Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுயம் அறிக ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2012 | , , , ,


அடைப்புக் குறிகளுக்குள்
அடங்கிப்போக
உபரித் தகவலா நீ?

கடைசிப் பக்கம் வரை
புதிரோடு தொடர
மர்ம நாவலா நீ?

மொத்தக் கருத்தையும்
சுருக்கி அடக்கிய
தலைப்பு அல்லவா நீ!

ஒவ்வொரு பக்கமும்
அர்த்தங்களாம் கவி
தொகுப்பு அல்லவா நீ!

            -00-

பிரயோகித்தப் பின்னர்
உரித்து வீச
பாம்புச் சட்டையா நீ?

பாதங்களின் அடியில்
உழைத்துத் தேய
மிதியடிக் கட்டையா நீ?

பாருக்குத் துணியாக்க
பஞ்சை நூலாக்கும்
ராட்டை யல்லவா நீ!

சண்டாளர் சதிமுறித்து
சரியாக்கச் சொடுக்கும்
சாட்டை யல்லவா நீ!

           -00-

பின்னொரு சமயம்
பார்க்கலாம் என்று
பேழைக்குள் பதுங்கும்
கோழையா நீ?

இன்னொரு உபயம்
ஈவோரிடம் எதிர்நோக்கும்
இழிந்த பிறவியா நீ?

சூடாறும் முன்பே
சுழட்டி அடிக்கும்
சுத்தியல் அல்லவா
உன் புத்தி!

ஈடேறும் வரை
எண்ணங்களைச் சுமக்கும்
உக்தி யன்றோ
மெய் சக்தி!

            -00-

நொடிக்கொரு தரம்
அழிக்கவும் எழுதவும்
சுண்ண எழுத்தா
உன் தலையெழுத்து?

கண்மூடிய பின்னரும்
கம்பீரமாக நிலைக்கும்
கல்வெட்டு அல்லவா
உன்னெழுத்து!

வெம்மையாய் திலங்கும்
சூரியனுக்குள்
வானவில்லொன்று
ஒளிந்திருக்கிறது

உண்மையாய்த் துவங்கும்
காரியங்களுக்குள்
வாழ்க்கையின் வெற்றி
பொதிந்திருக்கிறது

சபீர் அபுசாருக்

8 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

விடுமுறையில் சோர்ந்த உள்ளங்களுக்கு ஒரு உற்சாக டானிக். இனிமேலும் தன்னிலையறிய ஒரு கண்ணாடி.

அதிரை என்.ஷஃபாத் said...

ஜோடி கேள்விகளும், ஜோடி பதில்களுமாக கோடி அர்த்தங்களுடன் மிளிர்கிறது கவிதை !! அருமை...!!

அப்துல்மாலிக் said...

உன்னையறிவாய் உன் உள்ளத்தையரிவாய் வாழ்வில் முன்னேறலாம் என்பது போன்று உள்ளது சுயம் அறிக வரிகள், வாழ்த்துக்கள்

Yasir said...

சுயம்- அபிநயம்,அசத்தல்,அறிவுரை,உற்சாகம்...தன்னம்பிக்கை ஊட்டும் வைரவரிகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்போ !

நான் !?

சுயம் அறிய - ஆவல் !

Unknown said...

இது மீள் பதிவானாலும் தூள் !!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காலம் பல கடந்தாலும்
கம்பீரமாக நிலைக்கும்
கல்வெட்டு போன்றதல்லவா
உங்களெழுத்து!

KALAM SHAICK ABDUL KADER said...

//பாருக்குத் துணியாக்க
பஞ்சை நூலாக்கும்
ராட்டை யல்லவா நீ!//

கவிவேந்தரின் கவிவரிச் சாட்டை;
கவனிக்கச் சொல்லும் இராட்டை;
களிப்புடன் தருவோம் பாராட்டை;
கட்டுவோம் தன்னம்பிக்கைக் கோட்டை!

இதோ “தன்னம்பிக்கை” எனும் தலைப்பில் என் கவிதை கேளுங்கள்:


வானம் ஏகும் பறவைகட்கு
வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
குரலின் மீதே நம்பிக்கை;


மானம் உள்ள மனிதனுக்குள்
மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
ஆற்றல் பெறும் வாழ்க்கை...!!!!!



எப்படி புரண்டாய்? எப்படி தவழ்ந்தாய்?
எப்படி நின்றாய்? எப்படி நடந்தாய்?
அப்படித் தானே முயல்வாய்
அனைத்திலுமாய்; ஆயுள் முழுவதுமாய்


உந்து சக்தி நிரம்பியுள்ள
உன்னிடம் உண்டு திறமைதான்;
நொந்து காலத்தை வீணாக்கினால்
நொடியில் பாயும் வறுமைதான்!!!!!


ஒவ்வொரு நொடியும் உன்றன்
உழைப்பால் மட்டும் நிரப்பு;
அவ்வளவும் திரும்பி கிட்டும்
அளவற்ற செல்வத்தின் பரப்பு


காலம் வருமென்று வீணாகக்
காத்திருக்க வேண்டா கனவுடனே
ஞாலத்தில் உயர்ந்தோர் யாவரும்
நாளும் உழைத்தே வென்றனரே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு