Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பணம் இங்கே !? உறவுகள் எங்கே !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | February 29, 2016 | , ,


இவ்வுலக வாழ்க்கையில் நம்மிடம் எவ்வளவு பொருளாதாரம் இருப்பினும் உண்மையான அன்பு பாசத்துடன் இருக்கும் சொந்தங்கள் உறவுகள் குடும்பங்கள் என்று இல்லாதவரை மனதில் நிம்மதி இல்லாத ஒரு நரக வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். பொருளாதாரம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியே அன்றி பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பொருளாதாரம் வறுமையை நீக்கி சுவிட்சமாக ஒரு குறிப்பிட்ட காலம் வாழ மட்டும் தான் உதவும். ஆனால் உண்மையான உறவுகளுடன் அன்பைப்பகிர்ந்து கொண்டு வாழ்நாள் முழுதும் கூடி வாழ்ந்து ஒற்றுமையுடன் இவ்வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்து அனுபவித்தால் அது போன்ற ஒரு இன்பத்தை மன சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு இன்புற்று இருக்கும்.

இன்றைய கால கட்டத்தில் மேற்சொன்னவைகளெல்லாம் நினைத்து கூட பார்க்கமுடியாமல் தூரத்து நிலாவாகி விடும்போல் இருக்கிறது. உண்மையான அன்பு பாசங்கள் மறைந்து இதெல்லாம் பகல் கனவாகி கொண்டிருக்கிறது. காரணம் மனிதன் காசு பணத்திற்கு அடிமையாகி அதற்க்கு கொடுக்கும் மரியாதை அன்பு பாசம் காட்டுபவர்களுக்கு கொடுப்பதில்லை என்பதே உண்மை.!

இன்றைய மனிதன் இயன்றளவு முழுப்பொழுதும் காசுபணம் தேடுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறான்.அப்படியானால் அன்பு பாசங்களை பகிர்ந்து கொள்ளவோ, குடும்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவோ நேரம் கிடைப்பதில்லை. இந்த ரீதியில் நமது மனநிலை பழகிப் போனால் அன்பு பாசம் எப்படி விரிவடையும்.? சொந்தங்கள் எப்படி உரிமையாக வந்து உறவு கொண்டாட முடியும்.?

அடுத்தவேளை சோற்றிற்கு ஏங்கி நிற்கும் அன்றாடங்காய்ச்சிகளின் நிம்மதி சந்தோசம் கூட கோடிகோடியாய் வைத்து இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் இங்கு பணம் காசிற்கு கொடுக்கப்படும் மரியாதையை விட உறவுகளுக்கு கொடுக்கப்படும் அன்பு பாசம் மரியாதை மேலோங்கி இருக்கிறது. எத்தனையோ கோடீஸ்வர சீமான்களை நாம் இவ்வுலகில் காண்கிறோம். அவர்கள் அளவுக்கதிகமான செல்வங்களையும் பண வசதிகளையும் பெற்றிருந்தும் மன நிம்மதியை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

இந்த உறவுகளின் தாக்கம் இப்போது புரியாது. ஒருநாள் வாலிப வயது மாறி வயோதிய நிலையை அடையும் போது அந்த தள்ளாத காலத்தில் தான் அந்த உறவுகளின் அருமை தெரியும். அப்போது காசு பணத்தை விட அவர்களின் அன்பும்,பாசமும்,பணிவிடையும் தான் மன நிம்மதியைத் தரும்.

இன்று நம் கண் முன்பு எத்தனையோ பணக்கார முதியோர்களின் அவல நிலையை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.பணம் , சொத்துக்கள் என்றிருந்தும் பிடிவாதத் தாலும்,முன்கோபத்தாலும் உறவுகளை விட்டுப் பிரிந்த அவர்களை பாசமுடன் ஆதரிக்க உறவுகள் யாரும் முன்வருவதில்லை.அப்படியே இறக்கப்பட்டு முன்வந்தாலும் மனமுவந்து சேவைகள் செய்வதில்லை. பெயரளவுக்கும் சொத்தை அபகரிக்கும் குறிக்கோளை மனதில் வைத்தும் தான் பாசம் காட்டப் படுகிறது.

காசு பணம் என்பது நிலையில்லாத ஒன்று. அது எப்போது யாரிடத்தில் சென்றடையும் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்பு பாசம் என்பது அப்படியல்ல. நாம் அழிந்த பின்னும் பேசப்படும் அழிவில்லா செல்வமாகும்.

மனிதனிடத்தில் கருத்து வேறுபாடுகள் என்பது கார்த்திகை மாத மழை போல் வந்து போகக் கூடியது. அதை கால மெல்லாம் பகையாக்கிக் கொள்ளாமல் அன்பைப் பகிர்ந்து கொண்டு அனைவரிடத்திலும் ஒற்றுமையுடன் இருந்து மகிழ்ச்சியை தேடிக் கொள்வோம். மனிதன் தவறு செய்யக்க் கூடியவனே. அதே சமயம் தவறென்று தெரிந்ததும் அதைத் திருத்திக் கொள்வதில் தான் அங்கு அவன் முழு மனிதனாக நிறைந்து இருக்கிறான்.

ஆகவே உறவுகளை ஊதாசினப் படுத்தாமல் காசு பணத்திற்கு கொடுக்கும் மரியாதையை உறவுகளுக்கும்,சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து உண்மையான அன்பு பாசங்களை உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு மன நிம்மதியுடன் வாழ்வோம் !

அதிரை மெய்சா

'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை 34

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2016 | , ,

முன்பெல்லாம் பரிசளிக்கும் சூழல் வரும்போதெல்லாம் ஆயிரத் தெட்டு குழப்பங்கள்  நிலவும். கடிகாரம் வாங்கி கொடுப்போமா, பூ ஜாடி வாங்கி கொடுப்போமா என்றெல்லாம் விழி பிதுங்கும்வரை   மனதோடு பட்டிமன்றம் நிகழ்த்தியதுண்டு. புத்தகங்களோடு நட்புறவு பலமான பின், எந்த விசேஷ தருணமென்றாலும் பரிசுக்கு முதலும் இறுதியுமான முடிவு 'புத்தகம் தான் டாட்' என்ற நிலைக்கு மாறியது. 

இதிலும் ஓர் குறை இருந்துவந்தது. இந்திய முஸ்லிம்கள் குறித்து திரிக்கப்பட்ட வரலாறுகளையே படித்து பதிந்து பழக்கப்பட்ட மனம் கொண்டோர்க்கு, அதை தகர்த்தெறியாவிடினும்,  ஓரளவுக்கேனும் உண்மையை புரிந்துகொள்ள ஏதுவான  வரலாற்று புத்தகங்களை பரிசளிக்கவோ பரிந்துரைக்கவோ நிறைவான புத்தகம் + நம்பகமான புத்தகம் பரிசளிப்பதற்காக, தேடுவதில் அதிகமே மெனக்கெட்டதுண்டு. "ஏன் இஸ்லாமியர்கள்  வரலாற்றுப் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை என்ற நெடுங்கால குறையை செ.திவான் தீர்த்து வைத்ததில் ஓரளவு திருப்தியிருந்தது. இதோ அதே வரிசையில்  அதிரைநிருபர் தளத்தில் தொடராக வெளிவந்து சென்னை சாஜித புக் செண்டர் பதிப்பகத்தாரின் வெளியீடாக என் கைக்கு வந்து சேர்ந்தது அந்த பொக்கிஷம் "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு"

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிரைநிரூபர் தளத்தில் வாசித்திருந்ததால் ஓரளவு பரிட்சயமிருந்தது. நூல் வடிவில் கொண்டு வரப்போவதாக ஒருவருடம் முன்பு தகவல் வந்த போதே அத்தளத்தின் நிர்வாகியிடம் ஓர் கோரிக்கை வைத்தேன் "தயவு செய்து கனமான அட்டை போட்டு புத்தகம் வெளியிடுங்கள். ஏனெனில் அவையெல்லாம் அடிக்கடி பார்க்கும் சூழலை உருவாக்கும் புத்தகம்" என்றேன். வெளியீட்டு விழா நிகழ்ச்சி  பற்றி சொன்ன போது நான் கேட்ட முதல் கேள்வியும் அதுவேதான். சின்ன ஏமாற்றம் எனினும் ஹைர்..! 

அழகான வடிவமைப்புடன் கூடிய புத்தகத்தில் இரு பிரதிகள் என் கைக்கு சேர்ந்ததுமே அதில் ஒரு பிரதியை  நான் எடுத்துக்கொண்டு இன்னொரு பிரதியை   தெரிந்த பிறமத நண்பர் ஒருவருக்கு பரிசளித்துவிட்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். நன்கு தெரியும், என்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் புத்தகம் என்றபடியால் வாசிக்காமலேயே, பரிசளித்தேன்! எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் முடிந்த பின்னே  சாவகாசமாய் வாசிக்கத் தொடங்கினேன். அல்ஹம்துலில்லாஹ்,  என் எண்ணம் தவறல்ல என்பதை ஆசிரியரின் உரையே எடுத்துகாட்டியது. 

பெரும்பாலும் புத்தகத்தின் பதிப்புரையோ முன்னுரையோ எந்த உரையாகினும் அவையெல்லாம் எளிதாக கடந்த முதல் அத்தியாயத்துக்குள் நுழையும் என் வாசிப்பு  பழக்கத்தில் சற்று மாறுதலை கொண்டுவந்தது இந்த புத்தகம். ஆசிரியரின் உரையே, இப்புத்தகம் ஏன் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்தியம்பியது. பாடபுத்தகங்களில் இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் வந்ததை இஸ்லாமிய படையெடுப்பு என்றும், ஆரியர்கள் வந்ததை ஆரியர் வருகை என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டிய இடத்தில் புத்தகத்தை மூடிவைத்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆம்! பள்ளிபாடங்களில் இப்படியாக தான் நஞ்சு விதைக்கப்பட்டவர்களாக  வளர்க்கப்பட்டிருக்கிறோம். அதை மெல்லிய உதாரணத்தில் சொல்லி    அதிகம் சிந்திக்க வைத்தார் ஆசிரியர். புத்தகம் முழுதும் இப்படியாக பல விஷயங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்திருக்கிறார். 

31 தலைப்புகளின்  கீழ் பலதரப்பட்ட வரலாற்றுக்களின் மறுபக்கத்தை நமக்கு எடுத்துகாட்டியுள்ளார் ஆசிரியர்.  ஒவ்வொரு தலைப்பிலும் நமக்கே நம் சமுதாயம் பற்றி தெரியாத தகவல்களை தந்து, இத்தனை நாளாக இதுபற்றி அறியாமல் என்ன செய்து கொண்டிருந்தோம் என கேள்வி கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு தகவலும் கொடுக்கப்பட்ட விதம், இக்கட்டுரைகளை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், தேடலும் , உழைப்பும் பறைசாற்றுவதோடு உண்மை தன்மையை  எடுத்தியம்புகிறது. ஆம்,  தகவல்கள் ஆண்டுவாரியாக மட்டுமல்லாமல்  எந்தந்த நாட்களில் சம்பவம் நடந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின்  பங்கு என்ன என நம்மை நோக்கி கேள்வி கேட்போருக்கு பதிலை புத்தகமாக கொடுத்ததோடு அல்லாமல் " சுதந்திர போராட்டத்தின் போது சாவர்க்கரை போல் இந்திய மண்ணுக்கு துரோகம் செய்த ஒரு முஸ்லிமையாவது ஆதாரத்துடன் காட்ட முடியுமா " என எதிர்கேள்வியையும் கேட்க வைத்துள்ளார். 

இன்னும் இன்னும் ஏராளதகவல்கள் கொட்டி கிடக்கின்றன. 

* திப்புவின் வீரம் தெரியும் திப்பு இறந்த பின் அவர் அரண்மனைக்குள் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் புத்தகங்களும், ராக்கெட் ஆய்வு கட்டுரைகளும் தான் என்பது தெரியுமா?

* காந்தி நாட்டுக்காக பாடுபட்டது பாடபுத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலயர்களின் ஆட்சிமன்றத்தில் அங்கத்தினராக காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதற்கான காந்தி கொண்டு வந்த  'டொமினியன் அந்தஸ்து' தீர்மானத்தை முட்டாள்தனமானது என்றும் ஆங்கிலேயர்களை விரட்டி இந்தியாவை நமதாக்க வேண்டும் என்பதை   எடுத்துக்கூறிய மௌலானா ஹஜ்ரத் மொஹானியின் அறிவார்ந்த தீர்மானத்தை காந்தி புறந்தள்ளியதை படித்திருக்கிறோமா? 

* மருதுபாண்டியர் பற்றி தெரியும். அந்த  வம்சமே தூக்கிலிடப்பட்ட போது சின்ன வயது காரணமாக இளையமருதுவின் மகன் துரைச்சாமியை விட்டு வைத்ததும்,  அவருடன் சேர்ந்து நாடுகடத்தப்பட்ட  72 பேரில் துரைச்சாமிக்கும், படைத்தளபதி ஷேக் உசேன்க்கும் மட்டுமே இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர் என்ற வரலாறெல்லாம் குறைந்தபட்சம் கேள்விபட்டிருக்கிறோமா?

* அலி சகோதரர்கள் பற்றி ஓரிரு வரியில் படித்திருப்போம்.  அவர்கள் வீட்டுப் பெண்கள் அக்காலத்திலேயே 30 லட்சம்  சுதந்திர போராட்ட நிதியாக கொடுத்தது அறிவோமா? இல்லை " என் மகன்கள் ஆங்கில அரசிடம் மன்னிப்பு கேட்டால் நானே அவர்களின் குரல்வளையை நெறித்துக்கொள்வேன்" என சொன்ன அவர்களின் வீரத்தாய் பீவிமா பற்றியேனும் தெரிந்துவைத்துள்ளோமா?

* ஒத்துழையாமை பற்றியும்,  சத்தியாகிரகம் பத்தியும் சொல்லிகொடுக்கப்பட்ட நமக்கு சப்பாத்தி திட்டம் பற்றி சொல்லப்பட்டுள்ளதா? சப்பாத்திக்குள் துண்டு பிரசூரம் வைத்து   புரட்சிக்காக மக்களை அழைத்ததும், இன்னும் பல வழிகளில் ஆங்கிலேயர்க்கு குடைச்சல் கொடுத்ததன் விளைவாக   ,  உயிருடன் பிடித்துகொண்டு வந்தால் 50 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என ஆங்கிலேயர்களால் அறிவிப்பு செய்யப்பட்ட மௌலவி அஹமது ஷா பற்றி அறிந்திருக்கிறோமா? 

இன்னும் பக்கத்திற்கு பக்கம் பல சுவாரசியங்களும் அதிர்ச்சிகளும் காணக்கிடைக்கின்றன. கண்ணீர் துளிகளும் குறைந்தபட்சம் உடல் சிலிர்க்காமலும் இப்புத்தகத்தை முடிக்க உங்களால் முடியாது.  ஓர் சமுதாயம் கேள்வி கணைகளால் தொடுக்கப்படும் பொழுதும், தனிமைபடுத்தப்பட  விஷம பிரச்சாரங்கள்  கட்டவிழ்க்கப்படும் பொழுதும் அதனை எதிர்க்க  பதிலை தெரிந்து வைத்திருப்பது அவசியம். எதிர்த்து பதில் சொல்வதற்கான சூழலை இப்புத்தகம் வாயிலாக தந்துள்ளார்கள். நிச்சயம் முஸ்லிம்கள் வாசிக்க வேண்டிய நூல். தம் நண்பர்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்து தவறான புரிதலில் உள்ளோர்க்கும் பரிசளிக்க ஏதுவான நூல்.  

வரலாறுகளை திரித்து விட்டார்கள் என சொல்லிக் கொண்டே இருப்பதை விடுத்து உண்மைகளை அறிவதும், அறிந்ததை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்கு  எத்தி வைப்பதும்  மகத்தான பணி.  இப்பணியை சிறப்பாக செய்த  அதிரைநிருபர் தளத்திற்கும் இந்நூல் ஆசிரியருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' இன்னும் பல பாகங்களாக தொடரவும் பல பதிப்புகளாக வெளிவரவும் மனமார்ந்த வாழ்த்துகள். 

ஆமினா முஹம்மத்

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 16. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2016 | ,


அல்லாஹ்வின் அருட் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட திருமணங்களின் எண்ணிக்கையைப் பற்றி உண்மைகளை விளங்காமல் விமர்சிக்கும் பிற மத சகோதரர்களின் வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக அழைப்புப் பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக, அறிவியல் , நடைமுறை , அரசியல் தொடர்பான செய்திகளைக் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொண்ட மனைவிமார்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பற்றியும் வனப்புமிகு வரலாற்றுப் பின்னணிகளைக் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது.

கடந்த அத்தியாயத்தில் அன்னை ஹதிஜா (ரலி) மற்றும் ஸவ்தா (ரலி) ஆகியோர் பற்றி குறிப்பிட்டு இருந்தோம். அன்னை ஹதிஜா (ரலி) அவர்களோடு நிகழ்ந்த முதல் திருமணம், ஒரு அனாதையான ஊழியரை ஒரு செல்வசீமாட்டி வயது வித்தியாசம் கருதாமல் செய்துகொண்ட திருமணமாக இருந்தது என்பதை கோடிட்டுக் காட்டினோம். தன்னுடைய இளம் வயதில் பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்து செய்துகொண்ட முதல் திருமணமே, தன்னைவிட 15 வயது மூத்த பெண்ணுடன் என்பது உலகே மூக்கில் விரலை வைக்கும் நிகழ்வுதான். 

அதையும் விட அற்புதமானது அவர்கள் இருவரும் இருபத்தி ஐந்து வருடத்துக்கும் மேலாக, அன்பு இழையோட இல்லறமே நல்லறமாக வாழ்ந்த வாழ்க்கையாகும். இன்று, ஒத்த வயதினர் கூட மனம் ஒத்து வாழ்வதில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்ற நிலையில், பெரும் வயது வித்தியாசத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட திருமணத்தில் முழு திருப்தியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து பல குழந்தைகளையும் பெற்றார்கள் என்று எண்ணும் போதும் , அவர்கள் இருவரும் வாழ்ந்தகால கட்டம் இஸ்லாத்தின் சரித்திரத்தில் எவ்வளவு துன்பங்களும் துயரங்களும் நிறைந்த நெருக்கடியான கால கட்டம் என்பதை நினைக்கும் போதும் அத்தகைய துயரங்களையும் தாங்கி, தாண்டி பெருவாழ்வு வாழ்ந்த நின்ற அவர்களை எண்ணி கல் நெஞ்சமும் கண்ணீர் வடிக்கும். 

அன்னை ஹதிஜா (ரலி) அவர்களது மரணத்துக்குப் பிறகு, பெருமானார் (ஸல்) அவர்கள் தனது ஐம்பது வயதுக்குப் பிறகு மணந்து கொண்ட அன்னை ஸவ்தா பின்த் சம் ஆ (ரலி) அவர்களும் இஸ்லாத்துக்காக தியாகத் தழும்புகளை ஏற்றவர்களில் ஒருவராகவே இருந்தார். அழைப்புப் பணியின் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் முதன்முதலாக நாடு துறந்து அபிசீனியாவுக்கு சென்ற அணியில் தனது முதல் கணவர் அவர்களுடன் இடம் பெற்றிருந்தவர். நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த அவர்களது முதல் கணவர் அவருக்காக விட்டுச் சென்றவை நான்கு பெண் குழந்தைகள் மட்டுமே. ஒரு புறம் தாயில்லாத குழந்தைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களை கவனிக்க ஆளில்லாமல் அவதியுற்ற பெருமானார் (ஸல்) அவர்களையும் மறுபுறம் கணவனை இழந்து ஆதரிக்க யாருமின்றி நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவதியுற்ற அன்னை ஸவ்தா (ரலி) அவர்களையும் கண்ட கவ்லா பின்த் ஹகீம் (ரலி) என்ற தோழியர், இருவரும் படும் துயரங்களை நீக்கும் பணியில் செயல்பட்டு இருதரப்பிலும் பேசி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் ஸவ்தா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரின் துயரங்களும் தீர்ந்தன. அதைவிட அவர்கள் இருவரின் குழந்தைகளும் அரவணைக்கப்பட்டு ஆறுதலடைந்தனர். 

பெருமானார் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டுமே ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விதித்த இறைத்தூதுப் பயணத்தின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் உடனிருந்தவர்கள். நட்புக்கு இலக்கணம் வகுத்து யாருமே நம்பாத காலங்களில் பெருமானார் (ஸல்) அவர்களை உண்மைப் படுத்தியவர்களில் சிறந்தவர். அதனாலேயே “சித்தீக்” என்று புகழப் பெற்றவர். அத்தகைய நண்பருடன் தனது பிணைப்பையும் பந்தத்தையும் தனது வாழ்நாள் முழுதும் நீடித்துக் கொள்ளவே பெருமானார் (ஸல்) அன்னை ஆயிஷா  (ரலி) என்கிற அறிவுப்பெட்டகத்தை மணந்தார்கள். 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறந்த நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று அறிகிறோம். அருட்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நீண்டகாலம் வாழ்ந்தவர் என்ற சிறப்புக்குரியவர். அதனால் பெண்களிலேயே அதிகமான நபி மொழிகளை அறிவிப்புச் செய்த பெருமைக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆளாகிறார்கள். மேலும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வாழ்ந்த வீடுதான் இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் மண்ணறையாக மதினாவில் நிலவி வருகிறது. 

அடுத்து, அன்னை ஹப்ஸா (ரலி) அவர்கள், பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு தியாக வரலாறு படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பத்ருப் போரில் காயம்பட்ட காரணத்தால் தனது கணவரை இழந்து, கண்ணீர் சிந்தி நின்ற ஒரு விதவை. அது மட்டுமல்ல வாளெடுத்தால் வையகம் கலங்கும் என்ற பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்களின் அன்பு மகள். அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களின் இயல்பான எழுத்தாற்றலை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வகையாக்கிக் கொள்ளவும், நண்பர் உமர் (ரலி) அவர்களின் உறவையும் பந்தத்தையும் பலப்படுத்திக் கொள்ளவும் , அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்.

அரபு சமூகத்தில், மாமனார் வீட்டாரோடான உறவு மிகவும் மதிக்கப்பட்டது. அத்தகைய உறவு, மாறுபட்ட பல குடும்பங்களுக்கு இடையில் நெருக்கத்தையும் நேசத்தையும் ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மாமனார் மற்றும் மருமகன்களுக்கிடையில் போரிட்டுக் கொள்வது இழுக்காக கருதப்பட்டு வந்த காலம் அது. பல மாறுபட்ட வம்சங்களில் இருந்து பெண்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கிடையே நிலவி வந்த பகையும் கோபதாபங்களும் மறைந்து, மலரும் புதிய உறவுகள் இஸ்லாமிய அழைப்புக்கு வலுவூட்டும் என்பதற்காக செய்து கொள்ளப்பட்ட திருமணத்துக்கு உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டதை சொல்லலாம். 

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மக்ஜூம் கிளையைச் சேர்ந்தவர்கள். அதே கிளையைச் சேர்ந்த, அபுஜஹல் பத்ருப் போரில் கொல்லப்பட்டான். ஆனால் அவர்களைச் சேர்ந்த பெரும் வீரரான காலித் இப்னு வலீத் போன்றவர்களின் இஸ்லாத்துக்கு எதிரான நிலையை இஸ்லாத்துக்கு ஆதரவாகத் திருப்ப அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களை  மணந்தார்கள். விரைவிலேயே காலித் இப்னு வலித்(ரலி) அவர்கள் தனது எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள். இஸ்லாத்துக்கு ஆதரவான பல போர்களில் பங்கேற்று வெற்றிவீரரானார்கள். பின்னாளில் அல்லாஹ்வின் வாள் என்ற அர்த்தம் தரும் “சைபுல்லா” என்ற பட்டத்தையும் பெற்றார்கள். 

இவ்வாறே, அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர்கள் , இஸ்லாத்தின் கடுமையான எதிரியாகவும் உஹுதுப் போரில் குறைஷியர்களின் படைத்தளபதியாகவும் இருந்த அபுசுப்யானின் மகளாவார்கள். அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) திருமணம் முடித்த பின்னர் அபுசுப்யான், இஸ்லாத்துக்கு எதிர்மறையான தனது செயல்களில் இருந்து பின் வாங்கத் தொடங்கினார். மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்திலும் இணைந்தார். இத்திருமணம் எதிரிகளை இணங்கவைத்து உறவுகளை ஓங்கி வளரச் செய்து இணத்தும் பிணைத்தும் வைத்தது., உருவப்பட்ட வாட்கள் உறவுகள் காரணமாக உறைக்குள் உறங்கின. 

அதே போல பனூ நளீர் மற்றும் பனு முஸ்தலிக் ஆகிய இரு யூத வம்சங்களில் இருந்து அன்னை ஷபிய்யா (ரலி) மற்றும் அன்னை ஜுவைரியா (ரலி) அவர்களையும் மணம் முடித்தார்கள். போர்களில் கைதிகளாக கைப்பற்றப்பட்டு கண்ணைக்கசக்கிக் கொண்டிருந்த அவர்கள் அடிமைச் சந்தைகளில் விற்கப்படாமல் நம்பிக்கையாளர்களின் அன்னையர்கள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்கள். பரம்பரை பகைமையுணர்வும் விடைபெற்றது. அதுமட்டுமல்ல ஜுவைரியா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்ததால் கைதிகளாக இருந்த அன்னை அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த நூறு குடும்பத்தினரும் நபித்தோழர்களால் உரிமையிடப்பட்டார்கள். இறைத்தூதரின் மாமனார் ஹாரிஸ் அவர்களின் பனு முஸ்தலக் கிளையைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு ஒரு பெரிய வரலாற்று மாற்றத்துக்கு வித்திட்டது. 

இஸ்லாத்துக்கு முந்தைய வழக்கமான , வளர்ப்புமகனை தனக்குப் பிறந்த மகனைப் போல உரிமை கொண்டாடும் வழக்கத்தை ஒழிப்பதற்காக, பெருமானார் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்த ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களால் மணவிலக்குச் செய்யப்பட்ட அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களையும் திருமணம் முடித்துக் கொண்டார்கள். அறியாமை கால நடைமுறைப்படி, வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மகனுக்கு இரத்த உறவில் பிறந்த மகனைப் போன்றே வழங்கப்பட்ட உரிமைகள் இந்தத் திருமணத்தால் இறைவனால் ரத்து செய்யப்பட்டு திருமறையின் கட்டளையே இந்தத் திருமணத்துக்கு பொறுப்பாகவும் சாட்சியாகவும் ஆக்கப்பட்டது. 

அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள், தன் கணவர் ஃபத்ருப் போரில் கொல்லப்பட்டு நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் பெருமானார் (ஸல்) அவர்கள், அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) திருமணம் புரிந்து அவர்களுக்கு ஆதரவும் அந்தஸ்தும் கொடுத்தார்கள். அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சில மாதங்களே வாழ்ந்தார்கள். அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் போன்று நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது மரணமடைந்தவர்கள் அன்னை சைனப் பின்த் குஸைமா (ரலி).  இவர்கள் உம்முல் மிஸ்கீன் (ஏழைகளின் தாய்) என்று வரலாற்றி அழைக்கப்படுகிறார்கள்.

அதேரீதியில், அன்னை உம்மு ஸலாமா (ரலி) அவர்களின் கணவர் அபூ ஸலாமா (ரலி) அவர்கள் பத்ருப் போரிலும், பின்னர் உஹதுப் போரிலும் அதன்பின் , பனு அசத் குலத்தவருடன் நடந்த போரிலும் பங்கேற்றார். பலபோர்களில் பங்கேற்ற அவரது உடலில் புரையோடிப் போன புண்களின் காரணமாக மரணமடைந்தார். அந்நிலையில் ஆதரவற்ற , வயது முதிர்ந்த அன்னை உம்மு ஸலாமா (ரலி) அவர்களையும் பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொண்டதுடன் அவர்களது குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். 

அதே போல், அன்னை மைமூனா (ரலி) அவர்கள் பனூ ஹிலால் என்கிற மிகச் சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். இரண்டு திருமணங்கள் முடித்தும் இளம் வயதிலேயே விதவையானார்கள். திருமண உறவின் மூலம் பநூதீம், பனூ அதி, பனு உமையா, பனூமுஸ்தலக், பனூ அசத் ஆகிய கோத்திரங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டது போல் அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்து பனூ ஹிலால் கோத்திரத்துடனும் பெருமானார் (ஸல்) அவர்கள் உறவை உண்டாக்கிக் கொண்டார்கள். ஏற்றம் பெற்றது இஸ்லாம். 

அன்னை மாரியா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எகிப்திய மன்னரால் பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட கிருத்தவ அடிமையாக இருந்தார்கள். முதலில் அவர்களுக்கு அடிமைத்தளையில் இருந்து விடுதலை அளித்த பெருமானார் (ஸல்) அவர்கள் , அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும்படி எடுத்துக் கூறினார்கள். அதன்பின் மணம் புரிந்துகொண்டார்கள். அன்னை ஹதிஜா (ரலி) அவர்களுக்குப் பிறகு அன்னை மாரியா (ரலி) அவர்கள் மூலம்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மீண்டும் தந்தையானார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

எவ்வளவு அறிவும் ஆற்றலும் பெற்ற ஆண்களாக இருந்தாலும் இரண்டு மனைவிகள் இடையே கூட சமத்துவமான நீதி செலுத்துவது கடினம் என்பது பொதுவாக வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளாகும். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணம் புரிந்து கொண்டு வாழ்ந்தது அல்லாஹ் அவர்களுக்கு வைத்த சோதனையில் பெற்ற வெற்றி என்று சொல்லலாம். உலகத்துக்கு நீதியைப் பற்றியும் சமத்துவத்தைப் பற்றியும் போதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த வாழ்விலும் , பல்வேறு இன, குல, கோத்திர , கிளைகளைச் சேர்ந்த மனைவிமார்களுக்கு இடையே அந்த நீதியையும் சமத்துவத்தையும் பேணினார்கள் என்பதை உலகுக்கு நிருபித்துக் காட்டவே இத்தனை பெண்களை மணம்புரிந்தும் அனைவருடனும் இன்புற்று வாழவைத்தது அல்லாஹ் தனது தூதருக்காக எடுத்த ஒரு அழகிய அளவுகோலாகும். 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நவின்ற மொழியே இதற்கு சான்று. முஸ்லிம் தொகுப்பில் ஸ அத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்களின் குணம் எப்படி இருந்தது என்று கேட்கப்பட்டபோது , “ அவர்களின் குணம் குர் ஆனாகவே இருந்தது “ என்று கூறினார்கள். (முஸ்லிம் 1233). 

இஸ்லாமிய சட்டங்களில் பாதி அளவு சட்டங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிகளின் வாயிலாகவே உலகுக்குக் கிடைத்தன. நபித்தோழர்கள் கூட அந்த விபரங்களை அவர்களின் மனைவிகளிடமிருந்தே கேட்டு அறிந்து கொண்டார்கள். பெருமானார்  (ஸல்) அவர்கள் வரம்புக்குட்பட்ட திருமணங்களை மட்டும் செய்து இருந்தால் பல சட்டங்கள் வெளி உலகுக்கு அறிவிக்கப்படாமலே போயிருக்கும். 

மேலும் ஒரு மனிதனின் புற வாழ்க்கை ஒன்றாக இருக்கும் ; அக வாழ்க்கை மற்றொன்றாக இருக்கும். அகவாழ்விலும் புறவாழ்விலும் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணி வாழ்ந்த அருட் தூதர் அவர்களின் அகவாழ்வு மனைவியர் மூலமே வெளி உலகுக்குத் தெரிய வாய்ப்பு உண்டு. பெருமானார் (ஸல்) அவர்களின் வெளி உலக வாழ்வை உலகுக்கு எடுத்துச் சொல்ல பல்லாயிரக் கணக்கான தோழர்களின் தேவை இருந்தது போலவே அவர்களது வீட்டுலக வாழ்வை உலகுக்கு எடுத்துச் சொல்லி போதிக்க பல மனைவிகளும் தேவைப்பட்டார்கள். 

அன்பின் காரணமாக மனைவியர்களுக்குள் சில நேரங்களில் மண உரசல்கள் ஏற்பட்டதை நாம் மறைக்கத் தயாரில்லை. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் அன்பாகவும் நேசமாகவும் நீதியாகவும் நடந்து தான் ஒரு இறைத்தூதர் என்பதை நிருபித்துக் காட்டினார்கள். கடுஞ்சொல் காணப்படவில்லை; கை நீட்டி அடித்ததில்லை; பாத அணியை செப்பனிட்டார்கள்; பால் கறந்தார்கள்; தூசுதட்டினார்கள்; யாதுமற்றோர்க்கு உதவி நின்றார்கள் யாம் உவக்கும் நாயகம் (ஸல்) அவர்கள்.  

எதிர்த்துக் கேட்போருக்கு நாம் இன்முகத்துடன் எடுத்துச் சொல்ல வேண்டியவை இவை. அழைப்புப் பணியில் ஆங்காங்கு ஏற்படும் உரசல்களை உண்மை சொல்லி விளங்கவைத்து நன்மையின்பால் அழைப்பதற்கான வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; வலிகளும்; வடுக்களும்தான். பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் வழுக்கலும் இல்லை; வழுக்களும் இல்லை ; வழக்குகளும் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் இன்னும் பார்க்கலாம்.

இபுராஹிம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 024 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

பெற்றோர் நலம் பேணல், உறவினர்களை ஆதரித்தல்!

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! (அல்குர்ஆன் : 4:36)

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால்  அவர்களுக்குக் கட்டுப்படாதே! (அல்குர்ஆன் : 29:8)

''என்னைத் தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! 

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!(அல்குர்ஆன் : 17:23,24)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு  மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் :31:14)

'அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். உரிய நேரத்தில் தொழுவது என்று நபி(ஸல்) கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்' என்று கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். 'இறைவழியில் போர் புரிதல்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான் என்ற அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 312)

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் உறவினருடன் இணைந்து வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 314).

''நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து, முடித்தபோது, 'உறவு' எழுந்து நின்றது. ''(என்னை) துண்டித்துக் கொள்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது'' என்று கூறியது. ''ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னை துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். ''திருப்திதான்'' என உறவு கூறியதும், ''உனக்கு அது உண்டு'' என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு ''நீங்கள் விரும்பினால் (பின்வரும்) வசனத்தை ஓதுங்கள்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 315)

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். (அல்குர்ஆன் : 47:22,23)

'ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதர் அவர்களே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்று கூறினார்கள். பின்பு யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார் 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். 'உன் தந்தை' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 316)

''முதிய வயதையுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ இருந்தும் சொர்க்கம் நுழைய முடியாமல் போன மனிதரின் மூக்கு நாசமாகட்டுமாக! மூக்கு நாசமாகட்டுமாக! மூக்கு நாசமாகட்டுமாக!'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 317)

''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு சில உறவினர் உண்டு. அவர்களை நான் இணைத்து வாழ்கிறேன். என்னை அவர்கள் பிரிக்கிறார்கள். அவர்களிடம் நல்லவிதமாக நடக்கிறேன். அவர்கள் என்னிடம் தீவினையுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் கனிவுடன் நடக்கிறேன். அவர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை'' என்று கூறினார். ''நீ கூறுவது போல் நீ இருந்தால், சுடு சாம்பலை நீ அவர்களை உண்ணச் செய்தது போலாகும். நீ இதே நிலையில் இருக்கும் வரை அவர்களுக்கு எதிரான பாதுகாவலர் (வானவர்) அல்லாஹ்விடமிருந்து உன்னுடன் இருந்து கொண்டேயிருப்பார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 318)

''தன் உணவு (வாழ்வாதாரம்) தனக்கு அதிகரிக்கப்படவும், தன் ஆயுள் தனக்கு நீடிக்கப்படவும் ஒருவர் விரும்பினால் அவர் தன் உறவினரை இணைந்து வாழட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 319)

''அபூதல்ஹா(ரலி) அவர்கள் மதீனாவிலேயே, மதீனாவாசிகளில் பேரீத்தம் பழத்தோட்டங்கள் அதிகம் உள்ளவராக இருந்தார். அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக 'பய்ரூஹா' தோட்டம் இருந்தது. பள்ளி வாசலுக்கு அருகில் அது அமைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதன் உள்ளே போய், அதன் சுவையானத் தண்ணீரைக் குடிப்பார்கள். ''உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.'' 3:92 வசனம் இறங்கியதும், நபி (ஸல்) அவர்களிடம் அபூதல்ஹா வந்தார். ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது 3:92 வசனத்தை இறக்கி உள்ளான். என் சொத்தில் எனக்கு மிகவும் விருப்பமானது 'பய்ரூஹா' தான். அதை அல்லாஹ்வின் வழியில் (நான்) தர்மம் (செய்கிறேன்). அதன் நன்மையை, நற்கூலியை அல்லாஹ்விடமே ஆதரவு வைக்கிறேன். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் நாட்டப்படி அதை நீங்கள் (செலவு) செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ''நல்லது. இது லாபம் தரும் சொத்தாகும். இது லாபம் தரும் சொத்தாகும் என (இருமுறைக்) கூறிவிட்டு ''இது விஷயமாக நீ கூறியதைக் கேட்டேன். உன் நெருங்கிய உறவினர்களுக்கு இதை பங்கீடு செய்வதை நான் விரும்புகிறேன்'' என்றும் கூறினார்கள். உடனே அபூதல்ஹா அவர்கள் ''இறைத்தூதர் அவர்களே! அப்படியே செய்கிறேன்'' என்று கூறிவிட்டு, அபூதல்ஹா அந்த தோட்டத்தை தன் நெருங்கிய உறவினர்களுக்கும் தன் சிறிய தந்தையின் மக்களுக்கும் பங்கீடு செய்தார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 320)

''பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தன்னை துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே இணைத்து வாழ்பவர் ஆவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 322)

''உறவு என்பது, அர்ஷை பிடித்துக் கொண்டு ''என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக் கொள்வான். என்னைப் பிரித்து விடுபவரை அல்லாஹ்வும் பிரித்து விடுவான்'' என்று கூறும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 323)

''இன்ன கூட்டத்தார் எனக்கு விருப்பமானவர்களல்லர். நிச்சயமாக எனக்கு விருப்பமானவர்கள், அல்லாஹ்வும், அவனை நம்பிக்கை கொண்ட நல்ல அடியார்களும் தான். எனினும் அந்தக் கூட்டத்தாரிடம் எனது இரத்த பந்தம் உள்ளது. அதை அதன் (சேர்த்துக் கொள்ளுதல் எனும்) நீரால் நனைத்துக் கொள்வேன்'' என ஒளிவு மறைவு இன்றி நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லாஹ் என்ற அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 330)

நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகிலிருந்து என்னைத் தூரமாக்கி விடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள்'' என்று ஒருவர் கேட்டார். ''நீ அல்லாஹ்வை வணங்குவீராக! எதையும் அவனுக்கு இணைவைக்காதீர்! தொழுகையைப் பேணுவீராக! ஜகாத் கொடுப்பீராக! உறவினரை இணைந்து வாழ்வீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅய்யூப் என்ற காலித் இப்னு ஸைத் அன்சாரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 331)

''உங்களில் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்) அதுவே சுகாதாரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ''ஏழைக்கு தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்கு தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம், மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் இப்னு ஆமிர்(ரலி)  அவர்கள் (திர்மீதி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 332)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

சிப்பிக்குள் சூரியன் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2016 | , , , , , ,


கடலில்  அலைகள்  மிதக்கின்றன !
சிப்பிகளும்  கனவுகளோடு !
மாபெரும் கனவுகளோடு
எட்டும்  என நம்பிக்கையோடு மிதக்கின்றன !

***                ****               ***
கடல் உள்ளிருந்து  சூரியனை
நேசிக்கும்  சிப்பிகளுக்கு
எப்படியாயினும்  சூரியனை
கருவாய் கொள்ள
கோடி ஆசைகள் !

****              ****            ******
எப்படி  நடக்கும்  எனத்தெரியாது !
எந்த  வியுகமுமில்லை !
எப்படி சூரியனை  கருவாய் கொள்ளவது ?!
நம்பிக்கை மட்டுமே ஒற்றைப்பிடி !

******          *******        ***********
முதல் இலக்கு கடல்கறைக்கு !
நகர்தல்  தொடங்கின !
அலைகள்  மேல்  மிதந்தன !
அலை அடித்து ! !
கறைக்கு  வாசம் !
முதல் வெற்றி !

****       *****   ********
இருப்பதோ  ஒரு சூரியன் !
அதை கருவாய் கொள்ள
ஆயிரம்மாயிரம்  சிப்பிகள் !
ஆனாலும்  கோடி  நம்பிக்கைகள் !

*****        *****      *******
சந்தேக ஓலமிட்ட  சில
சிப்பிகள்  மீண்டும்
நகர்ந்தன  கடல் நோக்கி !
திடமாய்  நின்றவைகள் மட்டும்
கனவுகளை  மீண்டும்  மீண்டும்
புதுபித்து மீட்டிக்கொண்டிருந்தன !

*****         ******     *******
எல்லாக் காலப்பருவமும்
கடந்துப் போயின !
மழைக்காலப்  பருவத்தை  தவிர!
மாற்றங்கள்  நிகழவில்லை !
கனவுகளும் தடுமாறத்  தொடங்கின !

*****       ******       ********
அந்தப்பொழுது  ஒரு மாலை !
சூரியன்  மறையும்  பொழுது !
சிப்பிகள்  கிழக்கிலும் !
சூரியன் மேற்கிலும் !
சூரியனைக்  கருவாய்  கொள்ளும்
கனவு  முழுவதுமாய்  கரைய
தொடங்கிய  கணத்தில்
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
நடுவில்  மழை !!!!!!!!!!

*****      ******        ********
மழைத்  துளிகளில்
ஒற்றை  சூரியன்
ஆயிரமாயிரம்  சூரியனானது !
ஒவ்வொரு  மழைத்துளியும்
சூரியன் பிம்பம்மானது !
ஆனந்த  கொண்டாட்டம்
சிப்பிகளுக்கு !!
ஆவல்  தீர ஆயிரமாயிரம்
சிப்பிகள்  சூரியனை
கருவாய்  கொண்டது !!!!!!!!

&&&&&&      &&&&    &&&&
அந்தோ பரிதாபம் !
இந்த  உலகின்  கனவுகளும்
இயற்கையின்  நிஜமும்
வேறு வேறு என
நெற்றிலடித்து
  பூமியும் ,சூரியனும்
தங்களின் அடுத்தச்
சுற்றை  ஆரம்பிக்கத்  தொடங்கியது !!!!

----------------
ஹர்மிஸ்

வளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2016 | , , ,

(உன்னப்பனின் விண்ணப்பம் -2)

ஓரிறைக் கொள்கையின்
அடிப்படை அறியத்தந்தேன்

உயிரெழுத்தின் எழுத்துருவைக்
கைபிடித்துக் கற்றுத்தந்தேன்

விரல்விட்டு எண்ணும் வகை
விளையாட்டாய்ச் சொல்லித்தந்தேன்

கடன்வாங்கிக் கழிக்கும் முறை
கணக்காய்க் காட்டித் தந்தேன்

வாய்பாடு மனனம் செய்ய
வழிவகைகள் வகுத்துத் தந்தேன்

சமன்பாடுகளின் இடம் வலம்
சமன் செய்து புரியவைத்தேன்

வயதுக்கேற்ற வாழ்வியலை
வழிநெடுக விளக்கி வந்தேன்

காட்ஸில்லாக்கள்
கார்ட்டூன் பலசாலிகள்
கற்பனையென புத்தியில் விதைத்தேன்

டைனோஸர்கள், அமானுஷ்யங்கள்
மாயையென விளங்க வைத்தேன்

சந்தேகங்கள் நீ கேட்க
சலிக்காமல் தெளிவித்தேன்

என்னில் எதுவோ
நின்னைக் கவர
என்னைப்போலாகவே
விரும்புவதாகச் சொல்கிறாயாமே!
இதை நிருவத்தான்
குட்டிக் குட்டியாய்
கவிதைகள் சொல்கிறாயா?

நானோ
கிரிக்கெட் போதையில்
கூட்டுத் தொழுகையைத்
தவறவிட்டவன்...
உனக்குப் பிடித்த விளையாட்டைக்கூட
பாதியில் விட்டுவிட்டு
கூட்டுத் தொழுகைக்காக
பள்ளிக்கு ஓடும் பயபக்தியை
உன்னிடம்தான் நான் கற்கிறேன்

வாசனையைவிட
கிருமிநாசினியே நல்லதென்ற
உன் அறிவுரைக்கேற்ப
நீண்டகாலம் உபயோகித்த
குளியல் சவர்க்காரத்தை மாற்றிவிட்டேன்

திரைப்படப் பாடல்களை -நான்
முணுமுணுக்கத் தடை செய்து
திரையிசையை விரும்பாமல்
மறைவசனத்தில் லயிக்கிறாய்

கலையெனும் போர்வையில்
கேலிக்கூத்துகள் வெறுத்து
திருமறை அத்தியாயங்கள்
கற்பதையே விரும்புகிறாய்

வீட்டுப்பாடம் செய்விக்க
பிடித்திழுத்து இருத்துவது
உன்னை நானல்ல
என்னை நீ

மின்சாரத் தன்மைகள்
உன்னறிவில்
செலுத்தியநாள் முதல்...
மின்னோட்டம் துண்டிக்காமல் -உன்
மின்னணுப் பொருட்களை
மின்னேற்ற இடுவதில்லை
மின்னேற்றி எடுப்பதுமில்லை

உன்னிடம் கற்க
உயர்வான பண்புகள்
ஏராளமுண்டு;
உன்னைப் போலாகவே
எனக்கும் ஆசை!

இனி
கற்றலும் கற்பித்தலும்
பரஸ்பரம்
என்றே தொடரட்டும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய்... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2016 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்க்காத்துஹு

இறைத்தூதரின் உத்தரவு...!

இறைத்தூதரின் கூற்று என்பது இறைக்கூற்றல்லவா?

தாம் உயினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதர் இட்ட கட்டளை தான்...

இறைத்தூதருக்காக எதையும் செய்யத் துணியும் இளைஞர்..

அவரது கட்டளைக்காகக் காத்திருப்பவர்களுள் ஒருவர்..

எள் என்றால் எண்ணெயாக உருகி ஓடக்காத்திருப்பவர்...

மூஸா அலை அவர்களுக்கு ஹாரூனைப் போல் நீர் எனக்கு என்றவரின் சொற்கள்..

யாருடைய உத்தரவுக்காகக் காத்திருக்கிறாரோ.. அவருடைய உத்தரவைப் பெறுகிறார்..

“அலீயே.. இறைத்தூதர் என்பதை அழித்து அப்துல்லாஹ்வின் மகன் என்று எழுதுங்கள்” - இறைத்தூதரே கூறுகிறார்..

அவரது கட்டளையை நிறைவேற்றுவது ஈமானின் பாதி.

அவ்வாறு நிறைவேற்றவில்லையெனில் இறைவனின் கோபத்தையே சம்பாதிக்க நேரும்.

உள்ளம் முழுவதும் ஈமான் வியாபித்திருந்தாலும் இப்பொழுது எழுத்தில் நுழைப்பதால் ஈமானுக்குப் பங்கமில்லை தான்.

ஆனாலும் “முடியவே முடியாது” என்று கடுமையாக மறுக்கிறார். இறைத்தூதருக்கு மாறு. ஆனால் இறைவனின் கோபத்தைச் சம்பாதிக்கவில்லை. வேறு யாருடைய கோபத்தையும் சம்பாதிக்கவில்லை. மாறாக, அவர்களது மறுப்பு அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மறுப்பின் மூலம் அவர்கள் நிரூபித்தது, தம் ஈமானை.

வேறு வழியின்றி இறைத்தூதர் தாமே அப்பணியைச் செய்கிறார்கள். சுப்ஹானல்லாஹ்.

சொர்க்கம் என்ற வாக்கைப் பெற்ற அலி ரழி அவர்களின் அந்த நிமிட மறுப்பிலும் முடிவிலும் பல பாடங்கள் நமக்கு இருக்கின்றன. நம் வாழ்வில் பல சமயங்களில் இந்த ஒரு சொல்லைக் கூறுவதால் நம் ஈமானுக்குப் பங்கம் வந்துவிடுமா.. இல்லை என நாமே முடிவு செய்து விடுகிறோம். அலி ரழி அவர்கள் இறைத்தூதர் எனும் சொல்லை அழித்துவிட்டால், அவரை அல்லாஹ் தண்டித்துவிட மாட்டான் என அவர்கள் நினைக்கவில்லை. அல்லாஹ் உள்ளத்தைப் பார்க்கிறான் என அவர்களும் தெரிந்தே வைத்திருந்தார்கள்.  அவர்கள் அழித்து எழுதியே இருந்தாலும் அல்லாஹ் அவர்கள் நோக்கத்தை அவர்களை விட அதிகம் அறிந்தவன். இருந்தும், அவர்கள் அச்செயலைச் செய்ய முன்வரவில்லை. 

ஏன்? நபி ஸல் அவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு... அனைத்தையும் மிஞ்சிவிட்டதே காரணம். இவர் என் ரசூல் என்ற அல்லாஹ்வின் கூற்றில் வைத்திருந்த அசைக்கவே முடியாத நம்பிக்கை. அல்லாஹு அக்பர். ஆனால் நாம்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே... முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என உள்ளச்சத்தோடு கூறியவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.

நாமும் தான் கூறுகிறோம். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே என்று. ஆனால், 

நேற்று கோபத்திற்குத் தலைசாய்த்துத் தீய வார்த்தைகளைக் கூறிவிட்டோமே? மொழிந்துவிட்ட கலிமா என்னாயிற்று? அச்சமயத்தில் இறைவனுக்கா அடிபணிந்தோம்?

நேற்று முன் தினம், தூக்கத்திற்கு ஆட்பட்டு தொழுகையைத் தவற விட்டோமே? மொழிந்துவிட்ட கலிமா என்னாயிற்று? அச்சமயத்தில் இறைவனுக்கா அடிபணிந்தோம்?

மன உளைச்சலுக்குக் கட்டுப்பட்டு சிகரெட்டைப் பற்றவைத்தோமே? மொழிந்து விட்ட கலிமா என்னாயிற்று? இறைவனுக்குக் கட்டுப்பட்டா சிகரெட் பற்றவைத்தீர்கள்?

சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாய் இருப்பது எப்படி ஈமானாகும்? நாம் கூறும் இந்த சொல், நம் ஈமானுக்குப் பங்கம் ஏற்படுத்தாது என முடிவு செய்ய நாம் யார்? அந்த அறிவு நமக்கு எப்படி வந்தது?

அல்லாஹ் நமக்கு வழங்கிய அறிவைக் கொண்டு செய்யும் முன்பும் சொல்லும் முன்பும், யாருக்காக, எதற்காக அடிபணிகிறோம் என்பதை சிந்திப்போம்.

பானு என்றென்றும்...

ஞானப் பயணம் - 03 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2016 | , , , ,

போய் படி என்று சொன்னதும் புகழ்பெற்ற பல்கலைக் கழகமொன்றில் விண்ணப்பித்து, விரும்பிய பாடமொன்றைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது சாத்தியப்படாத காலம் அது. தேட வேண்டும். ஆங்காங்கே பரவியிருந்த தாபியீன்கள், அறிஞர்கள் ஆகியோரை

முதலில் இனங்காண வேண்டும். அப்படியானவர்கள் வாயிலாகத்தான் கல்வியில் ஞானம் பெற முடியும்.  அடிப்படையிலிருந்து தொடங்கி தெளிவான கல்வியைக் கற்க முடியும்.  கல்வி, ஞானம் என்ற பெயரில் மற்றவர்களிடம் நிறைந்திருந்தவை வாதங்களும் மெய்ஞானத்திற்கு எதிரான முரண்களும்தான் என்பதை உணர்ந்தார் அபூஹனீஃபா (ரஹ்).

அக்கால கட்டத்தில் கல்வியில் மூழ்கியிருந்தவர்கள் மூன்று முக்கியப் பிரிவுகளில் தனித்தனிக் குழுக்களாக கவனம் செலுத்தி வந்தனர். ஒரு குழு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விவாதித்து வந்தது. இரண்டாவது குழு முஹம்மது நபிமொழிகளை மனனம் செய்வதும் கற்பதுமாக இருந்தது. மூன்றாவது, குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் வழிமுறையான சுன்னாஹ்விலிருந்தும் ஃபிக்ஹு எனப்படும் மார்க்கச் சட்டங்களைப் பெற்று, நிகழ்வுகளுக்கேற்ப மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தது.

மார்க்கக் கல்வி பயில வேண்டும் என்று மட்டும் அபூஹனீஃபாவின் மனத்தில் முடிவு ஏற்பட்டுவிட்டதே தவிர, அதில் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது, எது சிறப்பானது என்பதில் தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. ஞானப் பாதையை நோக்கிய அவரது பயணத்தை பிற்காலத்தில் அவரே தெரிவித்திருக்கிறார். அவரது மனஓட்டத்தையும் அனுபவத்தையும் அது நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

தம்மைச் சுற்றியும் பார்த்தார். ‘கலாம்’தான் சிறப்பு என்று அவருக்குத் தோன்றியது. அதில் மூழ்கத் தொடங்கினார். இதரக் குழுக்களுடன் வாக்குவாதம் புரிவது, மல்லுக்கட்டி நிற்பது போன்றவையே அதில் முக்கியப் பணியாக இருந்தது. இதற்காகவே பலமுறை பஸ்ரா நகருக்குச் சென்று தங்கியிருந்து, அங்கிருந்த காரிஜீக்கள், இபாதீக்கள் போன்றோருடன் பெரும் வாக்குவாதம் புரிந்தார். பிறகுதான் ஒருகட்டத்தில் இது சரியே இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.

குர்ஆன் இறைவனால் உருவாக்கப்பட்டது என்று கருதிக்கொண்டு  வாக்குவாதத்திலும் விவாதப் போரிலும் ஈடுபட்டிருந்த கலாம் கொள்கையாளர்களை ஊன்றிக் கவனித்தார்.

‘நமக்கு முன் வாழ்ந்து மறைந்த மேன்மையாளர்கள், இறை நம்பிக்கையாளர்களின் வழிமுறை இதுவாக இருந்ததில்லையே. வாக்குவாதம் புரியும் இவர்களின் இதயம் இறுகிப்போய், தோல் தடிமனாகி விடுகிறது. விவாதம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அருள்மறையுடனும் நபியவர்களின் சுன்னாஹ்வுடனம் ஸலஃபுகளின் வழிமுறையுடனும் தாங்கள் மோத நேரிடுவதைக் குறித்து இவர்கள் வருந்துவதில்லை. இவர்களிடம் மதி நுட்பமும் இல்லை; இறையச்சமும் இல்லை.’

‘நபியவர்களின் தோழர்களும் சரி, தாபியீன்களும் சரி, மெய் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் அவர்கள் எவ்வளவு மேம்பட்டவர்கள்! அவர்களெல்லாம் வாக்குவாதங்களிலா திளைத்திருந்தார்கள்? இல்லையே! இன்னும் சொல்லப்போனால் அவற்றைத் தவிர்த்துக்கொண்டார்கள்; தடுத்து எச்சரித்திருக்கிறார்கள். அவர்கள் கற்றதும் கற்பித்ததும் வேறு எனும்போது நான் மட்டும் ஏன் இதில் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறேன்?’ என்றவாரெல்லாம் அவரது சிந்தனை ஓடியது. முடிவு? அந்தத் துறையிலிருந்து கழன்று வெளியே வந்தார் அபூஹனீஃபா (ரஹ்).

இலக்கியம், இலக்கணம் சார்ந்த துறை சிறப்பானதாக இருக்கும் போலிருக்கிறதே என்று அடுத்து அதில் அவரது கவனம் குவிந்தது. அதுவும் நெடு நாள் நீடிக்கவில்லை. சில காலம்தான். ‘இத் துறையில் அடையும் முதிர்ச்சி எதில் போய் முடியும்? சுற்றிலும் பிள்ளைகளை அமர வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பாடம் நடத்தலாம். அதைத் தாண்டி என்ன நடந்துவிடப் போகிறது?’ என்று யோசித்தார். ம்ஹும்! நமக்கு இது சரிப்படாது என்று அதிலிருந்தும் வெளியே வந்துவிட்டார்.

அடுத்து அவரது மனம் கவிதையை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. அத் துறையில் புகுந்து ஆராய்ந்து பார்த்தால் புகழுரையும் வசைப்பாடலும் பொய்களுமாகக் கலந்து கட்டி அவை மார்க்கத்தையே கிழித்துக் கொண்டிருந்தன.

குர்ஆனை அழகிய குரலில் ஓதும் காரியாகவே இருந்து விடுவோம் என்றால் அதிலும் அவரது மனம் திருப்தியுற மறுத்தது. நபியவர்களின் ஹதீஸ்களைச் சேகரிப்போம் என்றால் அதைக் கற்று, சேகரித்து அக்கலையில் மக்களுக்குப் பயன்படுபவராக மாறுவதற்கு நமது ஆயுளே போதாது போலிருக்கிறதே என்று தோன்றிவிட்டது.

இறுதியாக, மார்க்கச் சட்டத்தை நோக்கி அவரது மனம் நகர்ந்து, அதன் நுணுக்கங்களை அறியத் தொடங்கியபோதுதான் அவருக்குப் பளிச்செனத் தோன்றியது. ‘இது! இதுதான் எனக்குச் சரி!’

அலை கடலில் அங்கும் இங்கும் தத்தளிக்கும் கலம் தகுந்த கரையை அடைந்ததும் நிதானமடைவதைப் போல் மார்க்கச் சட்டக் கலையைக் கண்டதும் அவரது மனம் அதில் நங்கூரம் இட்டது.

அறிவுத் தாகம் மிகுந்த மக்கள் மார்க்கச் சட்டங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கவனித்தார் அபூஹனீஃபா. அறிஞர்களுடனும் மார்க்க வல்லுநர்களுடனும் தேர்ந்த ஆசிரியர்களுடனும் அமர, அவர்களிடம் கற்க, தம்மைத் தாமே சீராக்கிக்கொள்ள அதுவே உதவும்; அதை அறிவதன் மூலமே மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியும்; இறை வழிபாடுகளைச் சரியான முறையில் நிலைநிறுத்த முடியும் என்று அவருக்கு உறுதியானது. மார்க்கச் சட்டங்களின்படி அமைந்த இறை வழிபாடே மறுமைக்குச் சிறந்த வழி என்று புரிந்தது.

அவரது இந்தக் கருத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது ஒரு நிகழ்வு. ஹம்மாத் பின் அபீசுலைமான் என்றொரு மார்க்க அறிஞர். அவர் தம்முடைய மாணவர்களுடன் அமர்ந்திருந்தார். அவரது குழுவுக்கு அருகில் மற்றொரு குழுவுடன் அமர்ந்திருந்தார் அபூஹனீஃபா. அப்பொழுது ஒரு பெண்மணி அபூஹனீஃபா அமர்ந்திருந்த குழுவிடம் வந்து, மணவிலக்குத் தொடர்பான ஒரு பிரச்சினைக்கு மார்க்க விளக்கம் கேட்டார். அபூஹனீஃபா அந்தப் பெண்மணியிடம், “ஹம்மாத் அங்கு அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று கேளுங்கள். அவர் என்ன பதில் சொல்கிறார் என்று எனக்கும் தெரிவியுங்கள்” எனக்கூறி அனுப்பிவைத்தார்.

அப்பெண்மணி ஹம்மாத்  பின் அபீசுலைமானிடம் சென்றார்; விளக்கம் கேட்டார். ஹம்மாத் அதற்குப் பதில் அளிக்க, தெளிவு பெற்றார். வந்து அபூஹனீஃபாவிடம்  ஹம்மாத் உரைத்த விளக்கத்தைத் தெரிவித்துவிட்டுப் போய்விட்டார்.

அவ்வளவுதான். எழுந்தார் அபூஹனீஃபா. தமது காலணியை அணிந்துகொண்டார். ஹம்மாத் பின் அபீசுலைமானின் குழுவில் சென்று ஐக்கியமானார். தொடங்கியது ஃபிக்கை நோக்கி அபூஹனீஃபாவின் (ரஹ்) அவர்களின் பயணம்.

எடுத்த பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுக்க மூழ்குவது அபூஹனீஃபாவின் இயல்பு. வாக்குவாதம் புரிவதில் எப்படி கச்சைக் கட்டிக்கொண்டு இயங்கினாரோ அதைப்போல் மார்க்கச் சட்டக் கலையில் அவரது கவனம் முழுக்க வேரூன்றியது. கூஃபா நகரம் மார்க்க அறிஞர்களின் வாசஸ்தலமாக இருந்த காலம் அது. மார்க்கச் சட்டத் துறையில் புழங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் அங்கு நிறைந்திருந்ததால் அவர்களுடன் அமர்வதும் பயில்வதும் உரையாடுவதும் அவருக்கு எளிதாகிப் போனது.

இது தவிர மற்றொன்றும் வாய்த்தது. அதிகமதிகம் ஹஜ் பயணம் மேற்கொண்டவர் அபூஹனீஃபா. அச்சமயங்களில் மக்காவிலும் மதீனாவிலும் தாம் சந்திக்கும் மார்க்க அறிஞர்களிடமும் தாபியீன்களிடமும் ஹதீஸ்களைக் கற்பதும் மார்க்கச் சட்டங்களை விவாதிப்பதும் அவர்களுடைய கல்வி முறையைப் பயில்வதுமாக அந்தப் பயணங்களையும் தம்முடைய ஞானத் தேடலுக்கான வாய்ப்பாக ஆக்கிக் கொண்டார்.

கூஃபா நகரிலும் மக்கா, மதீனாவிலும் மார்க்கச் சட்டப் பாடவகை பலவாறாகக் குவிந்திருந்தது. அவற்றுள் முக்கிய நான்கு வகையான மார்க்கச் சட்டக் கலையைத் தெளிவாக அறிந்துகொள்வது அபூஹனீஃபாவின் இலக்காயிற்று. முதலாவது உமர் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். இதை இப்னு உமரின் சேவகராக இருந்த நாஃபீ என்பவரிடமிருந்து பயின்றிருக்கிறார். இரண்டாவது அலீ (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். மூன்றாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். நான்காவது இப்னு அப்பாஸ் அவர்களின் குர்ஆன் ஞானம். இதை அதா பின் அபீரபீஆ என்பவரிடம் மக்காவில் பயின்றிருக்கிறார்.

அதற்குச் சான்றாக அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். “உமர் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அலீ (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம் ஆகியவற்றை அவர்களுடைய தோழர்களிடமிருந்து நான் கற்றுள்ளேன்.”

இவை தவிர, நபியவர்களின் வழித்தோன்றல்களில் ஸைது இப்னு அலீ, முஹம்மது அல்-பாகிர், அப்துல்லாஹ் இப்னுல் ஹஸன் ஆகியோரிடமும் பயின்றிருக்கிறார். ஸைது இப்னு அலீயின் விரிவான ஞானத்தைப் புகழ்ந்து, “நான் ஸைது இப்னு அலீயையும் அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறேன். அவரது காலத்தைச் சேர்ந்த அறிஞர்களில் ஸைது இப்னு அலீயைவிட மேன்மையானவரை நான் கண்டதில்லை. ஐயங்களுக்கான பதில்களை அவரைப் போல் யாரும் உடனடியாக அறிந்திருந்ததில்லை. அவரைப் போல் வேறெவரும் தெளிவான விளக்கம் அளித்ததில்லை. அவருக்கு இணையானவர் இருந்ததில்லை” என்று கூறிருக்கிறார்.

இப்படியாகப் பல அறிஞர்களிடம் பயின்றாலும் அவருக்கு முதன்மையான ஆசிரியராக ஹம்மாத் இப்னு அபீஸுலைமான் இருந்தார். கற்றார், பயன்றார் என்றதும் மூன்று ஆண்டுகள் இளங்கலைப் பட்டம், அடுத்து இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் என்பது போலன்றி அபூஹனீஃபா அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதி கல்வியிலேயே கழிந்தது. பதினெட்டு ஆண்டுகள் ஹம்மாதிடம் நெருக்கமாக இணைந்திருந்து கற்றிருக்கிறார்.

(தொடரும்)

நூருத்தீன்
 Darul Islam Family

ஹலோ...ஹலோ... நலமா.!? 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2016 | ,


நாம் தினம் தினம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை முதல் விசாரிப்பாக எப்படி இருக்கீங்க நலமா.? என கேட்டறிகிறோம். பதிலுக்கு நாம் விசாரிக்கும் நபர் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்றோ அல்லது இரண்டு நாளா ஜுரம்ங்க தலைவலி உடம்புக்கு சரியில்லை அதான் வெளியே வரலே என்று உடல் உபாதையை சொல்லி அழுத்துக் கொள்வதும் உண்டு

ஆக நாம் எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் உடல் நலம் சிறிதளவில் சரியில்லையெனில் மனது மகிழ்வுடன் நிம்மதியுடன் இருப்பதில்லை.அப்படியானால் நாம் இவ்வுலக வாழ்க்கையை இனிமையாய் கழிக்க உடல் நலம் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது..அப்படிப்பட்ட உடல் நலத்தை பேணிப்பாதுகாப்பது நமது தலையாய கடமையாக இருக்கிறது.

மனிதனது வாழ்வு இயந்திர வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் உடல்நலத்தில் யாரும் அதிக கவனம் செலுத்துவதில்லை.மீண்டும் காலமாற்றத்தில் நவீனக் கண்டுபிடிப்புக்களுக்கு அடிமையானதுடன் அதனை அத்தியாவசயமாக நாம் ஆக்கிக் கொண்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சிலர் மன அழுத்தத்தை குறைப்பதற்காக உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கக் கூடிய சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி போவதால் உடல் நலம் கெட்டுப்போவதும் சுத்தம் சுகாதாரமின்மையின் காரணத்தால் உடல் நலத்தில் கேடு உண்டாவது ஒரு காரணமாக இருந்தாலும் பொதுவாக பார்ப்போமேயானால் இன்றைய சூழ்நிலையில் நாம் அதிக டென்ஷன் மன உளைச்சல் மன அழுத்தத்தில் தான் நாம் வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருக்கிறோம். உணவு வகைகளையும் உட்கொள்ளும் நேரத்தையும் கூட மாற்றியமைத்துக் கொண்டுவிட்டோம். அதுமட்டுமல்லாது உணவு உட்கொள்ளும் நேரத்தில் கூட நாம் நிம்மதி யுடன் இருந்து உணவை உட்கொள்வதில்லை.இதன் காரணமாகத்தான் பெருநோய்கள் சர்வசாதாரணமாக நம்மை தொற்றிக் கொள்கின்றன. 

அடுத்து சொல்லப் போனால் உடல் உழைப்பு குறைந்து எல்லாம் இயந்திரமயமாகி மனிதனது உடல் சுறுசுறுப்பை இழந்து சோர்வை சந்திக்க துவங்கிவிட்டன. பண்டைய வாழ்க்கை முறையில் வாழ்ந்த மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பலசாலியாக இருந்தார்கள். காரணம் எல்லாம் இயற்கையோடு ஒன்றி சேர்ந்திருந்தது ஆனால் இன்றைய மனிதர்கள் இயற்கையை விடுத்து செயற்க்கையின்பால் மோகம் கொண்டதால் உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் பலமிழந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்க்கெல்லாம் காரணம் நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் உழைப்பு , வாழ்க்கைமுறை, நவீனத்துடன் இணைந்து செயல்படும் சூழ்நிலை எல்லாவற்றிலும் இயற்க்கைக்கு மாறான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டதால் உடல் நலத்தை நமக்கு நாமே பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டோம் என்றுதான் சொல்லமுடியும். உடல் சுகம்பெற்று வாழ வழிவகுத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.உடலுக்குத் தேவையானதை கொடுத்து உடல்மீது அக்கறைகொண்டு கவனம் செலுத்தினால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் எந்தநோய் வந்து தொற்றிக்கொள்ளுமோ என்கிற சிந்தனையில் வாழ்க்கையை கழிக்கவேண்டியதாக உள்ளது.எனவே விதியை மதிகொண்டு வெல்லமுடியும் என்று சொல்வதுபோல உடலுக்கு உகந்த உணவு, உடற்பயிற்சி, நிம்மதியான போதுமான தூக்கம்,எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அமைதியான பேச்சு,கவலையை சுமையாக்காமல் தன்னம்பிக்கையுடன் கூடிய சிந்தனை இப்படி நாம் அனைத்திலும் உடலுக்குத் தேவையானதை கொடுத்து பேணிக்காத்து மதியை பயன்படுத்தி விதியை வெல்ல முயற்ச்சிப்போம்.ஹலோ...ஹலோ...நலமா..என்று விசாரிப்பவர்களுக்கு இன்முகத்துடன் நலம் என்று சொல்லி மகிழ்வோடு வாழ வழிவகுத்துக் கொள்வோமாக...!!!

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 15 10

அதிரைநிருபர் பதிப்பகம் | February 20, 2016 | ,


இஸ்லாத்தை விமர்சிக்கும் சகோதரர்கள் முன்னிலைப் படுத்தும் ஒரு முக்கியமான தவறான புரிந்துணர்வைப் பற்றியும் , அந்தத் தவறான புரிந்துணர்வை நீக்கும் வண்ணம் அழைப்புப்பணியாளர்கள் எடுத்துரைக்க வேண்டியவற்றையும் விளக்கமாக சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 

இஸ்லாம் அனுமதித்த நான்கு மனைவிகள் என்கிற எல்லைக்கோட்டை மீறி பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டும் பல மனைவிகளை மணந்தார்களே! இது அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடானது அல்லவா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களிலும் பல இணைய தளங்களிலும் எழுப்பப்படுகின்றன. இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுக்கும் அனைத்து அழைப்பாளர்களுக்குமே பொறுமையாக இந்தக் கேள்விக்கு விடையும் விளக்கமும் தரவேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. அதையும்விட மேலாக, ஒரு அழைப்பாளன் தானே இந்த வினாவுக்கு விடைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் தேவையும்  இருக்கிறது. 

இஸ்லாமிய மார்க்கம் வகுத்திருக்கும் நான்கு மனைவிகள் என்கிற எல்லைக் கோட்டை அந்த மார்க்கத்தின் இறுதி நபி என்று போற்றப்படும் பெருமானார் முகம்மது (ஸல்) அவர்கள் , இவ்வாறு மீறக்காரணம் மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்ற எண்ணமும் நபி (ஸல்) அவர்களது சொந்த உடல் இச்சையும்தான் காரணம் என்கிற வாதத்தை நிலைநாட்ட குறிப்பாக  “sexually obsessed man” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி , சில கிருத்தவ, யூத, இந்து இணைய தளங்களில் இதயமின்றி எழுதுகிறார்கள். 

இஸ்லாத்தை எதிர்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் பல ராஜாதிராஜர்களும் டால்பின்களும் இதைப்பற்றி கொச்சையாக மேடைகளிலும் தொலைக் காட்சி விவாதங்களிலும்கூடப் பேசுகிறார்கள். அத்தகைய புரிந்துகொள்ளாத நண்பர்களுக்காக அவர்களை சபிப்பதைவிட , அவர்களது கேள்விகளை கோபத்துடன் நோக்குவதைவிட அவர்களுக்கு விளங்கும் வகையில் அன்பான முறையில் விளக்கம் கொடுக்க வேண்டியது நமது கடமை.     

தொடக்கமாக, திருமறையின் அல் – அஹ்சாப் அத்தியாயத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. “உண்மையிலேயே, உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகிறவராகவும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராகவும் இருக்கிற ஒவ்வொருவர்க்கும் அல்லாஹ்வின்   தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி இருந்தது “ ( 33: 21). என்ற இறைவசனத்தையும், 

அல்-கலம் அத்தியாயத்தில்...

“நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர். என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கின்றது . மேலும் நிச்சயமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர் ! “ ( 68:4)

என்ற இறைவசனத்தையும் நாம் எடுத்துக்காட்டவேண்டும். இவைகள் மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற இறைவசனங்கள், இறைவனின் இறுதித்தூதர் பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்களை தூய்மையானவராகவும் அவர்களது நல்ல நடத்தைகள் மற்றும் நல்ல குணங்களுக்கு சான்றுகளாகவும்  திருமறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

மேலும் தன்னைபற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். “மனித குலத்தின் முதல் நபி ஆதம் ( அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாளில் இருந்து உலகின் அனைத்து சமுதாயங்களுக்கும் அனுப்பப்பட்ட நபிமார்களில் நானே சிறந்த சமுதாயத்துக்கு அனுப்பட்ட நபியாவேன் “ என்ற நபிமொழி, புஹாரி யில்  7/757 ஆக பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. 

முதலாவதாக அழகிய முன்மாதிரி என்பதன் அடிப்படையில் சில விவாதங்களை வைக்க வேண்டி இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் நான்குக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொண்டது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். ஆனால் அவற்றை ஏன் செய்தார்கள் என்றால் ஒவ்வொரு திருமணமும் தனது சமுதாயத்தினரால் பின்பற்றப்படவேண்டிய ஒவ்வொரு மாறுபட்ட முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதாலும் சமூக பொருளாதாரக் காரணங்களுக்காக அவற்றை தனது சமுதாயத்தினர் பின்பற்றிட வேண்டும் என்பதாலும்தான் என்கிற கருத்தை நாம் முன் வைப்போம். 
  • விதவைகளை திருமணம் செய்வது , 
  • தன்னிலும் வயதில் மூத்த பெண்களை தயக்கமின்றி திருமணம் செய்வது, 
  • தன்னிலும் வயதில் இளைய பெண்ணை திருமணம் செய்வது ,
  • ஒரு அநாதை கூட செல்வம் படைத்த பெண்ணை நற்குணத்தை வேண்டி மணமுடித்துக் கொள்வது, 
  • அனாதையான பெண்களை திருமணம் செய்து, அவர்களின் குழந்தைகளையும் அரவணைப்பது, 
  • சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் பந்தம் ஏற்படுத்த திருமணம் செய்வது,
  • சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை திருமணம் செய்வது,
  • வேதம் வழங்கப்பட்ட கிருத்தவ, யூத இனங்களில் இருந்தும் இஸ்லாத்தை ஏற்கச் செய்து ஆண்கள் திருமணம் செய்வது, 
  • நண்பர்களின் மகள்களை நட்பை நிலைநிறுத்த திருமணம் செய்வது, 
  • அடிமைகளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து திருமணம் செய்வது, 
  • போரில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவித்து திருமணம் செய்வது , 
  • எதிரிகளின் மகளை திருமணம் செய்வது , 
  • இஸ்லாமிய சட்டத்தை நிலை நிறுத்த உதாரணமாக திருமணம் செய்வது.

என்பவை போன்ற பலவகை திருமண முறைகளை தனது சமுதாயத்தினர் தனது வாழ்விலிருந்து பின்பற்ற ஓர் அழகிய முன்மாதிரியாக பல பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் பெருமானார் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவையாவும் இறைவனின் அனுமதியுடனே நடத்தப்பட்டன.  

மேலே நாம் பட்டியல் இட்டுள்ள எல்லா திருமண முறைகளுமே சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தகுதி படைத்தவை. அந்தப்பட்டியலில் உள்ள அனைத்து முறைகளிலும் பெருமானார் (ஸல்) அவர்கள் தாங்களே திருமணம் செய்து அழகிய முன்மாதிரியாக , வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை  நமது முதல் வாதமாக அல்ல விளக்கமாக வைப்போம். 

அடுத்ததாக , உடல் இச்சைக்காக பெண்ணாசை கொண்டு பல திருமணங்களை முடித்தார்கள் என்கிற அவதூறான அபாண்டமான வாதத்தை வைப்பவர்கள் வரலாற்றின் பக்கங்களை உண்மைக் கண்கள் கொண்டு சற்றுப் புரட்டிப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வோம். 

ஒரு மனிதர் , உடல் இச்சை அல்லது பெண்ணாசை கொள்வது அவரது வாழ்வில் எந்த வயதுகளின் காலக் கட்டத்தில் இருக்கலாம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஒரு உணர்வு ஒரு மனிதருடைய 25 ஆவது வயதில் ஏற்படுமா? அல்லது அவரது 50- ஆவது வயதில் ஏற்படுமா? செல்வச் செழிப்பாக வாழும் கால்த்தில் ஏற்படுமா? பசியின் காரணமாக வயிற்றில் இரண்டு கல்லைக் கட்டிக் கொண்டு இருந்த காலத்தில் ஏற்படுமா? 

பெருமானார் (ஸல்) அவர்களுடைய முதல் திருமணம் அவர்களுடைய 25 –ஆம் வயதில் , 40 வயதுடைய ஏற்கனவே இருமுறை திருமணம் ஆகி விதவையான அன்னை கதிஜா (ரலி) அவர்களுடன் நிகழ்ந்தது. நபித்துவம் அருளப்படாத காலத்தில் ஒரு அனாதையாக வாழ்ந்துகொண்டிருந்த அல் - அமீன் – நம்பிக்கையாளர்- என்று சமுதாயத்தினரால் பெருமைப்படுத்தப்பட்ட பெருமானார் (ஸல்) அவர்கள், ஒரு செல்வ சீமாட்டியான, பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருந்த வணிகப் பெண்மணியான  அன்னை கதிஜா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். 

அன்னை கதிஜா (ரலி) அவர்களுடன் 25 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு , குழந்தைச் செல்வங்களை ஈன்றுவிட்டு ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்துவிட்டு அன்னை கதிஜா (ரலி) அவர்கள் இவ்வுலகைவிட்டு நீங்கிய பின்னர்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டாவதாக அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மணந்தார்கள். 

அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் பெருமானாரைவிட , மூத்தவர்கள் என்பதுமட்டுமல்ல அவர்களும் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரா செய்த தனது முதல் கணவரை இழந்த விதவையாவார். அதுமட்டுமல்ல அன்னை ஸவ்தா (ரலி) அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும் இருந்தன. ஆகவே அனாதைகளாக விடப்பட்ட அன்னை ஸவ்தா (ரலி)அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் ஆதரிக்கவும் அன்னையை இழந்த தங்களது குழந்தைகளை பராமரிக்கவுமே ஸவ்தா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் மணக்க நேரிட்டது. 

பெருமானார் (ஸல்) அவர்கள் , பெண்ணாசை கொண்ட ஒரு மனிதராக இருந்து இருந்தால், தன்னை விட 15 வயது மூத்தவராக இருந்த முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே தன்னிடம் இருந்த செல்வத்தின் செருக்கில் பல பெண்களை இளமையான வயதிலேயே மணம் முடித்து தனது இளமையின் உடல் தேவையை அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்க இயன்றிருக்கும். சட்டமோ சம்பிரதாயமோ ஏன் முதல் மனைவியோ கூட அந்தச் செயலைத் தடுத்து இருக்க இயலாது. 25 வயதில் எழாத இளமை உணர்வு, உடலாசை, பெண்ணாசை போன்ற குணங்கள் ஒரு மனிதரின் 50 வயதுக்குப் பிறகு எழுந்து இருக்குமா? இந்தக் கேள்வியை எழுப்புவோர் இதை சிந்திக்க வேண்டாமா?  

அதேபோல்,  முதல் மனைவி இறந்ததுமே இறைவனின் தூதர் என்கிற அந்தஸ்தில் இருந்த பெருமானார் (ஸல்) அவர்கள், அடுத்ததாக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இளம்பெண்களைத் தேடி இலகுவாக மணம் முடித்து தனது இளமையில் கிட்டாத சுகத்தை அனுபவித்து இருக்க இயலும். மீண்டும் ஸவ்தா (ரலி) அவர்கள் போன்ற தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணை அவரது முதல் கணவனுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளின் பொறுப்பையும் சேர்த்து ஏற்றுகொண்டு மணம் முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உண்மை வரலாறை வல்ல இறைவனின் தூதரின் மீது பொய்வழக்குத் தொடுப்போர் சிந்திக்க வேண்டாமா? 

இதே போலத்தான் பெருமானார் (ஸல்) அவர்களின் இதர திருமணங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியிலும் இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைக்கின்ற அல்லாஹ் அவர்களுக்குத் தந்திருந்த அரும்பணியின் நோக்கமும் சமூக அக்கறையுமே  முதலிடம் வகித்தன. 

ஆண்கள் , பெண்களை அணுகி அமர அனுமதி இல்லாத இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறையில் இஸ்லாத்தின் அரிய பண்புகளை தலையில் தாங்கி நின்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிகளே அந்தப் பணிகளைச் செய்தார்கள். இவ்வாறு பெண்களை அணுக, அறிவுபுகட்ட தனது மனைவிமார்களை சிறந்த பண்புள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும், படித்தவர்களாகவும், இறையச்சம் உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டார்கள். 

பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்துகொண்ட மனைவிகள், சமுதாயத்தில் இருந்த பெண்களுக்கு ஒழுக்கப் பயிற்சியின் உதாரணமாகத் திகழ்ந்து காட்டினார்கள். இஸ்லாமியப் பயிற்சி தரும் ஆசிரியைகளாக அவர்கள் வாழ்ந்துகாட்டினார்கள். எண்ணற்ற நபிமொழிகள் அவர்களால் நவிலப்பட்டன.  “நம்பிக்கையாளர்களின் தாய்மார்கள்” என்று குறிப்பிடப்படும் பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மற்ற பெண்களுக்கு உதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள் என்பதை வரலாறு சொல்கிறது. 

வறுமையிலும், நெருக்கடியிலும், வாழ்க்கை வசதிகள் வற்றிய நிலையிலும் முகம் சுளித்ததோ, மனம் வருந்தியதோ, முறையீடு செய்ததோ இல்லை. அன்னையர்கள் அனைவரும் பெண்கள் பொறுமையின் சின்னம் என்ற இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

ஆகவே பெருமானார் (ஸல்) அவர்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டது, இறைவழியை எல்லாத்தரப்புக்கும்  எடுத்துச் செல்லத்தானே தவிர, ஐரோப்பிய ஊடகங்கங்களும் அவர்களது குழல் ஊதிகளாகசெயல்படுகிற உள்ளூர் முகவர்களும் கூறுவதுபோல் உடல் இச்சை அல்லது பெண்ணாசை கொண்டு அல்ல. 

பெருமானார் (ஸல்) அவர்களின் இதர திருமணங்களையும் ஒவ்வொரு திருமணத்துக்குப் பின்னும் இருக்கிற நியாயமான காரணங்களையும் நாமும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சான்றுகளுடன் வரிசைப்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி
=========================================================================
இந்த அத்தியாயத்தை எழுத பார்வைக்கு எடுத்துக் கொண்ட நூல்கள் :
1. அர் ரஹீக் அல் மக்தூம் 
2. நபிகளாரின் துணைவியர் – மவ்லவி முஹம்மது யூசுப் 

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 19, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பக்கத்து வீட்டாரின் உரிமைகளும், அவர்களின் நலன் நாடுதலும்

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: அன்னிஸா 4:36)

'(பக்கத்து வீட்டார்) எனக்கு வாரிசாக ஆக்கப்பட்டு விடுவாரோ என, நான் எண்ணும் அளவுக்கு பக்கத்து வீட்டார் பற்றி (அவர்களுக்கு நல்லது செய்ய) எனக்கு ஜிப்ரீல்(அலை) உபதேசம் செய்து கொண்டே இருந்தார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இருவரும்  அறிவிக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 303)

''அபூதர் அவர்களே! நீர் குழம்பை (சால்னாவை) தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகப்படுத்துவீராக! அதனைக் கொண்டு உன் பக்கத்து வீட்டாரை கவனித்துக் கொள்வீராக என்று நபி (ஸல்) கூறினார்கள்.

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு) உள்ளது:

நீ குழம்பை தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகமாக்கி, பின்பு உன் பக்கத்து வீட்டாரை கவனித்து, அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பீராக என்று என் நேசர் நபி(ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 304)

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் மூஃமின் அல்ல என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! எவர்? என்று கேட்கப்பட்டது. எவனது தீங்கைக் கண்டு பக்கத்து வீட்டார் பயப்படுகிறார்களோ அவன்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 305)

'முஸ்லிம் பெண்களே! ஒரு பக்கத்து வீட்டுப் பெண், மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம். ஒரு ஆட்டின் கால்குளம்பாயினும் சரியே! (அதையேனும் வழங்கலாம்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 306)

''ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா(ரலி) கூறுகிறார்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 307)

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். மேலும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிய ஒருவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 308)

'அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளட்டும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஷுரைஹ் குஸாஈ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)        (ரியாளுஸ்ஸாலிஹீன்: 309)

''நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு பக்கத்து வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது?'' என்று கேட்டேன். ''அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)  அவர்கள் (புகாரி)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 310)

''தன் தோழரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் தோழமைக் குரியவர்களில் சிறந்தவர் ஆவார். தன் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு(ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 311)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
 அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு