Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளானுக்கு பின்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2014 | , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!). இந்த பதிவில் ஷவ்வால் நோன்பை பற்றி பார்ப்போம்.

ஷவ்வால் நோன்பு:

யார் ரமலானில் நோன்பு நோற்று பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவர். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நூல்: முஸ்லிம்)

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது, அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி) நூல்: தாரிமி: 1690)

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. தொடர்வது என்பதற்கு அத்பஅஹு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும். உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பகரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.

(அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன்: 58:4)

இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறு கூறப்படவில்லை. ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறு நாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும். முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றது. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப் படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆறு நோன்பின் தத்துவம் இதுதான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.

ஷவ்வால் நோன்பு பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களும் வைக்க வேண்டும். ஆறு நோன்புகள் வைத்த பிறகு ஆறு நோன்பு பெருநாள் என்று பெண்கள் கொண்டாடுவார்கள். ஆறு நோன்பு பெருநாள் மார்க்கம் கற்று தந்த வழிமுறை இல்லை.

சகோதர, சகோதரிகளே நோன்பு முடிந்து வாரம் கடந்து விட்டது. நமது செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டது. சகோதரர்கள் விட்ட தீய பழக்கங்களை தொடர ஆரம்பித்து விட்டார்கள். புகை, மது, சினிமா, சீர்யல் என்று நோன்பில் கட்டுப்பட்ட விஷயங்கள் பெருநாள் முடிந்தவுடன் தொடர ஆரம்பித்து விட்டது. (ஒரு சகோதரர் தொலைபேசியில் உரையாடியது காதில் விழுந்தது. என் மச்சான் பெருநாள் அன்று டிக்கெட் எடுத்து விட்டேன் உடனே வாடா என்றவுடன் நான் சென்று படம் பார்த்து விட்டு வந்தேன் என்றார். பெருநாள் அன்று செய்த நல்ல காரியம்?).

சகோதரிகளும் தொலைக்காட்சி ரிமோட்டை கையில் எடுத்து விட்டார்கள். மெகா தொடர்களை பார்க்காமல் நோன்பில் தவித்து விட்டார்கள். நோன்பு திறப்பது, மஃரிபு தொழுவது, சிறிது ஓய்வு, இஷா தொழுகை, இரவுத்தொழுகை, இரவு உணவு, ஸஹர் உணவு, பஜ்ர் தொழுகை, பிறகு உறக்கம், லுஹர் தொழுகை, நோன்பு திறக்க உணவுகள் தயாரிப்பது, அஸர் தொழுகை, குர்ஆன் ஓதுவது என்று நேரங்கள் சரியாக இருந்தது. நேரம் கிடைக்காததால் பார்க்கமுடியவில்லை என்று நினைக்கிறேன்.

ஷைத்தானின் சபதம்:

உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன் என்று (ஷைத்தான்) கூறினான். (அல்குர்ஆன் : 38:82,83)

இறைவனின் பதில்:

உன்னையும், அவர்களில் உன்னைப் பின்பற்றியோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன் (என்று இறைவன் கூறினான்). (அல்குர்ஆன் : 38:85)

நோன்பின் மூலம் கிடைத்த இறையச்சம்:

நம்மை கடந்து சென்ற நோன்பு நமக்கு தந்த படிப்பினை என்ன? ஒவ்வொரு நாளும் மார்க்கத்தில் முன்னேற்றம் அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? என்பதை சிந்தித்து செயல்படக்கூடிய தருணம் இதுதான். ஷைத்தான் அவனுடைய பரிவாரங்களோடு நம்மை வீழ்த்த நமது வீடு தேடி வந்து கொண்டு இருக்கிறான். நல்வழியில் நாம் செல்வதற்கு மார்க்கமும் நம் வீடு தேடி வந்து கொண்டு இருக்கிறது. எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை நாம்தாம் முடிவு செய்ய வேண்டும்.

மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் நாம் ஈடுபட நினைக்கும் பொழுது நம் மனதில் உறுத்தல் ஏற்பட்டால் கடந்து சென்ற நோன்பு நம்மிடையே இறையச்சத்தை  தந்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நோன்பில் மட்டும் தவிர்த்துக் கொண்ட மார்க்கத்திற்கு முரணான காரியங்களை நோன்பு முடிந்த பிறகு மனதில் எந்த உறுத்தலும் ஏற்படாமல் நாம் செய்ய ஆரம்பித்தோம் என்றால் இறையச்சம் நம்மிடம் ஏற்படவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

''மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். '' (அல்குர்ஆன்:50:16)

''எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (என்றும் கூறினார்) ( அல்குர்ஆன் : 12:53)

S. அலாவுதீன்
இது ஒரு மீள்பதிவு...

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு