Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று சுமையாகிப்போன அன்றைய சுகங்கள் 20

அதிரைநிருபர் பதிப்பகம் | February 20, 2012 | , ,


என்ன தான் நாம் இன்று படிப்பாலும், பதவியாலும், பணியாலும் இன்னும் பல காரண, காரணிகளால் வாழ்வில் ஒரு உயரிய நிலையிலும், வசதி வாய்ப்புகளிலும் இருந்து வந்தாலும் உள்ளத்திற்குள் பசுமை தரும் அந்த பழைய, இனிய நினைவுகளை இன்றைய காலத்துடன் ஒப்பிட்டு உள்ளத்திற்குள் ஒரு ஏக்கத்துடனும் ஒரு ஏமாற்றத்தை கண்ட உணர்வுடனும் நாம் வாழவேண்டியுள்ளது இக்காலத்தில். அதிரையில் பிறந்து வளர்ந்த நமக்கு உள்ளப்பெருங்கடலில் பிடிபட்டவை சில:

1. அதிகாலை எழுந்து இறைவனைத்தொழுது பள்ளிக்குச்சென்று உஸ்தாதிடம் பாடம் படித்து வருவது.

2. பள்ளி விட்டு வந்ததும் நண்பர்களுடன் சென்று குளத்தில் வேண்டிய நேரம் குளித்து கும்மாளமிட்டு வருவது.

3. பள்ளிக்கூடத்திற்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ சென்று வருவது.

4. குறைந்த காசே கையில் இருந்தாலும் வேண்டியதை வாங்கி உண்டு மகிழ்வது. 

5. பெற்றோரை மதித்து சொந்த பந்தத்தினரையும், உற்றாரையும் பேணி நடந்து "கண்ணான வாப்பா", "தங்கமான புள்ளெ" என அவர்களின் திருவாய் மலர்ந்து நிற்பது.

6. சிரமங்கள் ஏதுமின்றி சொற்ப பணத்திலேயே மனை வாங்கி வீடு கட்டி முடிப்பது.

7. வீட்டில் நடைபெறும் திருமண காரியங்களை கையில் உள்ள காசை வைத்து எளிமையாக இருந்தாலும் சுற்றமும், நட்பும் கூடி சிறப்புடன் நடத்தி முடிப்பது.

8. வீட்டில் டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே போதும் வீட்டின் பெரும் வேலைகள் நடந்தேறுவது.

9. மருத்துவ தேவைகளுக்காகவோ, உறவினர்களை வழியனுப்பவோ அல்லது அவர்களை இறக்கி வரவோ சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸில் ஊரிலிருந்தே குதூகலமாய் சென்று வருவது.

10. புற்களைக்கொண்டு நிரப்பி அதன் மேல் பாய் விரித்து நல்ல மெத்தை போல் இருக்கை அமைத்து அதன் மேல் அமர்ந்து குதிரை வண்டி சவாரி அவ்வப்பொழுது செய்வது.

11. பதினஞ்சுருவாக்கி (பதினைந்து ரூபாய்க்கு) மீனு வாங்கி பகல் ஆக்கிய ஆணத்தை அப்படியே ராத்திரிக்கும் வச்சி குடும்பமே சோறு உண்டு வருவது.

12. ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒட்டு மொத்த குடும்பமே ஒரு மாதத்தை சிரமமின்றி ஓட்டி வருவது.

13. எவ்வித மத துவேசமும் இல்லாமல் அவரவர் மதத்தை அவரவர் பேணி அச்சமின்றி அமைதியுடன் வாழ்ந்து வருவது.

14. சொந்த வயலில் நெல் விதைத்து முறையே அறுவடை செய்து விளைச்சல் நெல்லை வீட்டின் பத்தாயத்தில் சேமித்து வருடம் முழுவதும் வீட்டின் அரிசித்தேவைகளை சிரமமின்றி நிறைவேற்றுவது.

15. வீட்டு தோப்பில் பருவத்தில் வெட்டப்படும் தேங்காய், மாங்காய்களை வைத்து அதன் வருவாயைக்கொண்டு அந்த தோப்பை பராமரிப்பது அத்துடன் வீட்டுத்தேவைகளையும் (இளநீர், மாங்காய், மாம்பழம், பலாப்பழம், எலுமிச்சை, வாழை) நிறைவேற்றிக்கொள்வது.

16. வசதி வாய்ப்பு குறைவால் ஊரில் வாகனங்களும் குறைவு அதனால் விபத்துக்களால் ஏற்படும் உயிர்ச்சேதமும் குறைந்திருப்பது.

17. ஆரோக்கியமான வாழ்வால் ஊரில் குடும்ப, தெரு பெரியவர்கள் நிறைந்திருந்தது. அவர்களின் அறிவுரையும், ஆலோசனையும் எம் வாழ்வை சீர்படுத்தியது.

18. அன்று கலப்படம் இல்லாமல் உண்டு, உடுத்திய பொருட்களால் வாழ்க்கை ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் செல்வது.

19. கடிதத்திற்குள் புதைந்திருந்த ஆயிரம் சந்தோசங்களும், ட்ரங்காலுக்காக காத்திருந்து உறவினர்களுடன் உரையாடியதும் ஆனந்தத்தை வாழ்வில் பஞ்சமின்றி அள்ளித்தந்தது.

20. இயக்கங்களும் அதனால் ஊர் ஒற்றுமைக்காக வரும் தயக்கங்களும் குறைவாக இருந்தது.

21. தொலைதூர நாட்டுப்பயணங்கள் இல்லாமல் அவை தொலைதூரமாகவே இருந்து வந்தது. அதனால் வரும் பல தொல்லைகளும், பேராசைகளும் இல்லாமலேயே இருந்தது.

22. அன்றைய ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படும் பொழுது நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தான் பிரித்து பேசப்பட்டனர். உலக மகா கொள்ளைக்காரர்கள் என்றோ அல்லது ஊழல் பெருங்கடல் என்றோ யாரும் விமர்சிக்கப்படவில்லை. இத்தனை பணங்காசுகளும் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது.

23. சுவிஸ் நாடு எங்கிருக்கிறது என்று அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் போனதால் அங்கு கருப்புப்பணத்தை பதுக்க வழியில்லாமல் போனது.

24. சுலநலன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்தாலும் பொதுநலன் எங்கும் பரவலாக பரவிக்கிடந்தது.

25. மாணவர்கள் பள்ளியில் பாடம் மட்டுமே படித்து வந்தனர். கலாச்சார சீரழிவுகள் எல்லாம் அவர்கள் கனவுகளில் கூட வந்து செல்லாமல் போனது.

26. நிலத்தடி நீர் வீட்டின் கிணத்தடியில் படுத்துறங்கி நமக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல் அருகிலேயே காட்சி தந்தது. ஆழ்குழாய்க்கிணறுகளுக்கெல்லாம் அவசியம் இல்லாமல் இருந்தது.

27. பனைஓலைப்பையில் (ஒமல்) புழக்கம் பரவலாக இருந்து வந்ததும் பிளாஸ்டிக் பைகளெல்லாம் யாரோ வெளிநாட்டு சபுராளிகள் கொண்டு வந்திறங்கினால் தான் உண்டு என்றிருந்தது.

28. முடைந்த பாயில் படுத்துறங்கி எழுந்த சுகம் இன்று பஞ்சுமெத்தை படுக்கைகளில் கொஞ்சமும் கிடைத்திடாமல் போனது.

29. ஓட்டு வீட்டினுள் சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவி இருந்தாலும் உள்ளத்திற்குள் எவ்வித கள்ளம், கபடமும் ஊடுருவாமல் இறையச்சத்தால் நேர்மையையே பெரும்பான்மை மக்கள் பெற்றிருந்தது. 

30. பெற்றோர்களை மதித்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து அவர்களின் நெஞ்சம் குளிர்ந்து எல்லாவளமும் நிரம்பப்பெற்று நீடுழீ வாழ அவர்களின் மாசற்ற து'ஆவைப்பெறுவது.

இன்ஷா அல்லாஹ் படிப்பவர்களுக்கு ஆர்வமிருந்தால் எம் பட்டியலும் நீளும்...!

-மு.செ.மு. நெய்னா முஹம்மது

20 Responses So Far:

Yasir said...

வாவ்...ச்.கோ.நெய்னா என்றாலே ஊர்மணம்தான்...இந்த முப்பது நினைவுகளையும் அசைபோட்டுக்குகொண்டே மீதி உள்ள வாழ்வை சுகமாக ஓட்டி விடலாம் போல...பாவம் நம் குழந்தை இந்த பரபரப்பான வாழ்க்கையில் மாட்டி சிக்கிதவிக்கின்றன

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

old is gold என்பார்கள்.நெய்னாவின் பழைய நினைவுகளால் கடலும் கூட தங்கமாக மின்னுகின்றன.

//இன்ஷா அல்லாஹ் படிப்பவர்களுக்கு ஆர்வமிருந்தால் எம் பட்டியலும் நீளும்...!//

எம்.எஸ்.எம்.ன் நாவலால் ஆர்வம் இழந்தவர் எவர்.ஆவலாய் எதிர்பார்ப்பவர் பலர்.

Noor Mohamed said...

தம்பி நெய்னா, உன் பட்டியலைப் பார்த்து பழமையை எண்ணி மனம் ஆறுதல் அடைகிறது. அதே நேரத்தில் மக்களின் மார்க்கம் மாற்றமாய் செல்கிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கு ஏற்ப அன்று வீடுகள் முழுதும் கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ ஆட்களே இல்லாமல் பூட்டிக் கிடக்கும் அழகிய வீடுகள்தான் நம்மூரில் அதிகம்.

அன்று நம் மக்கள் கிராமங்களில் கடைவைத்து வியாபாரம் செய்தனர். அப்போது கிராமவாசிகள் நம்மை மரைக்கா, முதலாளி என அழைத்தனர். மேலும் பாதுகாப்பும் கொடுத்தனர். ஆனால் இன்றோ கிராமங்களிலுள்ள நம் தோட்டங்கள் வயல்களுக்கு சென்றால், என்ன காக்கா? என்ன வேலையாக வந்தீர்கள்? என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

//இன்ஷா அல்லாஹ் படிப்பவர்களுக்கு ஆர்வமிருந்தால் எம் பட்டியலும் நீளும்...!//

இன்ஷா அல்லாஹ், பட்டியலைத் தொடருக. படித்து பரவசமடையாவிட்டாலும் ஆறுதலாவது அடையலாம்.

சேக்கனா M. நிஜாம் said...

சுகமான பழைய அனுபவங்கள் !

sabeer.abushahruk said...

அழகான நினைவுகள் நெய்னா.

இன்னும் பத்து சேர்த்து "இனியவை நாற்பது" என தந்திருக்கலாம்.

வாழ்த்துகள்.

Unknown said...

புற்களைக்கொண்டு நிரப்பி அதன் மேல் பாய் விரித்து நல்ல மெத்தை போல் இருக்கை அமைத்து அதன் மேல் அமர்ந்து குதிரை வண்டி சவாரி அவ்வப்பொழுது செய்வது.


-----------------------------------------------------------
எப்பவோ குதிரை வண்டியில் ராஜாமடம் ஏரியில் குளிக்க போனபோது ,சாலையின் இருபுறங்களிலும்

பச்சை பயிரின் வாசமும் ,குதிரைவண்டியின் புல் வாசமும் மீண்டும் சுவாசித்து போல் இருக்கிறது நெய்னா

உன் கட்டுரையை படித்தபோது .

Anonymous said...

அன்புள்ள எம். எஸ்.எம். நெ. அஸ்ஸலாமு அலைக்கும்.

வசந்த காலத்து நினைவுகளை அசந்த காலத்தில் அசைபோடுவது ஒரு ஆனந்தம்.

அது ஆன்லைன் அப்பாக்களுக்கே அதிகம் புரியும். ( தம்பி நூர் முகமது- சரிதானே?)

நினைவு ஊட்டிய தங்களுக்கு பாராட்டுக்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு ரசித்தோமோ அதைவிட அதிகம் அந்நாளை எண்ணி ஏங்குகிறோம்.

இன்னும் தாருங்கள்.

வஸ்ஸலாம்.

இபுராகிம் அன்சாரி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பரீட்சை நேரமிதுன்னு MSM(n)கிட்டே சொல்லியிருந்தேனா ! அதுக்கு ஏற்றார்போல், படித்ததை, பார்த்ததை, பழகியதை எப்படியெல்லாம் ஒன்று விடாமல் ஞாபகத்தில் வைத்திருக்கலாம் அதனை எப்படியெல்லாம் கோர்வையாக எழுதலாம்னு பயிற்சியைத் துவங்கியிருக்கிறார்....

அசைபோட MSM(n)க்கு ஆசையோ ஆசை !

//மாணவர்கள் பள்ளியில் பாடம் மட்டுமே படித்து வந்தனர். கலாச்சார சீரழிவுகள் எல்லாம் அவர்கள் கனவுகளில் கூட வந்து செல்லாமல் போனது.//

இன்றும் அப்படித்தான், பள்ளியை விட்டு வெளியில் வந்துதான் (அன்று சினிமா தியேட்டர் ஒன்று மட்டுமே சீர்கேட்டின் கேட்வேயாக இருந்தது) இன்று மொபைல், இண்டர்நெட், அதற்கு அடுத்து சினிமா....

சீரியல்களில் சீரழிவது மாணவர்களோ அல்லது மாணவிகளோ அல்ல (மேலோட்டமாக கவனிக்கும்போது) அவர்களைப் பெற்றவர்கள்தான் அதில் மூழ்கி பிள்ளைகளை கவணிக்க தவறிவிடுகிறார்கள்...

ஒரு சின்னஞ்சிறு மாணவனிடம் சொன்னேன், பரீட்சை நெருங்கிவிட்டது டீவியெல்லாம் பார்க்க கூடாது என்று...

அந்த சின்னஞ்சிறுசு சொன்னது என்னை அசர வைத்தது...

"நான் டி.வி.யைப் பார்ப்பதே இல்லை ஆனால் அது என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறதே, அத முதல்ல என்னைப் பார்க்காமல் செய்யனும்" என்றான்....

யோசிங்க மக்களே... ஒருசில வீடுகளில் நோன்பு காலங்களில் டிவிக்கு போர்வை போர்த்திவைப்பது அந்தக் காலம், அப்படியே தூக்கி சன்சைடு மேல ஏத்திடுங்களேன்...

புள்ள படிச்ச, நீங்கதான் நிமிர்ந்து உட்காரப் போறீய...

அதுக்கு ஒத்துழைங்களேன் பிள்ளைங்களோடு, அவர்களை மார்க்குக்காக படி படி என்று சொல்லிவிட்டு அடுத்த ரூமில் சென்று டிவி பார்ப்பதும், அரட்டை அடிப்பதையும் ஒதுக்கி வைத்து விட்டு நீங்களும் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் போல் தியாகம் செய்து பழகுங்கள் (குறைந்தது 60 நாட்களே)....

Saleem said...

//அதிகாலை எழுந்து இறைவனைத்தொழுது பள்ளிக்குச்சென்று உஸ்தாதிடம் பாடம் படித்து வருவது//

மேற்கூறப்பட்டவை மட்டும் இன்றைய நம்மூர் ஆலிம்கள் மற்றும் இளைய உலமாக்களின் முயற்சியால் சுபுஹு தொழுகைக்குப்பின் பல மஸ்ஜித்களில் மக்தப் என்ற பாடத்திட்டம்(இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஒரே பாடத்திட்டம்) நடைபெற்று வருகிறது .மாஷா அல்லாஹ் பெற்றோர்கள் அனைவரும் பிள்ளைகளை அனுப்பி பயன்பெற்றுகொள்ளலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் ச்கோதரர் மு.செ.மு.நெ. ,

உங்களின் நினைவு நாடாக்களைச் சுழற்றியதால்
எங்களின் இருதயங்களில் ஏக்க கீதங்கள் ஒலிக்கின்றன
துறந்து வந்தோம் தூர தேசமே யானாலும்
மறந்து போகுமோ மண்ணின் வாசனை

அன்று குளத்தில் நீச்சல் கற்றோம்
இன்று நீச்சல் அறியா இளைஞர்கள்

இன்னும் இன்னும் கிளறுங்கள் எண்ணத்தில்
மின்னும் மண்ணில் மறைந்த வண்ணங்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படிக்க நாங்கள் தயாரா இருக்க
படைக்க நீ தயங்கலாமோ!

(ப)புடிச்ச முப்பதும் முத்தான மாண்புகள் . வளர்க மெமரி பவர்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஏசாமல் கருத்திட்ட எல்லார்க்கும் ரொம்ப தேங்க்ஸ்....

எதோ நம்மனாலெ முடிஞ்சது இருவத்தஞ்சி முப்பது வருசதுக்கு உட்பட்டது. பழைய ஆட்கள் இன்னும் பழசையெல்லாம் எடுத்து உட்டா அசந்துடுவோம் போல ஈக்கிதே.....

பரிச்சை எழுதப்போற கண்ணான வாப்பாமாரா, கண்ணான உம்மாமாரா, பரிச்சையிலெ மார்க்கு கொறச்சி வாங்குனா அப்பா ஏசுவாஹ.........சொல்ல சொன்னாஹ.....

(எந்த அப்பா? என்று கேட்டுப்புடாதியெ அதற்கு ஒரு தனிப்பதிவு போட்ர மாதிரி ஈக்கிம்)

ZAKIR HUSSAIN said...

பழைய நினைவுகள் காணாமல் போன வசந்தம் ஆகிவிட்டது. அட்லீஸ்ட் உங்கள் எழுத்திலாவது இப்போதைய சந்ததியினர் தெரிந்து கொள்ளட்டும்.

அப்துல்மாலிக் said...

முதல் ரெண்டு பாய்ண்ட்லேயே முடிவு பண்ணிட்டேன் இது நெய்னாவால்தான் எழுத முடியும்னு.. ம்ம்ம் இப்படியே பழசை நினைச்சி காலத்தை ஓட்டவேண்டியதுதான்...

நிறைய மாறுதல்கள் காலப்போக்குலே வந்துடுச்சி, நாமும் அதற்கேற்றார்போல் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கனும், இல்லேனா நம்மூரை பட்டிக்காட்டு கிராமம்னு முத்திரை குத்திடுவாங்க.. (எதார்த்தத்தை சொன்னேன்)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல பழைய நினைவுகளை ஞாபக்கடுத்தனுமா... சகோ. நெய்னாவின் பதிவை படியுங்கள் என்று சொல்லலாம் நம் இளையோருக்கு.

நினைவுகளை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாலிக்கு,

"என்னெக்கி நம்மூர்லெ ஓர் ஆண்மகன் தன் உழைப்பில் தனக்கென ஒரு வீடு கட்டி (தன் மகளுக்கோ, ராத்தாவுக்கோ, தங்கச்சிக்கோ அல்ல) தன் மனைவி, மக்கள், பெற்றோருடன் வாழ முயற்சிக்கிறானோ அதுவரை நமதூருக்கு என்றோ குத்தப்பட்ட அந்த முத்திரை அழியப்போவதில்லை".

1, நன்றாக ஓட்டிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.

2, தொடர்ந்து நாள்தோறும் வந்து கொண்டிருந்த குடிதண்ணீர் ஒருநாள் விட்டு ஒரு நாள் என ஆக்கப்பட்டது.

3, இரண்டு, மூனு மணி நேரம் நிறுத்தப்பட்ட மின்சாரம் நாள் ஒன்றுக்கு வெறும் இரண்டு, மூனு மணி நேரம் மட்டுமே அளிக்கப்பட்டு வ‌ருவ‌து.

4, ஊரின் விளைநில‌ங்க‌ளும், ப‌ய‌ன‌ற்ற‌ த‌ரிசு நில‌ங்க‌ளும் த‌ன் ம‌திப்பை தாறுமாறாக நிலத்தரகர்களால் உய‌ர்த்தி விட‌ப்ப‌ட்ட‌து.

இப்படி மற்ற ஊர்,உலகமெல்லாம் வ‌ளர்ந்து எங்கோ சென்று கொண்டிருக்கும் இந்த‌ வேளையில் நான் பிற‌ந்த‌ ஊரின் தரையில் ஊறும் க‌ட்டெறும்புக‌ளெல்லாம் ஒரு கால‌த்தில் க‌ழுதைக‌ளாக இங்கு திரிந்திருக்குமோ? என இழந்த வசதி வாய்ப்புகளையும், பிடுங்கப்பட்ட/புறக்கணிக்கப்பட்ட அரசின் நலத்திட்டங்களையும் சரிவர பெறாமல் இப்படி ஏனோதானோ என்று நான் பிறந்த மண் இருந்து வருவதை எண்ணி வருந்த‌ வைக்கிற‌து.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மறந்து போனது அன்றைய சுகங்கள்!

சுமையாகி போனது இன்று!

30ம் Old is Gold தான்!

நல்லதொரு கனவாகி போன சுகங்கள்!

அப்துல்மாலிக் said...

நெய்னா@
"என்னெக்கி நம்மூர்லெ ஓர் ஆண்மகன் தன் உழைப்பில் தனக்கென ஒரு வீடு கட்டி (தன் மகளுக்கோ, ராத்தாவுக்கோ, தங்கச்சிக்கோ அல்ல) தன் மனைவி, மக்கள், பெற்றோருடன் வாழ முயற்சிக்கிறானோ அதுவரை நமதூருக்கு என்றோ குத்தப்பட்ட அந்த முத்திரை அழியப்போவதில்லை".//

இது நடக்குற காரியமா தெரியலே, அப்படியே ஒன்னு ரெண்டு பேரு முயன்றாலும் சமுதாயத்தால் குத்தப்படும் பச்சையை மற(றை)க்க முடியாது

//நான் பிறந்த மண் இருந்து வருவதை எண்ணி வருந்த‌ வைக்கிற‌து. //

எல்ல்லோரும் ஊருக்கு போய் போராட்டம் பண்ணலாம், வாட் அன் ஐடியா ஒஸ்தாத்ஜீ... #@#@#@

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

டேய் மாலிக்கு, இந்த நெய்னாவெ வச்சி காமடி கீமடி பண்ணலைய்யே?????

(அப்பொ கியாமத்து நாளு வரைக்கும் நம்மூர்லெ இது தான் கதியா????)

நல்லா சம்பாதிச்சிக்கிட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று வல்லரசுகளின் குடியுரிமை பெற்றிருப்பவர்களே தன் சம்பாத்தியத்தில் தனி வீடு கட்டி மனைவி, மக்கள், பெற்றோருடன் வாழ தயக்கம் காட்டும் பொழுது இந்த அரபு நாட்டு சம்பாத்தியத்துலெ என்னெத்தெ நீ புரச்சி பண்ணி கிழிச்சிடமுடியும்ண்டு கேக்குறியா?

திருச்சி சையத் இப்ராஹீம் Trichy Syed Ibrahim திருச்சிக்காரன் திருச்சி்காரன் said...

YOUR BLOGSPOT IS ONE OF MY FAVOURITE. IT IS PUBLISHED TO ALL PEOPLE TASTE. hence i like it.Further kindly publish your view on the below topics.எனக்கு தமிழ் முஸ்லிம் கிராமம்/நகரத்தில் எப்போதுமே ஒரு இனம் புரியா பரியம் உண்டு.
மேலும் பழைய நோன்பு ஞாபகங்களை பற்றி ஒரு நீண்ட பதிவு போடவும், நினைத்து பார்க்கவே மனதிற்கு மிகவும் சுகமாக,ஆனந்தமாகவும் இருக்கிறது.

சகர், நோன்பு, அதிகாலை எழுப்புதல், நோன்பு காஞ்சி, 27 -ம கிழமை கைமா கஞ்சி. ஈத் காலை அன்று அப்பாவின் பரிசு, காசுகள், உறவுகளின் வருகை, பெருநாள் காசு collection-வேட்டை. புதிய வுரவுகள் மற்றும் அவர்களின் புரியாத பாஷை, இப்படி எத்தனையோ விஷயங்கள், எதை சொல்ல, எதை விட.

ஈத் தின ஊர் சுற்றல், புதிய ஆடைகளின் அணிவகுப்பு, தன் ஆடை பெருமை பேசி ஆனந்தம் அடைதல், பெருநாள் அன்று பள்ளி அருகே சிறு பிள்ளைகள் கடை போடுதல், பெரு நாள் ஆடையுடன் அடுத்த நாள் பள்ளி செல்லுதல்.அதே ஆடையோடு அடுத்த நாள் மதரசா செல்லுதல்.

எனக்கு 37 வயது ஆகிறது ஆனால் இந்த நினைவுகள் எதோ 50 வருடத்திற்கு முன்னே நடந்தது போல உள்ளது நினைத்துப்பார்க்க. விஞ்ஞானத்தின் வளர்ச்சி அப்படி.

அப்போதெல்லாம் எல்லாமே மனித உழைப்பினால் நடந்தது. அதனால் ஒவ்வொன்றையும் ரசித்தே செய்தாக வேண்டி இருந்தது. அதனால் எல்லாமே சுவையாக இருந்தது. வேப்பங்கொழுந்து கூட இனிக்கும் எங்கள் பாட்டி, தாய் அதை எங்களுக்கு ஊட்டும்போது. அது ஒரு காலம் பாய்.

WASSALAAM.
SYED IBRAHIM. DUBAI

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு