Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 15 10

அதிரைநிருபர் பதிப்பகம் | February 20, 2016 | ,


இஸ்லாத்தை விமர்சிக்கும் சகோதரர்கள் முன்னிலைப் படுத்தும் ஒரு முக்கியமான தவறான புரிந்துணர்வைப் பற்றியும் , அந்தத் தவறான புரிந்துணர்வை நீக்கும் வண்ணம் அழைப்புப்பணியாளர்கள் எடுத்துரைக்க வேண்டியவற்றையும் விளக்கமாக சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 

இஸ்லாம் அனுமதித்த நான்கு மனைவிகள் என்கிற எல்லைக்கோட்டை மீறி பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டும் பல மனைவிகளை மணந்தார்களே! இது அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடானது அல்லவா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களிலும் பல இணைய தளங்களிலும் எழுப்பப்படுகின்றன. இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுக்கும் அனைத்து அழைப்பாளர்களுக்குமே பொறுமையாக இந்தக் கேள்விக்கு விடையும் விளக்கமும் தரவேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. அதையும்விட மேலாக, ஒரு அழைப்பாளன் தானே இந்த வினாவுக்கு விடைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் தேவையும்  இருக்கிறது. 

இஸ்லாமிய மார்க்கம் வகுத்திருக்கும் நான்கு மனைவிகள் என்கிற எல்லைக் கோட்டை அந்த மார்க்கத்தின் இறுதி நபி என்று போற்றப்படும் பெருமானார் முகம்மது (ஸல்) அவர்கள் , இவ்வாறு மீறக்காரணம் மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்ற எண்ணமும் நபி (ஸல்) அவர்களது சொந்த உடல் இச்சையும்தான் காரணம் என்கிற வாதத்தை நிலைநாட்ட குறிப்பாக  “sexually obsessed man” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி , சில கிருத்தவ, யூத, இந்து இணைய தளங்களில் இதயமின்றி எழுதுகிறார்கள். 

இஸ்லாத்தை எதிர்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் பல ராஜாதிராஜர்களும் டால்பின்களும் இதைப்பற்றி கொச்சையாக மேடைகளிலும் தொலைக் காட்சி விவாதங்களிலும்கூடப் பேசுகிறார்கள். அத்தகைய புரிந்துகொள்ளாத நண்பர்களுக்காக அவர்களை சபிப்பதைவிட , அவர்களது கேள்விகளை கோபத்துடன் நோக்குவதைவிட அவர்களுக்கு விளங்கும் வகையில் அன்பான முறையில் விளக்கம் கொடுக்க வேண்டியது நமது கடமை.     

தொடக்கமாக, திருமறையின் அல் – அஹ்சாப் அத்தியாயத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. “உண்மையிலேயே, உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகிறவராகவும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராகவும் இருக்கிற ஒவ்வொருவர்க்கும் அல்லாஹ்வின்   தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி இருந்தது “ ( 33: 21). என்ற இறைவசனத்தையும், 

அல்-கலம் அத்தியாயத்தில்...

“நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர். என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கின்றது . மேலும் நிச்சயமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர் ! “ ( 68:4)

என்ற இறைவசனத்தையும் நாம் எடுத்துக்காட்டவேண்டும். இவைகள் மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற இறைவசனங்கள், இறைவனின் இறுதித்தூதர் பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்களை தூய்மையானவராகவும் அவர்களது நல்ல நடத்தைகள் மற்றும் நல்ல குணங்களுக்கு சான்றுகளாகவும்  திருமறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

மேலும் தன்னைபற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். “மனித குலத்தின் முதல் நபி ஆதம் ( அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாளில் இருந்து உலகின் அனைத்து சமுதாயங்களுக்கும் அனுப்பப்பட்ட நபிமார்களில் நானே சிறந்த சமுதாயத்துக்கு அனுப்பட்ட நபியாவேன் “ என்ற நபிமொழி, புஹாரி யில்  7/757 ஆக பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. 

முதலாவதாக அழகிய முன்மாதிரி என்பதன் அடிப்படையில் சில விவாதங்களை வைக்க வேண்டி இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் நான்குக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொண்டது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். ஆனால் அவற்றை ஏன் செய்தார்கள் என்றால் ஒவ்வொரு திருமணமும் தனது சமுதாயத்தினரால் பின்பற்றப்படவேண்டிய ஒவ்வொரு மாறுபட்ட முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதாலும் சமூக பொருளாதாரக் காரணங்களுக்காக அவற்றை தனது சமுதாயத்தினர் பின்பற்றிட வேண்டும் என்பதாலும்தான் என்கிற கருத்தை நாம் முன் வைப்போம். 
 • விதவைகளை திருமணம் செய்வது , 
 • தன்னிலும் வயதில் மூத்த பெண்களை தயக்கமின்றி திருமணம் செய்வது, 
 • தன்னிலும் வயதில் இளைய பெண்ணை திருமணம் செய்வது ,
 • ஒரு அநாதை கூட செல்வம் படைத்த பெண்ணை நற்குணத்தை வேண்டி மணமுடித்துக் கொள்வது, 
 • அனாதையான பெண்களை திருமணம் செய்து, அவர்களின் குழந்தைகளையும் அரவணைப்பது, 
 • சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் பந்தம் ஏற்படுத்த திருமணம் செய்வது,
 • சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை திருமணம் செய்வது,
 • வேதம் வழங்கப்பட்ட கிருத்தவ, யூத இனங்களில் இருந்தும் இஸ்லாத்தை ஏற்கச் செய்து ஆண்கள் திருமணம் செய்வது, 
 • நண்பர்களின் மகள்களை நட்பை நிலைநிறுத்த திருமணம் செய்வது, 
 • அடிமைகளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து திருமணம் செய்வது, 
 • போரில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவித்து திருமணம் செய்வது , 
 • எதிரிகளின் மகளை திருமணம் செய்வது , 
 • இஸ்லாமிய சட்டத்தை நிலை நிறுத்த உதாரணமாக திருமணம் செய்வது.

என்பவை போன்ற பலவகை திருமண முறைகளை தனது சமுதாயத்தினர் தனது வாழ்விலிருந்து பின்பற்ற ஓர் அழகிய முன்மாதிரியாக பல பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் பெருமானார் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவையாவும் இறைவனின் அனுமதியுடனே நடத்தப்பட்டன.  

மேலே நாம் பட்டியல் இட்டுள்ள எல்லா திருமண முறைகளுமே சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தகுதி படைத்தவை. அந்தப்பட்டியலில் உள்ள அனைத்து முறைகளிலும் பெருமானார் (ஸல்) அவர்கள் தாங்களே திருமணம் செய்து அழகிய முன்மாதிரியாக , வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை  நமது முதல் வாதமாக அல்ல விளக்கமாக வைப்போம். 

அடுத்ததாக , உடல் இச்சைக்காக பெண்ணாசை கொண்டு பல திருமணங்களை முடித்தார்கள் என்கிற அவதூறான அபாண்டமான வாதத்தை வைப்பவர்கள் வரலாற்றின் பக்கங்களை உண்மைக் கண்கள் கொண்டு சற்றுப் புரட்டிப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வோம். 

ஒரு மனிதர் , உடல் இச்சை அல்லது பெண்ணாசை கொள்வது அவரது வாழ்வில் எந்த வயதுகளின் காலக் கட்டத்தில் இருக்கலாம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஒரு உணர்வு ஒரு மனிதருடைய 25 ஆவது வயதில் ஏற்படுமா? அல்லது அவரது 50- ஆவது வயதில் ஏற்படுமா? செல்வச் செழிப்பாக வாழும் கால்த்தில் ஏற்படுமா? பசியின் காரணமாக வயிற்றில் இரண்டு கல்லைக் கட்டிக் கொண்டு இருந்த காலத்தில் ஏற்படுமா? 

பெருமானார் (ஸல்) அவர்களுடைய முதல் திருமணம் அவர்களுடைய 25 –ஆம் வயதில் , 40 வயதுடைய ஏற்கனவே இருமுறை திருமணம் ஆகி விதவையான அன்னை கதிஜா (ரலி) அவர்களுடன் நிகழ்ந்தது. நபித்துவம் அருளப்படாத காலத்தில் ஒரு அனாதையாக வாழ்ந்துகொண்டிருந்த அல் - அமீன் – நம்பிக்கையாளர்- என்று சமுதாயத்தினரால் பெருமைப்படுத்தப்பட்ட பெருமானார் (ஸல்) அவர்கள், ஒரு செல்வ சீமாட்டியான, பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருந்த வணிகப் பெண்மணியான  அன்னை கதிஜா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். 

அன்னை கதிஜா (ரலி) அவர்களுடன் 25 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு , குழந்தைச் செல்வங்களை ஈன்றுவிட்டு ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்துவிட்டு அன்னை கதிஜா (ரலி) அவர்கள் இவ்வுலகைவிட்டு நீங்கிய பின்னர்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டாவதாக அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மணந்தார்கள். 

அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் பெருமானாரைவிட , மூத்தவர்கள் என்பதுமட்டுமல்ல அவர்களும் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரா செய்த தனது முதல் கணவரை இழந்த விதவையாவார். அதுமட்டுமல்ல அன்னை ஸவ்தா (ரலி) அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும் இருந்தன. ஆகவே அனாதைகளாக விடப்பட்ட அன்னை ஸவ்தா (ரலி)அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் ஆதரிக்கவும் அன்னையை இழந்த தங்களது குழந்தைகளை பராமரிக்கவுமே ஸவ்தா (ரலி) அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் மணக்க நேரிட்டது. 

பெருமானார் (ஸல்) அவர்கள் , பெண்ணாசை கொண்ட ஒரு மனிதராக இருந்து இருந்தால், தன்னை விட 15 வயது மூத்தவராக இருந்த முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே தன்னிடம் இருந்த செல்வத்தின் செருக்கில் பல பெண்களை இளமையான வயதிலேயே மணம் முடித்து தனது இளமையின் உடல் தேவையை அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்க இயன்றிருக்கும். சட்டமோ சம்பிரதாயமோ ஏன் முதல் மனைவியோ கூட அந்தச் செயலைத் தடுத்து இருக்க இயலாது. 25 வயதில் எழாத இளமை உணர்வு, உடலாசை, பெண்ணாசை போன்ற குணங்கள் ஒரு மனிதரின் 50 வயதுக்குப் பிறகு எழுந்து இருக்குமா? இந்தக் கேள்வியை எழுப்புவோர் இதை சிந்திக்க வேண்டாமா?  

அதேபோல்,  முதல் மனைவி இறந்ததுமே இறைவனின் தூதர் என்கிற அந்தஸ்தில் இருந்த பெருமானார் (ஸல்) அவர்கள், அடுத்ததாக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இளம்பெண்களைத் தேடி இலகுவாக மணம் முடித்து தனது இளமையில் கிட்டாத சுகத்தை அனுபவித்து இருக்க இயலும். மீண்டும் ஸவ்தா (ரலி) அவர்கள் போன்ற தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணை அவரது முதல் கணவனுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளின் பொறுப்பையும் சேர்த்து ஏற்றுகொண்டு மணம் முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உண்மை வரலாறை வல்ல இறைவனின் தூதரின் மீது பொய்வழக்குத் தொடுப்போர் சிந்திக்க வேண்டாமா? 

இதே போலத்தான் பெருமானார் (ஸல்) அவர்களின் இதர திருமணங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியிலும் இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைக்கின்ற அல்லாஹ் அவர்களுக்குத் தந்திருந்த அரும்பணியின் நோக்கமும் சமூக அக்கறையுமே  முதலிடம் வகித்தன. 

ஆண்கள் , பெண்களை அணுகி அமர அனுமதி இல்லாத இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறையில் இஸ்லாத்தின் அரிய பண்புகளை தலையில் தாங்கி நின்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிகளே அந்தப் பணிகளைச் செய்தார்கள். இவ்வாறு பெண்களை அணுக, அறிவுபுகட்ட தனது மனைவிமார்களை சிறந்த பண்புள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும், படித்தவர்களாகவும், இறையச்சம் உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டார்கள். 

பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்துகொண்ட மனைவிகள், சமுதாயத்தில் இருந்த பெண்களுக்கு ஒழுக்கப் பயிற்சியின் உதாரணமாகத் திகழ்ந்து காட்டினார்கள். இஸ்லாமியப் பயிற்சி தரும் ஆசிரியைகளாக அவர்கள் வாழ்ந்துகாட்டினார்கள். எண்ணற்ற நபிமொழிகள் அவர்களால் நவிலப்பட்டன.  “நம்பிக்கையாளர்களின் தாய்மார்கள்” என்று குறிப்பிடப்படும் பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மற்ற பெண்களுக்கு உதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள் என்பதை வரலாறு சொல்கிறது. 

வறுமையிலும், நெருக்கடியிலும், வாழ்க்கை வசதிகள் வற்றிய நிலையிலும் முகம் சுளித்ததோ, மனம் வருந்தியதோ, முறையீடு செய்ததோ இல்லை. அன்னையர்கள் அனைவரும் பெண்கள் பொறுமையின் சின்னம் என்ற இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

ஆகவே பெருமானார் (ஸல்) அவர்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டது, இறைவழியை எல்லாத்தரப்புக்கும்  எடுத்துச் செல்லத்தானே தவிர, ஐரோப்பிய ஊடகங்கங்களும் அவர்களது குழல் ஊதிகளாகசெயல்படுகிற உள்ளூர் முகவர்களும் கூறுவதுபோல் உடல் இச்சை அல்லது பெண்ணாசை கொண்டு அல்ல. 

பெருமானார் (ஸல்) அவர்களின் இதர திருமணங்களையும் ஒவ்வொரு திருமணத்துக்குப் பின்னும் இருக்கிற நியாயமான காரணங்களையும் நாமும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சான்றுகளுடன் வரிசைப்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி
=========================================================================
இந்த அத்தியாயத்தை எழுத பார்வைக்கு எடுத்துக் கொண்ட நூல்கள் :
1. அர் ரஹீக் அல் மக்தூம் 
2. நபிகளாரின் துணைவியர் – மவ்லவி முஹம்மது யூசுப் 

10 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

உள்ளத்தை உருக்கும்
உண்மை நபியின்
மேன்மை போற்றும்
அழகான தொடர்

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வழக்காடு மன்றத்தில் ஒரு பார்வையாளனாக தங்கள் வாதத்தை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த உணர்வு இவ்வத்தியாயத்தை வாசிக்க வாசிக்க!

பக்தி என்னும் போர்வைக்குள் உடல் இச்சைக்காக பக்தைகளை வேடையாடும் சாமியார்களைக் கண்டுவரும் இந்த யுகத்து மனிதர்களுக்கு எம் நபி (ஸல்) அவர்களின் தியாக வாழ்க்கையையும் மேன்மை குணங்களையும் விளங்க வைத்தல் மிகக்கடினம்.

ஆயினும் தங்கள் விளக்கங்கள் எத்தனை ஞாயமானது என்பதை மனசாட்சியுள்ள பிற மத சகோதரர்கள் ஏற்பது திண்ணம்.

அருமையாக, தெளிவாக, ஈர்ப்போடு செல்கிறது அழைப்புப் பணி, மாஷா அல்லாஹ்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு, வ அலைக்குமுஸ் சலாம்.

சென்ற அத்தியாயத்துக்கான கருத்துப் பேழையில் தாங்கள் குறிப்பிட்ட "கத்தி மேல் நடை " இந்த அத்தியாயத்துக்கு மிகவும் பொருந்தும். அச்சத்துடன் எழுதப்பட்டது. அதிலும் இன்னொரு கிருத்துவ தளத்திலிருந்து எடுத்துப் போடப்பட்ட அந்த ஆங்கில வார்த்தையை எழுதவே கை கூசியது. உள்ளம் நடுங்கியது.

ஆனாலும் எழுதியே ஆகவேண்டுமென்ற தூண்டுதல் உள்ளூர இழையாக ஓடியது .

தங்களின் ஆர்வமூட்டும் அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அப்துல் லத்தீப் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
தொடரைப் படித்த உடனே அதில் விடுபட்ட வார்த்தையை சேர்க்கச் சொல்லித் தாங்கள் வாட்ஸ் அப்பில் பேசி கவனப்படுத்திய அன்புக்கும் அதை உடனே அவ்வாறே மாற்றம் செய்த நெறியாளர் தம்பி அவர்களுக்கும் ஜசாக்கல்லாஹ் ஹைரன்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். துஆச் செய்யுங்கள்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். மடை திறந்த வெள்ளமாய் மடையர் தம் கேள்விக்கு பதில் வந்து கொண்டே இருக்கிறது! இதில் சுத்தம் செய்பவர் தம்மை சுத்தம் செய்துகொள்ளலாம் என கூறாமல் கூறுகிறது உங்கள் விளக்கம்!அல்ஹம்துலில்லாஹ்! தொடரட்டும் இந்த சுத்தபடுத்துதல்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி கிரவுன்! வ அலைக்குமுஸ் சலாம்.

ஜசக்கல்லாஹ் ஹைர்

N. Fath huddeen said...

அருமையான விளக்கங்கள், தொடரட்டும் உங்கள் பணி.

பலதாரமணத்திற்கு அனுமதி வழங்கியது 33:50 வசனம். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பின் 33:52 வசனம் நபிக்கு அந்த அனுமதியை ரத்து செய்து விட்டதை அவதானிக்கலாம். அதன் பின், நபி (ஸல்) வேறு எந்த திருமணமும் முடிக்கவில்லை என்பதையும் அறியலாம். அத்.33க்கு உள்ள தப்சீர்களை படித்தால் நன்கு புரியும்.

ஜசாகல்லாஹ்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி N. Fath huddeen , அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜசக்கல்லாஹ் ஹைர்.

தங்களுடைய கருத்துரையைப் படித்த பிறகு திருமறையின் அத்தியாயம் 33 க்குரிய இப்னுகஸர் உடைய தப்ஸீரையும் படித்தேன்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள 50, 52 ஆகிய வசனங்களையும் குறிப்பிட்டு இந்த அத்தியாயத்தில் எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கவே செய்யும்.

இருந்தாலும் இந்த அத்தியாயத்தின் தொடர் செய்திகள் எதிர் வரும் சனிக்கிழமை பதியப்படவிருக்கிற அத்தியாயத்தில் வரவிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அந்தபப்திவில் இந்த விபரங்களைக் குறிப்பிடுகிறேன்.

மேலும் தாங்கள் தனி மின்னஞ்சலில் குறிப்பிட்டபடி

“உண்மையிலேயே, உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகிறவராகவும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராகவும் இருக்கிற ஒவ்வொருவர்க்கும் அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி இருந்தது “ ( 33: 21). என்கிற வசனத்தில்


Islamic Foundation Trust- வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பில் " இருந்தது " என்றும்

Haji Muhammed Jan Literary & Charitable Trust -வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பில் " இருக்கிறது" என்றும்

The Holy Qur- An Revised & Edited By The Presidency of Islamic Researches , IFTA, Call and guidance

" Ye, have indeed In the Messenger of Allah An Excellent exempler For him who hopes In Allah and the Final Day , And who remember Allah much "

என்று குறிப்பிடுகிறது.

மேலும் இன்று காலை சில ஆலிம்களிடம் விவாதித்து விளக்கம் கோரிய வகையிலும் நிகழ்காலத்தைச் சுட்டி " இருக்கிறது " என்று சொல்வதே சரியாக இருக்குமென்று கருதுகிறேன்.

ஆகவே, தங்களின் ஊன்றி வாசிக்கும் தன்மைக்கும் அதைக் குறிப்பிட்டுக் காட்டும் அன்புக்கும் பண்புக்கும் நாங்கள் அனைவரும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நெறியாளர் அவர்கள் அதற்கேற்ற மாற்றத்தை இந்த வசனத்தின் மொழிபெயர்ப்பில் செய்துகொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த அத்தியாயம் பதிந்த பின்னர்

சில வகையான நெகிழ்வுகள்... எழுத்தில் வடித்து கருத்திடுவதாற்கு பதிலாக இன்னொரு நாள் ஒரு பதிவாக பதிக்கிறேன் இன்ஷா அல்லாஹ் !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

பார்க்க கரடானாலும் முரடானாலும் உங்கள் தொடர் என்றானதும்... இளகித்தான் போகிறது இறுகிய இதயங்களும் ஆங்காங்கே....!

சுட்டலும் குட்டலும் மனதைத் தொட்டலும் வழிநெடுக இருக்கத்தான் செய்யும்... அவை இடர்களல்ல செல்லும் வழிக்கான் ஒளிச் சுடர்கள் !

Ebrahim Ansari said...

//சுட்டலும் குட்டலும் மனதைத் தொட்டலும் வழிநெடுக இருக்கத்தான் செய்யும்... அவை இடர்களல்ல செல்லும் வழிக்கான் ஒளிச் சுடர்கள் !//

புடம் போடுவதாகவே நான் நினைக்கிறேன். விதண்டாவாதமெ என்னால் எதிர்க்கப்படும். ஆக்கபூர்வ ஆலோசனைகளை இருகரம் நீட்டி வரவேற்பவன். ஜசாக்கால்லாஹ் தம்பி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு