தெளர் குகையில் மறைந்திருந்த பெருமானார் ( ஸல் ) அவர்களையும் ஹஜரத் அபூபக்கர் ( ரலி ) அவர்களையும் வலை பின்னிக் காப்பற்றிய சிலந்தி பற்றிய கவிதை.
========================================
சிலந்தி யென்றால்- அது
சாதாரண சிலந்தியா?
இல்லை....
சிங்கத்தின் குகைக்கே
ஆடை தைத்த சிலந்தி
பட்டொளி வீசிப்
பறக்கும் வெற்றிப் பதாகைக்குத்
துணி நெய்யத்தான்
அன்று சிலந்தி நூல் நூற்றதோ?
ஏகத்துவ நெறியெனும்
இனிய குழந்தைக்கு
தெளர் குகைச் செவிலித்
தாய் அவள்
வலைச் சட்டை பின்னி
மனம் மகிழ்ந்தாளோ?
வள்ளல் நபிகளார்
வருகை புரிந்ததால்
குட்டைச் சிலந்திப் பெண்
குகையின் வாசலுக்கு- வெண்
பட்டுக் குஞ்சம்
கட்டிப் பார்த்தாளோ ?
இன்று
அருமை நபிகளாம்
அண்ணலாரைப் பற்றி
எத்தனையோ நூல்கள்
எழுதப்படுகின்றன
அவற்றுக் கெல்லாம்
ஆதாரம்-
மூல நூல் –
சிலந்தி எழுதிய
அந்தச்
சிறுநூல்தானே?
வெறும்-
நூலாம்படைதான்!
ஆனாலும் அது
அண்ணலாரைக் காட்டிக் கொடுத்து
ஐந்தாம்படையாய்
ஆகவில்லை- ஆதலினால்
அது
நாலாம்படைக்கும்
மேலாம் படைதான்!
உத்தமத் தலைவருக்கு
உறைவிடம் தந்ததனால்
தெளர் குகைக்கு
சிலந்தி என்கிற
சிறிய பிரமுகர்
பொன்னாடை போர்த்திப்
போற்றினாரோ ?
சிலந்திவலை என்னும்
கலங்கரை விளக்கம்
தேடிவந்த
பகைகப்பல்களை
திசை திருப்பி அனுப்பியது
மனித குலத்தின்
மாலுமியைக் காப்பதற்கு!
சிலந்தியே!
பெருமானாருக்கும்
பகைவருக்கும் நடுவே
நீ ஒரு திரை போட்டாய் !
அந்தத் திரையில்தான்
உத்தம நபியாம்
ஓவியக்காரர்
சாந்தி மார்க்கம் என்ற
சித்திரத்தை வெகு
சிறப்பாகத் தீட்டினார் !
சிலந்தியே ! நீ பின்னிய
வலையின்
விலை என்ன தெரியுமா?
அன்றாடம் அதை
ஐந்து முறை செலுத்துகிறோம்!
லட்சோப லட்சம்
பள்ளிவாசல்களில் கேட்கும்
பாங்குச் சத்தம் – உன்
பங்குக்கு மார்க்கத்தார்
பகிர்ந்து தரும் * சத்தம் ( சத்தம் = கட்டணம் )
ஆண்டவனே நீயொரு
அதிசயமானவன் !
உலக எதிரிகளை
ஊதி அழிக்கின்ற
பாதுஷாமாருக்கும்
கிடைக்காத பாக்கியத்தை
சாதாரண சிலந்திக்குத்
தந்தவன் நீ !
உன்னுடைய பேரருளை நினைத்து
பிரமித்துப் போகின்றேன்!
இறைவா!
என்ன நாடகம் இது?
இரும்புக் கோட்டைக்குள்
இருப்பதாய் நினைத்தபடி
தருக்கிக்கொண் டிருப்போரின்
தர்பார் புகழையெல்லாம்
ஒரு
சிலந்தி வலை முன்னே
சேதப்படுத்தினாய் ....
என்ன நாடகம் இது?
படைததவனே! நீ எம்மைப்
பாதுகாக்க நினைத்துவிட்டால்
படைபலங்கள் தேவை இல்லை
சின்னஞ் சிறியதொரு
சிலந்திவலைகூடப்
போதும்- என்பதை
நாங்கள்
புரிந்து கொள்ள முடிகிறது
கவிஞர் மு. மேத்தா
நாயகம் ஒரு காவியம் – ரஹ்மத் பதிப்பகம்
பரிந்துரை : இப்ராஹீம் அன்சாரி
4 Responses So Far:
''சிறுசிறுகொசுக்களைமட்டுமேவலைபிண்னிபிடிக்கும்அற்பபிராணிசிலந்தி'' என்றஎண்ணம்கொண்டமனிதனுக்கு'நல்வழிகாட்டவந்தநபிகளாரை கொலைசெய்யவந்தகொடியவர்களைபுறமுதுகுகாட்டிஓடவைக்கும் சிங்கத்தின்சக்தியையும்அல்லாஅந்தசிறுசிலந்திக்குகொடுத்திருக்கிறான்!'' என்பதைசிந்திக்கும்போது நெஞ்சுநடுங்குகிறது. மு.மேத்தாபுதுகவிதைக்கு'விதை'போட்டுநாத்துவிட்டவிவசாயி! இவர்''மருவிலாதெழுந்தமுழுமதி''என்றதலைப்பில்அண்ணலாரின் வாழ்க்கைவரலாற்றையும்புதுக்கவிதையில்எழுதியுள்ளார்.
மு மேத்தா
புதுக் கவிதைகளுக்குத் தாத்தா
சிலந்தி வலையை வைத்து
சிலந்தியைவிட நேர்த்தியாய்
கவிதை பிண்ணியிருக்கிறார்!
அறிந்த வரலாறு
எனினும்
மேத்தா சொல்லும்போது
புத்தம் புதிதாய் சுவாரஸ்யம்
அருமையான பரிந்திரைக்கு நன்றி, காக்கா?
Pls read:
http://www.satyamargam.com/articles/arts/lyrics/2403-o-allah-forgive-us.html
கவிஞர் மு. மேத்தாவின்
பூவனத்திற்கு இது
வசந்த காலம்.
எங்கே " கண்ணீர்ப் பூக்கள் "
மலர்ந்தனவோ அங்கே-
கண்ணீரைப்போல்
தூய்மையான ஒரு
காவியப்பூ
மலர்ந்திருக்கிறது .
அவருடைய மலர்களில்
மக்கத்து மகரந்தச் சேர்க்கை
நடந்திருக்கிறது
மதீனாவைப் போல்
அவர் மனம்
மாநபியை வரவேற்று
செய்யுள் சிம்மாசனம்
தந்திருக்கிறது.
ஒரு சத்திய சமுத்திரத்தில்
சங்கமமானதன் மூலம்
நதியாக இருந்த மேத்தா
கடலாகி இருக்கிறார்.
- கவிக்கோ அப்துல் ரகுமான் இந்தக் கவிதை பற்றி இட்ட கருத்துரை.
Post a Comment