நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வதந்தியைப் பரப்பாதீர் !!! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, பிப்ரவரி 07, 2016 | ,

மனிதனின் செயல்பாடுகளிலேயே மோசமான ஒரு செயல்பாடு என்றால் அது வதந்திகளைப் பரப்புவதாகத்தான் இருக்க முடியும். அதனால் தான் வதந்தியைப் பரப்புவோர் நாட்டின் எதிரிகள் என்றும் வதந்தியைப் பரப்பாதீர் என்றும் பல அறிவிப்புக்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

வதந்தி என்பது நிகழாத ஒன்றை நிகழ்ந்ததாகவும் நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாகவும் சொல்லி அச்செய்தியை பரப்பி நம்ப வைக்கும் கீழ்த்தரமான ஒரு செயலாகும். இன்னும் சிலர் சாதரணமான ஒரு செய்தியை பன்மடங்காக்கி அந்த ஒன்றுமில்லாத செய்திக்கு உயிர் கொடுத்து பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள்.. இப்படி உண்மைத்தடத்திலிருந்து விலகிப் பேசப்படும் அனைத்திற்கும் பெயர் வதந்தியே.!

வதந்தி இன்னும் பலரூபத்தில் பேசப்படுகிறது. நடந்த ஒரு சம்பவத்தை அதைச் சார்ந்தது போலவே வேறு ரீதியில் மாற்றிப் பேசுவது ஒருரகம். ஒன்றுமில்லாத சிறு சம்பவத்தை மிகைப்படுத்தி பேசி பெரிதாக்கி பெரிய பிரச்னையை உண்டுபண்ணி விடுவது ஒருரகம்.. ஒரு சம்பவம் நிகழும்போது அதைச் சரிவரத் தெரிந்துகொள்ளாமல் மிகைப்படுத்திப் பேசுவதும் ஒருரகம். இப்படிப்பேசப்படும்அனைத்தும் வதந்தியையேயாகும்.

இப்படிப் பேசப்படும் வதந்திகளினால் நாட்டுமக்களுக்கிடையே,நல்ல நட்புக்களுக்கிடையே,குடும்ப உறவுகளுக்கிடையே எவ்வளவோ பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் ஏற்ப்படுத்தி விடுகிறது.சிலநேரங்களில் பேசப்படும் வதந்தி வார்த்தைகளால் சிலரின் வாழ்க்கைகூட கேள்விக் குறியாக மாறிவிடுகிறது.இன்னும் சொல்லப்போனால் நல்ல ஆட்சி அரசாங்கத்தைக் கூட இந்த வதந்தி களங்கப்படுத்தி ஆட்டம்காண வைத்துவிடுகிறது..அவ்வளவு சக்திமிக்கதாக உள்ளது இந்த வதந்தி என்கிற வார்த்தை.!.

சிறு வதந்திச்சொல் கூட சிலசமயம் காட்டுத்தீபோல் பரவி மிகப்பெரிய கலவரத்தை உண்டுபண்ணி விடுகிறது. நாட்டின் அமைதியையும் மக்களின் மனநிலையையும் இவ்வதந்தி பாழ்படுத்தி விடுகிறது.சிலர் பின் விளைவுகளை சிந்திக்காமல் விளையாட்டாக பேசிடும் வதந்தி கூட வினையாகிப்போய் பெரும் பிரச்னையை ஏற்ப்படுத்தி விடுகிறது.இன்றைய சூழ்நிலையில் இவ்வுலகில் பல பகுதிகளில் இனக்கலவரமும் உள்நாட்டுக் குழப்பங்களும் பல புரட்சிகளும் நடக்க வதந்தியும் ஒரு காரணமாக இருக்கிறது.

வதந்தி சாதாரணமாக மக்களிடையே பேசப்பட்டு வந்தாலும் அதைவிட மக்கள் மிகவும் நம்பியிருக்கும் ஊடகங்கள், மீடியாக்களால் கூட சிலசமயம் மிகைப்படுத்தி அறியத்தரும் வதந்திகளினால் பெரும் சர்ச்சை ஏற்ப்பட்டு விடுகிறது. ஒரு விஷயத்தையோ ஒரு சம்பவத்தையோ நாம் கேள்விப்பட்டோமேயானால் அதை தீர விசாரிக்க வேண்டும்.தனி ஒரு நபர் சொன்ன வார்த்தையை வைத்தோ, எங்கோ கேள்விப்பட்டதை வைத்தோ நாம் தீர்க்கமாய் உண்மையென முடிவெடுத்து விடக்கூடாது. ஆகவே உண்மை நிலையை முழுவதும் அறிந்து அதை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதே சிறந்ததாகும்.

இதைவிட மோசமான ஒரு வதந்தி என்று சொன்னால் சில சமூக விரோதிகள் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் தெரிந்திருந்தும் மனசாட்சியே இல்லாமல் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வேண்டி பேசப்படும் வதந்தியாகும். இத்தகையோரின் பேச்சில் மயங்கிடாது பொது மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருந்துகொண்டு உண்மை நிலையை அறிந்து செயல்பட வேண்டும்.

ஆகவே இப்படி பலவகையிலும் தீங்கிழைக்கும் வதந்தியை பேரழிவுக்குச்சமமான வதந்தியை நாம் எந்த சூழ்நிலையிலும் பரப்பாமல் தவிர்க்க வேண்டும். வதந்தியால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்து எதையும் யோசித்து பேசினால் நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மையே உண்டாகும்.வதந்தியை பரப்பி நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வது நல்லதொரு பண்பாடாக இருக்க முடியாது.எனவே மனித நேயத்தைக் காக்கவும்,உறவுகளை மேம்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும், நிம்மதியாய் ஒற்றுமையுடன் வாழவும் வதந்தியை பரப்பாமல் நல்ல வழிமுறைகளை தேடிக்கொள்வோமாக..!!!

அதிரை மெய்சா

0 Responses So Far:

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு