திரைகட லோடிய
திரவியம் தேடிய
வகைவழி வந்தவர்
வளைகுடா வாசிகள்
தரைவழித் தேடல்
தரவில்லை திருப்தி
ஒருவழிப் பாதையில்
பெருவெளிப் பறந்து
உளவலிச் சுமந்து
ஊர்வழி நோக்குவர்
பாலையில்
மணல்வெளி எங்கும்
மனவலியோடு
உலவுவர் எனினும்
நிலவொளியில் நனைய
புல்வெளியில் சற்று
மல்லாந்த பார்வையில்
நிலா பார்ப்பதில்
நிம்மதி யுறுவர்
விடி விளக்கை ஏற்றிவைத்து
இரவு வந்துவிட்டிருக்கும்
இவர்
உறவும்
ஊரில் தனித்துவிட்டிருக்கும்
ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிலவைப்
பலர்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
அதனுள் பயணித்து
அவளையேப் பார்த்துக்கொண்டிருப்பர்
வானளவு வாழ்க்கையும்
சமமாக - மன
வாட்டமும் இருப்பினும்
நிலாப் பார்ப்பதில்
நிம்மதி யுண்டு
நிலா உலாவ,
வீதிகளில்
நிலவொளி உளவு பார்க்க
களவிக்கு உகந்ததெனக் காதலரும்
அமாவாசை நிலவை
களவுக்குத் தகுந்ததெனக் கள்வரும்
காண்பர்
மேகப் பின்னணியில்
நிலவைப்
பெண்ணெனக் காண்பவர்
மூன்றாம் பிறையை
நெற்றியெனப் பார்த்தால்
முதற் பிறையை
வகிடு எனக் கொள்வர்
அமாவாசையும் அழகுதான்
பெண்
திரும்பி நடப்பதாய்ச் சொல்வர்.
பெள்ரணமிகளைப் பற்றிப்
பிரச்னை ஏதுமில்லை
அமாவாசைகளில்
நிலவிருந்த இடத்தில்
என்ன இருக்கும் என
விஞ்ஞானம் கலக்காத கணிப்பில்
நிலவு விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
அவளையே வைத்துப் பார்ப்பர்.
சன்னலுக்குப் பின்னாலும்
பேரூந்திலும் வகுப்பறையிலும்
நிலவு பார்ப்பரெனினும்
பாட்டியின் பின்னாலிருந்து
எட்டிப்பார்க்கும் நிலா
அழகின் உச்சம் என்பர்
தேய்ந்தோ வளர்ந்தோ
தினமும் மாறும் நிலவை
பிழையறப் பார்ப்பவர்
பிறையெனப் பார்ப்பர்
பிறரோ
உட்புற வளைவை
ஒட்டிய வயிறெனக் கொண்டு
நிலவு ஏழை யென்றும்
வெளிப்புற வளைவை
முட்டியத் தொப்பை யென்று
நிலவு கொழுத்தது என்றும் காண்பர்
பார்ப்பவர் புத்திக்கேற்ப
வசப்படும் நிலவு,
வாய்க்கும்போதெல்லாம்
நிலாப் பார்த்தல்
அனிச்சையானவர்க்கே
அகிம்சை பிடிக்கும்
அழுத்தும் இம்சைகளுக்கிடையே
நிலாப் பார்த்தலும்
நினைவுகளை
நிலவுக்குள் பார்த்தலும்
வளைகுடா வாசிகளுக்கு மட்டும்
வசப்பட்ட வாழ்க்கை!
Sabeer AbuShahruk
18 Responses So Far:
இந்தக் கவிதையை முழுக்க முழுக இணையதள சிந்துபாத்களுக்கே அர்ப்பணிக்கிறேன்...
**********************************************************
என் ஆசை மச்சானுக்கு,
அன்புக்கணவா
முகப்புத்தகத்தில் உனது
கவிதை வந்ததாம் - உன்
வளைகுடா தனிமையை
கண்ணீராய் வடித்திருந்தாயாம்.....
கடிதங்கள் போய்
இணையங்கள் வந்தபின் நீ
நிறைய எழுதுகிறாயாம் - யாரோ
தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர்
நல்ல கவிதை என்று.....
மாதமொருமுறை எனினும்
தபாலில் உனது கடிதம்
வரும்போது நீயே வந்ததாய்
நினைத்துக்கொள்வேன்.....
குடும்பத்தை விசாரித்து சிறு
குழப்பங்களை விசாரித்து அதில்
குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் - கூடவே
நீ மாதம் அனுப்பும் பணத்தின்
கணக்கையும் கேட்டிருப்பாய்.....
கடிதத்தின் ஏதோ ஒர் மூலையில்
உன் விரல்கள் பதித்த முத்தங்கள்
எனும் வார்த்தையில்
வெட்கத்தை மறந்து முகம் பதிப்பேன்......
யாம் பெண்கள்,
எமது தனிமை வெறும்
வார்த்தைகளால் முடிவதில்லை.....
நான் இணையம் அறியாதவள்
எனத்தெரிந்தோ என்னவோ நீ
எனக்கெழுதவேண்டிய உன் வலிகளை
ஊருக்கு எழுதுகிறாய் - உனது
வலிகளைக்கூட என்னோடு பகிர மறுக்கிறாய்....
நான் படிப்பதற்காய் உன் கடிதம்
காத்திருந்த காலங்களில் நீ
பத்து வரிகளுக்குமேல் எழுதமாட்டாய் - இன்று
பத்தி பத்தியாய் எழுதுகிறாயாம்
இணையப்பக்கங்களில்......
இரண்டு வருடமாய் கேட்கிறேன்
உன் கைப்பட ஒரு கவிதம் - எனக்கு
நேரமில்லை என்கிறாய் எப்போதும்
இணையதளத்தில் இருக்கும் நீ.....
ஒவ்வொரு முறை நீ
ஊர் வரும்போதும் நம் குழந்தை
உனை யாரோ என புதிதாய் பார்க்கிறது - தாய் நான்
பெற்றேன் தந்தை நீ
வளற்கவில்லையே.....
வந்து நிற்கும் நாட்களிலாவது
எங்களுடன் வீட்டோடு
இருப்பாயோ நீ - உன்னோடு
வந்தவர்களுடன்
ஒன்றாய் ஊர் சுற்றுவாய்....
யாருமற்றவர்களுக்கு
எப்போதாவது கிடைக்கும் அன்னம்போல்
நீ தரும் தவணை முறையிலான
அன்பை வெறுத்துத்தான் போகிறன்
பல நேரங்களில்.....
தினம் தினம் தலையணைக்குள்
புதைந்துபோகும் எமது
தனிமையின் தாகம் - யாரையும்
அறிவிப்பதற்கு தெரியாமல்
இரவுக்கண்ணீராய்....
எழுதித்தீர்க்கும் நேரங்களையாவது
எம்மோடு களிக்கலாம் - வா
உனதும் எனதுமான தனிமையை
களைவோம்
நமக்காய் ஒரு விரகமற்ற
வாழ்க்கை காண்போம்.......
வருத்தங்களோடு
அன்பின் மனைவி....
--------அபூ ஃபஹத்______
Assalamu Alaikkum,
Nice lines, explores different perceptions of moon and mood by gulf expatriate brothers only. What about our brothers and sisters working from South Africa, US, London, France, Singapore, Malaysia, Australia, to Japan? How can we reflect their perceptions of moon and mood.?
Thanks and regards,
B. Ahamed Ameen,
Dubai, United Arab Emirates.
நிலவே !
உனக்கு நானமில்லையா ?
உன்னைச் சுற்றி
எத்தனை வரிகள் !
நிலவு மட்டும் கிழவி யாகாதா ? - ஒரே ஒரு டவுட்டு ! அதெப்படி இன்னும் இளமையாகவே இருக்கு !?
நிலவோடு நிமிர்ந்த நீச்சலடிக்க..
கவியோடையில் நீந்த கிரவ்னும் வரனும்...
ஓவ்வொரு வரிக்கும் விளக்கம் தரனும்
கவியன்பன் காக்காவும் வருவார்கள் என்று சொல்லத்தான் வேண்டுமா ?
இ.அ.காக்கா கவிதைப் போட்டியை துவங்கி வச்சமாதிரி ஒரே பிரம்மையா இருக்கு ! :)
நிலா
ஆஹா
எத்தனை அழகு
பாடல்கள் கவிதைகளில்
சுகமான வர்ணிப்புகள்
ஆனால்
நம் சஹாபா பெருமக்களின்
சில அறிவிப்புக்களை
அறிந்த பிறகு
உண்மை உணர்ந்தேன்
நிலவை பார்க்கும்போதெல்லாம்
எங்கள் நபிநாதர்
நினைப்பே வருகிறது
ஆனால்
நிலவின் அழகை எண்ணி அல்ல
எங்கள் நபிநாதர் அழகை எண்ணி
நிலவும் நாணும்
எங்கள் நபி கோமானின்
அழகைக் கண்டு
..........................
மேற்கொண்டு யாராவது தொடருங்களேன் ,,,,,
//மேகப் பின்னணியில்
நிலவைப்
பெண்ணெனக் காண்பவர்
மூன்றாம் பிறையை
நெற்றியெனப் பார்த்தால்
முதற் பிறையை
வகிடு எனக் கொள்வர்/
அத்தனை கவிஞர்களும்
முத்தெனப் போற்றும்
நிலவின் பரிணாம
நிலைகளை
கவிதைச் சொல்லின்
வ்லைக்குள்....
உலாவரும் நிலாவே!
உன் கலையழகா?
உன் நிலையழகா?
நதியிலாடும் நிலாவே!
நீ குளித்ததால்
நதிநீர்க் குளிர்ந்ததா?
நதியின் குளிர்ச்சியால்
நீதான் குளிர்ந்தாயா?
உன்னை நானும் கண்டு
இரசித்த பின்னர்
பின்னால் நின்றப்
பெண்ணைப் பார்க்கவில்லை
உன்னால் அடைந்த
உண்மைத் திருப்திக்கு
இணையேதும் இல்லை!!
மீண்டும் வருவாயா கனவில்.?
நிலவு
அவளாகி
ஏக்கமாகி
ஓவியப்படுத்தும்
அயல்நாட்டு வாழ்வு பற்றிய
அழகு கவிக் கலக்கல்! சூப்பரு!
அதோடு
இ.அ அவர்களின்
கண்டதிலும்
கவியாய் எழுதி
கைதட்டு பெறுவதோடின்றி
கடிதமாய் எழுதி என்னையும்
கவனித்துக்கோ என கள்வனுக்கு
களவியின் கவிக் கோர்வையும் சூப்பரு!
உன் எழுத்தில் , வளைகுடா நாடுகளில் குடும்ப கஷ்டத்திற்கு வாழ்நாளை செலவழித்துவிடும் அவளம் HD ல் பதிவு செய்த மாதிரி தெளிவாக இருக்கிறது.
//ஊருக்கு எழுதுகிறாய் - உனது
வலிகளைக்கூட என்னோடு பகிர மறுக்கிறாய்....//
அபு ஃபஹத்,
பிரிவுத் துயரின் வலியால் வேதனைப்படுபவளுக்கு தன் வலியையும் பகிரக் கூடாதென்றுதான் அதை இணையத்தில் பகிர்வதாக சபுராளி எழுதவில்லையா?
பகிவுக்கு நன்றி ஈனா ஆனா காக்கா.
சகோ. அபு ஃப்ஹத்,
இந்தக் கடிதங்களில் இருதரப்பையும் சொல்லியிருக்கிறேன் (நன்றி: சத்யமர்க்கம் டாட் காம்)
நிற்க:
நிற்க,
நீரூற்று ஏதுமில்லை
நிலத்திலும் ஈரமில்லை
விழியருவி பெருக்கும் நீரில்
செழிக்கிறது பாலைவனம்
பாலை மணல் பகுத்து
பாத்திப் பாதை வகுத்து
புதர்களால் அலங்கரித்து
பயணிக்கிறது என் பிழைப்பு
பிழைக்க உடல் உழைத்து
களைத்து நான் படுக்க
வதைக்கிறது உன் நினைவு
உறைக்கிறதா உனக்கு அங்கும்
அங்கும் இங்கு மென
தங்கு மிடம் மாற்றி
அடுக்கு மாடி குடியிருப்பில்
ஒடுக்கி உடல் சாய்க்க
சாய்ந்த உணர்வலைகள்
சடுதியில் தலை தூக்க
போர்வைக்குள் விழித்திருக்கு
பேரழகி உன் கண்கள்
கண்களை இமை மூட
கனவுகளில் உன் வதனம்
புரண்டு படுத்தாலும்
முரண்டு பிடிக்கிற தேன்?
ஏனென்று கேட்பதற்கு
எத்தனையோ கேள்விகள்
என்னிடம் உண்டு அன்பே
எவரறிவார் பதிலுரைகள்
பதிலில்லாப் புதிர்களடி
பாலைக்கு வந்த கதை
தீரவில்லை தேவைகள்
தேய்கிறது என்னுடலும்
உடல்வதைத்து உணர்வழித்து
உண்டாக்கிய துதான் என்ன
உன்னருகில் நானின்றி
உழல்கின்றேன் உத்தமியே
உத்தமி உன் நினைவில்
உயிர் வாடிப் போகு முன்னே
ஊருக்கு வருவதற்கு
உன்னிலையை அறிந்திடனும்
அறியத்தா அம்மணியே
அன்பென்ன மாறியதா
காட்சிப் பிழைகளென என்
கண்கள் உனைப் பார்க்கிறதா?
பார்க்கும் திசைகளெல்லாம்
பாவப்பட்ட நான் தெரிய
புறப்பட்டு வந்துவிட்டால்
பிழைப்புண்டா எழுந்து நிற்க?
ஒஓஒ
நிற்க,
எழுத்துகளைக் கோர்த்துவைத்து
ஏக்கம் சொல்லத் தெரியாது
வார்த்தைகள் வரிசைப்பட
வாழ்க்கை சொல்ல விளங்காது
அன்பென்ன மாறிடுமோ
அடிவானம் கருகிடுமா
அத்துணை முகங்களிலும்
ஐயா நீர் தெரிகின்றீர்
காசுபணம் கைப்பற்ற நீர்
கடல் கடந்த நாள் முதலாய்
காலையிலும் விடியலில்லை
கனவுகளுக்குக் குறைவுமில்லை
ஒரு ஜன்மம் முழுக்க நீங்கள்
ஓயாமல் உழைத்தாலும்
ஒரு வாய்தான் உணவு மெல்லும்
ஒரு ஜான்தான் வயிறும் கொள்ளும்
என்னருகில் நீர் இருந்தால்
என்விழியில் நீரிருக்கா
எண்ணுகிறேன் நாட்களைநான்
என்னுயிரே வந்திடுவீர்
தள்ளுவண்டிக் காரர்களும்
தார்ச்சாலை போடுவோரும்
தொழில்முடித்துத் திரும்பியதும்
தோள்சாய வழியுண்டு
உயர்தர உணவுகளும்
வெளிநாட்டு உடுப்புகளும்
தந்துவைத்தீர் என்ன செய்ய
தாங்களின்றித் தரணி இல்லை.
நாணயங்கள் வெட்டிப்போட்டு
நாக்குருசி பார்ப்பதில்லை
நோட்டுக்கட்டைக் கொளுத்திப்போட்டு
சோற்றடுப்பை எரிப்பதில்லை
வயிற்றுக்கு நிறைவாக
உண்டுவாழ வழியுண்டு
வாழ்க்கைக்கு உறுதுணையாய்
வந்து சேர்வீர் என்னவரே!
- சபீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
சகோதரர் கவிஞர் அவர்கள், அடுத்தவர்களின் உணர்வுகளோடு கவிதையால் உரையாடுவதில் வல்லவர் என்பதற்கு அவரின் கவிதைகளில் சான்றுகள் ஏராளம்.
அதில் இதுவும் ஒன்று.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
/நாணயங்கள் வெட்டிப்போட்டு
நாக்குருசி பார்ப்பதில்லை
நோட்டுக்கட்டைக் கொளுத்திப்போட்டு
சோற்றடுப்பை எரிப்பதில்லை/
அசத்திட்டாம்பா!
///திரைகட லோடிய
திரவியம் தேடிய
வகைவழி வந்தவர்
வளைகுடா வாசிகள்
தரைவழித் தேடல்
தரவில்லை திருப்தி
ஒருவழிப் பாதையில்
பெருவெளிப் பறந்து
உளவலிச் சுமந்து
ஊர்வழி நோக்குவர்///
**************************************************************
*** உண்மை ***
சுதந்திர நாட்டிற்கு
திரும்பி சென்று விட வேண்டும்
என்ற எண்ணம் அடிக்கடி
மனதை வாட்ட!
குடும்பத்தோடு
சுதந்திரமாக வாழ வேண்டும்
என்ற நினைப்பிலேயே!
வளைகுடா வாசிகளின்
காலம் கடந்து
போய்க் கொண்டு இருக்கிறது.
நாணயங்கள் வெட்டிப்போட்டு
நாக்குருசி பார்ப்பதில்லை
நோட்டுக்கட்டைக் கொளுத்திப்போட்டு
சோற்றடுப்பை எரிப்பதில்லை
அருமையான வரிகள் வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்து வாழும்(வாடும்)அனைவருக்கும் பொருந்தும்
வாசித்துக் கருத்திட்ட சகோதரர்களுக்கும் சகோதரி அவர்களுக்கும் நன்றியும் து ஆவும்.
சகோ. அஹமது அமீன், பொதுவான உணர்வுகள் எந்த நாட்டைக் கலமாகக் கொண்டு எழுதப்பட்டாலும் ஒத்த நிலையில் உள்ளோர் தமக்காக எழுதப்பட்டதாகவே உணர்வர்.
எக்ஸ்க்லூஸ்ஸிவாக வேண்டுமெனில், வெஸ்ட்டெர்ன் பின்னணியில் எழுதச் சொல்லி கீழகண்ட ஜாம்பவான்களுக்கு அதிரை நிருபர் கடிதம் அனுப்பலாம்:
-கிரவுன் தஸ்தகிர்
ஹார்மீஸ் அப்துர்ரஹ்மான்
-இளம்கவி என் ஷஃபாத்
-போட்டிகவி எம் ஹெச் ஜஹபர் சாதிக்
-அன்புடன் புஹாரி
தம்பி அர அல, நேரமின்மையால் தங்களின் கவியுணர்வைத் தொடர இயலவில்லை. மற்றொரு சமயம் வாங்க ஒரு கை பார்த்துவிடுவோம்.
அன்பின் கவிவேந்தே! அத்தனையும் முத்துக்கள்; கோத்துக் கோத்து யாத்ததனால் அந்தாதியாக்கி (முதல் பாடலின் இறுதிச் சொல்லை அடுத்தப் பாடலின் முதற்சொல்லாய்க் கொண்டு வந்து கோத்த விதம்) ஓசையும் ஓட்டமும் நிற்காமல் ஆற்றின் நீரசை போல் அழகு நடை மனத்தில் ஓடக் கண்டேன். ஓட்டம் இடையில் நிற்க வேண்டும் என்பதால், இடையில் “நிற்க” என்று நிறுத்தலும் அருமையான வடிவமைப்பு. சகோதரி. அமினா அவர்கள் கருத்துரை முற்றிலும் உண்மை. ஆம். கவிவேந்தர் உளவியல் பார்வையால் மனத்தினில் ஓடும் எண்ணங்களை அப்படியே கவிதையாக்கி விடுகின்றார். கவிவேந்தர் அடிக்கடிச் சொல்வார்,” கவிதையை நான் எழுதவில்லை; கவிதை என்னை எழுத வைத்தது” என்று. அக்கருத்தை இக்கவிதையும் உறுதி செய்கின்றது.
காக்கா ..ஆஃபிரிக்காவில் இருந்தாலும் அதிரை நிருபரின் ஆக்கங்களை தொடர்ந்து படிக்கின்றேன்....சண்டே வந்ததும் எல்லாவற்றுக்கும் கருத்து எழுதவேண்டும்...அதுமட்டுமின்றி..கண்ணியத்திற்க்குரிய பிலால் (ரலி) அவர்கள் பிறந்த மண்ணைப்பற்றி நிறைய எழுத வேண்டும்....”ஆஃபிரிக்காவும் நானும்” என்ற தலைப்பில் ........பிரிவை அ.நி கொஞ்சம் நெருக்கமாக்கி வைக்கின்றது என்றால் மிகையல்ல....
Post a Comment