அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) இந்த தொடரில் உணர்ந்தும், உணராமலும் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் செய்து வரும் தீமையைப் பற்றி பார்ப்போம்
பெரியத்திரை சின்னத்திரை:
ஒரு காலத்தில் பெரியத்திரையில் வந்த படங்கள் பிறகு வீடியோ கடையில் கணக்கு வைத்து வாரம் ஒன்று எடுத்து பார்த்த நேரம் போய் பிறகு சீடியாக படங்கள் வெளிவந்தது. பிறகு சின்னத்திரையில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்பதும் போய் இப்பொழுது உங்கள் அபிமான சின்னத்திரையில் மூன்று படங்கள் தொடர்ந்து பார்த்து சந்தோஷமாக இருங்கள் என்ற விளம்பரம். பணம் ஒன்றுதான் குறிக்கோள், மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு இந்த சின்னத்திரை (தொலைக்காட்சி)கள் முன்னனியில் இருக்கிறது.
இணையதளம்:
இணையதளம் ஒரு கடல் இதில் நல்லதை தேடலாம் என்றால் இதிலும் திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கில் ஷைத்தான்கள் தலைவிரித்தாடுகின்றன. இப்பொழுது எதற்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை திருட்டு சீடி என்று அலற வேண்டியதில்லை. என்ன படம் வேண்டும் உடனே டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
நாம் எல்லோரும் ஒரு காலத்தில் சினிமாவை பார்த்தவர்கள்தான். சினிமாவை பார்க்காத யாரும் இருக்க முடியாது. ஆனால் எப்பொழுது நமக்கு இது ஹராம் என்று தெரியவருகிறதோ இதிலிருந்து விலகி விடுவதுதான் நமக்கு நன்மையை பெற்றுத்தரும்.
ஒரு சகோதரர் சொன்னது என் உறவினர் வீட்டுக்கு செல்வது என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும். என்னால் அமல் செய்ய முடியாது. அவர்களின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவாகிவிட்டால் அமல் பெரிதாக இருக்கும், என்ன பெரிய அமல் படத்தை டவுன்லோட் செய்து பார்ப்பதுதான் அவர்களின் வேலையாம். நான் எவ்வளவோ சொன்னபிறகும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொன்னார். வல்ல அல்லாஹ் ஹிதாயத் வழங்கட்டும்.
சின்னத்திரை:
குறுந்தொடர், மெகா தொடர் ஓடிக்கொண்டே இருக்கும். தொடர் 10 நிமிடம், விளம்பரம் 20 நிமிடம். சினிமா 2 மணிநேரத்தில் முடிந்து விடும். இந்த தொடர்கள் மாதக்கணக்கில் எடுப்பவர்களுக்கே முடிவு தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கும். அப்படி என்ன நாட்டுபற்றையும் அறிவு வளர்ச்சியையும் இந்த தொடர்கள் சொல்லிக்கொடுக்கிறது. பட்டியல் போடலாம் மூட நம்பிக்கைகள், எப்படி கொலை செய்வது, கொள்ளையடிப்பது, மாமியார் மருமகளையும், மருமகள் மாமியாரையும் கொடுமை படுத்துவது. அடுத்தவன் மனைவியை கடத்திச்செல்வது இன்னும் இதுபோன்ற கேடுகெட்ட கலாச்சார சீரழிவை கற்றுத்தருபவகைள்தான் இந்த தொடர்கள்.
விளம்பரத்தை பார்த்து தேவையில்லாத பொருள்களை பெண்களை வாங்க வைக்கும் தந்திரமும் இதில் இருக்கிறது ஸ்பான்சர் வியாபாரிகள்தானே. தொடர்களில் மூழ்கி இருக்கும் சகோதரிகள் இதிலிருந்து விலகி தவ்பா செய்து விட்டு உண்மையான மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்.
லாப்டாப் (மடிக்கணிணி):
ஒரு ரூமில் ஐந்து நபர்கள் இருந்தால் ஐந்து பேரிடமும் மடிக்கணிணி. லாப்டாப் நல்லதுக்குத்தான் கண்டுபிடித்தார்கள். ஆனால் இளைஞர்களுக்கு அதிகம் பயன்படுவது சினிமா பார்க்கத்தான். மணிக்கணக்கில் பேசுவதற்கும்தான். சில ரூம்களில் தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டு இருந்து பிறகு ஸஹர் வைத்து தொழாமல் தூங்குபவர்களும் இருக்கிறார்கள்.
கண்ணால் ஏற்படும் பாவங்கள்:
கண் செய்யும் பாவங்களில் பார்க்கக்கூடாத காட்சிகளும் அடங்கும். நேரடியாக எதையெல்லாம் பார்க்க அனுமதி இல்லையோ அதை நிழற்படங்களாக பார்க்கவும் அனுமதி இல்லை. (உதராணத்திற்கு: அரை குறை ஆடையுடன் வரும் பெண்களை).
முதல் பார்வை சாதாரண பார்வை, இரண்டாவது பார்வை ஷைத்தானின் பார்வை ஆகவே மீண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்பது நபிமொழி.
பெரியத்திரைக்கு அதிகம் யாரும் போவதில்லை. சின்னத்திரை, மடித்திரை(மடிக்கணிணி) இவைகளில் படங்கள், மெகா தொடர்கள் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் மூழ்கி இருக்கிறோம், மேலும் நமது காரியங்கள் அனைத்தையும் இரண்டு மலக்குகள் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள், நாளை மறுமையில் நமது அமல்கள் அனைத்தும் புத்தக வடிவில் நமது கையில் வல்ல அல்லாஹ் கொடுப்பான் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
நாம் இருக்கும் ரூமில் கேமரா வைத்து கண்காணித்தால் ஒன்று மட்டும்தான் கண்காணிக்கும். வல்ல அல்லாஹ்வோ அவன் நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கிறான். வலுவான சாட்சிகளாக மலக்குமார்கள் இருக்கிறார்கள். இதற்கு மேலும் நமது உறுப்புகளும் சாட்சி கூறும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், நாளை மறுமையில் நாம் எதையும் மறைக்க முடியாது.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) இந்த தொடரிலும் உணர்ந்தும், உணராமலும் நமது சமுதாயத்தவரால் கடைபிடிக்கும் தீமையைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
புகைப்பழக்கம்:
சிகெரட் (தூய தமிழில் இதற்கு பெயர் : வெண்சுருட்டாம்), பீடி, சுருட்டு, பொடி எதுவாகவும் இருக்கலாம். படிக்கும் காலங்களிலேயே இதை நமக்கு கற்றுத்தருபவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் சிகெரட்டை பார்த்திராத இளைஞர்களையும் மச்சான், மாப்பிள்ளை என்று அழைத்து ஆண் மகன் என்றால் இதையெல்லாம் கற்றுக்கொள்ளாமல் இந்த உலகில் என்ன சாதிக்க போகிறாய் என்ற டயலாக் பேசி நல்ல பிள்ளையாய் இருக்கும் இளைஞர்களை படுபாதாளத்தில் தள்ளி விடுகிறார்கள். சும்மா ஒரு தம் அடிடா மச்சான் என்று நமது உடலுக்கு சத்துள்ள மாத்திரைகளை சாப்பிட சொல்வது போல் இந்த விஷத்திற்கு அடிமையாக்கி விடுகிறார்கள்.
ஆரம்ப காலங்களில் சிகெரட் பழக்கம் ஆண்மைக்கு அடையாளமாக இருந்தது. சாப்பிட்டவுடன் புகைத்தால் உண்ட உணவு செரிக்கும் என்றார்கள். ஏதாவது டென்ஷனா காப்பி அல்லது டீ ஒரு கப், ஒரு சிகெரட் ஒன்று பற்ற வைத்து ரூமில் அமர்ந்து கொண்டு தங்களைச் சுற்றி வளையம் வளையமாக புகைகளை விட்டு புகைக்கு நடுவில் அமர்ந்து சிந்தனை செய்து கொண்டு இருப்பார்களாம் சிந்தனைவாதிகள்??????
சிகெரட்டால் அவதிப்படும் குடும்பத்தவர்கள்:
கணவன், தந்தை, மகன் என்று புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். இவர்களின் புகைபழக்கத்தால் மனைவி, பிள்ளைகள் குடும்பத்தவர்களின் மனவேதனைக்கு ஆளாகிறார்கள். இவர்களை திருத்த வழியில்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள்.
மனைவியும் பிள்ளைகளும் எவ்வளவுதான் அறிவுரை சொன்னாலும் புகைக்கு அடிமையானவர்களின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்குதான். இவர்கள் விடும் புகை இவர்கள் குடலுக்குள் சென்று வெளிவரும்பொழுது வெளியில் விடும் புகையை விட மிக கெட்ட வாடையாக வெளிவருகிறது.
எனது அலுவலகத்தில் மேலாளருக்கும் எனக்கும் ஒரு தடவை சரியான சண்டை. நான் சில வருடங்கள் இதன் விபரீதங்களைப்பற்றி தெளிவாகவும் படங்கள் மூலமும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஒருநாள் நான் அலுவலகத்தில் இருப்பதா? அல்லது நீ இருப்பதா ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும், உன்னால், நீ விடும் புகையால் நான் சிரமப்படுகிறேன். வெளியே சென்று புகைத்து வா என்றால், நான் மேலாளர் அப்படித்தான் இருப்பேன் என்றார். உன்னை விட பெரிய டைரக்டர் எல்லாம் வெளியேதான் செல்கிறார்கள். நீயும் வெளியில்தான் செல்ல வேண்டும் என்றேன். பிறகு அலுவலகம் வந்தால் அவர் அறையை மட்டும் மூடிக்கொள்வார். இருந்தாலும் செண்டரல் ஏசி மூலம் என் அறைக்கும் வந்து விடும். வல்ல அல்லாஹ்விடம் இந்த புகையின் தீங்கை விட்டு தினமும் பாதுகாவல் தேடி வருகிறேன். (எதிர்த்து வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை).
மேலாளர் ஒருநாள் ஆபிஸ்பாயிடம் சிகெரட் வாங்கி வரும்படி சொன்னார். மேலாளரின் பத்து வயது மகன் ஆபிஸ்பாயிடம் என் தந்தை இரவு முழுவதும் இருமி மிக கஷ்டப்படுகிறார். நீ போகாதே என்று பணத்தை பறித்து விட்டான். இதைப்பார்த்த மேலாளர் மகனை ஷைத்தான் ஷைத்தான் என்று திட்டி விட்டு ஆபிஸ்பாய் நீ போய் சிகெரட் வாங்கி வா என்றார். இதிலிருந்து என்ன தெரிகிறது, இந்த சிகெரட்டை குடும்பம் முழுவதும் வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நோன்பு காலங்களில்:
நமது சமுதாய சகோதரர்களும், பெரியவர்களும் நோன்பு காலங்களில் நோன்பு திறந்தவுடன் அவர்கள் பற்ற வைப்பது சிகெரட்டைத்தான். இந்த சிகெரட்டில் விட்டமின் ஏ,பி,இ? ஏதாவது இருக்கா என்று தெரியவில்லை.
இவர்கள் எப்பொழுது நோன்பு திறப்போம் என்று பரபரப்பாக இருப்பார்கள். திறந்தவுடன் இந்த விஷவாயுவை குடலுக்குள் அனுப்பிவிட்டுத்தான் அடுத்த வேளை பார்ப்பார்கள். நான் சில வருடத்திற்கு முன்பு நோன்பு திறந்து விட்டு பள்ளிக்கு மஃரிபு தொழ சென்றேன். பள்ளிக்கு வெளியில் தெரிந்த சகோதரரின் உறவுக்காரர் ஒருவர் நோன்பு திறந்தவுடன் இந்த விஷ (சிகெரட்) வாயுவை வயிற்றுக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்.
அவரை தனியே அழைத்து தம்பி இப்படி நோன்பு திறந்தவுடன் சிகெரட்டின் புகையை வயிற்றுக்குள் அனுப்பிக்கொண்டு இருக்கிறாயே! இது நல்லதல்ல நாள்முழுவதும் வெறும் குடலாக இருந்த இந்த வயிற்றில் இது சென்றால் உன் வயிற்றுக்கு கெடுதல் ஆகிவிடுமே என்று அறிவுரை சொன்னேன். எதுவும் பதில் சொல்லவில்லை தலையை மட்டும் ஆட்டினார். பிறகு இன்னொரு சகோதரரிடம் இவர் யார் எனக்கு நாலுபேரை வைத்துக்கொண்டு அறிவுரை (நான் தனியாக அழைத்து அவருக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொன்னேன்) சொல்ல நான் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டேன். அதனால் இவரின் (என்னுடைய) முகத்தில் (அறிவுரை சொன்ன காரணத்தினால்) விழிக்கமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி வெளியில் எங்காவது என்னைப் பார்த்தால் மறைந்து கொள்வார். ஒரு தீமையை தடுக்க அறிவுரை சொன்னதால் ஓடி ஒளிகிறார்.
சிகெரட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்:
சிகெரட்டில் உள்ள நிகோட்டின் கார்பன் மோனாக்சைட் போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம், பசியின்மை, கண்பார்வை குறைபாடு, சளித்தொல்லை, களைப்பு, புற்றுநோய்கள் இதுபோன்ற நிறைய நோய்கள் உடலுக்கு ஏற்படுகிறது.
மது, போதை பழக்கம்:
மதுவும், போதையும் வாழ்க்கையை சீரழிக்கும் ஆயுதங்கள். தெரிந்தும் தெரியாமலும் இளைஞர்களும், பெரியவர்களும் இதற்கு அடிமையாகி தள்ளாடிக் கொண்டு , இதனால் ஏற்படும் கேவலங்களை பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இரவு நேரங்களில் காலி மனைகள் எல்லாம் டாஸ்மாக் பார்களாகி விடுகிறது. இதற்கு அடிமையாகி விட்டவர்கள் மீண்டு வருவதற்கு சிரமமப்படுகிறார்கள்.
சிகெரட்டால் அவதிப்படும் குடும்பங்கள் இந்த மதுப்பழக்கதிற்கு அடிமையான ஆண்களாலும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிகெரட்டினாலும், மதுவினாலும் ஏற்படும் உடல் நோய்களைப்பற்றி நீங்கள் அதிகம் படித்திருப்பீர்கள்.
வீண் விரயம்:
உன்னுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன்:7:31)
சிகெரட்டிலும், மதுவிலும் வீண் விரயம் அதிகமாகவே இருக்கிறது. வீண் விரயம் செய்வர்களை வல்ல அல்லாஹ் விரும்புவதில்லை என்கிறான்.
...உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் : 2:195) இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.(அல்குர்ஆன் : 7:157)
மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் உங்கள் கைகளால் உங்களுக்கு தீங்கிழைத்து கொள்ள வேண்டாம் என்கிறான். மேலும் தீங்களிக்காத நல்லவற்றையே உண்ண வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.
வானவர்களுக்கு தொல்லை தரும் வாடை:
'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி : 855. )
ஜாபிர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: 'வெங்காயம் வெள்ளைப்பூண்டு மற்றும் வெறுக்கத்தக்க வாடையுடைய செடியைச் சாப்பிட்டவர் நம் பள்ளியின் பக்கம் நெருங்கவே வேண்டாம். மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (முஸ்லிம்).
நல்ல உணவுப்பொருளையே வாடை இருப்பதால் வாடை போகும்வரை பள்ளிக்கு வரக்கூடாது என்றால் புகை வாடை அருகில் இருப்பவரை எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக்கும். தொழும் பள்ளியில் இந்த வாடையுடன் வந்து தொழுகையாளிகளுக்கு தொல்லை தருவதோடு மலக்குகளுக்கும் தொல்லை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
சிகெரட், மது இவைகளை புகைப்பது, குடிப்பது, விற்பது எல்லாமே ஹராமாகவே இருக்கிறது. நிறையபேர் சிகெரட் ஹராம் இல்லை என்று வாதாடி புகைத்து கொண்டு இருக்கிறார்கள். புகை ஹராம் இல்லை என்று நினைப்பதால் புகைத்து விட்டு கெட்ட வாடையுடன் பள்ளிக்கு வருகிறார்கள்.
சகோதரர்களே, பெரியவர்களே, இளைஞர்களே! மது, சிகெரட் இந்த பழக்கத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள். மலக்குகள் சிரமப்பட்டால் அதனால் நமக்கு நன்மை ஏற்படாது.
மூமின்களுக்கு தன்னால் எந்த சிரமத்தையும் தராதவரே சிறந்த மூமின் என்பது நபிமொழி.
...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்:5:2)
நன்மையை அதிகம் பெற்றுத்தரும் மாதமான ரமலானில் நிய்யத் வைத்து தனக்கும், பிறருக்கும் தீமையை ஏற்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் தண்டனையை பெற்றுத்தரும் சிகெரட், மதுவிலிருந்து வெளியேற இந்த இரண்டிற்கும் அடிமையாகி கிடப்பவர்கள் உறுதி மொழி எடுத்தால் இம்மையிலும், மறுமையிலும் வல்ல அல்லாஹ்விடம் இருந்து சிறந்த நன்மையை பெற்றுக்கொள்ளலாம். தூய்மையான மக்களாக வாழ வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.
இன்ஷாஅல்லாஹ் வளரும். . .
S.அலாவுதீன்
இது ஒரு ரமளான் மீள்பதிவு
இது ஒரு ரமளான் மீள்பதிவு
0 Responses So Far:
Post a Comment