும்75-80kmகிட்டே!’’ என்றேன். ..’’ஹா!..ஹூ’!’யென்றுசத்தம்போடஆரம்பித்தார். மதர்சாபேர்வழிகளிடம்பாத்து பருவிச்சேநடக்கணும்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலமாமு அலைக்கும் வரஹ்...

பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பட்டியலிட்டு பணிவோடு முன்மொழிகிறது கட்டுரை. அதிலும் அந்த அடிக்கோடிட்ட ஆங்கில மெமொரெண்டம் சாத்தியமே என்று அறைகூவுகிறது.

மறுப்பவர்கள், இதைப்போன்ற ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா? ம்ஹூம். கூடாதுன்னா கூடாதுதான் என்று குரல் உயர்த்துவார்கள். இதனால்தான், ஆலிம்களின் ஃபத்வாக்களின்மீது மேலோட்டமான ஒர் அதிருப்தி மேவுகிறது.

நல்ல முன்மொழிவு காக்கா. நீங்கள் பணிவோடும் சற்றே தயக்கத்தோடும் முன்மொழிவதை நான் சவாலாகவே வழி மொழிகிறேன்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர் அவர்கள் ! Alaikkumus Salam. . தாங்கள் சொன்னது

//ஆலிம்களின் ஃபத்வாக்களின்மீது மேலோட்டமான ஒர் அதிருப்தி மேவுகிறது.//

இன்று ஒரு நண்பருடன் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். பல விஷயங்களில் மார்க்க மேதைகள் எனப்படுவோர்கள் கருத்து மாறுபட்டு வியாக்கியானங்களை அவரவர் பார்வைக்கு ஏற்றபடி வித்தியாசப்படுத்திக் கூறுவது குருடன் யானையைப் பார்த்த கதை போல இருக்கிறது என்று கடுமையாகக் கூறினார்.

எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமானின் ஒரு கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வந்தன.

உலகமே உன் கண்களில்
விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது
நீயோ
அத்தஹயாத்தில் விரலை
ஆட்டுவது பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறாய்.
விபத்தில் விரலை இழந்தவன்
தொழுவது
கூடுமா கூடாதா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்றைய நடைமுறையில் பெரும்பாலான அறிஞர்களின் தீர்ப்பிற்க்கான அடிப்படை காரணம் பற்றிய அழகு விளக்கங்கள்!

சொன்னதுபோல்,
இருவகைக் கல்வி முறைகளையும் கலந்து கற்பதற்கு மார்க்கத்தில் அவசியம் இடம் வேண்டும்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

sheikdawoodmohamedfarook said...

//விபத்தில்விரலைஇழந்தவன் தொழுவது கூடுமாகூடாதா?// ஹஹ்ஹாஹஹாஹா...........ஹா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சவாலுடன் கூடிய நல்லதொரு பரிந்துரைத் தீர்வை வழங்கியிருக்கும் இந்த பதிவு... சொல்லாமல் சொல்கிறது இத்தனை அத்தியாயங்களும் ஒவ்வொரு வாரமும் அரியனை ஏற எவ்வளவு உழைப்பு இதன் பின்னால் இருக்கிறது என்று...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !

இங்கே (யு.ஏ.இ-ல்) சரியாத்தானே வண்டி ஓடிகிட்டு இருக்கு...

10 மில்லியன் திர்ஹமை இருக்கும் தொழிலில் முதலீடு செய்தால் குறைந்தது ஐந்து வருடங்களாவது காத்திருக்கனும் என்று நினைத்தவர் பங்குச் சந்தையில் உறுதியான அதோடு சரியான பங்குகளை வாங்கியதனால் ஒன்பதே மாதத்தில் பலனை முதலீட்டுத் தொகைக்கு நிகரான லாபம் கண்கூடாக கண்டது ! (என்னோதடல்லங்க....)

sheikdawoodmohamedfarook said...

//10மில்லியன்முதலீடுதொகைக்குநிகராகலாபம்கண்டது[என்னோடதல்லங்க]//தம்பிநெய்னால்தம்பிஅபூஇப்ராஹீம்சொன்னது. சும்மாகாதோடுகாதுவச்சமாதிரிசொல்லுங்கதம்பி!கடன்கேக்கமாட்டோம். நீங்கதானே10மில்லியன்போட்டு10மில்லியன்அடுச்சிய?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நீங்கதானே 10 மில்லியன் போட்டு 10 மில்லியன் அடுச்சிய?//

ஹா ஹா ! காக்கா... அடுச்சிய ! ன்னா... ஊரிலே வேற அர்த்தமுள்ள ! :)

ஒரு குறிப்பிட்ட பங்கு வாங்கும்போது திர்ஹம் 4.59 ஒன்பது மாதம் கழித்து அதே பங்கு திர்ஹம் 9.50 என்று எகிரியதே காரணம் !

adiraimansoor said...

காக்கா

நான் மூன்று நாட்கள் உமரா சென்றிருந்த காரணத்தினால் உடனடியாக கருத்திட முடியவில்லை

உங்களின் இந்த பதிவில் பங்கு சந்தை பற்றி முழு விளக்கம் கிடைத்தது
ஜஸாக்கல்லாஹ் கைரன்

Unknown said...

"கவிஞர்கள் – அவர்களை வழி கெட்டவர்கள்தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் ( மனம்போன போக்கில்) திரிகிறார்கள் என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக அவர்கள் (சொல்வன்மையினால்) தாங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) கூறுகின்றனர். ஆனால் ஈமான் கொண்டு நற்காரியங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழிவாங்கினார்களே அத்தகையோர்களைத் தவிர ( மற்றவர்கள் குற்றவாளிகள் ). " (அல்-குரான் 26 : 224 - 227)

மேற்கண்ட குரான் வசனங்களில் கவின்கர்கள் தங்களது எதுகை மோனை, சந்த நாயம், உயர்வு நவிர்ச்சி ஆகியவற்றை வைத்து தமது கவிதையை 'பொருள் நயம்' மிக்கதாக காட்டுவதற்கும் தங்களது 'கற்பனைகளை உண்மைகள்' போன்று சித்தரிக்கும் நிலையில் - அவர்களை பின்பற்றுவோர் வழிக்கெட்டு அலைவதை அல்லாஹு தெளிவாகவே கூறிவிடுகிறான்.

அதே நேரம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓரிறை தத்துவத்தையும், தௌஹீதையும், உண்மையையும் தூக்கி பிடிக்கும் கவிதைகளை விருபி கேட்டுள்ளதையும். கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக புகழ் பெற்ற உருது கவிஞன் ஆசாதுல்லா காலிப் இது போன்ற வழி கேடர்களுக்கு நல்ல உதாரணம்.

அவனது ஒரு கவிதையில் மற்றொரு முஸ்லிம் கவிஞரை தாக்கி கூறுவதை படித்தால் அவனை போன்ற கவிஞர்களின் வழிகேடும் புரியும்:

"ஷபாய் எவ்வாறு கவிஞன் ஆக முடியும்?

அவன் மது அருந்தியதுமில்லை - சூதாடியதுமில்லையே!

காதலரிடம் அவன் செருப்படி வாங்கியதுமில்லை -

சிறையில் இருந்ததுமில்லையே"

என்று ஒரு கவிஞனின் தகுதிகளை விவரிக்கின்றான் இந்த கேடுகெட்ட காலிப்.

காலிபின் 'இஸ்லாத்திற்கு எதிரான' வேறு பல கவிதைகளும் - சூபி மற்றும் ஷியா பின்னணியும் பிரசித்தமானது.

எனவே கவிங்கர்கள் விடயத்திலும் அவர்தம் கவிதை விடயத்திலும் கவனமாக இருப்பது 'தௌஹீத்வாதிகளுக்கு' அவசியமானது.

கவிதை எழுதும் கவிஞன் 'தௌஹீதை' நேரடியாகவோ மறைமுகமாவோ எதிர்பானெனில் அவனையும் அவனது கவிதையையும் சாக்கடையில் போட்டு - முஸ்லீம்களை எச்சரிப்பது அவசியம்.

Unknown said...

பங்கு சந்தை குறித்த 'ஆலிம்களின்' நிலைபாட்டை மற்றும் குறைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கும் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கும் முதற்கண் எனது பாராட்டுக்கள்.

இதே 'ஆலிம்கள்' தான் 'ஆங்கில கல்வி' ஹராம் என்று இந்தியாவின் முஸ்லீம்களை பல தலைமுறைகளாக ஒரு வழியாக்கியது - ஆனால் ஷியாக்கள் மட்டும் கல்வி பயின்று 'முஸ்லீம் தலைவர்களாக' - 'குடிகார முஹம்மது அலி ஜின்னக்கலாக' இருந்ததை ஏற்றுகொண்டதும் இதே 'போலி அலிம்கள் தான்'.

இதே 'ஆலிம்கள்' தான் மருத்துவராகவும், ஆலிமாகவும் முறையாக கற்று தேர்ந்த 'சாகிர் நாயக்' போன்றவர்களை எதிர்த்து - இங்கிலாந்து மற்றும் கனடாவில் அவர் தடை செய்யப்பட்டதை 'கொண்டாடி குதூகலிக்கும் கொடியவர்கள்'.

சென்னையில் ஜாகிர் நாயக்கை வரவிடாமல் செய்ததும் இந்த 'போலி ஆலிம்கள்' தான். எனவே தங்களுக்கு 'உலக கல்வி' கிடைக்கவில்லை என்ற இவர்களது ஆதங்கம் போலியானது - ஏனெனில் இவர்கள் 'ஷியா சூபி வெறியர்களே' தவிர ஆலிம்கள் கிடையாது.

முதலில் ஒரு ஆலிம் என்றால் யார் என்றால் 'கல்வியை மார்க்க கல்வி - உலக கல்வி' என்று பிரித்து பார்க்காமல் - 'உண்மைகளை கல்வியாக கற்பவனே' ஆலிம் என்பேன்.

பொய்யான இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு வெட்டு வைக்கும் 'ஷிஆ' மற்றும் 'சூபி' போன்ற பொய் கொள்கைகளை கற்று கொடுக்கும் 'மதரசா'வில் இருந்து வருபவன் 'பொய்யனாக' வருவனே ஒழியே - ஆலிமாக ஆகா முடியாதல்லவா?

கல்வி என்பது 'உண்மைகளை கற்பது' என்று விளங்கி கொண்டால் - உண்மைகள் எங்கு கற்று கொடுக்கொள்ளப்பட்டலும் அது 'மார்க்க கல்வியே' என்பது புலப்படும்.

உதாரணமாக மனித உடல்கூறு, பிணி, பிணி நீக்கம் ஆகியவற்றை குறித்த உண்மைகளை கற்கும் மருத்துவ மாணவனும் 'மார்க்க கல்வியை' தான் பயில்கின்றான்.

எனவே ஒரு முஸ்லீம் கல்வியை பிரித்து பார்க்காமல் - உண்மைகளை கற்க முயலும் அதே வேலை அது போன்ற கல்விகளில் உள்ள 'பொய்களை' துணிவாக எதிர்த்து காலடியில் மிதித்து துவைத்து போடவும் கற்க வேண்டும்.

உதாரணமாக 'பொருளாதாரம் கற்கும்' ஒரு 'முஸ்லீம்' - 'வட்டி பொருளாதாரத்தின்' பொய்மை மற்றும் தீமைகளை கற்று அதை உடைத்து நொறுக்க போராட வேண்டும்.

அதே நேரம் 'நான் சுத்தம்' வட்டிக்கு எதிரானவன் என்னை போல் எவரும் இல்லை என்று இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிப்படையான 'ஹலால் பங்கு சந்தைகளை' - பற்றி அறியாமல் இருப்பதும் 'ஆங்கிலம் ஹராம்' என்று கூறியோர் 'முஸ்லீம்களை' கல்வி கற்காத சாக்கடை சமூகமாக மாற்றியது போன்று மாற்றியதும் ஒன்றே தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு