காதிர் முகைதீன் தந்த கொடைகள் எண்ணிலடங்கா! மருத்துவர்கள், பொறியியல்வல்லுநர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொழில்வல்லுநர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என்று பற்பலர். அவர்கள் காதிர் முகைதீனில் முழு வடிவம் பெறாவிட்டாலும், அதற்கான கரு அங்கேதான் உருவானது.
காதிர் முகைதீன் தந்த கொடைகளில் ஒன்று தான் ஹாஜி எம். முகம்மது தாஹா. BA, B Ed., தனது இனிமையான கணீரென்ற குரலில் அழகாகப் பாடுவார் மாணவர் தாஹா. துவக்கப் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே இறை வணக்கக் கூட்டங்களில், சூரா பாத்திஹா, இறை வணக்கப் பாட்டு, நாட்டுப் பண் இவற்றை மொழிவார். இது உயர் நிலைப் பள்ளியிலும் தொடர்ந்தது. உயர் நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டியிலும் கலந்துகொள்வார். படிக்கும் காலங்களிலேயே கவி படைக்கும் ஆற்றல் அவரைக் கவ்விக் கொண்டிருந்தது. தான் எழுதிய கவிதைகளை இசையோடு பாடுவார் கவிக்குயில் தாஹா.
காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளியில் இவரோடு படித்தவர்கள், வழக்கறிஞர் மறவன் பிள்ளை, B.A.,B.L., அலியார் சார், த்ரீயெம் மீரசாகிப் ஹாஜியார், M.S.M. இப்ராகீம்,ஹனீபா சார் போன்றோர். பள்ளிப் படிப்பு முடித்து காதிர் முகைதீன் கல்லூரியில் படித்து பி.ஏ.(வரலாறு) பட்டம் பெற்றார். கல்லூரியிலும் அவரிடம் பேச்சார்வம்,கவியார்வம் மேலோங்கி நின்றது! இளைஞர் தாஹா கல்லூரியில் பயிலும் போதுதான் பேராசிரியர் அப்துல் கபூரிடம் பாடம் கேட்கும் பேறு பெற்றார்.
ஆசிரியர் படிப்பை (B.Ed) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முடித்தார். ஆசிரியர் தாஹாவை ஆசிரியராகப் பெறுவதற்கும், நம் இளைஞர்களை இவர் மாணவர்களாகப் பெறுவதற்கும், இரு சாராருக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு தனியார் உயர் நிலைப் பள்ளியில் 5 ஆண்டுகள் வரலாற்று ஆசிரியராகவும், 20 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 25 ஆண்டுகள் அந்த நிர்வாகத்திற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையாக மணம் வீசியிருக்கிறார் தலைமையாசிரியர் தாஹா! இந்தச் சாதனையே போதும் இவர் சோதனையைச் சூழ்நிலைக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார் என்பதற்கு. தமிழருவி தாஹா கவிதைகளைக் கொட்டிக்கொண்டே இருக்கும் நயாகரா! அவை வீழ்ச்சி அல்ல, எழுச்சி! வந்து விழும் கவி அருவிகளைப் புத்தக அணையில் தேக்கி வைத்து மக்களின் தாகம் தீர்க்கிறார் பதிப்பாசிரியர் தாஹா! பல நூற்கள் வெளியிட்டு தன் தாகத்தையும் தணித்திருக்கிறார்! இவர் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தில் செயலாற்றி வருகிறார்.
மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கு அதிரையின் பெயரை எடுத்துச் சென்றிருக்கிறார் பேருரையாளர் தாஹா. பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ள இவர் வானொலிக் கவியரங்கங்களிலும் பங்கு பற்றி கவிகள் வழங்கி இருக்கிறார்.
‘இளமையைப் பக்குவப் படுத்துவதில் தான் எதிர்கால வாழ்வு கட்டப்படுகிறது’ என்றதிரு வி.க. வின் கருத்தைத் தம் பாடல்கள் தோறும் பதித்து வரும் பாவலர் இவர்.கல்லூரிகள், பள்ளிகள், பொது மேடைகளில் கவி பாடி புவியை ஈர்த்தவர். நாவலர் தாஹாவை அறியாதார் தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் யாருமில்லை. இங்கே அவரைப் பற்றிக் கூறுவது கொல்லன் உலைக்களத்தில் ஊசி விற்பதற்குச் சமமாகும்.
பாவலர் தாஹா தமிழகத்தின் மிகப் புகழ் வாய்ந்த கவிஞர்களின் தலைமையில் கவிகள் வாசித்திருக்கிறார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் கவி கா.மு. ஷரீப், கவிக்கோ அப்துல் ரகுமான், மு.மேத்தா, வலம்புரி ஜான் ஆகியோர். கவி மேதை தாஹா பல கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். கவியரங்கங்களில் இவர் வழங்கிய கவிதைகள் “அரங்கேறிய கவிதைகள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான எத்தனையோ கவிதை வரிகளை கவிச் சிற்பி தாஹா செதுக்கி இருக்கிறார். அவற்றில் இரண்டு:
“செத்தவர் செல்வரென்றால் சவத்திலும் பேதமா?” என்று சமூகத்தைச் சாடுகிறார்.
டாக்டர் அப்துல் கலாமைப் பற்றிச் சொல்லும்போது, ‘இப்படி ஒரு ஜனாதிபதியா! என்று விரலும் மூக்கும் பேசிக்கொண்டன’ என்று வியக்கிறார்.
எழுத்தாளர் தாஹா இதுவரை 49 கவிதை நூல்கள் எழுதியிருக்கிறார். இதற்காக இவர் பட்டங்களும் விருதுகளும் நிறைய வாங்கியிருக்கிறார். சிறுவர் பட்டத்துக்காக நூல் வாங்குவர்; இந்தப் பெரியவர் நூல்களுக்காகப் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்!
இவரது கவி ஆற்றலைக் கண்ட பேராசியர் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்கள், இவருக்கு ‘அருட் கவி’ என்று பட்டம் வழங்கினார்கள். அன்று முதல் முகம்மது தாஹா, ‘அதிரை அருட்கவி’ என்று வழங்கப்படுகிறார். தஞ்சைப் பல்கலைக் கழகம் ‘புதுமைக்கவிஞர்’ என்ற பட்டம் வழங்கியுள்ளது. கவிஞர் தா. காசிம் பெயரில் ‘செம்மொழி இலக்கியச் சீரவை’ இவருக்கு விருது வழங்கியுள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அதைப் பற்றி சிறந்த நூல் எழுதியதற்காக ரூ. 25,000/= பொற்கிழி வழங்கியுள்ளது. ஜவ்வாது புலவர் நினைவாக (ஈரோடு) நபி புகழ் காப்பியம் எழுதியமைக்காக ரூ.5,000/= பொற்கிழி அதிரை அருட்கவி வழங்கப்பட்டார். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம், 20-21 நூற்றாண்டு நாயகக் காவியங்கள் படைத்ததற்காகப் புகழ் பெற்ற எட்டு கவிஞர்களுக்கு பரிசும், பாராட்டும், விருதுகளும் வழங்கப்பட்டன. அவர்களுள் இலக்கியச் செம்மல் தாஹாவும் ஒருவர். ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் டாக்டர் கமால் தலைமையில் கவிஞர் தாஹாவின் நூல் ஒன்றினை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. இவை தவிர ‘கவிஞானி’, ‘ஆன்மீகக் கவிஞர்’, ’தமிழ்மாமணி’, ‘தீனிசைத் தமிழ்த் தேனருவி’, ‘கவிதைச் செம்மல்’ என்ற பட்டங்களும் வாங்கியுள்ளார். விருதுகள் இவரின் விழுதுகள்! அதனால் கவிப் பூங்காவில் அவர் வேரூன்றி நிற்கிறார்.
இவருக்கு 2 ஆண் மக்கள், 2 பெண் மக்கள். மகன்கள் வெளிநாட்டில ச்ம்பாதிக்கிறார்கள். நால்வருக்கும் திருமணம் நடந்துவிட்டது. ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்கிறார் இந்த நுண்மதியாளர். சாய்வு நாற்காலியில் சாய்ந்துவிடாமல், ஓய்வோடு ஓய்ந்துவிடாமல், ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார், இந்தத் தமிழ்த் தா(த்)ஹா!
-வாவன்னா
22 Responses So Far:
நல்ல விளக்கமான கட்டடுரை
நமதூருக்கு பெயர் வாங்கி தந்துகொண்டிருக்கும் சிறப்பனவர்களில் கவிஞர் ஹாஜி முஹம்மது தாஹா B.A.B.Ed அவர்களை பற்றி தந்த கட்டுரைக்கு வாழ்த்துக்கள்
ஒரு திருத்தம் அவர்களின் பெயரில் எல்லா பட்டங்களையும் சேர்த்தவர்கள் அவர்கள் ஹஜ்ஜையும் முடித்திருக்கிறார்கள்.. ஆகவே ஹாஜி... என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தொடரட்டும் இது போன்ற கட்டுரைகள்.
சகோதரர் JAFAR,
தாங்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து "ஹாஜி" என்ற வார்த்தையையும் சேர்த்துவிட்டோம்.
சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி..
தொடரட்டும் இது போன்ற கட்டுரைகள்.
2 சார்(வா.தா.)மார்களுக்கு ஓய்வோடு ஆய்வும் ஆயுளும் நீளட்டும்!
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.
==============================
(*) உத்தமத் திருநபியின்
உயர்பெயரைத் தாங்கியவர்,
சித்தத்தில் நல்லொழுக்கம்
சீர்மையுடன் ஓங்கியவர்.
மெத்தப் படித்திருந்தும்
தற்பெருமை நீங்கியவர்,
மொத்தமாய் தமிழ்ப்புலமை
குத்தகைக்கு வாங்கியவர்.
(*) பள்ளிக்கு தலைமையென்னும்
பதவியிலே இருந்திட்டார்,
முள்ளுக்குள் முளைத்திருக்கும்
முழுரோஜா மலரொத்தார்.
செல்லுக்கு உள்ளூடும்
செந்தமிழைச் செலுத்திட்டார்.
வில்லேவும் அம்பைப்போல்
விகடங்கள் அளித்திட்டார்.
(*) துள்ளிய ஒளிவீசும்
தூய ஜிப்பா,
மெல்லிய சிரிப்பின்வழி
தெரியும் பற்கள்,
உள்ளத்தின் நிறமதுவே..
உரைத்தேன் கேளீர்,
வெள்ளையின் விளக்கமென
விளங்கும் தோற்றம்.
(*) மானுடராய் வாழ்தல்மட்டும்
மகிமை ஆகா.-ஒழுக்கம்
பேணுதலாய் வாழுதலும்
பாழாய்ப் போகா.-என்னும்
வானுயரும் கோட்பாட்டில்
வாழும் தாஹா (அவர்கள்)
வாஞ்சையோடு வாழியவே..
வாழி வாழி !!
===================================================================
அன்புடன்,
அதிரை என்.ஷஃபாத்
எங்கள் அண்ணாவியார் குடும்ப கவிஞர்கள் இயற்றிய பல அறிய படைப்புக்கள் ஏட்டுச்சுவடிகளாக இருந்ததை புத்தக வடிவில் கொண்டுவந்தது எனது பாட்டணார் மர்ஹும் ஹாஜி க.செ.செய்யிது முகம்மது அண்ணாவியார் அவர்கள் இந்த முயற்சிக்கு மிகவும் உறுதுனையாக நின்றவர்கள் கவிஞர் தாஹா, புலவர் பசீர், கவி.கா.மு.செரீப் போன்றவர்கள். இவைகளை தஞ்ஞை பல்கலைகழகத்துக்கு கொண்டு சென்ற பெறுமை கவிஞர் தாஹா அவைகளைச்சேறும்.தமிழ் பற்றுல்ல கவிஞர் அவர்களை கவுரவித்து எழுதிய அதிரை நிருபர் குழுவிற்கு என்சார்பிலும் என்குடும்பத்தின் சார்பிலும் நன்றி. அன்புடன் அப்துல் வாஹிது அண்ணவியார் , ,யு.எஸ். ஏ
"அதிரை அருட்கவி" அல்ஹாஜ் எம். முஹம்மது தாஹா சார் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளுடன் ஈருலக பாக்கியங்களைத்தந்தருள இறைவனிடம் து'ஆச்செய்வதுடன் அவர்கள் பற்றி அரிய பல தகவல்களை இங்கு நம்மிடம் பகிர்ந்து கொண்ட வாவன்னா சார் அவர்களுக்கும் என் நன்றிகளும், து'ஆவும்.
படிக்கும் காலத்தில் தாஹா சார் அவர்களின் சக மாணவனாக இருந்து இன்றும் சக தோழனாக இருந்து வரும் என் தகப்பனார் (ஹாஜி எம்.எஸ்.எம். இபுறாஹீம்) பெயரை இங்கு குறிப்பிட்ட வாவன்னா சாருக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்.
இது போல் வாழ்ந்து கொண்டிருக்கும் அதிரையின் அருந்தவப்புதல்வர்களையும், சென்றுமறைந்த நம்மூர் பெரியவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
மின்னஞல் வழி கருத்து
-------------------------------------------
மதிப்பிற்குரிவர்களை கவுரவிக்கும் நல்லெண்ணம் உங்களிடம் இருப்பது மகிழ்ச்சி.
தாஹா சார் அவர்களின் வாராந்திர பெண்கள் பயானுக்கு செல்பவர்களில் நாங்களும் சிலர், வீட்டில் அல்லது பள்ளிகூடத்தில், பெரியோர்களால் சொல்லித் தரப்படாத நிறைய விஷயங்களை பெண்களுக்கு அவர்களின் ரசனைக்கு எற்ப எளிதில் புரியும்படி பாடமாக சொல்லித் தருவதில் திறமையானவர்கள்.
அவர்களின் மார்க்கப் பணி பெண்கள் மத்தியில் நல்ல மாற்றதை ஏற்படுத்தி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் சரீர சுகத்திற்கு துஆ செய்கிறோம்.
- உம்முஹாசிம்
நான் மாமா என்று அன்போடு அழைக்கும் தாஹா அவர்களின் அனைத்து முன்னேற்றத்திலும் அவர்களின் உற்ற நண்பரான என் வாப்பா நிழலாகவும், வலக்கை/இடக்கையாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சியே. என் மாமாவுக்கு மேலும் உடல்நலத்தை கொடுத்து சமூகப்பணியாற்ற இறைவனிடம் இறைஞ்சுகிறேன். இவர்களின் வாழ்கை வரலாற்றை அரிய தந்தமைக்கு வாவன்னா சாருக்கு நன்றிகள் பல
"அதிரை அருட்கவி" அல்ஹாஜ் எம். முஹம்மது தாஹா சார் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளுடன் ஈருலக பாக்கியங்களைத்தந்தருள இறைவனிடம் து'ஆச்செய்வதுடன் அவர்கள் பற்றி அரிய பல தகவல்களை இங்கு நம்மிடம் பகிர்ந்து கொண்ட வாவன்னா சார் அவர்களுக்கும் என் நன்றிகளும், து'ஆவும்.
தாஹா சார் அவர்களோடு தொடர்புடன் இருக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்ததினால் நெருக்கம் குறைவே எனக்கு, இருப்பினும் நமது ஊரில் பெண்கள் மத்தியில் உங்களின் மார்க்கப் பிரச்சாரம் நிறைய பேர்களின் அன்றாட வணக்க முறைகளை நெறிப்படுத்தியிருக்கிறது என்பதை உணர்வுபூர்மாக அறிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
உங்களின் மார்க்கம் சார்ந்த இப்பணி எழுச்சியுடன் என்றும் தொடர்ந்திட வாழ்த்துகிறோம் துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
அதிரை 'அருட்கவி'க்கே மகுடம் சூட்டியது போல் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு சொல்லாடல்களும் மிக அருமை !
நான் ரசித்தவைகளில் சில :-
அந்த நிர்வாகத்திற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையாக மணம் வீசியிருக்கிறார் தலைமையாசிரியர் தாஹா!
இந்தச் சாதனையே போதும் இவர் சோதனையைச் சூழ்நிலைக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார் என்பதற்கு.
தமிழருவி தாஹா கவிதைகளைக் கொட்டிக்கொண்டே இருக்கும் நயாகரா! அவை வீழ்ச்சி அல்ல, எழுச்சி!
வந்து விழும் கவி அருவிகளைப் புத்தக அணையில் தேக்கி வைத்து மக்களின் தாகம் தீர்க்கிறார் பதிப்பாசிரியர் தாஹா!
சிறுவர் பட்டத்துக்காக நூல் வாங்குவர்; இந்தப் பெரியவர் நூல்களுக்காகப் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்!
அருமையான வாசிக்க வாசிக்க இனிக்கும் வரிகள் !
தம்பி N.ஷ்ஃபாத்:
அதிரை 'அருட்கவி'க்கே அழகிய அர்த்தம் பொதிந்த இளம் கவி(ஞனின்) வாழ்த்து நெஞ்சம் நெகிழும் வரிகள்.... அருமைய(டா)ப்பா !!!
நிச்சயம் அதிரை 'அருட்கவி' அவர்கள் தம்பி ஷஃபாத்தின் கவிதை வரிகளை வாசிப்பார்கள் என்றே நம்புகிறேன்
அருமையான கவிதை சகோ.ஷாஃபாத
அஸ்ஸலாமு அலைக்கும்,
மரியாதைக்குறிய தாஹா சார் அவர்கள் பற்றி நிறைய தெரிந்துக்கொள்ள முடிந்தது.
தாஹா சார் அவர்கள் மிகச்சிறந்த கவிஞர் என்பது ஆண்கள் அறிந்தது என்றாலும் மிகச்சிறந்த மார்க்க சொற்பொழிவாளர் என்பது அதிரையில் உள்ள நிறைய பெண்கள் அறிந்தது. நம்மூர் நிறைய பெண்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை என்றாலே தாஹா சார் அவர்களின் பயான் தான் ஞாபகத்தில் வரும்.
தாஹா சார் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் சரீர சுகத்திற்கு துஆ செய்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி ஷபாத் மாதிரி கவிதையெல்லாம் நம்மாள் எழுத முடியாததால். நமக்குத்தெரிந்த சில விபரங்களை பகிர்ந்து கொள்ளலாம் என வந்தேன். தாஹா! காக்கா என் தந்தையின் பால்யகாலத்திலிருந்தே நண்பர்.அவரின் மகன் எனக்கு பால்ய காலத்திலிருந்தே நண்பன். எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் என்றும் நட்பு விளங்கிவருவதற்கு அல்லாஹுக்கே நன்றியை செலுத்துகிறேன். சகோ. நைனாவின் தகப்பனார் இபுறாகிம் காக்கா யாரிடம் நட்போ அங்கே என் தந்தையின் நட்பும் இருப்பது எனக்கு வியப்பாகவே உள்ளது. அதுபோலவே அதிரையின் மண்வாசனை எழுத்தாளர் நைனாவும் நாங்களும் சிறந்த நட்பை போற்றி வருகிறோம். அதுபோல சிறந்த எழுத்தாளர்கள் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பதே சிறப்புதான்.
என் பால்ய காலத்தில் தமிழின் மேல் உள்ள ஆசையில் கவிதை என்கிற பெயரில் கிறுக்கு(கி) கொண்டிருந்தேன். என் முதல் கவிதையின் கருவை வைத்தியம் பார்த்த மருத்துவர்தான் நம் தாஹா காக்கா!.அவர்கள் இயற்றிய புத்தகத்தை சப்தமாக வாசிப்பேன். மேலும் ஒவ்வொருவரிகளையும் எடுத்துக்கொண்டு அதே அர்தம் வருவது போலவும்,சொல்லொளி வருவது போலவும் வேறு வார்தை போட்டு எழுதி வாசிப்பேன்.
அல்லாஹ் அந்த பெரும் பேரறிஞரின் ஆயுளை நீட்டித்து நல்வாழ்வை அருள்வானாக ஆமின். அன்னாரை நினைக்கையிலேயே மனமெல்லாம் இன்பம் பொங்கி வழியுது.புன்சிரிப்பு ஆணி அடித்ததுபோல் கண்முன்னே வந்து எளிதில் போக ம(று)றக்குது.
சகோ. தஸ்தகீர் இதிலென்னப்பா வியப்பிருக்கிறது? நம்மூர்லெ எல்லாம் தாயபுள்ளெ தானப்பா...அன்றிலிருந்து இன்று வரை தொடரும் நம் பெரியவர்களின் மாசற்ற நட்பு இன்றைய கால இளைஞர்களிடம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று அதிரை நிருபரில் பயணிக்கும் வாசகர்கள் தான் நாடிப்பிடித்து பார்க்க வேண்டும்.
அந்த நட்புலெ நீ எடுத்துக்கொடுத்த பாஸ்ப்போர்ட்லெ தானப்பா இன்றும் என் அரபு நாட்டு உத்யோகம் தொடர்கிறது. அது உனக்கு தெரியுமோ? இல்லையோ? எனக்கெல்லாம் பச்சை மரத்துலெ ஆணி அடிச்சி ஊண்டு வச்ச மாதிரி ஞாபகம் இருக்கு....அல்ஹம்துலில்லாஹ்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
//அந்த நட்புலெ நீ எடுத்துக்கொடுத்த பாஸ்ப்போர்ட்லெ தானப்பா இன்றும் என் அரபு நாட்டு உத்யோகம் தொடர்கிறது. அது உனக்கு தெரியுமோ? //
Crown=MSM(n): என்னங்க(டா)ப்ப நடக்குது !!! :) இதெல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்குதானே கிரவுன்(னு) !?
ஹாஜி கவிஞர் தாஹா அவர்களை பற்றி விவரிததது அருமை.அவர்களுக்கு என் சலாம்.
அல்லாஹ்வை தவிர்த்து மண்ணறை வாசிகளிடம் உதவி கேட்கலாமா என தாஹா சார் அவர்களிடம் கேட்டுச் சொல்லவும். ஏனெனில் தாஹா சார் அவர்கள் தன்னுடைய ஒரு புத்தகத்தில் “சிரமங்கள் ஏற்படும்போது மண்ணறை வாசிகளிடம் உதவி தேடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
--அஹமத் ஃபிர்தௌஸ்
ஆலடித் தெரு
சகோதரர் அஹ்மத் ஃபிர்தெளஸ் அவர்களுக்கு,
தங்களின் கருத்திற்கு நன்றி !
ஹாஜி எம். முகம்மது தாஹா. BA, B Ed., அவர்கள் பற்றிய இந்த கட்டுரை அவர்களின் வாழ்கை நிகழ்வு குறிப்புகளுடன் அவர்களுக்கு கிடைத்த சிறப்புகள் பற்றிதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் அவர்களோடு நேரடித் தொடர்பும் எங்களிடம் இல்லை.
அவர்களின் புத்தக விமர்சனம் இங்கே வைக்கப்படவில்லை, ஒருவேளை தாங்கள் உள்ளூரில் இருப்பீர்களேயானால் அவர்களை சந்திக்க நேருமேயானால் உங்களின் ஐயங்களை நேரிலேயே கேட்டு தெளிவு பெற்றால் நலனே.
சூழல் கருதி எங்கள் நிலை புரிந்துணர்வு கொள்ள வேண்டுகிறோம்.
அன்புடன்,
நெறியாளர்
www.adirainirubar.in
நான் தற்போது U.A.Eல் உள்ளேன். உள்ளூரில் இருப்பவர்கள் யாரேனும் தாஹா சார் அவர்களிடம் கேட்டு அவர்களுடைய நிலையை தெளிவுபடுத்தினால் நலம். ஏனெனில் இது மனிதன் படைக்கப்பட்ட நோக்கமான அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வணங்குவது சம்பந்தமான தலையாய விஷயம்.
--அஹ்மத் ஃபிர்தௌஸ் (+971 55 3075692)
Post a Comment