Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"ஹொத்வாக்கு (குத்பாவுக்கு) நேரமாச்சி" 17

தாஜுதீன் (THAJUDEEN ) | August 15, 2010 | , , ,

ஒரு காலத்தில் நம் ஊரில் ஒரே குத்பா தான் இருந்தது. வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் தெருப்பாகுபாடு இல்லாமல்                                      எவ்வளவு தூரமாக இருந்தாலும் ஜும்மா தொழுகைக்காக ஓரிடத்தில் ஒன்று கூடினோம்.   பல தெரு மக்களையும், பள்ளி நண்பர்கள், தெரு நண்பர்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் எல்லோரையும் ஓரிடத்தில் ஒரே சமயத்தில் பார்க்க, பேச வாய்ப்புகள் கிடைத்தன. ஊர்த்தகவல்களும் அங்கே பரிமாறப்பட்டன. ஆனால் இன்று நம்ம ஊர் மக்களின் குடியிறுப்புகள் நம் ஊர் எல்லையைத்தாண்டி சென்று கொண்டிருப்பதால் நாம் தற்சமயம் ஒன்றுக்கும் மேல்  ஜும்மாப்பள்ளிகளைப் பெற்றிருக்கின்றோம் குறைகள் இல்லை அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு நேரத்தில் உடல் உழைப்பிற்கு அதிக வாய்ப்புகள் நம் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றியிருந்தது. கொஞ்சம் தூரமான இடங்களுக்கு செல்வதாக இருந்தால் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.

நம் துணிமணிகளை நாமே துவைத்துக்கொண்டோம். (அழுக்குத்துணிமணிகளை வண்டி நிறைய கொண்டு வந்து வெட்டிய பார் சோப்பு மூலம் குளக்கரையில் நஹரா அடித்து நுரை வெள்ளத்தில் மிதக்கச்செய்தோம்.)

வீட்டில் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, குடகல்லில் மாவு அரைப்பது, அம்மியில் மசாலா அரைப்பது (பெருநாளைக்கு மருவண்டி அரைப்பது), வீட்டின் கிணற்றில் தண்ணீர் எடுத்து வீட்டு உபயோகத்திற்கு நிறப்பி வைப்பது, துணி கழுவுவது, வீடு கழுவுவது, ஒட்டடை அடிப்பது, தேங்காய் உரிப்பது இறுதியில் தன் வியர்வையை அன்றாடம் உடலிலிருந்து வெளிக்கொண்டு வர எதையாவது செய்து கொண்டிருந்தார்கள். அதனால் கொடிய நோய் நெடிகளிலிருந்தும், கொலஸ்ட்ரால் தொல்லைகளிருந்தும் ஓரளவு பாதுகாப்பை பெற்று வந்தார்கள். ஆனால் இன்றோ எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. அவர்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்கப்பட்டும் விட்டது. இதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி சிறு வயதிலிருந்தே அவஸ்தைபட்டு வருகிறார்கள்.

எங்கிருந்தோ விருந்துகள் வந்து விடுகின்றன ஆனால் அதற்கேற்ற உடல் உழைப்பு வருவதில்லை. வெறுமனே சோம்பலும், சோர்வும் மட்டும் வந்து விடுகிறது. கடப்பாசியும், வட்லப்பமும் கண்முன்னே வந்து நிற்கிறது.

ஒரு நேரத்தில் நம் ஊரில் ஆட்டோக்கள் இல்லாது ஆரோக்கியமாய் ஊரைச்சுற்றி வந்தோம். இன்று ஆட்டோக்கள் அதிகமாகி ஆஸ்பத்திரியைச்சுற்றி வருகிறோம்.

ஆண்கள் தன் வீட்டின் கொல்லைப்புறத்தில் கடைத்தெரு இருந்தாலும் அதற்கு கூட இரு சக்கர வாகனத்தில் தான் சென்று வரக்கூடிய மனோபாவத்தில் இருக்கின்றோம்.

மாலை நேரங்களில் பள்ளி சென்று வந்ததும் விளையாடுவதற்கு கா.மு. கல்லூரி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,ஐ.டி.ஐ., ஷிஃபா மருத்துவமனை பின்புறம் போன்ற பரந்த திடல்கள் இருந்தன. பெரியவர், சிறியவர் வயது வித்தியாசமின்றி விளையாடி வந்தோம். அதில் ஆரோக்கியம் கண்டோம். ஆனால் இன்றோ விளையாட சிறு இடம் இருந்தால் கூட நில உரிமையாளருக்கு சர்பதிவாளர் அலுவலகமும், பத்திரச்செலவுகளும் தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். (அதுவும் பெண் பிள்ளைகளைப்பெற்றவராக இருந்தால் அதே சிந்தனையில் இருப்பார். காரணம் நம்ம ஊர் சூழ்நிலை அப்படித்தான் உள்ளது).

அந்த காலத்தில் பெரிய,பெரிய வீடுகளை கட்டி பரந்த நிலங்களை எப்படித்தான் வாங்கினார்களோ? இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. காரணம் போட்டியும், விலைவாசி உயர்வும், பொருளாதார நெருக்கடிகளும் உள்ள இக்காலச்சூழ்நிலையில் வாங்கும் ஒரு மாத சம்பளத்தில் ஒரு ஜன்னல் கூட வைக்க முடியாத நிலை தான் பரவலாக உள்ளது.

பொருளாதார தேவைகளுக்காக உலகில் எங்கெங்கோ சென்று விட்டோம். ஆனால் சொந்த ஊரில் குடும்பத்துடன் வாழ்வதை தொலைத்து விட்டோம். ஊரில் பம்பரம், பட்டம், பளிங்கு (பேந்தா, வட்டக்கோடு, பேக்கடி), கிட்டிக்கம்பு, கயிறு ரயில் வண்டி, நுங்கு கோம்பையில் செய்த வண்டி, டயரு வண்டி, தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு, கண்ணாமூச்சி, பேபே, சில்கோடு, கலிச்சிக்கா(பெண்களுக்கான சிறப்பு விளையாட்டுக்கள்) தொலைந்தது போல் வாலிபத்தையும் எங்கோ தொலைத்து விட்டோம்.

'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழியை 'போதாதென்ற மனமே பணக்காரனாய் ஆக மருந்து' என்று புதுமொழியாக்கினோம்.

சென்ற வருட ரமளானைப்பார்த்தவர்கள் இன்றில்லை நம்முடன். இந்த ரமளானைப்பார்க்கும் நாம் இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமளானில் எங்கிருப்போம் என்பது தெரியவில்லை. எனவே காலஞ்சென்றவர்களுக்காகவும், மீதமிருப்பவர்களுக்காகவும் எம்மால் இயன்றளவு ஈருலக நன்மைகள் கருதி து'ஆச்செய்வோம்...

தலைப்புக்கும் அதன் கீழே சொல்ல வந்த விசயத்திற்கும் சம்மந்தமில்லாமல் இருக்கலாம். மேலே கூறப்பட்ட கருத்துக்களில் தவறேதும் இருக்காது என நம்புகிறேன். ஒரு மாறுதலுக்காக அத்தலைப்பிட்டேன். உங்கள் அன்பான மற்றும் மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) ஹொத்துவான்னு சொன்னதும் அட, பெரிய ஜும்மா பள்ளியின் பழைய தோற்றம் ஞாபகத்திற்கு வந்திடுச்சு ! நிச்சயமாக அதன் பழமைத் தோற்றத்தை மற்றக்க முடியாது, கருங்கற்கல்லால் ஆன தூண்கள் உள்ளே எத்தனையோ முறை முதல் அல்லது இரண்டாவது சஃப்பில் தொழுகைக்கும் ஜும்மாவிலும் அமர்ந்திருக்கிறேன் அதன் குளுமையே தனிதான்.

Dawood(Dallas, Texas) said...

I agree with all you said, recently visited Adirai after 3 yrs, lot of changes and everything is pricy, even people buy ready made idiyappam for day today use and walking is rare and people use Auto all the time.

Good reminder...keep it up

Dawood - Dallas, USA

crown said...

அபுஇபுறாஹிம் says
Sunday, August 15, 2010 6:50:00 PM

MSM(n) ஹொத்துவான்னு சொன்னதும் அட, பெரிய ஜும்மா பள்ளியின் பழைய தோற்றம் ஞாபகத்திற்கு வந்திடுச்சு ! நிச்சயமாக அதன் பழமைத் தோற்றத்தை மற்றக்க முடியாது, கருங்கற்கல்லால் ஆன தூண்கள் உள்ளே எத்தனையோ முறை முதல் அல்லது இரண்டாவது சஃப்பில் தொழுகைக்கும் ஜும்மாவிலும் அமர்ந்திருக்கிறேன் அதன் குளுமையே தனிதான்.
-----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அத்துடன் பக்க வாட்டில் மரணத்தை நினைவுப்படுத்தும் மையத்தாங்கரை(கல்லறை)இவையாவும் இறந்த காலமென்றாலும் இன்றும் நினைவில் வந்து போகும் நிகழ்காலம் என்றும் மறையாமல் உயிருடன் நினைவில் வந்து போகிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நவீன உலகில் புதிய கண்டுபிடிப்புகள் நம்மை சோம்பேறிகளாக்கிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை, இதனால் விதவிதமான நோய் நொடிகள் வந்ததுதான் நாம் கண்ட நிரந்தர பலன்.

நல்ல ஆக்கம் சகோதரர் நெய்னா. நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown says
Monday, August 16, 2010 12:10:00 AM
பக்க வாட்டில் மரணத்தை நினைவுப்படுத்தும் மையத்தாங்கரை(கல்லறை)//

இவ்வாறான சூழல்களில் நாமெல்லாம் பழகியதால்தான், மஃரிப் நேரமாச்சு மைத்தாங்கரைப் பக்கமெல்லாம் போகாதேன்னு சொன்னாலும் செல்வோமே ! அதுமட்டுமல்ல எந்தவொரு மைத்தையும் அதன் கடைசி காரியங்கள் நிறைவுபெறும் வரை மண்ணறையின் அருகில் பெரியவர்களோடு நின்று முடித்துவிட்டுதான் அங்கிருந்தே நகர்வோம் அன்று மட்டுமல்ல இன்றும்தான் (நினைவில் வந்து போகும் நிகழ்காலம் )

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

'மருவண்டி' கூட மிக்ஸில் அரைத்து தான் கையில் இடக்கூடிய சூழ்நிலையில் நம் பெண் மணிகள் ஆகிவிட்டனர். குடகல், அம்மி, பல்லாங்குழி, மாவு இடிக்கும் உரல், உலக்கை, ஊதாங்குழல், கிணற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்பு வாலி, அதன் இரும்பு சக்கரம் போன்ற பொருட்களெல்லாம் விரைவில் புராதனச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசியில் சொல்ல வந்த சேதி என்னவெனில் "நவீனமயம் நம்மை நோயாளியாக்கி விட வேண்டாம் என்பதே".

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. தாவுத் சொல்வது போல் ஒரு நேரத்தில் வீட்டில் ஆள் வைத்து மாவு இடித்து பூவடை, ஓட்டுப்பணியான், குழல் பணியான், அதுர்சம், நானாஹத்தம், வெங்காயப்பணியான், அரியதரம், முட்டாசு, வட்டியடை போன்ற பணியாரங்கள் வீட்டில் தன் கைப்பட சுட்டு அதை சொந்த,பந்தங்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்கள். அதில் அவர்களின் பாசத்துடன் சுவையும் கலந்திருந்தது. ஆனால் இன்றோ எல்லாம் ரெடிமேட் மயமாகி விட்டது. மாவு இடிக்கும் உரல், உலக்கைகளில் எல்லாம் பாச்சையும், பூனையும் உரங்கிக்கொண்டிருக்கிறது. மிக்ஸியும், கிரைன்டரும் வீட்டில் ஓவர் டைம் பார்த்துக்கொண்டிருக்கிறது. கடைசியில் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கின்றது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மாவு இடித்து பூவடை, ஓட்டுப்பணியான், குழல் பணியான், அதுர்சம், நானாஹத்தம், வெங்காயப்பணியான், அரியதரம், முட்டாசு, வட்டியடை போன்ற பணியாரங்கள் ///

அதானே எங்கேடா பணியான் மேட்டரைக் காணோமேன்னு !

அப்துல்மாலிக் said...

இப்படியெல்லாம் இருந்தது என்று எண்ணி நாமே நொந்துக்க வேண்டியதுதான். எங்கே நெய்னா உங்க வீட்டுலே இடியாப்ப மாவு உலக்கையிலே இடிச்சு சலிச்சு சுட்டுக்கேளு அப்புறம் அந்த உலக்கைதான் உனக்கு எமன் :) :)

அப்துல்மாலிக் said...

ஹொத்வா? அல்லது கொத்வா? எது சரி

அப்துல்மாலிக் said...

//ல தெரு மக்களையும், பள்ளி நண்பர்கள், தெரு நண்பர்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் எல்லோரையும் ஓரிடத்தில் ஒரே சமயத்தில் பார்க்க, பேச வாய்ப்புகள் கிடைத்தன//

கல்யாணப்பத்திரிக்கை கொடுக்க அலைய வேண்டியதில்லே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்துல்மாலிக் says
Monday, August 16, 2010 12:20:00 PM
ஹொத்வா? அல்லது கொத்வா? எது சரி ///

அவரவர் பேச்சு வழக்கு மொழி(தானுங்க) இருப்பினும் "குத்பா"ன்னுதான் மேலத்தெரு (பழைய ஜும்மா) பள்ளி முகப்பில் வாசித்திருக்கிறேன் ( :))) !

Shameed said...

"குத்பா" THATS RIGHT

Shameed said...

நெய்னாவின் கட்டுரை மலரும் நினைவுகளை தூண்டிவிட்டது .
அந்த ஜும்மா பள்ளி அகல் தண்ணீரின் குளுமையும் அங்கு உள்ள மண்பானை தண்ணீரும் தென்னைமர ஓலையின் ஓசையும் மறக்கமுடியாத விசயங்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தென்னைமர ஓலையின் ஓசையும் மறக்கமுடியாத விசயங்கள்//

இன்னும் அந்த ஓலையின் ஓசை கேட்குது

Anonymous said...

அழகான நினைவுகள், நினைவூட்டிய தம்பி நெயனாவுக்கு வாழ்த்துக்கள். தயவு செய்து கட்டுரையாளர்கள் , பின்னூட்டமிடுபவர்கள் " தெரு பாகுபாடு " என்ற வார்த்தையை தவிர்க்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஷரபுத்தீன் நூஹு says
Wednesday, August 18, 2010 10:01:00 AM
" தெரு பாகுபாடு " என்ற வார்த்தையை தவிர்க்கவும்.///

இதனை தலைதூக்க விடாமல் தலையில் குட்டி ஒழித்திடுவோம் இன்ஷா அல்லாஹ்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு