Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாற்றம் ஏற்றமா ஏமாற்றமா – அனுபவம் பேசுகிறது. 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2012 | , , , , ,


மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது என்று கூறுவார்கள். விதைகள் தளிர்களாவதும், தளிர்கள் தழைத்து செடிகளாவதும், கொடிகளாவதும், பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் மாற்றங்களே. மனிதவள மேம்பாட்டுதுறையில் மாற்றம் என்பது பணி இடமாற்றம், பதவி மாற்றம், பணி மாற்றம் என்று பலவகைப்படும். சில மாற்றங்களை அவரவரின் தகுதி, திறமை, பொறுப்புகளை நிறைவேற்றும் தன்மைகள் ஆகியவற்றை அளவிட்டு நிறுவனங்களே செய்யும். சில மாற்றங்களை நாமே செய்து கொள்ளலாம். அப்படி நாமே செய்து கொள்ளும் மாற்றம்தான் ஒரு பணியிலிருந்தோ, ஒரு நிறுவனத்திலிருந்தோ விலகி நாம் தேடும் அதிக நன்மைகளுக்காக வேறொரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது ஆகும்.

பல நேரங்களில் இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்கள் உண்டு. சில நேரங்களில் நல்ல தகுதி திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புக் கிடைக்காதவர்களும் உண்டு. ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலைபார்த்துவிட்டு ஏதாவது காரணத்துக்காக அல்லது ஒரு மாற்றத்தைத்தேடி இடம் பெயர நினைப்பவர்கள் உண்டு. “ அது இருந்தால் இது இல்லே- இது இருந்தால் அது இல்லே- அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா அவனுக்கு இங்கே இடமில்லே” என்பதுதான் பல சமயங்களில் நடக்கும் சம்பவங்களாகும். இங்கே நாம் விவாதிக்க இருப்பது எல்லாம் நன்றாக அமைந்து ஒரு நிறுவனத்தில் இருந்து பதவி விலகி- அடுத்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றிய சில அனுபவ குறிப்புகள்.  

பொதுவாக சொல்லப்போனால் ஒரு நிறுவனத்திலிருந்து மறு நிறுவனத்துக்கு வேலைக்குப்போகும் நமது மனநிலை கிட்டத்தட்ட ஒரு புதுப்பெண்ணின் மன நிலையாகத்தான் இருக்கும். பல சமயங்களில் பெரும் சவாலாகவும் அச்சமூட்டும் வகையிலும் அமைந்து இருக்கும். மணப்பெண்ணுக்கு சலங்கை கொலுசு போட்ட கால்கள் தடுமாறும்- நமக்கு சாக்சும்  ஷூவும்  போட்ட கால்கள் தடுமாறும். மணமகனை மணமேடையில் பார்த்த அனுபவத்தின் அளவுதான் நேர்காணலில் முதலாளியையோ , மேலாளரையோ பார்த்ததும் இருக்கும். மணம் முடிந்து மாமியார் வீட்டில் அடிஎடுத்துவைக்கும் போது இருக்கும் அச்சம், நாணம, மடம், பயிர்ப்பு அனைத்தும் புதிய அலுவலகத்தில் அடி எடுத்து வைக்கும்போதும் இருக்கும்.  ஒரு புதிய பொறுப்புக்கும், ,சூழ்நிலைக்கும் தயாராவதுடன் புதிய நண்பர்களை மட்டுமல்ல புதிய மேலாளரையும் சந்திக்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவேண்டும். நாம் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தை முதல் கணவனுக்கோ மனைவிக்கோ ஒப்பிட்டால் அடுத்து நாம் போக இருக்கும் நிறுவனத்தை இரண்டாவது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஒப்பிடலாம். முதல் கணவன் கோபப்படும்போது முகத்தில் பச்சைத்தண்ணிர் குவளையை வீசி இருக்கலாம். அதைவைத்து அடுத்தவன் சுடு நீர் குவளையை விட்டு எறிவான் என்று எண்ணி பயப்படக்கூடாது. பூக்களையும் வீசலாம் திராவகத்தையும் வீசலாம். எதுவும் நடக்கலாம். 

புதிய நிறுவனத்தில் நேர்காணலின்போது உங்களுக்கு அந்த நிறுவனத்தின் கொள்கைகள், வேலைச்சூழ்நிலைகள் ( POLICIES, CORPORATE CULTURE, WORK ENVIRONMENTS) ஆகியன பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகமே தந்து இருப்பார்கள். இவைகள் அந்த நிறுவனத்தின் முழு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முழுதுமாக உதவாது. நீங்கள் அங்கு பணியில் சேர்ந்து நடைமுறையில் அவற்றோடு இணைந்து பணியாற்றும்போதுதான் உங்களால் அந்த நிறுவனம் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.  சாம்பார்  வைப்பது எப்படி என்று டி வி யில் சொல்லித்தருவதை கேட்டு கவனிப்பதற்கும் நாமே  அடுப்பங்கரையில் குக்கரைப் பற்றவைத்து பருப்பை வேகவைப்பதில் ஆரம்பிப்பதற்கும் உள்ள வித்தியாசம். 

புதிய நிறுவனத்தின் முதல் நாள் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். உங்களைப் பற்றிய ஒரு தோற்ற, பழக்க முறைகளைப்பற்றிய ஒரு முதல் கணிப்பையும் தீர்ப்பையும் உங்கள் மேலாளரிடத்திலும், உடன் பணியாற்றுவர்களிடத்திலும் உருவாக்ககூடியதாக இருக்கும். இந்த முதல் கணிப்பு உங்களின் பணிக்காலம் முழுதும் கை கொடுக்கக்கூடியதாக அமையும். ( THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION ) .

வேலைக்கு சென்று சேருவதற்கு முதல்நாள் இரவு விரைவிலேயே படுக்கச் சென்று நன்றாக தூங்கி விடுங்கள். சிலர் விடிய விடிய உட்கார்ந்து ஐ பி எல் மேட்சையோ , ஆஸ்திரேலியாவில் நடு இரவில் நடக்கும் ஒருநாள் மேட்சையோ பார்த்துவிட்டு காலையில் அழுது வழிந்து கொண்டிருக்கும் முகத்துடன் புதிய அலுவலகம் வராதீர்கள். இது தவிர்க்கப்படவேண்டும். அத்துடன் புதிய நிறுவனத்தின் வேலை தொடங்கும் நேரத்தை அறிந்துவைத்துக்கொண்டு தாமதமில்லாமல் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். வேலை நேரம் தவறி தாமதமாக வருவது முதல்நாளே ஒரு கரும்புள்ளியை உங்களின் உச்சந்தலையில் குத்திவிடும். அத்துடன் நேரத்தில் வருவது உங்களை ஒரு நேரம் தவறாதவரென்றும், நல்ல விதமாக பயின்றவர் என்றும் ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும். ( WELL ORGANIZED AND PUNCTUAL ) .அதுமட்டுமலாமல் நல்ல எடுப்பான தோற்றம் தரும் ஆடைகளை அணிந்து வருவதும் இன்றியமையாதது. நீங்கள் எவ்வளவுதான் அனுபவமும், அறிவும், தகுதியும் பெற்றவராக இருந்தாலும் உங்களின் தோற்றமும் அதற்கேற்றபடி இல்லாவிட்டால் உங்களின் அத்தனை தகுதி, அனுபவம், திறமைகளும் வேஸ்ட்தான் என்பதை உணரவேண்டும்.  தகுதி, திறமைகள் வெளிப்பட நாளாகும். ஆனால் நீங்கள் அணிந்து வந்திருக்கும் ஆடைகளைப்பற்றிய விமர்சனம் உடனே அலுவலகத்தில் பிளாஷ் நியூஸ் ஆகும். 

அடுத்து உங்களுக்கு சொல்ல விரும்புவது , தரப்பட்ட வேலையில் கவனம் செலுத்துவது,உங்களுடைய இருப்பிடங்க்களை வசதியாக அமைத்துக்கொள்வது, உங்களுடன் பணியாற்றும் மற்றவர்கள் நீங்கள் பணி செய்வதை நோக்கும்போது உங்களுடைய வெளிப்பாடுகள் நீங்கள் ஒரு சிறந்த தேர்வுதான் என்பதை காட்டுவதாக இருக்க வேண்டும். ‘போயும் போயும் ஒரு பொழப்பத்தவனை’கொண்டு வந்திருப்பதாக மற்றவர்கள் நினைத்துவிடக்கூடாது.  உங்களை ஒரு நல்ல அனுபசாலி என்றும், பொறுப்பானவர் என்றும் மதிக்கும் விதத்தில் காட்டிக்கொள்ளவேண்டும். பழைய நிறுவனத்தில் நீங்கள் செய்த வீரப்பிரதாபங்களை அளந்து விடாமல் இருப்பது நல்லது. ரீல் சுற்றுவதாக மற்றவர்கள் நினத்துவிடாமல் அடக்கி வாசிப்பதே நல்லது. சில நேரங்களில் உங்களுக்கு சில விபரம் தெரியாது என்று நினைத்து சிலர் தாமாகவே உதவ முன்வருவார்கள். அவர்களிடம் பக்குவமாக உங்களுக்கு தெரியும் என்பதை தெரிவிக்கலாம் அல்லது தெரியாததுபோல் கேட்டும் கொள்ளலாம். மிக்க முக்கியமாக உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. இதற்காக யாரும் பிரம்பை எடுத்து , கையை நீட்ட சொல்லி அடிக்க மாட்டார்கள்.  . ஆர்வமுடன் உங்களுக்கு விபரங்கள் சொல்லித்தரவே முனைவார்கள் என்பதே அனுபவம்.  அப்படி சொல்லித்தருவதன் மூலம் ஏற்கனவே வேலை செய்து வருபவர்களும் அவர்களின் மேதா விலாசத்தை உங்களிடம் காட்டிக்கொள்ள முனைவார்கள் என்பதும் ஒரு காரணம்.  

ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கிடையில் உறவுப்பாலம் வளர்ப்பதை வேறுபாடுகளாகவும் வித்தியாசமான முறைகளிலும் வைத்திருப்பார்கள். சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது. சில இடங்களில் ஒருவருக்குள் ஒருவர் உரையாடுவதைக்கூட விரும்பாமல் கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள். ஸி.டி. வி  வைத்து கண்காணிக்கக்கூடிய நிறுவனங்களும் உண்டு. தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இருவழியிலும் அலுவலக நேரங்களில் வருவதை கட்டுப்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன. ஊழியர்களுக்கு தேநீர் வழங்குவதில் கூட முறைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் மேலாளர்களுடன் தகவல் பரிமாற்றத்திலும் சில முறைகள் மாறுபடும். சில மேலாளர்களுடன் நேராக சென்று உரையாடலாம். வேறு சிலருடன் அவருடைய செயலாளர் மூலம்தான் உரையாட முடியும். ஆகவே நீங்கள் புதிதாக சென்று சேரும் நிறுவனத்தின் முறைகளை பொறுமையுடன் முதலில் கவனியுங்கள். அதன்பின் பின்பற்றுங்கள்.  நீங்கள் உங்களை இயக்குவதற்கு எது அந்த நிறுவனத்தின் நடைமுறை என்பதை அறிந்து அதன்படி பின்பற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் பழைய நடைமுறைகளையே பின்பற்றுபவராகவும் , அத்துமீறாதவராகவும் உங்களை நீங்கள் காட்டிக்கொள்ள முடியும். 

வேலைக்குப்போய் சேர்ந்த உடனே நீங்கள் கொண்டுபோன பழைய சட்டிகளைப்போட்டு உடைக்கத் தொடங்கிவிடாதீர்கள். மேலும் நீங்கள் கால ஊன்ற முன்பே நீங்கள் விரும்புகிற அல்லது முன் நிறுவனத்தில் புழக்கத்தில் இருந்த நடைமுறைகளை புதிய இடத்தில் திணிக்க முயலாதீர்கள். உங்களை புதிய நிறுவனம் ஏற்றுக்கொள்வதற்கு என்று ஒரு காலக்கட்டம் இருக்கிறது. உங்களை அங்கீகரிப்பதற்கும் ஒரு காலகட்டம் நிச்சயம் இருக்கிறது. அவைகளை நீங்கள் அடைந்துவிட்டோம் என்ற உறுதி வரும்வரை சீர்திருத்த செம்மலாகிவிடாதீர்கள். நதியின் ஓட்டத்தோடு வளைந்து போகும் நாணல் பயிர் மட்டுமே எத்தனை வெள்ளம வந்தாலும் நின்று தழைத்து வளரும். 

அடுத்து நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள். இந்த காரியம் சிலருக்கு வெகு சுலபம் சிலருக்கு மிகக் கடினம். சிரித்தமுகம், பக்குவமான அணுகுமுறைகள் நண்பர்களை தேடித்தரும். உம்மணா மூஞ்சிகளுக்கு நண்பர்கள் கிடைப்பது கஷத்திலும் கஷ்டமே. அதேபோல் கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கும் நண்பர்கள் சந்தையில் டிமாண்ட் மிகக்குறைவே. பல சமயங்களில் நண்பர்கள் அமைவது, நாடு, மொழி , இனம் ஆகியவைகளைப் பொருத்தும் அமையும்.  நண்பர்களை தேடிக்கொள்ள மதிய உணவு வேலைகளும் – மதிய உணவுக்கூடங்களும் மிகவும் உதவும். உங்களை அறியாத மனிதர்களானாலும் அவர்களைப்பார்த்து நீங்கள் பூக்கும் ஒரு புன்முறுவல் நண்பர்களைப்பெற்றுத்தரும் தூண்டிலாகும்.  அத்துடன் நடைமுறையில் உள்ள உலகச்செய்திகளைப்பற்றி உணவு இடைவேளைகளில் பழைய ஊழியர்கள் உரையாடும்போது நல்ல பொருத்தமான கருத்துக்களைக்கூறி அவர்களுடன் இணைந்து கொள்வதும் நண்பர்களை தேடிக்கொள்ள உதவும். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்றெல்லாம் உளறி வைக்காதீர்கள். கொஞ்ச காலத்துக்காவது அரசியல் கருத்துக்களைக் கூறாமல் ஒதுங்கி இருப்பது உங்களின் (GAME) கேமை பாதுகாப்புடன் தற்காப்புடன் விளையாட உதவும். கூடியவரை ஆரம்ப மவுனம், அடக்கி வாசித்தல் உங்களுக்கு எதிர்காலத்தில் நண்பர்களை தானாக தேடிவரவழைக்கும். கரும்பு கட்டோடு கிடந்தால் எறும்பு தானாக வரும் என்று கூறுவார்கள். 

இவற்றுடன் புதிய நிறுவனத்தின் நிர்வாக அமைப்புகளைத் ( ORGANAIZATION CHART) கேட்டு வாங்கி படித்துத் தெரிந்துகொள்வதும் முக்கியம். பொதுவாக ஒரு புதிய நபர அலுவலகம் வரும்போது அவரை எல்லா துறைகளுக்கும் அழைத்துச்சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது மனிதவளத்துறை அதிகாரியின் முக்கிய பொறுப்பாகும். இத்தகைய ஆரம்ப அறிமுகம் ஒரு சடங்குதான். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களைத்தேடிச்சென்று உங்களின் நிறுவனத்தின் செயல்பாடுகளைப்ப்ற்றி ஒரு சிறு விளக்கங்கள் கேட்டுத்தெரிந்து கொள்வதும் உங்களின் தன்னார்வத்தை வெளிப்படுத்தும். 

சில சமயங்களில் உங்களுக்கு முன் உங்களின் இடத்தில் பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்திலோ அல்லது வேறு ஒரு கிளையிலோ தொடர்ந்து இருக்கலாம். அவரைத் தேடிச்சென்றோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைப்ப்ற்றி ஒரு சிறிய முன்னோட்டமும் தேவைப்பட்டால் அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு ஆலோசனைகள் அறிவுரைகள் கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தால் அவரும் மகிழ்வதுடன் நிர்வாகத்தினரிடமும் ஒரு வார்த்தை நல்லபடியாக சொல்லி வைப்பார்.  யார் கண்டது இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு என்று அந்த சீனியர் நினைக்கலாம். நல்லதுதானே. 

ஆகவே

1. PREPARE YOURSELF FOR YOUR FIRST DAY,
2. CONCENTRATE ON YOUR WORK
3. LISTEN AND OBSERVE
4. MAKE FRIENDS 
5. HUNTING FOR A CORPORATE KNOWLEDGE
6. CONSULTING WITH PREDECESSOR

ஆகியவை அடிப்படையான டிப்ஸ்களாகும். 

கூடியவரை மிகக்குறைந்த பொருளாதார நன்மைகளுக்காக- அந்த சிறு பொருளாதார நன்மையை இந்திய பேங்க் ரேட்டில் பெருக்கிப் பார்த்துவிட்டு பல ஆண்டுகளாக வேலைபார்த்த  நிறுவனத்தை – நண்பர்களை- சூழ்நிலைகளை விட்டு விலகி புதிய இடத்தில் சேர்வது பலருக்கு அக்னிப் பரிட்சைதான். புதிய பூதத்தைவிட பழைய பேயே தேவலை என்கிற நிலைமை பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. தூரத்துப்பச்சைகள் கண்ணுக்கு அழகாய்த் தோன்றிடும். ஆகவே மாற்றங்களை தேடிப் போகும்போது அந்த மாற்றங்கள் நமக்கு ஏற்றங்களைத்தருமா என்று சிந்தித்து செயல்படவேண்டும் மாற்றங்கள்  ஏமாற்றங்களாகப் போவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

-இப்ராஹீம் அன்சாரி.

23 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல படிப்பினை தரும் அருமை அனுபவங்கள்.

மாற்றங்களால் ஏமாற்றம் பற்றிய ஐயம் இருக்கும் போது இருப்பதையே ஏற்றமாக்கிக் கொள்வது மிகவும் ஏற்றம்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமையான அனுபவமிகுந்த பதிவு

தொல்(கவ)லை தருகின்ற ஏதாவது ஒன்றை மட்டும் மாற்றிப்பாருங்கள் சில வேளைகளில், அது வாழ்வின் அனைத்தையும் மாற்றிவிடக்கூடும்

Yasir said...

டிப் டாப்பான “டிப்ஸ்”க்கள்.... இவற்றை 80% கடைபிடித்தால் வேலை டப்பா டான்ஸ் ஆகாமல் பாதுகாப்பாக இருக்கும்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"தொடர்ந்து வருடக்கணக்கில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது அந்த நிறுவனத்தின் அருமை, பெருமைகள் அல்லது அவஸ்த்தைகள் நமக்கு விளங்குவதில்லை. ஒரு நிறுவனத்தை விட்டு மாற்றத்திற்காக இன்னொரு நிறுவனம் செல்லும் பொழுது தான் நாம் பழைய நிறுவனத்தில் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டோம்? அடக்கி ஒடுக்கி துவைத்து எடுக்கப்பட்டோம்? எந்த, எந்த விசயங்களில் என்‍ஜாய் பண்ணினோம்? என்பதெல்லாம் தெரிய ஆரம்பிக்கும்". இபுறாஹீம் அன்சாரி காக்கா சொல்ற மாதிரி "அங்கே கொடுமை,கொடுமை என்று ஓடி வந்தால் இங்கு கொடுமை குடும்பத்தோடு திங்கு,திங்குண்டு ஆடிக்கொண்டிருந்திச்சாம்" கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல் மாற்றம் வேண்டி அங்குமிங்கும் அலைந்து திரிபவருக்கு சென்ற இடமெல்லாம் வெறுப்பு என்றாகி விடுவதும் உண்டு.

நிறைய‌ பேர் நிறுவ‌ன‌த்தில் சேர்ந்து 3 மாத‌ங்க‌ள் புர‌பேஷ‌ன் (வேலை உறுதிப்பிர‌மாண‌ம் அளிக்கும் முன் ஒருவருக்கு அளிக்க‌ப்ப‌டும் சோதனைக்காலம்‍ (வேதனைக்காலம்) பீரிய‌ட் முடியும் வ‌ரை அட‌க்க‌ம், ஒடுக்க‌மாக‌ புதுப்பெண் மாதிரி இருந்து விட்டு அதுக்க‌ப்புறம் (எத்துனை பேரை பாத்துட்டு வந்த்ர்ப்போம் என்று) த‌ன் சேட்டைக‌ளை மெல்ல‌, மெல்ல‌ ஆர‌ம்பித்து யார் அவருக்கு வேலையில் சேர உதவினார்களோ அவர்களிடமே கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவார்க‌ள்.

சில‌ர் செய்த‌ ந‌ன்றிக்க‌ட‌னுக்கு வ‌ட்டி கேட்ப‌து போல் தான் வேலையில் சேர்த்த‌ ந‌ப‌ரிட‌மிருந்து ஓவ‌ரா ம‌ரியாதை எதிர்பார்ப்ப‌து, கம்பெனி வேலைகளுடன் சொந்த வேலைக‌ள் கூடுத‌லாக‌ ஏவுவ‌து என்று அந்த‌ அப்பாவியின் தனிப்பட்ட, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மிர‌ள‌ வைத்து விடுவார்க‌ள்.

ந‌ம் தேவைக‌ள், குடும்ப‌ சூழ்நிலைக‌ள் எல்லாவ‌ற்றையும் ந‌ம்மை விட‌ அதிக‌ம‌திக‌ம் க‌வ‌ன‌த்தில், க‌ருத்தில் கொண்டு ந‌ம‌க்கெல்லாம் எங்கெங்கோ ஓரிட‌த்தில் தகுதிக்கேற்ற அல்லது தகுதியைத்தாண்டிய ப‌ணியில் அம‌ர‌ச்செய்து ந‌ம் ஒட்டு மொத்த‌ குடும்ப‌ வாழ்வாதார‌மும் அத‌ன் மூல‌ம் கிடைக்க‌ச்செய்யும் அந்த‌ அல்லாஹ்வுக்கு எந்த‌ள‌வுக்கு நாம் ந‌ன்றிக்க‌ட‌ன் ப‌ட்டிருக்கிறோம் என்ப‌து வார்த்தைக‌ளால் அள‌ந்து விட‌ முடிய‌வில்லை.

ந‌ம் க‌ண் முன்னால் உத‌வி செய்ப‌வ‌ர் தெரிந்து விடுகிற‌து. அவரை கண்டதும் உள்ளம் பூரித்து அவரை மரியாதை மூலம் மகிழ்விக்கச்செய்கின்றது. அந்த‌ உத‌வி செய்த‌வ‌ர் மூல‌ம் அல்லாஹ் ந‌ம‌க்கு உத‌வி செய்த‌து ப‌ர‌வ‌லாக‌ எந்த‌க்க‌ண்ணுக்கும் எளிதில் தெரிந்து விடுவ‌தில்லை.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனுபவம் பேசுகிறது என்பதை விட. அனுபவம் கொட்டுகிறது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

// பல நேரங்களில் இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்கள் உண்டு. சில நேரங்களில் நல்ல தகுதி திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புக் கிடைக்காதவர்களும் உண்டு. ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலைபார்த்துவிட்டு ஏதாவது காரணத்துக்காக அல்லது ஒரு மாற்றத்தைத்தேடி இடம் பெயர நினைப்பவர்கள் உண்டு. “ //

இவைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் நிகழ்வதில்லை.
ஒருவருக்கு இது போன்று நிகழ்வுகள் நடந்து விட்டால்.அடுத்தவர் எல்லாம் அவன் தலை விதி என்று சொல்வதை கேட்கிறோம் அல்லது நாமே சொல்லுகிறோம்.

சேக்கனா M. நிஜாம் said...

மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களுக்கு என் வாழ்த்துகள்......மாற்றம் தரக்கூடியப் பதிவு. மாற்றம் வேண்டும்...! கண்டிப்பாக அவற்றை நம் வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்..............

சமீபத்தில் சிந்திக்க + சிரிக்க(க்) கூடிய “அந்த மூன்று கவர்களைப் பற்றிய” ப் பதிவை படிக்க நேரிட்டது. அதில்...............

ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் சேர்ந்தார். அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதியவர் அவரிடம் திறமையான நிர்வாகம் பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். அவர் உடனே புதியவரிடம் மூன்று கவர்களைக் கொடுத்து சொன்னார்,” உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்,” புதியவர் அவருக்கு நன்றி கூறி மூன்று கவர்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

ஒரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,” நான் புதியவன். எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்.” என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், ”நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். ”என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.

அடுத்து ஒரு ஆண்டில் மறுபடியும் பிரச்சினை வந்தது. இரண்டாவது கவரை திறந்து பார்த்தார். அதில், ”முன்பு மேலாளர் களாய் இருந்தவர்களைக் குறை சொல்,” என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார், ”பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக சிந்தித்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணி புரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் ஒரே குப்பை இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. ”வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.

இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தொழிலாளர் தலைவர்கள் தீவிரமாக வந்தார்கள். இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது. உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார். அதில். ”உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும், ”என்று எழுதப்பட்டிருந்தது.

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணான நேரத்தில் கண்ணான முயற்சி; கண்ணுக்கு இமைபோல கருதலாம் !

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும், அன்று செய்ய வேண்டியவைகள் பற்றிய ஓர் ஆய்வுக் குறிப்புடன் அறையை விட்டு பணியிடம் சென்று, அக்குறிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக POST IT தாளில் எழுதி, கணினித் திரையின் பக்கவாட்டில் நம் கண் முன்னால் தெரியும் படி ஒட்டி விடவும்; அக்குறிப்பிட்ட வேலைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக முடிக்கலாம். இடையில் அவசர வேலைகள் குறுக்கிட்டால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இப்படிச் சிந்தித்து, திட்டமிட்டு, வேலை செய்தால் செய்யும் தொழிலில் ஓர் இன்பம் காணலாம். என்னைப் போன்ற கணக்கர்கட்கு இந்தத் திட்டமிட்ட முறையால், எவ்வளவு பணிகள் நெருக்கம் இருந்தாலும் களைப்பு அறியாமல் கொடுக்கப்பட்ட இலக்கினை எட்டி விடுகின்றோம். அதனாற்றான், எங்கும் எதிலும் PENDING என்ற ஒரு “சோம்பல்”, “சொதப்பல்” இல்லாமல் UP DATED ஆக கணக்குப் பதிவுகள் ஆயத்த நிலையில் இருக்கின்றன. நாம் ஒருவர் செய்யும் தாமதத்தால், முழு நிர்வாகம் முடங்கும் வாய்ப்பும் ஏறபடும் என்ற அச்சம் என்றும் உள்ளத்தில் பதிய வேண்டும். “செய்; செய்வன திருந்தச் செய்” ஒருவேளை, நமது தினசரிக் குறிப்பிட்ட இலக்கினை எட்டாமல் இடையில் வந்த வேலைகளால், தொய்வு உண்டானால், வெள்ளி, சனி மற்றும் விடுமுறை நாட்களில் “தியாகம்” செய்து உழைத்து இலக்கை எட்டி விட்டால் கிடைக்கும் நிம்மதிக்கு ஈடிணையில்லை! உதாரணம்: இக்கட்டுரையாசிரியர் அன்புச் சகோதரர் இப்றாஹிம் அன்சாரி அவர்கள் “கண் சிகிச்சைக்காக” விடுப்பில் வீட்டில் இருந்த வேளையிலும் விடுபட்ட அவர்களின் வேலைகளைக் கவனித்தார்கள் என்பதும் ஓர் அழகிய முன்மாதிரி!

Ebrahim Ansari said...

தம்பி சேகனா நிஜாம் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் தந்த விருந்தில் பிர்னி தரவில்லை என்று சிலர் குறைப்பட்டார்களே.
இப்போது நீங்கள் தந்துள்ள பின்னூட்டம் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டது.
இப்படி தலைப்பை ஒட்டிய தொடர்ந்த கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன்.

வஸ்ஸலாம்.

sabeer.abushahruk said...

காக்கா,
அனுபவங்களைப் பகிர்வதும் அனுபவங்களிலிருந்து கற்றவற்றை அறிவுறுத்தி நேர்வழி காட்டுவதும்கூட ஒருவகை தர்மம்தான்.

ஒரு ச்சின்ன நெருடல். காக்காட்ட சொல்ல என்ன தயக்கம் என்றுதான்....

உடைகள் விஷயத்தில் எல்லோரும் நேர்த்தி அவசியம் என்று சொல்வதில் மாற்றுக் கருத்தில்லை எனினும்,

ஃபுல் ஷூட்டில் வொர்க்‌ஷாப் அஸிஸ்ட்டென்ட் மேனேஜர் வேலைக்கு வந்தவரிடம் நேர்காணலில் " மொபைல் கிரேனின் ஹைட்ராலிக் பம்ப்பின் நாமினல் ப்ரெஸ்ஸர் என்ன?" என்று கேட்டேன்.

அருமையான ஷூட்டும் மேட்ச்சிங்கான ட்டையும் பாலிஷ் செய்யப்பட்ட ஷூவுமாக அவர் சொன்ன பதிலுக்காக அவரை ரிஜெக்ட் செய்து, ஜீன்ஸ் ட்டீ ஷர்ட்டில் வந்து சரியான பதில் சொன்ன ஃபிலிப்பினோவை செலக்ட் செய்தேன்.

என்னை என்ன செய்யலாம்?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அன்புச்சகோதரர் இபுறாகிம் அன்சாரி அவர்களின் அழகான ஆலோசனைகள்!

வேலையில் சேர்பவர்களுக்கும், வேலையை மாற்றுபவர்களுக்கும். உண்மையில் ஒருவரின் அனுபவம் மற்றவர்களுக்கு படிப்பினையாகிறது.

வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

//என்னை என்ன செய்யலாம்?// கை குலுக்கிப் பாராட்டலாம்.

அறிவு தலையில் உள்ளது. ஆடையில் இல்லை.

அறிவுக்கும் ஆடைக்கும் போட்டி என்று வரும்போது அறிவை தேர்வு செய்வதே அறிவுபூர்வமான செயலாகும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கிடையில் உறவுப்பாலம் வளர்ப்பதை வேறுபாடுகளாகவும் வித்தியாசமான முறைகளிலும் வைத்திருப்பார்கள். சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது. சில இடங்களில் ஒருவருக்குள் ஒருவர் உரையாடுவதைக்கூட விரும்பாமல் கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள். ஸி.டி. வி வைத்து கண்காணிக்கக்கூடிய நிறுவனங்களும் உண்டு. தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இருவழியிலும் அலுவலக நேரங்களில் வருவதை கட்டுப்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன. ஊழியர்களுக்கு தேநீர் வழங்குவதில் கூட முறைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் மேலாளர்களுடன் தகவல் பரிமாற்றத்திலும் சில முறைகள் மாறுபடும். சில மேலாளர்களுடன் நேராக சென்று உரையாடலாம். வேறு சிலருடன் அவருடைய செயலாளர் மூலம்தான் உரையாட முடியும். ஆகவே நீங்கள் புதிதாக சென்று சேரும் நிறுவனத்தின் முறைகளை பொறுமையுடன் முதலில் கவனியுங்கள். அதன்பின் பின்பற்றுங்கள். ///

ஆ(ப்ப்ப்)ஃபீஸில் இருக்கும்போது ஒரு நான்கு நாட்கள் முன்னாடி தலைக்கு மேல ஒரு ஹெலிகாப்டர் பறந்த சத்தம் கேட்டுச்சு, அது நீங்கதான் ஏரியல் வீயுவில் இதையெல்லாம் பார்த்து விட்டு எழுதுவீங்கன்னு தெரியாம போச்சே ! :)

அச்சு அசலாக போட்டு உடைச்சுட்டியலே காக்கா ! :)

இன்னொன்று... சொந்தக்காரர் என்றும் இவர் உன்னுடைய உடன்பிறந்த(!!) சகோதரராக நினைத்து எல்லாம் சொல்லிக் கொடு என்று ஒரு பொடியனை பக்கத்தில் உட்காரவச்சு... நாமும் சரி 'தம்பி'தானேன்னு எல்லாமே சொல்லிக் கொடுத்ததும், கிள்ளிக் கொடுப்பதுபோல் நமக்கு அவர் திருப்பிச் செய்யும் விசுவாசம் இருக்கே.... (சொல்லித் தெரிவதில்லை ஓனரின் சொதப்பல் சொந்தகளோடு !!!)

எது எப்படியிருப்பினும் அனுபவம் அனுபவம்தான்...


அன்னைக்கு எழுதியது http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_15.html

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

படிக்கட்டில் ஏறி வந்து விருந்தில் கலந்துகொள்ள முடியவில்லை காரணம் நெட் கட் ஆகி விட்டது (யாரோ தனி விமானத்தில் ஏறி வந்து நெட்டை கட் செய்து விட்டதாக ஒரு புரளி வலம் வருகின்றது )

Shameed said...

மாமாவின் அனுபவங்கள் இங்கு களை கட்டுகின்றது அத்துடன் இங்கு என் சிறிய அனுபவத்தை அறியத்தருகின்றேன்
எந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் வேலைக்கு செல்வதில் முதல் ஆளாகவும் வேலை முடிந்து வருவதில் கடைசியாகவும் வந்தால்
அது நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும்

Noor Mohamed said...

//வேலை தேடுவோர்க்கு - அனுபவம் பேசுகிறது// என்ற தலைப்பில் சென்ற ஜனவரியில் கட்டுரையை வெளியிட்ட இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள், சரியாக 3 மாதங்கள் புரபெஷன் பிரியட் முடிந்ததும் //மாற்றம் ஏற்றமா ஏமாற்றமா – அனுபவம் பேசுகிறது// என்ற தலைப்பில் இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள் என்ற அறிய பல கருத்துக்களை கொண்ட அறிவுரைகளை இங்கே தந்துள்ளார்கள்.

சிலர் சிறிய நிறுவனங்களில் வேலை செய்வோர், தனது திறைமையை பயன் படுத்துவதற்காக Promotion, increment and improvement இவற்றை எதிர்பார்த்து பெரிய நிறுவனங்களில் வேலை தேடி செல்லலாம். ஆனால் அதை அதிக பட்சம் 40 வயதுக்குள் முடிவு செய்து கொள்ள வேண்டும். இன்றேல், வாய்ப்பு கிடைக்குமானால் தான் வேலை செய்யும் நிறுவனத்தையே பெரிய நிறுவனமாக மாற்ற பாடுபடவேண்டும்.

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

//LISTEN AND OBSERVE//

இந்த சர்க்யூட்தான் நிறைய பேருக்கு ரிப்பேராகி கிடக்கிறது. வேலையை கற்றுக்கொள்ள ஆரம்பிக்குமுன் தன் மண்டைக்குள் உள்ள சத்தத்தை ஆஃப் செய்யத்தெரியாதவன் வாழ்க்கையில் முன்னேறியதாக சரித்திரம் இல்லை என்று பன்ச் டயலாக் எழுதும் அளவுக்கு இது முக்கியமானது.

//பல ஆண்டுகளாக வேலைபார்த்த நிறுவனத்தை – நண்பர்களை- சூழ்நிலைகளை விட்டு விலகி புதிய இடத்தில்...//

is that your personal experience?

Unknown said...

இந்த மாதிரி அனுபவ கட்டுரைகளை படித்து செயல் படுத்தினால் ,நிறைய காலம் மிச்சமாகும் .காரணம் நிஜத்தில்
இந்த மாதிரி அனுபவங்களை பெறுவதற்கு நிறைய வருடங்கள் ஆகும் .இதை உள்வாங்கினால்வெற்றி நிச்சயம் .

இப்னு அப்துல் ரஜாக் said...

இப்ராஹீம் அன்சாரி காக்காவின் அனுபவம்,ஒரு பல்கலைக் கழக பாடம் போல் உள்ளது.

//அடுத்து நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள். இந்த காரியம் சிலருக்கு வெகு சுலபம் சிலருக்கு மிகக் கடினம். சிரித்தமுகம், பக்குவமான அணுகுமுறைகள் நண்பர்களை தேடித்தரும். உம்மணா மூஞ்சிகளுக்கு நண்பர்கள் கிடைப்பது கஷத்திலும் கஷ்டமே.//

சரியான அறிவுரை.எதையும் ஒரு சிரித்த முகத்துடன்,புன்னைகையுடன் செய்யும்போது நம் கூட பணிபுரிபவர்களை மட்டுமல்ல,நல்ல க்ஷ்டமர்களையும் பெறமுடியும் என்பது என் அனுபவம்.நம் தலைவர்,மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எப்போதும் புன்னகை பூத்த முகமாகவே இருப்பார்கள் என்பதை நாம் இங்கு நினைவு கூற கடமைப் பட்டுள்ளோம்.
// ஆகவே மாற்றங்களை தேடிப் போகும்போது அந்த மாற்றங்கள் நமக்கு ஏற்றங்களைத்தருமா என்று சிந்தித்து செயல்படவேண்டும் மாற்றங்கள் ஏமாற்றங்களாகப் போவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். //

நாம் செய்யப் போகும் முயற்சிக்களுக்கு முன்,இரண்டு ரக் அதகள் இஸ்திகாரா தொழுதுவிட்டு,படைத்தவனிடம் கேட்டு விட்டு - செய்தால் இன்ஷா அல்லாஹ் வெற்றி கை கூடும்.

இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,எல்லாம் வல்ல அல்லாஹ்,அருள் புரிவானாக

Anonymous said...

அன்பு தம்பி ஜாகிர்!

//பல ஆண்டுகளாக வேலைபார்த்த நிறுவனத்தை – நண்பர்களை- சூழ்நிலைகளை விட்டு விலகி புதிய இடத்தில்...//

is that your personal experience?//

அடிப்படையில் எனது பதில் ‘’’ ஆமாம்’’.

கடந்த 15 வருடங்களாக மஸ்கட்டிலும், துபாயிலும் ஒரே குழுமத்தில் பணியாற்றி வருகிறேன்.

பொருள் லாபம் மட்டும் கருதி இருந்தால் பல இடங்களுக்கு மாறி மாறி இருந்து இருக்கலாம், ஆனால் நட்பு- அங்கீகாரம்- அரவணைப்பு

ஆகிய அருங்குணங்களையும் பெரிதாக கருதுவதால் ஒரே இடத்தில் இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல் இருந்துவருகிறேன்.

தவிரவும், குறை ஒன்றும் இல்லை.

ஒரு உதவி கணக்காளராக சேர்ந்து – இன்று படிப்படியாக ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.

நாம் உழைத்தது ஒரு பக்கம் இருந்தாலும் அதை அங்கீகரிக்கும் நிர்வாகம் அமைவது பொதுவாக கஷ்டம்தான்.

எல்லாவற்றையும் விட உழைப்பை அங்கீகரிக்கும் மனப்பக்குவம்- அடுத்தவர் நிலைமைகளை புரிந்து கொள்ளும் பண்புகள் ஒரு நிறுவனத்தின் முதலாளிகளுக்கு முக்கியம். அவைகளில் குறை இல்லை என்பதால் பணம் மட்டும் பிரதானமல்ல என்ற அடிப்படையில் – TREATMENT- மிக முக்கியம் என்ற நோக்கில் இருந்து வருகிறேன்.

எனது சில முன்னாள் அலுவலகத்தோழர்கள் – ஆற்றின் மேல் கோபித்துக்கொண்டு போனவர்கள் - இன்று கலங்கி நிற்பதைக்காண்கிறேன்.

உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா என்று நிற்பதைப் பார்க்கிறேன். சிலர் உருண்டு கொண்டும் ஊர்ந்து கொண்டுமே இருககிறார்கள். பல தேர்கள் நிலைக்கு வரவில்லை.

சர்வீஸ் ப்ரேக் – இடமாற்றம்- அலைச்சல்- விசா மாற்றுதல் என்று அலைக்கழிப்புகள் – இப்படிப்பல.

மாறுதல்கள் பலருக்கு நல்ல வாய்ப்பாக வாய்ப்பதில்லை.

பட்ட, பார்த்த, கேட்ட அனுபவங்களின் அடிப்படியில்தான் இந்த பதிவை தந்து இருக்கிறேன்.

தம்பி சபீர் வீட்டு திருமணத்தில் உன்னை சந்திக்கலாம் என்று கருதுகிறேன். இன்ஷா அல்லாஹ்.

-இப்ராஹீம் அன்சாரி.

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி காக்கா, நிறைய படிப்பினை தெரிஞ்சிக்கிட்டேன்

ஆழம் பார்த்து காலை வை என்பதற்கு ஏற்ப நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது நல்லது... இந்த கருத்தை ஆழமா சொல்லிருக்கீங்க, எப்பவும் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது, அதுக்காக ஓவராக சிந்தித்து சேற்றில் காலை வைக்காமல் சூசகமாக இருக்க கத்துக்கோணும், இன்ஷா அல்லாஹ்

KALAM SHAICK ABDUL KADER said...

We have to work like a Bank Cashier. Lots of Money goes through Him. He Counts the Money carefully and with Dedication. He Will not have any attachment to that Money. He Knows that, that Money Belongs to Bank. His Duty is to Protect that Money. Similarly, We have to do our Works with Dedication And Without Attachment. Then We are free from all types of Anxiety.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எந்த வேலை செய்தாலும் மன திருப்தியோடு செய்யும் பொழுது பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. மற்றவர்களோடு சம்பளம் மற்றும் இதர செளகரியங்களில் அவர்களுடன் கம்பேர் பண்ணும் பொழுதுதான் பிரச்சினை கள்ளக்குழந்தையாய் பிறக்க ஆரம்பிக்கின்றது.

இன்று கடுமையான போட்டியும், பொறாமையும் நிறைந்துள்ள உலகில் மாற்றத்திற்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பணிபுரியும் ஓரிடத்திலிருந்து வேறொரு இடம் பல முயற்சிகளுக்குப்பின் செல்வது என்பது சாதாரன விசயமல்ல. சிலருக்கு அது ஒரு நல்ல மாற்றத்தை தான் விரும்பிய படி ஏற்படுத்திக்கொடுக்கலாம். பலருக்கு ஆஹா. தெரியாத்தனமாவுள்ள இங்கு வந்து மாட்டிக்கிட்டேன்....வெளியிலிருந்து பார்க்கும் பொழுது என்னம்மோண்டுள்ள நெனெச்சேன்......இதுக்கு பழைய கம்பெனியே எவ்ளோவ் தேவலையே.....என்ற நிலைக்கு ஆளாகி விடுவது வெளியே சொல்ல இயலா ஒரு பெரும் வேதனையாகி விடும். காரணம், மும்முனை தாக்குதல்கள் போல் "இருக்கிற‌து உட்டுட்டு ப‌ற‌க்கிற‌துக்கு ஆசைப்ப‌ட்டா இப்புடித்தான்" என்று வ‌ரும் ப‌திலை எண்ணி.....

என்ன‌ தான் நாம் ந‌ன்கு ப‌டித்து திற‌மைக‌ள் ப‌ல‌ பெற்றிருந்தும் ந‌ல்ல‌ நிறுவ‌ன‌ம் ந‌ம‌க்கு அமைவ‌தெல்லாம் அல்லாஹ்வின் நாட்ட‌த்தில் உள்ள‌ 'ந‌சீபை' பொருத்த‌து. இதைத்தான் மாற்று ம‌த‌த்தின‌ர் அவ‌னுக்கு அதிஸ்ட்ட‌ம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது, ந‌ல்ல‌ நேர‌ம், ல‌க்கு, ஒடம்புல ம‌ச்ச‌ம் என்று எதேதோ சொல்லிக்கொள்கின்ற‌ன‌ர்.

கார‌ண‌ம் இதை நாம் க‌ண்கூடாக வளைகுடா நாடுகளில் காண‌ முடியும். சிலர் மாஸ்ட்ட‌ர் டிகிரி ப‌டிச்சிட்டு இங்கு வ‌ந்து க‌ம்பெனியில் செக்ர‌ட்ட‌ரி, கிள‌ர்க் வேலையை சொற்ப சம்பளத்தில் பார்த்து வருவதும் ஹாஜி முஹ‌ம்ம‌து/ஃபிரான்ஸிஸ் சார்மார்க‌ள் அடிக்கிறார்க‌ள் என்று ப‌ய‌ந்து ஒன்ப‌தாவ‌து வ‌குப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஆரம்பத்தில் அரபு நாடு வ‌ந்த‌வ‌ர்க‌ளில் சிலர் இன்று ந‌ல்ல வசதி வாய்ப்புகளுடன் நிறுவனத்தின் மேனேஜ‌ர் ப‌த‌வியில் அல‌ங்க‌ரித்து வ‌ருவ‌தையும் காண‌ முடியும். (இது ஒரு உதார‌ண‌மேய‌ன்றி யாரையும் குறிப்பிடுவ‌த‌ற்காக‌ சொல்ல‌வில்லை.

இப்பொ புரியுதா த‌க்தீர்/ந‌சீபு என்றால் என்ன‌வென்று???

அதுக்காக‌ நாம் ப‌டிப்பை, உயர்க்கல்வியை ம‌ட்ட‌ம் த‌ட்டி முயற்சிகள் ஏதும் எடுக்காமல் த‌க்தீரை ம‌ட்டும் ந‌ம்பிக்கொண்டு அப்படியே சும்மா இருந்து விட்டால் அல்லாஹ் மேலும் ந‌ம் மீது கோப‌ப்பார்வையை செலுத்த‌ நேரிட‌லாம். நிலைமை மோச‌மாகும் முன் நாம் முய‌ற்சிக‌ளை செய்து கொண்டே இருப்போமேயானால் நிச்ச‌ய‌ம் வாழ்வின் ஒரு கட்டத்தில் அல்லாஹ் ந‌ம‌க்கொரு பிர‌காச‌மான‌ எதிர்கால‌த்தை அமைத்துத்த‌ருவான் என்ப‌தே நித‌ர்ச‌ன‌மான‌ உண்மை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு