நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கைகாட்டி கலாசாரம் ! 49

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், நவம்பர் 04, 2015 | ,


பழுதுபட்டு பாழடைந்த
எங்களூர் ரயில்நிலையம் - ஒரு பாரம்பர்யத்தின்
பண்பாட்டுப் பயன்பாடு
கலாசாரக் கல்வெட்டு

உப்புக் காற்றுறிஞ்சி
உருவான ஊரின்
விரிவான வரலாற்றின்
நுழைவாயில்

ஊர்வாசிகள் ஒவ்வொருவரும்
தத்தம்
வீட்டிலிருந்து
பிரித்துக் கட்டிவைத்துகொண்ட வரவேற்பரை

அகநானூறு புறநானூறென
எண்ணூறு நிலை மொழியும்
என்னூர் ரயில் நிலையம்

மருதமும் முல்லையும் சூழ்ந்த
நெய்தல் நிலத்தவர்
பிழைப்பு நாடி
குறிஞ்சிக்கும் பாலைக்கும்
கடல் கடக்குமுன்
தடதடக்கும் இந்த
தடம் கடப்பர்

ஒற்றைப் பெட்டியோடும்
ஓரிரு உடைகளோடும்
ஊர்விடும் உழைப்பாளியை
வழியனுப்பி
வலி சுமக்கும் சமூகத்தின்
வாசற்படி

உற்றாரும் உறவினரும்
நண்பர்களும் நேசங்களும்
குழுமி கலகலக்கும்
நிலையம்...
இருள் கிழித்து ஏற்றிவரும்
ஒற்றை வெளிச்சம் கண்டும்
ஊதல் ஒலி கேட்டும்
சலசலக்கும்

ரயிலில் ஏறுமுன்
சகோதரத் தழுவல்களின்போது
பார்வையோ நழுவி
சகியைத் தேடும்

கம்பி பிடித்து
வாசலில் நின்று
விடைபெறும் 'சபுராளி'
கூட்டத்திற்குக் கையசைத்து...

முக்காடிட்ட விழிகளில்
ஈரமும்
மேடிட்ட வயிற்றில்
பாரமுமாய்
ஓரமாய் நிற்பவளுக்குக்
கண்ணசைக்கும்

சிந்தை முழுதும்
சகியைச்
சேமித்து வைத்திருக்கும்
விந்தைப் பெண்டிரும்

அவர்
வெட்கிச் சிவந்து
முகக் கண்கள் மூடும்
நகக் கண்கள் கண்டே
சொக்கிப்போகும் ஆடவரும்
என
அழகான வாழ்வியல் எனதூரில்

அடை மழை பெய்யும்
அடர் இராப் போதினில்
குடை தேட விடாமல்
இடை நாட வைத்து

'வெயிலில் குளிக்கும்
வெக்கை நாட்களில்
நிழல் கண்ட நாயாய்
நினைக் கண்டு நானும்
நெகிழ்ந்து போகின்றேன்
நித்திரையும் நின் மடியில்'
என புலம்பும் ஆடவர்

எழுதும் கடிதங்கள்:

"கண்ணம்மா நீ
கடந்து சென்ற பாதையெலாம்
சிதறவிட்டுச் சென்ற
புன்னகைப் பூக்களைப்
புதையல் பூதமாய்ப்
பாதுகாத்து வருகிறேன்

இதழ் உதிர்த்தப் பூக்களை
இதழிடமே சேர்க்கும்
கடமை எனக்குண்டு
கண்ணம்மா

ஓரப் பார்வையிலும் -நின்றன்
ஒய்யாரப் பேச்சினிலும்
பேரம் படிந்ததுவே
பேரன்புப் பெட்டகமே, கண்ணம்மா
என்னுயிரின் விலையாக
உன்னிதயம் வாய்த்ததுவே!

ஊரெழும்புமுன் உலகெழுப்பும்
சூரியச் சுடரொழுகும் பொழுதுவரை
கைக்கெட்டும் தூரத்தில் -நின்றன்
மெய்க்கிடத்தும் கண்ணம்மா

நின்னெழிலை நினைந்துகொண்டே
நிலவொளியில் நனைந்துகொண்டே
நான் கடத்தும் இரவுகளை
நீ நடத்தும் நாட்கள் வேண்டும்"

என நீளும்!

சென்ற ரயில் வரும்வரை
வயிற்றில்
வந்த உயிர் வளர்த்து
காத்திருக்கும் கற்பு...

கூடவே
ஆளமர காத்திருக்கும்
ஆலமர நிழலும்

கைகாட்டி மனசு வைக்க
காலை வரும் ரயிலில்
ஏராளப் பொதிகளோடும்
இன்முக வடிவோடும்
இறங்கி வருபவரைக்

கைகாட்டிச் சொல்லும்
கால்முளைத்தப் பிள்ளைக்கு...:
'வாப்பா'!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

49 Responses So Far:

Ebrahim Ansari சொன்னது…

பண்பாட்டுப் பயன்பாடு
கலாசாரக் கல்வெட்டு

வீட்டிலிருந்து
பிரித்துக் கட்டிவைத்துகொண்ட வரவேற்பரை

வலி சுமக்கும் சமூகத்தின்
வாசற்படி

கூடவே
ஆளமர காத்திருக்கும்
ஆலமர நிழலும்

==============================================================

கவிதைக் காவியம் . கண்ணீர் வரையும் ஓவியம். இப்போது காத்திருப்பின் தொடக்கம்.
ஆனாலும் ஒரு சந்தேகம் - மீண்டும் இது இயங்கத் தொடங்கிவிட்டால் நமக்கு ரயில் சேவை கிடைக்கலாம். பட்டியலில் உள்ள அந்த பழைய இன்பங்கள் கிடைக்குமா? பரபரப்பான இடங்களின் பட்டியலில்தான் இதுவும் சேரும். மாற்றம் ஒன்றே மாறாதது.

அன்று அனுபவித்த இனிய நினவுகளை அசைபோட்டுக் கொண்டே வரும் காலத்தை வரவேற்போம். வேலைகள் சற்று விரைவாக நடைபெறுவதாகத் தெரிகிறது. .

இந்த இதய ஓலைச்சுவடிக் கவிதை கவிஞரின் மணிமுடியில் இன்னொரு முத்து.

ஆமினா சொன்னது…

உணர்வுகளை எழுத்துக்களில் பிரதிபலிக்க எல்லோராலும் முடியாது.

இக்கவிதையில் வெளிபட்டுள்ளது. மாஷா அல்லாஹ்..

அப்துல்மாலிக் சொன்னது…

வாழ்த்த வயதில்லை... கவிதையின் வரிகளை கோர்த்தமைக்கு எனது பாராட்டுக்கள் காக்கா, அருமை

sheikdawoodmohamedfarook சொன்னது…

/ கைகாட்டிசொல்லும் கால் முளைத்த பிள்ளைக்கு 'வாப்பா'/ இந்தஒருஇதயஒசை கேட்டபின்புதான் எத்தனையோவாப்பாக்கள் காதுபடைத்தகாரணத்தைஉ ணர்ந்தார்கள்.காதாலே தேன்குடித்தார்கள்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.
உடலெங்கிலும் பரவசம் இன்ப
மின்சாரமாய் பாய!அவசரம் இல்லாமல் நிதானமாய் படித்து சரம் .சரமாய் தொகுத்த கவிமாலையை
என்னவளின் கழுத்தில் போட்டு அழகு பார்த்தது போல் ஓர் உணர்வை ஊர் உணர்வுதந்தது!

crown சொன்னது…

பழுதுபட்டு பாழடைந்த
எங்களூர் ரயில்நிலையம் - பழுதுபட்டு பாழடைந்த
எங்களூர் ரயில்நிலையம் - ஒரு பாரம்பர்யத்தின்
பண்பாட்டுப் பயன்பாடு
கலாசாரக் கல்வெட்டு
-----------------------------------------------------
ஊரின் தலைபகுதியில் கட்டிய முன்டாசு இந்த ரயில் நிலையம் சிதிலம் அடைந்தாலும்,மனதில் பதிந்த ஓவியம் !பழுதுபட்டு பாழடைந்த
எங்களூர் ரயில்நிலையம் - ஒரு பாரம்பர்யத்தின்
பண்பாட்டுப் பயன்பாடு
கலாசாரக் கல்வெட்டு உண்மையை மென்மையாய்,செம்மையாய் உரைக்கும் கவிதை!

crown சொன்னது…

உப்புக் காற்றுறிஞ்சி
உருவான ஊரின்
விரிவான வரலாற்றின்
நுழைவாயில்
-------------------------------------------
வாயில் நுழையும் உப்பு கரித்தாலும் இந்த காற்று இன்பமாய் செரிக்கும்,உள்ளமெல்லாம் பூரிக்கும்!இதன் வாயில் வந்திறங்கும் எல்லாரையும் வாயெல்லாம் பல்லாக வரவேற்க்கும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அன்புக்குரியவங்களைச் சுட்டி பிறந்த கவிதை - பின்னர்
அதிரைக்குரியவர்களுக்கு சுகமான சுட்டலாக வளர்ந்த கவிதை - இது
வாழ்வியலைச் சொல்லும் வானுயரப் பறக்கும் மனதோடு பேசுகிறது....!

வரிகள் !

அதிரை.மெய்சா சொன்னது…

ரயிலை இழந்த நம் பகுதி மக்களுக்கு மனோராவும் கம்பனும் மகிழங்கோட்டை சந்திப்பில் கண்டதுபோல் உன் கவிதைக்குள் கண்டேன்.

crown சொன்னது…


அகநானூறு புறநானூறென
எண்ணூறு நிலை மொழியும்
என்னூர் ரயில் நிலையம்
----------------------------------------------------
நானூறு இரட்டிப்பாகி எண்ணூறாக,எண்ணூர் நிலையம் என் இன்பனிலை பலவாறு உளமாறகூற அஃறினையில் ஓர் உறவு நிலை உயிரில் கலந்த ஓர் நிலையாக!இப்படி உணர்வுகளின் பிரதிபலிக்கும் கவிதை தேன் ,மயக்கும் மொழினடை!அல்ஹம்துலில்லாஹ்!

sheikdawoodmohamedfarook சொன்னது…

மருமகனேசபீர்!கைகாட்டிசாயாமலேயேகம்பன்ஓடிவருவான்! !உங்கள்கவிதைபடிக்க !

crown சொன்னது…

மருதமும் முல்லையும் சூழ்ந்த
நெய்தல் நிலத்தவர்
பிழைப்பு நாடி
குறிஞ்சிக்கும் பாலைக்கும்
கடல் கடக்குமுன்
தடதடக்கும் இந்த
தடம் கடப்பர்
----------------------------------
நிலப்பரப்பின் நீளத்தை இவ்வளவு எளிதாக அளந்து அளவிடமுடியாத,அளவு அள்ளித்தந்திருக்கும் அற்புத அளவுகோல் இந்த கவிதை!

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கருத்துகளோடு உரையாடலாம் என்று வந்தேன்; க்ரவ்னின் கனிமொழிக் கருத்துகளின் மழையில் நனைந்த பிறகு பேசலாம் என்று காத்திருக்கிறேன்.

//ஊரின் தலைபகுதியில் கட்டிய முன்டாசு இந்த ரயில் நிலையம்//

கலக்குங்கள் க்ரவ்ன்.

crown சொன்னது…

ஒற்றைப் பெட்டியோடும்
ஓரிரு உடைகளோடும்
ஊர்விடும் உழைப்பாளியை
வழியனுப்பி
வலி சுமக்கும் சமூகத்தின்
வாசற்படி
---------------------------------------------------
இதன் நிலைப்படி பலரின் நிலை பார்த்தும் நிலை குழையாது இருந்த படி!இப்படி காலம் காலமாய் இருந்த நிலைப்படி ! தற்பொழுதய நிலவரப்படி! யாரின் நிலையறியாது எப்படி உள்ளது?

crown சொன்னது…

உற்றாரும் உறவினரும்
நண்பர்களும் நேசங்களும்
குழுமி கலகலக்கும்
நிலையம்...
இருள் கிழித்து ஏற்றிவரும்
ஒற்றை வெளிச்சம் கண்டும்
ஊதல் ஒலி கேட்டும்
சலசலக்கும்
-----------------------------------------------------
அந்த ஊதல் காதில் பாயும் காதல் மொழி!

crown சொன்னது…

ரயிலில் ஏறுமுன்
சகோதரத் தழுவல்களின்போது
பார்வையோ நழுவி
சகியைத் தேடும்
--------------------------------------
கவிஞரே! இங்கே தொடங்குது காதல் தடக்,தடக் சத்தமும்,பட,படக்கும் இதய ஒசையும் உள்ளே ஏதோ பிசைகிறது!கண் கசிகிறது!சகியே பயணமெல்லாம் ஒரு சதியே! என விழி பிதுங்கும் நிலை நிலையம் தாண்டி அவள் மட்டுமே அறிவாள்!அரிவாள் கொண்டு இதயம் அறுக்கப்படும் நிலையை!

crown சொன்னது…

கம்பி பிடித்து
வாசலில் நின்று
விடைபெறும் 'சபுராளி'
கூட்டத்திற்குக் கையசைத்து..
--------------------------------------------------------
பெரும்பாலும் சபுராளியும் ,கபுராளியும் விடை பெரும் பிணம்தான் அது நிஜப்பிணம்! இவ(ர்)ள் நடைப்பிணம்!

crown சொன்னது…

முக்காடிட்ட விழிகளில்
ஈரமும்
மேடிட்ட வயிற்றில்
பாரமுமாய்
ஓரமாய் நிற்பவளுக்குக்
கண்ணசைக்கும்
-----------------------------------------------------
உணர்வுகளையும் பாத்திரமாக்கி அதை பத்திரமாய் பாதுகாத்து படிக்கும் படி,காதல் உணர்வுகளின் காட்சி தொகுப்பு கண்ணீர் காவியம்!

crown சொன்னது…

சிந்தை முழுதும்
சகியைச்
சேமித்து வைத்திருக்கும்
விந்தைப் பெண்டிரும்

அவர்
வெட்கிச் சிவந்து
முகக் கண்கள் மூடும்
நகக் கண்கள் கண்டே
சொக்கிப்போகும் ஆடவரும்
என
அழகான வாழ்வியல் எனதூரில்
--------------------------------------------------------------------
விக்கி பீடியாவே விக்கி நிக்கிறது!இப்படி கவிதை நூலெல்லாம் சொக்கி நிற்கிறது! இப்படி பொருள் பொதிந்த கவிதை வரிகள் கண்டு! கற்கண்டு வார்தைகள் நான்கு கண்கள் கண்டுகொண்டாதாலா???இல்லை இதை கவிஞர் தன் வாழ்வில் கண்டதாலா?

crown சொன்னது…

அடை மழை பெய்யும்
அடர் இராப் போதினில்
குடை தேட விடாமல்
இடை நாட வைத்து
-------------------------------------------------
கால்கள் பின்னும் நடைதடுமாறும்!கல்லுகடை வீதி சென்றுவந்தவன் போல் , நாவெல்லாம் குழறும்!இருந்தாலும் கொடி இடை பிடிக்கும் கை"கடைபிடிக்குமா நாகரீகம்?கவிஞரே!தனிமை இன்றுதான் புரிகிறது எவ்வளவு கொடுமை!

crown சொன்னது…

'வெயிலில் குளிக்கும்
வெக்கை நாட்களில்
நிழல் கண்ட நாயாய்
நினைக் கண்டு நானும்
நெகிழ்ந்து போகின்றேன்
நித்திரையும் நின் மடியில்'
என புலம்பும் ஆடவர்
----------------------------------------------------
வெட்கை சக்கையாய் பிழிந்தெடுக்க! கரும்பாலையில் சக்கை நான் கரும்பு சாரே நீயின்றி நானும் ஈரம் பெருவதெப்படி! நம் வாழ்கைதான் இனிப்பததெப்படி?என் உயிரின் ஊற்றும் நீயே! நீ ஊற்றும் உணர்வும் தேனே!

crown சொன்னது…

"கண்ணம்மா நீ
கடந்து சென்ற பாதையெலாம்
சிதறவிட்டுச் சென்ற
புன்னகைப் பூக்களைப்
புதையல் பூதமாய்ப்
பாதுகாத்து வருகிறேன்
---------------------------------------------------------
அவள் பாதம் எழுதிய தடம் கவிதை மொழியென்றால்! அந்த பூ தம் புண்ணகைவீசினால் அது புதையல் தானே? அந்த பூவும் தையல் தானே? அவளே அவளை கோர்த்து என்னையும் மணக்க செய்கிறாள்!வெறும் நாறுதான் நான்!

crown சொன்னது…

இதழ் உதிர்த்தப் பூக்களை
இதழிடமே சேர்க்கும்
கடமை எனக்குண்டு
கண்ணம்மா
------------------------------------------
ஒரு புன்னகை வாங்கினேன் உனக்காக அதை உன்னிடமே தந்துவிடுவேன் ,எனக்காக!உன் புன்னகையைவிட சிறந்த புன்னகை வாங்க நான் எங்கு போவது?

crown சொன்னது…

ஊரெழும்புமுன் உலகெழுப்பும்
சூரியச் சுடரொழுகும் பொழுதுவரை
கைக்கெட்டும் தூரத்தில் -நின்றன்
மெய்க்கிடத்தும் கண்ணம்மா
---------------------------------------------------------------
என்னை எங்கோ கடத்தி என்னை என்னிடமே திருப்பி கொண்டு வந்து சேர்க்கும் பணி,உன் மகத்தான பணி வியக்கிறேன்! நான் உண்ணுள் தொலைந்து போகும் பொழுதெல்லாம் நான் மெய் மறந்தாலும் மெய்யாக இருக்கிறேன் என்பதை நான் கண்டு கொள்ளும் சொரனை தந்தவளே!

crown சொன்னது…

நின்னெழிலை நினைந்துகொண்டே
நிலவொளியில் நனைந்துகொண்டே
நான் கடத்தும் இரவுகளை
நீ நடத்தும் நாட்கள் வேண்டும்"
---------------------------------------------------------
நீயில்லா இரவுகளும், நிலவும் கூட வெறுமை தரும் இருளே! நீ அருகில் இல்லாத அருகிபோன நாட்கள் என் மென்மையான குணத்தை கூட இறுகிப்போக செய்கிறது!எனக்கே தெரியாமாலே என்மேலே என் அக்கறைகள் குறுகிபோகிறது! நீ இல்லாமல் என் காதல் உறுகி போகிறது! நித்தம் , நித்தம் கொஞ்சங்கொஞ்சமாய் உயிர் போகிறது! உனக்கான எனதுயிரை காத்திடவே உன் அருகாமை வேண்டும்!

crown சொன்னது…

சென்ற ரயில் வரும்வரை
வயிற்றில்
வந்த உயிர் வளர்த்து
காத்திருக்கும் கற்பு...
---------------------------------------------------
சென்ற ரயி"லோடு" சென்ற அவள் உயிரின் பெரும் பகுதி! அந்த உயிரின் ,சொந்த உயிர் தந்த மீதி உயிரை கருவாகி காத்திருகுக்கும் "உயிரைச்சுமக்கும் கற்பு எனும் உயிரினும் மேலான குணம்!கோடி கொடுத்தாலும் சமமாகுமா?பெண்னே! உன் முன்னே எப்பொருளும்????

crown சொன்னது…

கைகாட்டி மனசு வைக்க
காலை வரும் ரயிலில்
ஏராளப் பொதிகளோடும்
இன்முக வடிவோடும்
இறங்கி வருபவரைக்

கைகாட்டிச் சொல்லும்
கால்முளைத்தப் பிள்ளைக்கு...:
'வாப்பா'!
----------------------------------------------------------------------
கவிதை இங்கே ஆனந்த கூத்தாடுகிறது!கைகாட்டி சொல்லும் கால்முளைத்த தலைப்பிள்ளைக்கு"வாப்பா!
பாப்பாவுக்கு வாப்பாவை சந்திக்கும் வாய்ப்பா அமைய கைகாட்டியும் முத்தாய்ப்பா ஒருகாரணியெனில் நன்மை செய்யும் கைகாட்டிக்கு ஒரு டாட்டா!

crown சொன்னது…

கம்பன் வந்தாலும் வராவிட்டாலும் கொஞ்சம் சிறிது தொலைந்த காதலை மறுபடியும் புதிப்பிக்கும் படி !கவிதை மழை குடை வேண்டாம் தலைமேலே கொட்டோ கொட்டென்றும் கொட்டட்டும் , மேனியெல்லாம் இன்ப நீர் சொட்டட்டும்! நன்றி! இதயத்தின் மாட்டிக்கொண்ட சின்ன பிசிறான கவலையை துடைத்தெடுத்ததற்கு!

Ebrahim Ansari சொன்னது…

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கவிதையும் கருத்துக்களும் கிரவுன் அவர்களின் கவித்துவமும் தமிழ்த்தேனில் மூழ்கி திக்கு முக்காட வைக்கிறது.

வெளியே அடை மழை! இடியுடன் மின்னல்
இங்கே கவிதைமழை ! சபீருடன் கிரவுன் .

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

/இந்த இதய ஓலைச்சுவடிக் கவிதை கவிஞரின் மணிமுடியில் இன்னொரு முத்து.//

நன்றி.

கலைத்துறையில் 'மோதிரவிரல் குட்டு' என்று சொல்வார்கள். குறிப்பிட்ட திறமையில் தலை சிறந்த ஒருவர் அதே துறையைச் சார்ந்தவர் நன்றாகச் செய்தால் பாராட்டுவதைத்தான் அப்படிச் சொல்வார்கள்.

எனக்கு உங்கள் கருத்து ' மோதிர விரல் ஷொட்டு'!

வார்த்தை வாள்வீசும்
வீரிய எழுத்தாளர்
வாள்தனை உரையிலிட்டு
வாஞ்சையோடு - என் தலை
வருடியதுபோல்....

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய சகோதரி,

//உணர்வுகளை எழுத்துக்களில் பிரதிபலிக்க எல்லோராலும் முடியாது. //

முடியாதுதான். என்னாலும் முடியாதுதான்.

ஏதாவது ஓர் ஊணர்வை எடுத்துக்கொண்டு எழுதலாம் என்று முயன்றாலும் இரண்டு வரிகளுக்குமேல் எழுத முடிவதில்லை.

இதுபோன்ற உணர்வுகள்,
ஏதோ ஒன்று
என்னை வைத்து
தன்னை எழுதிச் சென்றதுபோல்...

நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//வாழ்த்த வயதில்லை//

அன்புத்தம்பி வாசிக்கும் ரசனையில் நீங்கள்கூட 'அண்ணா' தான்.

எழுதும் திறமையைவிட
வாசிக்கும் ரசனையே
படைப்புக்கு வெற்றி தரும்

நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//காதாலே தேன்குடித்தார்கள். //

//
கைகாட்டி சாயாமலேயே
கம்பன் ஓடி வருவான்
உங்கள்
கவிதை படிக்க !//

எல்லோரிடமும் கவிதை இருக்கிறது; அதை வெளிக்கொணரவே இதுபோன்ற பதிவுகள் தூண்டிலிடுகின்றன.

நன்றி!

sabeer.abushahruk சொன்னது…

அன்பு மெய்சா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//மனோராவும் கம்பனும் மகிழங்கோட்டை சந்திப்பில் கண்டதுபோல்//

ஒப்பீடு அழகு! கவிஞனாச்சே... கற்பணைக்குச் சொல்லவா வேண்டும்!

நன்றி

sabeer.abushahruk சொன்னது…

அபு இபு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//அன்புக்குரியவங்களைச் சுட்டி பிறந்த கவிதை //

உஷ்ஷ்ஷ்...

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய க்ரவ்ன்,

வ் அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

//ஊரின் தலைபகுதியில் கட்டிய முன்டாசு இந்த ரயில் நிலையம் //

என்று நீங்கள் துவங்கியபோதே எனக்கு விளங்கியது, இன்று நல்ல தமிழ் விருந்து நிச்சயம் என்று.

மாஷா அல்லாஹ். ஏமாற்றவில்லை நீங்கள்!

இதன் வாயில்
வந்திறங்கும் எல்லாரையும்
வாயெல்லாம் பல்லாக
வரவேற்க்கும்!

-----------------
இதன் நிலைப்படி
பலரின் நிலை பார்த்தும்
நிலை குழையாது
இருந்த படி!
இப்படி
காலம் காலமாய்
இருந்த நிலைப்படி !
தற்பொழுதய நிலவரப்படி!
யாரின் நிலையறியாது
எப்படி உள்ளது?
--------------

அந்த ஊதல் ஒலி
காதில் பாயும்
காதல் மொழி!

-------------
சகியே
பயணமெல்லாம் ஒரு சதியே!
------

என்று என் ஒவ்வொரு உணர்வுக்கும் அர்த்தம் சேர்த்துச் செல்லும் நீங்கள் மேலே மேலே சொல்லும்போது உங்கள் கருத்துகளுக்கு கருத்தெழுத வைத்துவிடுகிறீர்கள்:

sabeer.abushahruk சொன்னது…

தங்கள் கருத்துகள் எல்லாவற்றிலும் கருணை பொதிந்த காதல் நிலவினாலும் கடைசியில்

"இதயத்தின் மாட்டிக்கொண்ட சின்ன பிசிறான கவலையை துடைத்தெடுத்ததற்கு!"

என்பது என்னை மிகவும் கவர்ந்தது!

சோகமும் சந்தோஷமும்
கலந்த
கைகாட்டி கலாசாரம்

வாய்ப்பொத்தி குனியும்
கைகட்டிக் கலாசாரத்தைவிட
உயர்ந்ததுதான்...
இல்லையா க்ரவுன்!

நன்றி, வாழ்த்துகள்!

N. Fath huddeen சொன்னது…

கைகாட்டி,
இது என்ன!
கவி மாலையா அல்லது
கவி மாளையா, இல்லை இல்லை
கவி மழை!

அடிகள் ஒவ்வொன்றும் super Jo!

N. Fath huddeen சொன்னது…

பழைய நினைவுகளை அள்ளி எடுத்து தந்துள்ளீர்கள்.
நாம்
படித்த இடங்கள்,
பழகிய இடங்கள்,
மறக்க இயலா மாண்பு இடங்கள்.

N. Fath huddeen சொன்னது…

கம்பன் எப்போது திரும்பி வருவான் என்று எதிர்பாத்து இருக்கும் உள்ளங்களுக்கு ஒத்தடம், இந்த கவி மழை.

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer Abushahruk,

The poem is so sentimental packed with heart stirring emotions.!!!

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

Ahamed Ameen சொன்னது…

//கம்பி பிடித்து
வாசலில் நின்று
விடைபெறும் 'சபுராளி'
கூட்டத்திற்குக் கையசைத்து...//

The lines reminded my father's sending off time to Malaysia with all of my kin and kith.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

கனவு சொன்ன காரணம்
கலக்கத்துடன் எதிர்பார்க்கும் புகைவண்டி வருமென்று
கவிதை வரிகளில் தோரணம்

வருமென சொல்லும் நெஞ்சம்
வாஞ்சைமிகு வலிகளையெலாம் வரிந்துகட்டும் உணர்வோசை
வண்டி ஓசையை மிஞ்சும்

Yasir சொன்னது…

பிரிவு /காதல்/ பழைய ஞாபங்கள் ஒன்றையும் விடாமல்....சொல்களில் தேன் தடவி சொக்க வைக்கும் கவிதை இது.....பொறாமையாகவும் பெருமையாகவும் இருக்கு கவிக்காக்கா..

Yasir சொன்னது…

//பெரும்பாலும் சபுராளியும் ,கபுராளியும் விடை பெரும் பிணம்தான் அது நிஜப்பிணம்! இவ(ர்)ள் நடைப்பிணம்! // சகோ கிரவுன் உங்களால் தமிழ் தலைதிமிர்ந்து நிற்க்கின்றது

sabeer.abushahruk சொன்னது…

ஜோ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//நாம்
படித்த இடங்கள்,
பழகிய இடங்கள்,
மறக்க இயலா மாண்பு இடங்கள்.//

கற்பனையில்லாத உண்மையான கலையான ஞாபகங்கள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அவற்றை கலையாமல் காத்து வரும் இதயம் அப்போதைக்கப்போது பகிர்ந்து மகிழ்ந்து கொள்கிறது.

நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

Dear brother B. Ahamed Ameen

Wa alaikkumussalam warah...

"
The lines reminded my father's sending off time to Malaysia with all of my kin and kith."

It so happened in every person of Adirai. The painful moment of sending off will always get consoled by the receiving moments.

Pain and pleasure on and off!

Thanks for your comment and support.

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய கவியன்பன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//உணர்வோசை
வண்டி ஓசையை மிஞ்சும்//

தண்டவாளத்தைவிட சப்தமாய்
தடதடக்கும் இதயம். வழியனுப்பக் காத்திருக்கும்போதான வலிக்கு அழைத்துவர காத்திருக்கும் கணமே மருந்து.

நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

தம்பி யாசிர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//சொல்களில் தேன் தடவி சொக்க வைக்கும் கவிதை இது..//

வாசிக்கும் ரசனையே, வழங்கியது தேனா வீணா என்பதை வழங்கியவனுக்குச் சொல்கிறது.

நன்றி. வாழ்த்துகள்!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+